தண்ணீரும் கண்ணீரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 2,335 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாழ்ப்பாணப் பட்டினத்துக் கடற்கரையோரப் பகுதிகளில் ஒரு நாளாவது குடியிருந்தவர்களுக்குத்தான் – அதன் பெருமை சட்டென்று தெரியும்; அதன் அருமை நன்றாகப் புரியும். மருந்துக்குக்கூட நல்ல தண்ணீர் குடிப்பதற்குக் கிடைக்காமல், அந்தச் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் சாதாரண மக்கள் படும்பாட்டைப் பார்க்கும் பொழுது நமக்கே நாவரட்சி ஏற்பட்டு விடுகின்றதென்றால், அந்தத் தண்ணீர்ப் பிரச்னையின் பூதாகாரமான உருவை நீங்கள் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்.

பட்டினத்துக் கடற்கரைப்பகுதி அது; ‘குருநகர்’ என்ற திருநாமம் தரித்துத் திகழ்கின்றது. அந்த வட்டாரத்தின் ஒரு பகுதியிற்றான் கடந்த பத்துப் பதினைந்து வருடகாலமாக வாழ்ந்து வருகிறான் பண்டாரி. அவன் ஒரு ரிக்ஷாக்காரன்.

அதாவது, இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் மனிதமாடு என்று மாற்றுப் பெயரிட்டு எழுதிவரும், மனிதனை மனிதன் இழுத்து வாழும் தொழிலைச் செய்பவன். ஆயினும் சந்தேகப்படத் தேவையில்லை. அவன் மனிதனேதான்! பட்டினத்து நாகரீக வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அவன் திகழ்ந்து வந்தான். ஓர் அம்சமாகிவிட்டான்.

பண்டாரி பரம்பரைக் குலவித்தையாக இந்த ‘இழுக்கும்’ தொழிலைச் செய்பவனல்ல. பரம்பரையாகக் குலத்தொழில் கள்ளிறக்குவது. இராஜகுமாரனை மணந்த செம்படவப் பெண், ‘இறால் எப்படிச் சுருண்டிருக்கும்?’ என்று கேட்டாளாம். அதைப்போன்று அவன் குலத்தொழிலை மறந்தவனல்ல. அல்லது காற்சட்டை அணிந்து, ‘இங்கிலீஸ்’ படிப்பின் துணையுடன் உத்தியோகம் பார்த்து அரிசி காய்ச்சி மரத்தைப்பற்றிப் பேசக்கூடிய நாகரிகவானுமல்ல. சென்ற ஆண்டுவரை, காலில் ‘தளை நார்’ பூட்டி; மரம் உரஞ்சி, ஏறி இறங்கிக்கள் சேர்த்தவன் தான். ஆனால் பட்டினத்தில் இருக்கும் மது ஒழிப்பு மகாசபையின் பிரச்சார பலமும், அதைத் தவறாகப் புரிந்துகொண்ட சில தீவிரவாதிகளின் திடீர் நடவடிக்கைகளும் ஒன்று சேர்ந்து கள்ளிறக்கும் தொழிலாளரின் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிட்டன; பண்டாரியின் வயிற்றிலும் சேர்த்து மண்ணைத் தூவிவிட்டன.

திடீரென்று ஒருநாள் அவனது கள்ளுக்கொட்டில் தீக்கிரையாக்கப்பட்டு எரிந்து சாம்பராகிவிட்டது. அந்த நாள் தொட்டுப் பண்டாரி தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நிமித்தம் பிச்சை எடுப்பவனாகவோ, ‘பிக்பாக்கட்’ காரனாகவோ, மூன்று சீட்டுத் திருப்பி ‘முச்சந்தியில்’ நடமாடும் சூதாட்டச் சாவடிக்காரனாகவோ மாறிவிடவில்லை.

அவன், நேர்மையான உழைப்பாளி; மனந்தளராத் தொழிலாளி. ஆகவே, அவன் மனிதனாகவே மனிதப் பண்புகளுடன் வாழத் தீர்மானித்தான். இப்பொழுது பட்டினத்து ரிக்க்ஷாக்காரனாக நடமாடுகிறான்.

இப்பொழுது, அந்தத் தொழில் – இழுக்கும் தொழில் – அவனுக்குப் பழக்கப்பட்ட தொழிலாக அமைந்துவிட்டது. “ஐயா…துரை…ராசா…” – இந்த வார்த்தைகளைக் கீறல் விழுந்த கிராமப்போன் ரிக்கார்டைப்போல ஒலித்துக் கொண்டே நடமாடுவான். அவன் இழுத்து வரும் ரிக்க்ஷா அவனுக்குச் சொந்தமானதல்ல. நாளொன்றுக்கு முக்கால் ரூபாயை வாடகைப் பணமாக, வண்டிச் சொந்தக்காரியிடம் – அந்தப் பொக்குவாய்க் கிழவி செல்லத்திடம் – செலுத்தினால் தான் அந்த வண்டியை ஒரு நாளைக்குச் சொந்தம் கொண்டாட அவனால் முடியும்.

இப்படியான அவனுடைய வாழ்வு-மனைவியையும் ஒரு குழந்தையையும் கொண்ட அவன் குடும்பத்தின் வாழ்வு ஏதோ ஒரு வழியாக ஓடிக்கொண்டிருந்தது. மண் ஒழுங்கையால் பாரத்துடன் ரிக்ஷா வண்டியை இழுத்துச் செல்வதைப்போல, வாழ்க்கையென்ற வண்டியைப் பண்டாரி மிகச் சிரமத்தின் பேரில்…

***

ஒரு நாள் –

இரவு பத்து மணி இருக்கும். காந்தீயவாதியும், ஜீவ காருண்ய சங்கத் தலைவருமான, பட்டினத்துப் பிரமுகரொரு வரை-பென்னம் பெரிய மனிதரை-பிரச்சாரக்கூட்டம் முடிந்ததும் அவருடைய வீட்டுக்குக் கொண்டு சேர்த்து விட்டு, அப்பொழுது தான் வீடுவந்து சேர்ந்தான் பண்டாரி.

மதியத்தில் சாப்பிடாததால், வந்ததும் வராததுமாக அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சிறு குடலைப் பெருங்குடல் , தின்பதுபோன்ற வேகம் மிக்க பசி. சாப்பாடு என்ற பெயரால் ஆக்கி வைத்திருந்த அமெரிக்கன் மரப் பிட்டையும், சுட்ட கருவாட்டுத் துண்டொன்றையும் ‘அவக் அவக்’கென்று விழுங்கித் தீர்த்துவிட்டுத் தண்ணீர் குடத்தைச் சரித்துப் பார்த்தான்.

அதற்குள் ஒரு துளி தண்ணீர்கூட இருக்கவில்லை.

அவனுக்குச் சினம் பொங்கியது. சாப்பிட்டபின் ஒரு சொட்டு நல்ல தண்ணீராவது வாய்க்குள் ஊற்றிக்கொள்ளாது போனால், பண்டாரிக்குப் ‘பத்தியம்’ ஏற்படாது; அன்று சாப்பிட்ட மாதிரியும் இருக்காது. நாக்குத் தாகத்தால் வரண்டது; தண்ணீர் ‘விடா’யால் உலர்ந்தது.

குட்டிபோட்ட நாயைப்போல கோபத்தினால் அவன் மனைவிமீது ‘வள்’ளென்று சீறி விழுந்தான்.

“ஏய், இந்தாடீ! குடத்திலே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. விடிய விடிய நீ என்னடி செய்து கிழித்தாய்?”- அவனுடைய குரல் கனத்தது. ஆத்திரம் கொப்பளித்தது. –

மனைவி அவனுக்கு ஏற்ற ஜோடிதான். பதிலுக்கு ‘மீன் கடை’ இரைச்சலில், “அதுக்கு நான் என்னத்தைப் பண்ண? உன்ரை மோன் தான் ஒரு சதத்தை நட்டு வைச்சுட்டு ‘காசுமரம் முளைக்கும்; அது காய்ச்சதும் காசு பிடுங்கலாம்’ எண்டு புசத்திக்கொண்டு, நான் அள்ளி வைச்ச தண்ணியெல்லாத்தையும் அள்ளி அள்ளி ஊத்தினான். எல்லாம் நீ உன்ரை மோனுக்குக் குடுக்கிற செல்லம்” என பதிலிறுத்தாள்.

மகன்பால் பண்டாரிக்கிருக்கும் பாசம், அவன் கோபத்தினை ஓரளவு மட்டுப்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு கொடுத்த அந்த ஒரு சத நாணயத்தை, அவன் மண்ணில் புதைத்து வைத்துத் தினசரி, ‘காசு மரம் முளைக்கும்; காசு மரம் முளைக்கும்’ என்ற அசாத்திய நம்பிக்கையில், உள்ள தண்ணீரெல்லாம் ஊற்றித் தள்ளுவதை நினைத்தபொழுது அந்த நிலையிலும் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அவன் வாய் முணுமுணுத்தது. “எடே, பொடியா! காசு மரத்திலை முளைக்கிறதில்லையடா! நல்லாப் பாடுபட்டுத் தான் காசை உழைக்க வேணும்…”

ஐந்து நிமிஷங்கள் மடிந்தன.

‘ஈய’ச் செம்புடன் அடுத்த வீட்டுக்கு நல்ல தண்ணீர் ‘கடன்’ கேட்கச் சென்ற அவன் மனைவி வெறும் செம்புடன் திரும்பி வந்தாள். அயலில் வாழ்பவர்கள் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். ஒரு செம்பு நல்ல தண்ணீர் இரவல் கேட்டாலோ வந்தது வினை. தண்ணீரை வைத்துக் கொண்டே, “ஐயோ… தண்ணீரெல்லாம் முடிஞ்சு போச்சே!” என்று பல்லிப் பாஷையில் நச்சரித்துப் பதில் சொல்வார்கள்.

அவர்களுக்கல்லவா தண்ணீரின் அருமை தெரியும்? அதை ‘எடுப்பதற்கு அவர்கள் பட்டபாடு இருக்கிறதே!

வெறுங்கையுடன் வந்த மனைவியைக் கண்டதும் அமெரிக்கன் மாப்பிட்டால் பொருமிய குடலில் தண்ணீர் வேட்கை இரட்டித்தது.

“நல்ல தண்ணி ஓரிடமும் இல்லையாம். இப்ப என்ன செய்யுறது? உப்புத் தண்ணி யெண்டால் வேண்டித் தாறன். ஏதோ குடிச்சிட்டுப் படு.. காலமை பாக்கலாம்”.

‘உப்புத்தண்ணீர் குடிக்கும் படி’ மனையாள் அருளிய உபதேசம் அவன் பொறுமையைச் சோதித்தது. பண்டாரி இயற்கையில் வெகு பொறுமைசாலி. வீட்டு நிலைமையை உணர்ந்து ஒத்துப்போகக் கூடியவன். கள்ளுத் தொழிலாளியாக இருந்து, இன்று ரிக்ஷாத் தொழிலாளியாக மாறிய இந்தக் காலம்வரை சோர்வுற்ற உடலுக்குத் ‘தென்பு கொடுக்க’ என்ற சாட்டிலாவது கூட மதுவை அவன் தொட்டுப் பார்த்தது கிடையாது. அப்படிப்பட்டவனுக்கு மனைவியின் வார்த்தைகள், இன்று ஏனோ தெரியாது, பழங்கள்ளின் வேகத்தில் வெறிகொள்ளச் செய்து-

அவனுடைய குடியிருப்பில் கிணறு கிடையாது. அக்கம் பக்கத்துக் – குடிசைகளுக்கும் அந்தப் ‘பாக்கியம்’ இல்லை. அப்பகுதியில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் தொழிலாளர். கடல் தொழிலாளர், ‘கக்கூஸ்’ தொழிலாளர், கள்ளிறக்கும் தொழிலாளர், பஸ் தொழிலாளர், வண்டியிழுப்போர், இப்படிப் பல ரகம். ஆனால் தொழிலாளர் என்ற ரீதியில் நகரத்தின் மிகப் பின்தங்கிய அந்தப் பகுதியில் சேரி அமைத்துக் குடியேறியிருந்தனர். ஆகவேதான், அரசாங்கமும், நகராண்மைக் கழகமும் அந்த ‘லேபரேர்ஸ்’ பகுதியை அல்ட்சியம் செய்துவிட்டிருந்தன.

மனிதனின் அன்றாடத் தேவையான குடி தண்ணீர் கூடக் கிடைக்க வசதியில்லையென்றால், அந்த வட்டாரத்தின் மகிமையை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

பண்டாரியின் குடிசையிலிருந்து, பத்துக் குடிசைகளுக் கப்பால், பஸ் தொழிலாளி சாமிநாதனின் ‘வீடு’ இருக்கிறது. அங்கு தான் மிகக் கிட்டிய கிணறு உண்டு. பெயருக்குக் கிணறேயொழிய, அது நீர் நீரம்பியுள்ள குழியென்பதே பொருந்தும். அந்தக் கிணற்றுத் தண்ணீர்தான் அவசரத் தேவைக்குப் பயன்படும். அதுவும், பல மணி நேரம் காவலிருந்து வீட்டுக்காரர்களிலொருவர் அள்ளி ஊற்றி அருள் பாலித்தாற்றான் கண்ணால் காண முடியும். அல்லது, அற்றது தான்!

அந்தக் கிணற்றில் ஊறும் தண்ணீரைத்தான் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துத் தண்ணி’யாக ஊற்றி வருகிறார் களோ என்ற பெருஞ் சந்தேகம், வெகு நாட்களாக பண்டா ரியின் நெஞ்சத்தில் இருந்து வருகிறது. அந்தச் சந்தேகம் இன்றுகூடத் தீர்ந்தபாடில்லை. அந்தத் தண்ணீர் அப்படிப் பட்ட உவர்ப்பு. குடிக்க முடியாத அளவுக்குக் ‘கைச்சல்’!

இந்தத் தண்ணீரைத்தான் குடிக்கும்படி அவன் மனைவி அவனுக்கு இதோபதேசம் செய்கிறாள். அவனுக்கு எப்படி இருக்கும்?

சற்றுத் தூரத்தில் மாதா கோயிலொன்று இருக்கிறது. அந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்கு அதுவே மிகவும் சிறந்த நல்ல தண்ணீர்க் கிணறு; வற்றாத அருள் சுரக்கும் மகாவலி கங்கை! வட மாகாண மக்களுக்குப் பயனின்றிக் கடலில் சங்கமமாகும் மகாவலி நதியைப் போலவே, அந்த நல்ல தண்ணீர்க் கிணறு இரவில் பயன்படாது. கோயில் நிர்வாகி கள் இரவில் அதன் படலையைப் பூட்டி விடுவார்கள்.’. அதைத் தவிர, இன்னுமொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அப்பகுதியில் இருக்கிறது.. அது தான் அம்மன் கோயில் கிணறு. ‘ அம்மன் கோயில் கிணறு’ என்ற விருதை அது பெற்றிருப்பினும், உண்மையில் அக் கிணறென்னவோ • பொதுக் கிணறுதான். அம்மன் கோயிலுக்கு அணித்தாக உள்ளதால், நாளாவட்டத்தில் அப்பெயரினைச் சுவீகரித்துக் கொண்டது. அதில் குறிப்பிட்ட சில சாதியாரைத் தவிர வேறுயாரும் தண்ணீர் அள்ளக் கூடாது என்ற சட்டம் கல்வெட்டில் ஏறாமல் நிலைத்துவிட்டது. அக்கிணறு உப யோகக் குறைவினால், ஜாதி வெறியர்களின் நெஞ்சங்களைப் போலவே இருண்டு பாசி படர்ந்து கிடந்தது.

அப்பகுதி மக்களுக்கு இரண்டு கிணறும் தெய்வங்கள். ஒன்று பகலில் கடாட்சிக்கும் தெய்வம்; மற்றது ஒறுப்பாக, ஒரு சிலருக்கு மட்டும் அருள் சுரக்கும் தெய்வம். எது எவ்வாறு இருப்பினும் தெய்வம் தெய்வந்தானே?

இந்த இரண்டு கிணற்றுத் தண்ணீரும் கிடைக்க வழி யில்லை யென்றால், பண்டாரி போன்றோர் அந்த ஆஸ்பத்திரி ‘ மருந்துத் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். ஆக, மனைவியின் உபதேசந்தான் சாத்திய விட்டத்திற்குட் பட்டது என்று அவனுக்குப் பட்டது.

‘ஒரு நாளைக்குக் குடிச்சா என்ன கெட்டுப் போயிடும்? நல்ல தண்ணிக்குக் காலமை பாக்கலாம். சொல்லன். உப்புத் தண்ணி வேண்டி வரட்டா?”

அவன் பதில் சொல்லவில்லை. அவளுடைய கையிலி ருந்து ‘ஈயச் செம்பைப் பறித்தான். எங்கும் கவிந்திருந்த கோர இருளில் ‘விறு விறு’ என்று நடந்தான். அவளுக்கு ஆச்சரியம். அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே, அசைவற்று, முனிசிப்பல் வெளிச்சக் கம்பமாக நின்றாள்.

***

பண்டாரி எவ்வளவோ சாமர்த்தியமாகத்தான் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளினான். ஆனால் ஓட்டை வாளி, சல சல வென்று நீரைக் கொட்டி, அவனுடைய திருட்டைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவனுடைய நெஞ்சு படபடத்தது. பயம் அவனைக் கவ்வியது. புதிதாகத் திருடச் செல்பவன் தனது காலடி யோசையைக் கேட்டே மிரளும் மனோபாவம் அவனைச் சுற்றி நின்றது. தேகம் பதறியது. கைகால்கள் உதறலெடுத்தன. அவனுடைய முதல் முயற்சி வெற்றி பெறவில்லை!

இரண்டாவது முறையும் முயற்சி செய்தான். அவனு டைய புலன் முழுவதும் தண்ணீரள்ளும் வாளியுடன் ஒன்று பட்டிருந்தது. ஒரு தடவை வாளியை நன்றாகக் கோலிவிட் டான். வாளி ஒரு தடவை தண்ணீர்ப்பரப்பிற்குள் மூழ்கி எழும்பி –

இடது பக்கத்திலிருந்து குரலொன்று கேட்டது.

“ஆரது கிணத்திலே? குடிக்கக் கொஞ்சம் தண்ணீ ஊத்துங்க…”- பஸ் கண்டக்டர் சாமிநாதனின் குரலிது.

பண்டாரி வெலவெலத்துப் போனான். முதல் முதலாகச் சத்திர சிகிட்சை செய்து கொண்டிருக்கும் இளம் டாக்டரின் முகத்தில் சுரப்பதைப் போன்று, பண்டாரியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மலிந்தன. அம்மன் கோயில் சிலையைப் போன்று மௌனத்துடன் இணைந்து மௌனியாய் நின்றான். வாளி தண்ணீருக்குள் தாழ்ந்தபடி இருந்தது; அவன் கைகள் துலாக்கொடியைப் பிடித்தது பிடித்தபடி இருந்தன; அவன் சிலையாக நிலைகொண்டு நின்றான்.

அதே குரல் மீண்டும் ஒலித்தது. சற்றுப் பலமான அதட்டல். “ஆரப்பா கிணத்திலை ? காது கேக்கல்லையா? கொஞ்சம் தண்ணி ஊத்துறதுக்கென்ன?”

மௌனம்.

‘என்னமோ ஏதோ’ என்ற பயம்-பயங்கர நினை வெழுப்பும் பீதி-சாமிநாதனைத் தன்பால் ஈர்த்தது. அதற்குக் காரணமும் உண்டு.

இரவு நேரத்தில், அம்மன் கோயிலுக்கு அருகில் சங்கிலி மாடன் வீதிவலம் வந்து போவான் என்பது வழக்கழியாக் கதை. இந்தக் கதையைச் சாதாரண காலங்களில் சாமிநாதன் ஒப்புக்கொள்ள மாட்டான். ஏனெனில், அவனுடைய பஸ்ஸில் பிரயாணம் செய்திருக்கக்கூடிய நீங்கள் அவன் தன்னுடைய வாயினாலேயே தன் வீர, தீர, பராக்கிரமச் செயல்களை யெல்லாம் விஸ்தரிக்கக் கேட்டிருப்பீர்கள்.

அசட்டுத் துணிச்சல் உந்த, சாமிநாதன், வேலியோரம் சாத்தப்பட்டிருந்த சைக்கிளடிக்குச் சென்று, சைக்கிள் விளக்குடன் திரும்பினான். அப்பொழுதும் பண்டாரி சிலை யாக, துலாக் கொடியைப் பிடித்த வண்ணமே கிணற்றடியில் நின்றான். அவனுடைய முகத்துக்கு நேரே சாமிநாதன் வெளிச்சத்தைப் பிடித்தான். முகம் தெரித்தது. சவக்களை தட்டியிருந்த அந்தமுகம்…

துலாக் கொடியுடன் பண்டாரியைக் கண்ட சாமிநாதன் ஒரு கணம் திடுக்கிட்டான். ‘நான் காண்பது கனவுதானோ?’ என்ற ஐயம் அந்தக் கணம் அவனுடைய மனதை அலைக் கழித்தது. கண்களை மூடித்திறந்து, மறுபடியும் உற்றுப் பார்த்தான். சந்தேகமில்லை. அவனுக்கு முன்னால் பண்டாரியின் உருவந்தான் நின்று கொண்டிருந்தது…

‘…நளவன்-‘நளப் பண்டாரி’ – அம்மன் கோயில் – கிணற்றில் தண்ணீர் அள்ளிவிட்டான். கிணற்றைத் தீட்டுப் படுத்திவிட்டான். நளப்பயலின் துணிச்சல் என்ன? மேல் சாதிக்காரர்களின் வீரத்திற்கு எதிராகவிடுக்கப்பட்ட சவால்; அவர்கள் முகத்தில் பூசப்பட்ட அவமானம்!…எவ்வளவு… எவ்வளவு…’

சாமிநாதனின் உள்ளங்காலிலிருந்து ஒரு கொதிப்பு வெடித்துக் கிளம்பி, அவன் உச்சந் தலையைத் தாக்கியது. மனிதன், அடுத்த கணமே மிருகமாக மாறிவிட்டான்.

“நளப்பயலே! அவ்வளவு கொழுப்பாடா உனக்கு? இவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியளாடா? எங்கட கிணத்திலே தண்ணி அள்ளுறதுக்கு உனக்கு எவ்வளவு முழ நெஞ்சடா? என்னடா நான் கேக்கிறன்; நீ பேசாமல் நிக்கிறாய்?”

கோபக் கொதிப்புடன் கேள்விப் பாணங்களை அள்ளியள்ளி வீசினான். குருக்ஷேத்திரப் போரில், பார்த்தனின் கணைகள் பீஷ்மரின் உடலைப் பிய்த்தனவாம். அந்த அம்புகளிலும் பார்க்க உள்ளத்தைத் தைக்கும் சொல்லம்புகள் கூரியன வாகும். ஆனால் அச் சொல்லம்புகள் வலியற்றன. பண்டாரியின் மனம் புண்படவில்லை…அவன் இந்த உலகத்து உணர்ச்சியே அற்றவனாக….

சாமிநாதன் இரைந்து கத்தினான். கோபக் குரலில் கூப்பாடு போட்டான், அவனுடைய கோபப் பெருங்குரலைக் கேட்டு அயலில் வசிப்பவர்கள், வழிப் போக்கர்கள் ஆகிய அத்தனை பேர்களும் கூடிவிட்டனர்.

கேள்வி மேல் கேள்விகள். கூடியவர்கள் தங்களை மெத்தப் பெரிய வக்கீல்களாகக் கற்பித்துக் கொண்டு பண்டாரியைக் குறுக்கு விசாரணை செய்வதில் முனைந்தார்கள். அவன் வாயே திறக்கவில்லை.

முடிவு?

‘தமிழ்ப் பண்பாட்டினைக் காப்பாற்றும் திருத்தொண்டு பண்டாரிக்கு, எழும்பப் படுக்க முடியாமல் செம்மை – யாய் உதை விழுந்தது. முரட்டுப் போலீஸ்காரனிடம் வச மாகச் சிக்கிக் கொண்ட துடியான இளைஞனுக்குக் கிடைக்கும் ‘வரிசை’யைப் போல மூட்டு மூட்டாக அடிக்கப்பட்டான். இத்துடன் அவர்களுடைய-உயர் ஜாதிமான்களின்–பரம் பரையும், பெருமையும், மேன்மையும் இரவுக்கிரவே காப் பாற்றப்பட்டன. கிணற்றில் ஏற்பட்ட துடக்கு துடைக்கப் பட்டதென்ற நினைவு…

பண்டாரிக்கு நஷ்டம் பெரிதல்ல. கொண்டு சென்ற செம்பை யாரோ புண்ணியவாளன் அபகரித்து விட்டான். சில காயங்கள். இரத்தம் சிந்தப்பட்டது. அவ்வளவு தான். உயிருக்கு ஆபத்தில்லை !

பார்க்கப் போனால், இது பண்டாரியின் பூர்வ ஜன்மப் புண்ணிய பலனாக இருக்கலாம். அல்லது, அவனுடைய இல்லாளின் மாங்கல்ய பலனாகக்கூட இருக்கலாம். இந்த வெறிக் கூட்டம், இப்படியான சந்தர்ப்பத்தில், உயிருடன் விடுவ தாயின், அது பத்திரிகைகளுக்கே அனுப்பத் தக்க செய்திகூட. ‘நோக்காட்டில் வெந்து, அன்றிரவு படுத்திருந்த பண்டாரி தன் குடிசை நள்ளிரவில் தீப் பற்றி எரிவதைக் கண்டான். மறுநாள். குடிசை இருந்த இடத்தில், வெறும் சாம்பல். ஜாதி அபிமானம் என்ற தீ அவனுடைய குடி சையை ஜீரணித்து ஏப்பமிட்டது. எந்தத் தோஷத்தையும் அக்கினி பகவான் எரித்து, அழித்து, சுத்திகரித்து விடுவா ராம். – அக்கினி பகவான் உயர்ஜாதி இந்துக்களின் தீப்பெட் டிக்குள்ளிருந்து தான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமி யாச்சே!.

***

இந்தச் சம்பவங்கள் நடந்தேறி ஒரு மாதமாகிவிட்டது.

ஒருநாள் மாலை. நல்லூர் மஞ்சத்தைப் போன்று ஆடி அசைந்து நடைபோட்டுக் கொண்டிருந்தான் பண்டாரி. அன்று அவனுக்கு வாடகை எதுவும் கிடைக்கவில்லை. இதுவும் அவனுக்குப் பழக்கம். ஒரு மாதத்திற்குள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மனதை மேயவிட்டுக் கொண்டு, நகரத்தில் பெரிய வீதிகளிலெல்லாம் ‘வெறும்’ ரிக் ஷாவை இழுத்துக்கொண்டே நடந்தான். காலையிலிருந்து வாடகை பிடிக்க அலைந்த களைப்பு வேறு.

பறங்கித் தெருவிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தைச் சமீபித்தான்; அங்கே, அலுப்பாந்தி செல்லும் தண்டவாள மும், பெரியே தெருவும் கலவிச் சங்கமிக்கும் திருவிடத்திற்கு, வலது பக்கத்துக் கான் ஓரத்தில், ஜனத்திரள் குழுமியிருப் பது அவனைக் கவர்ந்தது. ‘ஆளை ஆள் எகிறிக் கொண்டு பார்த்து ரஸிக்கும் அந்தக் காட்சிதான் என்ன ?’

‘படித்தவனுக்குப் பின்னாலும் பத்துப் பேர்; பைத்தியக்காரனுக்குப் பின்னாலும்…’ நகர மக்களின் மந்தை மனப் பான்மை என்ற எண்ணம் அவனை முதலில் ஜனத்திரளை அலட்சியம் பண்ணச் செய்தது. மறுகணம் மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள ‘ புதினம் பார்க்கும் மனோபாவம். அவனை முன்னேற விடவில்லை.

அதே நேரத்தில், வீதியின் நேரெதிர் பக்கத்திலிருந்து “ஏய், ரிக்க்ஷா! கெதியா வர். படத்துக்குப் போகவேணும், வாறீயா?” என்று ஒரு குரல் அவசரப்படுத்தியது.

அவனது எண்ணம் சிறிது சலனப்பட்டது. இறுதியில் ‘அங்கு என்ன தான் நடக்கிறது’ என்பதைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை வென்றது. “கொஞ்சம் பொறுங்க துரை. இதோ வந்துட்டேன்” என்று குரல் கொடுத்து விட்டு, ரிக்ஷாவை ஒரு பக்கமாக நிறுத்தினான். பின்னர், கூட்டத்தில் ஒருவனாகக் கலந்தான்.

அங்கே –

கண்டக்டர் சாமிநாதன் இரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடந்தான். உடம்பின் பலபாகங்களிலும் காயங்கள். அந்தக் காயங்களிலிருந்து பாயும் இரத்தம். சூழலிலும் தொட்டம் தொட்டமாக இரத்தக் கறைகள். விகாரமான காட்சி…

பண்டாரி விஷயத்தை ஒருவாறு ஊகித்தான். விசாரித்து அறிந்தான்.

ரெயிலும் பஸ்ஸும் ஓட்டப்பந்தயம் நடத்தின. பந்தயத்தில் பஸ் தோற்றுவிட்டது. பஸ்ஸுக்கோ பிரயாணிகளுக்கோ அதிக சேதமெதுவும் கிடையாது. ஆனால், ‘புட் போட்’டில் நின்ற கண்டக்டர் சாமிநாதனுக்குத்தான் பலமான அடி. அத்துடன் வெகு தூரத்திற்குத் தூக்கியெறியப்பட்டு, ஸ்மரணை இழந்தான். அந்த நிலையில் கிடந்தவனைச் சுற்றித்தான் அந்த ஜனத்திரள்.

பண்டாரியின் மனதில் ஆரம்பத்தில் ஒருவகை மகிழ்வுணர்ச்சி ஏற்பட்டது. அடிபட்ட அன்றிரவு அவன் மனைவி கொடுத்த சாபங்கள் மனதில் குதிர்ந்தன. “குறுக்கால தெறிப்பான்! நல்லாயிருப்பானா? அவன் குடும்பமும் சந்தானமும் நல்லாயிருக்குமா? கொள்ளையில போவான்! எரிஞ்சு போவான்! கட்டையிலே போவான். நால்லூர் பெருமானே, அவனுக்கு ஒரு அழிவைக் காட்டு.”

ஒரேயொருகணம் அந்த அர்ச்சனைகளின் நினைவு அவன் மனதைக் குளிர்வித்தது. சவாரிக்கு அழைத்த ‘துரை’யின் ஞாபகம் வந்தது. திரும்பலாம் என்ற எண்ணம் தளிர்த்தது. திரும்ப நினைத்தான்.

மறுகணம் அவனுடைய மனிதமனம் – அந்தத் தொழிலாளி இதயம் – தன்னில் தானே வெறுப்புக்கொண்டது. தன்னுடைய நினைவுக்காகத்தானே வெட்கப்பட்டான். மனதைச் சுதாரித்துக் கொண்டான்.

கூடி நின்றவர்கள் சும்மா ‘ஆகா…ஊகூ…’ என்று சத்தம் போட்டுச் சந்தடி செய்தனரேயொழிய, ஒருவரும் முதலுதவியோ அல்லது வேறு உதவியோ செய்ய முன்வரவில்லை.

பட்டின நாகரிகம்!

பண்டாரி, இரண்டொருவர் உதவியுடன் சாமிநாதனை ரிக்க்ஷாவில், ஏற்றிப் படுக்க வைத்தான். அடுத்த கணம் வேகமாக, தன்னை மறந்த வேகத்தில், ஓட்டமாய் ஓடினான்.

ரிக்ஷா பட்டிணத்து ஆஸ்பத்திரியை நோக்கிக் காற்றாய்ப் பறந்தது.

***

ஒரு மணி நேரம் சென்றுவிட்டது.

மனைவியின் முதல் பிரசவத்தை எதிபார்த்து, அறைக்கு வெளியே துடிதுடிப்புடன் காவல் நிற்கும் இளம் கணவனைப் போல், பண்டாரியும் ஆஸ்பத்திரியின் விறாந்தையில் பரபரப்புடன் காட்சியளித்தான்.

நர்ஸுகள் அங்குமிங்கும் போவதும் வருவதுமாக இருந்தனர். பொறுமை எல்லை கடந்தது. கடைசியில் ஒரு நர் ஸைப் பேச்சுக்கு இழுத்துக்கொண்டான்.

“நேசம்மா, இப்ப பஸ்ஸிலே அடிப்பட்டு ஒருவர் வந் தாரே, அவருக்கு எப்படி இருக்குது?” என்று குரலில் ஆவல் தொனிக்கப் பண்டாரி கேட்டான்.

“ஓ…அந்தக்கேஸா? அவருக்கு உடம்பிலே இரத்தமி இல்லை. இரத்தம் கொடுக்கவேணும். ஆனால் ‘பிளட் பாங்’ கிலே இரத்தம் இல்லையாம். அது தான் டாக்டர் யோசிக்கிறார்.” – செய்தியைச் சொல்லிப் போகத் திரும்பினாள் நர்ஸ்.

“நேசம்மா, ரத்தமில்லாட்டி என்ர ரத்தத்தைத் தாறன். குடுக்கிறியளா, அம்மா” என்று சொன்ன பண்டாரியின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

நர்ஸ் அந்த ரிக்ஷாக்காரனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“எதற்கும் டாக்டரிடம் கேட்டுச் சொல்லுகிறேன். அது மட்டும், அந்த வாங்கில் இருந்துகொள்” -ஆதரவாகச் சொல்லி, டாக்டரிடம் விரைந்தாள்.

***

பண்டாரியின் இரத்தத்தைப் பரிசோதித்த டாக்டர் மகிழ்வுற்றார். இரண்டு இரத்தங்களும் ஒரே ரகமாம், ஒத்துப் போகுமாம் – என்ன விசித்திரம்? ஜாதிக்கு , ஜாதி இரத்தம் மாறுவதில்லை!

‘நளம்’ பண்டாரியின் இரத்தம், ஜாதிமான் சாமிநாத னின் உடலில் பாய்ச்சப்படும் வேலை முடிந்தது. டாக்டர் வெளியே வந்தார்.

இரத்ததானம் செய்த பின்பு சற்று ஆயாசத்துடன் வாங்கில் அமர்ந்திருந்த பண்டாரியின் முதுகை ஆதரவுடன், தடவிக் கொடுத்து, “நீ செய்தது இரத்ததானமல்ல. அந்த நோயாளிக்கு மறுபிறப்பே வழங்கியிருக்கிறாய். இந்தா பத்து ரூபா. என் அன்பளிப்பு……உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.” என்று கூறியபடி, அவனிடம் ஒரு பச்சை நோட்டை நீட்டினார்.

பண்டாரி பணத்தை வாங்க மறுத்துவிட்டான். ஆனால் வேறு ஏதோ கேட்க இச்சை கொண்டவனைப்போல, அவன் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதை அவதானித்தார்; அவருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. “உனக்கு என்ன வேணுமப்பா? என்ன வேணும் கேள்; பயப்படாமல் கேள்!” என்றார்.

“டாக்குத்தரய்யா! என்னை ஒரு முறை அவரை – காயம் பட்டவரைப் பாக்க விடுங்க”

டாக்டர் மகிழ்ச்சியுடன், அவனுடைய வேண்டுகோளை ஏற்றார். அவனுடைய நடத்தை விசித்திரமாகப்பட்டது. இந்த விசித்திரமான நடத்தையை மனதிற்குள் வியந்து கொண்டே ஒப்புக்கொண்டார்.

பதினைந்து நிமிடங்களுக்குப்பின் அவனுடைய விருப்பம் நிறைவேறியது. சோர்வினாலும், பலவீனத்தினாலும் வெளிறியிருந்த சாமிநாதனின் முகத்தை ஆர்வம் பிரதிபலிக்க பண்டாரி பார்த்தான். களைப்புக் கலைந்து, களைகொண்டு, களிப்புடன் அவனை நோக்கினான்.

முழு விபரங்களையும் நர்ஸின் மூலம் அறிந்த சாமிநாதன், தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பண்டாரிதான் என் பதை அறிந்தவுடன், மலைத்தான். ஒரு கணம் வெட்கிக் குறுகினான். மனச்சாட்சியும், நன்றியறிதல் உணர்ச்சியும் அவனைத் துளைத்தன.

“பண்டாரி” என்று அன்பொழுக அழைத்தான், சாமிநாதன்.

அவனும் கட்டிலை நெருங்கினான். உடனே பித்துப் பிடித்தவனைப்போல,

“சொல்லு பண்டாரி, ஏன் எனக்கு உயிர்ப்பிச்சை தந்தாய். நான் கொடியவன், தீயவன். உன்னை மிருகமாக அடித்தேன்; நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயிலும் கடையன். ஏன் இந்த நாய்க்கு உதவினாய்?” வார்த்தைகள் முடியவில்லை.

சாமிநாதனுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று; கரை புரண்டு வழிந்தது. அவனுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, “சொல்லு , பண்டாரி சொல்லு” என்று கெஞ்சாக் குறையாகக் கேட்டான். –

பண்டாரியிடம் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. மிகவும் தெளிவான குரலில் அவன் அமைதியாகச் சொன்னான்: “நானும் மனிதன். நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்”.

அந்தக் காட்சியைப் பார்த்து நின்ற நர்ஸின் கண்களிலே கூட…

– 11-9-1955- தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *