கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2024
பார்வையிட்டோர்: 482 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஒரு கைதி.

அவன் பெயரைப்பற்றி மற்றவர்களுக்குக் கவலை கிடையாது. அவனுக்கே அவன் பெயர் மறந்து போனாலும் போயிருக்கும்.

அவன் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள். அவனுக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது சட்டம். கம்பிகளின் பின்னே, இருட்டறையினுள் தள்ளப்பட்ட அவன் இன்னும் பல கைதிகளைப் போலவே சுரங்க வேலை செய்ய நியமிக்கப் பெற்றான்.

தங்கம் விளையும் பிரதேசத்தில், தங்கச் சுரங்கத்தை அடுத்திருத்தது அந்தச் சிறை, பூமியின் இருட் குடலினுள் புகுந்து தங்கக் கனிகளைப் பெயர்த்து, பொன் திரட்டும் பணிக்கு பல கைதிகளை தகுந்த கண்காணிப்புடன் நியமிக்கும் வழக்கம் இருந்த காலம் அது.

பூமியின் இருள் வயிறு போன்ற சுரங்கத்தினுள் அவனும் போனான். அவன் கைதி. அவனுக்குப் பெயரில்லை. ஒரு எண் இருந்தது. அறுபத்தைந்து. அந்தச் சூழ்நிலையில் அது தான் அவன் பெயர்.

எங்கோ கொண்டு வந்து நிறுத்தப்பட்ட குழந்தையைப் போல் விழித்தான் அவன். வெளியுலக வெளிச்சத்திலிருந்து இருளின் ஊற்றான பாதாளத்தில் புகுத்ததும் குருடாகிப் போனது போல் தோன்றிய கண்கள் மெதுமெதுவாக இருளில் ஒளி காணப் பழகின. சூட்டால் ஆவி கக்கி பூமிக்கடியில் நெளியும் வாயுக்ளுக்கு சூடேற்றி வெடிக்கவோ தீ உண்டாக்கவோ துணை புரியும் செயலற்ற தனிமுறை விளக்குகள் சுரங்கத் தொழிலாளிகளுக்குச் சிறிது ஒளிகாட்ட முயன்று கொண்டிருந்தன. கண்களை மூடி மூடித் திறந்து, பார்வைக்கு இருள் பழகிப் போகவும், மங்கல் ஒளியின் உதவியால் சூழ்நிலையை ஆராய முயன்றான் அவன்.

செய்ய வேண்டிய தொழில் என்ன, எதெதை எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் போதிக்கப்பட்டிருந்தது அவனுக்கு. அவன் உடலில் பலமிருந்தது. எந்த வேலையையும் அவனால் செய்ய முடியும். பாறைகளைப் பெயர்த்து தங்கம் சேர்ப்பது கஷ்டமான காரியமல்ல. அவன் அவ்விதமே நினைத்தான்.

தங்கம் விளையும் இடத்திற்கே போய் தங்கத்தை வெட்டிச் சேர்க்கலாம் என்றவுடன் அவனுக்கு அதிக உற்சாகம் ஏற்பட்டிருந்தது. தனது கைவழியாகத் தங்கம் தண்ணிர் பட்ட பாடாக அதிகம் புரளும். பளபளப்பு மங்காத புதிய நாணயத்தைக் கையில் வைத்து, பார்த்துப் பார்த்து மகிழ்ந்து போகிற சிறுவர்கள் மாதிரி, அசல் தங்கத்தை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் களிக்கலாம்.

அவனுக்கு ஆசை அதிகரித்தது.

தங்கம் சுரண்டப் பெற்று வெற்றிடங்களாகிவிட்ட பகுதிகளைக் கடந்து, சுவர்கள் போல் பாறைகள் நெடிதுயர்ந்து நின்ற பிராந்தியங்களையும் தாண்டி, கவிந்து சூழ்ந்த பாறைகளின் இடையிலே புகுந்தான் அவன். இன்னின்னார் இந்த இந்தப் பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என்று பிரித்து நிறுத்தப்பட்டனர்.

தங்க ரேகைகள் ஆறுகள் போலவும் கிளைகள். போலவும் பாறைகளில் ஒடிக் கிடப்பதை அவன் உணர முடிந்தது. ஆழ்ந்த இருளிலே பளபளச் சிற்றொளி மின்வெட்டி அலை புரளும் கருங்கடலைப் போல், பொன்னொளி விளக்கின் சுடர்பட்டுப் பளிச்சிட்டுத் திகழ்ந்தன நெடும் பாறைகள். தொழிலாளிகள் முந்திய தினங்களில் வெட்டிக் கொத்திப் பெயர்த்த சுவடுகள் நன்கு தெரிந்தன. தரையில் கட்டிகளும் தூள்களும் சிதறிக் கிடந்தன.

அவனும் தனது கையுளியால் பாறையைக் கொத்தினான். கல்லுடைத்துத் தங்கம் பறிக்க அமைந்த தனிக் கருவியினால் பலமாகத் தாக்கினான், தனது எதிரியை வேரிலேயே கிள்ளி வீழ்த்த எறிகிற தாக்குதல்களே தன் கைவீச்சு ஒவ்வொன்றும் எனக் கருதினான். ஆவேசமாய் அலுவலில் ஈடுபட்டான் அவன்.

பூமிக் குடலின் இருள் ஆழத்திலே அழைதியும் அந்தகாரமும் நிறைந்த அடித்தலத்தில், டொக் டொக் என்று பாறைகளில் மோதிய இரும்பு ஆயுதங்கள் ஒலி எழுப்பின. கட்டிகள் விழும் ஓசை எழும்: பொடிகள் சரியும் சத்தமும், துண்டு துணுக்குகள் சிதறும் ஒலியும் கலக்கும். மனிதர்கள் யந்திரங்களென உழைத்தாலும், மனிதர்கள் உள்ளத் துடிப்பும் எண்னும் திறனும் ஒடுங்கியா கிடக்கும்?

அவன் – அறுபத்தைந்தாம் நம்பர் கைதி – உழைத்துக் கொண்டிருந்தான். அவன் மனத்திரையில் அவனது வாழ்வுச்சரிதையின் சாயைகள் தொடர்பிலாப் புகை உருவங்களாய் தோன்றி மறைந்தன.

பூமியின் அடியில் இருள் நிலத்திலே விளையும் பொன்னைக் கொத்தி எடுக்க வேண்டிய நிலைக்கு அவன் வந்ததே ஆதியில் அவனைப் பற்றிய பொன்னாசை காரணமாகத்தான். திருட்டுக் குற்றம் அவனைக் கைதியாக மாற்றியது. கைதி நாளடைவிலே சுரங்கத் தொழிலாளியாக நேர்ந்தது.

அவனுக்கு நன்றாக நினைவிருந்தது – அவனுடைய முதல் திருட்டு; தெருவில் நடந்து கொண்டிருந்தான் அவன். ஒரு வீட்டு நடையில் குழந்தை ஒன்றிருந்தது. சின்னஞ் சிறு குழந்தை. அதன் அழகு அவனைக் கவரவில்லை. அதன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி அவனை வசீகரித்தது. அவன் அதன் முகத்தைப் பார்த்தான். களங்கம் என்பது என்னவென்றறியாத அக்குழந்தை செவ்விய அந்திவானில் தொத்திக் கிடக்கும் இளம்பிறை போன்ற சிரிப்பை நெளியவிட்டது முகத்தில். தான் கண்ட வேடிக்கை எதையோ அவனிடம் தன் சங்கேத பாஷையில் அறிவிக்க முயன்றது. அவன் அங்குமிங்கும் பார்த்தான். மிரள விழித்தான். குழந்தை பயந்து அழக் கூடாதே என்பதற்காக அவனும் பதிலுக்குச் சிரித்தான். கலவரத்தைத் திரைபோட்டு மூட முயன்ற வறண்ட சிரிப்பு. குழந்தையருகில் போனான். அது அதிகம் சிரித்தது. எப்படியோ பராக்குக் காட்டி நகையை ‘அபேஸ் செய்து’ விட்டான். அப்புறம் குழந்தை அழுததோ?…அம்மா, அம்மா என்று கத்தியதோ?…அவனுக்கு நினைவில்லை. குற்றம் செய்து துடித்த நெஞ்சுடன், தப்பவேண்டும் என்ற துடிப்புடன் வேகமாக நடந்து சந்து பொந்துகள் வழியாகயெல்லாம் திரிந்து மறைந்தான்.

இப்போது அவனுக்கு மாசுமருவற்ற குழந்தை முகம் – வைகறைப் போதிலே முழுதலர்ந்த இனிய புஷ்பம் போன்ற அழகு வதனம் – பனிப்படலமாக நினேவில் எழுந்தது. அதை மறக்கத் தலையை ஆட்டிக் கொண்டான் அறுபத்தைந்தாம் நம்பர் கைதி.

அவன் முகத்தில் வேர்வை முத்துக்கள் துளிர்த்தன. அவன் பலமாக, வேகமாக, விடாமல் தொடர்பாக, ஒரே எண்ணமாய் பாறையைக் கொத்துவதில் முனைந்திருந்தான். அவனது கை நரம்புகள் புடைத்தன. புஜங்களின் தசைக் கூட்டங்கள் விம்மின. அவன் தன்னை, தன் நினைவுகளை, மறந்துவிடத் தீவிரமான உழைப்பில் ஆழ்ந்தான்.

ஒரு நாள் போல் மறுநாள். நேற்று போல் இன்று. உழைப்பு – ஒய்வு – உழைப்பு – உறக்கம். பகல்கூட அரை இரவுபோல்தான் தோன்றியது. பூமிக்கடியிலே. ஆனலும் அவன் இறந்த காலத்தை மறந்துவிட இயலவில்லை.

ஒரு சின்னப் பெண்ணின் கைவளைகளைத் திருடியிருக்கிறான் அவன். அது கதறத் தொடங்கியதும், பூப்போன்ற அதன் கன்னங்கள் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட பூரிகள் போல் சிவந்து உப்பி விடும்படியாகப் பேயறை அறைந்துவிட்டு ஒடியிருக்கிறான்.

தனது தாய் கழற்றி வைத்த தங்கச் சரட்டை ‘அமுக்கிச் சென்று’ பணமாக்கியிருக்கிறான், தன் மனைவியின் நகைகளைக் கழற்றி விற்று, குஷாலாகச் செலவழித்திருக்கிறான். ஒருசமயம் ஒர் இரவைக் கழிக்க உதவிய தாசி ஒருத்தி வீட்டில் கைப்பெட்டியிலிருந்து நகைகளைத் திருடியவன் தான் அவன்.

அப்போதெல்லாம் தங்கம் அவனுக்கு மதிப்பு மிக்கது. மிக உயர்ந்தது. இன்பங்களை விலைக்கு வாங்க உதவுகிற மாயச் சரக்கு. நாகரிக ஆடம்பரங்களுக்குத் துணை நிற்கும் ஜம்பச் சாமான். அவன், பூலோகவாசிகள் பெரும்பாலோரைப் போலவே, தங்கத்தை கடவுளாகக் கும்பிட்டான். உலகில் தன்னை உய்வித்து வாழ வைக்கக்கூடிய மருந்து அதுதான் என்று நம்பினன். அதை எந்தவிதத்திலேனும் பெறுவதே அவனது வாழ்க்கை லட்சியம். அதற்காகவே வாழ்ந்தான் அவன். அதனால் அடிக்கடி சிறை செல்லவும் நேர்ந்தது. விடுபட்டு வந்ததும், அவன் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. அதற்காக மறுபடியும் திருடுவான். அவன் வாழ்வில் அவனைப் பிசாசாகப் படுத்தியது பொன்.

தங்க ரேகைகள், சிவந்த மேனியில் பளிச்செனப் புலனாகும்படி ஒடுகிற நீல நரம்புகள் போல், தனியொளியுடன் நெளிந்து மிளிரும் பாறைகளைக் கொத்தி பொன் வெட்டும் கைதி பெருமூச்செறிவான் அடிக்கடி. அவன் அனுபவங்கள் எண்ணச் சாயைகளாக பூத உருவில் எழுந்து அவனை வதைத்தன. அவன் பார்வை சுழலும்.

தங்கம் மண்ணாங்கட்டிகள் போல் மதிப்பற்றுக் கிடந்தது அங்கே. புழுதியாய் படிந்து ஒவ்வொருவர் காலிலும் மிதிபட்டது. துாசியாகப் பறந்து எங்கும் ஒட்டிக்கொண்டிருந்தது. அதற்கு உயர்வு இல்லை. மதிப்பில்லை. தனிச் சிறப்பில்லை. உழைப்பவர்கள் அதைப் பாதுகாத்துப் பதுக்க முயலவில்லை. அதன் காந்த சக்தியால் கவருண்டு வாய் பிளக்கவில்லை. அவர்களுக்கு அதுவும் சாதாரணமான இயற்கைப் பொருளாகவே தோன்றியது. அவர்களது இரும்புக் கருவிகள் பாறைகளில் மோதி எழுப்பிய சிற்றொலிகள் தான் ‘டொக்கு டொக்’கென்று சிதறி எதிரொலிக்கும். அவர்கள் பேசுவதில்லை. கருமமே கண்ணாகிவிடும் மந்திரங்கள் போல் உழைத்தார்கள். அவர்களுக்கு உழைப்பு ஒரு தண்டனை. தண்டனைதான் அவர்கள் வாழ்வு. அவர்களில் ஒருவன்தான் அவனும் – அந்த அறுபத்தைந்தாம் நம்பர் கைதி.

ஒரு நாளைப்போல் ஒரு நாள், என்றும் ஒரே நியதி. எப்போதும் ஒரே இயந்திர இயக்கம். எனினும் அவன் மனதிலே மாறுதல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அவன் உள்ளத்தில் ஓர் தெளிவு மலர்ந்தது. எண்ணத்தில் புதுமை புஷ்பிக்கத் தொடங்கியது.

தங்கம்கூட வெறும் மண் மாதிரித்தான். மண்ணின் ஆழத்தில், இருளின் குடலிலே பாறைகளின் அழுத்தத்திடையே பிறக்கும் பொருளான இது புழுதியாகச் சிதைவுறுகிறது இங்கே. அதற்கு மதிப்பு கொடுப்பது மனிதன்தான். பின் அதுவே மனிதனை மயக்கி, ஆட்டி வைக்கும் மோகினியாகி விடுகிறது.

அவன் உதற முடியாத அந்த மோகினியின் வலையில் சிக்குண்டு எத்தனை பாபங்கள் செய்திருக்கிறான்! நிறைய நகைகள் அணிந்திருந்த சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏய்ப்புக்காட்டி அழைத்துச் சென்று, நகைகளைத் திருடிப் பின் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்று உடலைப் பாழ்ங்கிணற்றிலே வீசி எறிந்ததை எண்ணவும் அவன் இதயம் வேதனையுற்றது. எத்தனை வீடுகளில் அவன் கன்னக்கோல் வைத்திருக்கிருன்! எவ்வளவு பெண்களின் காதுகளை அறுத்து அணிகளைப் பிடுங்கியிருக்கிறான்!

அவனை வெறியனாக்கிய தங்கம் பூமிக்கடியில் மண்ணாய் பொடியாய் காலில் மிதிபட்டு அலட்சியப்படுத்தப் படுவதை உணர உணர அவனுக்கு புத்தி குழம்பியது. இந்த அற்ப உலோகத்துக்காக அவன் செய்யாத பாபங்கள் – இழைக்காத அநீதிகள் – உண்டா? தன்னைக் குருடனய், மந்த மதியினனாய், மனிதம் இழந்த வெறியனாய், வெறி மிகுந்த மிருகமாக மாற்றி வைத்தது அது தானே! அதனால் அவன் கொலை கூட…

அந்தக் கோர நினைவு! பெரும் பணக்காரன் ஒருவன் வீட்டில் புகுந்தான் அவன். செல்வன் வீட்டில் இல்லை. அவன் மனைவி மட்டுமிருந்தாள். நடுநிசி. அரவம் கேட்டு விழித்துக் கொண்டாள் அவள். கதற முயன்றாள். அவன் அவளை பயமுறுத்தி நகைகளைப் பிடுங்கிக் கொண்டான். பணம் நகைகள் எல்லாம் பத்திரப்படுத்தப் பெற்றுள்ள பெட்டியின் சாவியைக் கேட்டான். அவள் தெரியாது என்றாள். தன்னிடம் இல்லை என்று சாதித்தாள். ‘ஒ’வெனக்கூச்சலிடத் தொடங்கினாள் வெகுண்டு. வெறி கொண்டு தன்னை மறந்து விட்ட அவன் கையிலிருந்த அரிவாளால் அவளைக் கொனறான். ஆனால் அவன் தப்பி ஓடமுடியவில்லை. அகப்படடுக் கொண்டான்.

ஆயுள் தண்டனை பெற்ற அறுபத்தைந்தாம் நம்பர் கைதிக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அவனுக்கு உழைப்பில் ஆரம்பத்திலிருந்த உற்சாகமில்லை. அவன் உள்ளம் குமைந்தது. இதயத்தில் வேதனை அரித்துக் கொண்டேயிருந்தது. மண்டைக்குள் ஏதோ கொதிப்புற்றுக் கொந்தளிப்பது போல் தோன்றும், அந்தச் சூழ்நிலை, அவனைக் கொல்லாமல் கொன்று வந்தது. இனியும் தாங்க முடியாது என்ற நெருக்கடி பிறந்து விட்டது.

அவன் ஜெயிலதிகாரியின் காலிலே விழுந்தான். கண்ணிர் வடித்துக் கெஞ்சினன். என்னால் முடியாது; வேறு எங்காவது, எவ்வேலையாவது செய்ய என்னை அனுப்புங்கள், கல் உடைக்கவோ, செக்கு இழுக்கவோ அல்லது வேறு எக்கடினமான வேலைக்கோ ஏவுங்கள். ஆனால் இந்தச் சுரங்க வேலை வேண்டாம் என்று அழுது புலம்பினான்.

அதிகாரிக்கு முதலில் விளங்கவில்லை, விசாரித்து, கேள்விகள் மேல் கேள்விகள் போட்டு, ஒரு மாதிரியாக அவன் மனக்கோளாறைப் புரிந்து கொண்டார்.

அவன் வேறு பணிக்கு மாற்றப்பட்டான். அவனது மனக் குழப்பமும் கொதிப்பும் ஒடுங்கின, அவன் உள்ளத்தில் தெளிவு பிறந்தது. தனது வாழ்வைப் பாழாக்கிய மாயப் பொருளின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்டதனால் அவன் உள்ளத்தில் அமைதி பூத்தது, கண்களில் திருப்தியின் ஒளி தெறித்தது.

தனது பாபங்களை, தண்டனை விதித்த கடமைகளை ஒழுங்காகச் செய்து, நிவர்த்தித்துக் கொள்ள முழு மனதுடன் உழைத்தான் அந்த அறுபத்தைந்தாம் நம்பர் கைதி. அவன் விசித்திரமான மனிதன்தான்!

– 1950

– ஆண் சிங்கம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *