பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு இருந்திருந்தால், அக்கட்டடம் எரிந்து சாம்பலாகி யிருக்கும்.
அவன் வெளியிலிருந்து அண்ணாந்து அந்தப் பதினாறாவது மாடியை நோக்கினான். அவனுக்கு நெற்றிக் கண்ணுமில்லை. அதுதான் அவன் துரதிர்ஷ்ட ம்.
அந்தப் பதினாறாவது மாடியில்தான், அவன் வேலை தேடும் முயற்சியில் பதினாறாவது தடவையாக – என்ன ஒற்றுமை அவனுக்கு வேலை இல்லை என்று சொன்னார்கள். காரணம் அவனுக்குப் போட்டியாக வந்திருந்த அந்தப் பஞ்சாபிப் பெண்ணின் புன்சிரிப்பு, அது அவனுக்கு இல்லை .. அதுதான் அவன் துரதிர்ஷ்டம்.
அந்தப் பஞ்சாபிப் பெண் உள்ளே போய்விட்டு வந்தவுடனேயே அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆயிரம் போர்க் கப்பல்களை நடுக் கடலுக்கிழுக்கும்’ புன்னகை… இவள் டாக்டர் ஃபாஸ்டஸ் படித்திருப்பாளா? அவன் படித்து என்ன பிரயோஜனம் இந்த வேலை அவனுக்கில்லை ….
அவளுக்குப் பிறகு அவன் உள்ளே போன போது, அவன் தகுதியை நிர்ணயம் செய்ய, திரிமூர்த்திகளாய் மூன்று பேர் உட்கார்ந்திருந்தனர்.
அவன் போய் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். அவர்கள் மும்முரமாக தங்கள் எதிரேயிருந்த கோப்புகளில் ஆழ்ந்திருந்தனர்.
அவனுடைய முதல் வணக்கம் அவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை .
இரண்டாவது தடவையாகச் சொன்னான்.
மூவரும் ஒரேசமயத்தில் அவனை ஏறிட்டு நோக்கினர். அவர்கள் அவனை எதிர்பார்க்கவில்லை என்பது போல் தோன்றியது . அவர்கள் இந்தக் காரணத்தினால்தான், அவனுக்குத் திரும்ப வணக்கம் சொல்லவில்லை என்று அவனுக்குத் தோன்றியது.
“உட்காரலாமா?” என்றான் அவன்.
நடுவிலிருந்தவர் இசைவு தருவது போல் இலேசான ஒலி எழுப்பினார். மற்ற இருவரும் அவரைப் பார்த்தார்கள். நடுவி லிருந்தவருக்கு இடப் பக்கத்திலிருந்தவருக்கு முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதிருக்கும். வாழ்க்கையில் சிரித்தே அறியாதவர் போல் தோன்றிற்று வலப் பக்கத்திலிருந்தவருக்கு… இவனுக்கென்ன மரியாதை? முப்பது வயதுக்குள்ளிருந்த இளைஞன். உலகத்தைப் பந்தாகச் சுருட்டித் தன் சட்டைப் பையில் வைத்திருப்பது’ போன்ற ஆணவம். அவன், ‘உனக்கென்னடா தெரியும்’ என்பது போல் பரசுராமைப் பார்த்தான்.
“நீதான் பரசுராமா?”- என்றார் நடுவிலிருந்தவர்.
இது தத்துவார்த்தமான கேள்வியா, அல்லது கோப்பிலிருந்த பெயரோடு ஆளை அடையாளப்படுத்திச் சரிபார்க்கும் முயற்சியா என்று அவனுக்குப் புரியவில்லை .
“அப்படித்தான் நினைக்கிறேன்…” மூவரும் ஏக காலத்தில் மீண்டும் ஏறிட்டு நோக்கினார்கள்.
“நினைக்கிறாயா?” என்றான் இளைஞன்.
“ஆமாம் ‘பரசுராம்’ என்பது அடையாள சௌகர்யத்துக்காக ஏற்பட்ட பெயர். ஆனால் என்னுடைய ‘நான்’ தான் பரசுரமா? ‘நான் யார்?’ – இந்தக் கேள்விக்கு இன்னும் இறுதியான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.”
அப்பொழுது அங்கு நிலவிய நிசப்தத்தின் கனத்தில், கட்டடமே கீழே அழுந்தி விடும் போலிருந்தது.
“இன்னொரு விஷயம்… நமக்குச் சில சமயங்களில் நம் பேரே மறந்து போய் விடக் கூடிய வாய்ப்பும் உண்டு. அதுவும் குறிப்பாக என்போன்ற அநாமதேயங்களுக்கு… நான் என்ன சாதித்திருக்கிறேன் என் பெயரை நானே ஞாபகம் வைத்துக் கொள்ள?”
“இந்த நேர்முகப் பேட்டி எப்படி உன் நினைவில் இருந்தது?” மீண்டும் இளைஞன்.
“நியாயமான கேள்வி. வயிறு ஞாபகப்படுத்தியது.”
“உன் வயிற்றினால்தான் நீ சிந்திக்கிறாயா?”- நடுவிலிருந்தவர். சிரிப்பு. (இடப்பக்கக்காரரைத் தவிர!)
“எல்லாருமே அப்படித்தான் சிந்திக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்”
மௌனம். (மூவரும்)
“சரி… உன் அனுபவத்தைப் பற்றிச் சொல்…’ என்றார் இடப்பக்கக்காரர்.
“எந்த அனுபவத்தைக் கேட்கின்றீர்கள்?”
“உன்னுடைய மற்றைய அனுபவங்களைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை . இந்த வேலை பற்றிய உன் அனுபவம்…?” இளைஞன்.
புன்னகை. (இடப்பக்கக்காரரைத் தவிர)
”வேலை கிடைத்தால்தானே அனுபவத்துக்கு வழி உண்டு எம்ஏ. பொருளாதாரம் . முதல் வகுப்பு. இது பதினாறாவது நேர்முகப் பேட்டி. இது பதினாறாவது மாடி இந்த ஒற்றுமையாவது வேலை வாங்கித் தரும் என்ற நம்பிக்கை இனிமேல்தான் அனுபவம்…”
“உன் போன்ற வேலையில்லா பட்டதாரிகளுக்கு அனுபவம் தருவதற்காகத்தான் நாங்கள் இத் தொழில் நிறுவனம் நடத்துவதாக நீ நிஜமாகவே நினைக்கிறாயா?” – இளைஞன்.
“உங்கள் குறிக்கோளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.”
“ஷட் அப் அன்ட் கெட் அவுட்” இடப் பக்கத்திலிருந்தவர்.
அவன் வெளியில் வந்தபோது அவன் மனம் நிறைந்திருந்தது. அவர்களைச் சினமுறச் செய்ததே அவன் வெற்றி. ஒப்புக்காக நேர் முகப் பேட்டி நடத்தி ஊரை ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்குப் பாடம் கற்றுத் தந்தாகி விட்டது.
இதுதான் அவன் குறிக்கோளா?
அடுத்தபடியாக என்ன செய்வது? கேள்வியின் விசுவரூபம் அவனை அச்சுறுத்தியது.
அவன் கன்னாட்ப்ளேஸில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இருமருங்கும் பஸ்கள், டாக்ஸிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், எல்லாம் விரைந்து சென்றன. அவனுக்கு மட்டும் கடிகாரத்தின் முட்கள் அசையாமல் நின்றன.
வீட்டுக்குப் போனால் அவன் மௌனம் அம்மாவுக்குச் செய்தியைச் சொல்லி விடும். ‘இது இல்லேன்னா இன்னொண்ணு’ என்று வழக்கம் போல் சொல்லிக் கொண்டே அம்மா அவனுக்குக் காப்பி தருவாள்.
ஏன் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை? இன்று வேலை கிடைக்காதென்ற உறுதியில் தான் அவன் அப்படிப் பேசினான். சாதாரணமாக, பவ்வியமாகப் பேசுவதுதான் அவன் சுபாவம்.
அவனுடன் படித்தவர்கள் எல்லாருக்குமே அநேகமாக வேலை கிடைத்து விட்டது. அவனிடம் என்ன குறை?
அவனுக்குச் சிபாரிசு செய்ய யாருமில்லை. அவன் அப்பா முப்பது வருஷத்தில் அரசாங்க ஊழியத்தில் செக்ஷன் ஆபீஸராகவே இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற கையோடு, அவர் வாழ்க்கை * ஒப்பந்தமும் முடிந்து போயிற்று. ‘நேர்மையான மனிதர்’ என்ற பெயர்தான் மிச்சம். அப்படிச் சொல்லுகின்றவர்கள், ‘வஸ்ந்த் விஹாரில் பங்களா கட்டிக் கொண்டு சுகமாக இருக்கிறார்கள்.
நேர்முகப் பேட்டி என்பது ஒரு மோசடி. ஆளைக் கையில் வைத்துக் கொண்டு , மற்றவர்களையும் கூப்பிட்டுக் கேள்வி கேட்டு, குரூரசந்தோஷம் கொள்ளும் ஒரு சாடிஸ்டிக் விளையாட்டு.
மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் போன வருடம் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்தது? ‘மெக்ஸிகோ மக்கள் மதியப் பொழுதை எப்படிக் கழிக்கிறார்கள்?”- கேள்விகளிலிருந்து தெரிந்து விடும் அவனுக்கு வேலை கொடுக்கப் போவதில்லை யென்று.
பரசுராம் ஜன்பத் சிக்னலருகே வந்துவிட்டேமென்பதை உணர்ந்தான். சிவப்பு விளக்கு அவனை வீதி ஓரத்தில் நிறுத்தி வைத்தது.
அவனுடைய எதிர்காலம் என்ன? சொந்தமாகத் தொழில் செய்யும் திறமை அவனுக்குக் கிடையாது. அவனுக்கு ஏமாற்றத் தெரியாது. பொய் சொல்லத் தெரியாது. அவனுக்காகப் பரிந்துரைக்கவும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு அதிர்ஷ்ட மும் இல்லை …
என்ன செய்ய?
வலிமையற்றது உலகில் ஜீவித்திருப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது? நீட்சே கேட்ட கேள்வி அர்த்தமுள்ள கேள்வி.
திடீரென்று அவனுக்கு வீதியைக் கடக்கும் போது, விபத்து ஏற்பட்டால்?
‘வேலையில்லா பட்டதாரியின் தற்கொலை’… செய்தித் தாள்களில் அவன் சுயசரிதம் ஒரே வரியில் அடங்கிவிடும்.
அல்லது செய்தித்தாள்களில், மோசடி விவகாரங்களால், இச் செய்தி வராமலேயே போய்விடக்கூடிய சாத்தியக்கூறும் இருக்கிறது.
அவன் மரணத்தை அவன் அம்மா எப்படி எதிர்கொள்வாள்? இதை நினைத்தவுடனே அவன் மனம் பகீரென்றது. அவன் உணர்ச்சி வயப்பட்டுப் போனான்.
‘ஹாம்லெட்’ சொல்வது தப்பு நாம் தற்கொலை செய்து கொள்ள மனச்சாட்சிதடவையாக இல்லை. பாசந்தான் தடையாக இருக்கிறது. நம்மைக் கோழைகளாக்குவது பாசந்தான். இதுவே ஞானம்.
“ஹல்லோ , பரசுராம்”
அவன் திருமபிப் பார்த்தான். தௌலத் ராம் சௌத்ரி. அவன் வகுப்பு நண்பன். இப்பொழுது தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கிறான். வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்பும், உற்சாகமும் நிறைந்த இளைஞன். எந்தச் சவாலையும் ஏற்கத் தயங்காத அசகாய சூரன். பரசுராம் நினைத்தான். அவனும் சௌத்ரியைப் போல் இருந்திருந்தால்….
“என்ன செய்கிறாய் இப்பொழுது? உன்னைப் பார்த்து ஆறு மாதங்களாகிவிட்டது” என்றான் சௌத்ரி.
“வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.”
“உன் முயற்சி போதாமலிருக்கலாம். எப்படி உனக்கு வேலை கிடைக்காமலிருக்கும்? எம்.ஏ. முதல் வகுப்பு…?”
”உன் துணிச்சலும், திறமையும் எனக்கில்லை .”
“முட்டாள்தனமாகப் பேசாதே… முதலில் வாழ்க்கையை ரசிக்க ஓர் ஈடுபாடு வேண்டும். ஏமாற்றத்தையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.”
“நீ இப்படிப் பேச உனக்குத் தகுதி இருக்கிறது. நீ வெற்றியடைந்தவன்.”
“விரக்தியைப் போன்ற மோசமான மனோபாவம் உலகில் வேறு எதுவுமில்லை .”
“நான் இக்கால இவ்வுலகில் வாழத் தகுதி அற்றவன்” என்றான் பரசுராம். சௌத்ரி அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
“நீ இப்பொழுது என் மீது கழிவிரக்கம் கொள்கிறாய் அப்படித்தானே……” என்றான் பரசுராம். வறண்ட புன்னகையுடன்.
“இல்லை நான் கொள்ளவில்லை , நீதான் உன் மீது கழிவிரக்கம் கொள்கிறாய், சரி வா.. என்னுடன்..”
“எங்கே?”
“என் கிளப்புக்கு … காப்பியோ, எதுவோ குடித்துக் கொண்டு உன் பிரச்னையைப் பற்றி ஆராய்வோம்…”
“நான்தான் என் பிரச்னை, நானே அதற்கும் தீர்வு… பகவத் கீதை…! ” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான் பரசுராம்.
சௌத்ரியிடம் ‘கார்’ இருந்தது. நடுத்தரத்துக்கும் சற்றுக் கீழான குடும்பத்தில் பிறந்த இவனால் எப்படி இவ்வளவு சௌகர்யங்க ளுடன் வாழமுடிகிறது என்பதுதான் பரசுராமின் ஆச்சர்யம்.
அவர்கள் ‘க்ளப்’பைச் சென்றடைந்தனர். ஓரமாக இருந்த ஒரு மேஜையைத் தேடி கூடை நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
“உனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, அவ்வளவு தானே…? இட் ஈஸ் நாட் எபிக் டீல்…” என்றான் சௌத்ரி.
“இந்த ‘க்ளப்’ அங்கத்தினனாக இருக்கும் உனக்கு. இது பெரிய பிரச்னை இல்லை, ஒப்புக் கொள்கிறேன்…. என்னைப்போன்ற “வலிமையற்றவர்கள் வாழ்வதற்குத் தகுதியே கிடையாது…”
சௌத்ரி ஒன்றும் பேசவில்லை. அவன் பார்வை வாசல் பக்கம் இருந்தது. அங்கு ஒருவன் வந்து கொண்டிருந்தான்.
பரசுராம் அவ்வுருவத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.
இரண்டடி உயரம். முதுகில் ஒரு பெரும் பாரம். கழுத்து சாய்ந்து, ஒரு பெரிய தலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அவன் விந்தி விந்தி வேகமாக நடந்து வந்தான்.
சௌத்ரியை அவன் முகத்தைப் புன்னகை முழுவதும் ஆக்ரமிக்க, கட்டிக் கொண்டான்.
சௌத்ரி அறிமுகம் செய்து வைத்தான்.
“இவர்தான் டாக்டர் கைலாஷ்நாத் போலோ நாத் மெஹ்தீர்த்தா..மோதிலால் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர். இவன் என்னுடைய இனிய நண்பன் பரசுராம்.”
“இத்தனை சிறிய உருவத்துக்கு எவ்வளவு நீண்ட பெயரென்று பார்க்கிறீர்களா? என்றுகேட்டு விட்டு உரக்கச் சிரித்தான் மெஹதீர்த்தா.
மோதிலால் கல்லூரி மாணவர்களைப் பற்றி பரசுராம் கேள்விப்பட்டிருக்கிறான். கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டிருந் தால்தான் பாடம் நடத்த முடியும். இவனால் இவ்வுருவத்தில் எப்படி அவர்களைச் சமாளிக்க முடிகிறது?
மானுடத்தின் அடிப்படை கண்ணியம் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கிறது என்று அர்த்தமா, அல்லது இவன் வாக்கு ஜாலம் அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?
மெஹதீர்த்தா நாற்காலியில் சப்பணம் போட்டு உட்கார்ந்தான்.
“என்ன குடிக்கிறீர்கள்? நாங்கள் காப்பி என்றான் சௌத்ரி மெஹதீர்த்தாவிடம்,
“நான் ஆர்டர் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டே, சற்று தூரத்தில் சென்ற சிப்பந்தியைக் கூப்பிட்டான் மெஹ்தீர்த்தா.
“ஒரு ‘லார்ஜ் ரம் ஆன்தி ராக்ஸ்’, இவர்களுக்குக் காப்பி.”
“இந்த நேரத்திலா ‘ரம்’…?” என்றான் சௌத்ரி.
“அது பெரிய விஷயமல்ல. நம் நண்பர் என்ன செய்கிறார்?” என்றான் மெஹ்தீர்த்தா.
“தற்கொலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான். வலிமையற்றவை உலகிலிருக்கத் தகுதி உடையன அல்ல என்கிறான். இவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை , அதனால் அவன்…”
மெஹ்தீர்த்தா இடைமறித்தான். “போதும் அவருடன் நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் என்ன நீட்சேயின் சிஷ்யரா?”
“ஆமாம்…” என்றான் சௌத்ரி.
“அப்படியானால் நீங்கள் நீட்சேயை சரிவர படிக்கவில்லை . பெர்க்ஸனையும் உடன் வைத்துப் படிக்க வேண்டும். பரிணாம வளர்ச்சி என்பது வெறும் சரீரத்தைப் பொறுத்த விவகாரமன்று.. எல்லாவற்றுக்கும் விடை இங்கிருக்கின்றது…” என்று பரசுராமின் நெஞ்சை ஓங்கிக் குத்தினான். பரசுராமுக்குக் கொஞ்சம் வலித்தது.
“வளர்ச்சியுற வேண்டுமென்ற தீவிர ஆசை வேண்டும். மனம் வைத்தால் நடத்திக் காட்ட முடியாத காரியம் எதுவுமில்லை. தோல்வி மனப்பான்மை, நம் அறியாமையின் அடையாளம். ஜீஸஸ் அன்று மற்றவர்களுடைய பாவத்தை மூட்டையாகச் சுமந்தார். உங்களைப் போன்ற அறியாமையில் உழலும் ஜீவன்களின் பாரந்தான் என் முதுகிலுள்ள மூட்டை” என்று கூறிவிட்டு வாய்விட்டு சிரித்தான் மெஹ்தீர்த்தா.
“நான் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்?”
‘இப்படிக் கேட்பதே அறியாமை, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று முடிவு எடுக்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டுமென்று யாரையும் எதுவும் கேட்கவில்லை. நானே தான் தீர்மானித்தேன். என்னைப் பார்த்துமா உங்களுக்கு இன்னும் தன்னம்பிக்கை ஏற்படவில்லை? உங்களுடைய முடிவு தற்கொலை யைக் காட்டிலும் இன்னும் கௌரவமாக இருக்க வேண்டும். பரிணாமத்தின் கொடுமுடி மனிதன் என்பதை மறந்துவிடக் கூடாது.”
அப்பொழுது சிப்பந்தி காப்பியையும் ‘ரம்’மையும் கொண்டு வந்து மேஜையில் வைத்தான்.
மெஹ்தீர்த்தா காப்பியைக் கலந்து, அவர்களிருவருக்கும் கொடுத்தான்.
அவன்’ரம்’மை இலேசாக உறிஞ்சினான்.
“உங்கள் சிநேகிதி எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான் சௌத்ரி. சிநேகிதியா? பரசுராமுக்கு இன்னொரு அதிர்ச்சி.
“திருமணம் செய்து கொள்ளலாமென்றிருக்கிறோம். முதலில் என் தங்கைக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் . பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. அது முடிந்தவுடன் எங்கள் கல்யாணம்.”
இப்பொழுது மெஹ்தீர்த்தாவின் குட்டையான உருவமோ, அவன் முதுகிலிருந்த பாரமோ பரசுராமின் கண்களுக்கு தெரியவில்லை .
மெஹ்தீர்த்தா பூமிக்கும் ஆகாசத்துக்கும் நெடிது வளர்ந்து அளந்து நின்றான்.
பரசுராமின் கையில் ஒரு மழுவ மிருந்தது!