சதீஷ் தன் வீட்டில் எந்த எலெக்ட்ரானிக் பொருள் ரிப்பேரானாலும், ஆர்.கே.சிஸ்டம்ஸ் மனோகரைத்தான் கூப்பிடுவான். மற்ற மெக்கானிக்குகளைவிட, மனோகர் நேர்மையாகவும் தொழில் சுத்தமாகவும் இருப்பதாக அவன்மேல் சதீஷ§க்கு ஒரு நம்பிக்கை!
அன்றைக்கும் அப்படித்தான்… டி.வி. ரிமோட் திடீரென்று பழுதாகிவிட்டது. போன் போட்டு மனோகரை வரவழைத்தான் சதீஷ்.
மனோகர் வந்து, ரிமோட்டைப் பிரித்துப் பார்த்ததுமே, அதில் என்ன பிரச்னை என்று புரிந்துவிட்டது.
“சார், சின்ன பிராப்ளம்தான்! பத்து நிமிஷத்துல இங்கேயே சரி பண்ணிக் கொடுத்துட்டுப் போயிடறேன்” என்றவன், அப்படியே சரி செய்துகொடுத்து விட்டான். சதீஷ் வாங்கி இயக்கிப் பார்க்க, நன்றாக வேலை செய்தது.
“வெளியிலன்னா 100 ரூபா வாங்குவேன். நீங்க நம்ம ரெகுலர் கஸ்டமர். 50 கொடுங்க, போதும்!” என்று பவ்வியமாகக் கேட்டு வாங்கிக் கொண்டு, “வரட்டுமா சார்! குழந்தை கையில மட்டும் ரிமோட்டைக் கொடுத்துராதீங்க. தூக்கிப் போட்டுச்சுன்னா ஃபால்ட் ஆயிரும்’’ என்று அட்வைஸ் பண்ணிவிட்டுக் கிளம்பிச் சென்றான் மனோகர்.
“பார்த்தியா மீனா, வேற ஒருத்தனா இருந்தா என்னவோ பெரிசா கெட்டுப்போச்சுன்னு நாடகமாடி 200 ரூபா தாளிச்சிருப்பான். மனோகர் தொழில் தர்மம் உள்ளவன்!” என்று மனைவியிடம் சிலாகித்துக்கொண்டு இருந்த சதீஷ§க்குத் தெரியாது…
ரிமோட் வேலை செய்யாததன் காரணம், குழந்தை அதைப் பிரித்து பேட்டரிகளை மாற்றிப் போட்டிருந்ததுதான் என்பது!
– 10th அக்டோபர் 2007