திசை அறிந்த கல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 13,544 
 

இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட தன் கண்கள் பளிச்சிட நடு வீட்டுக்குள் வந்து நின்று கூர்மையாக விழித்துக் கொண்டிருக்கும் அது. அட்டைக் கறுப்பில் பளபளவென அதன் தேகம் மின்னினாலும் அதன் கண்கள் மட்டும் சாம்பலைப் பூசிவிட்டது மாதிரி மிதமான கறுப்பில் பளீரென்று துலங்கும். சில நேரங்களில் அவர்கள் பயந்திருக்கிறார்கள். “இதென்னடா, நடு வீட்டுக்குள் வந்து நின்று பழியாய் முறைத்துப் பார்த்து ஆட்களைப் பயங்காட்டிக் கொண்டு நிற்கிறது’ என்று நினைத்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். சில நாட்களின் இரவுகளில் வீட்டின் முற்றத்தில் மூவரும் ஒன்றாக அமர்ந்து சிலாக்கியமாய் பேசிக் கொண்டிருக்கும்போது கூட அது சர்வ சாதாரணமாய் முற்றத்தின் ஓரத்துக்குச் சென்று அவர்களையே வைத்த கண் வாங்காமல் கூர்ந்து பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறது. அப்போதெல்லாம் அவர்களின் செல்ல மகன் குமார்தான் அதைக் கோபத்துடன் விரட்டிவிட்டிருக்கிறான்.

அன்று கண்ணம்மா அவன் மேல் விசனப்பட்டுக் கொண்டாள். “”அது பாட்டுல நின்னுட்டுப் போவுது. உனக்கென்னடா அது மேல அம்புட்டுக் கோபம்?”

என்று சொல்லிப் பரிகாசமாகச் சிரித்தும் கொண்டாள்.

திசை அறிந்த கல்குமாரின் வியாக்கியானம் விகற்பமாக இருந்தது. “”எம்மா… ஒங்களுக்குத் தெரியாதும்மா… அது பூன இல்ல… பிசாசு… இவ்வளவு நாளும் நம்ம வீட்டுக்கு வந்திருக்குதா பார்த்திங்களா?இப்பதான ஒரு அஞ்சு நாளா தொடர்ச்சியா வந்துகிட்டிருக்கு. நம்ம வீட்டக் கெடுக்குறதுக்கின்னே மேல விட்டுக்காரங்க ஏவல் செஞ்சி விட்டப் பூனையாக்கும். சாமியாடி கந்தவேல் மாமா சொன்னது மாதிரிதான் எல்லாம் நடக்குது, தெரியுமா ஒங்களுக்கு?”

பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் வெறுமனே கிடந்திருந்த குமார் உதிர்த்த வார்த்தைகள் கண்ணம்மாவுக்குக் கவலையைப் போர்த்தி விட்டன. இவனுக்குள் இப்போதே இப்படியொரு நம்பிக்கையா என்று நினைத்துப் பெரிதும் குழப்பம் அடைந்தாள் அவள்.

“”சாமியாடி என்னடா சொன்னாரு? ஏங்கிட்ட அதுபற்றி இதுவரை நீ சொல்லவே இல்லையே”

கொஞ்ச காலமாகத்தான் குமாருக்கும் கடவுள் பக்தி கைகூடியிருந்தது. வேலையில்லாமல் வீட்டில் கிடந்து வெட்டியாய் பொழுதைப் போக்குவதைக் காட்டிலும் சற்று காலாற நடந்து போய் ஊருக்கு மேற்குப் பக்கமாயிருந்த சுடலைமாடன் சாமி கோயிலில் உட்கார்ந்து ஓய்வெடுப்பது உடம்புக்குத் தெம்பாக இருந்தது. குளிர்ப் பிரதேசத்தில் நிற்பது போல் இதமாய் வீசியது வேப்பங்காற்று. சாலையோரத்தில் கோயில் இருந்தததால் எப்போதும் சர்புர்ரென்று இரைந்து கொண்டு போன பலதரப்பட்ட வாகனங்கள், விறுவிறுப்பான காட்சிகளைத் தந்தன. அவனைப் போலவே வேலையற்றிருந்த இளைஞர்களும் முதியவர்களும் வேப்ப மரக் குளிர் நிழலில் கும்பலாக அமர்ந்து தாயம் விளையாடவும், ஆடு புலி ஆடவும், ஊர்க் கதைகள் பேசவுமாகப் பொழுதைச் சந்தோசமாகப் போக்கிக் கொண்டிருந்தனர். கோயிலில் பெரியசாமி ஆடும் கந்தவேலும் அவர்களில் அடக்கம்.

அவர்களின் தெருக்காரர்தான் கந்தவேல். மேற்கு அற்றத்து வீடு. ஆளும் தோளுமாய் ஆஜானுபாகுவாய் இருந்தார். மேலுக்குச் சட்டை போடுவதில்லை அவர். சின்ன வெள்ளைத் துண்டுதான். இடுப்பில் நாலு முழக் காவி வேட்டி. கழுத்துவரை வளர்ந்து புரளும் சடையும், அடி வயிறு வரை வளர்ந்து தொங்கும் தாடியும் கொண்டு பெரிய சன்னியாசியைப் போல காட்சி தந்தார். வேலை சோலிக்குப் போவது கிடையாது. கண் நிறைந்த ஒரு பெண்டாட்டியும், சமைந்து மூலையில் குந்த வைக்கிற வயதில் இரண்டு பெண் பிள்ளைகளும் அவருக்கு இருந்தார்கள். அவரின் பெண்டாட்டிதான் கூலி வேலைப் பார்த்து குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவருக்குத் தெண்டச் சோறுதான் கிடைத்துக் கொண்டிருந்தது. கூடவே அவளின் வசைகளும், அவள் வேலைக்குப் போயிருக்கும் சமயங்களாகப் பார்த்து வீட்டுக்கு வந்து வயிற்றுக்குக் கொட்டிவிட்டுப் போய்விடுவார் மனுசன். அவரின் கைச் செலவுக்கு- கடைத்தெருவில் காப்பித் தண்ணீர் வாங்கிக் குடிப்பதற்கோ, பீடி சிகரெட் வாங்குவதற்கோ -காசு கொடுப்பதில்லை அவள். அதற்கான காசுகளை ஊரில் யாரிடமும் கெஞ்சிக் கெரவியோ அல்லது பொய் சொல்லிப் பயங்காட்டியோ அநியாயமாகக் கறந்துவிடுவார். அவருக்குக் காரியம் நடந்தாக வேண்டும். ஒருவரைக் கெடுத்து மற்றவர்களிடம் பேசவோ அல்லது காசுக்காக ஒருவரை எதிர்த்துச் செய்வினைக் கண்ராவி என்று இறங்கவோ தயங்கமாட்டார். மற்றவர்களை மிரட்டுவதற்கு அவரின் கைவசம் “சாமியாடி’ என்ற அடையாளமே போதுமானதாக இருந்தது.

போன வெள்ளிக்கிழமை மதியம் ஆடுபுலி ஆட்டத்தில் அவர் தோற்றுப் போன பிறகு அவர் மேல் அருள் கூடி வந்து நின்றது. அவர் அப்படித்தான். திடீர் திடீரென்று “சுடலை மாடன் கோபப்பட்டு விட்டான்’ என்று கொக்கரித்து அருகில் இருப்பவர்களை எல்லாம் ஆட்டுவிக்க நினைப்பார். அன்று அவருக்குக் கிடைத்தவன் குமார்தான்.

“”ஏய் மகனே”

“”என்ன சாமி?”

“”இப்பொ கொஞ்ச நாளா ஒங்க வீட்டுக்குத் திடீர் திடீர்னு கறுப்பு நெறத்துலப் பூனை ஒண்ணு வருதேப்பா”

“”ஆமா..சாமி வருதுங்க”

“”அது எங்கயிருந்து வருது தெரியுமா?”

“”தெரியாதுங்களே சாமி”

“” நேரே சுடுகாட்டுலயிருந்து வருதுப்பா, அது சாதாரணமான பூனை இல்லப்பா”

“”சாமீ?”

“”ஏவல் பூனை. ஒன் வூட்டுக்கும் மேல வூட்டுக்கும் கொஞ்சநாள் முந்தி சண்டை சச்சரவு ஏதாச்சும் நடந்திச்சா?”

“”நடந்திச்சி சாமி… பொதுச்சுவரு சண்டை ”

“”அந்த வீட்டு ஆம்பளைய நீ அடிச்சது உண்டா?”

“”ரொம்ப அடிக்கல சாமி. லேசாப் பிடிச்சித் தள்ளினேன். கீழ விழுந்திட்டாரு. எனக்குச் சித்தப்பாதான் சாமி அவரு.”

“”ஒன்னையவிட வயசுல மூத்தவரில்லையா? அடிக்கலாமா அவர நீ?”

“”அவரு மட்டும் எங்க அப்பாவ அடிக்க வரலாமா சாமி? எங்கப்பாவும் அவர விட மூத்தவரில்லையா?”

“”ஒங்க அப்பாவ அவரு அடிக்கலைல்லாப்பா?”

“”ஆமா சாமி”

“”எச்சரிக்கையா இருந்துக்க. ஒங்க சித்தப்பாவும் சித்தியும் ஒன்னையக் கொல்றதுக்கு அந்தப் பூனைக் கால்ல ஏவல் செஞ்சி விட்டிருக்காங்கப்பா”

“”அய்யோ… அப்படியா சாமி? அதுக்கு நா என்ன சாமி செய்யணும்?”

“”அந்தச் சனியன ஒங்க வூட்டுக்குள்ள நொழைய வுட்டிராத. ஒங் எதுக்க அது நின்னாலே ஒனக்கு ஆபத்துதான்., அப்படித்தான் சுடுகாட்டு முனிய வச்சி ஏவல் செஞ்சிவுட்டுருக்கு”

“”சரி சாமி. எம் முன்னால அத வர வுடாமப் பாத்துக்கிருதென் சாமி”

எல்லாவற்றையும் அச்சில் வார்த்தது மாதிரி சொல்லிவிட்டிருந்தார் “சாமி’. அவர் அடிக்கடி தெருவுக்குள் வருவதில்லை. என்றாலும் தன் வீட்டுக்கு வந்து வயிற்றுக்குக் கொட்டிக் கொள்ளவும், யாரிடமாவது கடன் வாங்கிக் கொள்ளவும் மட்டும் வந்து போகிறார் என்பது குமாருக்குத் தெரிந்திருந்தது. இவ்வளவு தெளிவாகச் சொல்கிறவரைப் பொய்யாகத்தான் சொல்கிறார் என்று சந்தேகப்பட முடியுமா என்றும் தீர்க்கமாக யோசித்துப் பார்த்தான். அவரிடம் அருள் கூடிவந்து நின்றபோது எவ்வளவு ஆவேசமாய் துள்ளிக் குதித்து ஆடினார். அவரின் வயதுக்கு, சாதாரண நேரங்களில் அப்படித் துள்ளிக் குதித்து ஆடிவிட முடியுமா? என்றும் அவன் யோசித்துப் பார்த்தான். சாமியாடி சொன்னதுபோல சித்தப்பாவோ அல்லது சித்தியோ தன் மேல் ஏவல் செய்துதான் விட்டிருக்க வேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது அவனுக்கு. அவர்களுடன் சண்டைப் போட்டிருந்த நாளிலிருந்து அவனுக்குக் காய்ச்சலும் ஓங்கரிப்புமாக இருந்து கொண்டிருந்தன. இரண்டு நாட்கள் வள்ளியூர் புனிதா மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்த பிறகுதான் சுகமாகியிருந்தது. இப்போது மூன்று நாட்களாகத்தான் அவனின் உடம்பு தேவலையாக இருக்கிறது.

அப்பா கேலியாகச் சிரித்தார். பி.எஸ்.என்.எல்.லில் கண்காணிப்பாளர் பணியில் இருக்கிறார். ஊழியர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் வேறு.

“”அவன் ஆடி முடிச்சிட்டு ஒங்கிட்ட வந்து செலவுக்குக் காசு கேட்டானாடா? ”

“”காப்பி குடிக்க ஏதாவது சில்லரை இருந்தா குடுன்னாரு. பத்து ரூபாய் இருந்திச்சு. குடுத்தென்”

“”நெனைச்சென்”

“”போங்கப்பா. ஒங்களுக்கெல்லாம் இதப் பத்தி ஒண்ணும் திரியாது. சொன்னா நீங்க சிரிப்பீங்க. நம்ம வீட்டுக்குக் கறுப்புப் பூன வர்றதப் பற்றி சாமியாடிக்கு எப்படிப்பா தெரியும்?”

“”என்றைக்காவது பாத்திருப்பாரு. அல்லன்னா அவரே கூட ஒனக்கு எதிரா ஏவல் செஞ்சி விட்டிருக்கலாமில்லையா? மேல வீட்டுக்கு அவரு அடிக்கடி போய்க்கிட்டிருக்காரு. தெரியுமா ஒனக்கு?”

“”அவரே செஞ்சிருந்தாருன்னா அதைப் பற்றி எங்கிட் ஏன் சொல்றாரு?”

“”இப்போ என்ன சொல்றாரு? ஒங்க சித்திப்பாவும் சித்தியும்தான் உனக்கு எதிரா ஏவல் செஞ்சி வச்சிருக்கிறதாவ சொல்றாரு? அவரே போய் வச்சதாவ சொல்லிக்கிடலையே. இதுதான் சிலருடைய தந்திரமான பிழைப்பே. பிள்ளையைக் கிள்ளியும் விட்டுக்கிருவாங்க… தொட்டிலை ஆட்டியும் விட்டுக்கிருவாங்க. அது புரியாம நீ….”

“”விடுங்கப்பா. நீங்க எப்பவும் இப்படித்தான். ஏட்டிக்குப் போட்டியாப் பேசிக் கிட்டிருப்பீங்க”

எரிச்சலுடன் முகம் சுளித்துக் கொண்டு எழுந்து விரைசலாய் உள்ளறைக்குப் போனான் குமார். நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. எட்டு மணிக்கெல்லாம் வயிற்றுக்குக் கொட்டியாயிற்று. வழக்கமாய் பத்து மணிக்குத்தான் அவரவர்கள் படுக்கைக்குச் செல்வது. குமார் இப்போதே தூங்கிவிட மாட்டான் என்பது தெரிந்திருந்தது. வாராந்தரியிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ கணிசமான நேரத்தை அமிழ்த்திவிட்டுக் கண்கள் செருகுகிற நேரத்தில் மெத்தையில் போய்ச் சரிந்து கொள்வான்.

இப்போது இரண்டு நாட்களாக அந்தக் கறுப்புப் பூனை வராதிருந்ததில் அவனின் இதயம் சந்தோசக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. எங்கே சென்றிருக்கும் அந்தச் சனியன்? இறந்து கிறந்து போயிருக்குமா? அல்லது உபத்திரவம் தாளாமல் யாராவது அதைத் தூக்கிக் கொண்டு போய் காட்டில் விட்டுவிட்டு வந்திருப்பார்களா? அது யாருடைய வீட்டுப் பூனையாக இருக்கும்? இதுவரைக்கும் எங்கிருந்து வந்து கொண்டிருந்தது? இப்போது எங்கே போனது? சாமியாடி சொன்னது போல சுடுகாட்டிலிருந்துதான் வந்து கொண்டிருந்ததா? இதுநாள் வரைக்கும் அது பற்றிய சரியான கணிப்பில்லாதிருந்ததை இப்பபோது நினைத்துப் பார்த்துப் பெருமூச்ச்சு விட்டுக் கொண்டான் குமார்.

“”டேய்… இன்னிக்கு என்ன சீக்கிரமாப் படுக்கப் போயிட்ட? முற்றத்துல நல்ல காத்து அடிக்குதில்லாடா. வா. கொஞ்ச நேரம் முற்றத்துலப் படுத்திட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போயி படுக்கலாம். வாடா” அம்மா அவனைப் பிரியமாய் அழைத்தாள்.

சிணுங்கலாகக் காற்று வீசிக் கொண்டிருந்ததது. தேகத்துக்கு ஒத்தடம் தரும் மலைக்காற்று. ஈஸி சேரில் தன் உடம்பைச் சரித்துக் கொண்டு ஆகாயத்தை வெறித்திருந்தார் அப்பா. அவரின் பணிக்காலம் முடிவதற்கு இன்னும் ஐந்து வருடங்களே மிச்சம் இருந்தன. அதற்குள்ளாக தன் சந்ததி வித்தான குமாருக்கு ஏதாவது வேலை கிடைத்துவிட்டால் தன் ஓய்வுக்காலம் நிம்மதியாகக் கழிந்துவிடும் என்று நினைத்தார். இன்னும் அது நிறைவேறாமல் இருந்ததில் அவரின் மனம் விரக்தியில் உழன்று கொண்டிருந்தது. அவருக்குப் பக்கத்தில் சிமெண்டுத் தரையில் பாய் விரித்து அதன் மேல் கால்களை நீட்டி விட்டேத்தியாய் படுத்திருந்தாள் கண்ணம்மா. குமாரும் சற்று முன்பு வரை அம்மாவுடன் பிரியமாய் பாயில் படுத்திருந்தவன்தான். அப்பாவின் விதாண்டாவாதங்களைக் கேட்டதும் மனம் எரிச்சலடைந்து கொண்டு வீட்டுக்குள் சென்றிருந்தான்.

“”குமார்… குமார்… தூங்கிட்டியா? இங்க வந்து பாருடா… ஒங் கறுப்பு பூனை சொவர் மேல வந்து நிக்கறத”

படக்கென்று பாயில் எழுந்து உட்கார்ந்து கொண்ட கண்ணம்மா சந்தோஷ குதியில் சத்தம் போட்டு அழைத்தாள். அப்பாவுக்கும் ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். சாய்ந்திருந்த வாக்கிலே சட்டென்று தலையைத் தூக்கிக் கொண்டு உறுத்துப் பார்த்தார். “சந்தேகம் இல்லை. கறுப்புப் பூனைதான்’ என்று மனசுக்குள் உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் கண்ணாடி உருண்டை விழிகளிலிருந்து வெளியே பாய்ந்து கொண்டிருந்த பார்வைக் கதிர்கள் அவரின் பார்வையோடு நேர்க்கோட்டில் நிலைத்து நின்றன.

மதில் மேல் அப்புராணியாய் வந்து உட்கார்ந்திருந்தது அது.

“”எங்கம்மா அந்தச் சனியன்? எங்கேயோ விழுந்து செத்துப் போயிருக்குமின்னுலா நெனைச்சேன். திரும்பவும் வந்திருச்சா?”

அவசர கதியில் வெளியே ஓடிவந்த குமார் முற்றத்தின் விளிம்புகளில் குனிந்து கற்களைத் தேடினான். இரவு நேர மங்கலான வெளிச்சத்தில் அத்தனை சுலபத்தில் கற்கள் கிடைத்துவிடாது என்பது உறுதியாகத் தெரிந்தது அவனுக்கு.

அப்பா அவனைச் சத்தம் போட்டார்.

“”டேய்… டேய்… பாவம்டா அது. இந்த ரெண்டு நாளா அது என்ன மாதிரியெல்லாம் அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருந்திச்சோ… இப்பொ அது நிம்மதியா நிக்கட்டுமேடா. அத வெரட்டாதடா. அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டுப் போகட்டும்”

“”இல்லப்பா… அது பொல்லாத பூனப்பா… கல்லத் தூக்கி எறிஞ்சாத்தான் போகும்”

எப்படியோ தட்டுத் தடுமாறிக் கல்லொன்றை எடுத்துக் கொண்டு அதை நோக்கி ஆவேசமாய் வீசினான் அவன். அது சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொடுத்ததோடு அல்லாமல் அந்த இடத்தைவிட்டு ஓர் இம்மி கூட நகராமல் திடமாகவே நின்றிருந்தது.

“”எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்களேன், கொஞ்சமாவது அசையுதா?”

கண்ணம்மாவுக்குக் கடுப்பாக வந்தது. “”டேய்… விடுடா. அதுபாட்டுக்கு நின்னுட்டுப் போகட்டும். பாவம்டா அது. சாமியாடி ஒங்கிட்ட கத கட்டி விட்டிருக்கான். பூனையோடக் கால்ல ஏவலும் இல்ல. கீவலும் இல்ல. அது பசியோட வந்து நிக்கு. சும்மா இரு நீ ”

வழக்கம்போல பத்து மணிக்கு விட்டு வாங்குகிற மின்சாரம் இன்றும் அதே நேரத்துக்குத் தன் செயல்பாட்டை ஞாபகப்படுத்தியது. சுற்றிலும் இருள் மயம். ஆனாலும் சுவர் மேல் ஆந்தையாய் வெறித்துக் கொண்டு நின்றிந்த பூனையின் இரண்டு நெருப்பு விழிகள் குமாரைச் சுட்டுப் பொசுக்குவதாக உறுத்தின. விழிகள் சன்னஞ்சன்னமாய் நகன்று சுவரில் மேற்கு நோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கையில் வைத்திருந்த கல்லை வேகமாய் விட்டெறிந்தான். குறி தவறி மேல் வீட்டு முற்றத்தில் விழுந்திருக்க வேண்டும் அது. அங்கிருந்து திடீரென ஓர் அலறல் சத்தம் கேட்டது.

“”எம்மா” என இடிமுழக்கமாய் வெளிப்படுத்திய குரலில் வேதனையின் அழுத்தம் கூடியிருந்தது.

குமாருக்கு உயிர் முடிச்சு அறுந்து போனதுபோல ஆயிற்று. அந்த அலறல் சத்தம் சாமியாடியின் குரலாக இருந்ததுதான் காரணம்.

– ஆகஸ்ட் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *