கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,552 
 

“சார்”. 

தன் மேசைக்கு எதிரே வந்து நின்றவனை அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போதே ராமதுரை கவனித்துவிட்டார். ஆனால் வேலையில் படு மும்முரமாக இருப்பதுபோல பாசாங்கு செய்தவாறு இருந்தார். 

கடந்த ஒரு வார காலமாகவே வருமானம் டல்லடிக்கிறது. வந்திருக்கும் பார்ட்டியை 

சரியான கோணத்தில் மடக்கிவிட்டால் சுளையாய் சில காந்தி நோட்டுகள் தேற்றலாம். காலையிலேயே நல்ல சகுனம். மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார் ராமதுரை. 

“சார்”. 

இரண்டாம் முறையாக அவன் பணிவோடு அழைக்க.. அப்போதுதான் முதன் முறையாகப் பார்ப்பதுபோல் ஒரு பார்வையை வீசிவிட்டு… 

“ஓ நீங்களா? உங்க கேஸ் இன்னும் ஒப்புதல் ஆகலையே. இன்னும் பத்து நாள் கழிச்சு வாங்க” சொன்னவர் சட்டென பின்பக்கம் திரும்பி… “சுந்தரம், இங்க வாய்யா… இந்த பைலை அந்த கேபின்ல வைச்சுடு” என்று இயந்திரத்தனமாய் சொல்லிவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கிவிட்டாற் போல் தனது பாசாங்கு நாடகத்தைத் தொடர்ந்தார். இரண்டு மூன்று முறை சூள் கொட்டி வேலையில் உள்ள சலிப்பைக் காட்டிக் கொண்டார். 

திடீரென யதேச்சையாய் நிமிர்ந்து பார்ப்பதுபோல பார்த்து அவன் இன்னும் நின்றிருப்பது பிடிக்காதது போல… “என்னய்யா? சொன்னேனில்லே? போய்யா. ஒரு வாரம் கழிச்சு வாய்யா. சும்மா நிக்கிறதுல பிரயோஜனமில்லே. அவ்வளவுதான்.” 

வந்தவன் உடைந்து போனான். 

“சார். அப்படிச் சொல்லாதீங்க சார். மழை வர்றதுக்குள்ள வீட்டு வேலையை தொடங்கிடணும் சார். இந்த அப்ரூவலுக்கு அப்பறம் எங்க பாங்குல லோன் சாங்ஷன் வாங்க அலையணும் சார். ப்ளீஸ்… கொஞ்சம் சீக்கிரம்… தயவு பண்ணி…” 

ராமதுரைக்கு பொய்யாய் உடனடி கோபம் வந்தது. 

“சீக்கிரம்னா… என்னை என்ன பண்ணச் சொல்லற? இப்ப இங்க இருக்கிற ஸ்பெஷல் ஆபீஸர் ஒரு வார லீவு முடிஞ்சு நேத்திக்குத்தான் வந்தாரு. ஆனா அவருக்கு போன சனிக்கிழமை தேதி போட்டு டிரான்ஸ்பர் உத்திரவு வந்திடுச்சு. புது ஆளு இன்னும் வரல. இந்த ஆபீஸருங்க பண்ற லொள்ளு பாலிடிக்ஸ்ல நாங்க மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கு. போங்க சார். உங்களுக்கு இதெல்லாம் புரியாது. பத்து நாள் கழிச்சு வந்து பாருங்க. இப்ப எடத்தை காலி பண்ணுங்க.” 

வந்தவனுக்கு வியர்வை வெள்ளம். மிரண்டு போய் முழித்துக் கொண்டு மேலும் கீழும் பாத்துக் கொண்டிருந்தான். ராமதுரை சரியான நேரத்துக்கு காத்திருந்தார். 

“சார். வேற வழியே இல்லையா சார்?” 

அப்பாடி வந்துவிட்டான்! 

“சார். வேற வழி எதுவுமே இல்லையா சார்?” குரல் ஈனஸ்வரத்துக்கு போனது. ரொம்பவும் ஆடிப்போயிருந்தான். 

ராமதுரை எழுந்தார். அவன் அருகில் வந்து மெதுவான கிசுகிசு குரலில்…”ஒரு வழி இருக்கு. ஆனா கொஞ்சம் செலவாகும். பரவாயில்லையா?” 

வந்தவன் நாற்காலி நுனியில் அசௌகர்யமாக உட்கார்ந்து கொண்டான். மிரட்சியில் பேச்சு உடனே வரவில்லை. 

“ம்ம்ம்… என்ன சொல்ற? சீக்கிரம். எனக்கு ஆயிரம் வேலையிருக்கு.” ராமதுரை அவனை அவசரப்படுத்தினார். 

“சொல்லுங்க சார். பரவாயில்லை. கொடுத்திடலாம்”. 

“தம்பி. உன்னைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. ஒரு வாரமா அலையா அலையுறே. என்ன பண்றது? இந்த ஆபீஸருங்க பண்ற லொள்ளு தாங்கல. பல லட்சரூபா செலவு பண்ணி வீடு கட்றீங்க. கொஞ்சம் அப்படி இப்படின்னு செலவு செஞ்சாத்தான் வேலை சுளுவுல முடியும். இதுலயெல்லாம் ஜாஸ்தி யோசனை செய்யக்கூடாது. என்ன? நான் சொல்றது சரிதானே?” 

ஒரு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் விரைப்பு நிலைக்கு வந்து, “நீங்க என்ன பண்றீங்க… ஒரு மூணு மணி சுமாருக்கு ரெண்டாயிரம் ரூபாய் ரெடி பண்ணிக்கிட்டு வர்றீங்க… நம்ப பியூன் சுந்தரம் இருக்கான்ல அவனை பார்க்கறீங்க. அவன் படு ஸ்மார்ட்டு. அவன் உங்க கேஸை ஆபீஸர் வீட்டுக்கே எடுத்துக்கிட்டு போயி போன வாரத் தேதி போட்டு காரியத்தை கனகச்சிதமாக முடிச்சிடுவான். ஆமா… ஒன்ணு சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கு விட்டா போச்சு ஆபீஸர் இன்னிக்கு நைட் சிதம்பரம் போயிடறாரு.” 

“சரி சார். இப்பவே போறேன் சார். நிச்சயமா இன்னிக்குள்ள கெடைச்சுடுமா சார்?” 

“கெடைச்சுடுமாவாவது. கெடைச்சாப்பல. நீங்க நான் சொன்ன மாதிரி மூணு மணிக்கு வாங்க. அதை செய்யுங்க.” 

ராமதுரையின் குரலில் கரிசனம் பொங்கி வழிந்தது. நல்ல தேட்டையாயிற்றே. 

போய்விட்டான்! ராமதுரைக்கு தலைகால் புரியவில்லை. அவர் கணக்கில் நிச்சயம் ஆயிரமாவது தேறும்!! 

போன் ஒலித்தது. ராமதுரை நிமிர்ந்தார். ரிசீவரின் காதை பொத்தி கிளார்க் “ராமதுரை சார். உங்க மகன் சுரேஷ் லைன்ல.”

சுரேஷ்!! இவன் எதுக்கு இப்ப போன் செய்யறான்? 

“அப்பாவா? நான் சுரேஷ்பா. எம். சி. ஏ. சீட்டுக்காக நீங்க சொன்ன ஆசாமியை போய் பார்த்தேம்பா. சீட்டு நிச்சயம் தரேன்னு சொல்லறார். ஆனா நீங்க கொடுத்த ஐயாயிரம் பத்தாதாம். இன்னும் கொறைஞ்சது ஆயிரமாவது வேணுமாம். அதுவும் இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே கொடுத்துடணுமாம். அம்மாகிட்டே சொன்னேன். அம்மா உங்களுக்கு போன் போடச் சொன்னா. அப்பா ப்ளீஸ்பா… எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணுப்பா. ஃபிரண்ட்ஸ்கிட்டேல்லாம் சொல்லிட்டேம்பா… ப்ளீஸ்.” 

ராமதுரை யோசனை செய்ய…. பையன் விடவில்லை. 

“அப்பா…” 

“சரிடா. நீ என்ன பண்றே. ஒரு நாலு மணி சுமாருக்கு நேரா இங்க வா. ஆயிரம் ரூபா ரெடி பண்ணி வைக்கிறேன். இதுக்கும் மேலே கொடுக்க முடியாதுன்னு தீர்மானமா நான் சொன்னதா சொல்லிடு.. என்ன சரியா?” 

“ஓகே… ஓகே… அப்பா… என் நல்ல அப்பா… போனை வச்சிடட்டுமா?” 

ராமதுரை களைப்புடன் ரிசீவரை வைத்தார். கொஞ்சம் சிரிப்புகூட வந்தது. சோர்வுடன் தன் டேபிள் பக்கம் திரும்பி நோட்டம் விட்டவரின் முகம் பிரகாசம் அடைந்தது. 

அவர் மேஜையின் அருகே இரண்டு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். ராமதுரை தனது அடுத்த தூண்டிலுக்குத் தயாரானார். 

– 01 ஆகஸ்ட் 1997, சில ரகசியங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2018, வெளியிடு : FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *