தெய்வம் நின்று… கொல்லாது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 7,841 
 
 

மாதங்கி மாமி வெறுமே வாய்தான். வாரம் ஒரு கிலோ எண்ணெய் தருவதாகச் சொல்லி இரண்டு மாசமாகிறது. அமிர்தாஞ்சன் பாட்டில் மாதிரி துளியூண்டு பாட்டிலில்தான் எண்ணெய் கொண்டு வருகிறாள். ‘‘தரணும்னு இருக்கேன், தந்துடறேன்! தப்பா நினைச்சுக் காதீங்கோ’’ என்று அடிக்கடி ஏதோ கடன்காரனுக்கு வாய்தா சொல்கிற மாதிரி சொல்கிறாள்.

‘‘பிரதி வெள்ளிக்கிழமை பூ மாலை கைங்கர்யம் என் பொறுப்பு’’ன்னா கலா. அப்படி ஒரு விஷயம் சொன்னதே அவளுக்கு அடியோடு மறந்து போச்சு போல!

மிஸஸ் ரமணி மகா ஆசாரம்; அனுஷ்டானம். ‘‘செவ்வாய்க்கிழமை சுண்டல் கைங்கர்யம் வேற யாருக்கும் ஒதுக்கிவிடக் கூடாது’’ என்றாள். ‘‘கொண்டைக் கடலை தேவலையா, பட்டாணி பரவாயில்லையா?’’ என்று ஓரொரு தரமும் கேட்டுப்பாள். அதோடு சரி. கண்ணுலேயே காட்டினதில்லை.

‘இவங்களெல்லாம் பக்தர்கள் லிஸ்டிலேயே சேர லாயக்கில்லை’ என்று பஞ்சாபகேச குருக்களுக்குத் தோன்றியது.

நூறு கிராம் எண்ணெய் இருந்தால் போதும், கல்லை வழிக்க. அதுக்குக்கூட வக்கில்லை. தெனமும் சிரத்தையா பூ கொடுத்திட்டிருந்த பூக்காரன், ரெண்டு மாசமா பாக்கி நிற்கிறதாலே பூ சப்ளையை நிறுத்திட்டான்.

ஒற்றை டியூப் லைட் எரிஞ்சிண்டிருந்தது. பல்லிலே படிந்த காறை மாதிரி கறுப்பு கட்டிண்டு வருது. எப்போ மக்கர் பண்ணுமோ!

ஆபீஸ்லே ஒரு வருஷமா பிஸினஸ் மந்தம். எக்ஸ் போர்ட் பிஸினஸ்லே இதுதான் சங்கடம். சைனா முந்திக்கொண்டு அடிமாட்டு விலைக்கு சப்ளை பண்றான். சாயப் பட்டறை நடத்தக் கூடாது, பொல்யூ ஷன்னு உள்நாட்டிலேயும் ஏக கெடுபிடி.

ஆபீஸ் லாபகரமா இருந்தப்போ, கோயிலும் ஓஹோன்னு இருந்தது. குருக்களுக்கும் தட்டில் தினம் பத்துப் பன்னிரண்டு ரூபாயாவது விழும்.

கிலோ ரெண்டு ரூபாய் அரிசி வந்ததில் ஒரு சௌகரியம்… நைவேத்தியம் வடித்துக் கொண்டுவர முடிகிறது. ஒரு கிலோ அரிசி அம்பாளுக்கு ஒரு வாரமே தாங்கும். சாப்பிடறாளா என்ன! ஆனா, அதுக்குன்னு அம்பாளை யாராவது பட்டினி போடுவாளோ?

குருக்கள் வீட்டு மாமி மாடிப்படியில் வழுக்கி விழுந்து இடுப்பில் ஃபிராக்சர். பிச்சை எடுக்காத குறையாக எல்லார்கிட்டேயும் கெஞ்சி ஆயிரம் ரூபா சேர்த்து, தனியார் ஆஸ்பத்திரியிலே மாமிக்கு சிகிச்சை. சாமிக்கு நைவேத்தியமும், வீட்டுக்குச் சமையலும் செய்யற பொறுப்பு அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

குருக்களும் அப்பப்போ கோயிலுக்கு வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் அறிவிப்பு செய்து கொண்டு இருந்தார்… ‘‘சம்பளம் வரலைன்னா விட்டுடப் போறேன். என்ன மாமி, ரெண்டு மாசம் ஆச்சு… பைசா வரலை. பஸ் சார்ஜே பத்து ரூபா ஆறது. நைவேத்தியத்துக்கு அரிசியையா வெச்சு நைவேத்யம் பண்ண முடியும்? சாதம் வெந்தாகணுமே! வீட்டிலே கேஸ் கிடையாது. கிருஷ்ணாயில் பிளாக்கிலே ஒரு லிட்டர் விலை பெட்ரோல் விலையோட போட்டி போடறது. காகிதத்தைக் கொளுத்தி சமைக்க முடியுமான்னு வீட்டிலே கேட்கிறாள். எல்லார்கிட்டேயும் கடன். வீட்டை வித்துத் தொலைச்சுட்டு எங்க எடாவூருக்கே ஏரைக் கட்டிண்டு போயிடலாம்னு பார்க்கறேன். பட்டணத்துக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு. எத்தனையோ கோயில்லே வேலை பார்த்தாச்சு, விடியலை!’’

மூணு மாமிகளும் கவலைப்பட்டனர். ‘‘அவர் சொல்றது நியாயம்தான். ஆனா, நம்ம பாடுதான் கஷ்டமாயிடும். உட்கார்ந்து ஆற அமர சுலோகம் படிக்க வசதியா இருந்தது. கன்னாபின்னான்னு கூட்டமும் வர்றதில்லை. இவர் கிளம்பிட்டால் கோயில் திறப்பாங்களோ, மாட்டாங்களோ?’’

‘‘வாஸ்துப்படி உங்க கோயில் இல்லை; அதான் சகல தரித்திரத்துக்கும் காரணம்கிறார் எங்காத்து மாமா!’’

‘‘ஆனா, அர்ச்சகரோட ஜாதகம்தான் அம்பாளை அடிக்கிறதுங்கறா எங்க பாட்டி!’’

மூன்று மாமிகளும் ஒரு நல்ல நேரம் பார்த்து, ஆபீஸ் மாமியின் பங்களாவுக்குப் போய், அவள் காதில் விஷயத்தைப் போட்டார்கள்.

ஆபீஸ் மாமியோ, ‘‘நான் அப்பவே சொன்னேன்… ஆபீஸ்லே நாலுவிதமான மனுஷா வருவா, போவா! ஏன்டா அங்கே ஒரு கோயில்னு முட்டிண்டேன். அர்ச்சகர் போட்டு ஜாம் ஜாம்னு நடத்தறேம்மான் னான். இப்ப என்னாச்சு! கோயில் ராசி பிஸினஸையே அடிச்சுட்டுது. கேள்விப் பட்டிருப்பேளே!’’ என்றாள்.

‘‘என்ன சொல்றேள்?’’

‘‘மொத்தத்தையும் வித் தாச்சு. மூணு கோடியோ, மூணரைக் கோடியோ! ஆடிட் டர்தான் சொன்னார்!’’

மூன்று மாமிகளுக்கும் அதிர்ச்சிதான். வருத்தத் தோடு திரும்பினர்.

‘‘ஆபீஸ்காரங்க தெய்வ நம்பிக்கையோடுதான் கோயில் கட்டினாங்க. இப்போ ஆபீஸையே விற்கி றாப்பலே ஆயிட்டுதே! கோயிலும் போச்சு. அம்பாள் காப்பாத்திக் கொடுக்க வேணாமா? ‘கடவுளை நம்பி னோர் கைவிடப்படார்’னு பழ மொழிக்கொண்ணும் குறைச்சல் இல்லே.’’

இரண்டு வாரம் கழித்து, மேற்படி ஆபீஸ§ம் கோயிலும் யாரோ ஒரு கான்ட்ராக்டர் மூலம் இடித்துத் தள்ளப் பட்டுக்கொண்டு இருந்தது. அந்த வழியாகப் போன மாமி களுக்குக் கோயில் இடிபடும் காட்சி, மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

மேற்பார்வை செய்து கொண்டு இருந்த இன்ஜினீயரை, மாதங்கி மாமிதான் விசாரித் தாள்.

‘‘ரோடை விசாலப்படுத்த றதுக்காக அரசாங்கம் இந்த இடத்தைக் கையகப்படுத்தி யிருக்கும்மா! நூறடி ரோடு வரப்போகுது. இந்த ஆபீஸ்காரர் நல்ல அதிஷ்டக்காரர். முன் கூட்டியே இந்த இடத்தை நல்ல விலைக்கு வித்துட்டார்.’’

மூன்று மாமிகளும் ஒருத்தரையருத்தர் பார்த்துக்கொண்டனர்.

லுங்கியும் சட்டையும் அணிந்து, கையில் ஒரு தடியுடன் கிழ வாட்ச்மேன் ஒருவர் அவர்களை நோக்கி வந்தார். நெற்றியில் பளீர் என்று விபூதிப் பட்டை.

‘‘நமஸ்காரம் மாமி, எல்லாரும் «க்ஷமமா இருக்கேளா?’’

‘‘அட, நம்ம குருக்கள் மாமா!’’

‘‘ஆமாம் மாமி! கான்ட்ராக்டர் எங்க ஊர்ப் பையன்தான். ‘ஆபீஸ் போயாச்சு, கோயில் போயாச்சு… சோத்துக்கே லாட்டரிடா’ன்னேன். வாட்ச்மேன் வேலை போட்டுத் தந்துட்டான். மாசம் 3,000 ரூபா தர்றான்.’’

‘‘என்ன மாமா இது, சுவாமிக்கு அர்ச்சனை பண்ணிண்டிருந்துட்டு இப்படி வாட்ச்மேனா… பாக்கறதுக்கே கஷ்டமாயிருக்கே!’’

‘‘நான் வருத்தமே படலைம்மா! எல்லாம் அந்த அம்பாளோட செயல். அவாள்லாம் குருக்கள் தொழிலுக்கு வர்றப்போ, நான் வாட்ச்மேன் தொழிலுக்குப் போறதிலே கௌரவக் குறைச்சல் ஒண்ணுமில்லே..!’’

‘‘அதுக்குன்னு…’’

‘‘என் தரித்திரம் போச்சே, அதைச் சொல்லும்மா! அப்போ மாசம் முன்னூறுக்கே சிங்கி அடிச்சேன். இப்போ மூவாயிரம் வாங்கறேனே! தன்னை அழிச்சுண்டாவது அண்டினவனைக் காப்பாத்தறவதான் அம்பாள்! லாரி வர்றாப்பல இருக்கு… நகர்ந்துக்குங்கோ!’’ என்றவர், ‘‘ரைட்… ரைட்! ரைட்லே ஒடிச்சி வாப்பா..!’’ & குரல் கொடுத்தவாறு, கேட் அருகே விரைகிறார் வாட்ச்மேன் மாமா.

வெளியான தேதி: 01 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *