கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 1,364 
 
 

“சரிதான் போ! இன்னும் இருபது நிமிஷமாவது ஆகும் கேட் திறக்க! இப்ப என்ன செய்யலாம். நடந்தே போய்விடலாமா?” சிதம்பரத்தைக் கேட்டான் நடேசன்.

“இந்த வெய்யிலிலே நீ நடக்கவாவது? நான் தயார் உன்னாலேதன் முடியாது – என்ன சொல்றே, இறங்கலாமா?”

“நான் எனக்காகச் சொல்லலை… நேரமாயிடுமே, பிறகு போனா அவர் இருப்பாரோ மாட்டாரோ என்பதால்…” சற்று இழுத்தான்.

“இதோ பார். இந்த வழவழாப் பேச்சு வேண்டாம். ‘ கட் அண்ட் ரைட்’டா சொல்லு எறங்கி ஆட்டோவில் போகலாம். உம்… என்ன?…”

“வெட்டிச் செலவு எதுக்கு. போறப்ப போகட்டும்.” முருகேசன் முடிவாகச் சொல்லிவிட்டான்.

எதிரும் புதிருமாக உள்ள சீட்டில் அந்த பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு வேறெதுவும் பேசாமல் கொளுத்தும் வெய்யிலில் தெருவில் செல்லும் ஜனங்களைப் பார்த்தபடி சிந்தனை வசப்பட்டிருந்தார்கள் அவர்கள்.

காலையில் ஊரிலிருந்து கிளம்பும்போதே ஒரு பஸ் தப்பி விட்டது. பிறகு மூன்று மைல் நடந்து வந்து டவுன் பஸ்ஸில் ஏறி வரும்போது நடுப்பகல் ஆகிவிட்டது. இப்போது ரயில்வே கேட் சாத்திவிட்டதால் இதில் வேறு தாமதம்.

‘போகும் காரியம் ஆகுமோ ஆகாதோ?’ பெருமூச்சு விட்டபடி சட்டைப் பையிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்து மறுபடியும் படித்தான் சிதம்பரம். இதோடு எத்தனையோ தடவை படித்தாகி விட்டது. திங்கட் கிழமை கடைசி தேதி,. அதற்குள் பணம் போயாக வேண்டும்?

கைக் கெடிகாரத்தைப் பார்த்தான் முருகேசன். வண்டி நின்று பதினைந்து நிமிஷங்கள் ஆகிவிட்டது. இரண்டொருவர் இறங்கி குறுக்கு வழியில் நடக்க ஆரம்பித்துவிட்டனர். மதகுக்கு அப்பால் புது வெள்ளம் வரும்போது தேங்கியிருக்கும் நுங்கும் நுரையும் போல் கேட்டுக்கு இருபுறத்திலும் ஏகக் கும்பல்

கடகடவென்ற பெருத்த ஒலியுடன் ஏகப்பட்ட குட்ஸ் வேகன்களை திணறித் திணறி இழுத்துக் கொண்டு – புஸ் புஸ் என்று பெருமூச்சு விடுவதைப் போன்ற பிஸ்டன் சத்தத்துடன் வண்டி கேட்டை கடந்து கொண்டிருந்தது.

பஸ்ஸில் உள்ள எல்லோரும் புதிதாக இன்றுதான் ரயிலைப் பார்ப்பது போன்ற ஆர்வத்துடன் பார்த்துவிட்டு – அதே சமயம் அதை சபித்துக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

“டேய்… செவிடு..! … கூப்பிடுவது காதில் விழவில்லை?”  தெருவிலிருந்து யாரோ ஒருவர் பஸ்ஸில் உள்ள … முருகேசனைக் கூப்பிட்டது கூடத் தெரியாமல் கண்ணாடி ஜன்னலில் மூக்கை நசுக்கிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதம்பரம் அவரைப் பார்த்து விட்டான். இவன் அவனுக்குத் தெரிவிக்க… “அடாடாடா..! ஏது அதிசயமாயிருக்கு? இங்கே எங்கே வந்தே..?”

கேட் திறக்கப்பட்டுவிட்டது. மடை திறந்த வெள்ளம் போல் சைக்கிள்கள் போக ஆரம்பித்துவிட்டன.. லாரிகள் நகர… கார்கள் ஆரன்களை ஒலிக்க… இவர்களது பஸ்ஸும் நகரப் போகும் சங்ககேதங்களை செய்து கொண்டிருந்தது.

“சரிடா கீழே இறங்கு.. இவன் என் ப்ரண்ட், எங்கூர்க்காரன். பேசிவிட்டு பிறகு ஆட்டோவிலே போகலாம். ..” அவசர அவசரமாக முருகேசன் இறங்கிவிட்டான். சிதம்பரத்துக்கு அரை மனதுதான் “அட ஆர்ரா இவன் ஒருத்தன்…” மனதுக்குள் முனகிக் கொண்டாலும் வெளியில் காட்டவில்லை.

இப்போது அவன் தயவில்தான் பணத்துக்காக யாரையோ எதிர் பார்த்துக்கொண்டு போகிறார்கள். காரியம் கெடக்கூடாதே..!

இருவரும் இறங்கி புதிய நண்பருடன் நடந்து  ‘ரோடரீ கிளப்’ காரர்கள் கட்டி வைத்திருக்கும் ‘பஸ் ஸ்டாப் நிழலுக்குப் போனார்கள்.

அறிமுகப் படலம் நடந்து முடிந்தது. சிதம்பரம் அவர்கள் பேச்சில் அதிகம் ஒட்ட முடியவில்லை. இவன் என்ன இருந்தாலும் உத்தியோக வாழ்வில் நண்பனாக அமைந்தவன். அவர்கள் பரம்பரையாக ஒரே ஊரில் வசித்து வரும் குடும்பத்தினர். தவிர ‘கிளாஸ் மேட்’ கூட என்பது அவர்களது உரையாடலிலிருந்து தெரிந்தது.

“சரி எங்கே கிளம்பினே? சாரையும் இந்த வெய்யிலிலே எங்கே இழுத்தடிக்கறே..?”

நல்ல வேளை ‘சார்’ ஒருவன் குத்துக்கல்லாக நிற்பது ஞாபகமாவது வந்ததே..! மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

“ஸாராவது மோராவது… உன் கிட்டே சொன்னா நீ என்ன பண்ணுவே? உன்னைப் பார்த்ததினாலே எங்க காரியம் இன்னும் கெட்டுத்தான் போச்சு.” குறை கூறும் பாணியில் துவங்கினான் முருகேசன்.

“அதென்னடா அப்படி முக்கிய விஷயம்? சொல்லித்தான் தொலையேன். முடிந்தால் செய்யறேன்.” கைக் கடிகாரத்தைப் பார்த்தான். “டேய் நேரமாகிவிட்டதடா – சீக்கிரம் சொல். இல்லாட்டாப் போயிடுவேன்.”

இருவரும் பத்தடி அப்பால் சென்றார்கள். தோள்மேல் தோளாகப் போட்டுக் கொண்டு மிக மெல்லிய குரலில் பேசியபடி… “ ஆஹா! குழந்தையிலிருந்து பழகிய நட்பு என்பது அதுதான்.! எத்தனை வருஷம் ஆனால் என்ன? பொது இடம் – வயதான – பெரியவர்கள் – ஒரு பொறுப்பில் இருப்பவர்கள் என்பதெல்லாம் மறந்து இணைந்து செல்லும் அக்காட்சி பள்ளிச் சிறுவர்களை நினைவூட்டியது. தன் கவலைகளையும் மறந்து அவர்கள் பேசுவதைப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.

சிதம்பரத்திற்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்களில் எவரையும், சமீப ஏழெட்டு வருஷங்களில் சந்திக் முடியவே இல்லை.

பேசி முடித்துவிட்டார்கள் போல் தெரிந்தது. நெருங்கி வந்த முருகேசன் சிதம்பரத்தின் பையில் இருந்த கடிதத்தை உரிமையுடன் எடுத்து… ‘இந்தா இது பார்’ என மீனாட்சியிடம் தந்தான். ஆம் ! அவன் நண்பனின் பெயர் மீனாட்சிசுந்தரம்.

“காமன்…” என்று கூப்பிட்டதன் பொருள் இப்போதுதான் சிதம்பரத்திற்குப் புரிந்தது. அவனுக்கும் இந்தப் பெயரில் ஒரு நண்பன் உண்டு. ‘காமன் ஜெண்டர்’ என்று பள்ளிக்கூடத்தில் கேலி செய்வார்கள்.

“லெட்டர் எதுக்குடா? சொன்னால் போதாதா?” சற்று யோசித்தான்.

கையில் உள்ள தோல் பையை லாகவமாகப் பிடித்துக் கொண்டு அதைத் திறந்தான். “இந்தா… போதுமா..?”

“என்னது? இருநூறு? இவ்வளவு வேண்டாம்.  நூத்தம்பது போதும்.” வியப்பால் மலர்ந்த கண்களுடன் கையில் பெற்றுக் கொண்டவன் ஒரு நூறு ரூபாய் நோட்டை திருப்பி அவனிடமே தந்துவிட்டான். ஐம்பது ரூபாய் பத்து ரூபாய்களாகக் கொடுத்தான்.

“அது சரி ஏது இவ்வளவு பணம்? எப்பத் திருப்பித் தரணும்?.. உன்க்கென்ன ராஜா! திருப்பித் தராட்டிக் கூட சமாளிச்சுக்குவே..”

“ஊம்..ம் சமாளிப்பேன். ஏதோ திண்டடிறிளேனுட்டுத் தந்தா பேசமாட்டியோ.. ஆமாம் ! காலணா வராது.. ஜாக்கிரதை.” முருகேசன் சொன்னான்.  டேய், உனக்கு நல்ல காலம் இருக்குது. பணம் கிடைச்சுது. ஒழுங்கா ‘நெக்ஸ்ட் மந்த்’ திருப்பிக் தந்துடு.  என்றான் சிதம்பரத்தின் பக்கம் திரும்பி.

“ஸார் நெக்ஸ்ட் மந்த் – ரொம்ப முடியலையானா இன்னொரு பதினைந்து நாள், அதுக்குள்ளே ரிடர்ன் பண்ண ‘ட்ரை’ பண்ணுங்கோ, ஏன்னா இது என் பணம் இல்லே. நான் ஒரு செலவுக்காக ஒருத்தரிடம் இப்பத்தான் வாங்கினேன். நடு வழியிலேயே என் ‘ப்ரதர் இன் லா’ வை ‘மீட்’ பண்ணினேன். பணத்துக்கு அவசியமில்லைன்னு தெரிஞ்சிது. உங்க கிட்டே தந்துட்டேன்.”

“போறும்டா உன் கதை. போய் வேலையைப் பாரு. இன்ஸ்பெக்டர் காத்திருக்கப் போறார். நாளைக்குக் கட்டாயம் வரணும். வீட்லேயும் சொல்லி வைக்கறேன்.” விலாசத்தை ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதி அவனிடம் தந்தான் முருகேசன்.

அதிகம் பேசாவிட்டாலும் நன்றி கண்களில் பொங்க- குரல் தழுதழுக்கக் கைகொடுக்க எண்ணி நீட்டினான்..சிதம்பரம்.

“இதுனாலே என்ன சார் “மேன் டு மேன்” நாம் என்ன சும்மாவா தரோம்.”

“என்னப்பா – நம்ம ஃப்ரண்ட் பார்த்தியா!”

“நமக்கு யோகம்தான்! சரி, இப்ப என்ன பண்றது?”

“பன்றதென்ன? நேரே அவரிடமும் போவோம். கேட்டு வைப்போம். அடுத்த மாதமாவது தரட்டும். அதை வாங்கி இவன் கிட்டே கொடுத்துட்டா அவருக்கு மெதுவாத் தரலாம்.”

“சரி நட.”

“நடக்கவாவது?  ‘ஆட்டோ?’.. கை தட்டிக் கூப்பிட்டான்.

முருகேசன் ஆட்டோவுக்கு வழி சொல்லிக் கொண்டே போய் நண்பர் வீட்டு வாசலில் நிறுத்தச் செய்தான். அவர் இருந்தார். போன காரியத்தைச் சொல்லி ‘பழமான’ முடிவுடன் வந்தனர். அவர் ‘பிஸினஸ் லைக்’ ஆகத்தான் இருப்பார். அதிகம் பேசவேண்டிய அவசியமே இருக்காது.

“டேய் எப்படிப் பார்த்தியா நம்ம இடம். நான் இவங்களை எல்லாம் அதிகம் உபயோகப் படுத்திக்கறதில்லை. ஆனா சமையம்னா திண்டாட வேண்டாம்.”குரலில் பெருமை தொனித்தது.

சாதாரண உத்தியோகத்தில் இருந்துகொண்டு, இப்படியொரு சமயா சமயத்திற்கு உதவி வேண்டுமானால் – புரளும் புள்ளி- இந்தக் காலத்தில்தான் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அவசியமாகி விட்டது!’ அவன் பெருமைப் படத்தான் வேண்டும். சிதம்பரத்தின் மனம் வேலை செய்துகொண்டிருந்தது.

வழியில் தென்பட்ட போஸ்ட்பீசில் சென்று பணத்தை ‘எம் ஓ’ அனுப்பிவிட்டான். நாளையோ அல்லது திங்களன்றோ கட்டாயம் போய்ச் சேர்ந்துவிடும்,

“அடுத்த ப்ரோக்ராம் என்ன?” சிதம்பரம் கேட்டான்.

“போக வேண்டியதுதான்… பணமிருந்தா ஏதாவது ‘பிக்சர்’ போயிட்டு வரலாம்.”  சொல்லிக் கொண்டே பர்ஸைத் திறந்து சில்லறையை எண்ணினான்.

சிதம்பரம் ஜிப்பா பையில் கை விட்டுத் துழாவினான். போதிய சில்லரை இருந்தது.

றிகு என்ன? காப்பிக் கடையில் புகுந்து சிற்றுண்டி – அடுத்தது மாட்னி ஷோ!”

ஏதோ பாடாவதிப் படம். ஆனால் மனக்கவலை இல்லாததால் ஜாலியாகப் பேச ஒரு இடமாக மட்டும் தியேட்டர் பயன்பட்டது.

“மிஸ்டர் கொஞ்சம் மெதுவாகப் பேசலாமா?” பின்சீட்டில் இருந்த யாரோ இவர்கைளைப் பண்புடன் கேட்டுக் கொண்டார்.

படம் ரசிக்க முடியவிலையானும் ‘போர்’ அடிக்கவில்லை.

இடை வேளை வந்தது. விளக்குகள் போடப்பட்டன. இரண்டாவது ஆச்சரியம் அவர்களுக்குக் காத்திருந்தது.!

பின்னால் இருந்தது மீனாட்சி சுந்தரம்.!

“அடப்பாவி.. இங்கெங்கடா வந்தே..?”

“நான் வந்ததிருக்கட்டும்.. நீ.. உன் இன்ஸ்பெக்டர் எல்லாம் என்ன ஆச்சு..?”

“ஆறதென்ன..? வா படம் பார்த்தது போதும் போகலாம்.”

மூவரும் வெளியே வந்தார்கள். “இனித் தாராளமாகப் பேசலாமல்லவா?” முருகேசன் கேட்டான்.

“உங்களுக்கெல்லாம் மிக மிக நன்றி!” இருவர் கையையும் பிடித்துக் குலக்கிக் கொண்டே மேலும் சொன்னான். “உங்களாலே என் வேலை பிழைச்சுது!” எற்றான்.

“என்னடா புதிர் போடறே?”

“உட்காரலாம் வா” அங்கேயே மரத்து நிழலில் இருந்த ஒரு பெஞ்சியில் உட்கார்ந்தார்கள்.

அவன் சொன்ன செய்திகள் இவர்ளைத் திடுக்கிட வைத்தன. எதிர்பாராமல் விளைந்த நன்மை கண்டு இறைவனை வாழ்த்தினர். மகிழ்ச்சியின் எல்லை ‘அவனது’ நினைவுதானே!.

அப்படி அவன் சொன்ன விவரம் இதுதான்.

“மீனாட்சி சுந்தரம் ஒரு பிரபல ‘டெக்ஸ்டைல்’ மில்லின் ஏஜண்டாக வேலை பார்க்கிறான். சில ஆயிரம் முன் பணம் கட்டி ‘மார்கெட்’டில் என்று கிராக்கயான அவர்களது வகைகளை, எல்லா வியாபாரிகளுக்கும் உரிய அளவுப்படி விநியோகிப்பது அவன் வேலை.

தன் முயற்சியால் முன்னுக்கு வந்து பேர் வாங்கிவிட்ட அவனை ஏதாவது ‘கெட்ட பெயர்’ வைத்து வெளியில் தள்ள சிலர் முயற்சி செய்தனர். அது அன்று வரை அவனுக்குத் தெரியாது.

வியாபாரிகளிடம் பழகி வருவதால், தேவையானபோது பணம் கொடுத்து வாங்குவது அவனுக்கு சகஜமான ஒரு செயலாக இருந்தது.

அவனைக் கவிழ்க்க நினைப்பவர்கள் இதையே ஓர் ‘தருணமாக’ எதிர்பார்த்து அவனை சிக்கவைக்க ஏற்பாடு செய்து வந்தார்கள். எதுவும் தெரியாத இவன் ஒரு வியாபாரியிடம் குறிப்பிட்ட தினத்தில் ‘பணம்’ கேட்டிருக்கிறான். அவன் இவனுக்கு ‘துரோக’ மிழைக்க நினைத்தவனாகவே இருந்தது மீனாட்சி சுந்தரத்திற்குத் தெரியாது.

“நல்ல எண்ணத்துடன் செயல் புரிபவர்களை இறைவனல்லவா காப்பாற்றுகிறான்.!”

கம்பெனியின் சரக்குகள் சரியாக விநியோகம் ஆகிறதா என கவனிக்கக் – கம்பெனி அதிகாரி (இன்ஸ்பெக்டர்) அடிக்கடி வருவதுண்டு. வேர் வந்த சமயம் பல ‘கம்ப்ளைண்டுகளை’ விநியோகஸ்தர் மேல் சுமத்தி – நிதர்சனமாக அதை விளக்கவும் வலை விரித்துவிட்டனர்.

ஒரு பகுதியில் முகாமிட்டிருக்கும் ‘அதிகாரி’ யிடம் மறு பகுதியில் உள்ள கடைக்காரரிடமிருந்து ஏஜண்ட் வரவேண்டியது. ஏஜண்டை சோதித்து பிறகு அவர் பேரில் குற்றம் சுமத்த வேண்டியது.!

அந்த எண்ணத்தில்தான் கையெழுத்திடப்பட்ட நூறு ரூபாய் நோட்டை  கடனாகக் கேட்ட ஏஜெண்டிடம் வியாபாரி தந்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு மறு பகுதிக்குப் வரும் போது கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இதில் தான் ‘தெய்வம்’ விளையாடிவிட்டது. லெவல் கிராசிங் மூடிய அமளியில் இவரை விட்டு விட்டான் பின் தொடர்ந்து வந்தவன்.

அந்தச் சமயத்தில் நண்பர்களைச் சந்தித்து பண உதவி செய்தது மிக மிக நல்லதாகிவிட்டது.

பிறகு எதேச்சையாக வரும் அவனைக் கண்டுபிடித்து – தான் சில நிமிஷங்கள் விட்டுவிட்டதை யாரிடமும் சொல்லாமலேயே, பின் தொடர்ந்து வந்தவன் சமாளித்துவிட்டான்.

கள்ளமில்லா உள்ளத்துடன் – அதிகாரியிடம் வந்து வழக்கம் போல் கணக்கு விவரங்களைக் கூறியிருக்கிறான். அவர் பண இருப்பு உட்பட ரசீது – அளவு – விநியோகம், மற்ற பல குறிப்புகளையும் பரிசீலித்து எல்லாம் வழக்கம்போல் சரியாக இருந்துவிட்டதால் விடை கொடுத்து அனுப்பி விட்டார்.

வியாபாரி ஏமாந்துவிட்டான் ! இவனுக்கும் உலகம் தெரிந்துவிட்டது!

கதையை முடித்தான் மீனாட்சி சுந்தரம்.

“அது சரி; இந்த ஏற்பாடு உனக்கு எப்படித் தெரிந்தது?”

“நான் இங்கிருந்து போய் வேலை முடிந்த பிறகு என் போக்கில் வந்தேன். பிறகு ஏதோ நினைத்து அதிகாரி இருக்குமிடம் போனபோது – பணம் கொடுத்த வியாபாரி பின் தொடர்ந்து வந்தவனை குறுக்குக் கேள்விகள் போட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் கண்களில் படாமல் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு விட்டேன். இனி இதில் வெகு ஜாக்கிரதையாக இருப்பேன்.” என்றான்.

ஒருவரையறியாமல், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்ட ஓர்  நிறைவு அவர்கள் முகத்தில் பரவியிருந்தது.

ஒரு கடுமையான ‘சோதனை’யில் வெற்றி மகிழ்ச்சியைக் கொண்டாட ‘ஹோட்டர் சுதர்சனா’வுக்குக் கிளம்பிவிட்ட அவர்களைக் கண்டு படத்துக்கு வந்திருந்த அந்த வியாபாரியும் கூட தன் காரியம் நிறைவேறாமல் வயிறெரிந்து கொண்டிருந்தான்.

– குடியரசு – 15-11-1965

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *