தொலைத்த நண்பன்….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 3,020 
 
 

ஒரு வாரமாகவே பிச்சுமணியின் நினைவாகவே இருக்கிறது. அவனுடைய வெகுளித்தனமான சிரிப்பும், சற்றே நீண்ட முகமும், சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் கண்களும், ஒடிந்து விழுவதைப் போன்ற ஒல்லியான தேகமும்!

கொஞ்சம் முகம் வாடியிருந்தாலும்,

“டேய்..நந்து! என்னடா? என்ன முகமே சரியில்ல! சொல்லுடா? என்ன பிரச்சனை?” என்று கரிசனத்தோடு கேட்கும் குரலும்.

எப்படி மறக்க முடியும்?

பிச்சுமணி, நீ எங்கடா இருக்க? இப்போ என்ன பண்ணிட்டிருக்க?

இந்த நந்தகுமார ஞாபகம் வச்சிருக்கியா?

அவனை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று வெறியே வந்துவிட்டது.

யார் இந்த பிச்சுமணி?

***

எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி…அம்மா தனியாகவே தான் என்னை வளர்த்தாள்.அப்பாவைப்பற்றி பேச்சே எடுத்ததில்லை… நானும் அதைப்பற்றி அதிகம் தோண்டித் துருவி கேட்டதில்லை…. கொஞ்சம் அமுக்குதான்.. என்னைத்தான் சொல்கிறேன்.

நானும் அம்மாவுமே அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம்.

நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள பெரிதாக யாருமில்லை.

பத்தாவது வகுப்பு வரை பாண்டிச்சேரியிலே படித்தேன்!

ஒன்று சொல்ல விட்டுப் போய் விட்டது.

நான் விளையாட்டில் பள்ளிக்கு வாங்கித் தந்த மெடல்கள் எல்லாம் இப்போதும் பள்ளிக்கூட ஷோகேசில்…

‘நந்தகுமார்…நந்தகுமார்…நந்தகுமார்…’

டேபிள் டென்னிசில் இரண்டு முறை நேஷனல் சேம்பியன்…

அதைத் தவிர பள்ளியில் ஆறுவருடமாக சிறந்த விளையாட்டு வீரன் விருது!

அம்மாவுக்கு நான் சென்னையில் போய் படித்து உதவித் தொகையுடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது ஆசை.

சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கான்வென்ட் என்னை இருகரம் நீட்டி வரவேற்றது. பதினோராம் வகுப்பு.

மாணவர் விடுதியில் தனி அறை கிடைத்த போதும், இரண்டு பேர் தங்கும் அறையைத் தேர்ந்தெடுத்த காரணம், தனிமை எனக்கு அலுத்து விட்டது.. அதுவும் பிச்சுமணியுடன் தங்க விருப்பம் என்று சொன்னதும் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தது இன்னும் மறக்கவில்லை.

யார் இந்த பிச்சுமணி?

***

எப்படி பொருத்திப் பார்த்தாலும் பிச்சுமணிக்கும் அந்தப் பள்ளிக்கும் ஏழாம் பொருத்தம்.

பிச்சுமணி மாயவரத்தில் ஒரு வைதிக குடும்பத்தில் பிறந்தவன்.

அப்பா மடத்தில் வேதம் சொல்லிக் கொடுப்பவர்.

பிச்சுமணியும் பதிமூன்று வயதுவரை அங்கு படித்தவன் தான்.

தலைமுழுக்க மூளை.

ஐன்ஸ்டீன் மூளைக்கு பக்கத்தில் வைத்தால் கண்டுபிடிக்க திணறுவோம்.

கணக்கு, அறிவியல், ஆங்கிலம், தமிழ், எதையும் விட்டுவைக்கவில்லை.

மாயவரத்தில் வக்கீல் ராமானுஜத்தின் வீட்டில் பிச்சுமணியின் அம்மா கோமளம் சமையல்…

“கோமளம், நம்ப பிச்சுமணிய சென்னையில பெரிய கான்வென்ட்ல சேக்க முடிவு பண்ணியிருக்கேன் . என் கிளையண்ட் தான் கரெஸ்பாண்டன்ட்.

நாலு வருஷம் அங்க படிக்கட்டும். ஹாஸ்டலும் நன்னா இருக்கும். மேல படிக்க வைக்கிறதுக்கு நான் பொறுப்பு. யோசிச்சு சொல்லுங்கோ! அவன் எங்கியோ போக வேண்டியவன்!

ஒன்பதாம் வகுப்பில் அவனை சேர்த்துக் கொள்வதில் பள்ளிக்கு பெருமைதான்..
விடுதியில் பத்துப்பேர் தங்கும் டார்மெட்ரியில் சேர்த்துவிட்டார் ராமானுஜம்..

பிச்சு மணிக்கு வாய் லேசாக திக்கும். பெயர் என்ன எனறு கேட்டால் ‘பி..!பி..!’ என்று ஆரம்பிப்பான்.

முதலில் கேலியும் கிண்டலும் செய்த மாணவர்கள் அப்புறம் வாயை மூடிக்கொண்டு விட்டார்கள்.

அதற்கு காரணம் இருக்கிறது.

ஆரம்பம் தான் திக்குமே தவிர, ஆங்கில , தமிழ் வகுப்புகளில் கவிதை படித்தானென்றால் அப்படியே சரமாரியாக வார்த்தைகள் வந்து விழும்.

ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோவை கண்முன் கொண்டுவருவான்.

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?‘

என்று ஆரம்பித்தானானால், மொத்த வகுப்பும் பெஞ்சில்,

‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்‘ என்று தாளம் போடும்…

கணக்கு வாத்தியார் ஜார்ஜ் சில சமயம் அல்ஜீப்ரா வகுப்பில் ‘ இந்த ஈக்வேஷண யார் சரியா போட முடியும்..? பிச்சுமணி கமான் !”என்பார்..

‘வாத்தியாருக்கே தெரியல போல இருக்குடா‘

பின் பெஞ்சில் சிலர் வாயைப்பொத்திக் கொண்டு சிரிப்பார்கள்.

கண்மூடித் திறப்பதற்குள் போட்டு விடுவான்.

அவனே தனக்கு ஒரு மரியாதையை உருவாக்கி வைத்திருந்தான்.

ஆனாலும் ஒருத்தருக்கும் அவனுடன் நெருங்கிப் பழக விருப்பமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை. தனியாகவே வருவான். போவான்.

+1 ல் நானும் அவனும் ஒரே வகுப்பு. அவனைப் பற்றிய எல்லா விவரமும் எனக்கு மற்றவர்கள் சொல்லித்தான் தெரியும்.

அவனுக்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருந்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் எனக்கு எப்படி அவன்உயிர் நண்பனாக முடிந்தது?

***

பிச்சுமணிக்கு எதெல்லாம் வருமோ அது எனக்கு சுத்தமாய் வராது.

ஆனால் என்னுடைய பலம் அவனுக்கு பலவீனம்.

ஆமாம்.இரண்டுபேரும் எதிர் துருவங்கள்.

ஆரம்பத்தில் நான் பிச்சு மணியை அதிகம் கண்டுகொண்டதேயில்லை.

ஆனாலும் அவன் மேல் ஒரு மதிப்பு. சிலசமயம் நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருக்கும்போது அவர்மேல் ஒருவித ஆராதனை தோன்றுவது அந்த வயதுக்கே உண்டான இயல்புதானே.

இதே மாதிரி அவனுக்கும் என்மேல் ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும்போலிருக்கிறது.

அவன் பேசத் தயங்குபவன். நான் கொஞ்சம் ராங்கி பிடித்தவன்.

அப்படியே போய்க்கொண்டிருந்தது.

பள்ளியில் விளையாட்டு தினம்.

படு விமரிசையாக நடக்கும்.

விளையாட்டுக்கே புகழ் பெற்ற பள்ளி அது.

எல்லா பதக்கங்களும் எங்கள் டீம் அள்ளிக் குவித்துக்கொண்டிருந்தது.

கடைசியில் ரிலே ரேஸ்.

பிச்சுமணி எங்கள் டீமில் இருந்தான்.

இதில் வெற்றிபெற்றால் கோப்பை எங்களுக்கு.

பிச்சுமணி என்ன பண்ணுகிறான்? பந்தைப்பிடித்து ஓடிவந்து முன்னாலிருப்பவனிடம் சேர்க்க என்ன இத்தனை நேரம்?

“கமான் பிச்சுமணி…ஓடு..க்விக்…”

மைதானமே அலறுகிறது.

பந்தை கீழே போடுகிறான். தடவித் தடவி எடுப்பதற்குள்…

ஒரு புள்ளியில் தோற்க வைத்துவிடட்டானே. பாவி!

எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தி விட்டார்கள்.

அடுத்த நிமிடம் அவன் செய்த காரியத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

நேராக என் காலில் வந்து விழுந்தான்.

“ந..ந..நந்து. ஐயம் வெரி சாரி. என்ன மன்னிச்சிடுடா, உனக்கு என்னால இப்படி ஒரு அவமானம்”

அவனைத்தேற்றவே முடியவில்லை.

“விடுடா, ஐயம் எ ஸ்போர்ட்ஸ் மேன். விளையாட்டில வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். கமான். சியரப்”

அடிக்கடி நானும் அவனும் சந்திக்க ஆரம்பித்தோம்.

அப்போதுதான் எனக்கு அவனுடன் சேர்ந்து ஒரே அறையில் தங்கும் விருப்பம் ஏற்பட்டது.

“நந்தகுமார்….உங்கம்மா கேட்டுகிட்டாங்கனுதான் இருக்கிற இரண்டு தனியறையில ஒண்ண உனக்கு ஒதுக்கினோம்..நீயானா இப்போ பிச்சுமணியோட ரூம் ஷேர் பண்றேன்னு சொல்ற…பிச்சுமணிக்கும் அவ்வளவு செலவு பண்ண முடியுமா?”

தலைமை ஆசிரியர் நிலைமையை விளக்கினார்.

“நான் அம்மாகிட்ட உத்தரவு வாங்கிட்டேன்.. பிச்சு மணிக்கும் சேத்து நானே பணம் கட்டறேன்… அவுங்க வீட்டுக்கும் சொல்லிட்டேன்”

பிச்சுமணியும் நானும் சேர்ந்து தங்குவது பள்ளி முழுவதும் தலைப்பு செய்தியானது.

தேர்வு நெருங்கி வந்தது.

“நந்து, நீ எனக்காக இவ்வளவு செலவு செய்யற. நான் உனக்கு பதிலுக்கு ஏதாவது செஞ்சே தீரணும்”

“டேய், அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…உன்னோட தங்கியிருக்கறதே எனக்கு பெருமையா இருக்குடா “

“நீ ட்யூஷன் போறத நிறுத்திடு..நானே எல்லா பாடமும் சொல்லித்தரேன்”

“சரி, ஆனா.. ஒரு நிபந்தனை. நீ தினம் என்னோட டேபிள் டென்னிஸ் ஆடணும்“

இப்போது நடந்தது போலிருக்கிறது.

பள்ளி முடிந்தபின் இருவருக்கும் அவரவர் வழி.

இப்போது எனக்கு வயது நாற்பது.

திடீரென்று பிச்சுமணி நினைவு வரக்காரணம்…?

***

அந்த வார பிஸினஸ் வீக் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவன் , அப்படியே ஒரு பக்கத்தில் வைத்த கண்ணை எடுக்கவில்லை..

இந்த வார ‘பிஸினஸ் ஐகான்‘ பகுதியில்.

நாற்பது வயது மதிக்கத்தக்க, கருகரு முடியுடன், அடர்த்தியான மீசையும் , ஒளிரும் கண்களும் , சற்றே நீண்ட முகமும்.

இவன். இவன்.

சந்தேகமில்லை. பிச்சுமணிதான்.

வரிசையாக பட்டங்களின் அணிவகுப்பு.

எஸ்.பி.மணி என்ற பெயரில்.அவன், அவனேதான்.

என் பிச்சுமணி..அப்பா பெயர் சங்கரன்.

பெயர் சுருங்கி மணியானான்.

முழு விவரமும் கீழே.

‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம்….வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூல் எம்.பி.ஏ.. மெக்கின்சியில் மூன்று வருடம்.. தாய்நாட்டில் மிகப் பெரிய வங்கியின் தலைவர்….
இப்போது மேனேஜிங் டைரக்டர். அசுர வளர்ச்சி. இல்லையில்லை. அவனுக்கு ஏற்ற இடத்தில்தான் அமர்ந்து கொண்டிருக்கிறான்.

‘பிச்சுமணி! உன்ன நெனச்சு ரொம்ப பெருமையா இருக்குடா..? நான் உன்னோட ரூம் மேட்னு சொல்ல எனக்கு அனுமதி தருவியா?

நான்! நான்!

ஒரு வாலிபால் பயிற்சியின் போது என் கால் எலும்பு முறிந்தது. என் கனவும்தான்.

சில வருட சிகிச்சைக்குப் பின் ஒரு கல்லூரியில் பி.டி. மாஸ்டர்.

எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்.

பிச்சுமணி நீ சாதித்து விட்டாய்!

எனக்கு உடனே உன்னை பார்க்க வேண்டும்.

தேடித்தேடி தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து விட்டேன்.

“ஹலோ, இது *** வங்கிதானே?

“யெஸ் சார்”

“உங்கள் எம்.டி, எஸ்.பி.மணியுடன் பேசமுடியுமா?”

“அப்பாயின்ட்மென்ட்?”

“அவனுடைய பள்ளி நண்பன் நந்தகுமார்..நந்து என்று சொல்லுங்கள்”

“ப்ளீஸ். ஹோல்ட்! உங்களை அரைமணி நேரத்தில் சந்திப்பார்”

“அரைமணி நேரமா?”

“சார். நீங்கள் ரொம்ப லக்கி. யாரையும் அப்பாயின்மென்ட் இல்லாம பாக்கவே மாட்டார். அந்த லவுஞ்சில உக்காந்திருங்க”

அரைமணி நேரம்.

பிச்சுமணி எப்படிடா? எப்படி அரைமணி நேரம் உன்னால் பொறுமையாக இருக்க முடிகிறது? எனக்கு ஒரு யுகமாய்த் தோன்றுகிறதே.

“நந்துவா. உடனே உள்ள அனுப்பு‘

ஏண்டா இதை உனக்கு சொல்லத் தோணவில்லை?

எனக்கு மூளை மழுங்கி விட்டதா? அவன் இப்போ பெரிய வங்கி மேலாளர் எஸ்.பி.மணி! உன் பிச்சுமணியில்லை.

திரும்பி போய்விடலாமா? நான் வந்திருக்கக் கூடாதோ?

அரைமணி நேரம் ஆகிவிட்டதா?

“மிஸ்டர் நந்தகுமார். நீங்கள் உள்ளே போகலாம்”

“கமின்”

அறைக்கதவை தன் திறந்துகொண்டு உள்ளே போனேன்.

“நந்து. என்னோட ரூம் மேட்.சரிதானே?”

கம்பீரமாக எழுந்து நின்று கைகுலுக்கினான் என் பிச்சுமணி.

இல்லை வங்கி மேலாளர் எஸ்.பி.மணி.

***

ஒருமணி நேரம் பேசினான்.

பேசியது என் பிச்சுமணியில்லை.

வங்கி மேலாளர் எஸ்.பி.மணி.

கொஞ்சமாவது திக்கவேண்டுமே! தங்கு தடையின்றி, நிறுத்தி நிதானமாய்.

என்ன ஒரு தன்னம்பிக்கை?

நந்தகுமார் என்று என்னை அடிக்கடி விளித்தது அன்னியமாகப்பட்டது.

‘நந்து‘ என்று திருத்தலாம்போன்று ஒரு உறுத்தல்.

“நந்தகுமார்! உன்ன மறுபடியும் சந்திப்பேன்னு நினைக்கவே இல்ல. நேர ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். முழு உதவித்தொகை. அப்புறம் நீ தான் எல்லாம் படிச்சிருப்பியே. ஓட்டப்பந்தயத்தில தோத்த நான் வாழ்க்கையில இன்னும் ஓடிக்கிட்டே இருக்கேன். முன்னாடி..முன்னாடி. யாருமே தொடமுடியாத தூரத்தில. ஒரு வெறி பிடிச்ச மாதிரி. எல்லோருக்கும் முன்னாடி. உண்மையை சொல்லணும்னா உன் பேரக் கேட்டதுமே அப்படியே ஓடிவந்து உன்ன கட்டிப்பிடிச்சு ‘டேய் நந்து‘ ன்னு கூப்பிடணும்னு! ஆனா எது என்ன கட்டிப்போட்டுதுன்னு புரியல? இரண்டு ஓவர்சீஸ் கால். ஒரு பத்திரிகை நிருபர். முக்கியமான அரசியல் பிரமுகர் அழைப்பு. இதெல்லாம் தள்ளி வைக்க முடியாதது ஒண்ணுமில்லை. இதெல்லாமே உனக்கப்புறம்தான். ஆனா! நான் உட்கார்ந்து இருக்கிற இந்த இருக்கைக்கு நான் கொடுக்க வேண்டிய விலையிருக்கே, அது அனுபவிக்கிறனுக்குத்தான் புரியும். இந்த பதவி என்ன ரொம்ப உயரத்துக்கு ஏத்தி வச்சிருக்கு. சாதாரண மனிதர்கள் தொடமுடியாத தூரத்துக்கு. உன் பழைய பிச்சுமணிய நீ எதிர்பார்த்து வந்திருந்தா ஏமாந்துதான் போவ. இப்பகூட பாரு. நான் என்னப் பத்தியே பேசிட்டு இருக்கேன். உன்னப்பத்தி கேக்கணும்னு தோணவேயில்ல. நான் செலவழிக்கிற ஒவ்வொரு வினாடியும் எனக்கு ஏதாவது வகையில, என் முன்னேற்றத்துக்கு உதவியா இருக்குமான்னே பாக்குற ஒரு சுயநலக்காரனா என்ன மாத்திடிச்சு நந்து!”

பிச்சுமணி என்னை நந்து என்று கூப்பிட்டதும் உடம்பெல்லாம் புல்லரித்தது.

“பிச்சுமணி! சாரி. நான் உன்கிட்ட இவ்வளவு உரிமை எடுத்துகிறதுக்கு, உன்ன அப்படித்தான் என்னால கூப்பிட முடியும். ஏன்னா நான் பழைய நந்துதான். நான் ஏமாந்து போகல. ஆனா என் நண்பனப் பாக்க முடியாத தவிப்போட போறேன்”

“நந்து. நீ.எப்படி இங்க? வெளிநாட்டில இருப்பன்னு நெனச்சேன். என்னாச்சு?”

“பிச்சுமணி. என்னோட கதைய பேசி உன் பொன்னான நேரத்த வீணடிக்க விரும்பல. அத தெரிஞ்சுகிட்டு உனக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போறதுமில்ல. விஷ் யூ ஆல் தி பெஸ்ட். நீ மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்”

எழுந்திருந்து கிளம்பப்போனவனை,

“ஒரு நிமிஷம்” என்ற அவன் குரல் தடுத்தது.

அவனுடைய அலமாரியைத் திறந்து மேலாக வைத்திருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தான்.

“இதப்பாத்தியா! நீயும் நானும் பள்ளி இறுதி தேர்வு எழுதின அன்னிக்கு எடுத்தது..இதை என் அறைக்கு வந்ததும் முதல்ல பாத்துட்டு தான் மத்த வேலைய ஆரம்பிப்பேன்..ஆனா இன்னும் இதை மேசை மேல எல்லோருக்கும் தெரியுற மாதிரி வைக்க தைரியம் இல்லை நந்து..! நான் எவ்வளவு சுயநலக்காரன்..! பாக்குற எல்லோரும் ‘இது யாரு‘ன்னு கேட்டா? என் பலவீனங்களையெல்லாம் மற்றவங்க கிட்ட பகிர்ந்து கொள்ற பக்குவமில்லாத சுயநலக்காரன்..! பலம் ஒண்ண மட்டுமே உலகத்துக்குக் காட்டும் ஈகோயிஸ்ட்….”

***

பிச்சு மணியைப் பார்த்து விட்டு வந்த ஒருவாரம் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

சிலசமயங்களில் கற்பனை கொடுக்கும் சுகத்தை , நிஜம் தருவதில்லை.

நான் பிச்சுமணியுடன் கற்பனையிலேயே வாழ்ந்திருக்கலாம்.

என் நண்பனை நானே வலிய தொலைத்துவிட்டேனா?

நிஜம் வலிக்கிறது!

Print Friendly, PDF & Email
இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *