நடிப்பின் மறுபக்கம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 1,776 
 
 

சினிமா நடிகர், நடிகையர் என்றாலே தவறானவர்கள் எனும் மாயை மக்கள் மத்தியில் ஆழமாகப்பதிந்து விட்டது. சினிமாவில் ஒரு கதாபாத்திரமாகவே மாற வேண்டிய நிலையில் அக்கதாபாத்திரம் தவறான செயல்களில் ஈடுபாடு கொண்டிருந்தால் நடிகரும் அப்படியே கதாபாத்திரத்தை கண் முன் கொண்டு வருவது போல் தான் நடிக்க வேண்டும். தவறான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தவறானவராகத்தானே இருப்பார் எனும் பிம்பம் அந்த நடிகரை தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வைக்கிறது.

நடிகர் மகாவுக்கு இது போன்ற பிரச்சினையை தினமும் எதிர்கொள்ளும் நிலையில், இல்லற வாழ்வே கசந்து வீட்டிற்குச்செல்லாமல் ஹோட்டலில் அறையெடுத்து தங்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

வேசம் போடும் தொழிலால் தன் வாழ்வே நாசமாகுமென அதற்கான பத்து வருட போராட்டத்தில் அறிய முடியவில்லை. நுழையும் வரை தெரியும் பிரமாண்டம், ஒரு விதமான மாயை நுழைந்த பின் தெரிவதில்லை. பணம் தேவைக்கு மேல் குவிந்தாலும் நல்ல உறக்கமும், நிம்மதியும் கிடைக்காமல் மதுவுக்கு அடிமையாகும் நிலையில் இருந்தார்.

வெற்றி மட்டுமே கிடைக்குமென கூறிவிட முடியாது. தோல்விகளால் துவண்டு போய் அடுத்த வாய்ப்பு வருமென காத்திருப்பதால் ஏற்படும் கடன் சுமை, வேறு வேலைக்கும் செல்ல இயலாத மன நிலை, புகழ் போடும் தடையால் சராசரி மனிதனாக வாழ முடியாமல் சில சமயம் தற்கொலை எண்ணத்தையும் தூண்டி விடும் நிலை.

சராசரிகளின் வாழ்விலும் பிறர் துன்பங்களில் இன்பம் காண்பவர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நடிகரின் துன்பங்களை பணமாக்க பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், யூடியூப் சேனல்களும் போட்டி போடுவதும்,

ஒன்றை ஒன்பதாக்குபவர்களை விட நடிகர், நடிகையர் விசயத்தில் ஒன்றுமில்லாததையே ஓராயிரமாக்கி விடுகின்றனர்’ என நினைத்து வேதனைப்பட்டார்.

‘அவரது மனைவி இவருடன் பழகியதால் தான் விவாகரத்தே ஆனது’ என செய்தி போடுவர். அதோடு நடிகருடைய எதிரியின் தூண்டுதலாலும் அவருடைய மார்க்கெட்டைச்சரித்து தான் மேலே வர சிலர் செய்யும் வீண் வதந்திகளும் ஒருவனை பாதாளத்துக்கு கொண்டு சென்று விடும்.

திருமணத்துக்கு முன்பே ‘தன்னைப்பற்றி தவறான செய்திகள் வரும் போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என கூறிய பின்பே சம்மதம் வாங்கி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி பத்து வருட தாம்பத்யம் முடித்திருந்தும் இன்று மனைவி பேசியது வேதனையைத்தந்தது.

” அந்தப்பாட்டுல ரொம்பவே நெருக்கமா உண்மையான காதலர்களைப்போல அந்த நடிகையோட அப்படியொரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன போதே எனக்கு தூக்கம் போச்சு.

நீங்க படத்துல விட என் கிட்ட நடிக்கிற நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். வீட்ல நடிக்கிற அளவுக்கு ரிஸ்க் படத்துலயும் எடுத்தீங்கன்னா கோடி கோடிய சம்பாதிச்சிடலாம்” என மனைவி மந்திரினி பேசிய பேச்சு மனதை உடையச்செய்த போது தனியறையில் கதறி அழ வேண்டியதாயிற்று. 

படத்தில் பலரை அடித்து துவம்சம் செய்யும் கதாநாயகனுக்கு வீட்டில் மனைவியைக்கண்டு பதுங்கும் பரிதாப நிலை இருக்குமென எந்த ரசிகனும் கனவிலும் நினைத்துப்பார்க்க மாட்டான்.

உயிர் நண்பன் உண்மையைப்போல பொய்யைச்சொன்னதால் டிரெண்டிங்கில் முதலில் மகாவின் பெயர் பேசப்பட்டது. பெண் ரசிகைகள் மன வேதனையுடன் ” நடிப்பை விட ஒழுக்கத்துக்காகத்தான் அவரை விரும்பினோம். நாங்க எதிர் பார்த்தது இல்லாதப்ப விருப்பம் வெறுப்பாயிடுச்சு. யாரை நம்பறதுன்னே தெரியலை” என கூறியதைக்கேட்ட போது மகாவுக்கு நெஞ்சம் உடைந்து சுக்கு நூறானது. 

‘நான் நூறு சதவீதம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நல்லவன் என எப்படிச்சொல்லுவது? பொறாமையால் சிலர் சொல்வதை நம்பி பலர் நல்ல நட்பை இழந்ததோடு, நிரந்தர எதிரி போல் நடந்து கொள்வதை எண்ணி வேதனைப்படுவதைத்தவிர வேறு வழியில்லை. ஊர் வாயை அடைப்பது சிரமம். பதிலாக காதை மூடிக்கொள்வதே பரிகாரம்’ என யார் பேசினாலும் பேசட்டும் என மௌனமாகி விட்டார் நடிகர் மகா.

நண்பரின் நயவஞ்சக பேச்சுக்குப்பின் கடை திறப்பு விழாக்களுக்கும் சரி, உறவுகளின் சுப, துக்க நிகழ்வுகளுக்கும் சரி எங்கு போனாலும் முன்பு போல் கூட்டம் வருவதில்லை. இதனால் இது வரை கடை திறப்புகளில் வரும் உபரி வருமானமும் கட்டானது. புதிய வாய்ப்புகளுக்காக தேடிப்போகும் நிலையிலும் தனக்காக வாரக்கணக்கில் முன்பு காத்திருந்தவர்கள் தற்போது தன்னை வாரக்கணக்கில் காத்திருக்க வைத்த போது வேதனை அதிகமானது.

‘பனை மரத்தடியில் உட்கார்ந்து பாலைக்குடிச்சாலும் கள்ளு குடிச்சான்னுதான் சொல்லுவாங்க’ எனும் பழமொழி எவ்வளவு நடைமுறை உண்மை என்பதை தற்போது புரிந்ததாக நண்பர்களிடம் கூறினார். நண்பரின் மனைவிக்கு உதவிய காரணத்தை சாக்காக வைத்து மனைவியை உதறிய நண்பரின் செயலால் ஏற்பட்ட அவப்பெயரை தாங்கிக்கொள்ள முடியாமல் உறக்கமின்றி தவிக்கும் நிலையானது.

எல்லாவற்றிற்கும் மேலாக தன் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. வரவை விட ஏற்படும் செலவுகளால் ஏறிக்கொண்டே போகும் கடன் ஒரு பக்கம், கோர்ட், வழக்கு மறுபக்கம் என தாங்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்தவனை ஹோட்டல் ஊழியர்கள் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

குடும்பத்திலிருந்து யாரும் வராத நிலையில், டிஸ்சார்ஜ் ஆன போது முழு தொகையையும் தன்னோடு உறவென யாரை தவறாகப்புரிந்து கொண்டு இணைத்துப்பேசியதால் அவப்பெயர் ஏற்பட்டதற்கு எப்பெண் காரணமோ அப்பெண் கட்டியிருந்தாள். தனது காரில் தனது வீட்டிற்கே அழைத்தும் சென்றாள்.

“இவ்வளவு பேரும், புகழும் வர எத்தனை கஷ்டப்பட்டிருப்பீங்க. சந்தேகமே இருக்கிற என்னோட கணவனுக்கு நீங்க ஒரு தூசி அளவு கூட துரோகம் பண்ணலேன்னு எனக்கு தெரியும். பல பிரச்சினைகள்ல இருந்து நீங்கதான் காப்பாத்தி விட்டிருக்கீங்க. உண்மையா சொல்லப்போனா உங்களை என்னோட இணைச்சு அசிங்கமா பேசின அவரோட வாழ்க்கைல தான் நிறைய அசிங்கம் நடந்திருக்கு. அவரு சொன்னத உலகமே நம்பிடுச்சு. அத நெனைச்சு நீங்களும் நானும் வேதனை படறதுனாலயோ, தற்கொலை பண்ணிக்கிறதுனாலயோ இந்தக்கறை அழியாது. உங்க கூட நான் சேர்ந்து வாழறது தான், பலரோட கற்பனைய நிஜமாக்கி காட்டறது தான் என்னால உங்களுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு மருந்துன்னு புரிஞ்சுட்டு தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்திட்டேன். என்னை தவறா புரிஞ்சிட்ட என் கணவன் கூட நானும், உங்களை தவறா புரிஞ்சிட்ட உங்க மனைவி கூட நீங்களும் குற்ற உணர்வோட வாழவே முடியாது. பாதிக்கப்பட்ட நாம சேர்ந்து வாழறது தான் சரியானது. சேர்ந்துன்னு சொல்லறது ஒரே வீட்ல அவ்வளவுதான். கடந்த பத்து வருட பழக்கத்துல நமக்குள் இருக்கும் புனிதமான நட்போட ஆயுளுக்கும் சேர்ந்திருக்கப்போறோம் ” என கூறிய நண்பனாகி தற்போது பகைவனான சிகனின் மனைவி ரகணி கூறியதை சூழ்நிலை கைதி போல் மட்டுமில்லாமல், அவளது மாசற்ற நட்புக்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொண்டவராய் கவலையால் இருண்டிருந்த முகத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை காட்டுவது போல், அவளது பேச்சுக்கு சம்மதம் தெரிவிப்பது போல் பால் போன்ற தனது பற்களைக்காட்டி சிரித்தார் இந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருது பெற்றிருந்த நடிகர் மகா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *