தானியங்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 6,199 
 

“நீங்கதான் என்னோட அம்மாவா?”

சாதாரணக் கேள்வியா அது?

கல்லூரிக் காலப் புகைப்பட ஆல்பம் திடீரெனக் கையில் அகப்பட்டால், படபடவென நினைவுகள் பொங்கி வருமே! அதுபோல அந்தக் கேள்வியும் எழிலரசிக்கு பலபல நினைவுகளை எழுப்பிவிட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழிலரசியின் முகம் பல வண்ணங்களை மாறிமாறிப் பிரதிபலித்தது.

கேள்வி கேட்ட மதுமிதாவோ தன் கைகளில் மாட்டியிருந்த வெண்ணிற ’ஃபிட்-மைண்ட்’(Fit-Mind)’ வளையத்தை உருட்டிக்கொண்டே பதிலை எதிர்பார்த்து எழிலை நோக்கினாள்.

கேள்வி கேட்ட பெதும்பை தன்னையே பார்த்திருப்பது அந்த மடந்தைக்குப் புரிய, எழில் மெதுவாக அவள் பக்கம் திரும்பினாள்.

“மது, ஏற்கனவே மணி பதினொண்ணு ஆச்சு. வெயில் எரிக்குது. கிளம்பு. இன்னைக்குப் பயிற்சி போதும். நாளைக்குப் பார்க்கலாம்”

மதுமிதாவின் முகம் வாடியது.

***

மறுநாள். பரபரப்பில்லாத ஞாயிறு. இலைகளினூடே இளங்கதிரவன் உடலை இதமாகத் தடவ, ஓடுவதற்கேற்ற காலணிகளை அணிந்துகொண்டு 5.5 அடி உயரப் பெண்கள் இருவர் கடற்கரை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

”மது, இப்பல்லாம் நிறைய நேரம் ஓடுறதைத் தாக்குப்பிடிக்க ஆரம்பிச்சுட்ட. பயிற்சி சிறப்பா செய்யற. இந்தத் தடவை 42 கி.மீ. முழு மராத்தன் ஓட்டப்பந்தயத்தை ஓடி முடிச்சுடுவ போல இருக்கே?”

பாராட்டைக் கேட்டு, மதுமிதாவின் உள்ளம் துள்ளிக் குதித்தது.

”நீங்க போனமுறை ஓடினப்ப முழு மராத்தனை முடிக்க எவ்ளோ நேரம் எடுத்துக்கிட்டீங்க?”

”சரியா 6 மணிநேரம் 23 நிமிடங்கள் ஆச்சு. உன்னோட வயசுக்கு நீ 4 மணி நேரத்திலேயே முடிக்க முடியும். நம்பிக்கையோட ஓடு!”

படாரென்ற சத்தம் அவர்களின் உரையாடலைக் கலைத்தது. புகைமூட்டம் அவர்களிருவரையும் சூழ்ந்தது. கையை உதறிக்கொண்டிருந்த மதுமிதாவை சில வினாடிகளில் கவனித்த எழில், ”மது, மது” என்று அலறினாள். துடிக்கும் மதுவை எழிலால் தாங்கிப்பிடிக்கவும் முடியவில்லை.

நரம்புகளுக்கு அதிர்வுகளைச் செலுத்துவதன் மூலம் கவலையைப் போக்கவைக்கும் ‘ஃபிட்-மைண்ட்’ வளையத்தினுள் இருந்த மின்னணு பொருள் பழுதுபட்டதே அங்கே எழுந்த புகைக்கான காரணம். தனது கைகளில் எரிச்சலை உணர்ந்த மது அந்த வளையத்தைப் பலம்கொண்ட மட்டும் பிய்த்துத் தூக்கி எறிந்தாள்.

தரையில் விழுந்த ’ஃபிட்-மைண்ட்’ வளையம் தீப்பிடித்துக்கொண்டது. உருகிய அதன் பாகங்கள் சாலையில் ஒட்டிக்கொண்டன.

அன்று மதியம், மருத்துவமனையில் கையில் கட்டுப்போட்டுப் படுக்கையில் சோர்ந்து கிடந்த மதுவின் அருகில் எழில் அமர்ந்திருந்தாள். காயம் பலமாக இல்லை. ஆனால், மது பயந்திருந்தாள்.

”உன்னோட வயசுல நானும் ஒரு தடவை இப்படித்தான் அடிபட்டுப் படுத்திருந்தேன். போட்டிக்கு ஓடும்போது, உருண்டு விழுந்து பெரிய அடி. இப்ப பாரு, கையில காயம் ஒண்ணுமே தெரியலை. உனக்கு ஒண்ணும் ஆகாது.” என்ற எழிலைப் பார்த்து மது புன்னகைத்தாள்.

”உங்க சின்ன வயசிலேயே நிறைய பரிசு வாங்கி இருக்கீங்கதானே?”

”பரிசு எல்லாம் ரொம்ப காலம் ஓடிப் பயிற்சி பெற்றதுக்கு அப்புறம்தான் கிடைக்க ஆரம்பிச்சுது. எனக்கு 6 வயசா இருந்தபோதே அப்பாவோட சேர்ந்து நானும் ஓடுவேன். எப்ப பாரு ஓடிக்கிட்டே இருந்தேன். போன பிறப்பில மன்னர்களுக்கிடையே செய்தி அனுப்பும் தூதனாக ஓடிக்கொண்டே இருந்திருப்பேன்னு சொல்லி எங்க அம்மா என்னைச் சீண்டிகிட்டே இருப்பாங்க.”

மதுவிற்குச் சிரிப்பு வந்து புரை ஏறியது. அவளுடைய தலையைத் தட்டிய எழிலுக்கும் சிரிப்பு வந்தது.

”எங்கெல்லாம் ஓட்டப்பந்தயம் நடக்குதோ, அங்கெல்லாம் நான் கண்டிப்பா போய்க் கலந்துகிட்டேன். அப்பல்லாம் செருப்பு கூடக் கிடையாது. பயிற்சிக்காகப் பள்ளி மைதானத்துல வெறுங்கால்ல ஓடுவோம்”

வாயைப் பிளந்தபடி கதை கேட்க ஆரம்பித்தாள் மதுமிதா.

உணவைத் தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடச் சிரமப்பட்ட மதுவிடமிருந்து முள்கரண்டியை வாங்கிய எழில், அவளுக்கு உணவை ஊட்டத் துவங்கினாள். மதுவிற்கு வீட்டில் யாராவது ஊட்டுவதற்கான கொடுப்பினை இல்லை. அவளுடைய மனம் நெகிழ்ந்தது.

ஊட்டுவதால் உறவுகள் வலுப்பெறும். ஒருவர் மேல் நம்பகத்தன்மையும் கூடும் என்பதைப் பல மனிதகுலங்கள் நம்புகின்றன. எழில் ஊட்டுவதால் இவர்களிடையேயும் நெருக்கம் மேலும் அதிகமானது.

”எந்த ஓர் ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்னு சொல்வீங்களே. நீங்க மட்டும் எப்படி, இப்ப வரைக்கும் தொடர்ந்து சிறப்பா ஓடிட்டு இருக்கீங்க? என்னால கூட உங்களை இன்னமும் மிஞ்சவே முடியலை!” என்று மது வருத்தமாக இருப்பதுபோல நடிக்க, இருவரும் மீண்டும் குபீரென்று சிரித்தனர்.

”முடிவு கட்டறதுக்கும் ஒரு நேரம் வந்துச்சு!”

”என்ன, என்ன? அதைப் பத்திச் சொல்லுங்க” அர்வத்துடன் மது கேட்டாள்.

”கல்யாணத்திற்கு அப்புறம் நான் ஓடுறதை நிறுத்தணும்னு என்னைக் கல்யாணம் செஞ்சிக்க இருந்தவர் சொன்னார்.”

”அடாவடியா இருக்கே. இந்த மாதிரிச் சொல்லக்கூடிய ஆள் அப்படின்னு என்று உங்களுக்கு முன்னாடியே ஏன் தெரியலை?”

”கல்யாணத்துக்கு அப்புறம் பெண் வேறுன்னு நினைக்கறவங்க இந்தக் காலத்திலேயும் இருக்காங்களே!”

கோபமும் கிண்டலும் கலந்த தொணியில் மதுமிதா ”ஓட்டத்தை விட்டீங்களா, கல்யாணத்தை விட்டீங்களா?” எனவும், அவள் முடிப்பதற்குள் எழில் இடைமறித்தாள்.

”அப்படிப்பட்ட ஒருத்தனைக் கல்யாணம் செய்யறதாவது? அது நடக்காத காரியம். கணவன் என்பவன் பெண்ணோட முன்னேற்றத்துக்கும் ஆர்வத்துக்கும் துணையா இருக்கணும். தடையாக இருக்கக் கூடாதுன்னு எனக்கு அப்பவே தோணிச்சு.”

”ஆனா, கல்யாணத்தை நிறுத்த உங்களுக்குத் தயக்கம் வரலையா?”

”தயக்கமே இல்லை. ஓட்டமா வாழ்க்கையான்னு போராட்டமே தோணலை. எனக்கு ஓட்டத்துடன் வாழ்க்கைன்னு தெளிவா முடிவெடுத்தேன். என் கனவுகளுக்குத் தடை போடறவர் யாராக இருந்தாலும், என் வாழ்வில் அவர்களுக்கு இடமில்லைன்னு சொல்லிட்டேன்.”

”நீங்க ஏன் என் அம்மாவா இருக்கக்கூடாது?” என்று வாய்விட்டே மது இன்று மறுபடியும் கேட்டாள்.

மதுவும் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம், இப்படிக் கேட்பதும், எழில் பதிலேதும் சொல்லாமல் இருப்பதும், அவர்களுக்கிடையே ஒரு விளையாட்டாகிப் போனது.

இவர்களிடையே இன்னதென்று சொல்லமுடியாத உறவு நிலைத்திருந்தது.

ஒவ்வொரு முறையும் மதுமிதாவின் கேள்வி எழிலை நிலைகுலைய வைத்தது. இளையவள் அன்பைத் தேடுகிறாளா அல்லது அம்மா என்ற பெண்மணியைத் தேடுகிறாளா?

பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், குற்ற உணர்வில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட மதுமிதாவிற்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு தனி நேரம் ஒதுக்கித் தமிழ் பயிற்றுவிக்க ஆரம்பித்தாள் எழிலரசி.

அப்பொழுதுதான், மதுமிதா உடல்வலிமையில் சிறந்திருப்பதை எழில் கண்டறிந்தாள். புத்தகத்தைப் படித்து மதிப்பெண் பெறுவதில் ஆர்வம் இல்லாத மதுமிதா போட்டிகளுக்கு எளிதாகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் திறன் பெற்றிருந்தாள்.

கடந்த இரண்டாண்டுகளாக இருவரும் ஒன்றாகப் பயின்று பல பந்தயங்களில் கலந்துகொண்டனர். தன்னம்பிக்கை அதிகமானதால், இப்பொழுதெல்லாம் மதுமிதா பள்ளிப் பாடத்திலும் ஓரளவு மதிப்பெண்கள் பெறுகிறாள். அவளுடைய மன இறுக்கமும் தளர்ந்துள்ளது.

***

திங்கட்கிழமை காலையில், நகரத்தின் வேறொரு கோடியில் பலவிதக் கண்காணிப்புக் கருவிகளுக்கு நடுவில் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். மதுமிதாவிற்கு ஏற்பட்ட விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். தகவல்களின் நம்பகத்தன்மையை வைத்துத்தான் என்னுடைய ஆராய்ச்சியைத் தொடர முடியும்.

2020-ஆம் ஆண்டுமுதல் மன உளைச்சலே மிகப்பெரிய வியாதியாக அமையப் போவதாக ஆய்வுகள் சொல்லி வருகின்றன. அதற்குள், என்னுடைய ஆராய்ச்சியை முடித்து, முழுமையாகச் செயல்படும் சாதனத்தை உருவாக்குவதற்குத் தயாராக வேண்டும்.

தனிமையை முறியடிப்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் முக்கியப் பணி. ஆராய்ச்சி முடியும் தறுவாயில் இருக்கிறது. என் ஆராய்ச்சியின் தீர்வுகள் சரிதான். ‘ஃபிட்-மைண்ட்’ சாதனத்தை உற்பத்தி செய்வதில் என்ன கோளாறு என்று மட்டும் கண்டுபிடித்துச் சரிசெய்யச் சொல்லவேண்டும்.

வாசற்கதவில் தொங்கும் மணி கிணுகிணுக்க, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர் அடுத்த வினாடியே கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார்.

”நீங்க மருத்துவர்தானே? தொழில்நுட்பப் பொறியாளர் வேலையெல்லாம் உங்களுக்கு எதுக்கு? இந்த வளையத்தைப் போடச்சொல்லி ஏன் குடுத்தீங்க? இதைக் கட்டினா, மனசு சாந்தமா இருக்கு. அதுக்காக நாங்க உபயோகிக்கிறோம். ஆனா, இதில முழு பாதுகாப்பு இல்லைன்னு ஏன் நீங்க எனக்கு முன்னாடியே சொல்லலை?” என்று படபடத்தாள் எழிலரசி.

தனது நீல நிற ‘ஃபிட்-மைண்ட்’ வளையத்தைக் கழட்டி மேசையின் மேல் தூக்கிப்போட்டார். ”இதை இனி நான் போடமாட்டேன்” என்று திட்டவட்டமாகச் சொன்ன அவளுடைய கோபத்தில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

”நான் உங்க முடிவை ஏத்துக்கறேன். நீங்க இனி வளையம் போடவேணாம். என்னோட ஆராய்ச்சி முடியும் தருவாயில் இருக்கு. நீங்க என் ஆராய்ச்சிக்கு வட்டத்துக்குள்ள தொடர்ந்து இருப்பீங்க என்பதை மறக்காதீங்க!”

என்னைக் குழப்பத்துடன் பார்த்த எழில், மையமாகத் தலையாட்டினார்.

”கவலைப்படாதீங்க. உங்களோட மனநிலை தொடர்ந்து நிதானமா, நிம்மதியா, மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். எப்ப உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னு தோணினாலும், உடனே என்னைத் தொடர்புகொள்ளணும்.”

20 வயதில் பல சவால்களைத் தாங்கிய எழிரசியால், 38 வயதில் தனிமையைத் தாங்கமுடியவில்லை. தற்கொலை செய்யும் தருவாயில் இருந்த அவரைத் தோழி ஒருத்தி, என்னிடம் அழைத்து வந்தாள். என்னுடைய ஆராய்ச்சியை விளக்கினேன். அதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட அவரின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மதுமிதாவையும் என்னுடைய ஆராய்ச்சியில் பங்குபெறப் பரிந்துரைத்தார்.

முந்தைய நாள், மெதுவோட்டம் ஓடியபொழுது மதுமிதாவிற்கும் சரி, எழிலரசிக்கும் சரி, மிதமான மனநிலையையே நான் கண்காணிக்கும் கருவி காட்டுகிறது. இந்தக் காலத்தில் மனிதர்கள் தனிமையிலேயே இருக்க விரும்புகிறார்கள். ஆனால், மன உளைச்சலில் ஏற்படும்பொழுது வேறொருவர் உடன் இருந்தால், தற்கொலை, தாழ்வுணர்ச்சி போன்ற எண்ணங்கள் மறையும்.

ஒருவரின் மனம் நிலை குலையும்பொழுது, அவருக்குச் சீரான மன அமைதியைக் கொடுத்து அவர்களை நிதானப்படுத்த ’ஃபிட்-மைண்ட்’ தானாகவே காந்த அலைகளை வெளியாக்கும். அதற்கேற்றபடி அது தோழமையை ஈர்த்து, தனிமையை விரட்டும். மதுமதிக்கும் எழிலரசிக்கும் இடையே தோழமை ஏற்பட்டு, அவர்களைக் காத்து ’ஃபிட்-மைண்ட்’ சாதனம் இதுவரை நன்றாகவே வேலை செய்துள்ளது.

வெடிச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிட்டால், இந்தச் சாதனம் பெரும் அளவில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும். அதன்பின், அனைத்து மக்களும் உபயோகப்படுத்த முடியும்.

எழிலரசி வெளியேறி பிறகு, மிகுந்த முனைப்புடன் வேலையில் ஈடுபட்டேன். இன்று முதல், அவர்கள் இருவரிடமும் ‘ஃபிட்-மைண்ட்’ சாதனம் இருக்கப்போவது இல்லை.

மிதிவண்டி ஓட்டுவது என்றாவது மறக்குமா? மதுமிதாவிற்கும் எழிலரசிக்கும் இடையே ஏற்பட்ட அன்பு மட்டும் மறக்கப்படுமா, என்ன?

இந்தப் புதிருக்கு இயற்கையிடம் பதில் கிடைக்குமா?

– சிங்கப்பூர் – சண்டே முரசு – 2018-2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *