திணித்தால் வராது திறமை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 7,055 
 

குருவிடம் வந்தான் ஒருவன். “”குருவே, எனக்கு இருப்பது ஒரு மகன். அவனை எல்லா கலைகளிலும் கெட்டிக்காரனாக்க விரும்புகிறேன். ஆனால்…”

“என்ன ஆனால்?… என்னாச்சு?”

“அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்றுக் கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே சேர்த்துவிட்டிருக்கிறேன். சனி, ஞாயிறுகளில் நடனம் படிக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர இயலவில்லை. அதற்கு என்ன செய்வது குருவே?”

அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் குரு.

ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய்ச் சென்று நல்ல கருத்துக்களை பிரசங்கிப்பதுதான் அவர் வேலை.

ஒருமுறை ஒரு மலை கிராமத்துக்குச் சென்றார். அங்கு ஆடு மாடு மேய்ப்பவர்கள்தான் அதிகம். அவர்களை மாலையில் ஒரு இடத்தில் கூடச் சொன்னார். அங்கு
அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.

அவர்களிடம் பேசுவதற்காக நிறைய விஷயங்களை யோசித்து வைத்திருந்தார். ஒரே பிரசங்கத்தில் அவர்களையெல்லாம் அறிவாளிகளாக மாற்றிவிட வேண்டும் என்பது அவர் திட்டம்.

ஆனால், மாலையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற போது ஒரே ஒரு இளைஞன்தான் வந்திருந்தான்.

பிரசங்கிக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை.

அந்த இளைஞனிடம், “உன் ஒருவனுக்காக நான் பிரசங்கம் செய்ய முடியாது. அதனால் நீ போகலாம்” என்றார்.

அதற்கு அவன், “”ஐயா, நான் மாடுகளுக்குத் தீனி போடலாம்னு வருவேன். அப்போது சில நாள் எல்லா மாடும் அங்கே இருக்காது. ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். அதுக்காக எல்லோரும் இல்லைனு தீனி போடாம போகமாட்டேன்” என்றான்.

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட பிரசங்கி உற்சாகமடைந்து, அவனுக்கு போதனைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவனை போதனைகளால் நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது.

நல்ல போதனைகளைத் தந்துவிட்டோம், ஒரு ஆடு மேய்ப்பவனை அறிவால் நிரப்பிவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனைப் பார்த்து, “”எப்படியிருந்தது?” என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆடு மேய்ப்பவன் சொன்னான்.

“ஐயா, ஒரு விஷயம். ஒரு மாடு இருந்தாலும் தீனி போட்டுட்டுதான் போவேன்னு சொன்னேன். ஆனா கொண்டு வந்த தீனியையெல்லாம் அது ஒண்ணுக்கே போட்டு வாய்ல குத்தி திணிக்க மாட்டேன்!”

குரு இந்தக் கதையைச் சொன்னதும் பிரச்னையுடன் வந்தவனுக்குத் தன் தவறு புரிந்தது.

அப்போது குரு அவனிடம் சொன்ன WIN மொழி: திணித்தால் வராது திறமை.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *