மேகக் கூட்டங்களையும் மீறி புகைமூட்டங்கள் வானை முட்டிக்கொண்டு இருந்தன. குழந்தைகள் சிலர் கம்பி மத்தாப்புகளையும் சீனி வெடிகளையும் பற்ற வைத்து கொண்டாடிக் கொண்டு இருந்தனர். சிறுவர்களின் புத்தாடைகள் கீழ்வானை நாணச்செய்தது.
“எப்பவும் இல்லாம, இந்த வருச தீபாவளி தான் நல்லா இருக்கு; அய்யாவூட்டு பிள்ளைகள பாரு ஓடி ஆடி திரியுறத” ஆனந்தம் அடைந்தாள் செல்லம்மாள்.
“காத்தாலேயே புள்ளைகளக் கூட்டிக்கிட்டு அய்யா வூட்டுப்பக்கம் போயிடனும். நினைத்தவாறு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். அவள் கக்கத்தில் வைத்திருந்த கடகா பெட்டிக்குள்ளிருந்து பாத்திரங்கள் அங்குமிங்கும் தள்ளாடின.
“எலே! செல்லம்மா, தீபாவளி அதுவுமா விடிஞ்சா வர்றது. இந்த பழைய துணிகள ஒம் மவனுக்கும், மவளுக்கும் போட்டு விட்டுட்டு மாட்டுத்தறிய சுத்தம் பண்ணிட்டு வா” சொல்லிக்கொண்டே சமையலை தொடர்ந்தாள் மாடி வீட்டுப் பொன்னழகு.
செல்லம்மாளின் உறவுகள் பாத்திரங்களோடு தீபாவளி பணியாரம் வாங்குவதற்காக வீடுவீடாக சென்றது.
“சேரிக்குள்ள இருந்து எதுகளாச்சும் வந்துச்சா” பல்லை விளக்கியவாறு கேட்டார் பொன்னழகு புருசன் குமரேசன்.
“பண்ணக்காரி செல்லம்மா தான் அய்யாவூடு வேணும்னு வந்துக்கா” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பாத்திரத்தோடு வந்து நின்றார்கள்.
“ஆத்தா சுட்ட பணியாரம் தின்னாலே ருசிதான்” கமுக்கூட்டில் துணியை வைத்துக்கொண்டு சாதுவாகச் சொன்னான் பனிக்கன்.
“அதுக்கு ஒன்னும் கொறச்ச இல்ல! அங்கே நில்லுங்க. அதிசரத்தை தின்றுகொண்டே சொன்னார் குமரேசன்”
ஆளுக்கு ரெண்டு என எண்ணிப்போட்டாள் பொன்னழகு
“என்ன கருப்பா! பாக்குற, சுட்டு எடுக்கும் போது தடுமாறி விழுந்துருச்சு. தீஞ்ச பணியாரத்த ஒன்னும் அய்யாவூடு போடமாட்டோம்” நறுக்கென்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
“சும்மா பாத்தேன் ஆத்தா”, தலையை சொறிந்து கொண்டு பெரிய பண்ணை வீட்டுக்கு போனான் கருப்பன். எல்லோரும் அவனையே பின் தொடர்ந்தார்கள்.
“கூலி கொஞ்சமா கொடுத்தாலும் அம்மாசி, தீவாளி, பொங்க, கல்யாணம், காதுகுத்து, கருமாதினு நம்மள விட்டுட்டா சாப்புடுறாக” அய்யா வீட்டை மெச்சினான் முத்தன்.
“எலே, ராமாயி! ஒம் மவன பாருடி கோயில் வீட்டுப்பக்கம் போறான்” கதறினாள் காத்தாயி.
“நம்ம அந்தப்பக்கமே போனது இல்ல. மொதல்ல ஒம்புள்ளய கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போலே” சொன்னது தான் தாமதம். அவனை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக புறப்பட்டாள் ராமாயி.
வாங்கி வந்த பழைய துணிகளை மாட்டிக்கொண்டு தீஞ்ச பணியாரங்களைத் தின்றவாறு குழந்தைகள் அந்த தெருவில் ஆட்டம் போட்டனர்.
“இங்கே பாருங்கடா! நம்மோட பழைய சட்டைகள இவனுக போட்டுருக்காணுக” ஒருவன் சொல்லவும் மற்ற ஆதிக்க வர்க்க குழந்தைகள் ஏளனமாக பார்த்தனர்.
ஏளன பார்வையை ஏரெடுத்துப் பார்க்காமல் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் தெருவில் வெடிக்காத சீனிவெடிகளை பொறுக்கிக்கொண்டு..
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.