கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 1,887 
 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேதுரு ஓர் பிறவிக் குருடன். அவனை நான், முதன் முதல் கிண்ணியாத் துறையிலேதான் சந்தித்தேன்.

அன்று மட்டக் களப்பிலிருந்து திருகோணமலைக்கு வந்துகொண்டு இருந்தேன். பங்குனி மாதமாதலினால் நல்ல வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தது. தென் ஆப்பிரிக்கக் கதையொன்றில் வரும் கதாநாயகன் திடீர் என்று நரகத்திற் போய் நின்றபோது, அங்கு கேட்ட முக்கலும், முனகலும், புழுக்கமும், வேதனையும் பஸ்ஸிற் குள்ளும் கேட்டது. இந்த நரக வேதனையைத் தந்து கொண்டு ஓடிய பஸ், கிழக்கு மாகாணத்தின் தனி உரிமை யான துறைகளிற் சிறிது நேரம் தாமதிக்க நேர்ந்த போதெல்லாம் சிறிது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

கடைசியாக எங்கள் பஸ் கிண்ணியாத் துறையில் நின்றது. அந்தத் துறையையும் பாலப் பாதைமூலம் கடந்துவிட்டால், அதன்பின் நேராக திருகோணமலைக் குப் போய் விடலாம்.

பஸ்ஸிற்குள் இருந்தவர்கள் எல்லோரும் இறங் கினோம். பஸ்ஸும் பாதையில் ஏறிற்று

வெயில் நல்லார்க்கும் தீயார்க்கும் ஒன்றுபோல எறித்துக்கொண்டுதான் இருந்தது. என்றாலும் ஆளோடு ஆள் முட்டாமற் பாதையில் நின்றுகொண்டு இருப்பது சௌகரியமாகவே இருந்தது.

அப்போது அந்தப்பாட்டுக் காற்றில் மிதந்து வந்தது. புதுப் பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே…’ பேதுரு புதுப்புதுச் :சினிமாப் பாட்டுக்களைத் தப்பும் தவறுமாகப் பாட எங்குதான் கற்றுக்கொள்கிறானோ! அந்தக் கேள்வியை எல்லாம் கேட்டு நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. பாவம் அவனுக்குக் கண்ணைக் கொடுக்கத்தவறிய இறைவன் இனிய குரலை யாவது கொடுத்தானே. ஆறு ஏழு மணித்தியாலங் களாகப் பஸ்ஸிற்குள் அடைபட்டுக் கிடந்து அலுத்து வரும் பிரயாணிகட்கு, அந்தத் துறையில் நின்று அவன் ‘ வழங்கும் ஓசை’ வையம் பெறக்கூடியதாகத்தான் இருந்தது.

அந்தக் குரலைக் கேட்டு அவனைத் தெரிந்த, தெரியாத பிரயாணிகள் எல்லாரும் பேதுருலை வளைத்துக்கொண்டு நின்றோம் அவன் வாயிலிருந்து வந்த நாத வெள்ளத்தில் எல்லாரும், எல்லாமும் அப்படியே உருகிச் சிரக்கம்பம் செய்வதுபோலத்தான் தோன்றிற்று.

‘பாலப் பாதை’ போய்க் கொண்டேயிருந்தது. பேதுரு பாடிக்கொண்டே இருந்தான். நல்லெண்ணெய்க் கறுவல், கட்டுமஸ்தான உடற்கட்டு. வயதும் இருபத் தைந்து அல்லது அதற்குச் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். முகத்திலே உவர் நிலத்தில் முளைத்த புல்லுப் போல மதர்த்துக்கொண்டு திற்கும் நெருக்க மற்ற தாடி மயிர்; கையில் அந்தக்கோல்; முகத்திற் குருடன் என்று எழுதி ஒட்டியதுபோல, கண்கள் இருக்கவேண்டிய இடத் தில் தூர்ந்து போன குளம்மாதிரி இரண்டு பெரிய குழிகள்; அக்குழிகட்குமேலே நீட்டிக்கொண்டு நிற்கும் இமைக் கேசங்கள். மொத்தத்தில் சோற்றுக் கவலையே அற்ற ஆசாமியாகத்தான் பேதுரு காணப்பட்டான்.

பேதுரு தடவித் தடவிக்கொண்டே என் அருகில் வந்தான். இன்ன இடத்தில் ஆள் நிற்கிறான் என்பதை எப்படித்தான் கண்டுகொள்கிறானோ! அவன் கைக் கோலுக்குக் கண் இருக்கிறதோ என்னவோ? கோலை ஊன்றிக்கொண்டு முன்னால் வந்து நின்றாற், கையில் வைத்திருக்கும் தகரப் பேணியில் ‘நங்’ என்று காசு விழுந் தாலல்லாது மேலே நகருவதில்லை.

நானும் ஐந்து சதத்தைப் போட்டுவிட்டுப் பேணி யைப் பார்த்தேன். ஐம்பது சதமாவது அதற்குள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டபோது எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது.

இதற்கு இடையில் பாட்டு நின்றது. பேருதுவின் அபி மானியான ‘பஸ்’ சாரதி பேதுருவைக் கதை சொல்லும் படி கேட்டார். பேதுருவும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் மூன்று பிராமணப் பிள்ளைகள் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

இதற்கிடையில் பாலப்பாதை அடுத்த கரையை அடையவே நாங்கள் எல்லாரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு போக வேண்டியதாயிற்று.

இப்போது என்னை இந்த ஊருக்கு மாற்றி விட் டார்கள். என் உத்தியோகத்தின் பொருட்டு நான் ஒவ் வொரு நாளும் அந்தத் துறையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது கிண்ணியாத் துறையிற் பழைய ‘பேதுரு’ இல்லை. கழுத்திலே போட்டிருந்த சிலுவையை எடுத்து எங்கே எறிந்தானோ! நெற்றியிலும் மார்பிலும் திரு நீற்றைத் துலாம்பரமாகப் பூசிக்கொண்டு ‘மறு சம யங்கள் மாளப் பேதகஞ் செய்யும்’ பிஞ்ஞகனாய்த் தன் பூர்வாசிரமப் பேரான பஞ்சாட்சரத்தைத் தரித்துக் கொண்டு சிவப்பிழம்பாக நின்றான்! சினிமாப்பாட்டு மாறிப் போயிருக்கலாம். ஆனாற் பழைய விக்கிரமாதித் தன் கதை மட்டும் மாறவில்லை . ஆம், கதைகள் அமர சிருட்டிகள் அல்லவா?

நாள் ஆக ஆக நானும் பேதுருவும்- இல்லை பஞ்சாட் சரமும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பேதுரு, ஏன் பஞ்சாட்சரமானான் என்ற கவலையெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் என் ‘காசுப்பையின் கனத்தைப் பொறுத்து அவன் தகரப் பேணியில் ஒரு சதமோ ஐந்து சதமோ -நாளாந்தம் விழுந்துகொண்டு தான் இருந்தது.

அன்று …….

என் நண்பர் அருளப்பாவும் என்னோடு புஸ்ஸிற் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழக்கம்போலப் பேதுரு என்கிற பஞ்சாட்சரமும்-அல்லது பஞ்சாட்சரம் என்கிற பேதுருவும்-பாதையில் நின்று கானமழையைப் பொழிந்து கொண்டிருந்தான்.

நானும் வழக்கங்போல – ஐந்து சதத்தை எடுத்துத் தகரப்பேணியிற் போடப் போனேன். அச்சமயம் பக்கத் தில் நின்ற என் நண்பர் அருளப்பா என் சையைப் பிடித் தார். நான் திரும்பிப் பார்த்தேன். இதற்குள் என் கையில் இருந்த ஐந்து சதம் ‘ நங்’ என்று தகரப் பேணிக்குள் விழுந்து விட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்ட அருளப்பா சொன்னார். “முன்னெல்லாம் நானுந்தான் இந்தப் பயலுக்கு ஐந்து பத்தென்று கொடுப்பேன். இப்போ கொடுக்கிறதில்லை; கொடுக்கப்படாது” என்றார்.

”ஏன்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன் நான்,

நண்பர் சொன்னாா : “பாருங்க, இவன் முன்னர் எல்லாம் எப்படி இருந்தான். இப்ப கிறுக்குப் பிடித்துச் சாம்பலைப் பூசிச்கொண்டு திரிகிறான்.”

“அவன் ‘வேதக்காரன்’ என்பதற்காக நாம் அவனுக் குக் காசு கொடுக்க வேண்டியதில்லை. குருடன் என்ப தற்காகக் கொடுத்தால் என்ன?” என்று வாதாடிளேன் நான.

“அப்படிக் குருடன் என்று இரக்கம் பட்டதாற்தான், இவன் இப்படியெல்லாம் நம்மை அவமானப்படுத்துகி றான் இவனுக்கு ஒரு சதமும் கொடுக்கக்கூடாது” என்று ஆத்திரத்தோடு பேசினார் என் நண்பர்.

பாலப் பாதை அடுத்த கரைக்கு வந்துவிட்டது. பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். என் மனதில் நண்பரின் வாதம் தான் சுழன்று கொண்டிருந்தது. தருமம் கொடுப்பதற்குக் கூடவா இந்தப் பாகுபாடு?… அட கடவுளே!…

என் மனம் ஒரு நிலைப்படவில்லை என்னென்னவோ எண்ணிக் கொண்டு என்னருகே சிரத்தையோடு படித்துக் கொண்டு இருந்த சக பிரயாணியின் புத்தகத்தைக் கவனித்தேன். அது ‘கால் மார்க்ஸ்’ எழுதிய புத்தகம்; அதிலே ‘மதம் மக்கட்கு அபினி மருந்து’ என்று எழுதி யிருந்தது!

– ஈழகேசரி 1953

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *