நண்பன்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 7,847 
 
 

“மணி! நீ இங்கேயிருக்கியா? உன்னை எங்கேயெல்லாம் தேடறது? இங்கே தனியா உக்காந்து என்ன பண்றே?” – கோபி, மணியை தேடிக்கொண்டு வந்தான்.

“சும்மாதான் ! கோபி, ரவி கொடுக்கற பார்ட்டிக்கு நான் வரல்லே கோபி ! மூட் அவுட். நீ போயிட்டு வா!” – மணி

“என்ன ஆச்சு உனக்கு? நல்லா தானே இருந்தே! அங்கே உன் பிரண்ட்ஸ் எல்லாம் தண்ணி போட்டுக்கிட்டு கும்மாளம் அடிக்கிறாங்க. நீ என்னடான்னா இங்கே தலைலே கை வெச்சிகிட்டு! எழுந்திரு மச்சி! கோஷ்டிலே ஐக்கியமாயிடலாம் வா. ரவி வேறே, நீ எங்கேன்னு தேடறான்!” கோபி கேட்டான்.

“நான் வரலே கோபி! ரொம்ப வெறுப்பா இருக்கு! இந்த மாதிரி பார்ட்டி ஒண்ணு நானும் கொடுத்திருக்கணும். உனக்கு தெரியுமா ? நானும் ரவியும் ஒண்ணாதான் இந்த கம்பனிலே சேர்ந்தோம்! இன்னிக்கு அவன் ப்ராஜெக்ட் மேனேஜர். அவன் வாழ்வை பாத்தியா? ”- பொருமினான் மணி.

“என்ன கொடுமைடா இது! மணி, நீ இன்னும் டீம் லீடே ஆகலே. அப்புறமா ப்ராஜெக்ட் லீட் ஆகணும். அப்புறம்தானே ரவி மாதிரி ஆகி பார்ட்டி கொடுக்கமுடியும். அதுக்கு ரொம்ப காலம் இருக்கப்பா!” -கோபி

“வெறுப்பேத்தாதே கோபி! நானே கடுப்பிலே இருக்கேன். நீ வேறே! எனக்கு அதிர்ஷ்டம் இல்லைப்பா! ஏன்டா இந்த கம்பனிலே சேர்ந்தோம்னு இருக்கு!.”

“அதுக்கெல்லாம் அப்புறம் ரூம் போட்டு யோசிக்கலாம்! இல்லே ரூமுக்கு போய் பேசிக்கலாம்! இப்போ கிளம்பு. இல்லாட்டி உன் பேரு ரிப்பேராயுடும்”

****

பிட்ஸ், பிரமோத் ஐடி சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட், சென்னை 135. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த 350 பேர் வேலை செய்யும் கம்பெனி. வெளிநாட்டு வணிக நிறுவனங்களுக்கு மென் பொருள் எழுதி தரும் ஒரு அலுவலகம்.

மணி, இந்த அலுவலகத்தில் ஒரு மென் பொருள் நிரலர் (ப்ரோக்ராம்மர்), கடந்த எட்டு வருடங்களாக. இப்போதும் டீம் மெம்பர்தான். அவனுக்கு பணி உயர்வே கிடைக்கவில்லை.

எப்படி கிடைக்கும் ? வேலை கிடைத்ததே பெரிய விஷயம். படித்தது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் மட்டும்தான். ஆனால், ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிக்குமாமே”. அது இவன் விஷயத்தில் ரொம்ப சரி. காணாதது கண்ட மாதிரி, வேலை கிடைத்தவுடன், குடி, கும்மாளம், டிவி, நண்பருடன் அரட்டை, கதை புத்தகம் இப்படியே காலம் ஓடி விட்டது. மணி தனது தகுதியை வளர்த்துக் கொள்ளவே இல்லை.

இந்த வருடம் வருடாந்திர பணி உயர்வு தேர்வு. குழு லீடராக உயர்வு எதிர் பார்த்துக்கொண்டிருந்தான். கிடைக்குமோ கிடைக்கதோன்னு உள்ளூர பயம்.

****

எச். ஆர். மேனேஜர் மதுவின் டிஸ்கஷன் அறை. ப்ராஜெக்ட் மேனேஜர் ரவி, டெலிவரி மேனேஜர் ஸ்டீபென் மற்றும் மது. வருடாந்தர தகுதி கணிப்பு (பெர்பார்மன்ஸ் அப்ரைசல்) , மற்று டீம் லீட் தேர்வுக்கான நேர்காணல்.

மது ஒரு கறார் பேர்வழி. சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் ரகம்.

மணி உள்ளே நுழைந்தான்.

“வாங்க மணி! உக்காருங்க !

“குட் மார்னிங் மேடம், ரவி, ஸ்டீபன்”

“என்னை மதுன்னே கூப்பிடுங்க மணி. உங்க வருடாந்திர அப்ரைசல் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருந்தது. நிறைய வாடிக்கையாளர் உங்களை பாரட்டின ஈமெயில் நகல் பார்த்தேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் மது!”

“உங்க மேலதிகாரி கூட உங்க திறமையை “எக்ஸ்செல்லேன்ட்” என்று மதிப்பிட்டிருக்கிறார்.”

“ரொம்ப தேங்க்ஸ் மது”

“சொல்லுங்க மணி, உங்களுக்கு ஏன் இந்த ப்ரோமோஷன் கொடுக்கணும்? இந்த வருஷம் நம்ப கம்பனிலே, மொத்தம் ஏழு டீம்லீட் வேகன்சி இருக்கு. ஆனால், 19 பேர் போட்டியிலே இருக்கீங்க. இதிலே, நீங்க கொஞ்சம் ஓவர் டியு கூட”

“மது, நான் நல்லா ஹார்ட் வொர்க் பண்ணுவேன். கஸ்டமர் கிட்டே மதிப்பு இருக்கு. எல்லாரும் நான் தான் வேணும்னு கேப்பாங்க. ஆனால், ஏன் எனக்கு இதுவரை ப்ரோமோஷன் கிடைக்கலைன்னு தான் தெரியலை!”

“அது ஒரு புரியாத புதிராக்கும்?” – ரவி ஜோக்கினான்.

மது சீரியசாக “மணி, போட்டியிலே இருக்கிற 19 பேருக்கும் நீங்க சொல்லற தகுதி இருக்கு. வேறே ஏதாவது இருக்கா உங்ககிட்டே?”

“எனக்கு புரியலே ! வேறேன்னா?”

ரவி இடைமறித்தான் “ ஏதாவது புதுமையா பண்ணியிருக்கீங்களா? கிரியேட்டிவா? கம்பனிக்கு உபயோகமா? ”

“சாரி! இல்லையே!”

ஸ்டீபென் “ ஏதாவது பிசினெஸ் முன்னேற்ற ஆலோசனை கம்பனிக்கு கொடுத்திருக்கீங்களா மணி ? புது கஸ்டமர் எத்தனை பேர் உங்களாலே சேர்ந்திருக்காங்க.?”

“சாரி! இல்லையே!” மணி. என்ன இப்படி காய்ச்சராங்களே. கொடுக்க மாட்டாங்களோ?

மது “பரவாயில்லே மணி. வேலையை சுளுவாக்கற மாதிரி ப்ரோக்ராம், டூல் இப்படி ஏதாவது பண்ணியிருப்பீங்களே?. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மணி!”

மண்டையை பிழிந்து கொண்டான் மணி “ சாரி ! இல்லையே!”. ப்ரோமொஷனே வேண்டாம், விட்டால் போதுமென்றிருந்தது.

“போகட்டும் . உங்க பேரிலே ஒரு புகார் இருக்கு. நீங்க கஸ்டமர் மீட்டிங், மற்ற இன்டர்னல் மீட்டிங்லே வாயே திறக்கரதில்லையாமே. பகிர்ந்துக்கறது ரொம்ப குறைவுன்னு கேள்விப்பட்டோம். என்ன காரணம்னு சொல்ல முடியுமா?”

“இல்லே மது, அப்படி ஒண்ணும் கிடையாது. வெறும் புரளி”

“அப்புறம், திறமையை வளர்த்துக்கரா மாதிரி ஏதாவது செர்டிபிகேஷன், கோர்செஸ், ஜாவா, நெட்வொர்க் மாதிரி எதாவது பண்ணியிருக்கீங்களா?”

“எதுவும் இந்த வருடம் பண்ணலே மது”. விட மாட்டேன்கிறாங்களே. டென்ஷன். டென்ஷன்.

“அப்படின்னா, போன வருடம் பண்ணிணீங்களா? தட்ஸ் குட்”

“இல்லே மது, போன வருடமும் பண்ணல”

மது உதட்டை பிதுக்கினாள். “ சாரி மணி, தவறா எடுத்துக்காதீங்க. மற்றவரை வழி காட்ட உங்க தகுதி போதாது. உங்களை நீங்க மேம்பாடு பண்ணிக்கணும். அப்போதான் நீங்க மேல வர முடியும். இல்லாட்டி, தகுதி அடிப்படைலே, இந்த கம்பனிலே நீங்க பணி புரியறதும் கஷ்டமாயிடும். நான் சொல்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சரியா! அடுத்த முறை பார்க்கலாம்.”

“மது, நான் இந்த கம்பனிலே எட்டு வருஷமா இருக்கேன்.”

ஸ்டீபன் “ அதனாலே தான் உங்களை வெளியே அனுப்ப யோசிக்கறோம்!”

மது குறுக்கிட்டாள். “ நீங்க வேனால், தாராளமாக வேறே இடத்திலே முயற்சி பண்ணலாம். கிடைத்தால் விலகலாம். மேலிடத்திலே என்னையும் கேள்வி கேக்கிறாங்க, ஏன் அவர் எட்டு வருஷமா அதே பொசிஷன்லேயே இருக்காரு! எச்.ஆர் என்ன பண்றாங்கன்னு. அவருக்கு முன்னேற்ற பிளான் ஏன் இல்லைன்னு?”

செவிட்டில் அறைந்தது போல இருந்தது மணிக்கு. குனிந்த தலை நிமிராமல் வெளியே வந்தான்.

*****

அன்று மாலை. அலுவலக வாசலில் கோபி காத்துக் கொண்டிருந்தான். “வா மணி! டீம் லீட் பொசிஷன் கொடுத்திட்டாங்களா? ரவி கிட்டே நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன்”

“இல்லே கோபி! இந்த வருடமும் இல்லேன்னு சொல்லிட்டாங்க. எப்படி இந்த கம்பனிலே இருக்கரதுன்னு தெரியலே! பேசாம பேப்பரை போட்டுடலாமென்று பாக்கறேன்.”

“அவசரப்படாதே! இப்போவெல்லாம் நம்ம படிப்புக்கு, வேலை அவ்வளவு ஈசியா கிடைக்கரதில்லே. வேறே கம்பனியிலும் இதே மாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்? வெயிட் பண்ணு. வேறே வேலை தேடிக்கிட்டு இதை விடு”

“எல்லாம் ட்ரை பண்ணிட்டேன்! எவனும் கூப்பிட மாட்டேங்கிறான்! சே!”

“மணி! இப்போவாவது புரிஞ்சுக்கோ. நமக்கு தகுதி இல்லேன்னா நம்மை எவனும் சீந்த மாட்டாங்க!

“நக்கல் பண்றே பாத்தியா! எல்லாம் கிடக்க, செர்டிபிகேஷன் இருக்கான்னு கேக்கறாங்க”

“மணி, இது ஒன்னும் கவர்மென்ட் ஆபிஸ் இல்லே! சீனியாரிட்டி பாத்து ப்ரோமோஷன் கொடுக்க!”

“அப்போ என்கூட சேர்ந்தானே ஸ்டீபென், அவன் மட்டும் எப்படி மேலே மேலே போயிண்டிருக்கான்?”

“அது உனக்கு தெரியாதா? அவன் மாமா தான் கம்பனி சேர்மன். ஒன்னு செய், உங்கப்பா கம்பனிலே போய் சேந்துக்கோ. டைரக்டர் கூட ஆயிடலாம்.”
“அது முடியாதே!”
“ஏன்?”

“அவருக்குதான் கம்பனியே கிடையாதே!”

“தெரியுதில்லே! அப்போ பொத்து”

“சாரி! சாரிடா! கோபி. அப்போ எனக்கு என்ன தான் வழி?”

“ரவியை பாரு. அவனை மாதிரி உன் திறமையை வளர்த்துக்கோ. கஷ்டப்பட்டு உழை. இது பத்தாது. எல்லாரையும் அனுசரிச்சு போ. கூடிய வரைக்கும் அதிகாரி சொல்றதை எதிர்த்து சொல்லாதே! நிச்சயமா உன்னை விட அவங்களுக்கு நல்லா தெரியும்னு நம்பு. ரவியை பாத்து பொங்கறையே. அவனை பாத்து இதெல்லாம் கத்துக்கோயேன். ”

“நிறுத்து! நிறுத்து! விட்டா அட்வைஸ் அளவில்லாம கொடுக்கறியே”

“சாரிடா! உனக்கு உதவி பண்ண ஆசை”

“தேங்க்ஸ். எல்லாம் சரி, ஆனால், என்னாலே படிக்க முடியாது. நேரம் இல்லியே”

“அப்போ ஒன்னு செய். பேசாம எதாவது அரசாங்க உத்தியோகத்திலே சேர்ந்துடு. ரொம்ப ஒன்னும் படிக்க வேணாம். பத்து வருஷத்திற்கு பிறகு, ஒரு சின்ன உயர்வு கிடைச்சாலும் கிடைக்கும். உன்னை மாதிரி ப்ரோமோஷன் இல்லாம நிறைய பேர் இருப்பாங்க. யாரையும் பாத்து பொரும வேண்டாம். நிம்மதியா இருக்கலாம். ஓகேவா?”

“என்ன கோபி, நக்கலா?’

“இல்லே, அப்பா நிறைய பைசா வெச்சிருந்தா வீட்டோட இரு. எதை பத்தியும் கவலை பட வேண்டாம். படிக்க வேண்டாம். தண்ட சோறுன்னு மட்டும் சொல்வாங்க . பரவாயில்லயா?”

“யப்பா. யப்பா. இத்தோட நிறுத்திக்குவோம். போறுண்டாப்பா. நான் படிக்கிறேன். டிவி பாக்கிறதை விட்டுட்டு, சினிமாக்கு போகாமல், அரட்டை அடிக்காமல். அடுத்த வருடம் டீம் லீட் ஆகி காட்டறேன்”

“வெரி குட் மணி. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ‘நோ பெயின், நோ கெயின்’ கமல் சொன்னது. ஜேன் போண்டா சொன்னது”

“நல்லாயிருந்தது நீ சொன்னது”

****

மூன்று வருடம் கழித்து.. மணி ஆசை பட்டது போலவே, இப்போது அவனுக்கு ப்ராஜெக்ட் லீட் ஆகிவிட்டது. இதை காண்பித்து, வேறு ஒரு கம்பனியில் ப்ராஜெக்ட் மேனேஜர் வேலையும் கிடைக்கும் போலிருக்கிறது. அங்கே நேர்முக காணலும் ஆகி விட்டது. இதற்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் கோபி. அவனது சொல்படி நடந்தான். படித்தான். தகுதியை வளர்த்துக் கொண்டான்.

அதை ஒட்டி மணியின் ட்ரீட் எல்லாருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில். ரவி, ஸ்டீபன் கோபி அனைவரும் ஆஜர்.

“வா கோபி! ஏண்டா லேட்?” மணி.
“ஆபீஸ்லே கொஞ்சம் வேலை. ரொம்ப சந்தோஷம் மணி. கங்கராட்ஸ்!”
“உனக்கு தான் தேங்க்ஸ்!. நீ மட்டும் இல்லேன்னா! நீதான் நன்பேண்டா! ”
“உளராதே! வா. எல்லாரும் பாக்கரறாங்க பாரு”

****

அன்று இரவு: கோபியின் வீடு

“எங்கே சுத்தறான் இந்த பய? பத்தரை ஆறது. ஒரு நாளை போல நேரங்கழிச்சு வரான்! உதவாக்கரை! உதவாக்கரை!” – கோபியின் அப்பா புகைந்து கொண்டிருந்தார்.

இரவு 11.00 மணி. கோபி வண்டியை சத்தம் போடாமல் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

“ஏண்டா லேட்?” அப்பா உறுமினார்.

“மணியோட பார்ட்டிப்பா. அவன் இப்போ ப்ராஜெக்ட் மேனேஜர். கொஞ்சம் லேட் ஆயிடுத்து.”

“இப்படி ஓயாம பிரெண்ட் பிரெண்ட்னு சுத்தறியே. நீ உருப்படற வழிய பாரேன்”

“சான்சே இல்லே! நான் இருக்கறது அரசு ஆபீஸ். என்னோட ஆபீஸ்லே பதவி உயர்வு, தானா வரப்போதான் வரும். அதுவும் சீனியாரிட்டி அடிப்படைலே. பத்து வருஷம் கழிச்சி அது வந்தாலும், ஊர் ஊரா போகணும். நான் இப்படியே இருந்துட்டு போறேனே! எப்படி பார்த்தாலும், இந்த வேலைலே, எனக்கு நிறைய அன்பளிப்பு வருது. அது தாராளமா போதும். ”

“எப்படியோ போ!. போய் தூங்கு.” – அப்பா அலுத்து கொண்டார்.

****

கோபி, இன்னிக்கும், பிட்ஸ் பக்கத்திலே இருக்கும் அரசு துறை அலுவலகம் ஒன்றிலே குமாஸ்தா தான். ஆனால், அவனிடம் ஒரு நல்ல குணம். தனக்கு இதல்லாம் கிடைக்கலியே என்று பொரும மாட்டான்.பொச்சரிப்பு இல்லை. எல்லா நண்பர்கள் பார்ட்டியிலேயும் கலந்துப்பான். அது ரவியானாலும் சரி, மணியானாலும் சரி. சினிமா, அரட்டை, டிவி, அவன் வாழ்க்கை தனி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *