(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“தம்பி உன்ரை காசு இந்தா”
ஐயாத்துரையிடம் இரண்டு கைகளையும் நீட்டிக் காசை வாங்கி மடிக்குள் வைத்தான் நாகலிங்கம். ஐயாத்துரையோடு நாகலிங்கமும் கரு வாடு விற்பதற்குச் சென்றிருந்தான். இன்று தான் அவர்களிருவரும் மீண் டும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
“தம்பி காசை வடிவாய் எண்ணிப்பாரும்”
நாகலிங்கம் மடியை உள்ளாய்ச் செருகியபடியே சிரித்தான்.
“தேவேயில்லை. நீங்கென்ன வேறையாளோ?”
நாகலிங்கம் தன்னுடைய கலியாணத்துக்கென இரு நூறு ரூபா வரையில் சேமித்து வைத்திருந்தான். அவனுடைய கலியாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஐயாத்துரை அவனிடம் ஓடி வந்து, தன் னுடைய காணியைக் கோயில் முகாமைக் காரரிடம் ஈடு வைத்ததாயும், அவர் காணியை உடனே மீளும்படி சொன்ன தாகவும் கூறிவிட்டு நாக லிங்கத்தைப் பார்த்த பார்வையில் அவன் கூறமுயன்ற மிகுதிச் சொற்கள் ஒலித்தன.
நாகலிங்கம் யோசித்தான். பிறகு உள்ளே சென்று தைலாப் பெட் டியுள் தாளாயும், சில்லறையாயுமிருந்த காசில் நூற்றைம்பது ரூபாவை எடுத்துக்கொண்டு வந்து ஐயாத்துரையின் கையிற் கொடுத்தான்.
அவனும் ஐயாத்துரையும் சின்ன வயதில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒன்றாகவே திரிகின்ற னர். ஐயாத்துரையோடு மீன் பிடிக்க வள்ளத்திற் பல வருஷங்களாக நாகலிங்கம் கூடிச்சென்று வருகின்றான்.
யோசனையோடு வந்த நாகலிங்கத்தின் முதுகில் ஐயாத்துரை செல்ல மாகத் தட்டினான். “வீடு கிட்டக்கிட்ட மனிசியின்ரை நினைவு தான் தம் பின்ரை மண்டேக்கை… சரியடப்பா றோட்டைக் கவனமாகப் பார்த்துப் போ,”
“இல்லையண்ணை”
நாகலிங்கத்தின் முகத்தில் அசடு வழிந்தது.
“எவள நேரமெண்டு காத்தண்டிருக்கிறன்”
கண்களின் களிப்போடு அவள் அவனெதிரே வந்தாள். முழுகிய தலை மயிர் படியாமல் பிரிபிரியாய்ச் சிலிர்த்து அவளின் முதுகிலும் தோட் களிலுமாய் வழிந்து கிடந்தது.
அவன் உள்ளே சென்று திண்ணையில் இருந்தான். அவனுக்குக் கலி யாணமாகி இன்னும் இரு கிழமைகள் கூட ஆகவில்லை. சிறிது நேரத்திற் குள் பாக்கியம் அங்கு வந்து அவனிருந்த திண்ணையில் அவனுக்காகக் கிண்டி வைத்திருந்த களியைச் சட்டியோடு வைத்துவிட்டு ஒட்டில் இருந்தாள்.
நாகலிங்கம் களியை பரிமிளால் அள்ளித் தின்று கொண்டிருக்க இரண்டு நாட்களாக மனதுள் புதைத்து வைத்திருந்த கதைகளை யெல் லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவளுக்கேயுரிய பாவனையில் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். கதைத்துக் கொண்டிருந்த பாக்கியம் இடையில் சிறிது நிறுத்தி யோசித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
“ஒண்டு சொல்லுவன் கோவிப்பியளே”
“என்ன? என்னெண்டு சொல்லுமன்?”
“நீர் கோவிக்க மாட்டீர் தானே?”
“ஓம் கோவிக்கன் சொல்லும்”
“உம்மடை அடுக்குப் பெட்டிக்குள்ளை தாளாக ஐஞ்சு ரூவா வைச் சிருந்தனீரெல்லோ…”
“ஓ, வைச்சிருந்தனான் சொல்லும்”
அவளின் தயக்கம் சிறிது சிறிதாய்க் குறைய, தெளிந்த கடலின் மெதுவான அலை புரளல்போல அவள் ஆறுதலாகின்றாள் .
“அந்தக் காசை எடுத்துப் பொன்னம்மாக்காட்டைக் குடுத்திட்டன். அவ பிள்ளைக்குச் சன்னியெண்டு ஓடித்திரிஞ்சா. கந்தையரும் அவ காசுக்குப் போக நாயைச் சூக்காட்டி விட்டிட்டாராம். அவவைப் பார்க்க மனவருத்தம் வந்திட்டுது. எடுத்துக் குடுத்திட்டன். நீங்கள் கோவிக்கிறியளே? என்ன செய்யிற பாவம். ஏழையளுக்கு ஏழையள் உதவாமை.. என்ன நான் சொல்லுறன் நீங்க பேசாமலிருக்கிறீங்க…”
அவள் நாகலிங்கத்தைப் பார்த்தாள். நாகலிங்கத்திற்குத் தன் னுடைய மனைவி இவ்வளவு பேசுவாள் என்று இன்றைக்குத்தான் தெரி யும். அவளின் இரக்க குணம் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, அவளை அப்படியே தாவி அணைத்து… அவனின் பிடியுள் அவள் இறுகி முனகினாள்.
பாரை மீன் போல அவனது உணர்வுகள் துள்ளிக் குதித்தன. ஒட்டி மீனைப்போல வழுவழுப்பான அவளின் உடலோடு, அவனுக்கு என்ன மூர்க்கம்! மத்தியானப் பொழுதிலும் அவளின் அணைப்போடு குழைந்து…எத்தனை களிப்பு! வெளியே யாரோ அழைப்பது கேட்கின்றது.
‘முகத்தினில் முத்திட்ட வேர்வையைக்கூடத் துடைக்க நேரமற்ற இன்பப் பொழுதை கடூர அழைப்பால் குழப்பி விட்டவனைக் காலால் நசித்து தரையோடு அரைத்தால் என்ன?’
நாகலிங்கத்தின் முகத்தில் ரௌத்ரம் பொங்கியது.
அவன் பாயிலிருந்து எழ, அவள் சீலையை அவசரமாக அள்ளி உடுத்தினாள்.
படலை கிறீச்சிட்டு அவன் கையோடு எற்றுண்டது. எத்தனை ஆத் திரத்துடன் அவன் படலையை அவிழ்த்தான். ஈச்சங்கம்பு பிளக்கும் சத் தகம் கையிலிருந்தால், எதிரே வருபவனைக் கொலை செய்து விடுவான் என்று நினைக்கத் தூண்டிய அவனின் கோபம் பொங்கிய தோற்றம், வெளியே நின்றவரைப் பார்த்ததும் கணவாய் முட்டைகள் கடல் நீருள் உடைந்தழிவதுபோல் உருவற்று அவனுள்ளேயே அழிந்து அமுங்கி விட்டன.
வெளியே அலம்பற் படலையோரமாக, சங்கிலியால் கட்டிய நாயைப் பிடித்தபடியே நின்றவர் கந்தையர். அவன் குடியிருக்கும் காணியின் சொந்தக்காரர். அவனும் ஐயாத்துரையும் மீன் பிடிக்கும் கடற்காணிக் கும் சொந்தக்காரர் அவர் தான்.
“வாருங்க வாருங்க…”
அவன் சால்வைத் துண்டைக் கக்கத்துள் வைத்துக்கொண்டு குரலோடு மசுந்துகிறான்.
“எத்தனை நேரமெண்டடா உன்னைக் கூப்பிர்ற… ஆ?”
அவரோடு நாயுங் குரைத்தது. ஆங்காரமும் திமிரும் குடி கொண்ட அந்தக் குரலினை மோதியெறிய வலுவின்றி நாகலிங்கம் குனிந்து நின்றான். அந்த உழைப்பினில் திமிர்ந்த தேகம், பண்பாடற்ற காட்டு மிராண்டித் தனமான அச்சொற்களில் கூழைக் கும்பிடிட்டு நின்றது.
“சரி சரி இப்ப அதொண்டுமில்லை. நீயென்ன இஞ்சை குத்தகைக் கிருக்கிறியோ, அல்லாட்டிச் சொந்தக் காணியெண்டு எண்ணியிட்டியோ? பாரன் தென்னம் பிள்ளைகளெல்லாம் கருகிப் போகுது… இஞ்சை இந்தக் காணி ஒரு பக்கம்… அங்கை கடற் காணி ஒரு பக்கம்… ஒரு கிழமையா எங்களுக்கு கறிக்கும் வழியில்லை. உனக்குக் கலியாணம் எண்டாப்போலை எங்களுக்கென்ன? நீ ஒத்த பொறுப்பைச் செய்யாதனி… ஓ நீங்க இப்ப பெரிய ஆக்களெல்லோ? அவன் ஐயாத்துரையெண்டவன், ஒரு பொறுக்கி.”
கந்தையரின் குரல் உச்சத்தில் ஏறி விட்டது. ஐயாத்துரையைப் பொறுக்கி என்று சொன்ன பொழுது நாகலிங்கத்திற்கு மனதினுள் கோபம் குபீரிட்டது; ஆனாலும் அவன் மௌனித்தே நின்றான். கந்தையர் ஓயவில்லை.
“டே நாகலிங்கம்… அவன் ஐயாத்துரையெண்ட வடுவாவுக்குச் சொல்லு… இனி என்ரை கடற்காணிப் பக்கம் தலைவைச்சும் படுக்கப்படா ஓம். சொல்லிப் போட்டன். நீயும் இண்டைக்கே காணியை விட்டு வெளிக்கிடு.. “
“என்ன?”
நாகலிங்கத்தின் உள்ளம் இடிய அதிர்வின் பெருமூச்சுச் சிறி எழுந் தது. கடலின் உள்ளே வாய் விரித்துக் கிடந்தபடியே பிராணியையோ, ஆட்களின் காலையோ தன்னில் பட்டதாய் உணர்ந்து கொண்டதும் கவ் விக் கொள்ளும் ஆர்க்கைப்போல அவனது நெஞ்சைக் கந்தையரின் ஒலி கடித்து இழுத்து வெளியே போட்டுக் குதறிக்கொண்டிருந்தது.
“நீங்க இப்பிடிச் சொன்னா? ஊருக்கு பெரிய நீங்க எங்கட பிழை யளுக்கெல்லாம் கோவிக்கலாமே…?”
“டே பரதேசி நாயே…பொத்தடா வாயை”
அவர் குரல் முடியவில்லை. மண்டாவின் வேகத்தோடு பாக்கியம் அங்கே குமுறிக்கொண்டு வந்தாள்.
“கதைக்கிறதை மட்டுமரியாதையோடை கதையுங்க. நாங்க அப்பிடி வழியத்த பரதேசியளில்லை”
கந்தையர் திடுக்கிட்டார். இப்படி அவரை எதிர்த்தவர்கள் யாருமில்லை. அவள் தான் முதல்.
நாகலிங்கத்திற்கு ‘முழி’ பிதுங்கியது.
கந்தையர் நாயின் சங்கிலியைக் கைவிட்டார்.
“என்னடி தேவடியாள் நீ சொல்லிறாய்?”
அவர் குரலின் மூர்க்கத்தை அவளின் குளறல் சன்னமாகப் பாய்ந்து துளைத்தது,
“எணை பொன்னம்மாக்கோ இஞ்சை வந்து பாரணை இந்த வீட்டிலை நடக்கிற கொடுமைகளை..”
மீண்டும் மீண்டும் அவள் அதையே ஒலித்தாள். அதற்குள்ளாக அவளின் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் கந்தையர் தூக்கி வெளியே எறிந்து விட்டார்.
கந்தையர் ஒவ்வொரு பொருளையும் தூக்கி வெளியே எறியும் போது நாகலிங்கம் கெஞ்சும் கண்களுடன் அவர் முன்னாகப் போய் நின்றான்; இடையிடையே கெஞ்சியும் பார்த்தான். ஆனால் கந்தையர் அவனைப் பார்க்கவுமில்லை; அங்கே மனிதர்கள் நிற்பதாய்க் காட்டிக் கொள்ளவுமில்லை.
“எந்தக் கொடுவினையிலை போவான்ரை அநியாயமடி இது?”
பொன்னம்மா அங்கு நின்ற கந்தையரைக் காணாமலே கேட்டாள். அதற்குள் பாக்கியம் ஓடிவந்து பொன்னம்மாவின் மார்பினுள் அடைக்கலம் தேடிக்கொண்டு விம்மினாள்.
“என்ரை செல்லம். என்ன நடந்ததடி சொல்லன்?”
அதற்குள் நாகலிங்கம் சொன்னான்:
“அக்கா அதுகளைப் பிறகு கதைப்பம். இப்ப அந்தச் சாமான்களை எங்கையெண்டாலும் கொண்டு போகோணும்”
“என்னடா தம்பி, என்ன நடந்ததெண்டு சொல்லன்”
“அங்கை வாறான் பொரிவான்” பாக்கியத்தின் ஆக்ரோஷமான குரலோடு சையும் குறிகாட்டி நீண்டது. நாகலிங்கம் பாக்கியத்தை அதட்டினான்.
“பாக்கியம் வாய் பொத்தோணும்; கண்ட கதைகள் கதைக்கப்படாது”
பாக்கியம் மௌனமானாள்.
கந்தையர் பொன்னமாவுக்கு முன்னால் வந்து நின்று விஷயத்தைச் சொன்னார்.
குரலிலே மாபெரும் சாதனையைச் சாதித்த பெருமிதம்.
பொன்னம்மாவிடம் அவ்வளவு குரலிருக்கும் என்று யாருக்கும் அன்று வரை தெரிந்திருக்காது. ஒல்லியாய் விழிகள் உள் பிதுங்கி மௌன மாய்த் திரிந்த பொன்னம்மாவுக்கு வேகாரங் கொடுத்த அந்தச் சக்தி எதுவோ?
“பறப்பான். டேதம்பி, பிள்ளை வெளிக்கிடுங்க. இந்தப் பறப் பான்ரை உத்தரியந் தாங்கேலாமைப் போச்சு. அண்டைக்கு காசு கேட்டுப் போக நாயைச் சூக்காட்டின அரக்கன் இவன்…. ஊரை அபகரிக்கின்ற இவையின்ரை தலையிலை எப்ப வெள்ளிடி விழுமோ? இந்த அறுவாருக்கு அழிவில்லையோ?”
பொன்னம்மா பிடிமண் அள்ளி எறிந்து திட்டினாள். கந்தையர் எது வுமே பேசவில்லை. ஆனால் கண்களிலே வன்மம் பொங்கிக் குமுறிற்று.
***
“தம்பி, எழையளுக்கு வாற கஷ்ட நஷ்டமெல்லாம் ஏழையளுக் குத்தான் தெரியும். நீ ஒண்டுக்கும் யோசிக்காமை எழும்பிப்போய் பார்க்க வேண்டிய அலுவல்களைப் பார்”
நாகலிங்கம் திண்ணையிலேயே, குத்துண்ட நங்கூரம்போல இருந் தான். அவனுக்குள் பலவித யோசனைகள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. அவனுக்கு கலியாணமாகி ஒரு கிழமையாவதற்குள் அவனது வாழ்க்கைக்கு இருந்த ஆதாரங்கள் எல்லாமே போய்விட்டன. அவனது தாய் தகப்பன் வசித்த குத்தகைக் காணியிலிருந்து அவன் வெளி யேற்றப்பட்டுவிட்டான். சின்ன வட்டனாக இருந்த காலத்திலிருந்தே அவன் தவழ்ந்து, நடந்து, உறங்கி மகிழ்ந்த மண் அது. அவன் சின்ன வனாக இருந்தபோது அந்தக் காணி நெருஞ்சிப் பற்றையாக இருந்தது. நாகதாளியும், இக்கீரியும், தூதுவளையுமே நெருஞ்சிகளுக்குள் அடர்ந்து காடாகிக் கிடந்த அந்தக் காணியை அவனது தாயும் தந்தையுந்தான் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள். அவன் கைகள் வலிக்க வலிக்க உழவாரத் தினால் காட்டுச் செவ்வந்தியை செதுக்கி, வலித்துப் பிடுங்கி எறிந்து அழித்திருக்கின்றான்.
“நீங்க ஏன் இப்பிடி இருக்கிறியள்? என்னிலை கோவமா? என்னாலை தான் எல்லாம் வந்தது. நான் சனியன். மூதேசி. விறுத்தில்லாதவள்…”
பாக்கியத்தின் சொற்களால் அவன் எற்றுண்டான்.
“பாக்கியம்”
அவன் குரல் அவளை உறுக்கியது. நாகலிங்கம் அவளைக் கடுமையாகப் பார்த்தான். அவளின் கண்களில் கண்ணீர் தளும்பி உடைந்தது.
“பாக்கியம் இப்ப நீ என்னத்துக்கு அழுகிறாய்?”
அவளிடமிருந்து சட்டெனப் பதில் வந்தது.
“பின்னையென்ன நீங்க சாப்பிடாமை இருந்தா நான் அழாமைப் பின்னையென்ன? என்னிலை அன்பெண்டால் சாப்பிடோணும். அல்லாட்டில் நானும் கிடந்து காய்வன்”
“பாக்கியம்…! பாக்கியம்!”
அவனின் துன்பத்திற்குள்ளும் அவளின் இதமான, பரிவான சொற் கள் அவனின் மனதினுள் மகிழ்வைக் கெம்பவைத்தன. அவன் எழுந்து அவளிற்குப் பக்கத்தில் சென்றான். அவனுக்காகக் காத்திருந்தவள் போல பாக்கியம் அவனது நெஞ்சினுள்ளே அணைந்து அடங்கினாள்.
அவன் அவளது தலையைக் கோதிவிட்டான்.
“பாக்கியம் எல்லாம் விதிப்படி நடக்குது. என்ன போனாலும் நான் உன்னை ஒரு நாளும் கோவிக்கமாட்டேன். பாக்கியம் நீ இல்லாட்டி… நீ இல்லாட்டி… நான் என்ன பாடுபடுவன் எண்டு எனக்கே சொல்லத் தெரியாது…”
அவனது குரல் திக்கியது. அவள் அவனை நோக்கி நிமிர்ந்தாள். அவனது கண்களில் கண்ணீர் பனித்திருந்தது. அவள் அவனையே வாஞ்சை யோடு பார்த்தாள். பார்வையில் நிமிஷங்கள் கரைந்தன.
“என்னை அழப்படாதெண்டிட்டு நீங்க ஏன் அழுறியள்?”
அவளின் குரலிற் செல்லமும் கேலியும் சேர்ந்தொலித்தன.
“நீ சரியான வாய்க்காறியடி…”
அவன் அவளினை வாய் பேசாதவாறு முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
அவர்கள் நின்ற நிலையில் பொன்னம்மா தன்னுடைய உட்பிதுங்கிய விழிகளை மூடிக்கொண்டு மறுபக்கந் திரும்பிச் சென்றான்.
நாகலிங்கம், பாக்கியத்தின் சின்ன நெற்றியில் அரும்பிய வியர்வை யைத் துடைத்துவிட்டான். நெற்றியின் இடதுபுற ஒரமாக அவளின் தலை மயிர் சிலும்பி முன் சளிந்து கிடந்தது. அவள் இடது கையினால் நெற்றியை வருடி மயிரிழைகளைச் சரியாக்கிக் கொண்டாள்.
“என்னை விடுங்கோ ….சுகமில்லாத பிள்ளைக்கு கஞ்சி குடுக்கோணும்!”.
***
கடலுக்கு எதிர்த்தாற்போல வீதியோரமாக மண்ணோடு அடி சாய்ந்து பிறகு குத்திட்டு நிமிர்ந்து இலைகளைச் சடைபரப்பி, இருப்பதற்கு அமைக்கப்பட்ட வாங்கு போல நிற்கிறது அந்தப் பூவரசமரம். அதற்குப் பக்கத்தில் சாதாழைகள் கும்பமாய்க் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பூவரசிற்குக் கிழக்காக சிறிது தள்ளி இறங்கு துறை தெரிகின்றது.
நாகலிங்கம் தன்னுடைய சாதாழைக்கும்பத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அந்தப் பூவரசமரத்தடியில் கடலைப் பார்த்தவாறு அமர் கின்றான். சற்று அடங்கியிருந்த மனவேதனை மீண்டும் புகை போலத் தோன்றுகின்றது. நீண்ட கடலின் முடிவும், வானமும் தொடுக்கும் இடம் போலக் காட்சி தரும் பொருத்திலே மணற்திட்டுகளும், தீவுப்பச்சையும், கலங்கரை விளக்கமும் தெரிகின்றன. நீலக்கடல் நடுவில் மிதந்து தெரியும் வெண்மணற்திட்டுகள் சில, பாய்கட்டி ஓடும் வள்ளங்களைப் போலக் காட்சி தருகின்றன. அப்படித் தெரியும் மணற்திட்டு ஒன்றிலே தான் – கல்முனை மணற்திட்டில் தும்பங்காய் நிறைந்திருக்கின்றது. பாக்கியம் தும்பங்காயில் வெகுவிருப்பம் வைத்திருந்தாள்.
அந்த நினைவிடையே, கந்தையர் நாகலிங்கத்தின் மனதிலே தோன் றினார். தடித்த சொண்டும், சிவந்த வெறிக்கண்களும் கந்தையரை நினைக் கையில் அவன் முன் காட்சியளித்தன. வயதறியாக் காலத்சிலிருந்து வாழ்ந்த காணியை விட்டு அகற்றப்பட்டு பொன்னம்மா வீட்டில் தஞ்சம் புகுந்தபோதும், கடற்காணியில் போகும் உரிமை தடுக்கப்பட்ட பொழு தும் அவனுக்கு கோபம் வரவில்லை. வருத் தந்தான் மேலோங்கியது.
நாகலிங்கம் கடலின் மேல், பார்வையைக் கடற்கொக்காய்ப் பறக்க விடுகின்றான். பூவரசமரத்திற்கு அருகாக ஓடும் வீதியில் — தேங் காய் ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டியின் சில்லுச் சத்தமோ, பாண் வண் டிக்காரனின் பிலாக்கண ஒலியோ அவனுக்குக் கேட்கவில்லை. தென்னோலை ஊறப்போடுவதற்குக் கடலினுள் இறுக்கி நட்டிருக்கும் கட்டையைப் போல அவனது எண்ணமெல்லாம், அவன் மீன் பிடித்து வந்த கடற் காணியிலேயே இறுகி ஊன்றிவிட்டது.
கடலினைக் கூடப் பணபலம் பிடித்தவர்கள் காணிகளாகப் பிரித்து விட்டார்கள். வரம்புகள் கட்டாத குறை ஒன்றுதான்.
பழைய நாட்களில் மீன் பிடிப்பதற்குக் கடலினுள் சென்ற வசதி படைத்தவர்கள் தம்முள் உடன்பட்டு, கடலிற் குறித்த இடங்களில் மீன் பிடிப்பதற்கென ஒப்புக்கொண்டார்கள், பிறகு பரம்பரைபரம்பரையாக அந்த இடங்களில் மீன் பிடித்துவந்து, எல்லோருக்கும் பொதுவான கடலை நிரந்தரமான மீன் பிடியிடங்களாக்கி, காலப்போக்கில் அந்த எல்லைகளுக் குட்பட்ட கடற்பரப்பு தமக்கே உரியதென்றும் அதில் தாமே மீன் பிடிக்க உரித்துடையவர்கள் என்றும் கூறி, தாங்கள் கடலிற்குப் போகாது அர சாங்க உத்தியோகங்களைச் செய்து கொண்டு அந்தக் கடற்காணியிலே மீன் பிடிக்கச் சிலரை நியமித்தார்கள். அதிலே மீன் பிடிப்பவன் கடற்காணி யின் சொந்தக்காரருக்கு வாடிக்கையாக, தினசரி தான் பிடிக்கும் மீனில் ஒரு பங்கும், குத்தகைக் காசும் கொடுக்கவேண்டும். நாகலிங்கமும் ஐயாத் துரையும் கந்தையரின் கடற்காணியிலேதான் மீன் பிடித்தார்கள். எத்த னையோ நாள் சுறாவோடும், கலவாயோடும், திருக்கையோடும் அவர்கள் போசாடியிருக்கிறார்கள்.
‘அந்தக் கடற்காணியிலை நாங்கள் உசிரையும் வெறுத்து முறிஞ் சிருக்கிறம். அப்பிடியிருந்தும் எங்கடை கையிலை சல்லிக்காசுகூட மிஞ்சி றேல்லை. மீன் பறியோடை கரையிலை இறங்கி றாத்தலிலை அதைக் கொண்டு போய் வித்திட்டு, ஒரு ரூவாக்குப் பத்துச் சதம் தீர்வையைக் குத்தகைக் காறன் கையிலை குடுத்திட்டு வீட்டுக்கு வருந்தனைக்கும் காசு புழங்குது. பிறகு பார்த்தால் கடன்… கடன்… கடன்…’ நாகலிங்கத்திற்கு மண்டை சிதறிவிடும் போலிருந்தது. அவன் பூவரச மரத்திலிருந்து எழந்து ஐயாத்துரையின் வீட்டை நோக்கி நடந்தான்.
***
ஐயாத்துரையின், வரிச்சுகள் அறுந்த கிடுகுப் படலையை மிதத்தித் தூக்கிக் திறந்து கொண்டு நாகலிங்கம் வளவிற்குள் இறங்கினான். ஐயாத் துரையின் மனைவி தங்கம்மா நாகலிங்கத்தைக் கண்டதும் திண்ணையில் இருந்தவள் எழுந்து உள்ளே போனாள். அவள் போய்ச் சிறிது நேரத்தில் ஐயாத்துரை கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியில் வந்தான்.
“வாமாப்பிள …வா…இண்டைக்குத்தான் பூனரிக்கு ஒரு அலு வலாய்ப் போட்டு வந்திருக்கிறன்…. தங்கம்மா மாப்பிளைக்கு கொஞ்சம் பாலைப்பழம் கொண்டா!”
ஐயாத்துரை கப்போடு சாய்ந்து சாக்கிற்குள் சுருட்டியிருந்த புகை=யிலையொன்றை எடுத்துக் பிரித்து சுருட்டுக்குத்தக்கதாய்க் கிழித்து அடுக்கி வாற்புகையிலையைக் கிள்ளி வாயில் நனைத்துச் சுருட்டுத் தயார் செய்து கொண்டிருந்தான்.
“மாப்பிளை, மதியம் மேற்காலை போட்டுது… வந்த விஷயம் என்ன? என்னடாப்பா கலியாணம் முடிச்சு உடனே நீ ஒரேயடியா வாடிப்போயிருக்கிறா… கலியாணம் முடிச்சிட்டா இனி உசாராத் திரியோணும்…”
ஐயாத்துரைக்கு கடற்காணி பறிபோன விஷயம் இதுவரை தெரி யாது என்பதனை அவன் பேச்சிலிருந்து நாகலிங்கம் ஊகித்துக்கொண்டான்.
“அண்ணை உங்களிட்டை ஒரு அவசரமான விஷயம் சொல்லோணு மெண்டு வந்தனான்”
ஐயாத்துரை சுருட்டை விரலில் இடுக்கிக்கொண்டு நாகலிங்கத்தைப் பார்த்தான். தயக்கமான அவன் முகம், எதற்குமே கோபங்காட்டாத அவனுடைய கண்கள் எல்லாவற்றிலும் மப்பு மூடியிருந்தது.
“அதுதான் என்னண்டு சொல்லு?”
நாகலிங்கம் ஒரே மூச்சில் சொன்னான்:
“கடற்காணியிலை இனி எங்களைப் போகவேணாமாம்…”
ஐயாத்துரையின் கையிலிருந்த சுருட்டு அவன் அதைப்பில் கையிலிருந்து எகிற, அவன் திண்ணையிலிருந்து கீழே இறங்கினான்.
“ஆரப்படிச் சொன்னவன்? ஆரு சொன்னவன்?”
நாகலிங்கம் முழங்கையைச் சொறிந்தான்.
“வேறை ஆர் கந்தையர்தான்!”
நாகலிங்கம் நடந்ததெல்லாவற்றையும் ஐயாத்துரைக்குச் சொன்னான். சிறிது நேரம் ஐயாத்துரை யோசித்துவிட்டுத் தனக்குத்தானே கந்தையரின் செயல்களுக்குரிய காரணங்களை உணர்ந்து கொண்டான்.
நாகலிங்கத்திற்கு கலியாணமாகி மூன்றாம் நாளன்று கந்தையரின் மகன் வீட்டுப்படலையில் நின்று ஐயாத்துரையைக் கூப்பிட்டான். ஐயாத் துரை படலையடிக்கு வந்தான். கந்தையரின் மகன், தன்னுடைய தகப்பன் அன்று பின்னேரம் இருவரையும் வேலியடைக்க வரும்படி சொல்லிவிட்ட தாகச் சொன்னான். அவன் சொன்ன வேளையில் ஐயாத்துரைக்கு நெஞ்சினுள் ஆத்திரம் குமுறியது. தனக்குள் அதை அடக்கிக்கொண்டான். கலியாணமாகி மூன்று நாட்களும் ஆகவில்லை. அதற்குள் நாகலிங்கத்தை வேலியடைக்கக் கூட்டிக்கொண்டு வரச் சொன்ன கந்தையரின் முதலாளித் திமிர் அவனுக்குப் பிடிக்கவில்லை. நாகலிங்கம் கந்தையர் கூப்பிட்டால் போய் விடுவான் என்பது ஐயாத்துரைக்குத் தெரியும். அவன் எதற்கும் வளையும் மெதுமையானவன். ஐயாத்துரை கந்தையரின் மகனுக்குச் சொல்லி விட்டான். “இப்ப நேரமில்லை ஒரு கிழமை கழிச்சுவாறம்” அந்தச் சொற் களுக்கு வன்மம் தீர்க்கவே இந்த முயற்சிகள் என்பது ஐயாத்துரைக்கு விளங்கிவிட்டது.
ஐயாத்துரை நாகலிங்கத்தைப் பார்த்தான். வழக்கமாகவே சோர்ந்து காணப்படும் அவன் இப்போது எல்லாமிழந்த அனாதை போல நின்றான். ஐயாத்துரைக்கு அவனின் மனம் விளங்கும். எதிலும் நாகலிங் கம் நியாயம் நீதிக்குக் கட்டுப்பட்டவன். யாருக்கும் விசுவாசமானவன் . அவன் தான் இப்போது நிராதரவாய் நிற்கின்றான். நினைக்க நினைக்க ஐயாத் துரைக்கு ஆத்திரம் கூடிக்கொண்டிருந்தது. சண்டிக்கட்டை மடித்துக் கட் டிக் கொண்டான்.
“கண்டறியா மயிர். ஒரு நாளெண்டான்ன தன்ரை காணி எதெண்டு அறியாதவன். நாங்க இவள நாளா முறியிறம் … அது எங்கடை தாய் மாதிரி, டே நாகலிங்கம் எவனடா சொன்னவன் எங்களை அதிலை மீன் பிடிக்கப்படாதெண்டு. … டே இஞ்சைபார் … இஞ்சாலைபார் …. நாளைக்கு…. நாளைக்கு வெள்ளி – அப்ப நாளேண்டைக்கு நான் அந்தக் காணிக்கை தான் பறிபோட்டு எடுக்கப்போறன். நீ என்னோடைவா … எங்களை ஒரு தரும் அசைக்கேலாது ….”
ஐயாத்துரையின் குரல் ஆத்திரத்தினில் உச்சமாகி ஒலித்தது. அவ னது சத்தத்தால் அயலிலுள்ளவர்கள் அவனது முற்றத்திற்கு வந்து விட் டார்கள். ஆட்களைக் கண்டதும் அவனுக்கு கோபம் மேலுங் கூடிவிட்டது. கந்தையரை நேருக்குநேர் நின்று பேசுவது போன்ற ஆத்திரத்தில் அவன் சத்தமிட்டான்.
“முந்தியைப் போலை எங்களை ஏமாத்தேலாது. காணிக்காறன் வேணுமெண்டாம் போய் தன்ரை நாயத்தைக் கோட்டிலை சொல்லட்டுக்கும். தம்பி நாகலிங்கம் நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. நாங்க இப்பிடிக் கன பேரைக் கண்டிருக்கிறம்…. இண்டைக்கும் நாளைக்கும் போகட்டும், நாளேண்டைக்கு நாங்க கடலுக்குப் போய்க் காட்டுவம்!”
நாகலிங்கம் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றான்.
“நீ போ தம்பி, நான் கொஞ்சத்தாலை பூவரசடிக்குவாறன். நாங்க இருக்கேக்கை ஒண்டுக்கும் யோசியாதை போ”
***
நாகலிங்கம் திண்ணையில் யோசித்துக்கொண்டிருக்க, பாக்கியம் திண்ணைக்கு கீழ் உள்ள ஒட்டில் அவனுக்கு அருகாகப் போயிருந்தாள். அவனுக்கு யோசனை எல்லாம் சனிக்கிழமையைப்பற்றி.
“என்னத்துக்கு நெடுக நீங்க இப்பிடி இருக்கிறியள்?”
பாக்கியம் வாஞ்சையோடு கேட்டாள். பாக்கியத்தின் குடும்பப் பொறுப்புத் தெரியாத தன்மைக்காக நாகலிங்கத்தின் மனதினுள் லேசான வருத்தம் நிழலாடி மறைந்தது. வேண்டுமென்று சிரித்த சிரிப்புடன் அவளைப் பார்க்கின்றான்.
“இப்பிடி நான் ஒரிடமும் போகாட்டில் காசென்னெண்டு வரும்?”
பாக்கியம் அவன் கேள்வியில், ஒட்டின் விழிப்பினைச் சுரண்டினாள். பிறகு அவளுக்குள் நினைத்தாள்.
‘பொன்னம்மாக்கா சொன்னவ. இந்த ஊருக்கை வாடைக்காலத் திலை தான் ஆம்பிளையள் உழைப்பினை. சோளகத்திலையெண்டா மழையும் புயலும் கடலுக்குப் போகேலா…. அப்ப பெண்டுகளின்ரை உழைப்புத் தான். மட்டைக் கடலுக்கை போய் மட்டையள்ளியாந்து தும்பாக்குக் கயிறு விடுவினை. அந்தக் காலத்திலை ஒரு றாத்தல் கயிறு அறுவே எழுவேச மெண்டு போம்’
பாக்கியம் நினைவுகளை முறித்துக் கொண்டாள்.
“எப்ப சோளகம் பேரும்?”
நா கலிங்கம் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். தான் எதையோ சொல்ல, அவள் ஏதோ கேட்கின்றாளே என்ற எண்ணம் அவனுள்.
“ஏன் பாக்கியம் ஏன் கேட்டனீர்?”
நாகலிங்கத்தின் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. அவளுக் குள்ளேயே திட்டங்கள் வளர்கின்றன என்பதை அவளின் சின்ன நெற்றி யில் கீறும் கோடுகள் காட்டுகின்றன.
“முதல்லை நீங்க சொல்லுங்க …. எப்ப சோளகம்?”
“அதுக்குக் கன நாள் கிடக்கு”
அவனது பதிலில் அவளது முகஞ்சாம்பி, கேட்ட துருதுருப்பு முகத் திலே சப்பளிந்து விட்டது. அவளின் முகவாட்டம் நாகலிங்கத்தின் மன தில் காய்வினை உண்டாக்கியது. அவளைப் பிடித்து தனக்கருகாகத் திண்ணையில் இருத்தினான். அவள் தோளோடு தலை சாய்த்திருந்தாள்.
“பாக்கியம் டக்கெண்டேன் உம்முடைய முகம் வாடினது?”
அவளது கன்னத்திற்குக் கையைக் கொடுத்து, தன் முகத்திற்கு நேராக அவளுடைய முகத்தை நாகலிங்கம் திருப்பினான். அவளுடைய கன்னங்களில் லேசாகக் கரிபூசிக் கிடந்தது.
“சொல்லும் … என்னெண்டு சொல்லனை … எங்கை ஆ… வாய் திறக்குது …. ஆ…”
“போங்க என்னைக் கேக்கப்படா… எனக்குப் பகிடி விடாதேங்க..”
நாகலிங்கத்தின் சொற்களில் அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் பதிலும் வந்தது. நாகலிங்கம் பொய்க் கோபத்துடன் திண்ணையிலிருந்து எழுந்தான்.
“அப்ப நான் போறன்….”
அவள், அவன் பின்னாலேயே போனாள்: “சொல்லுறன்”
அவன் நின்றான். “நான் மட்டைக் கடலுக்குப்போறன்” – நிலத்தைப் பார்த்தபடி கூறுகிறாள் பாக்கியம்:
“அடியடா புறப்படலையிலை எண்டானாம் …”
நாகலிங்கத்தின் குரல் துள்ளியெழ அவளின் கைகளினை எட்டிப் பிடித்தான். அவள் திமிறினாள். அவனது கேலிக்குரலில் அவனது முகத்தை ஏறிடவே அவளுக்கு வெட்கம்.
ஏறிடதேன். அவள் திமில் துள்ளியெழ
“என்ரை மனிசி உழைக்கப் போறா… பொன்னம்மாக்கா இஞ்சை வாவனணை …”
நாகலிங்கம் அவளைப் பிடித்த பிடியை விடவில்லை. அவன் அவளின் முகத்திற்கு நெருங்கி, அடங்கிக் கனிந்த குரலிற் சொன்னான்:
“பாக்கியம் நான் என்ன உடம்பிலை பெலமில்லாதவன் அல்லது வலது குறைஞ்சவனெண்டு நெச்சீரே .. மற்றவங்களைப் போலையில்லை … உம்மை நான் ஒரு நாளெண்டான்ன கஷ்டப்படுத்தன். ஆளே ஈக்குக்குச்சி போலை உம்மாலை தக்கை தூக்கி மட்டையடிக்கேலுமே? வெறும் விசர்ப் பெட்டை. சொல்லக்கிடேலை கோவமெண்டா மூக்குக்கை அவவுக்கு வந்திடும்”
பொறுப்போடு அவன் கூறிய அன்பான, வாத்சல்யம் நிறைந்த குரலின் அணைப்பினால் அவள் அவனது தோளில் புதைய எண்ணினாள். என்னவோ கண்களில் துளிருகின்ற கண்ணீரையும் அவள் துடைக்கவில்லை.
***
கடலுக்கு எதிர்த்தாற்போல வீதியோரமாக அடிசாய்ந்து, பிறகு குத்திட்டு நிமிர்ந்து இலைகளைச் சடைபரப்பி இருப்பதற்கு அமைக்கப்பட்ட வாங்குபோல நிற்கிறது அந்தப் பூவரசமரம். பச்சை இலைகளிடையே மஞ் சட் பூக்கள் சொரிவாய்க் கிடக்கின்றன. மரத்தடியில் உதிர்ந்து வாடிய கபில நிறப் பூவரசம் பூக்கள்.
வாடிக்கிடந்த பூவொன்றைக் கையிலெடுத்துக் கசக்கிக்கொண்டு நின்றான் ஐயாத்துரை. அம்மன் கோயிலடியிலிருந்து வந்து கொண்டிருக்கும் முருகரையும், வேலாயுதரையும் அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
“அண்ணை கோயிலடியாலை வாறம் ….. சந்தணம் திருநீறு கொஞ்சம் எடன் …”
“ஓந்தம்பி உங்களைத்தான் பாத்தண்டு நிக்கிறன். வெள்ளிக்கிழமை நாத்து இண்டைக்கு கோயிலுக்கும் போகேல்லை ….”
“என்னண்ணை என்ன விஷயம்?”
ஐயாத்துரை சண்டிக்கட்டை மடித்துக் கட்டிக் கொண்டான்.
“தம்பி நான் சொல்லுறதைக் கவனமாகக் கேளுங்கோ … கந்தையர் எங்களுக்கு செய்த வேலை தெரியுமே?”
வேலாயுதர் தலையை ஆட்டிக்கொண்டார். தெரியும் என்ற அர்த் தம் அதில் தொனித்தது. பூவரசமரத்தடியில் புதிதாகக் கம்புக்கட்டோடு தம்பிராசாவும் வந்து சேர்ந்து கொண்டான்.
“தம்பி முந்தியப் போலை எங்களை ஏமாத்தேலாது. கந்தையர் வேணு மெண்டா கோட்டடிக்குப் போகட்டு. போய்த் தன்ரை காணியின்ரை எல்லையைக் கோட்டடியிலை சொல்லட்டு. எப்பிடியடா சொல்லுற? அங்கை பார் நாகலிங்கமும் வாறான். அவனைப் பாருங்க கலியாணம் முடிஞ்சு ஒரு கிழமை முடியுமுந்தி கந்தையருக்கு சேவகம் பண்ணப்போகாததிலை காணி பில்லை, பூமியில்லை …. கடலுமில்லை. தம்பி வேலாயுதம் நீ சொல்லு? நாங்க என்ன எல்லாருக்கும் சிண்ணுகளே ….. அல்லா வேலைகாறரெண்டு எங்களைத் தாரைவார்த்திருக்கே?”
ஐயாத்துரை இடையில் நிறுத்திவிட்டுக் கடலை நோக்கித் திரும்பினான்.
“எங்களைப் போலை இவங்கள் வள்ளத்திலை ஒரு நாளெண்டான்ன வந்திருக்கிறாங்களாடா? நாங்க முறிமுறியெண்டு முறிய அவைகள் காலாட்டிக் கொண்டு வீட்டிலையிருந்திட்டு இப்ப சண்டித்தனம் பேசிற தெண்டா முடியுமே? முறியிறவங்களை இனிமேல் முந்தியைப்போலை வெருட்டேலாதடா …. வெருட்டேலாது”
ஜயாத்துரையின் உறுதியேறிய குரலில் நாகலிங்கத்தின் உடல் சிலிர்த்தது. அவனின் உள்ளத்துள் வாடைக்காலக் கடல் அலைகளாய் ஐயாத்துரையின் சொற்களே அடித்துப் புரண்டு ஒலித்துக்கொண்டிருந்தன. வேலாயுதரும், முருகரும், நாகலிங்கமும் ஐயாத்துரை சொன்னதை ஏற் றுக்கொண்டனர். தம்பிராசா முகத்தைக் கோணிக்கொண்டு ஒரு மாதிரி நின்றுவிட்டுக் கம்புக் கட்டைக் கீழே போட்டான்.
“எண்டாலும் அண்ணை, நீங்க செய்தது பிழையான வேலைதானே?”
“என்ன … என்னெண்டு?”
ஐயாத்துரை கேள்வியோடு தம்பிராசாவைப் பார்த்தான். பருக்கள் நிறைந்த தம்பிராசாவின் முகம் நிச்சயமான முடிவோடிருந்தது. ஐயாத் துரையையே கவனியாதவன் போல அவன் தொடர்ந்தான்.
“எவ்வளவெண்டாலும் அந்தாளின்ரை காணியுக்குள்ளை திண்டு கொண்டு நாகலிங்கமும் பெஞ்சாதியும் அந்தாளை மட்டுமரியாதையில்லா மல் பேசப்படாது ..”
தம்பிராசா பிடரியைத் தடவியவாறு வேலாயுதரைப் பார்த்தான்.
“நான் சொல்வது சரியா?” என்ற மௌனமான கேள்வி அவனது முகத்தினிலே எழுத்துக்கூட்டியிருந்தது. பார்வையில் வேலாயுதர் தலை குனிந்தார்.
“அந்தாளின்ரை உதவியில்லாட்டில் நாகலிங்கம் நீங்கெல்லாம் கஞ்சி குடிக்கேலுமா?”
ஐயாத்துரைக்கு ஆத்திரம் குபீரிட்டது. வார்த்தைகள் வெடித்துப் பொரிந்தன.
“தம்பிராசா, உப்பிடி வேறாரெண்டான்ன கதைச்சிருந்தா இப்ப வேளாமுள்ளு மறுமொழி சொல்லியிருக்கும் …உங்களைப்போலை நாங் கொண்டும் மற்றவைக்கு கால்கழுவுறேல்ல”
ஐயாத்துரையின் கோபம் எங்கே வந்து முடியுமென்று வேலாயுதர் அறிவார். அவர், ஐயாத்துரையைப் பல கதைகளைச் சொல்லி இறங்கு துறையடிக்குக் கூட்டிச் சென்றார். தம்பிராசா பேசாமல் கம்புக்கட்டைக் கொண்டுபோய் கடலுள்ப் போட்டுவிட்டு ஐயாத்துரை போன திக்கை நோக்கி ஏளனத்துடன் சிரித்தான்.
“விடியக் கலாதிப் பட்டினையெண்டால் வீணாகக் கோட்டடியிலை தான் போய் நிப்பினை. தாறதை வாங்கிக்கொண்டு பணிவிடை செய் யிறதை விட்டிட்டு பேய்த்தனமா அந்தாளோடை, பெரிய மனிஷனோடு போய்க் கொழுவலுக்கு நிக்கினை.”
***
அதிகாலை. ஊர் கடற்கரையில் நின்றது.
ஐயாத்துரை சொன்ன சொற்கள் ஊரின் இதயத்துள் நிறைந்து பரபரப்பூட்டி விட்டது. கடற்காணிக்காரன் வெள்ளாப்பு நேரத்தில் ஆள் வைத்து அடிப்பிக்கலாம் என்ற குசு குசுப்பு எங்கும் மார்கழி வெள்ளமாய்ப் பரவிவிட்டது.
ஐயாத்துரையும் நாகலிங்கமும் கைகளில் சாமான்களுடன் கம்பீரமாக நடந்து வந்தனர். ஐயாத்துரையின் வலது தோளில் இரண்டு மரக் கோல்கள், ஒரு மண்டா ஆகியனவும் இடது கையில் சவளுமிருந்தது. நாகலிங்கம், பழந்தண்ணீர்க் குடுவையையும், பறிக்கூட்டையும், ஈக்கில் கோர்வையையும் கையிலே கொண்டு வந்தான். பாக்கியத்தை சமாதானப் படுத்தி வீட்டிற்குள்ளிருக்கும்படி செய்ததில் நாகலிங்கத்திற்குச் சிறிது நேரம் போய்விட்டது. அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்த அவன் படாத பாடுபட்டுவிட்டான். துணிவேயான அவளின் பயத்தினை அவன் ஏளனத்தோடு கண்டித்துவிட்டு வந்தான்.
பூவரச மரத்தடியில் இருவரும் தங்கள் பொருட்களை வைத்து விட்டு துண்டை எடுத்து தலையில் வரிந்து கட்டிக்கொண்டனர். அதே நேரத்தில் இறங்கு துறைப் பக்கமாக நாய் குரைத்துக் கேட்டது. பேச்சுக் குரல்கள் கிளம்பின: “கந்தையர் ஆக்களோடை வாறார்…”
‘இண்டைக்கு வாற அமந்தறையோடை இவையள் துலையப் போகினை. இதெல்லாம் அழியிற புத்திதான்’ தம்பிராசா தன்னுள் முணு முணுத்துக்கொண்டான்.
வள்ளத்தினுள் பறி, மரக்கோல்கள், சவள் ஆகிய யாவும் ஏற்றி யாகி விட்டன. கஞ்சிக் குடுவையைப் பத்திரமாக சவளோரமாக வைத்து விட்டு கட்டுக்கல்லை ஐயாத்துரை வள்ளத்தினுள் தூக்கிப் போட்டான்.
“டே…!”
கடற்கரையெங்கும் அந்தக் கட்டைக்குரல் மௌனத்தை உதறி ஒலித்தது. குரலோடு நாலு தடியர்கள் மண்டாக்களைத் தூக்சிக்கொண்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னாலே நாயும் கந்தையரும். கடற்கரை மண் கசகசக்கிறது.
“ஆரடா அவன் ஐயாத்துரை?”
குரலுக்குப் பதிலேதுமற்ற பயங்கரம். அலைகளின் சலசலப்பு மட்டும் கேட்கின்றது.
“வள்ளத்தடியிலை நிக்கினை போலை…” கந்தையரின் குரல் உறுமுகிறது?
கிழக்கின் வெளிறலில் பரவும் மெல்லிய வெளிச்சம்; அதில் உருவங்கள் கண்களிற்குத் தெளிவாகிக்கொண்டிருக்கின்றன.
“எளிய கூலிக்காற நாயள்… எவனடா அவன்?”
திமிரான தடியனின் குரலை ஐயாத்துரையின் குரல் மோதி விழுத்தியது:
“டேய் நாங்க கூலிக்காற நாயளில்லையடா…. தொழிலாளியடா… தொழிலாளி…”
இடையிலே கந்தையரின் கனைப்புக்குரல் கேட்டது. அதற்குள் வள் ளத்துள் ஏறி நின்ற நாகலிங்கம் நீரினுள் தொப்பென்று குதித்தான்.
நான்தான்ரா ஐயாத்துரை, இப்ப என்ன செய்யப் போறியள்? செய்யிறதைச் செய்யுங்க பாப்பம்… துணிவிருந்தா வாருங்கடா..”
வள்ளத்துள் நின்ற ஐயாத்துரை பதைபதைக்க நாகலிங்கம் கரையை நோக்கி நிமிர்வுடன் நடந்துவந்தான். முன்னே நோக்கி நடந்து வந்த அவனை நோக்கி மும்முனை மண்டா சீறிக்கிளம்ப, அவன் குனிய, அது மண்ணிணுள் சதக்கென்று புதைய கரையின் இதயத்துள் பெரு மூச்சு நடுங்கியது:
“அவையள் செய்யிற தொழிலுக்கை அவயளுக்கொரு சண்டித் தனம்… மடை நாயள்… வழியத்த பரதேசியள்… நாய்கள்…”
கந்தையரின் திமிர்க் குரலில் ஏளனம் மேவியது.
அந்தக் கணத்திலிருந்து நாகலிங்கத்தின் மனதினுள் புதியதொரு மனிதன் தோன்றிவிட்டான். அவன் தொழிலாளி; மீன்பிடி காரன். அவன் தொழில் செய்வதனைத் தடுக்க யாருக்குமே உரிமையில்லை. ஐயாத்துரை யின் குரல் அவனின் காதோடு உரத்துக்கேட்கிறது.
“எங்களைப் போலை இவங்கள் வள்ளத்திலை ஒரு நாளைக்கெண்டான்ன வந்திருக்கிறாங்களாடா?…. நாங்க முறிமுறியெண்டு முறிய அவையள் காலாட்டிக்கொண்டு வீட்டிலை இருந்துவிட்டு இப்ப சண்டித்தனம் பேசி றேண்டா முடியுமே? முறியிறவங்களை இனிமே முந்தியைப் போலை வெருட் டேலதடா…. வெருட்டேலாது..”
“அடியுங்கடா…!”
கந்தையரின் குரல் துரிதத்திற்காக ஓங்கியது. அதே வேளையில் நாகலிங்கத்தின் பக்கமாக ஐயாத்துரை குதித்தோடி வந்தான். கையில் சின்ன மரக்கோல்.
“நாகலிங்கம் இனி யோசிக்கேலாது; வாறவன் வரட்டும்… எங்களை நாய்களெண்டா நாங்க கடிச்சுத்தான் தீருவம்…”
அவனுடைய குரல் ஓயவில்லை. அதற்குள்ளே சீறிவந்த மண்டா அவனது தோளில் குத்த, அவன் அலறிக்கொண்டு கையைப் பொத்திய படி கடற்கரை மண்ணிலே துவண்டு விழுந்தான். ரத்தம் சேறாய் வழிந்தது,
இதுவரை நட்ட களங்கண்டித்தடி போல் நின்ற தம்பிராசாவின் மனதினுள்ளே அவனை யறியாமலே ஓரு வேகம் ஏற்பட்டது. தன்னுடைய தோளில் காயம் பட்டது போன்ற துடிப்பில் அவன் தனது தோளைப் பொத்திக்கொண்டான். வேலாயுதரும் இன்னுஞ் சிலரும் கொடுக்குச் கட்டுவதும் அவனுக்குத் தெரிந்தது.
ஐயாத்துரைக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டே நாகலிங்கம் வெறியனாகக் கத்தினான்: “ஐயாத்துரை அண்ணரையும் எனனையும் சாக விடப் போறியளோ?” அவனது குரல் ஓயமுன், இன்னொரு குரல் கூவியது:
“பொன்னம்மாக்கான்ரை வீட்டை எரிச்சுப் போட்டாங்கள்…..! என்ரை ராசா…!”
ஐயாத்துரை இரத்தம் வழியும் தோளைப் பொத்திக்கொண்டு நிலத் திலிருந்து எழுந்தான். கூவியவள் நாகலிங்கத்தின் மனைவி பாக்கியம். தலை மயிர் அவிழ்ந்து புரள கிழிந்த சீலையுடன், பிதுங்கிய பயம் நிறைந்த கண் களுடன் நடுங்கியபடியே அவள் கதறிக்கொண்டு ஓடிப்போய் ஐயாத் துரைக்குப் பக்கத்தில் நின்ற நாகலிங்கத்தின் காலடியில் தொப்பென்று விழுந்தாள்.
ஐயாத்துரையின் குரல் கரையினை நோக்கி மீண்டும் குளறியது:
“அண்ணை இனியும் பாக்கவே போறியள்? நாங்க சாகிறதைப் பாக்கவே நிக்கிறியள்? இண்டைக்கு வீடெரியுது. நாளைக்கு எங்களை எரிப் பாங்கள். எங்களிலை கனபேர்,.. அவங்களிலை நாலுபேர்…. பிறகும் நாங்க தான் அடிவாங்குறம்…”
ஐயாத்துரையின் குரல் ஓயுமுன் இரண்டு தடியர்கள் அவனை நோக்கிப் பாய..
“டே, அவையள்ளை ஒரு தனும் கைவைக்கப்படா வைக்கிறவன் ரை சவந்தான் இதிலை விழும்” கூறிக்கொண்டே தம்பிராசா ஐயாத்துரைக்கு முன்னாலே போய் குஞ்சைக் காக்கும் கோழிபோல மறைத்து நின்றான்.
கண்களில் மிதக்கும் நட்புறவுடன் ஐயாத்துரை தம்பிராசாவைப் பார்த் தான். நேற்றைய தம்பிராசா செத்து இன்று புதுத் தம்பிராசா தோன்றியிருக்கிறான்.
தம்பிராசாவின் மனதிலே பல்வேறு சம்பவங்கள் சுற்றிச் சுழன் மேடின. அந்தச் சிறிய கிராமத்திலே அவன் வயதறிந்த காலத்திலிருந்தே உளமார அவனுக்காக இரங்கி உதவியர்கள், நாயை விடக்கேவலமாக அவமதிக்கப்படுவதனை அந்தக் கணத்திலே அவன் தாங்க முடியாதவனானான், பணபலத்தையே பெரிதென நினைத்துக் கூழைக் கும்பிட்டிட்டு வாழ்வதை விட, வறுமையின் துன்பத்திற் கெதிராக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது மகோன்னதமான வீரச் செயல் என்ற எண்ணம் அவனது நெஞ்சினுள்ளே ஆவேசமாகத் தலை உயர்த்திற்று.
“அண்ணை… தொர்றவன் தொடட்டும் பாப்பம். நாங்கள்ளாம் ஒண்டு. இனி எங்கடை தலையிலை மிளகாய் அரைக்கேலாது…”
தம்பிராசா முஷ்டியை உயர்த்திக் காட்டிய படியே கரையைப் பார்த்தான். வேலாயுதர், முருகர், முத்தர் எல்லோரும் கொடுக்கை வரிந்து கட்டிக்கொண்டு அவனை நோக்கித் தோழமையுணர்வுடன் வந்த னர். கரையில் நின்ற முழுப்பேரும் ஐயாத்துரையையும், நாகலிங்கத்தையும் சுற்றிவர நின்ற பரபரப்பில் கந்தையரின் நாய் குரைத்தது.
“முறியிறவங்களை முந்தியைப்போலை வெருட்டேலாது…”
நாகலிங்கம் ஓங்கிய குரலிற் சொல்ல சுற்றி நின்றவர்களின் தலைகள் தானாகவே அசைந்தன. கரையில் நின்ற நாலு தடியர்களும், கூட்டாக நிற்கும் தொழிலாளிகளையும் கைசோர்ந்து நிற்கும் தங்கள் முதலாளியை யும் பார்த்தனர். எதுவுமே தோன்றாத நிலையில் மண்டாவை எடுக்காமல் அவர்கள் அங்கிருந்து தலையைக் குனிந்தபடி நடந்தனர். எல்லாம் இழந்த நடை.
கடற்கரையில் மெல்லிய காற்று குளிர்ச்சியோடு வீசிற்று. கடற் கரையின் நீளப்போக்கில் சனங்கள் நின்றனர். கச கசக்கும் மணற் தரை யினுள் ஒளிய மார்க்கமற்ற நண்டுக் குஞ்சுகள் வள்ளங்களின் கீழே ஒதுங்கிப் பதுங்கின. கடல் நாரைகளும், காகங்களும் இரைச்சலிட்டுப் பறந்தன. ஒன்றுமே விளங்காத சிறுவர்களின் துஷ்டத்தனங்கள் பொறுக்க முடியாத குட்டி நாய்கள் வாள் வாளென்று ஒலியிட்டன. நோஞ்சான் சிறுவனொரு வன் முருகைக் கல்லொன்றை எடுத்து, கந்தையரின் நாயை நோக்கி வீசி விசுக்கி எறிந்தான்.
கடற்கரையில் தனியாய் நின்ற கந்தையர் பார்ப்பதற்கு பார்வை யற்றவராகித் தலை கவிழ்ந்து நடந்தாலும் மனதினுள் நிறைந்த பழைய திமிரும், வன்மமும் இம்மியளவும் குறையவில்லை.
முருகர், கந்தையர் போகும் திசையை நோக்கிக் காறியுமிழ்ந்து விட்டு முணுமுணுத்தார்:
“நாங்களெல்லாம் ஒண்டெண்டு இவருக்கு இனியெண்டான்ன தெரியட்டு!”
– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு