தாராபாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,619 
 
 

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரதாப்ராவ், சிவாஜி மகாராஜாவின் மெய்காப்பாளருள் ஒருவன். அவனுக்கு இன்னும் 25 வயது நிரம்பவில்லை . வாட்போரிலும், மற் போரிலும் அவன் நிகரற்றவன். மார்பிலும் முகத்திலும் உள்ள தழும் புகள் அவனுக்கு வீர முத்திரைகளாக அமைந்திருந்தன. அந்த மராட் டிய வீரனது முகத்தில் ஸ்ரீதேவி எப்பொழுதும் நடமாடிக் கொண்டே யிருப்பாள். அவனுடைய வீரப்பிரதாபங்களைப் புகழாத வீரர்களே யில்லை. சிவாஜி மகாராஜா அடைந்த வெற்றிகளின் போதெல்லாம், அவன் படைகளின் முன்னணியில் நின்று திகழ்ந்து கொண்டிருந்தான்.

சிம்மகட் (துர்க்கம்) பகைவர்களால் அணுகமுடியாதது. சிவாஜி யின் வீரர்கள் பலத்த சண்டையின் பிறகே அதைச் சுவாதீனப்படுத்திக் கொண்டார்கள். படைகளின் முன்னணியில் நின்று சலிக்காமல் யுத்தம் செய்த சில வீரர்களை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி சொல்லி, மகாராஜா பொன்னும் மணியும் அள்ளிக்கொடுத்தார். பிரதாப் மட்டும் பேசாமல் நின்றான். மகாராஜா அவனை நோக்கி “பிரதாப் நீயும் கொஞ்சக்காலம் ஓய்வெடுத்துக்கொள். வேண்டும் போது அழைக்கிறேன்” என்றார். தாய்நாட்டின் சேவையிலும் மகாராஜாவின் வெற்றிகளிலுமே கண்ணாக இருந்த அந்த வீரனுக்கு ஓய்வெடுத்துக் கொள்வதில் கொஞ்சங்கூடப் பிரியம் வரவில்லை. அதனால் தலை குனிந்த படியே பேசாமல் அவன் நின்றான். மகாராஜா மறுபடியும், “பிரதாப் நீ போய் வா” என்றார். அவன் சிவாஜி மகாராஜாவை வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

ஜாவல்லிக் கோட்டைக்குச் சமீபத்தில் காயத்திரி நதி ஊற்றெடுத்துப் பாய்கிறது. அந்த நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் மலைகள் பத்தி பத்தியாகத் தொடர்ந்து செல் கின்றன. அங்கு ஒரு மலைச்சாரலில் பிரதாப்ராவின் வீடு இருந்தது. அவனுக்கு 15 வயது இருக்கும் போது தாராபாயை மணஞ் செய்து வைத்தார்கள். அதைப் பற்றிய நினைவே அவ னுக்கு இல்லை. ஜாவல்லிக் கோட்டையைச் சிவாஜி மகாராஜா சந்தாராவிடமிருந்து சுவாதீனப் படுத்திக் கொண்ட காலத்திலேயே பிரதாப் அவரது சேனையிற் சேர்ந்து தொண்டு புரியத் தொடங்கினான். அதன் பிறகு இப்பொழுது தான் அவனை வீட்டுக்குப் போகும்படி மகாராஜா நிர்ப்பந்தம் செய்தார். இதற்கிடையில் எப்படியோ பத்து வருடங்கள் கழிந்தோடின. இந்த லங்களில் போர் வீரர்களோடு சேர்ந்து கொண்டு பல யுத்தங்களில் புலி போலப் பகைவர்களின் சேனைகளுக்குள்ளே புகுந்து புகழ்பெற்றான். எப்படியோ யுத்தங்களைக் கண்டு கழித்து விட்டான். சிவாஜியின் அன்பும். வீரமும், தேசப்பற்றுமே அவனை இழுத்துக் கட்டி வைத்துக் கொண்டிருந்தன. ஆகையினால்தான் மகாராஜா ‘ஒய்வெடுத்துக் கொள், போ! ‘என்று இரண் டாம் முறை வற்புறுத்தும் வரைக்கும் பேசாதிருந்தான்.

ஜாவல்லியை நோக்கி மலைப்பாதையிலே அவன் தன் குதிரையைத் தட்டி விட்டான். மனித சஞ்சாரமற்ற பாதைகளில் குதிரை போய்க் கொண்டி ருந்தது. கடந்த யுத்தங்களின் நினைவுகளே அவன் மத்தியில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்து கொண்டிருந்தன. எத்தனை வீரர்களின் உடம்புகளைக் துண்டு துண்டாக அவன் வெட்டி மகிழ்ந்திருக்கிறான். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த பகைவர்களின் கூக்குரல் இப்பொழுதும் அவன் செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தது. இப்படியே பிணக் குவியல்கள் கலந்த நாட்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் வந்து நினைவுத் திரையாக விழுந்து கொண்டிருந்தன. தன் புயங் களையும், வடுக்களையும் தொட்டுப் பார்த்துக் கொண்டே அந்த வழியைக் கடந்து சென்றான். வெகுதூரத்துக்கப்பால் தெரியும் தான் பிறந்து வளர்ந்த மலைப்பிரதேசம் அவனுக்கு ஓர் உற்சாகத்தைக் கிளப்பிவிட்டது. யுத்த வெறி குடிகொண்டிருந்த இரும்பு போல வைரம் பாய்ந்திருந்த அவனது மனத்தில் இப்பொழுதும் இயற்கையின் இனிமை புக ஆரம்பித்தது.

தாரா வெளி மகவில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். குதிரையின் காலடிச் சத்தம் கேட் டதும் திரும்பினாள். யுத்த உடையணிந்து பிரதாப் கம்பீரமாக நின்றான். ஒருவரை ஒருவர் திடீரென்று அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. தாரா இப்பொழுது குழந்தையாக இல்லை. வனம் அவளை சந்து எழில் செய்து கொண்டிருந்தது. அவள் அங்கங்கள் இளமை யின் எழில் நாதத்தை வீசின. கண்களில் இத்தகையதென்று சொல்ல முடியாத ஒரு ஜோதி வந்தது. அவளைக் கண்டதும் முதலில் திகைத்து நின்றான் பிரதாப். விரைந்து உள்ளே போய்த் தன் வாளை எடுத்து அவளிடம் கொடுத்தான். தாரா இரு கரங்களையும் நீட்டி அதை வாங்கிக்கொண்டு நமஸ்கரித்தாள். அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான் பிரதாப். யுத்தங்களில் அடிபட்டதால் ஏற்பட்டிருந்த களைப்பு அவனை விட்டுப் பறந்து போய் விட்டது. யுத்தங்களின் சின்னங்கள் மட்டும் முகத்திலும் மார்பிலும் புயங்களிலும் கொஞ்சஙகூட அழியவில்லை. ஆனால் மனத்தில் மட்டும் அவற்றின் அடையாளமே இல்லாமல் மறைந்துவிட்டது. அதற்கு மாறாகக் கருணையும், அன்பும் குமுறிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நிமிஷமும் அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டு பிரியாதிருந்தான். இந்த நாட்களிற் பிரதாப் கந்தர்வர்களது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். மலைச்சாரல்களி லும் நதிக்கரைகளிலும் அவளுடன் கூடிக் குழந்தை போல விளையாடித் திரிந்தான். இவ்வளவு காலமும் மரமும் செடியும் நிறைந்து கிடந்த மலைப்பிரதேசம் புதிய ஒளி பெற்றுப் பிரகாசித்தது. செங்குத்தான மலைப்பாறைகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் அவளைத் தன் கைகளில் ஏந்திச் செல்வான். அந்தச் சமயங்களில் அவள் நாணத்தால் ஒடுங்கிச் சிவந்து பொலிவுற்று விளங்குவாள். அவன் அதைக் கண்டு இன்பவெறி கொள்ள கோயில் கொண்டிருந்த சிவாஜி மகாராஜாவையும், யுத்த களங்களையும் மறந்து போய்த் தாராபாயுடன் பல மாதங்களை நிமிஷங்களாகக் கழித்தான்.

தக்ஷிணத்தில் சிவாஜியின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டேயிருந்தது. பீஜபூர் ராஜ்யத்தின் பல கோட்டைகளைச் சிவாஜி வென்று அடிமைப்படுத்திக் கொண்டார். பீஜபூர் சுல்தானான அலி அதில் இவற்றைக் கண்டு கொதிப்படைந்தான். சிவாஜியை எப்படியேனும் கொன்று ஒழித்து விட வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வரவர மேலோங்கி வளர்ந்து வந்தது. சுல்தான் படைத் தலைவர்களையும் உபேதார்களையும் அழைத்து ஒரு சபை கூட்டினான். சபையி லுள்ள எல்லோர் கண்களிலிருந்தும் நெருப்புப் பொறி பறந்தது. சுல்தான் கட்டிடமே தகர்ந்து விழுந்துவிடும்படி கர்ஜித்துக் கொண்டு இருந்தான். ஒவ்வொருவரும் சுல்தானைச் சமாதானஞ் செய்ய எண்ணித் தத்தமக்குப் பட்டவற்றைச் சொன்னார்கள். சிவாஜியிடம் அவர்களுக்கு உள்ளூரப் பயம் நிறைந்திருந்தது. சபையில் அமைதி நிலை கொள்ளவிடாமல் சுல்தான் அடிக்கடி குழப்பிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது, சமஸ்தானத் தலைமைக் காரியஸ்தன் அப்ஸில்லா கான் எழுந்து, “பாதுஷா” குகைக்குக் குகை புகுந்து வெளிப்படும் அந்த மலை எலி (சிவாஜி)யை நானே சென்று பிடித்துக் குதிரையோடு கட்டி ஊரார் பிடிக்கும்படி கொண்டு வருகிறேன் என்று கூறி னான். கான் நல்ல கட்டு வாய்ந்த உடலமைப்புள்ளவன். போர்த் தொழிலில் மிகவும் ஈன உற வாடிக் கொள்ளும் அதிபாதகன். பீஜபூர் கல்தானின் பேகத்திற்கும் நெருங்கிய உறவினன் சுல் தான் மனம் குளிர்ந்தது. கானுக்குத் துணையாக 12.000 குதிரை வீரரைத் தயார் செய்தான். வலிமை கொண்டு திரண்ட குதிரைப் படையோடு கான் புறப்பட்டான். வழியிலுள்ள சில கோட்டைகளை வென்று சுவாதினப்படுத்தினான். பல ஊர்களையும், கோவில்களையும் சூறையாடிக் கொண்டு வயா நகரில் வந்து தங்கினான்.

அப்பொழுது சிவாஜி மகாராஜா பெருமை பொருந்திய பிரதாப்கட் துர்க்கம் வந்து தங்கி யிருந்தார். ஒரு தூதுவனை அனுப்பி சிவாஜியை வஞ்சனையால் வரச் செய்து லேசாகச் சிறைசெய்து விடலாமென்று கான் நினைத்திருந்தான். ஆனால் சிவாஜி அதை அறிந்து கொண்டார். அதனால் கானே பிரதாப்கட்டுக்கு வர நேர்ந்தது. கானைக் கொன்று அவன் கடையையும் அழிக்க வேண்டிய ஏற்பாடுகளை மகாராஜா துரிதமாகச் செய்தார். ஓய் வெடுத்துக் கொள்ளும்படி விடப்பட்ட வீரர்களிடம் தூதுவரை அனுப்பினார்.

ஒரு நாள் மாலை நேரம் சூரியன் மலைச் சிகரங்களில் மறைந்து கொண்டிருந்தான். மலைச்சாரல் ரம்மியமாகப் பொலிவு பெற்று விளங்கியது. பறவைகள் ஆரவாரஞ் செய்தன.

தூரத்திலிருந்து வரும் அருவிகளின் சல சலப்பு மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பிரதாப்ராவ் தாராவையுங் கூட்டிக் கொண்டு காயத்திரியின் கரையில் வந்து சேர்ந்தான். அங்குள்ள இயற்கையின் சௌந்தர்யத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். பிரதாப் தாராவைத் தன்னருகில் அணைத்துக்கொண்டு விளையாடினான். தங்களைச் சூழ்ந்துள்ள இயற்கை யின் பொழிலை ஒவ்வொன்றாக அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் யுத்த பூமியில் வாளும் கையுமாகத் திரிந்து உயிர்க்கொலை புரிந்து மகிழ்ந்த அந்த மராட்டிய வீரனது உள்ளத்திலே கவித்துவமும், அமைதியும் ததும்பி வழிந்தன. அவர்கள் வெளியுலகத்தை மறந்து இன்பத்தில் லயித்திருந்தார்கள்.

மலையில் அடியிலிருக்கும் ரஸ்தா மலைமேல் இருப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரி யும். இதனால் ரஸ்தாவின் குதிரையில் வந்து கொண்டிருந்த ஒருவனை அவர்கள் கண் டார்கள். சிவாஜி மகாராஜாவின் கட்டளைப்படி தன்னை அழைத்துச் செல்வதற்காகவே அவன் வந்திருக்கின்றான் என்பதைப் பிரதாப் தெரிந்து கொண்டான். திடீர் என்று அவன் முகத்தில் இருள் குவிந்து கொண்டது. சடுதியில் ஏற்பட்ட இம்மாற்றத்தைத் தாரா நன்கு கவனித்துக் கொண்டாள். பிரதாப் அவளை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான். போகும் பொழுது அவன் உள்ளத்தின் வேட்கை தானாகவே வெளிக் கிளம்பிவிட்டது.

“தாரா! மகாராஜாவே அவனை என்னிடம் அனுப்பியிருக்கிறார். இனி மகாராஜாவிடம் போக எனக்குப் பிரியமில்லை.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்”

“ஐயோ! இனி எனக்கு யுத்தஞ் செய்ய இஷ்டமில்லையே!”

“தாய்நாட்டின் கௌரவத்தைக் காப்பது கடமையல்லவா?” “அதற்கு நான் என்ன செய்வது?”

“உடனே மகாராஜாவிடம் புறப்பட்டுச் சென்று அவர் இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய வேண் டியதுதான்.”

“தாரா! உன்னைப் பிரிந்தால் எனக்குச் சோர்வு ஏற்பட்டுவிடும். எப்படி யுத்த பூமியில் நினைத்துப் போர் செய்ய என்னால் இயலும்?”

“தாங்களுடன் கூட நானும் வருகிறேன்.” “நீ அங்கே வந்து என்ன செய்வாய்?”

“தங்களுடன் கோட்டை வரையிலும் வருகிறேன். யுத்தம் முடிந்ததும் உடனே சந்திக்கலாம். கடமையைச் செய்யத் தவறினால் நமக்குச் சுகம் ஏது? தாய் நாட்டின் சாபத்துக்கு இலக்காக வேண்டுமல்லவா?”

இதற்குள் வீட்டை அடைந்து விட்டார்கள். தாராவின் வார்த்தைகளைத் தட்ட அவனுக் குச் சக்தி வரவில்லை . அதனால் அவள் பேச்சுக்குக் கட்டுப் பட்டான். தூதன் சிவாஜி மகாராஜா வின் முத்திரையிட்ட ஓலையைப் பிரதாப்ராவின் கையில் கொடுத்தான். மூவரும் குதிரை களிற் புறப்பட்டார்கள். வழியெல்லாம் தாரா அவனுடைய மனத்தில் உற்சாகம் உண்டாகும்படியான பேச்சுக்களைப் பேசிக்கொண்டே போனாள். அவனுடைய மனத்தில் அடிக்கடி சபலம் தட்டிக் கொண்டிருந்தது. வரவர அமைதியற்றவனாகவே காணப்பட்டான். பிரதாப்கட் நெருங்கிவிட்டது. தாராவை ஒரு பந்தோபஸ்தான இடத்திற்கு கொண்டு போய் விட்டு அவன் மகாராஜாவிடம் புறப்படத் தயாரானான். தாரா அவனது உடைவாளை எடுத்து “பவானி தேவி! எங்களுக்கு வெற்றியும் இன்பமும் தந்தருள்” என்று வணங்கிப் பிரதாப்ராவின் கையில் அதைக் கொடுத்து உற்சாகமாக வழி அனுப்பினாள்.

அடுத்த நாளே அப்ஸீல்லாகான் பிரதாப் கட்டுக்கு வருவதாக இருந்தான். இதற்குரிய ஏற் பாடுகள் மகாராஜாவின் கட்டளைப்படி நடந்துகொண்டிருந்தன. மகாராஜா படைத் தலை வர்களை அழைத்து. கானின் படைகளை எதிர்க்க வேண்டிய வசதிகளைச் சொல்லிக் கொண் டிருந்தார். மகாராஜாவைக் கண்டதும் பிரதாப் வணங்கி நின்றான். அவர் அவனை அன் போடு வரவேற்று ஒரு பெரும் படையை நடத்தும் பொறுப்பை அளித்ததைப் பெருமையாக ஏற்றுக் கொண்டான்.

மறுநாள் கான் தன் பெரிய படையுடன் வந்து கொண்டிருந்தான். முன் பேசிக்கொண்டிருந்தபடி அப்படை துர்க்கத்துக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்து. கான் கள்ள நெஞ்சுடனே சில மெய்க்காப்பாளர்களோடு உள்ளே புகுந்தான். ஆனால் அவன் மறுபடியும் அதனின்று வெளி யேறி சிவாஜியுடைய படையை எதிர்க்க வேண்டியதற்கான குறிப்பொன்று துர்க்கத்திலிருந்து எழுந்தது. இந்த எதிர்பாராத நிலைமையைச் சமாளிக்க முடியாமல் கானினுடைய சைனியம் புறங்காட்டியது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அநேகர் சிவாஜியின் வீரர்களுக்குத் தலைவணங்கி நின்றார்கள்.

பிணங்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. மராட்டியர்களுடைய உடைகளும் வாள்களும் ரத்தந்தோய்ந்து பிரகாசித்தன. வெற்றியின் அறிகுறியாக முழங்கும் முரசுகளின் ஓசை வெகு தூரம் வரைக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. பிரதாப் வெற்றி கொண்டு நின்ற தனது படையைக் கோட்டையை நோக்கி நடத்திக் கொண்டு வந்தான். வீரர்கள் வெற்றியின் சந்தோஷத்தால் வெறிகொண்டு ஆரவாரஞ் செய்து குதிரைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். பிரதாப் ராவின் குதிரை எல்லோருக்கும் முன்பு கம்பீரமாக நடந்து சென்றது. சிறிது தூரத்தில் ஒரு மராட்டிய இளைஞன் வந்துகொண்டிருந்தான். கையில் வாளும், வீரக் கழலும் கச்சையும் வழிந்து கொண்டிருக்கும் ரத்தமுடைய அவன் தோற்றமும் அந்த யுத்த பூமியை அழகு செய் தது. யுத்தத்திற்பட்ட அடியினாற் தளர்ந்து தடுமாறிக் கொண்டே வந்து விழுந்து விட்டான். பிர தாப் குதிரையை விட்டு இறங்கிச் சென்று அவனை எடுத்து நிறுத்தினான். சிறிது நேரம் வரை பிரதாப் அசையாதிருந்தான். அவன் சரீரம் நடுங்கியது. கண்களில் நீர் நிறைந்து வழிந்தோடியது. சடுதியில் எங்கும் அமைதி நிலவியது.

பிரதாப் யுத்த வீரன் வேஷத்தில் விளங்கிய தன் காதலியைக் கைகளில் ஏந்திக் கொண்டு துர்க்கத்தை நோக்கி நடந்தான். தாராவின் கையிலுள்ள வாள் இன்னும் நழுவிவிடவில்லை. அவள் கண்களினின்றும் நீர் ரத்தத்தோடு வழிந்தோடிக் கொண்டிருந்தது. சிவாஜி தூரத்தில் வந்து கொண்டிருந்த பிரதாப்ராவின் தோற்றத்தைக் கண்டு எல்லோரையும் விலக்கிக் கொண்டு அவனுக்கு அருகில் வந்து நின்றார். அவன் மகாராஜாவை வணங்கித் தன் காத லியை மடியில் வைத்துக் கொண்டு விம்மினான். தாரா சிறிது கண்ணை விழித்துப் பார்த்தாள். தன் கையிலிருந்த வாளைச் சிவாஜியின் பாதங்களில் வைத்து “மகாராஜா! தங்களுக் குப் பவானி வெற்றியைக் கொடுப்பாள்” என்றாள். கணவன் பக்கம் திரும்பி “நான் என் கடமை யைச் செய்து விட்டேன். தாங்களும் தவறிவிடலாகாது. நாம் மராட்டியர்” என்று சொல்லித் தன் பதியை அணைத்துக் கொண்டு கண்ணை மூடினாள். சிவாஜி மன்னர் கண்களும் கலங்கின.

அவள் ஞாபகத்துக்காகத் தான் சிவாஜி அங்கே பவானிக்கு ஓர் ஆலயம் கட்டுவித்தார்.

– கலைமகள், 1938, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *