கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 1,425 
 

‘எல்லோரும் ஓர் குலம்
எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

அந்த மூன்று நாய்களைப் பொறுத்த மட்டில் ‘இது’ பொய்தான். அவை ஒன்றையொன்று பார்த்து வாள் வாள்’ என்று குரைத்துக் கொண்டிருந்தன.

அவை – கறுவல், வெள்ளை, புள்ளி. கறுவல் கொஞ்சம் சோம்பேறி ‘ தான். குரைக்கவும் பலமில்லை, மற்றவைகளைப் போல விழுந்தடித்து, வாயிலே கிடைப்பவற்றை உண்ணவும் முடியாமை. வெள்ளை நாய் தான் அந்த இரண்டிற்கும் தலைவன். புள்ளி தந்திரசாலி . வெள்ளைக்கு வாலை ஆட்டும்; கறுவலைக் கண்டால் மெல்ல உறுமும். கடிக்கமாட்டாது. நல்ல நாய்.

அந்தச் சந்தியில் தெரு விளக்கில் அம்மூன்று நாய்களும் தங்கள் நைட்டியூட்டி யைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன. வெள்ளை நாய் லீடர் !’. யாரோ ஒரு மனிதன் இரண்டாம் சாமத்தில் படம் பார்த்துவிட்டுப் பிரதான வீதிவழியே ‘விர்’ரென்று சைக்கிளிற் பறந்து வந்து கொண்டிருந்தான் . அவன் பார்த்த படத்தின் பாட்டை உதடுகள் மெல்ல – ஆனால் சைக்கிளின் வேகத்திற்கும் மேலாகப் பாடிக் கொண்டிருந்தன.

வெள்ளை நாய்க்குப் பொறுக்கவிலலை. தன்னுடைய ஆட்சியில் வேறு ஜீவன் குறுக்கிடுவது போன்ற உணர்வு. உடனே, வந்து கொண்டிருந்த சைக்கிளை முன்புறமாகப் பாய்ந்து மறித்தது. மனிதன் பக்கத்து வேலியோடு மோதிய படி நினறான். அவனுக்குப் பயம். கால்களைத் தூக்கிக் ‘ஹான்டிலில் வைத்து வேலி மரக்கிளையைத் தாவிப் பிடித்தான்.

வெள்ளை நாய் என்னை வீரமற்றதா? துணிச்சல்தான் இல்லையா? புள்ளி ‘வொள்வொள்’ என்று உரத்துக் குரைத்தது. கறுவல் பாவம் ! விளக்கொளியில் வீதியில் விழுந்த தனது உடலின் நிழலில் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. கறுப்பின் பச்சை வெளிச்சத்தில் கறுப்பாகவே விழுமா?

மனிதன் அலறினான். வெள்ளைநாய் அவனைக் கடித்துவிட்டது. இரத்தம் பீறிடத் தொடங்கியது. புள்ளி இடத்தைவிட்டு நழுவி விட்டது. கறுவல் இருந்த பொந்தில் மறைந்து நின்று கொண்டு நடப்பதைக் கவனித்தது. இருளில் இருந்து ஒளியைப் பார்க்கலாமா? ஒளியில் இருந்து இருளைப் பார்க்கலாமா? கறுவலுக்கு ஏதோ தெரிந்திருக்க வேண்டும்.

மறுநாட் காலை மூன்று நாய்களுஞ் சந்தித்தன. அதே இடம். ஆனால் தெருவிளக்குக்குப் பதிலாக உலக விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

காலையிலே வேலைக்குச் செல்வோருடைய அரவம், மூன்று நாய்களுக்கு சங்கடம். வெள்ளை வழமை போல் ‘லீட்’ பண்ணியது : சந்தியின் முனையில் இருக்கும் தேநீர்கடையின் பின்புறமாக நழுவின மூன்று நாய்களும். பக்கத்துக்கிணற்றிலிருந்து வந்து பாய்ந்த அழுக்கு நீர் மண்ணுடன் கலந்து, துர் நாற்றமடித்தது. வெள்ளைக்கு என்னவோ போல இருந்தது. ஊத்தை பிடித்து விடுமோ என்ற பயமாக இருக்கலாம்.

மனிதன் சாப்பிட்டு விட்டு எச்சில் இலையைக் கொண்டு வந்து பின் சாக்கடையில் வீசி எறிந்தான். மிச்ச உணவு சிதறிவிட்டது. வெள்ளைநாய் அவனைப் பார்த்து உறுமியது. புள்ளி வாலையாட்டியபடி இலை போய் விழுந்த இடத்தை நாடி ஓடியது. மிச்ச உணவிற் பெரும்பகுதி எச்சில் இலையுடன் ஒட்டியிருக்குமா?

கறுவல் அந்த இரண்டு நாய்களின் உண்ணும் அழகைப் பார்த்திருந்தது. அதற்குக் கடும்பசி, தனக்குச் சொண்டு இல்லையே என ஏங்கியது. விழுந்து சிதறி விட்டிருந்த உணவுத்துணுக்குகளை நாநுனியால் ஒட்டணித்தது. பசி அடங்கவில்லை; விரக்தியும் உக்கிரமும் பொங்கின.

வாசலைப் பின்பாகத்தால் மறைத்து மறித்தபடி வெள்ளை, புள்ளியையும் விரட்டிவிட்டு உணவு உண்பதை ரசித்த படி, நாநீர் சிந்த இளைக்கத் தொடங்கியது.

‘படீர்’

‘கீக்!’

கறுவல் நொண்டிப்பாய்ந்தது. வெள்ளையையும், புள்ளியையும் காணவில்லை. எச்சில் இலையும் கிடந்த இடத்தில் இல்லை .

அவை வீதிமுனையில் நின்று உண்டன. அது கறுவலுக்கு நன்றாகத் தெரிந்தது. அழாத குறையாக, வழங்க மறுத்த பின் காலைத் தூக்கியபடி ‘நொண்டி நொண்டி’ நடைபோட்டது.

புள்ளியும் வெள்ளையும் மறைந்துவிட்டன.

கறுவலுக்கு அழுகையே வந்துவிட்டது! விளக்குக் கம்பத்துடன் தலையைச் சாய்த்த வண்ணம் வலித்துக் கொண்டிருந்த காலை ஒரு கல்லில் வைத்துச் சுகப்பட்டது.

‘சரக்’

“ஹீஹீ…’

கறுவலின் முதுகோடு உலர்ந்து ஒட்டியிருந்த வயிற்றில் பெரிய செங்கற்கட்டி வந்து விழுந்தது.

“நாய்ச் சனியன்களாலை பெரிய தொல்லை” கல்லால் எறிந்த மனிதன் தன் காலில் புதிதாகக் கட்டுப் போட்டிருந்த காயத்தில் வேட்டி உரசாமல் தூக்கியபடி, மறுபடியும் கடைக்குட் சென்று விட்டான்.

‘அட கடவுளே என்னை ஏன் நாயாகப் படைத்தாய். வெள்ளையானையைப் போல வாய்க்காரனாகவாவது படைக்கக்கூடாதா?

கடவுளை இப்படித்தான் கறுவல் நினைத்துக் கேட்டிருக்கும்.

கறுவல் சிந்தனை செய்தது!

அதைக் கெடுப்பது போல அடிபிடி! வீதியிலே ஒருவனைப்புரட்டிப் புரட்டி இரண்டு பேர் அடித்தார்கள். உதைத்தார்கள்.

கறுவல் இடத்தைவிட்டு நழுவி, கிணற்றுக் கட்டின் அருகில் போய்ப்படுத்தது. பக்கத்திலே ஊர்ந்து வந்த நீரிலே ஒரு செம்மை. துணுக்குற்றுப் பார்த்தது. அதனுடைய காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, ஆஸ்பத்திரிக்குப் போகலாமா ? அனுமதியில்லையே!

கறுவலுக்கு நரம்புவலி ஏற்பட்டுவிட்டது. நூற்றுக்குக் குறையாத மாட்டிலையான்கள் தாம் இப்போது கூட்டாளிகள். வெள்ளையையும் புள்ளியையும் கறுவல் மறந்தே போய்விட்டது.

கறுவல் சிந்தனை செய்தது! கொஞ்ச நாட்கள் கழிந்தன! அதாவது கறுவலின் காலில் ஏற்பட்ட புண்ணில் இருந்து அழுகல் மணம் குடலைப் புரட்டத் தொடங்கிவிட்டது. அதனால் எல்லோரும் அதை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

விரட்டினார்கள்! – கறுவல் ஓட முயன்றது.

எறிந்தார்கள் – அப்பொழுது தப்ப முனைந்தது.

அத்தனையிலும் தோல்வி . காயங்களின் மேல் காயம். வேற்று மனிதர்கள் அதைச் சொல்லி அழைப்பது அதற்கு விளங்காமல் இருக்க நியாயமில்லை.

கறுவல் சிந்தனை செய்தது! அந்தச் சந்தியை விட்டு எங்கும் போகவில்லை. ஆனால்…

எல்லோரும் அதனைப் போக்காட்ட முயன்று தோல்விகண்டார்கள்.

“என்னடா! இந்தச் சொத்தி நாய்க்கு இவ்வளவு திமிர் எண்டால் மனிசருக்கு எப்பிடியிருக்கும்?”

யாரோ கூறியபடி கல்லால் அடித்தார்கள்.

கறுவல் முதன் முறையாக உறுமத் தொடங்கியது. பின்புபடிமுறையாகத் தனது ‘வர்க்கத்தொழிலை நடத்த ஆரம்பித்தது. அதனைக் கண்டு மனிதர்கள் அஞ்சினர் சிறுவர்களின் நடமாட்டம் துண்டாக இல்லை. பெரியவர்களும் இரண்டாவது சாமப்படம் பார்க்கப் போவதும் இப்பொழுது அருமை.

கறுவல் உழைப்பால் உயர்ந்தது, அதற்கு முடிசூட்டிக் கௌரவிக்கத்தான் வெள்ளையும் புள்ளியும் இங்கில்லை, என்றாலும் மனிதர்கள் இருக்கவே இருக்கிறார்கள். எதற்கும் குலம் இனம் நாடு என்ற அடிப்படையில் மட்டும் அல்லது வேறு பல வழிகளிலும் மாலை சூட்டுவதற்காக…

கறுவலுக்கு பெரிய கௌரவம் அதற்கு இப்பொழுது மனிதர்கள் மதிப்பு அளித்து அழைக்கும் பெயர் இதுதான். – கறுவல் – விசர் நாய்.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *