காவிரிப் பாசனத்திற்கே உரிய பசுமை கொஞ்சம் வெளிறிக் கிடக்க, அடர்ந்த தென்னத்தோப்பின் நடுவே பிரம்மாண்டமாய் உயர்ந்து தெரிந்தது திருவீழிமிழலை சிவன் கோவில் கோபுரம்.
வளைந்து வளைந்து சென்ற தார் ரோட்டில் இருந்து சரிந்த சிறிய மண் சாலையில் அப்பு வேகமாக இறங்கினான். வேலிப் படலைத் திறந்து சாணமிட்டு மெழுகி கோலம் போடப்பட்டிருந்த வாசலைக் கடந்து பாதி திறந்திருந்த கதவைத் தட்டியபடி உள்ளே நுழைந்தான்.
“பாகி பாட்டி.. பாகி பாட்டி.. ”
உள்ளேயிருந்து வந்த பாகீரதி ஏறக்குறைய ஆறு வியாழ வட்டத்தை நெருங்கும் வயதில் இருந்தாள். தும்பைப் பூவாய் நரைத்திருந்த தலையும், அங்கங்கே லேசாகத் தைத்திருந்த ஒன்பது கஜப் புடைவையும், நெற்றியில் ஒற்றைக் கோடாய் பளீரிட்ட விபூதியுமாக பாட்டி நிதானமாக சிரித்தபடி கேட்டாள்.
“என்னடா அப்பு.. இவ்வளவு வேகமா வரே ? என்னப்பா விசேஷம் ? முதல்ல ஒரு லோட்டா ஜலம் குடிச்சுட்டு சொல்லு”
“பாட்டி.. அதெல்லாம் இருக்கட்டும். நான் ரொம்ப முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன். சிவன் கோவில்ல சித்திரைத் திருவிழா ஆரம்பிக்கப் போறது இல்லியா ? அதுக்கு தினமும் அன்னதானம் செய்ய ஒரு வெள்ளைக்காரர் பணம் கொடுத்திருக்காராம்”
“அதுனால என்னப்பா ? வருஷா வருஷம் யாராவது பெரிய மனுஷா இந்த மாதிரி செய்யறது வழக்கம்தானே ?”
“அதுக்கில்ல பாட்டி.. நம்ம கோவில் எவ்வளவு பழங்காலத்து கட்டிடம். எல்லாரும் சொல்லுவா இல்லியா ? அந்தக் காலத்துல கோவில் வேலை செய்யறவா எல்லாரும் புதுசா கோவில் கட்டறதா இருந்தா அந்த காண்டிராக்ட்ல எல்லா விதமான சிற்ப வேலையும் செய்வோம். ஆனா திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார் கோவில் கொடுங்கை அப்புறம் நம்ம திருவீழிமிழலை வவ்வால் மண்டபம் மாதிரி மட்டும் செய்ய முடியாதுன்னு சொல்லி கையெழுத்துப் போடுவா அப்படின்னு சொல்லுவாளே”
“அது என்னமோ நிஜம்தான். அந்த வௌவால் நெத்தி மண்டபம் மாதிரி அந்தக் காலத்துல மட்டுமில்ல இந்தக் காலத்துலேயும் கட்டறது கஷ்டம்தான். அதுல ஒரு தூண் கூட கிடையாது. மேல் பக்கத்துல மடிப்பும் கிடையாது. மழ மழன்னு இருக்கும். அதுனால வௌவால் தங்க முடியாது. ஆனா இப்போ எல்லாம் பட்டணத்துல இது மாதிரி எல்லாம் புதுசா வந்திருக்கும்னு சொல்றாளே ”
“அது என்னவோ பாட்டி.. இதுல விசேஷம் என்னன்னா.. அந்த வெள்ளைக்காரர் ஒரு கட்டிடம் கட்டற இன்ஜினீயராம். அவர் இந்த தூண் இல்லாத மண்டபத்தை பார்க்கறதுக்காகவே வராராம். அப்புறம்… அவரை அழைச்சுண்டு வரவர் நம்ம ஊர்க்காராம். அவரும் பெரிய கட்டடம் எல்லாம் கட்டிருக்காராம். இங்கே ஒரு நாள்தான் தங்குவா.. ஆனா நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடுவாளாம். அதுனாலே மணி சாஸ்திரிகள் உங்ககிட்டே சொல்ல சொன்னார்.”
“அதுக்கென்னப்பா.. செஞ்சுட்டா போச்சு” அப்பு வேகமாக வெளியேறினான். இன்னும் ஊருக்கெல்லாம் இந்த சேதியைச் சொல்லணுமே !!
மணி சாஸ்திரிகள் தன் எதிரே இருந்த பெர்ட்டை மதிப்புடன் கவனித்தார். அவர் கொஞ்சிப் பேசும் தமிழ் கூட நன்றாகத்தான் இருந்தது. அவருக்கு அருகில் சினிமாப் பட கதாநாயகன் போல இருந்த அஸ்வின் தன் கையில் இருந்த பெரிய புத்தகத்தைப் புரட்டி அவரிடம் எதையோ காட்டி விளக்கிக் கொண்டு இருந்தான்.
அன்றைக்குச் சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நாள். புராண வரலாற்றின்படி காத்யாயன மகரிஷியின் பெண்ணாகப் பிறந்த மலைமகளை, பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்ட நாள். வருடம் முழுவதும் வெறும் காட்சிப் பொருளாக இருக்கும் வவ்வால் மண்டபம் அன்று கல்யாண கூடமாக மாறும். இறைவனும் இறைவியும் திருமணம் செய்து கொள்ளும் காட்சியை எல்லோரும் தடங்கல் இன்றிக் காணும்படி மறைப்புகள் இல்லாத பெரிய மண்டபத்தில் நடைபெறும்.
காலையில் கும்பகோணத்தில் இருந்து கிளம்பி வந்திருந்த அஸ்வினும், திரு. பெர்ட் என்று அழைக்கப்பட்ட வெளிநாட்டவரும் முன்பே ஏற்பாடு செய்திருந்த அறைக்கு வந்திருந்தனர். ஊருக்கே அன்று அன்னதானம் செய்ய முன்வந்த பெர்ட், தேவை இல்லாத வம்பு, வழக்குகளை உருவாக்காமல் தனியாகத் தனக்கு தென்னிந்திய சைவ சமையல் செய்து தரும்படி கேட்டுக் கொண்டதனால் சமையல் வேலை செய்யும் பாகீரதி பாட்டியிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் வந்தவுடன் ஒரு முறை மண்டபத்தைப் பார்த்து விட்டு திரும்பியவர்கள் மாற்றி மாற்றி எதையோ பேசிக்கொண்டே இருந்தார்கள்.
“அஸ்வின்.. டாஞ்சூர் பக்கமிருக்குற டெம்பிள்ஸ் எல்லாமும் different structures போலத் தெரியுது. இந்த ஹால் பத்தி நீ சொன்னது நிஜம். its a technical marvel. Olden times-la இது போல கட்டிடம் கட்டுறதுல எவ்ளோ ப்ராப்ளம்ஸ் இருக்கும்.. OMG.. எனக்கு வெஸ்ட் மினிஸ்டர் அபே நினைவு வருது. அது சரி.. நீ இந்த ஏரியா அப்படின்னு சொன்னியே ! எங்கே உனக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லையா ?”
மணி சாஸ்திரிகள் உன்னிப்பாக கவனித்தார். முன்பே கோவில் அதிகாரி சொன்னது நினைவுக்கு வந்தது. “சாஸ்திரிகளே.. திருவிழாவுக்கு பெரிய நன்கொடை கொடுக்கறாரே.. அந்த துரையை அழைச்சுக்கிட்டு வரப்போறவர் டில்லியிலே பெரிய என்ஜினியரு. நம்ம ஊர்ப் பக்கத்துக்காரர்னு கேள்வி. சின்ன வயசுல பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய பதவில இருக்காராம்.”
“எந்த ஊருன்னு தெரியுமா ? யாராத்து மனுஷா ?”
“அதெல்லாம் தெரியாதுப்பா.. இப்போ இருக்கற காலகட்டத்துல கோவிலுக்கோ, ஜனங்களுக்கோ உதவி செய்யணும்னு வரவா கம்மி. அதுல நதிமூலம், ரிஷி மூலம் எல்லாம் பாக்க முடியாது. யாரா இருந்தா என்ன ? நல்ல காரியம் செய்யறார். நன்னா இருக்கட்டும்”
தலையைக் குலுக்கிக் கொண்டு மணி நிகழ்காலத்துக்கு வந்தார்.
அஸ்வின் ஒரு அலட்சியப் புன்னகையுடன் “நோ.. மிஸ்டர் பெர்ட். You know me well ! எனக்கு என் திறமை மேல மட்டும்தான் நம்பிக்கை. நான் ஒரு Orphan அப்படின்னு உங்களுக்கே தெரியும். என் roots எங்கே இருந்தா என்ன ? இப்போ என் பொஸிஷன் என்ன அப்படின்னு மட்டும்தான் நான் பார்க்கிறேன்” வசீகரமாகச் சிரித்தபடி அஸ்வின் புத்தகத்தை மூடினான்.
“கல்யாண உத்சவம் நடக்கறது. இன்னும் ஒரு மணி நேரத்துல பூர்த்தி ஆயிடும். நீங்க வந்து கலந்துண்டா எல்லாருக்கும் உற்சாகமா இருக்கும். அப்பவே கிருஷ்ணன் சார் வந்து சொன்னாரே… வரேளா ?” மணி மெதுவாகக் கேட்க அஸ்வின் அவரை பார்த்த்தான்.
“சாரி பட்ஜி ! நாங்க வந்தது மண்டபத்தைப் பார்த்து அது போல கட்டுமானத்தை இந்தக் காலத்தில் செய்ய முடியுமா அப்படின்னு யோசிக்கத்தான். தூண் எதுவும் இல்லாம இவ்வளவு பெரிய ஹாலை அதுவும் பிளானிடோரியம் மாதிரி மேல்பக்கம் வச்சு கட்டியிருக்கறது பத்தி எல்லாம் பார்த்து, பேசி டிஸ்கஸ் செய்யத்தான் வந்திருக்கோம். உங்களுக்கே தெரியும். வெளியே சாதாரணமா இருந்தாலும் நம்ம ஊர்ல foreigners-ஐ கோவிலுக்குள்ளே கூட விட யோசிப்பாங்க. நல்ல வேளையா இந்த மண்டபம் வெளிப்பிரகாரத்திலேயெ இருக்கு. இப்போ உற்சவ நேரத்துல கூட்டமா இருக்கும். So, நாங்க ரெஸ்ட் எடுத்துக்கிட்டு afternoon வரோம்”
பெர்ட் நிமிர்ந்தார். “No அஸ்வின். அப்படிச் சொல்லாதே. ஒவ்வொரு ரிலிஜனுக்கும் சில கஸ்டம்ஸ் இருக்கு. இப்படி சில இடத்துல அதை follow செய்யறதுனாலதான் அதுக்கு இன்னும் life இருக்கு. ஹிந்து ரிலிஜன்படி கோவிலுக்குள்ளே போக முடியாதவங்களுக்காக கடவுள் வெளியே வந்து தன்னைக் காட்டுறதுக்குத்தான் இந்த festival celebration. There is nothing wrong in it. I can come and see the limit upto which I am permitted. isnt it ? ”
பெர்ட் மெல்லச் சிரித்தபடி “மிஸ்டர் மணி ! நாங்களும் வரோம். I just wanna see the hall again ” என்றார்.
“ஒரே நிமிஷம்…நீங்க திரும்பறதுக்குள்ள உங்க சாப்பாட்டை ரெடி செஞ்சுட சொல்றேன்” என்று வாசலுக்குப் பாய்ந்த மணி சாஸ்திரிகள் அங்கே வந்து கொண்டிருந்த அப்புவிடம் “டேய் அப்பு.. பாட்டி கிட்டே போய் சாப்பாடு எல்லாம் ரெடியான்னு கேட்டுக்கோ.. துரை ரொம்ப நல்லவரா இருக்கார். பாட்டி கைப்பக்குவம் புடிச்சிருந்தா துரை ஸ்பெஷலா கவனிப்பார். குறைஞ்ச பட்சம் பாட்டிக்கு ஒரு நல்ல புடைவயாவது வாங்கிக்க வழி பொறக்கட்டும்”
அஸ்வின் எதுவும் பேசாமல் புத்தகத்தை எடுத்து வைத்தான்.
தலை வாழை இலையில் இருந்த எல்லாமே காலியாகி சுத்தமாகத் துடைத்து விட்டது போல் இருந்தது.
“Wow ! delicious ! நிறைய சௌத் இண்டியன் சாப்பாடு சாப்பிட்டிருக்கேன். But, this is something different. இவ்வளவு நல்லா எங்கேயுமே இல்ல.,.. what do you say Ashwin ?” பெர்ட் பூத்துவாலையில் கையைத் துடைத்தபடி கேட்டார்.
“யெஸ்.. நல்லா இருந்துச்சு. BTW, நான் எல்லா விஷயத்தையும் குறிச்சு வச்சிருக்கேன். இன்னைக்கு night சென்னைக்குத் திரும்பணும். நாளைக்கு morning flight-la டில்லி போயிடலாம். I dont want to disturb you today. இப்போ ரெஸ்ட் எடுத்துக்குங்க.”
அப்பு அவர்கள் சாப்பிட்ட மேஜையைத் துடைக்க ஆரம்பித்தான்.
“மிஸ்டர் அப்பு. இந்த சாப்பாடு உங்க வீட்டுல செஞ்சதா ? ” பெர்ட் கேட்ட கேள்விக்கு மணி சாஸ்திரிகள் பதில் கொடுத்தார்.
“இல்ல சார். இங்கே பாகீரதி அப்படின்னு ஒரு வயசான பாட்டி இருக்காங்க. சின்ன வயசுல husband போயிட்டார். அப்புறம் ஒரு accþdent-la புள்ளையும், மாட்டுப்பொண்ணும் போயிட்டாங்க”
“மாட்டுபொண்ணு.?..You mean daughter-in-law ?”
“ஆமாம்.. சொந்த பந்தம் எதுவுமில்லை. அதுக்கப்புறம் தனியா உழைச்சு வயத்துப்பாட்டுக்கு வழி தேடிண்டு இருக்கா ”
“ஓகே.. அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமானா நான் செய்யறேன்”
மணி சாஸ்திரிகள் முகத்தில் விசனக்குறி தெரிந்தது. “நான் கூட கேட்டேன். ஆனா பாட்டிக்கு எதுவும் வேணாமாம். இந்த சாப்பாட்டுக்கு கூட பணம் வாங்கிக்க மாட்டேன்னு கட்டாயமா சொல்லிட்டா. ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்யற மனுஷர் வயத்துக்கு ஒரு வேளை சாதம் போடற பாக்கியம் கிடைச்சதே போறும்னு சொல்லிட்டா”
பெர்ட் நிமிர்ந்து பார்த்தார். “அஷ்வின்.. உங்க ஊரு மண்டபம் மட்டுமில்லே.. மனுஷங்களும் different-ஆ இருக்காங்க”
அஸ்வின் தலையைக் குலுக்கிக் கொண்டான். மணியைப் பார்த்து “அதுக்குப் பேரு தாராள மனசுன்னு நீங்க நினைக்கறீங்க. முட்டாள்தனம் அப்படின்னு நான் நினைப்பேன். செய்யற காரியத்துக்கு பணம் வாங்கிக்கறதுல என்ன தப்பு இருக்கு ? அதுவும் ஒரு வேளை வசதியா இருக்கறவங்க வேணாம்னு சொல்லலாம். வழி இல்லாதவங்க இப்படி சொன்னா அதுக்கு பேரு வறட்டு கௌரவம் அப்படின்னுதான் தோணும்”
மணி சாஸ்திரிகள் கொஞ்சம் கோபமும், கொஞ்சம் தடுமாற்றமும் சேர நிமிர்ந்தபோது வாசலில் சாம்பசிவ சாஸ்திரிகள் வருவது தெரிந்தது.
“சார்… நீங்க கேட்டிருந்தபடி சாம்பு தாத்தா வந்திருக்கார். ஊர்ல வயசான விஷயம் தெரிஞ்சவர். கோவில் பத்தியோ மத்த விவரங்களோ கேட்டுக்கலாம்”
“I should apologise. இவ்வளவு வயசானவர்னு தெரிஞ்சிருந்தா நானே போய் பார்த்திருப்பேன். Let him sit comfortably, அப்புறம் கேட்டுக்கறேன். மிஸ்டர் அப்பு ! அவருக்கு கூலா ஏதாவது கொடுக்கக் கிடைக்குமா ?”
பெர்ட்டின் கேள்விக்கு பதிலாக அப்பு “தாத்தாவுக்கு நீர்மோர்தான் பிடிக்கும். அவர் வரப்போறார்னு சொன்னதுமே பாகி பாட்டி கூஜால கொடுத்து விட்டிருக்கா” என்றான்.
அஸ்வின் குறிப்புப் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு உள்ளே வந்த சாம்பசிவ சாஸ்திரிகளைப் பார்த்தபடி நின்றான்.
……………….
“ஜலந்தராசுரனை வதைச்ச சக்ராயுதம் தனக்கு வேணும் அப்படிங்கறதுக்காக மஹாவிஷ்ணு ஈஸ்வரனுக்கு தினமும் ஆயிரம் தாமரைப்பூவால பூஜை செஞ்சாராம். ஒரு நாள் அதுல ஒரு தாமரைப்பூ குறைஞ்சு போச்சு. பாதியில பூஜையை விட மனசில்லாத கமலக்கண்ணன், பங்கஜ நேத்ரன், புண்டரீகாட்சன் அப்படின்னு எல்லாம் பேர் கொண்ட பெருமாள் தன் கண்ணையே சமர்ப்பிச்சாராம். அதனால இங்கே சுவாமிக்கு நேத்ரார்ப்பணேஸ்வரர் அப்படின்னு பேரு. மிழலைக்குறும்பன் அப்படிங்கற வேடன் சமர்ப்பிச்ச விளாம்பழத்தை ஏத்துண்டு அவனுக்கு அனுக்ரஹம் செஞ்சிருக்கார். பஞ்சம் வந்த காலத்துல திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பத்தருக்கும் தினமும் படிக்காசு கொடுத்து அருள் செஞ்சிருக்கார். தேவாரத்துல இருக்கு பாருங்கோ.. வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே இன்னும் பாருங்கோ… கோவில் விமானத்திலேயே சீர்காழி தோணியப்பரும் இருக்கறதாலே “காழி பாதி வீழி பாதி” அப்படின்னு சொல்லுவா” சாம்பசிவ சாஸ்திரிகள் ஸ்தல வரலாறை விவரமாக சொல்ல பெர்ட் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்.
“ரொம்ப பெரிய கோவில். இல்லையா ?”
சாம்பு பொக்கை வாயைத் திறந்து சிரித்தார். “பெருசுன்னு சொல்லப்படாது. பிரம்மாண்டம்னு சொல்லணும். இங்கே ஊர் சின்னது. கோவில் பெருசு. இப்போ திருவாவடுதுறை ஆதீனத்துல இருக்கு., அவாதான் பாத்துக்கறா. ஒரு ஸ்லோகம் சொல்றேன். கேளுங்கோ.. இதைக் கல்யாணம் ஆகாத பொண்கள் தினமும் காலம்பர குளிச்சு ஸ்வாமியையும், அம்பாளையும் மனசுல நெனச்சுண்டு 45 நாள் சொன்னா கல்யாணம் நிச்சயமாகும்.”
அஸ்வின் ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஜன்னல் பக்கம் நகர, சாம்பசிவ சாஸ்திரிகளின் பார்வை அழுத்தமாக அவன் மேல் விழுந்தது. ஆனால் அவர் மீண்டும் பெர்ட், மணி ஆகியோரின் பக்கம் திரும்பினார்.
“தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திரப் ப்ரிய பாமினி
விவாஹ பாக்யம் ஆரோக்யம் புத்ரலாபம் ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி சௌபாக்யம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே சிவசுந்தரி
காத்யாயனி மஹாமாயே மஹாயோக நிதீச்வரி
நந்தகோப சுதம் தேவம் பதிம்மே குருதே நம : ”
“இதுதான் ஸ்லோகம். பக்தி, நம்பிக்கை ரெண்டும் இருந்தால் எல்லாமே நடக்கும். நம்பிக்கை இல்லேன்னா கயிறு கூட பாம்பாத்தான் தெரியும்”
சாம்பு சாஸ்திரிகள் சொன்னதும் அஸ்வின் திரும்பினான்.
“அப்படி இல்லை பெரியவரே.. நம்பிக்கையோட கையில புடிச்சா பாம்பு கயிறா மாறிடாது. கடிக்கத்தான் செய்யும். அது கயிறா பாம்பான்னு discuss செய்யறதை விட, அதைக் கையில புடிக்கறது தேவையா இல்லையான்னு யோசிக்கணும். அதுதான் புத்திசாலித்தனம்”
பெர்ட் அவனை ஏறிட்டு “அஷ்வின்.. அவர் சொல்ல வருவதைச் சொல்லட்டும்.” என்றதும் முகம் சிவக்க “சாரி… ஐ அம் ரியலி சாரி” என்றபடி அஸ்வின் ஜன்னல் அருகே சென்றான்.
“காவேரிக்கரையிலே சோழராஜா காலத்துல கட்டின கோயில் எல்லாமே பெருசுதான். அதை மத்த ராஜாக்கள் இன்னும் பிரம்மாண்டமா ஆக்கினா. தேவாரத் தலத்துல அதிகமா பாடல் பெற்ற ஸ்தலத்துல இந்த திருவீழிமிழலையும் ஒண்ணு தெரியுமா ?” என்று சொன்ன சாம்பசிவம் “இந்த மாதிரி மண்டபம் எங்கேயுமே இருந்ததில்லை. வவ்வால் தொங்க முடியாதபடி மேல் விதானத்துல மடிப்போ, தூண்களோ இல்லாம கட்டினது” பெர்ட் நிமிர்ந்தார்.
“ஒரு டவுட் கேக்கலாமா ?”
“சொல்லுங்க”
“இந்த மண்டபத்தைக் கட்டினபோது நிச்சயம் ஏதாவது தாங்கற தூண் அல்லது scafolding இருந்திருக்கும். இல்லையா ? அல்லது அது கூட இல்லாம கட்டியிருப்பாங்களா ?”
சாம்பு மறுபடி சிரித்தார். “நேக்கு தெரிஞ்சு எந்த சப்போர்ட்டும் இல்லாம கட்டின கட்டிடம் எதுவுமில்ல.. பழைய ஓலைச்சுவடில போட்டிருக்கறபடி தென்னை மரத்தை வச்சு இதை உசத்திக் கட்டினதா சொல்லுவா ”
“ஓ.. அப்போ தென்னை மரமெல்லாம் இந்த மண்டபம் கட்ட தூண் போல உதவி செஞ்சிருக்கு. ஆனா இப்போ அது போல தாங்க எதுவும் இல்லாம இருக்கறதாலதான் இந்த மண்டபத்துக்கு இவ்வளவு பேரு இல்லையா ”
…………….
நீர்மோரைக் குடித்து விட்டு சாம்பசிவ சாஸ்திரிகள் கிளம்ப, “நாமும் கிளம்பலாமா ? டயம் ஆயிடுச்சு. ஈவினிங் கும்பகோணம் போனாத்தான் சாப்பிட்டு விட்டு லேட் நைட் சென்னை போயிடலாம்” என்றான் அஸ்வின்.
“யா.. lets move” என்றபடி பெர்ட் நகர்ந்தார்.
சாம்பு மீண்டும் அஸ்வினைப் பார்த்தபடி நின்றார்.
“மணி சார்.. சாப்பாடு செஞ்சு கொடுத்த பாட்டிக்கு என் தாங்ஸ் சொல்லிடுங்க.. அப்படியே எப்படியாவது அவங்க கிட்ட இந்த பணத்தைக் கொடுத்துடுங்க” என்றபடி பெர்ட் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நீட்டினார்.
“அவங்க பணம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க சார்”
“அப்படி விட்டுடக் கூடாது. அவங்களைப் போல இருக்கறவங்களுக்கு நாம உதவி செஞ்சாதானே நல்லது. நீங்க explain செஞ்சு கொடுத்துடுங்க. வேற எதுவும் help வேணுமானாலும் என்னை contact செய்யுங்க” என்றபடி பெர்ட் வற்புறுத்த அஸ்வின் உள் அறையில் பெட்டிகளை மூடிக் கொண்டிருந்தான்.
பதினைந்து நிமிடத்தில் அவர்கள் கிளம்பிய கார் ரோடு முனையில் மறைந்ததும், புடவைத் தலைப்பால் தோளை மூடியபடி பின் கதவு வழியாக பாகீரதி பாட்டி நுழைந்தாள்.
“பாட்டி.. இவ்வளவு நேரம் கொல்லைப் பக்கதிலேயா இருந்தீங்க.. ? இப்போதான் அவங்க கிளம்பினாங்க.. உங்க சமையலைப் பத்தி பிரமாதமா சொல்லி பணம் கூட கொடுத்திருக்காங்க.. நீங்க வாங்க மாட்டீங்கன்னு சொன்னேன். அப்படியும் கொடுத்துட்டு போனாரு அந்த துரை”
வாசல் அருகில் நின்றிருந்த சாம்பு திரும்பி பாட்டியைப் பார்த்தார்.
“மணி.. அந்த பணத்தைக் கொண்டு போய் கோவில் அன்னதான நிதியிலே சேர்த்துடு. அப்பு.. நீ பாத்திரத்தை எல்லாம் கொண்டு போய் பாகியாத்துல வச்சுடு” சாம்பசிவ சாஸ்திரிகள் சொன்னதும் அவர்கள் நகர்ந்தனர்.
“என்ன பாகி… பேரனைப் பாக்க வந்தியா ?”
“ஆமாம் அண்ணா.. வெளி தேசத்துல பொறந்திருந்தாலும் நாலு பேர் வயறு ரொம்பணும் அப்படின்னு நெனச்சு இன்னைக்கு அன்னதானம் செய்ய வந்திருந்தானே.. அந்த பிள்ளையை என் பேரன் ஸ்தானத்துல வச்சு ஆசீர்வாதம் செய்யத்தான் வந்தேன்”
சாம்புவின் கேள்விக்கு பாகி பாட்டி புன்னகையுடன் பதிலளித்தாள்.
“ம்.. உன் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்க மாட்டியே.. புள்ளையைப் பறிகொடுத்தபோது யாருமில்லாம நின்ன பேரனை பட்டணத்துல விட்டு, அவனைப் பாத்துக்கறதா சொன்ன டிரஸ்டுக்கு மாசாமாசம் அடுப்படியிலே வெந்து சம்பாதிச்ச பணத்தை அனுப்பிப் படிக்க வச்சே.. இன்னைக்கு அவன் கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கறான். பெரிய எஞ்ஜினியரா இருக்கான். ஆனா.. சொந்த பாட்டியைக் கண்டா ஆகலை.. இந்த அழுக்குப் புடைவக்காரியாலதான் இன்னைக்கு அவன் சில்க் சட்டை போட்டுக்கறான். அது தெரியல.. உலகத்தோட கண்ணுக்கு அவன் இன்னைக்கு இருக்கற நிலைமை பெரிசா தெரியறது. அதுக்காக ஒருத்தி காய்ஞ்சு கஷ்டப்பட்டது எவ்ளோ பேருக்குத் தெரியப் போறது ? என்ன மாதிரி பழைய மனுஷாளுக்கு கொஞ்சம் தெரியும். இதெல்லாம் எங்களோட மறைஞ்சுடும்”
“எதுக்கு அண்ணா இவ்வளவு விசனப்படறேள் ? நானே அதைப் பத்திக் கவலைப்படறதில்ல.. எங்கேயோ எல்லாரும் ஷேமமா இருந்தா போறும். என் வயத்துக்கு அந்த ஈஸ்வரன் படியளப்பார். நான் வச்ச பேரைக் கூட அசுவின் அப்படின்னு மாத்திண்டுட்டான் பாத்தேளா ? அவனுக்கு அந்தக் காலத்துல நான் அவன் படிக்கற இடத்துக்கு போனாலே புடிக்காது. காலேஜூக்கு போனதும் என்னை அங்கே வரவே கூடாதுன்னு சொல்லிட்டான். அவனைப் பாத்து பதினஞ்சு வருஷம் ஆறது. இன்னைக்கும் இங்கே வந்திருந்தும் என்னைத் தெரியாத மாதிரியே இருந்துட்டு போயிட்டான். பரவாயில்ல.. எங்கேயோ குழந்தை நன்னா இருக்கட்டும்”
பாகிப்பாட்டியின் கண்ணில் மின்னியது கண்ணீரா இல்லை வெயிலின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
சாம்பு கோவில் கோபுரத்தை வெறித்தார். தூண்கள் இல்லாத மண்டபத்தின் பெருமையைப் பேசும் உலகம் அதைக் கட்டும்போது வெட்டிக் கிடந்த தென்னை மரங்களைப் பற்றி நினைப்பதில்லை.
மரங்களும் மனிதர்களும் சில சமயங்களில் ஒன்றுதான்.
– மே 2008