தேசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 8,485 
 

கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை அண்ணாந்து பார்த்தார் இளங்கண்ணன். மாலை மங்கி இருள் கௌவத்தொடங்கிய பொழுது. கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண விளக்குகள் அந்த முப்பது மாடி தங்கும் விடுதியின் மேனியை வெளிச்ச வெள்ளத்தால் நனைத்திருந்தன.

ஏற்பாட்டு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தேறப்போகிறது. யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு. அதற்குப் பின்னணியில் தான் இருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுதே இனம்புரியாத மகிழ்ச்சி அவர் மனத்தின் கரைகளில் பேரலையாய்ப் புரண்டது.

இப்பொழுதுதான் இரவு மணி 7.00. இன்னும் நிகழ்ச்சி தொடங்க ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் அழைக்கப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்களை வரவேற்பதில் கழகத்தின் செயற்குழுவினர் முனைப்பாக இருந்தனர். இளங்கண்ணன் விடுதியின் முகப்பில் கட்டப்பட்ட தமிழிலும் மலாய் மொழியிலும் அமைந்த பதாகைகளின் நேர்த்தியை இரசித்தார். ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய இலக்கியவாதிகளுக்கு விருதளிப்பு விழா’ இளம்பச்சை நிறம் பின்னணியில் இருக்க, பொன்னிற எழுத்துகளில் பதாகைகள் கம்பீரம் காட்டின. பக்கத்தில் புன்னகை நாயகனாக முக்கியப் பிரமுகர்.

“தலைவரே, இங்க பாருங்க. யாரு வந்திருக்கான்னு..” துணைத்தலைவர் தமிழ்மாறன் அழைத்தார். இளங்கண்ணன் திரும்பினார். அங்கே கழகத்தின் முன்னாள் தலைவர் சேதுபதி. “என்னையா, என்னன்னமோ செய்றீங்க. ஏதும் வில்லங்கம் வந்திடாதே? எல்லாம் சரியாதானே போவுது? நாலு பேர விசாரிச்சு பார்த்துதானே செய்றீங்க?” நியாயமான பயம் அவர் சொற்களில் எட்டிப்பார்த்தது. பதினைந்து ஆண்டுகள் எழுத்தாளர் கழகத்தை நேர்த்தியாக வழிநடத்தியவர். ஒல்லும் வகையெலாம் இலக்கியப் பணியாற்றி ஈராண்டுகளுக்கு முன் இளங்கண்ணனிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தவர்.

“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது தலைவரே. சரியா திட்டமிட்டு எல்லாரும் கலந்து பேசிதான் இதுலே இறங்கியிருக்கோம். நமக்கு வெற்றி கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். நீங்களும் பார்க்கப் போறீங்க”

“எது எப்படியோ, சட்டச் சிக்கல் வரக்கூடாது. ஒங்களுக்கு அப்புறமும் நம்ம கழகம் இருக்கணும். அதுக்கு மூடுவிழா செய்துட்டு போயிடாதீங்க” முதுமையில் உடல் தளர்ந்தாலும் உள்ளத்தின் உறுதி தெரிந்தது.

இளங்கண்ணன் சேதுபதியோடு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் நுழைந்தார். ஆயிரம்பேர் அமரக்கூடிய அருமையான மண்டபம். அரைப்பகுதி நிறைந்துவிட்டது. வருகையாளர்களில் தமிழ் எழுத்தாளர்களோடு மலாய், சீன எழுத்தாளர்களும் இருந்ததைப் பார்க்க சேதுபதிக்கு வியப்பாக இருந்தது. அவர் காலத்தில் அப்படியொரு முயற்சியில் இறங்கியதில்லை. அவர்களில் சிலருக்குச் சேதுபதியை இளங்கண்ணன் அறிமுகப்படுத்தினார். மேடையிலிருந்து மெல்லிய இசை புறப்பட்டு மண்டபம் முழுமைக்கும் பரவி வருகையாளர்களின் இதயங்களைத் தாலாட்டிக்கொண்டிருந்தது.

இப்படியொரு இலக்கிய விழாவை மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் பொறுப்பேற்று நடத்தலாம் என்ற சிந்தனையை இளங்கண்ணன் செயலவைக் கூட்டத்தில் முன் வைத்தபோது முதலில் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, அடுத்துத் தலைவர் பதவிக்குக் குறிவைத்துக் காத்திருந்த செயலாளர் கவிஞர் அறவாணன் கடுமையாக மறுத்துப் பேசினார்.

“தலைவர் பேசறது எனக்கு என்னவோ சரியாப் படல. இது தமிழ் எழுத்தாளர்களுக்காக உள்ள அமைப்பு. இங்கே நம்ம நடவடிக்கை எல்லாம் தமிழ் எழுத்தாளர்களுக்கு பயன் தருவதா இருக்கணும். இத விட்டுட்டு சீன, மலாய் எழுத்தாளர்ன்னு போனம்னா அப்புறம் சிக்கல்தான்.”

“நம்ம எழுத்தாளர் கழகம் தமிழ் எழுத்தாளர் நலம் காக்கும் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனா, இந்த குறுகிய வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்க. 1969 இல் நாட்டில் இனக்கலவரம் நடந்த பிறகு 1971இல் தேசிய பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதே சமயத்துல தேசிய இலக்கியம் என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டது. மலாய் மொழியில் எழுதும் படைப்புகள் மட்டும் தேசிய இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தது. இது உங்க அனைவருக்கும் தெரியும்” இளங்கண்ணன் வரலாற்றைத் துணைக்கழைத்தார்.

“இது பழைய கதை தலைவரே. கடந்த முப்பத்தெட்டு வருசமா இதுதானே இங்க நிலை. இத மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கையில்ல” செயற்குழு உறுப்பினர் குணசேகர் வாய்திறந்தார்.

“நம்பிக்கைதானே வாழ்க்கை குணசேகர். நாம நம்ம சக்திக்கு ஏற்ப முயற்சி செய்வோம். நாம ஒன்றுபட்டு ஒற்றுமையா செயல்பட்டா தமிழ் இலக்கியத்துக்கு இந்த நாட்டுல அங்கீகாரத்தை எப்படியாவது வாங்கிடலாம்” இளங்கண்ணனின் சொற்களில் நம்பிக்கை ஆரவாரித்தது.

“கேட்க நல்லா இருக்கு தலைவரே. ஒன்னு செய்வோம். அடுத்த மாசம் ஆண்டுக்கூட்டம் வருது. வழக்கம்போல தீர்மானம் போடுவோம். அரசுக்கு அனுப்பிவைப்போம்.” செயற்குழு உறுப்பினர் திருமதி சாருமதி தன் பங்குக்குப் பேசினார்.

“எத்தனை தீர்மானம்? எத்தனை மகஜர்? எல்லாம் என்னா ஆச்சு? வறண்டு போன நிலத்துல எத்தனை முறை மண்வெட்டியால கொத்துனாலும் தண்ணி வராது. நம்ம அணுகுமுறையை மாத்தணும். அதற்குத்தான் இந்த ஆலோசனை. நான் சொல்றத கொஞ்சம் ழமா சிந்திச்சுப் பாருங்க” செயற்குழுவினரின் சம்மதத்தைப் பெற்றுவிடுவதில் தலைவர் உறுதியாக இருந்தார்.

“தலைவரே, டேவான் பஹாசா டான் புஸ்தாகா அதிகாரிங்க வந்திருக்காங்க. வாங்க” தமிழ்மாறன் அழைத்தார். அறவாணனோடு சேர்ந்து நிகழ்ச்சி நிரலைச் சரிபார்த்துக்கொண்டிருந்த இளங்கண்ணன் அவர்களை அன்போடு அழைத்துச் சென்று முன்னிருக்கைகளில் அமரவைத்தார். தலைவர் பொறுப்புக்கு வந்தவுடன் மலாய் இலக்கியம் வளர்க்கும் அந்த அமைப்போடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டவர் அவர்.

“சரிங்க தலைவரே, நம்ம தமிழ் இலக்கியத்தையும் தேசிய இலக்கியமா அரசு அங்கீகரிக்க என்ன காரணத்த முன் வைக்கப்போறோம்? இது சாத்தியமா?” செயற்குழு உறுப்பினர் மாதவன் ஆர்வம் பொங்கக் கேட்டார்.

“மலாய்க்காரர், சீனர், இந்தியர்ன்னு மூன்று இனமும் சேர்ந்து ஒற்றுமையா இருப்பதுதானே மலேசியாவுக்குப் பெருமை. நாட்டு வளர்ச்சிக்கு சீனரும் இந்தியரும் தந்த அயராத உழைப்பை, அர்ப்பணிப்பை யாரும் மறுக்க முடியுமா? இந்த இரண்டு இனங்களும் தங்கள் மொழியைப் படிக்க, பண்பாட்டைக் கடைப்பிடிக்க இங்க எந்த தடையும் கிடையாது. உயர்கல்வி வரைக்கும் தங்கள் மொழியில படித்துப் பட்டம்பெற வாய்ப்பு இருக்கு. இந்த இனங்களோட இலக்கியமும் அப்படித்தானே மதிக்கப்படணும். உரிய அங்கீகாரத்தை பெறணும். இதுநாள் வரைக்கும் யாரும் கேட்கல. அதுனால கிடைக்குல. இனி கேட்போம். அதை கொடுக்க வேண்டியது இந்த பரிவுமிக்க அரசின் கடமைன்னு உணர வைப்போம். அதற்கான சிறு துளி முயற்சிதான் இந்த இலக்கிய விழா” தன் மனத்தின் கரைகளில் பிரவகித்த உணர்வுகளை இளங்கண்ணன் கொட்டிவிட்டார்.

“அப்படி போடுங்க தலைவரே. இந்த மண்ணுல எழுதுற சோங்கும் குப்புசாமியும் யாரைப் பத்தி எழுதுறாங்க? இங்குள்ள வாழ்க்கையைத்தானே? இது குறைந்த பட்சம் கவனிக்கப்படவேண்டாமா? சக படைப்பாளியை மதிச்சி அங்கீகரிக்க வேண்டாமா? அந்த இலக்கை அடைய இது உதவும்னா நான் வரவேற்கிறேன்.” துணைத்தலைவர் தமிழ்மாறனின் உறுதியான தொனி தலைவருக்கு ஆறுதலாக இருந்தது. மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியது.

“சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளரும் சீன எழுத்தாளரும் சிங்கப்பூர் அரசால் பரிந்துரைக்கப்பட்டு ஆசியான் விருதைப் பெறுகிறாங்க. இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த சிறப்பை அடைந்திருக்காங்க அத்தகைய நிலை இங்கு இல்லையேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. எத்தனை பேரு இங்க பிரதிபலன் பார்க்காம எழுதிக் குவிச்சி ஓய்ந்து போயிட்டாங்களே..அவங்கள நினைச்சுப் பாருங்க..” உதவித்தலைவர் கண்ணனும் அதே சிந்தனை வட்டத்துக்குள் வந்து விட்டார்.

வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் ஒட்டுமொத்த செயற்குழுவும் ஒரே முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

மண்டபம் ஏறக்குறைய நிறைந்துவிட்டது. கபேனா, பேனா போன்ற மலாய் எழுத்தாளர் அமைப்புகளிலிருந்து நிறைய நண்பர்கள் அழைப்பை ஏற்று வந்திருந்தார்கள். சீன எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் திரளான படைப்பாளிகள் ஆர்வத்தோடு கலந்துகொள்ள வந்திருந்தனர்.

விருது பெறும் மூன்று இலக்கியவாதிகளுக்கும் முன் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் காத்திருந்தனர். இளங்கண்ணன் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 7.40. இன்னும் விழாவுக்குத் தலைமை தாங்கும் முக்கியப் பிரமுகர், சமுதாயத் தலைவர்கள் வரவேண்டும். வந்தவுடன் விழா தொடங்கிவிடும். வி.ஐ.பி அறை அவர்களுக்காகக் காத்திருந்தது.

“சரிங்க தலைவரே, இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம்? விவரமா சொல்லுங்க” செயற்குழு உறுப்பினர் மாதவன் ஆர்வம் பொங்கக் கேட்டார்.

“மலாய், சீன, தமிழ் இலக்கியவாதிகளில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ள மூவரைத் தேர்வு செய்து விருதும் பணமும் வழங்கி சிறப்பு செய்வோம். இந்த விழா தலைநகரில் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடக்கவேண்டும்”

“இலக்கியவாதிகள் தேர்வு?” அறவாணன் கேள்விக்கணையை வீசினார்.

“தமிழ் இலக்கியவாதியைத் தேர்வு செய்ய ஓர் அறிஞர் குழுவை நியமிப்போம். மலாய், சீன இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுக்க மலாய், சீன எழுத்தாளர் அமைப்புகள் நமக்குத் துணையாய் இருப்பாங்க.”

“கொஞ்சம் செலவாகும்போல இருக்கு தலைவரே?” பொருளாளர் அமுதவாணன் பணத்தில் குறியாக இருந்தார்.

“கொஞ்சமில்ல. செலவு நிறையவே ஆகும். ஆளுக்கு குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட்டாவது கொடுத்தாதான் இந்த விருதுக்கும் நம்ம முயற்சிக்கும் பெருமை. இல்லனா பத்தோடு பதினொன்னு. அத்தோடு இது ஒன்னுன்னு போயிடும்”

“ஆக மூனு பேருக்கு முப்பதாயிரமா? ஒரு நாவல் போட்டியையே நடத்திடலாம்போல இருக்கு தலைவரே. ஏற்பாட்டுச் செலவும் நிறைய வரும்போல இருக்கே” ஆயிரம் இரண்டாயிரத்துக்குக் காசோலையில் கையெழுத்திடும் அமுதவாணன் தலைவர் தந்த அதிச்சியில் இருந்து மீளவில்லை.

“அதையும் நடத்துவோம். எனக்குத் தெரிந்த சில பிரமுகர்கள், தொழில் அதிபர்களிடம் இதைப்பற்றி பேசியிருக்கேன். எல்லாம் சரியா கைகூடி வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க எல்லார் ஒத்துழைப்பும் முழுமையா இருந்தா இதற்கு மேலேயும் சாதிக்கலாம்.”

“விழாவுக்கு யார் தலைமை தாங்கிறதுன்னு நீங்க சொல்லவே இல்லையே தலைவரே” சாருமதி குரலில் ஆர்வம் எட்டிப்பார்த்தது.

“வேறு யாரு? இந்த மாதிரி விழாவுக்குத் தலைமை தாங்க மிகச் சரியானவர் நம் நாட்டுப் பிரதமர்தான்”

“பிரதமரா? அவர் வருவாரா? இது சாத்தியமா?” பலரும் வியப்பு காட்டினார்கள்.

“ஏன் எல்லாருக்கும் இந்த சந்தேகம்? அவர் ஒட்டுமொத்த மலேசியாவுக்கும்தானே பிரதமர்? எந்த ஒரு இனத்துக்கும் தனிப்பட்ட பிரதமர் இல்லையே. அதிலும் மிக முக்கியம் வாய்ந்த இந்த விழாவுக்கு மிகச் சரியான தேர்வு நம்ம பிரதமர்தான். நம்ம எதிர்பார்ப்பு, ஏக்கம், உணர்வு, கனவு எல்லாம் அவர் காதுக்கு மட்டுமல்ல நெஞ்சுக்கும் போகணும். நாம அழைக்கிறோம். அவர் வருவார். இது சாத்தியம்தான்.” பிரதமரை நேரில் பார்த்து அழைப்பு விடுத்து அவரின் வருகையை உறுதிப்படுத்திவிட்டு வந்தவரைப்போல இளங்கண்ணன் தீர்மானமாகப் பேசினார். பலரின் மனக்கண்ணில் அப்பொழுதே விழா காட்சிகள் படமாக ஓடத்தொடங்கிவிட்டன.

இரவு மணி 7.50. பிரதமர் தங்கும் விடுதியின் முன் காரில் வந்து இறங்கினார். இளங்கண்ணனோடு செயற்குழுவினரும் முக்கிய மலாய், சீன எழுத்தாளர்களும் சமுதாயத் தலைவர்களும் அவரை முன்நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து, மூவினங்களின் பண்பாட்டுச் சிறப்பைக் காட்டும் வகையில் நடனங்கள் படைக்கப்பட்டன. வரவேற்புரைக்குப் பின் இளங்கண்ணன் மேடையேறினார். “எங்கள் அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் அவர்களே, இங்கே மூன்று இனங்களிடையே ஒற்றுமை மிக மிக முக்கியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். குறைகூறல்களுக்குக் காதுகொடுக்கும் உங்களின் வெளிப்படையான போக்கு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதோ, இந்த விழாவும் மூவின ஒற்றுமையை மையப்படுத்தியே நடக்கிறது. இலக்கியம் மூலமாகவும் நாம் ஒன்றுபட முடியும். இந்த நாட்டில் இலக்கியம் படைக்கிற ஒவ்வொரு படைப்பாளியையும் அரசு அரவணைக்க வேண்டும். திறமை இருந்தால் உரிய அங்கீகாரம் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். தேசிய இனங்களாக மூன்று இனங்களும் இருக்கும்பொழுது இவர்களின் இலக்கியங்களும் தேசிய தகுதியைப் பெற வேண்டும். தேசியம் என்ற உணர்வு பெருகினால் இங்கே நம்மிடையே உறவு வலுப்பெறும். உண்மையான இன ஒருமைப்பாடு இங்கே சாத்தியமாகும்..”

தேசிய மொழியில் தன் மனத்தில் உழன்றுகொண்டிருந்த எண்ணங்களை ஒளிவுமறைவின்றி இளங்கண்ணன் வெளிப்படுத்தினார். அறிவுபூர்வமான அவரின் கருத்துகளைக் கூட்டத்தினரின் கைதட்டல் வழிமொழிந்தது. “தலைவரு சொல்ல வேண்டியத அழுத்தமா சொல்லிட்டாரு. இனி நடக்கிறது நடக்கட்டும்.” தமிழ்மாறன் அறவாணனின் காதைக் கடித்தார்.

அடுத்து, இலக்கிய விருதுபெறும் மூன்று இலக்கியவாதிகளான நாவலாசிரியர் அஸ்மான் பூத்தே, கவிஞர் தமிழழகன், எழுத்தாளர் தோக் யா போங் ஆகிய மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டுப் பிரதமரால் சிறப்பு செய்யப்பட்டனர். ஒவ்வொருவரும் விருதோடு பத்தாயிரம் ரிங்கிட்டுகளையும் பரிசாகப் பெற்றனர். மேடையின் அகன்ற திரையில் அவர்கள் ஒவ்வொருவரின் எழுத்துலகச் சாதனைகள் படமாகக் காட்டப்பட்டன.

நிகழ்வின் முத்தாய்ப்பாக உரையாற்ற பிரதமர் வந்தபொழுது அவரின் முகத்தில் ஆழ்ந்த பூரிப்பைக் காண முடிந்தது.

“மூன்று இன எழுத்தாளர்கள் ஒரே மேடையில் இந்நாட்டில் சிறப்பிக்கப்படுவது இதுதான் முதல் முறையென்று நான் நினைக்கிறேன். இப்படியொரு விழா இதுவரை நாட்டில் ஏன் நடத்தப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அரசு முன்நின்று நடத்தியிருக்க வேண்டிய நிகழ்ச்சி இது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் முயற்சியில் இந்த விழா நடந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்குப் பாராட்டுக்கள். இன்று விருது பெற்ற மூன்று இலக்கியவாதிகளுக்கும் என் பாராட்டுகள். இந்த விழா மூலம் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு நீங்கள் முன் வைத்துள்ளீர்கள். இந்நாட்டில் இலக்கியம் படைக்கிற இலக்கியவாதிகளை இனப்பாகுபாடின்றி அரவணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். இது குறித்து அமைச்சரவையில் விரிவாகப் பேசப்போகிறேன். இன்றைய விழா என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கிய விழாவாக நினைக்கிறேன். இலக்கியம் மூலமாக இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்றால் அந்த முயற்சியில் அரசு ஈடுபடும்……”

பிரதமர் மனம் நெகிழ்ந்து விழாவில் நீண்ட நேரம் பேசினார்.
மறுநாள் ஏடுகளில் விழா பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்றன.
இரண்டு வாரங்களுக்குப் பின் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அறவாணன் இளங்கண்ணனிடம் கேட்டார். “சரிங்க தலைவரே, இந்த முறை நாம சிரமப்பட்டு விழாவை பிரதமரை வரவழைத்து சிறப்பா நடத்திட்டோம். இனி அடுத்த வருசம்?

இளங்கண்ணனின் இதழ்களில் அரும்பிய புன்னகையே அதற்குப் பதிலாக அமைந்தது.

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)