கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 5,842 
 
 

“ஊர்த் திருவிழான்னு ஏன் எங்களை அசிங்கப்படுத்த பெங்களூரர்லர்ந்து கூட்டி வந்த? ஆறுமுகம் ” என்ற எனது உரத்துக் கத்திய கூச்சலுக்கு. பனந்தோப்பில் சரக்கடிக்க சேர்ந்த அந்த ஊர் நண்பர்கள் ஆறுமுகம் பெருமாளும் அவர்கள் இருவரது நண்பர்களும் அதிர்ந்தனர். சரக்கு ஏறுமுறன்னேயே நான் மப்பில் பேசியதாய் நினைத்தார்களோ என்னவோ

“சத்தம் போடாத மணி”. என் கம்பெனி டீம் மெம்பரும் சகாவுமான ஆறுமுகத்தின் ஊர்க்காரனுமான பெருமாள் எச்சரித்தான். ஊருக்குள்ளே இங்கு பேசிய விஷயம் விஷமாகக் கூடாது என்று ஆறுமுகம் அவன் நண்பர்கள் பெருமாள் அவன் நண்பர்கள் எச்சரிக்கை ஆக இருப்பதை உணர்ந்தேன். ஆனாலும் என் கொள்கைப் பிடிப்பு கோபத்தை கூட்டிக் கொண்டே போனது.

“டேய் மணி நீ தமிழன்தான் ஆனா பொறந்து வளர்ந்தது பெங்களூர். சிட்டி லைஃப். உனக்கு தமிழ்நாட்டு கிராமத்து கலாச்சாரம் தெரியாது. ஆறுமுகம் என் உயிருக்கு உயிரான நண்பன்.ஆனா ஊர்க்கட்டுப்பாட்டால எல்லை தாண்டும் வரை அவன் உள்ளத்தால் அழுவான். அவனைத் திட்டாதே.” என்றான் பெருமாள்.

சட்டென்று பெருமாள் மீது கோபம் திரும்பியது.
எனக்கு. அவனுக்கு அவமானம் ஆனதால் குதிக்கின்றேன்.அவன் அதனை விழுங்கி சரக்கு விழுங்க வந்தானோ என உள்ளம் கொதித்தது. அவனைப் பார்த்து

“ஆமான்டா நான் தமிழன் என்பதாலேயே உன்கிட்ட எழுதப் படிக்க இன்னும் ஒருபடி மேலே உங்க தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலக்கணம் தெரியாம தவிக்கின்ற போது மரபுல பாட்டெழுதுற வரைக்கும் தனிப்பட்ட முறைல நீதான் சொல்லிக் கொடுத்த. இந்தக் கொடுமையை நீ அனுபவிக்க நான் பார்க்க உங்க ஊருக்கு வரல பெருமாள். இப்படியே திருவண்ணாமலைக்கு ஏறி பெங்களூர் போறேன். உங்க யாருக்கும் பிரச்சினை கொடுக்க மாட்டேன்” என்றேன்.

ஆறுமுகம் முகம் வதங்கி இருந்தது. அங்கு வந்திருந்த அவன் ஊர்க்கார நண்பர்கள் எங்கள் பெங்களூர் சரக்குக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்னுடைய பேச்சும் ஆத்திரமும் அவர்கள் சரக்கேத்தும் போது சண்டையாகி ரகளை ஆகிவிடும் என திட்டமிட்டு ஒருவன் சரக்கை மூட்டைக் கட்டி ஏறக்கட்டினான்.

ஆறுமுகம் அக்கம் பக்க அவன் சமூக சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் அவர்களோடு பெருமாள் சொந்த பந்த சமூக நண்பர்கள் ஒன்றாய் பெங்களூர் சரக்கில் மிதக்க நினைக்கையில் நான் துள்ளியது பிரச்சினை ஆகிடும் கிராமத்தில் என்ற டென்ஷன் அவர்களின் முகத்தில் தெரிந்தது.

அதில் ஒருவன் கொடுத்த ஐடியா.

சரி சரி நாம இப்ப திருவண்ணாமலை கோவில்போயிட்டு வந்து பேசிக்கலாம் என்றான். இது அவர்களுக்குள் கண்ணடிச்சு பேசிய பேச்சாயிருக்குமோன்னு இப்ப யோசிக்கிறேன்.

நான் பிறந்தது வளர்ந்தது பெங்களூர். படித்ததும்ஆங்கில மீடியம். வீட்டில் பேசுவது தமிழ். என்ஜினீயரிங் படித்து ஒயிட் ஃபீல்ட்ல டெக்கி பணி. என்னோடு பணியில் ஒரே‌நாளில் சேர்ந்து என் டீமில் இருக்கும் ஆறுமுகம் மற்றும் பெருமாள் எனக்கு நண்பர்களானது தமிழால் தான். திருவண்ணாமலை பக்கம் சொந்த ஊர் அவர்களுக்கு. அதிர்ஷ்டம் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். பிஜி கூட இருவரும் ஜாயிண்ட் ஆகத்தான் இருக்கிறார்கள். நல்ல நண்பர்கள் இருவரும்.என்னையும் சேர்த்து மூவரானோம்.

ஊர்த் திருவிழா என்றார்கள். நானும் படிப்பு படிப்பு என இருந்து விட்டேன். பக்கத்து
ஓசூர் கூட போனதில்லை. அழைத்தார்கள் . அங்கே அவர்கள் வாழும் ஊரில் இருக்கும் நண்பர்கள் கூட மொபைலில் பேசும்போது நண்பர்கள் ஆகிவிட்டார்கள். சிலர் ஊரிலிருந்து பூ எடுத்து கொண்டு வேனில் பெங்களூர் சிட்டி மார்கெட் சப்ளை செய்ய வரும் போது இவர்களைப் பார்த்து என்னையும் சேர்த்து ” பார்” (ரில்) த்தவர்கள். பெங்களூர் சரக்கில் கொஞ்சம் கிரேசி அவர்களுக்கு. அதனாலேயே மறைச்சு பஸ்ல தெரியாம நாலு புல் பீர் பாட்டில்கள் ஆப் பாட்டில்கள் இத்யாதிகள்.

அவர்கள் ஊரில் பலி வாங்கிய ஆட்டு இறைச்சி கோழி இறைச்சி ஸைடிஷ் அவரவர் வீட்டில் இருந்து வந்தும் சேர்ந்தது. எல்லாம் நான் ஆடும் ஆட்டத்தில் காற்று மண்ணில் நனைந்த வண்ணம் இருந்தது. ஆனாலும் மனித குல தன்மானம் சறுக்கியது எனக்கு சினமே.

எனக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவனாய் இருப்பதில் முழுமை கொள்ள இயலாது தவிக்க தமிழ் தாகம் தீர்த்தவன் பெருமாள். நல்ல தமிழ் அறிவு கொண்டவன்.சொல்லிக் கொடுக்கும் திறமை இருப்பவன். இலக்கணம் வலி மிகு மிகாவிலிருந்து கலிவெண்பா இலக்கணம் வரை அணிகலனோடு கற்றுத்தந்தவன் பெருமாள்.

ஆறுமுகம், பெருமாள் இருவரும் ஊரை வர்ணிக்க வர்ணிக்க எனக்கு ஒரு சேஞ்ச் வேண்டி போக முடிவும் செய்தேன்.

கரகம் குறி மேடை கூத்து ஆர்கெஸ்ட்ரா மஞ்சுவிரட்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் எனக் கூறினார்கள்
அப்படியே முடித்துக் கொண்டு அண்ணாமலையார் கோவில் தரிசனம் மற்றும் கிரிவலம் முடித்து பெங்களூர் வருவதாகப் பிளான்.

அவர்கள் ஊருக்கும் போனோம். போன இடத்தில் எனக்கு நண்பன் பெருமாளுக்கு நடந்த தீட்டுப் பிரச்சினை அதிர்ச்சி தந்தது.

கரகம் எடுத்தார்கள். எனது கேமராவும் எடுத்தது. அது ஆறுமுகம் இருக்கும் நடுத்தெரு வழியாக வந்தது.

பெருமாள் ஊருக்கு தள்ளி இருக்கும் குடியுருப்புகளில் ஒன்றில் இருக்கிறான்.

கரகம் அந்த குடியிருப்பின் உள்ளே போகவில்லை.

இது எனக்கு புரியவில்லை. ஒருவேளை இருட்டியதால் போகவில்லை என சமாதானம் அடைந்தேன்

அடுத்து அந்த ஊர் அம்பிகை பூஜை என்றார்கள். உண்ணாமுலை அம்பாள் பெயர். திரூவண்ணாமலை உண்ணாமுலை க்கு உள்ள பவர் இந்த அம்பாளுக்கு உண்டு என்றார் பூஜை செய்யும் பூஜாரி.

ஆறுமுகம் மூலஸ்தானத்தின் அருகே போனான்.

நான் பெருமாள் கையையிழுத்துக் கொண்டு கோவில் உள்ளே போக எத்தனிக்கும் போது பெருமாள் வெளியே நின்று விட்டான். என்னை மட்டும் உள்ளே போகச் சொன்னான். ஏன் என்று கட்டாயப்படுத்தும் போது பெரியவர் ஒருவர் விளக்கினார். எனக்கு விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி போல் உள்ளம் துடித்தது.

அந்த குடியிருப்பு மக்கள் தீண்டத்தகாதவர்கள். கோவில் உள்ளே வரக்கூடாதாம். வெளியே நின்றே வணங்க வேண்டும் என்பது ஊர் கட்டுப்பாடு என்றார்.

இதுதான் என்னை சூடேற்றியது.இதை நான் பெங்களூர் அலசூர் சோழர் கால சோமேஸ்வரர் கோவிலிலோ அல்லது ஒடுக்கத்தூர் மடத்திலோ இஸ்கான் கோவிலிலோ கண்டதில்லை. நான் ஜாதி தீ மழுங்கியதாய் நினைத்து இருந்தவனுக்கு மலையளவு ஜாதிக் தீ கொழுந்து விட்டெறிவதும் கிராமத்தில் இருப்பதைக்கூட எனக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால்

பெங்களூரில் என்னோட பேண்ட் ஷர்டோ பெருமாளது ஜீன்ஸ் பாண்ட் ஆறுமுகம் போட்டுக் கொள்வதோ ஆறுமுகத்தின் பிங்க் கலர் டீ ஷர்ட் பெருமாள் போட்டுக் கொண்டிருப்பதும் பெங்களூரில் தீட்டில்லை . இப்படி ஒருவர் டிரஸ்ஸை மாற்றிக் கொள்ளும் போதில்லாத தீட்டு மற்றும் ஒருவர் சாப்பாட்டில் இன்னொருவர் கை போட்டு எச்சல் பட்டு பங்குபோடும் போது இல்லாத தீட்டு என பெங்களூரில் இருந்தவர்கள் இங்கு வந்த பிறகு ஊர்க்கட்டுப்பாட்டால் தீட்டாகுதோ?

பெருமாளும் தனது தன்மானத்தை விழுங்கியிருப்பதும், ஆறுமுகம் பெருமாள் நட்பை ஊர்க்கட்டுப்பாட்டில் விட்டுக் கொடுத்திருப்பதும் எனது மாந்த நேய உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறுமுகத்தை விட அந்த ஊர் உண்ணாமுலைத்தாயிடம் பக்தி பெருமாளுக்கு நிறைய. அந்த போட்டோவை ரூமீல் வைத்து ஊதுபத்தி ஏத்தி தினமும் கும்பிடுவான்.ஆனால் பெருமாளை உண்ணாமலை அம்பாளே விரும்பி உள்ளே அழைத்தால் கூட ஊர்க்காரர்கள் அந்த அம்மாவையும் தீட்டு பட்டவளாக்கிவிடுவார்களோ? இது என் கேள்வி?.

ஊர்ப் பெரியவங்க கிட்ட பேசுறேன்னு சொன்னேன். அதற்கும் ஒப்பவில்லை.

நம்மால் ஏன் பிரச்சினை என்று பெங்களூர் புறப்பட தயாரன போதே திருவண்ணாமலை
போகலாம் என ஆறுமுகம் பெருமாள் அவர்கள் நண்பர்கள் முடிவு செய்தே விட்டனர்

“இது ஊர்க்காரங்க கட்டுப்பாடு மணி. நாங்க ஜாதி பார்க்கவில்லை. ஆனா அங்காளி பங்கிளிங்க அப்படியே வளர்ந்துட்டானுக. என்னை மன்னிச்சிடு “என்றான் ஆறுமுகம்.

“அடச்சீ மணி நீ என்ன மனுஷன். நானே பெருசா எடுத்துக்கல. உள்ளே போனாத்தானா அந்தம்மா பார்ப்பாங்க. உள்ளத்தில் பக்தி போதும். நான் பி இ படிக்கறப்ப பெங்களூர் வேலை கிடைக்கறப்ப ரோட்ல நின்றுதான் வேண்டினேன். விட்டுத்தள்ளு மணி. முத முத ஊருக்கு வந்திருக்க. பாரு அவுங்க சமுதாயப் பசங்க எங்க சமுதாயப் பசங்க ஓன்னாத்தானே பனங்கொல்லைல சரக்கடிக்க கூடினோம். ”
இது பெருமாள் ஸ்டேட்மெண்ட்.

“இதுதான் மணி கோவில் என்டரன்ஸ். திருவண்ணாமலை கோவில். உயர்ந்த கோபுரம்.உள்ளே கிளி கோபுரம். கம்பத்து இளையனார் சந்நதி. அடுத்து பிரம்ம லிங்கம் “என பெருமாள் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வோடு விளக்கி வந்தவன் உள்ளே போகலாம் என்றான்.

” இந்த உண்ணாமுலை ஐ நீ பார்க்க அனுமதி உண்டா “என்றேன் பெருமாளிடம்.

“உஷ். இது சர்கார் கோவில். சாதி பார்க்க சட்டம் இடம் தராது.” இது ஆறுமுகம் ஸ்டேட்மெண்ட்.

“ஆக சர்க்கார் கோவில் உண்ணாமுலை பெருமாளை உள்ளே விடுகிறாள். இவர்கள் வாழும் கட்டிக்காத்துபட்டி உண்ணாமுலை பெருமாளை உள்ளே அனுமதிக்க மாட்டாளோ”

எனக் கூவினேன் ஆத்திரத்தில். கோவிலுக்கு வந்த வெள்ளைக்காரியிலிருந்து எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்த்தார்கள். ஆனாலும் கவலைப்படவில்லை.
“பெருமாள் இதோ உன்னால தமிழ் கற்றவன் நான். நீ தந்த தமிழாகவே உண்ணாமுலைக்கு ஓர் அறைகூவல் . உனக்கு பிடிச்ச எழுசீர் பா விலேயே படையல்”

மைக் இல்லாமலே கூட கிளி கோபுரம் பட்டு ஏதிரொலித்தது எனது வார்த்தைகள். மேலும் ஒரு ஆக்ஞை வேறு எடுத்தேன்.

இதுக்கு அந்தம்மா பதில் தரும் வரை இந்த ஆலயத்துள் நுழைய மாட்டேன் . இது ஊண்ணாமலையம்மன் மீதாணை ” என்று

சொல்லி ஆசுகவியாக அள்ளித் தெளித்து திருவண்ணாமலைஆலயம் போகாமல் கிரிவலம் வராமல் நேரே பெங்களூர் பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டேன் பிடிவாதத்தோடு.

அந்த எழுசீர் பா உண்ணாமுலை காதுக்கு போனதோ இல்லையோ உங்கள் பார்வைக்கு என் மீது தவறில்லை என உறுதி கொள்ள

அண்ணாமலையின்ஆலயம் நுழைந்து
அக்னி தலத்தில் ஆக்ஞையாக

கண்ணாத்தா நீ கட்டிக்காத்து
பட்டிக் கருணை காட்டாயோ

திண்ணன் கொண்ட நண்பன் பெருமாள்
தீட்டாம் உன்னை நெருங்கினால்

எண்ணிப் பார்த்தவன் எட்டிப் பார்க்க
ஏனிந்த ஊரார் விடுவதில்லை

திண்ணையில் நின்றால் தீண்டிட முனைந்தால்
தீட்டென தெருவினில் வைத்தார்கள்

மண்ணில் பிறந்து மண்னுள் போகா
மக்கிடா மாந்தரா அங்கிருப்போர்?

உண்ணாமுலையே உன்னைப் பார்க்க
உள்ளூர் ஆலயமில்லையெனில்

பண்ணாயிரங்கள் பாடிய உன்னை
பார்ப்பதில் பொருள் நான் பெறுவதென்ன?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *