கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 7,269 
 
 

வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றும் வழுக்கிக் கொண்டு விழ, செருப்பை உதறிய வேகத்திலேயே, தன் வெறுப்பை பதிவு செய்தான், மனோகர். குத்து மதிப்பாய் கோபத்தின் டெசிபல் சொல்லாமல் புரிந்தது.

பையை டேபிளில் விசிறியடித்து, உள்ளே போய், உடை மாற்றி வந்தபோதும், உக்கிரம் இன்னும் தணிந்திருக்கவில்லை. காபி தந்த பத்மினியை எரிச்சலாய், பார்த்தான்.

“என்ன சூடே இல்லை.”

“அதான், நீங்க இருக்கீங்களே…” என்றாள், கேலியாக.

“உனக்கும், நக்கலா இருக்குல்ல… எல்லாம் என் நேரம், உன்னை வச்சு குடித்தனம் பண்ணிட்டு இருக்கேன்ல்ல… எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.”

எள்ளும், கொள்ளும் ஏகத்துக்கும் பொரிய, வார்த்தைகளில் கொஞ்சம் பின் தங்கினாள்.

“அதை வச்சிடுங்க, வேற காபி கொண்டு வர்றேன்,” என்ற, பத்மினியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், காபியை குடித்து டம்ளரை, ‘ணங்’கென டேபிளில் வைத்தான்.

மனசு மட்டும் ஆறவே மாட்டேன் என்று அடம் பிடித்தது. வயது, 50ஐ தொடப் போகிறது. இன்னும் கூட வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க ஆற்றாமையோடு காத்திருப்பது எத்தனை வேதனை.

இது, நான்காவது முறை. முதல் முறை இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. ‘ப்ரமோஷன், இன்க்ரிமென்டு’க்கு காத்திருப்பது, அலுப்பாக இருந்தது.

துறை தேர்வெல்லாம் எழுதி, அதில் தேர்வான பிறகு தான், அடுத்த கட்ட நகர்வுக்கு போக முடியும். நாலில் மூன்று முறை தேர்வாகியும், ஏதோ காரணங்களால் வாய்ப்பு தட்டிப் போனது அல்லது தட்டிப் பறிக்கப்பட்டது.

இந்த முறை, நிறைய நம்பிக்கையோடு இருந்தான். சர்வீஸ் நாட்களும், சல்லடையில் நீராக ஒழுகிக் கொண்டிருக்க, ஒருமுறை, ‘ப்ரமோஷன், இன்க்ரிமென்டு’ பார்த்து விட்டால், ‘பென்ஷன்’ வாங்கும்போது, கை வரவு கணிசமாக இருக்கும் என்பது, நியாயமான ஆசை தான்.

“என்னாச்சு, ஏன் கோபம்… சொன்னாத்தானே தெரியும்,” என்றாள் பத்மினி.

“இந்த முறையும், ‘ப்ரமோஷன்’ போச்சு. எனக்கு பின்னாடி வந்த எல்லாரும் பதவி உயர்வில் போயாச்சு. நான் மட்டும் நின்ன இடத்திலேயே தேங்கி நிற்கிறேன்.”

நிஜமாகவே வருத்தமாகத்தான் இருந்தது. மனோகர், வேலையில் திறமைசாலி என்பது, அவளுக்கும் நன்கு தெரியும்; ஒரு பதவி உயர்வுக்காக நீண்ட காத்திருப்பில் இருக்கிறான் என்றும் தெரியும்.

“நல்லாத்தானே தேர்வு எழுதி இருக்கிறதா சொன்னீங்க.”

“ஆமாம், தேர்வும் ஆயிட்டேன். ஆனால், மேலிடத்துக்கு, ‘ரெகமன்டேஷன்’ போய் இருக்கு. அதனால, ‘வாய்ப்பு, ஆழ்வார் திருநகர் பிராஞ்சிலிருந்து வேற ஒருத்தருக்கு போயாச்சு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ன்னு எனக்கு, ‘மெயில்’ அனுப்பியிருக்காங்க. ‘அட, போங்கய்யா’ன்னு இருக்கு, எனக்கு.”

கையில் இருந்த பொருளை சுவற்றில் விசிறியடித்து, எழுந்து உள்ளே சென்றவனைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது.

இந்த மனநிலையில் இருப்பவனிடம் எப்படி மற்றதைப் பேசுவது என, சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, மொபைல் போன் அழைக்க, போய் எடுத்தாள்.

“அக்கா, காலையில, ‘ஷார்ப்’பா, 4:00 மணிக்கு வேன் வந்திடும். இப்பத்தான் டிராவல்சிலிருந்து போன் வந்தது. எல்லாரையும் அழைச்சிட்டு உன் வீட்டுக்கு வர மணி, 6:00 ஆயிடும்.

“நான் தயிர் சாதம், புளி சாதம் தயார் பண்ணிட்டு வர்றேன். நீங்க, தக்காளி சாதம், ப்ரிஞ்சி ஏதாச்சும் பண்ணிடுங்க. நொறுக்குத்தீனி எதா இருந்தாலும் ஓ.கே.,” என்றாள், தங்கை மாலதி.

சிந்தனையில், வார்த்தைகளை ஏற்றிக் கொள்ள முடியாமல் நின்றாள், பத்மினி.

“பார்த்துக்கலாம் மாலு, எனக்கு நினைவில் இருக்கு,” என, வைத்து விட்டாள்.

வெகு நாளைய திட்டமிடலுக்கு பின், நெருங்கிய உறவினர்கள் சகிதமாய், கோவில்களுக்கு சென்று வர, பயண ஏற்பாடு செய்திருந்தனர்.

சிலருக்கு, வேண்டுதல்; சிலருக்கு, காணிக்கை மிச்சம் இருந்தது. ‘கொரோனா’ மற்றும் ஊரடங்கு என்று, மனிதர்களை கட்டிப் போட்டிருந்த நிகழ்வுகள் மெல்ல விடுபட, இரண்டு நாட்கள் திருத்தலங்களுக்கு சென்று வர ஏற்பாடாகி இருந்தது.

கண்களை மூடி, இமைகள் துடிக்க அமர்ந்திருந்தான், மனோகர்.

‘இவனிடம் எப்படி நாளை கிளம்புவது பற்றி பேச…’ என்று குழப்பமாக, எதிரில் நின்றாள். கண்ணைத் திறந்தவன், புருவத்தை உயர்த்தி, “என்ன?” என்றான்.

“காலையில, 6:00 மணிக்கு வேன் வந்திடுமாம். இப்பத்தான், போன் பண்ணினாள், மாலதி. நீங்க ஆபிஸ்ல, ‘லீவ்’ சொல்லிட்டு வந்துட்டீங்கல்ல,” என்றாள் தயக்கத்தோடு.

“நான் வரலை, எனக்கு சாமி மேல இருந்த நம்பிக்கை எல்லாம் போச்சு. ஊரு உலகத்துல, ஏன் நம் சொந்த பந்தத்துல, என்னை மாதிரி ஒருத்தன் இருக்கானா… குடும்பம், குழந்தைங்களை தவிர, ஏதாவது தப்பா யோசிச்சு இருப்பேனா… ஒழுக்கத்துக்கும், நேர்மைக்கும், ஆண்டவன் தர்ற பரிசை பார்த்தியா…

“ஊரை அடிச்சு உலையில போடறவன், ஒழுக்கம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிறவன், ஏமாத்துறது, பித்தலாட்டம் செய்யிறவனுக்கு எளிமையா கிடைக்கிறது; அதெல்லாம் என்னன்னு கூட தெரியாதவங்களுக்கு கிடைக்கிறதில்லை.

“உன் தங்கச்சி மாலதி இருக்காளே, அவ புருஷன், பெத்த தாய் – தகப்பனை, கடைசி காலத்துல பார்த்துக்காம, அத்தனை கஷ்டப்படுத்தினான். என் தம்பி, குடி, பொம்பளைங்கன்னு இன்னை வரைக்கும் சுத்தி திரியறான். அவங்க வாழ்க்கையில எல்லாம் எந்த குறையும் இருக்கிற மாதிரி தெரியல.

“போன வருஷம் நம் ஊர் கோவில் குடமுழுக்குக்கு, 25 ஆயிரம் ரூபாய் தந்தேன். வருஷா வருஷம் குல தெய்வம் கோவிலுக்கு வேண்டியதை செலுத்த தவறி இருக்கேனா…

“அப்பா – அம்மாவை கடைசி வரைக்கும் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கிட்டேன். அவங்க பிறந்த நாள், இறந்த நாள்ன்னு எல்லாத்துக்கும் முதியோர் இல்லத்துல, இப்பவும் அன்னதானம் பண்றேன்.

“இத்தனை நேர்மைக்கும் இதுதான் பரிசுன்னா, எதுக்கு கோவில், குளத்துக்கு வரணும், நான் வரல. இனியொரு தடவை இதைப்பத்தி பேசாதே.”

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, எந்த பதிலும் சொல்லாமல், தன் வேலையைப் பார்க்க நகர்ந்தாள். கட்டு சாதம் கிளறும் வாசனை மூக்கைத் துளைத்தது. பேக்கிங்கில் மும்முரமாய் இருந்தாள். எதிலும் கலந்து கொள்ளாமல் விரைவாக படுக்கைக்கு சென்றான்.

எல்லாம் முடித்து படுகைக்கு வந்தாள்; மனோகர் இன்னும் உறங்காமல் இருப்பதை பார்த்து அருகில் அமர்ந்து, ஆதரவாய் தலைகோதியவளின் கைகளை தட்டி விட்டான்.

“கோபம் அடங்கிடுச்சா… காலையில, 6:00 மணிக்கு கிளம்பணும். 4:00 மணிக்கு எழுந்தா போதும். உங்க துணிகளை காலையில எடுத்து வச்சுக்கலாம்ல்ல,” என்றாள் இதமாக.

கட்டிலில் எழுந்தமர்ந்தவன் கண்களில் அனல் தோற்றது.

“வரலைன்னு சொன்னது கேட்கலயா… சாமியாவது, பூதமாவது, நல்லது கெட்டது தெரியாத சாமிகிட்ட, நியாயமெல்லாம் எதிர்பார்க்க முடியாதுன்னு இப்பத்தான் எனக்கு புரிஞ்சது. நீ போகணும்ன்னா போ. என்னை எங்கேயும் கூப்பிடாதே,” என்றதும், சுருக்கென்றது, பத்மினிக்கு.

“நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. ஒரு மனுஷன் ரணப்பட்டு நிற்கும் போது, யாரா இருந்தாலும் குணப்படுத்தத் தான் பேசணும். அதனால தான், நான் அமைதியாவே நின்னேன்.

“சாமிக்கு நல்லது கெட்டது தெரியாதா… யோசிச்சு பாருங்க, என் தங்கச்சி மாலதியை கோவில்ல பார்த்துட்டு, ரொம்ப பிடிச்சுப் போய் ஒரு டாக்டர் வரன் வந்ததே… இன்னொரு மாப்பிள்ளையா வீட்டுக்கு டாக்டர் வந்தால், மரியாதை குறைஞ்சிடும்ன்னு உங்களுக்கு, ‘ஈகோ!’

“என் அப்பாவை தனியா பார்த்து, ‘மாப்பிள்ளைக்கு குறை, அதை மறைக்கத்தான் இப்படி நம்மளை மாதிரி நடுத்தர வீட்டில் சம்பந்தம் பண்றாங்க’ன்னு சொல்லி, அந்த வரனை கலைச்சு விடல…

“அந்த உண்மை எனக்கே பல வருஷம் கழிச்சுத்தானே தெரிஞ்சுது. அப்படி ஆகி இருந்தா, பெத்தவங்களுக்கு கூட சோறு போடாத கிராதகன், என் தங்கச்சி வாழ்க்கைக்கு வந்திருக்காம இருந்திருப்பான், இல்ல…

“உங்க அப்பா – அம்மாவை பேணி பாதுகாத்தீங்க தான். ஆனால், தலை தீபாவளிக்கு, வைர மோதிரம் போடலைன்னு, என் அப்பாகிட்ட என்னையே பேச விடாம, என் குடும்பத்தாரை இந்த வீட்டு படியேற விடாம ரெண்டு வருஷம் வச்சிருந்தீங்களே, அதுக்கு பேர் என்ன?

“ஏலச் சீட்டு நடத்திட்டு இருந்த உங்க அலுவலக நண்பர் வேதாந்தம், திடீர்னு இறந்து போனார், கணக்கு வழக்கு புரியாத அவர் மனைவிகிட்ட, அந்த மாச தவணை பணத்தை கட்டாமலே, ‘வேதாந்தம் உயிரோட இருக்கும்போது வாங்கிட்டாரு’ன்னு சொல்லி, 15 ஆயிரம் ருபாயை ஏமாத்தல.

“அதுக்கு சாக்குபோக்கா, ‘பத்து வருஷமா அவர்கிட்ட சீட்டு போடறேன், என்னால எவ்வளவு லாபம் பார்த்து இருப்பார்’ன்னு நீங்களே நியாயம் கற்பிச்சுக்கல?

“வேலைக்காரி கன்னியம்மா புருஷனுக்கு உடம்பு முடியலைன்னு ஆஸ்பத்திரியில சேர்த்தப்போ, அங்கே உங்க நண்பர் தான், டாக்டர். நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, இலவசமா சிகிச்சை தந்திருப்பார்ன்னு தெரிஞ்சும், ‘இவளுக்காக எல்லாம் சிபாரிசு செஞ்சா, நமக்கு என்ன கிடைக்கப் போகுது; வேற நண்பர்களுக்கு செய்தா, அவங்களால நமக்கு நாளைக்கு வேற ஒரு உபகாரம் ஆகும்’ன்னு ஈவு இரக்கம் இல்லாம பேசல…

“கன்னியம்மா புருஷன் இறந்தப்ப, ஒரு உறுத்தலும் இல்லாம, ‘அவனுக்கு விதி அவ்வளவுதான்… நல்லவேளை, நாம ஒரு சிபாரிசை வீணாக்கல’ன்னு சொல்லல…

“இருபது ஆண்டு திருமண வாழ்க்கையில, உங்களைப் பத்தி வரிசைப்படுத்த, எனக்கு இன்னும் எத்தனையோ இருக்கு. நாம எல்லாம் ஒரு சுயநல கணக்காளர்கள். நமக்கு சவுகரியமா, ஒரு கணக்கு புத்தகத்தை வச்சிருப்போம். அதுல நாம செய்த சின்ன சின்ன நன்மைகளை கூட விஸ்தீரணமா பதிஞ்சுட்டு நிற்போம்.

“ஆனால், விருப்பு வெறுப்பு இல்லாதவர், இறைவன். அவர் போடற கணக்கு, பாவ கணக்கு இல்ல, தர்ம கணக்கு. நன்மை செய்யும் போது, கடவுள் பார்க்கிறார்ன்னு நம்புற நாம, பாவம் செய்யும் போது, கடவுளுக்கு கண் இருக்கிறத மறந்திடறோம்.

“அது நீங்க மட்டுமில்லை, எல்லாரும் தான். எப்பவும் நான் நல்லவன், எனக்கு கெட்டது நடக்குதுன்னு மட்டும் தான் யோசிக்கிறோம். இறைவன் துல்லியமா கணக்கு போடுவான்கிற பயமோ, நம்பிக்கையோ இருந்தா, இந்த சுயபரிசீலனையில் தப்பு வராது இல்லையா?

“எப்பவும் கொலை, கொள்ளை, குடி, சூது, துரோகம்கிற ஆயுள் தண்டனை கேஸ்களை மட்டும் தான் ஆண்டவன் பார்க்கிறதா, நம்புறோம். ஆனால், ஈகோ, கோபம், பொறாமை, ஏமாற்றுதல், பொய், அகம்பாவம் மற்றும் காழ்புணர்ச்சியால நடக்கிற தவறுகளை, நாம குற்றமா நம்பறதில்லை…

“ஏன்னா, அது எல்லா மனிதர்களிடமும் இருக்கு. நாம பரிசீலிக்க மறந்ததால, அது எல்லாம் பரிசுத்த செயல்கள் ஆகிடாது. இதையெல்லாம் உங்களை புண்படுத்த பேசல; மிச்சமிருக்க வாழ்நாளை பண்படுத்த பேசறேன். இதுக்கு மேலயும் உங்களுக்கு இஷ்டமில்லைன்னா, வற்புறுத்த மாட்டேன்,” என, நீண்ட பேச்சை முடித்து, கட்டிலில் சரிந்தாள்.

மனோகரன், மனம் நோகரன் ஆகி அமர்ந்திருந்தான்.

எழுந்து, குளித்து, தன் உடைமைகளை ஹாலில் கொண்டு வந்து வைத்து, நிமிர்ந்து பார்த்தாள். அறைக்குள் தன் உடைகளை பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், மனோகரன்.

ஆனந்த கண்ணீரோடு முகம் நிமிர்த்தி பார்த்தாள், பூஜையறையில் இருந்த சாமி படங்கள், அவளைப் பார்த்து புன்னகைப்பது போல் இருந்தது.

– டிசம்பர் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *