தீவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,129 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“ரமணா என்ன யோசிச் சிட்டிருக்கே!” என்ற கோபா லின் குரலில் திடுக்கிட்டவன் போல நினைவு கலைந்து அவனைப் பார்த்தான் ரமணன்.

“வந்து ஒரு வாரமும் ஆகல்ல. ஒவ்வொரு நாளும் இப்படி யோசிச்சிட்டிருந்தா எப்படி? வீட்டு யோசனை தானே…”

கோபாலின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் வெறுயைாகத் தலையை அசைத்தான் அவன்.

“சீக்கிரமாப் புறப்படணும்” என்று சொல்லியவாறே வெளியே அவசர அவசரமாகப் புறப்பட்டான் கோபால். ரமணன் மணியைப் பார்த்தான். எட்டு மணி. நாராயணன் இன்னமும் தூக்கத்திலிருந்து எழுந் திருக்கவில்லை . ஸ்ரீதரன் ஏழு மணிக்கு எங்கேயோ ஒரு வரைப் பார்க்க வேண்டுமென்று கூறிவிட்டு நேரத்துடன் புறப்பட்டுச்சென்று விட்டான். வெறுமை பக்கென்று தன்னைச் சூழ்ந்து கொண்டாற் போல உணர்ந்த ரமணன் தலையை மெதுவாக அசைத்தவாறே எழுந்து குளிய லறைக்குச் சென்றான்.

நான்கு அடுக்குகள் கொண்ட தொடர் மாடி வீடு. இது இரண்டாம் தளம். மூன்று தனித்தனி வீடுகள். சமையல்கட்டு, படுக்கை அறை, குளியலறை, விசாலமான முன் பகுதி. பின்புறம் தாராளமான கம்பி அடைப்புப் போட்ட சாமான் அறை. இப்போது அதுவும் இன்னொரு படுக்கையறையாக இவர்களால் மாற்றப்பட்டுவிட்டது. வாடகை ஆயிரத்து அறுநூறு ரூபா. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் முழு நேரச் சமையல் இவர்கள் நாலுபேரும் சேர்ந்து. மற்ற நாட்களில் இரவிலே மட்டும். நாராயணனும் கோபாலும் அருமையாகச் சமையல் செய்வார்கள். ருசியும் மணமுமான சமையல். கோபாலின் ரசத்தை மட்டும் ஊற்றிக் கொண்டு நிறைவோடு சாதத்தைச் சாப்பிட்டு முடித்து விடலாம்.

ரமணனின் சித்தப்பாவின் சிபாசிசு மூலமே கோபால் அந்த இடத்தை ரமணனுக்கு வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தான். சித்தப்பாவும் கோபாலைப் போலவே வங்கி ஊழியர்.

முகத்தை அலம்பிக் கொண்டு வெளியே வந்தவனின் மனதிலே பளீரென்று வீட்டு ஞாபகம். வீட்டினது கிணற்றடிப் பக்கம் விசாலமானது. தளதளவென்று கண்ணுக்குப் பசுமையாக வாழை மரங்கள், காய்களும், கன்றுமாய், எப்போதும் குலை தள்ளியும் பிஞ்சி சிலிர்த்தும், காயும் பழங்களுமாகவே சுமந்து நிற்கின்ற வாழைமரங்கள். இன்னும் அருகே வெள்ளைப் பூக்களைச் சிலிர்த்தும் அடுக்கில் நிற்கிற செங்கரும்புகள். கொஞ்சம் தள்ளி மஞ்சள் குளித்து முகம் மினுக்கி பூவோடு பச்சை இலைகளால் தம்மை மூடியிருக்கின்ற சூரியகாந்திச் செடிகள், “அம்மா…” என்று அழைக்கின்ற கன்றும் பசுவும், சுற்றிக் கேட்கிற காக்கை குருவிகளின் லயந்தவறாத சத்தங்கள், உடலை நுளைத்து, வளர்த்த நாய்க்குட்டியைப் போல சுற்றிச் சுற்றி வருகின்ற இனிதான காற்று.

“ரமணா …”

நாராயணனின் குரல் நினைவுக்குள் கல்லென வீழ்ந்தது. புரண்டு படுத்தவாறே, “டைம் என்ன? எட்டு ஆச்சுதா?” என்றார்.

மணியைப் பார்த்தான். “எட்டு நாற்பது.”

“அடடா” என்றவாறே பரபரப்பாக எழுந்தார்.

“இன்னைக்கு எட்டரைக்கே ஆபீஸ்ல நிக்கணும்…”

வேகமாகக் குளியலறைக்குள் நுழைந்தார் அவர்.

முதல் நாளன்று இந்த வீட்டுக்குள் நுழைந்து கோபாலுக்கு அருகே சுவர் ஓரமாகப் படுத்த போது ரமணனுக்கு தூக்கமே வரவில்லை . மூச்சு முட்டுகிறாற் போல இருந்தது. புரண்டு படுத்தான். சுவர்ப்பக்கம், பார்வை திணறுகிறாற் போல இருள் அமுக்கிற்று. வெளியே கடாமுடா என்று காதுகளை அதிர வைக்கின்ற முரட்டுச் சத்தங்கள். அம்மா வீட்டிலே தாய்க் கோழிகளையும் குஞ்சுகளையும் கூட்டுக்குள் இரவு வேளையில் கூட்டினால் மூடி வைக்கின்ற போது அவனையறியாமலே அவனுக்கு மூச்சுத் திணறும். புரண்டு புரண்டு படுத்தும் நீண்ட நேரத்திற்குப் பின்னரே தூக்கம் வந்தது. வீட்டில் நேரம் பார்க்க வேண்டாம். கண்ணை விழிக்கிறபோதே சேவல் கூவிக் கொண்டிருக்கும். விடிய எழுந்ததும் கோபால் அவனைப் பார்த்தான்.

“ஏன் தூங்கவில்லை? கண் ரெத்தமாய்ச் சிவந்திருக்கு ஏன்?”

ரமணன் எதுவுமே பேசவில்லை . மீண்டும் கோபால் இரக்கத்தோடு, “இதோ பாரப்பா இது மாதிரி ‘ரூம் உனக்குக் கிடைச்சது பெரிய அதிர்ஷ்ட ம். பல இடத்தில் இந்த ஸ்குயருக்குள்ளை ஆறு பேர் தூங்குவாங்க…. அதுவும் பெரிய ராஜாக்கள் நவரத்னக் கட்டிலில் படுத்திருக்கிறாப் போல…”

அதைக் கேட்டதும் ரமணனின் மனதுள் சுண்டிவிட்டாற் போன்ற சிரிப்பு, கோபாலோ ரொம்ப நிதானமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். ரமணனுக்கு தனக்குச் சிரிப்பு வந்ததை எண்ணியபோது மனதுள் என்னவோ செய்தது. மறுநாளும் அடுத்த நாளும் தனிமையும் வெறுமையும் இருளிடையே அமுக்கியபோது அவன் களைத்தாற் போலத்துங்கி விட்டான்.

“என்னப்பா…. இன்னுமே போகல்லையா?”

நாராயணனின் குரல் தோளில் அழுத்திற்று. “இல்லை …”

“அதுதான் ஏன்?’

குரலிலே துலக்கமான ஆச்சரியம்.

“நீங்க வந்தாப்புறம், ரெண்டு பேருமாச் சேர்ந்து ஒண்ணாவே சாப்பிடப் போகலாம்னு…”

குறுக்கிட்டார் நாராயணன்: “பாரப்பா டவுணுக்கு வந்திட்டே, இந்தக் கிராமத்துப் பழக்கத்தை விட்டிடு. நம்ம நம்ம வேலையை முதல்ல கவனிக்கணும். அப்புறம் தான் அடுத்தவன். போய்ப்பாரு. இந்நேரம் சாம்பார்ல வெந்நீர் ஊற்றி இருப்பாங்க…”

ரமணன் பேச்சின்றிப் புறப்பட்டான்.

“அது சரி மெஸ்சுக்குக் கட்ட பணங்கொண்டு போறியா?”

“கொண்டு போறேன்… சாயந்தரம் கட்டிட்டுத்தான் வருவேன்…”

அலுவலகத்தில் இன்றைக்கு, மனதிலே அளவு மீறிய சந்தோஷம். ஊரின் பூங்குளத்திலே அவனும் நண்பர்களும் களைப்பு மீறிட நீந்தி விளையாடினாற் போல. இன்றைக்கு ஐந்தாறு பேர் அவனோடு வந்து பேசினார்கள். அலுவலக ‘கான்டீனி’ல் தேநீர் அருந்தினார்கள். இருவர் பணத்தை எடுத்தபடி மற்றவர்களைப் பார்த்த போது ஒருவன் பணங்கொடுத்தான்.

“நான் கொடுக்கிறேன்…” என்றான் ரமணன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பின் “நாளைக்கு” என்றனர்.

“என்ன உதவி வேணுமின்னாலும் எல்லாருமே ‘ஹெல்ப் பண்ணுவோம். வந்திடணும்…”

“சரி…” ரமணன் தலையை ஆட்டினான்.

அலுவலகம் முடிந்ததும் அவசர அவசரமாக பேருந்தில் ஏறினான். மூச்சுத் திணறிற்று. உச்ச நேரம். வேர்வை பொங்கிற்று. கையில் உள்ள தோற்பையை மாற்றிக் கொண்டு முகத்தைத் துடைத்தான். நாற்பது நிமிஷத்தின் பின் சிரமப்பட்டு இறங்கினான். இளைஞன் ஒருவன் பரிதாபகரமாக அவனைப் பார்த்தான். இறங்கியவனின் கை லேசாயிருந்தது. பையைப் பார்த்தான். இரண்டாக லாய் பிளந்திருந்தது. அதிர்ந்து போனான். விம்மல் சுழித்து அழுகை விம்மிற்று. பையினுள் எதுவுமே இல்லை. நெஞ்சு கனக்க வீட்டிற்கு வந்தான். முகத்தைப் பார்த்துவிட்டு உடனே நாராயணன் காரணம் கேட்டார். சொன்னான்.

வெறுமையாகச் சொன்னார்.

“காலையில் சொல்லணும்னு நினைச்சேன். ப்ப்ச்…”

ஸ்ரீதரன் சிரிப்போடு அவனைப் பார்த்தான்.

“பாரதிராஜாவோட ‘கிழக்கே போகும் ரயில்’ பார்க்கல்லையா நீ?”

ரமணனுக்கு நெற்றிப் பொட்டுகள் நொந்தன. “அதில பாரு, சுதாகர் பட்டிக்காட்ல இருந்து பையோட மெட்ராஸ் வாறாரு. ஜனக்கூட்டத்துக்கு நடுவுல இடிச்சு நெருக்கிட்டு வருவாரு… ரோடுக்கு வந்திடுவார். பையைப் பார்ப்பாரு. அங்கே பையே இல்லை… வெறும் மேற் துண்டு மட்டுந்தான் இருக்கும்…” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.

நாராயணன் எழுந்து பின் பக்கமாகப் போனார்.

கிராமத்தில் ஒருவரை ஒருவர் கண்டால் புன்னகை செய்வார்கள். நின்று பேசுவார்கள். அறியாத முகமாயினும் கொஞ்ச நேரத்திலேயே அறிந்த முகமாகி விடும். எதையாவது கேட்டுச் சிரிப்பார்கள். ரமணனுக்கு இங்கே அப்படித் தெரியவில்லை. மூன்றுபேர் சேர்ந்து போனாலும் தனித் தனியாகப் போவதைப் போல இருக்கிறது. சனக்கூட்டத்தைப் பார்த்தாலும் அப்படித்தான். ஒவ்வொரு முகம், ஒவ்வொரு நடத்தை, ஒவ்வொரு பேச்சு. அவனுக்கு நினைக்க நினைக்க குழப்பமாக இருந்தது. அறையிலே நான்கு பேர். அவனோடு நெருக்கமாகப் பேசிப் பழகுபவன் கோபால் மட்டுந்தான். வங்கியில் வேலை பார்ப்பதைவிட தொழிற்சங்க வேலைகள் என்று அலைந்து கொண்டிருப்பவன். ரமணனோடு அவன் இப்போது ஆற அமரப் பேசுவதற்கே நேரம் இல்லாதிருந்தான்.

அவனே இதைச் சொன்னான்.

எதிர்வீட்டுக்காரர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர். ஒரு நாள் தன்னைப் புன்னகையோடு அறிமுகம் செய்து கொண்டார். வெங்கடாசலம். மகள் பி.எஸ்.ஸி. படித்துக் கொண்டிருக்கிறாள். பையன் ப்ளஸ் டூ. ஒரு ஞாயிற்றுக் கிழமையின் போது தற்செயலாக இருவரையும் மாடிப்படியில் கண்டது. தலை குனிந்தபடியே ஒதுங்கிச் சென்று விட்டார்கள்.

இடதுபக்கம் மார்வாடி குடும்பம். கதவைத் திறந்த போது சிவப்பான வாட்டசாட்டமான ஆள், தன் வீட்டுக்கதவைத் திறந்தபடியே வெளியே வந்தார். ரமணனைக் காணாதவரே போல விறுவிறுவென்று மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தார். இன்னொரு நாள், ரமணன் மட்டும் தனியே இருந்தான். திடீரென்று மூர்க்கமான குரல்கள், பெண்களது வலிய குரல்கள். கதவைத் திறந்தான். குபீரென்ற சத்தம் காதுகளை அறைந்தது. எதிர்வீட்டுப் பெண்கள் இருவரையும் அன்றுதான் முதற் தடவையாகக் கண்டான். மார்வாடிப் பெண்ணைப் போலவே திருமதி வெங்கடாசலமும் தடித்துப் பருமனானவள். ஆனால் கொஞ்சம் மங்கிய நிறம். இருவர் பேசுவதையும் காதுகொடுத்துக் கேட்கவே முடியவில்லை.

மார்வாடிப்பெண் பேசியதில் கெட்ட வார்த்தைகள் மட்டும் புரிந்தன. திருமதி. வெங்கடாசலம் பச்சை பச்சையாகத் திட்டினாள். அவனுக்கு வயிறு குமட்டிற்று. லேசாகச் சத்தம் ஓய்ந்தது.

ரமணன், திருமதி. வெங்கடாசலத்தைப் பார்த்தான். “அயலவங்க எதுக்குச் சண்டை போட்டுக் கொள்ளணும்… விட்டிடுங்க” என்றான். அந்த அம்மாவின் கண்களில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

“ஆமா இவரு சொல்ல வந்திட்டாரு… அவள் இவருக்கும் சொக்குப் பொடி போட்டிருப்பா போல…” கதவை அறைந்து மூடினாள் அவள். அந்தக் கதவு தனது முகத்தில் எகிறித் தள்ளினாற்போல அதிர்ந்து போனான் ரமணன். இனி உலகமே கவிழ்கிறாற் போலச்சத்தம் கேட்டாலும் வெளிக் கதவைத் திறப்பதில்லை என முடிவு செய்தான்.

உள்ளே போயிருந்து அம்மாவுக்கு கடிதம் எழுதினான். கடிதத்தை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டான். இன்றைக்குத்தான் தபால் அலுவலகத்தைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். கொஞ்சத் தூரம் நடந்தான். தென்படவேயில்லை. வீதியோரம் வேர்க்கடலை விற்பவனிடம் கேட்டான். “தெரியல்ல” என்றான் இறுக்கமான குரலில். இன்னும் இருவர் அவன் அருகே மௌனமாக நின்றனர். ரமணனுக்கு என்னவோ போலாயிற்று. கிராமம் மீண்டும் நினைவு வந்தது.

அங்கே யார் வந்தாலும் கூட்டிச் சென்று உரிய இடத்தில் விட்டுச் செல்லும் சிறுவர்கள்.

நான்கு அடிகள்கூட நடந்திருக்க மாட்டான், நின்றான். இடது பக்கத்தில் வாசலில் பெரிய தபால் பெட்டியுடன் புதிதாக வெள்யைடிக்கப்பட்ட தபால் அலுவலகம்.

ரமணன் வேர்க்கடலை விற்பவனை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான்.

ரமணனுக்கு வயிற்று வலி தாங்கமுடியவில்லை. அடி வயிற்றைப் பொத்திக் கொண்டு அவஸ்தைப் பட்டான்.

பக்கத்திலிருந்து சுகுமாரன், “என்ன?’ என்றார். அவனால் பேசவே முடியவில்லை. உயிரைப் பிழிகிறாற் போன்ற வேதனை. கண்ணீர்த் துளிர்த்தது. சுகுமாரன் எழுந்து போனார். கொஞ்ச நேரத்தில் அலுவலகப் பணியாளருடன் வந்தார், – “வாங்க ஸார் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிடறேன்” என்றவாறு அவனது தோளில் தொட்டார் பணியாளர். மெல்ல எழுந்தான். சுற்று முற்றும் பார்த்தான். எல்லாரும் தமது வேலைகளில். சுகுமாரன் சொன்னார்: “நான் லீவ் சொல்லிடறேன். எதுக்கும் இந்தப் பேப்பர்ல ஒரு ‘சிக்னேச்சர்’வைச்சிடு… எனக்கு முக்கிய பைல் இருக்கு. இப்போ முடிக்கணும்… வயிற்று வலிதானே ஒரு வேளை மாத்திரையோட குணமாயிடும்…”

அவர் அப்படியே நின்றார்.

சாயந்தரம் வரை வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் ரமணன். வீட்டிற்கு முதலில் வந்தவன் ஸ்ரீதரன். படுத்திருந்த ரமணனைப் பார்த்து, “ரமணா என்னைத் தேடிக்கிட்டு பாஸ்கரன் வருவான். நான் ‘பிலிம் சேம்பர்ல’ அவனுக்காக வெயிட்’ பண்றதாச் சொல்லிடு… தூங்கிடாதை” என்றவாறு அவசர அவசரமாக வெளியில் போனான்.

கொஞ்ச நேரத்தில் நாராயணன் வந்தார். “என்ன ஆச்சு?” சொன்னான். “மாத்திரை வாங்கித் தர்றேன். சில்லறை வைச்சிருக்கியா? என்கிட்ட சில்லறை இல்லை …”

சிரமப்பட்டு எழுந்து சில்லறையை எடுத்துக் கொடுத்தான். மாத்திரைக்கும் வயிற்றுவலி கேட்கவில்லை. தன் வேதனையைக் காட்டிக் கொள்ளாமல் வயிற்றை அமுக்கியபடியே கிடந்தான்.

நாராயணன் வெளியே போய்விட்டார். ஸ்ரீதரன் உள்ளே வந்தான். படுத்திருந்த அவனை வினோதமாகப் பார்த்தான்.

“பாஸ்கரன் வந்தானா?’

“இல்லை ….”

“மடைப்பயல், அருமையான ‘ஷோ’. ‘மிஸ்’ பண்ணிட்டான்.”

பிறகு எதையோ யோசித்தபடி, “கோபால் சார் இன்னும் ஊரிலையிருந்து வரேல்லையா?” என்று கேட்டான்.

“இல்லை …”

புரண்டு படுத்தான் ரமணன். அவனது விரலைப் பார்த்தான் ஸ்ரீதரன். பிறகு தணிவான குரலில் அவனிடம் கேட்டான்:

“ரமணா ஒரு ஹெல்ப் பண்ணணும்…”

தலையை நிமிர்த்தி ரமணன் ‘சொல்லுங்க? என்றான்.

“பணம் உங்கிட்ட இருக்கா?” –

ரமணன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். ‘ஐந்நூறு ரூபா வேணும். ‘அர்ஜென்டா’ தேவை. ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்திடுவேன்…’

விரக்தி துளிர்த்தது ரமணனின் முகத்தில்.

“எனக்கு உடம்பு முடியல்ல, டாக்டர்கிட்ட போகணும். சுத்தமாகப் பணம் இல்லை… கோபால் அண்ணன் தான் வரணும்…”

இன்னும் நம்பிக்கையிருந்தது ஸ்ரீதரனின் பார்வையில். “இல்லேன்னா சொல்றே?”

“ஆமா…”

“விரல்ல பாரு….”

திடுக்கிட்டான் ரமணன். கை விரலில் இருந்த மோதிரம் மங்கலாக மின்னிற்று. அம்மா காதின் அருகே கிசுகிசுத்தாள்: “ரமணா, இது தாத்தாவோட மோதிரம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை விரல்ல இருந்து கழற்றிடாதை…”

“காலையில் ஏழு மணிக்கே மார்வாடி கடையில வைச்சிடலாம். ஆயிரம் ரூபா தருவான். நானே டாக்டர் கிட்ட உன்னைக் கூட்டிப் போயிடறேன். நானே வட்டி கொடுத்திடறேன்…”

“வேணாம்.”

ரமணனுக்கு வயிற்றுள் தசைகள் முறுகின. வேதனையோடு வயிற்றை அழுத்தியபடி முனகினான்.

“பணமில்லாதவங்க ஜி.ஹெச் சில போய்ப்படுத்திட வேண்டியதுதானே… ரூமில எதுக்கு மற்றவங்களுக்கு தொல்லை கொடுக்கணும் ” வெறுப்போடு வெளியேறினான் ஸ்ரீதரன்.

மூன்று நாட்களாக கட்டிலிலே கிடந்தான் ரமணன். யாருமே அவனை வந்து பார்க்கவில்லை. சுகுமாரன் கூடவரவில்லையே என்று நினைத்தபோது மனம் கனத்தது. அம்மா ஞாபகத்தில் வந்தாள். வீட்டில் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவார்கள். அனைவரும் வரும்வரை காந்திருப்பாள். அடிக்கடி அவள் சொல்லுவாள்: “எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பங்கிட்டு உண்ண ணும்…”

புரண்டு படுத்தான் ரமணன்.

அடுத்த நாள் கோபால் மட்டும் வந்து டாக்டரிடம் கூட்டிப் போகாமல் இருந்திருந்தால் தனது கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்த போது உடம்பு நடுங்கிற்று அவனுக்கு,

மனதுள் இப்போது நிறையக் குழப்பம். அப்படியே தூங்கிப் போய் விட்டான்.

தனது மூன்றாவது மாத வாடகைப் பணமான நானூறு ரூபாவை கோபாலனிடம் கொடுத்துவிட்டு, “உங்களை ஒன்று கேட்கணும்” என்றான் ரமணன்.

“கேளு?” ஆச்சரியம் மேலோங்கிற்று கோபாலிடம்.

“காலைலேயும் சாயந்திரத்திலும் ‘காம்பளான்’ குடிச்சால் உடம்புக்கு நல்லதின்னு டாக்டர் சொன்னார் ‘காம்பளான்’ வாங்கிட்டேன். இந்தக் குக்கரைத்தான் ‘ யூஸ்’ பண்ணப் போறேன். அதுதான்…”

“கிரஸின் செலவு தொகைதானே கேட்கிறே? மாசக் கடைசியில சொல்றேன்…”

மாலையில் அவன்தான் வழமை போல முன்னதாகவே வீடு திரும்பி இருந்தான். கையில் இரண்டு ஆப்பிள், ஒன்றைக் கூடையில் வைத்தான். மற்றதை அறுத்துத் துண்டு துண்டாகச் சாப்பிட்டான். சுகந்தமும் இனிய ருசியும் மனதை இதப்படுத்திற்று.

வெளியே கதவு திறந்தது. நாராயணன்.

“என்ன பண்றே ?”

“ஒண்ணுமில்ல…”

உள்ளே போய் முகத்தைச் சுருக்கியபடி படுக்கையில் சரிந்தார் நாராயணன். வழமையாக அவர் வந்ததும் தூங்கமாட்டார்.

ரமணன் குக்கரைப் பற்ற வைத்தான், ‘காம்பளா’னை சாவகாசமாகக் கரைத்துப் பருகினான் இனிய ருசியை அனுபவித்தபடி.

ஞாயிற்றுக்கிழமை அவசரமாக ‘காம்பளான்’ குடித்துக் கொண்டிருந்த ரமணனைப் பார்த்த கோபாலின் பார்வையில் இரக்கமும் வியப்பும் இருந்தன.

“அவசரமாக எங்கே புறப்படறே?” “முக்கியமான ஆளைப் பார்க்கணும். ராத்திரியே சொன்னேன்ல. எனக்கு சாப்பாடே வேணாம்…”

கோபால் ஒன்றுமே பேசவில்லை. ரமணன் வெளியே இறங்கினான்.

இன்றைக்கு காசினோ தியேட்டரில் ‘பென்ஹர்’ படம், அதைப்பார்க்க வேண்டுமென்று எவ்வளவோ நாளாக ஆசைப்பட்டிருந்தான். இன்று எப்படியும் பார்ப்பதென்று தீர்மானம். காலையில் நன்றாக நெய்த்தோசை சாப்பிட வேண்டும். அப்புறம் மற்ற விஷயங்களை யோசிக்கலாம்.

எதிரே பேருந்து. அவன் ஏற வேண்டியதுதான். அவசரமாக நடந்தான். முன்னே ஒரு வயதானவர், தளர்ந்த குரலில், “தம்பி போஸ்ட் ஆபீஸ் எங்க இருக்குது?’ எனக் கேட்டார்.

“தெரியல்ல…” என்றவாறு ஓடிப்போய் பேருந்தில் ஏறிக் கொண்டான் ரமணன். அவனது மனம் முழுவதும் ‘பென்ஹர்’.

– 1996

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *