தன்வினை தன்னையே சுடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 1,547 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய்….எத்தன் நாளா இந்தப் பழக்கம்…ம்…இன்னியோட தலமுழுவிடு…இல்ல…காலு எலும்பெல்லாம் முட்டிக்கு முட்டித் தட்டிடுவேன்” இன்ஸ்பெக்டர் சண்முகம் இடக்காலைச் சற்று வளைத்து, வலக்காலை ஊன்றி நிற்கும் தோரணையாலேயே பாதி பயந்துவிட்டான்; சத்தத்தையும் கேட்டவுடன், “மனுசனா! சிங்கமா!” என்று வியப்புடன் பயந்தான்.

“ம்…இத்தன் நாளா நா…இந்தச் சந்தக்கித் தண்டல் வசூல் பண்றவனா இருந்தே..ன். என்னைத்தூக்கிட்டு இப்ப இவரு…..என்னா பண்றது பா…ரவுடியார்ந்தா அவனப் பிச்சி ஒதறிடுவேன். இவருதான் காக்கி சட்டைக்காரர் ஆச்சே….” கவலையுடன், முனியன் அங்கிருந்து சென்றான்.

சந்தையிலிருந்து வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் சண்முகம். சாலை ஓரமாகக் கசங்கிய தாள் போன்று சுருங்கிய உடலை உடைய கிழவி, பழம் விற்றுக்கொண்டிருந்தாள்.

“ஏ…கௌவி…என்ன..பளம்? எப்டி? மலிவுதானா….ம்”

“ஆமாய்யா…… எதுவும் பண்ணிடாதீங்கய்யா…” வயதுக்கு மீறிய மரியாதையை அவள் தரும்போதே மூன்று வாழைப்பழச் சீப்புகளை எடுத்துத் தன் பையில் போட்டுக்கொண்டார்.

“பாவி…ஏன் என் வயித்தெரிச்சலக் கொட்டிக்கிறியோ… நல்லார்ப்பியா?” சாபம்தான் விட முடிந்தது அவளால்.

இரவு நேர ரோந்துப்பணியில் சண்முகம் தன் இஷ்ட போலீசாருடன் தாம்பரம் ரோட்டில் சுற்றிக்கொண்டிருந்தார்; அவர், தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருப்பவர். ஆனால், அவர் கண்காணிப்பதோ சுயநலத்துடன் காரணத்தோடு.

“எயிட் நாட் ஃபோர், அந்த ஸிக்னலைப் கூடிய போடு”. சிக்னலைப் போட்டதும், வேகமாக வந்த லாரி நின்றது. சண்முகம் அருகில் போய், சரக்குகளைக் கையிலிருந்த லத்தியால் தட்டிப் பார்த்தார்..

“ம்…அரிசியா…எவ்ளவ் பதுக்குறீங்க…என்ன அரிசி?”

“அதெல்லாம் இல்ல சார். இது டி..யு..சி..எஸ்.க்குப் போவுதுங்க”. டியுசிஎஸ் என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான உணவுப் பங்கீட்டு நிறுவனம்.

“யோவ், எறங்கய்யா…பெர்ரீய பிர்லா…மேலயே ஒக்காந்துருக்கியே? எறங்கிப் பதினஞ்சு மூட்டையை எறக்கு”.

“கேஸ் எதுவும் போடாதீங்க சார்!” தன் உடலை அஷ்டகோணலாக்கிக் கொண்டு கெஞ்சினான், லாரியின் டிரைவர்.

“ம்…ம்….கெளம்பு யாராவது கேட்டா எதுவும் சோதனை நடக்கலன்னு சொல்லு…இல்ல நாளக்கி இந்த வழிய வரமாட்ட..!” மிரட்டல் உருட்டலுடன் வழியனுப்பினார், இன்ஸ்பெக்டர். லாரி டிரைவர் விட்டால் போதும் என விரைந்தான்.

மறுநாள், பூந்தமல்லி செக்போஸ்ட் அருகில் வேலை; இன்று இவனுக்கு உதவியாக இவர்களது ஸ்டேஷன் ஆள் வேறு யாருமில்லை. எல்லாம் தெரிந்துதான், ஒரு மாதத்திற்கு முன்பே நாள் குறித்து, அந்த ராஜாராமின் கடத்தல் வண்டிக்கு வழி சொல்லியிருந்தான்.

“யோவ் நைன் நாட் ஸிக்ஸ்…எங்கய்யா வேடிக்க பாத்துட்ருக்க….டி. எம். எஸ். ஃபைவ் ஒன் ஸிக்ஸ் ஃபைவ் வரும். வரும். சிக்னலை சிக்னலை மெதுவாப் போட்டுட்டு, ஒரு ‘பண்டலை’ அப்டியே மெதுவா எடு. தவறிட்டாப் போச்சு. எங்கயாவது மறச்சு, கார்ல எடுத்திட்டுப் போங்க ஆளுக்குக் கால் பாட்டில் மெக்டோவ்ல் தரேன்…ம்…கேக்குதா…”, கேட்டதும்,

“யெஸ் ஸார்” பதில் வில்லிலிருந்து வெளிப்பட்ட அம்பாய் வந்தது. பத்தாவுக்கேற்ற பதிவிரதை என்பதுபோல முதலாளிக்கேற்ற காவலர்!

இரவு டியூட்டியை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றவனை, “ஏங்க இம்புட்டு நேரமா ஆச்சு? சீக்கிரமா வரக்கூடாது? ஆமா ஏன் ஒங்க கண்ணெல்லாம் செவந்திருக்கு?” என்றாள் அன்பு மனைவி.

“ஸைலன்ஸ்! போய்க் காபி எடுத்துட்டு வா…ம்…ம்”

வலிப்பு வந்த சிங்கமாக உறுமியவனைப் பார்த்து, “சே…. கஞ்சியில முக்குன காக்கித்துணி போட்டவொடனே எல்லார்க்கும் பெரிய அதிகாரம் பண்றவங்கன்னு நெனப்புப் போல ……. இவர்கிட்ட கழுத்தக் குடுத்தேன் பாரு” என்று கழுத்தைச் சொடுக்கிக் கொண்டு சென்றாள்.

“அப்பா நாளைக்கு எங்க ஸ்கூல்ல டிராமா காம்பட்டிஷன் நடக்குது. நானு இன்ஸ்பெக்டர் வேஷம் போடறேன்பா. நல்லவனா வர்றேமம்பா; வாங்கப்பா!” அன்பாகக் கெஞ்சிய மகளிடம், மனைவியிடம் காட்டிய முறுக்கைக் காட்டாது, பரிவாகப் பேசினார்.

“இல்ல ராதா என்னால முடியாதும்மா எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கும்மா. என்னோட மேலதிகாரியான ஏ சீ வரச் சொல்லியிருக்கார்…அடுத்த வருசம் வரன்ம்மா!”

“ம்… ஹூம்…போப்பா” வாடிய மலராய்க் கவலையுடன் ராதா சென்றாள்.

அன்று காலை…..

சண்முகம் தனது அலுவலக உடையை அணிந்து கொண்டு, “ஹேமா இங்க பாரு, நான் போன பின்னால் எவனாவது வந்து கேஸ மாத்தனும்னு சொன்னா, எவ்ளவ் வெட்றீங்கன்னு கேட்டு வச்சிக்கோ, ரெண்டுக்கு மேலத் தாண்டிட்டா நாளைக்கு வாங்கன்னு சொல்லு என்ன…? இன்ஸ்பெக்டர் வைய்ஃபா நடந்துக்க!!” என்றார்.

“ம்…இது ஒன்னுதான் கொறச்சல்…எங்க போய் முடியப்போவுதோ..?” மனத்துக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவனை அனுப்பி வைத்தாள்.

“வாங்க சார் எப்டி இருக்கீங்க! டெய்லி பார்ட்டி நடத்தறேன். ஆனாக்கூட அட்டெண்ட் பண்ண மாட்டன் றீங்களே!” கடத்தல் பேர்வழி ராமு போலியாக வரவேற்கிறான்.

“ஒன்னுமில்ல.. கொஞ்சம் வேல அதிகம் கேஸெல்லாம் நெறய வந்துருக்கு அதான்…. ம் இப்ப என்ன இம்பார்டண்ட்? மெக்டோலா….? ஜின்னா….? தொணைக்கிக் குஞ்சு பொரிக்காத கோழிதானே !….’ என்று மிருகமாய் மதுவையும் அதன் துணையையும் பற்றிப் பேசினார் சண்முகம்.

“பின்ன அது இல்லாமயா? வாங்க…. இங்க பாருங்க சார்…. இப்ப பிஸினஸ் கொஞ்சம் நொடிச்சிருக்கு. அதனால, இன்னும் பத்து நாளைக்குள்ள பெங்களூர் ரூட்ல எம் எஸ் பி முப்பத்தஞ்சு நாப்பதுன்ற நம்பர் பிளேட்டோட வர்ற லாரிய விட்ருங்க…அடுத்த நாளே பதினஞ்ச வெட்றேன்”

“அப்போ இப்ப எதுவும் இல்லயா…?”

“இருக்கு…ஒரு ரெண்டு மூணு தரேன்”

“என்ன மரியாதை கொறயுறாப்ல தெரியுதே! அஞ்சு வெக்கணும்!”

“சரி..சரீ.. ரொம்ப வருத்திட்டீங்க சார்!”, ராமு, பணத்தை எடுத்து வந்து தருகிறான். பாக்கெட்டில்வைத்துக்கொண்ட சண்முகம், தனது உறுமும் மோட்டார் சைக்கிளில் ஸ்டேஷன் செல்கிறார்.

“குட்மார்னிங் சார்..!”

“குட்மார்னிங்..!” சல்யூட் அடித்துவிட்டு உள்ளே வந்தவர் ரைட்டர், லாக் – அப்ல இருக்கிற பெண் என்ன சொல்றா?”

“ஒத்து வரமாட்டேன்றா சார்! ரொம்பப் படுத்துறா சார்!” ரைட்டர் எனும் எழுத்தர் சொன்னதும்,

சண்முகம் அவளிடம் சென்று, “ஏய்! நீ தப்பு செஞ்ச பொண்ணு! மறந்துடாதே! இதுல வேற, நீ கிராக்கி பண்றியாமே! உன்னோட சம்பந்தப்பட்ட அந்த பெரிய மனுசனக் காட்டிக் குடுத்த, அப்புறம் ஒந்நெலமை அதோகதிதான்! மரியாதயா அவர் குடுக்கற ஐநூறு ரூபாய வாங்கிக்கோ!” என்றார். பல பெரிய மனிதர்களுக்கு பசுத்தோல் போர்த்திய நரிகளுக்கு இப்படியொரு வடிகால் இருந்தால், பிறகு பெரும் கொண்டாட்டம்தானே!

“என்னா சார்…அவந்தான என்னைத் தன் தப்புக்கு ஒடந்தையா இருக்கச் சொன்னான். அப்படிப்பட்ட ஆளைப் போயி, பெரிய மனுசன் அது இதுன்னுகிட்டு….. நியாயத்தைக் கூறியவள், எனக்கு வாழ்க்கை கஸ்டம்தான். ஆனால், அதுக்காக அந்தாளைக் காட்டிக் குடுக்காம இருக்கமாட்டேன். அப்படி உண்மையிலேயே அந்தாளைக் காப்பாத்த நெனச்சியானா, எனக்கு அவனுடைய ஐநூறு எல்லாம் வேணாம் ஆயிரம் வேணும்…. இல்ல….. கோர்ட்டுல அவன் மானத்த நார்நாறாக்கிடுவேன். எம்மானத்தப் பத்திக் கவலயில்ல…. அதுதான் இந்த ஸ்டேஸனுக்கு வந்ததுமே போச்சே……!” என்றாள் அந்தப் பெண் குற்றவாளி.

“ம்..” விறைப்புடன் முறுக்கிக்கொண்டு, இடத்தோளில் தொங்கும் கயிற்றைப் பிடித்தவாறு பூட்ஸ் ஒலிக்க நடந்து வந்தார் சண்முகம்.

“ஸார் மிஸ்டர் ராஜாராமும் ராமுவும் உங்கள் வர்ற சண்டே மீட் பண்றேன்னு சொன்னாங்க” செய்தியைச் சொன்ன கீழ்நிலைக் காவலரிடம்,

“ஓகே….நான் போறேன்!” பதில் சொல்லிவிட்டு, நல்ல மிடுக்கான உடை ஒன்று வாங்கக் கடைகண்ணிப் பக்கம் சென்றார்.

அந்தத் துணிக்கடை பத்து வருடத்துக்கு முன் பார்த்தது மாதிரியே இருந்தது. ஏற்கெனவே கடை ஓட்டிக்கொண்டிருந்தது. கடைக்காரனும் சேர்ந்து ஈயை ஓட்டினான். மக்களுக்கு என்ன வறட்சியோ? எனினும் அங்கே காற்றுக்கு அதிக வறட்சி! ஒரே புழுக்கம். சண்முகம் உள்ளே போனவுடன், “ஸ்ஸூ.. என்ன ஃபேன் ஓடலயா? என்னா கடைய்யா..?” தன் அதிகாரத்தை அங்கே கடைவிரித்தார்.

“தோ…சார்… கரண்ட் வந்துடும். வந்துடும். ஆங்…என்ன வேணும்சார்?… சாரீஸா..இல்ல…ஜெண்ட்ஸ் துணியா…? என்று கூழைக்கும்பிடு போட்டபடி, பேசிய கடைக்காரனிடம்,

“ஒரு லேட்டஸ்ட் ஃபேஷன் பேண்ட் அண்ட் ஷர்ட் ஒன்னை லைட் க்ரீம் கலர்ல இல்லாட்டா வொய்ட் கலர்ல தா!” என்று ஆணையிட்டார், சண்முகம்.

“இந்தாங்க சார்! முன்னூறு ரூபாய்க்குள்ளதான்…!” கடைக்காரன் கொடுத்த உடுப்பைப் பார்த்து மனம் மகிழ்ந்தவரான சண்முகம், காற்சட்டைப் பைக்குள் பணப்பையைத் துழாவியபடி, “பேக் பண்ணிடு. டிரைவர் கிட்ட இப்பவே பணத்த அனுப்பி தந்துட்றேன்!” கம்பீரமாகச் சொல்லிவிட்டுத் தலையைக் கோதிக்கொண்டே வெளியே வந்தார்.

அந்த வட்டாரக் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பணத்தைத் தருவார் என்று எதிர்பார்த்த கடைக்காரன் அவரது பதிலைக் கேட்டுத் தன் விதியை நொந்துகொண்டபடி, “சரி சார்!” என்று குரலை இறக்கியபடி பல்லவி பாடினான்.

அங்கு, பாதையோரத்தில் பக்கத்து வீட்டு ராக்காயி தொடரும் நாள் வரவிருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கு விநாயகர் உருவங்களை விற்றாள்.

“என்ன ராக்காயீ பொம்மையெல்லாம் நல்லாருக்கே! நாளக்கி ஒனக்குக் கொழுத்த லாபந்தான்! டிரைவர், பெரீய புள்ளயாரா மூணு எடுத்து வையீ! ஏ சீ வீட்டுக்கும் குடுக்கலாம் அப்டியே அந்தப் பக்கத்து ஆள்ட்ட இருந்து பத்துப்படி அவல், பொரி ரெண்டும் எடுத்துட்டு வா! வரேன் ராக்காயீ!” செய்வது அநியாயம்; வகிப்பது பெரிய பதவி என்று எண்ணவைத்தது சண்முகத்தின் செயல்.

“அடப்பாவி.. ஒனக்கு முதுவுல அக்கி ( ஒருவித அம்மைப்புண்கள்) வந்தப்ப எங்கிட்ட மண்ணுல கோலம் போட்டுகிட்டியே மறந்துட்டியாடா? எங்கிட்டயே இப்ப ஏப்பம் உடுறியே… பொறக்கறப்பவே தாயக் கொன்னுட்டு வந்தவனாச்சே! பின்ன எப்படிருப்ப நீ?” வயிறெரிந்தாள். வேறு ஆளாக இருந்தால் கன்னத்தில் ஒன்று வசமாக வைத்திருப்பாள்.

தனது ஒரே மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்தவர், தனது தனது உறவினர் திருமணத்திற்குப் போலீஸ் உடுப்புடன் போனார். அவ்வளவுதான். மாப்பிள்ளை, பெண்ணைப்போல் இவருக்கும் உபசாரம்தான்!

“சார் வாங்க வாங்க! முதல்ல சாப்டுங்க! ஏம்பா…ஐயாவுக்கு ஸ்பெஷலா சூடாப் பரிமாறுப்பா!”, பெண்ணின் தந்தை சொன்னதுதான் தாமதம்!

“என்ன? ஸ்பெஷலா?…” என்று பரிமாறுபவன் யோசித்தான். எப்படியோ வயிறு புடைக்க உண்டுவிட்டு, மணமக்களை அட்சதை தூவி ஆசீர்வதித்துவிட்டு வந்தார் சண்முகம்.

கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்கு வந்தவனை, ஹேமா, விவரம் புரியாதவளாய், “ஏங்க கல்யாணத்துக்குப் போகலியா? ஏன் நேரம் இல்லியா? சரி, இப்பவாவது போய்ட்டு வாங்க. வாங்க. என்ன போய்ட்டு வந்துட்டீங்களா? வாயால் அதக்கூட சொல்ல முடியாது போலிருக்கு? அங்கேயும் இந்தக் காக்கி டிரஸ்லயா போனீங்க? இப்டியே செய்தீங்க…., உங்க மக கல்யாணத்துக்கு, இந்த வேஷத்துலயே வர்றவங்கள் இன்வைட் பண்ணினாலும் பண்ணுவீங்க. பிறகு, உங்ககூட வேலை செய்றவங்க தவிர வேற யாரும் வரமாட்டாங்க!” என்றாள்.

“வரலன்னா …என்னடி…எனக்குத் தெரிஞ்ச கடத்தல்காரங்க, வியாபாரிங்கள வெச்சு எம் பொண்ணு கல்யாணத்தை ‘ஜாம் ஜாம்’முனு நடத்துவேன்!” என்றார்.

“உங்க புத்தி, இப்டித்தான போவும்!”, திட்டினாள்.

“சரி சரி புலம்பாதே!… இந்தா இந்தப் பையை எடுத்துட்டுப்போ! உள்ள குங்குமப்பூ, முந்திரி, திராட்சை, பட்டாணி எல்லாம் இருக்கு… குங்குமப்பூவ நல்லா சாப்டு அப்பவாவது குழந்த செவப்பா, ஆம்பளைப் புள்ளயா பொறக்கட்டும்!” அண்மையில் கருவுற்றிருக்கும் மனைவிக்கு ஆணை பிறப்பித்தார்.

“அப்பாடி! இப்பவாவது நான் உண்டாகியிருக்கன்னு தெரியுதே! பரவால்ல! பரவால்ல! கண்ணு நல்லாத்தான் தெரியுது! ஆமா எல்லாம் சுத்தமான பொருள்தானே?” பொருள்களை வாங்கிப் பலவாறு திருப்பிப் பார்த்தவளுக்குப் பதில் தந்தார்.

“இதுல கூடவாம் சந்தேகம்? மத்தவங்களுக்குக் கலப்படம்! ஆனா எனக்கு.. நான் யாரு….? எஸ் ஐ யாச்சே?” மார்பில் தட்டித்தட்டி பெருமையைப் பறைசாற்றினார்.

***

சண்முகம் வெளியூருக்குச் சொந்த விஷயமாகவும், கடத்தல் வியாபாரி சந்திரனைப் பார்க்கவும் மதுரை போயிருந்தார். மனைவிக்குப் பேறுகாலம் நெருங்கியது தெரிந்தாலும், தொழில்புத்தி அவரை மதுரைக்கு ஈர்த்தது.

“அம்மா அம்மா…” வயிற்றைப் பிசையும் பிரசவ வலியில் ஹேமா துடித்தாள். அப்போதும் ராக்காயிதான் ஓடிவந்து, அவளை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றாள். அவள் போனவுடன் குழந்தை பிறக்கவில்லை.

இதற்கிடையில், “ஸார் ஸார் இங்க யாரும் இல்லியா…. உங்க டாட்டர்க்கு ஆக்ஸிடெண்ட் சார்….” ஒரு பெண் கதவினை வேகமாகத் தட்டியபடியே கலக்கத்துடன் விஷயத்தைச் சொல்ல, வாடகைக்குக் குடியிருந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், “யாரும் இல்லியேம்மா… என்னம்மா வேணும்?” என்று கேட்டனர்.

“இந்த வீட்ல இருக்கற ராதாங்ற பொண்ணு ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டா.. கை, கால் எல்லாம் அடிபட்ருக்கு மொகத்துலதான் அதிகமா காயம்! கீழ்ப்பாக்கத்துல சேத்துருக்காங்க!”, விம்மலுடன் சொல்லச்சொல்ல, மூச்சு வாங்கியது அந்தப் பெண்ணுக்கு.

“அடப்பாவமே அவங்க அம்மா இப்பதான் அதே ஆஸ்பத்திருக்கு டெலிவரிக்குப் டெலிவரிக்குப் போயிருக்காங்க. அவரும் இல்லியே சரி! நாங்க அவருக்கு ட்ரங்கால் போட்டுடறோம். நீ போய்ட்டு வாம்மா!” என்றபடி ஒருவர் கூற, மற்றொருவர் ராதா இருக்கும் மருத்துவமனை வார்டின் விவரங்களைப் பெற்றார். இதற்கிடையில், ஊர் ஒவ்வொரு விதமாகப் பேச, அடுத்த ஒருமணி நேரத்தில் ட்ரங்கால் கிடைத்தது.

“யேப்பா ஷம்மொகம் ஒனக்கு போ (ன்) வந்துருக்க…….ம்…; அவுஷரமா பேஷணுமாம்”

“எழ்னடா இப்பப்போய்…..அதெல்லா சுழ்மாடா…. எதுக்கும் குடுடா…..” மது மயக்கத்தில் குழம்பிய நிலையில் குழப்பத்துடன் தள்ளாடியபடியே எழுந்து வந்தவன், ரிசீவரைப் பிடித்தபடி,

“ஹழோ யார் பேஷறது?” என்றதும் மறுமுனையிலிருந்து ஊசிவெடி, பாசிவெடி வெடிப்பதுபோல் செய்திகள் வந்தன. “யோவ் ராஸ்கல் அங்கே குடிச்சிட்டு கும்மாளமா அடிக்கற? இங்க உம் பொண்ணுக்கு அடிபட்ருக்குதயா! ஒம் பொண்டாட்டி டெலிவரிக்குப் போயிருக்காங்கய்யா! மூணு உயிருங்க போராடிக்கிட்டு இருக்கு! இவரு அங்க போதையில் போராடுறாரு…ஒடனே வாய்யா…லேட் பண்ணாத!” என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

“ஹை யோ..ம் அய்யழ்யோ…என் ராதா…. ஹேமா..தோ வர்றேன் வழேன்…கழவுளே….கண்ணுல்லியா ஒனக்கு……?” போதையிலேயே புலம்பி அழுதார்.

அந்தப் போதையிலும் குடும்பத்தின் நிலையறிந்து, அருகிருந்த சோடாவால் முகத்தைக் கழுவிக்கொண்டு டிரைவரிடம் கார் எடுக்கச் சொல்லிக் கிளம்பினார். வண்டி வேகமாக வருகிறது. வழியெல்லாம், “ராதா போயிடாதம்மா….. அய்யோ என் கொழந்தயே….!”. புலம்பிக்கொண்டே வருகிறார். ஆஸ்பத்திரியை நெருங்கிய வுடன், முதலில் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு ஓடுகிறார். ராதா கண்களை மட்டும் திறந்த நிலையில் முகமெலாம் பஞ்சினால் அலங்காரம் செய்யப்பட்டுக் கால்கள் இரண்டும் மேலே பாதியில் தூக்கிக் கட்டப்பட்ட நிலையில் இடுக்கியவாறு மெல்லப் பார்க்கிறாள்.

“உன்னால தாம்பா இத்தனையும்!” சொல்லாமல் சொல்வதுபோல் தோன்றுகிறது.

ஏதேதோ எண்ணியவர் தன்னைக் கோபிக்காமல், விதியைப் பற்றிக் கோபித்தார். இதற்கிடையில், அவன் மனைவியைப் பார்த்தவர்கள் அவரை நோக்கி வந்தனர்.

“குங்குமப்பூவில் கலப்படம் இருந்ததால் நாள்பட்ட பாதிப்பு உண்டாகியிருக்கு. ஆண் குழந்தை ஆபத்தான நிலையில் பிறந்து, ஐஸ் ரூமில் உள்ளது!” என்று நர்ஸ் கூறியதைச் சொல்கின்றனர்.

“ஓ காட்!” தலையில் கைவைத்தபடி ஓடுகிறார். உடம்பில் தெம்பும் மனத்தில் மகிழ்ச்சியுமின்றிக் கீரை போல் கிடந்த ஹேமா மேல் விழுகிறார்!

– 1987, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *