தபால்காரர் கூப்பிடுவது கூட தெரியாமல் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் வீதியையே பார்த்துக்கொண்டிருந்தான் ரவி.
“தம்பி ரவி…” பலமுறை கூப்பிட்டதற்கு பிறகு சிந்தனை தெளிந்தவனாய் “வாங்க சார்! உங்களத்தான்…” சொல்லி முடிப்பதற்குள் “பட்ட பகல்லேயே கனவா இந்தாப்பா லெட்ரு கொடுத்ததும் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு புறப்பட்டார்”.
ஆவலோடு பிரித்தான். “எங்க ஊர் திருவிழா வருகிற 18, 19 தேதியில் அவசியம் பதினேழாந்தேதியே வந்துரு.” தன் நண்பன் சோலையனிடமிருந்து.
இது தொலைபேசி வசதி குறைவாக இருந்த காலம்…
“நண்பனோட ஊருக்கு போயிநாலுவருசமாச்சு. கண்டிப்பா போகனும்” எண்ணியவாறு காலெண்டரைப் பார்த்தான். இன்னைக்குத்தான் பதினேழு. கடிகாரத்தைப் பார்த்தான். மணிமுள் பனிரெண்டை தொட முயன்றது.
கொல்லக்காட்டுல வேல பாக்கும் அம்மாவிடம் சேதியைச் சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டான். அலைமோதும் கூட்டம், தொங்கிச் செல்வதற்கு கூட பேருந்தில் இடமில்லை. மணியோ மாலை நாலு.
அவனுக்குத் தெரியும். நண்பன் ஊருக்கு ஒரு பேருந்துதான். அதுவும் காலை மாலை இரண்டு வேளை தான். எத்தனை மணிக்கு என்று தெரியாது. அதைவிட்டுவிட்டால் சிவகங்கையில் இறங்கி நாலு கிலோமீட்டர் நடந்தோ அல்லது ஆட்டோவில் தான் செல்லவேண்டும்.
சிந்தனையோடு சிவகங்கை பேருந்தில் தொங்கிக்கொண்டே பயணித்தான். பேருந்தின் வேகத்தைவிட அவனது மனவேகம் அதிகமாகவே இருந்தது.
பேருந்து நிற்பதற்குள் இறங்கியவன். அங்கிருந்த பூக்கடையில் நகரத்துப்பட்டிக்கு செல்லும் பேருந்து எப்போது வரும் என்று கேட்க.
“இப்பத்தான் தம்பி போகுது; முன்னாடியே வரக்கூடாதா” தன்னையே நொந்தவனாய் கைகடிகாரத்தைப் பார்த்தான். மணியோ இரவு ஒன்பது. அங்குமிங்கும் நடமாடினான். தெரிந்தவர்கள் யாருமே தென்படவில்லை.
மணியும் இரவு பத்தை தாண்டிவிட்டது.
முடிவு செய்தான். ஆட்டோவை விசாரித்தான். “முப்பத்தஞ்சு ரூபா வரும் சார்” “கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க என்றான் கெஞ்சலாக.
“வேற ஆளப்பாருங்க சார்” வேறுவழியில்லாமல் சம்மதித்தான். ஆட்டோ தயாரானது.
“நானும் வர்றேன்டா” ட்ரைவரின் நண்பனும் ஏறிக்கொண்டான்.
‘டர்டர்…’ சத்தத்தோடு சென்றது
அவர்கள் எதுவுமே பேசவில்லை. தன்னை திடப்படுத்திக்கொண்டு தானாகவே பேச ஆரம்பித்தான். கேள்விக்கு மட்டுமே ஏதோ பதில் சொன்னார்கள். வண்டியின்வேகம் குறைந்து ஊருக்கு ரெண்டு கிலோ மீட்டர் முன்னரே நின்றது. இவனுக்கோ பயம் குடிகொண்டது.
உள்ளிருந்தபடியே நோட்டமிட்டான். வெளியில் யாருமே தென்படவில்லை. கார்மேகம் சூழ்ந்த இருட்டு வேலம் மரங்கள் வெற்று உடல காட்டி நின்றன. அருகில் உடைந்த பாலம்,உடல் நடுங்கியது.
வண்டியிலிருந்த இறங்கிய ட்ரைவரின் நண்பன், இவனது கழுத்துக்கு நேராக கையை நீட்டினான்.
“எதுக்கு வண்டிய நிறுத்துனீங்க. கையவும் நீட்டுறீங்க” கேட்டுவிட்டான்.
“ஒன்னுமில்லங்க சார். பெட்ரோல் இல்ல. கொஞ்சம் தள்ளிக்கங்க சீட்டுக்கு பின்னாடி பெட்ரோல் கேன் இருக்கு”
வண்டி புறப்பட்டது. ஊர் நெருங்கியது. பயமும் குறைந்தது. வப்பமரத்தருகே வண்டி நின்றது.வேகமாக பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
“ஹலோ நில்லுங்க சார். இருபது ரூபா போதும். இந்தாங்க மீதி, ஒடம்பு அலுப்பா இருக்கவும். நல்லா கூட பேசல. சாரிங்க சார்” ட்ரைவர் சொன்னதும்.
யாரோ ஒரு புது புது மனிதனைப் பார்ப்பது போல் கொஞ்சநேரம் ட்ரைவரை ஆச்சரியமாக பார்த்தான் ரவி.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.