ஜக்கரண்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 725 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருட்டில் ஒசை எதுவும் இன்றிக் காற்றையும் தொலைத்து விட்டுக் கல்லுப் போல் நிற்கின்ற தெருவோர ஜக்கரண்டா மரத்தின் மூலவேர் வரையில் ஒரு முள்ளுப் போல் துயரமும் விரக்தியும் ஊன்றிக் கிடக்கின்றன. என் மனசிலும் அப்படித்தான்! 

அடிக்கடியும் அதிகமாயும் மனம் திறந்து சிரித்தல், சான்றோரின் நன்மதிப்பைப் பெறல், நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைத் தேடிக் கொள்ளல், போலி நண்பர்களின் கருத்தை மனதில் வாங்காதிருத்தல், அழகை ரசித்தல், பிற மனிதர்களில் நல்லவற்றை மட்டுமே காணுதல், ஓர் அழகிய குழந்தையால் – அருமையான தோட்டத்தினால் அல்லது சிறிதே மாற்றப்பட்ட ஒரு அமைப்பினால் உலகை ஒரு அங்குலமாவது உயர்வாக்குதல், நீ வாழ்ந்தமையால் குறைந்த பட்சம் ஒரு உயிர்தானும் நன்மை அடைந்தது என உணருதல் – இதுவே ஒரு வெற்றிகரமான வாழ்வு! 

“நான் ஏன் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்?” குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் உலகம் எங்கணும் நிலவும் அநீதிகளினாலும் கொடுமைகளாலும் உள்ளுக்குள் அழுது வடியும் என் மௌனத்தின் மென்மையை வசனங்கள் கொச்சைப் படுத்திவிடலாம் என்பதால் இப்போதெல்லாம் யாருடனும் பேசாமல் இருக் கிறேன். 

எனது வாழ்வின் இலட்சியம் என்ன? எதிரொலியை எதிர் பார்த்துக் காத்திருக்கும்போது வேறொரு குரல் கேட்பது போலக் கவிஞர் சோ.ப. அவர்கள் தனது மன ஆத்திரம் முழுவதையும் கொட்டித் தீர்த்த வரிகள் சில பொறி தட்டியது போல மனதில் வந்தன. 

“காசு தேடுதல் இங்கொரு லட்சியம்”, “கடலைத் தாண்டுதல் கூட லட்சியம்”, “வீசு காற்றையும் கட்டிப் போட்டொரு பிஸ்னஸ் செய்தல் இன்னொரு லட்சியம்”, “ஊசியின் முனை நுழையக் கூடிய ஒவ்வொரு நாட்டையும் தேடித் தேடிப் போய் ஓசி வாழ்க்கை வாழ்ந்திடல் ஆகிய உயர்ந்த லட்சியம் தமிழருக்குள” கவிஞரின் ஆத்திரப் பற்களில் அகப்படாத ஒருத்தியாகத்தான் நானும் இருந்தேன். கடலைத் தாண்டுகிற நினைவு வந்ததுதான் தவறாகப் போயிற்று. கடலைத் தாண்டி வந்தாலும் அந்தக் காசு தேடுவது பற்றி இந்த வயதிலும் யோசிக்க வேண்டிய நிலையில்.. 

சரி போகட்டும். எனது கல்வி என் மனதில் எழுந்திருக்கும் கேள்விக்குப் பதில் சொல்லுமா? பிரின்ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் தலைவராக இருந்த ஜோன். ஜி. ஹிபன் ஒரு முறை சொன்னான் “கல்வி என்பது வாழ்வின் தேவைகளை எதிர் கொள்ளும் ஆற்றலே” என்று. இன்றைய வாழ்வின் தேவை என்ன? எனக்கு உணவும் நீரும் ஒட்சிசனும் ஏதோ கிடைக்கின்றன. எமது மண்ணின் மக்கள் பலரும் மூலைக் கொருவராய் ஓடி ஒளித்துக் கொண்டிருக்க எஞ்சியிருப்போர் விரக்திக் கடகத்தின் விளிம்பில் உட்கார்ந்து வீணீர் வடிக்க எல்லோருக்குமே பொதுவான தேவை மன அமைதிதான். 

அது தேடத்தேட ஓடிப்போகிறது. துரத்தத் துரத்தத் தூரப் போகப் பார்க்கிறது. இருட்டு மெல்ல மெல்ல விலகி வந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் யூகலிப்ரஸ் மரங்களும் இடையிடை எமதூரை நினைவு படுத்தும் கள்ளிச் செடிகளும் பின்னிக் கிடந்தன. அவற்றுக்கிடையில் விதவைகள் போல் நிற்கும் பட்ட மரங்கள் சில. அவை போன வருட வின்ரரில் பட்டுப் போய்ப் பின்னர் தளிர்க்காதவை. பட்ட மரங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கும் “சௌக்கியமோ? குருவிகள்! இந்த ஊரில் அந்தப் புதிய குருவிகளின் பெயர் எனக்குத் தெரியவில்லை. அவை கூவும் போது “சௌ..க்கியமோ?” என்று கேட்பது போல் இருப்பதால் அப்படி வைத்து விட்டேன். வேறு யார் என்னை இங்கே “சௌக்கியமோ?” என்று மனப்பூர்வமான அன்புடன் கேட் கிறார்கள். பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவும் இல்லை, முன் வீட்டு முத்தம்மாவும் இல்லை. 

குருவிகள் யாரைச் சுகம் விசாரிக்கின்றன? பட்ட மரங் களையும் கள்ளிகளையும் தான் விசாரிப்பது போல இருக்கிறது. என்னை அல்ல. 

“உங்களை மனிதர்களை – சுய நலவாதிகளை மனதில் வஞ்சக எண்ணம் கொண்டு எப்போதும் செயற்படும் உங்களை நாங்கள் ஏன் சுகம் விசாரிக்க வேண்டும்” என்று அவை என்னைக் கேட்பது போல ஒரு கற்பனை.காத்திரமான கேள்விதான்! 

மனதிலே பிழியப் பிழிய வேதனை கொப்பளிக்கின்றது. மனிதனின் தேவைகள் எவை? குருவியின் தேவைகள் எவை? குருவி ஏன் உள்ளொன்று வைத்துப் புறமென்று பேசவில்லை? 

உள்ளே ஓடிச்சென்று உளவியல் நூல் ஒன்றை எடுத்துப் பிரித்தேன். குருவிக்கு இல்லாமல் மனிதனுக்கு இருக்கும் தேவை “தான் முக்கியம் என்ற உணர்வு” அல்லது “சுயகணிப்பு”. இப்போது அந்தக் குருவிகள் “முக்கியமோ? முக்கியமோ’ என்று கூவுவது போலக் கேட்டது. அதுவே வெளிநாட்டில் முக்கிய பிரச்சினை போலப்பட்டது. இதைப் பற்றிச் சிந்தித்தவாறே இருந்த நான் நேரப் பாதையில் நெடுந்தூரம் சென்று விட்டேன். நாலும் எட்டும் தான் கூடாத எண்களா? பணமும் பணத்தால் வாங்கும் பொருள்களும் தான் முக்கியம் என்று நினைப்பவன் மனிதன் தான். குருவி இல்லை. 

குதிரைத்திடலில் குதிரைகள் ஓடுகின்றன. ஒரு குதிரை முதலா வதாக வந்துவிட்டதென்று மற்றக் குதிரைகள் எரிச்சல் படுவதில்லை. அந்தக் குதிரை ஏதும் போதைப் பொருள் பயன்படுத்தியதா என்று தேடித் தேடி அலைவதுமில்லை. முதலாவதாக வரக்கூடிய குதிரையும் தான் போதைப் பொருள் பயன்படுத்தியாவது முதலாவதாக வரவேண்டும் என்று ஒரு போதும் நினைப்பதில்லை. தான் முதலாவதாக வந்து விட்டேன்.இனி இனி என்னை விட்டால் ஆளில்லை என்று இறுமாப்புக் கொண்டு அலைவதுமில்லை. 

குதிரை மேல் பணம் கட்டிய மனிதன் படும் பாடு! தான் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்ற உணர் வினாலேதான் மனித சமூகத்தில் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டது. இந்த உணர்வினாலேதான் விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் அனைத்தும் நிகழ்ந்தன. இதே உணர்வினாலே தான் கல்வி அறிவு குறைந்த-வறுமைப் பிடியில் உலைந்த எழுதுவினைஞன் ஒருவன் சட்ட நூல்கள் சில வற்றைத் தேடிப் படித்தான். “ஏபிரகாம் லிங்கன்” என உலகப் புகழ் பெற்றான். எனவே இந்த உணர்வினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த உணர்வு எல்லை மீறிப் போகும் போது? “நான் மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும்” என்கின்ற வெறியாகிற போது? 

கரு மேகங்கள் ஆங்காங்கே வேவு பார்த்தன. வருஷத்தின் வாற்பகுதியாதலால் மழை மெதுவாகத் தூறத் தொடங்கியது. போன வருஷம் நவம்பரில் புதிதாக நான் இங்கு வந்த போது வீதி தோறும் வெறி பிடித்துப் பூத்துச் சொரிந்த ஜக்கரண்டா மரங்களின் புற அழகில் சொக்கியிருந்தேன். 

கொஞ்சம் வெளித்திருந்த தரையில் மீண்டும் இருள் பரவத் தொடங்கியது. ஜக்கரண்டாப் பூக்கள் சொரிந்து நிலம் ஊதாக் கம்பளம் விரித்திருந்தது. கிரேக்க நாடக அரங்கில் ஊதா நிறம் துன்பியலுக் கானது என்ற எண்ணம் தேவையின்றி மனதில் சுழன்று மறைந்தது. 

மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளுக்குச் சொந்தமான இந்த ஜக்கரண்டா அவுஸ்ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு மரம். “பிக்னோநியேசி” என்ற குடும்பத்தில் இதற்கு நாற்பத் தொன்பது இனங்கள் உண்டு. அதனுடைய சாதிப் பெயர்தான் ஜக்கரண்டா. ஊதா நிற நிறமூட்டலுக்குப் பெயர் போன மரம். இதனுடைய மருத்துவப் பண்பும் அதிகம். இதனுடைய உயரம் இரண்டு மீற்றரிலிருந்து முப்பது மீற்றர் வரை வேறுபடும். கூட்டிலைகளும் ஐந்து அல்லிப் பூக்களுமாய் அது தெருவை அலங்கரிக்கும் அழகே அழகு! பழம் தட்டையானது. ஓவல் வடிவமானது. பழத்தினுள்ளே மென்மையான பல வித்துக்கள் இருக்கும். எனது மென்மையான உணர்வுகள் விழித்துக் கொள்கின்றன. 

என் மனதில் கேள்விக்கான விடை இன்னும் தெளிவாக வில்லை. சமயம் இக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லும்? அது மிக இலகுவாய்ச் சொல்லிவிடும். “கடமையைச் செய். பலனை எதிர்பாராதே” என்று கீதை மிக எளிதாக்கிவிடும். 

உனது இலட்சியம் அவனை அடைதலே என்று கூறும். “அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” என்றும் “எமக்கு இந்த உடம்பு கிடைத்தது இறைவனை வணங்கி முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாம்” என்றும் எழுத்தில் அழகாய் இருக்கும்.! 

“நீ கடவுளின் கரங்களில் இடப்பட்ட கருவி என்று நினைத்துக் கொள். உன்னை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவனுக்குத் தெரியும். நீ சும்மா இரு அது போதும்” என்று அழுத்தமாய்க் கூறி உணர்த்தும். 

Thou art the potter
I am the clay 
Mould me and make me 
As to thy will 
While I am waiting Yielded and still 

என்று தான் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கீதமும் பாடும். ஆனால் அப்படிச் சும்மா இருந்து விடுவது அவ்வளவு சுலபமாய் இல்லையே! 

மழை நின்று மஞ்சள் வெயில் சிந்தும் வேளை மெதுவாக ஜக்கரண்டா எட்டிப் பார்த்தது. எழுந்து தெருவுக்கு வந்தேன். 

ஜக்கரண்டா மலர்ப்படுக்கையின் அழகைக் கண்டு மயங்கி அதில் கால் வைத்தேன். இரண்டு அடி வைத்திருக்க மாட்டேன். கால் சறுக்கிப் “பொதுக்” என்று நிலத்தில் விழுந்தேன். 

பதினெட்டு நிற மூர்த்தங்கள் கொண்ட அந்தத் தாவரத்தின் மெல்லிய இதழ்கள் மழையில் நனைந்து வழுக்கும் தன்மை பெற்றி ருந்தது எனக்குத் தெரியாது. கால் முறிந்து விட்டதா? தெரியவில்லை. கடும் வேதனையாக இருக்கிறது. 

“உன் வாழ்க்கை ஏட்டைப் புரட்டிப் பார். நீ உனக்காக வாழ்ந்த நாட்கள் பலவற்றை நிச்சயமாகக் காண்பாய். ஆனால் பிறருக்கென்று நீ எத்தனை நாட்களை அர்ப்பணித்திருக்கிறாய்? எண்ணிச் சொல்ல உன்னால் முடியுமா?” 

உள்ளிருந்து ஒரு குரல்! 

பொருளற்ற வெறும் பிண்டமாய் அழகற்றுப் போயிருந்த உலகில் திடீரென ஒரு ஒளிக்கீற்றுத் தெரிந்தது. நான் எழுந்து வேதனையுடனே தொடர்ந்து நடந்தேன். 

– கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிட்ட “சங்கப்பொழில்” 2013

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *