சொர்க்கத்திலுமா சீர்திருத்தம்?

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 6,538 
 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிஸ்டர் ரேவடியாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குரு சிஷ்ய பாவத்தைக் சேர்ந்தது. கோக லேக்கும் ஜான்ஸனுக்கும் உள்ள தொடர்பு என்று கூறினாலும் பொருந்தும். நான் அவருடைய நடை, உடை, பாவனையை அப்படியே இம்மி கூடப் பிசகாமல் பின் பற்றி வந்தேன். காரணம், நான் அவரைப் பெரியாரிலும் பெரியாராகக் கருதி வந்தது தான். அவரது வாழ்க்கை லட்சியங்களிலே எனக்கு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை; அபாரப் பற்று. அவற்றை நான் வணங்கி வழி பட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவரது பேசும் ஆற்றலைக் கண்டு நான் பிரமித்துப் போய் அசந்து நிற்பேன். என்னைப் பொறுத்த வரை அவரை நான் வெற்றி கொள்ள முடியாத மாவீரராகவே மதித்து வந்தேன்.

மிஸ்டர் ரேவடியாவின் வாழ்க்கை லட்சியங்கள் நடைமுறை உலகத்தின் அடிச்சுவட்டில் வந்தவை. அவர் நடை முறை உலகத்தை நெருங்கி வழிபட்டு வந்தார். அதன் போக்கிலே மெய்ம் மறந்து விட்ட பக்தராக வாழ்ந்தார். அதன் போக்கைப் புரிந்து கொள்ளாமல், யாராவது சிறிது மாறுபட்டு நடந்து விட்டால் கூட, அவருக்குக் கண்கள் சிவந்து விடும்; அவனைத் தமது பரம விரோதியாகவே பாராட்டத் தொடங்கி விடுவார். பணக்காரராக இருந்ததோடு அவர் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் போய் வந்திருந்தார். தற்கால இலக்கியத்தை மிகப் பாங்கான முறையில் பயின்றிருந்தார்.

அவர் மிகுந்த கெட்டிக்காரர், சாமர்த்தியசாலி. கல்வி கேள்விகளிற் சிறந்தவர். சீர்திருத்த நோக்கங் கொண்டவர். நவ நாகரிகத்திலே திளைத்தவர். அதனால் தமது அறிவுக் கட்டையான முன்னோர்களின் பல செயல்களையும்,எள்ளி நகையாடும் நோக்கத்துடனேயே பார்த்து வந்தார். எனவே, நானும் என் பொருளாதார நிலை, அறிவுத் திறன் ஆகியவற்றுக்கேற்ப, அவரது அடிச்சுவட்டைப் பின் பற்றுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.

இவ்வாறு, நாங்கள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஒரு உறுதியான, தீர்மானமான, பட்சபாதமற்ற முடிவுக்கு வந்தோம். எங்களிடையே உற்சாகம் கரை புரண்டு பொங்கத் தொடங்கியது. நாங்கள் நெடுநேர ஆ லோசனைக்குப் பின் வந்த அந்த முடிவு இதுதான் :

இவ்வளவு திறமைகளும், இவ்வளவு வித்தை களும், இவ்வளவு அறிவுத்திறனும் இத்தனை நாளும் இல் லாமல் திடீரென்று இந்த நவீன காலத்தில் தான் டபக் கென்று குதித்து வந்திருக்கின்றன. இதற்கு முன் இவை யெல்லாம் இல்லவே இல்லை.

இந்த முடிவின் காரணமாக, ‘பண்டைய பாரதத்தில் காட்டு மிராண்டிகளே வாசம் புரிந்து வந்தார்கள். அவர்களது காரியங்களனைத்தும் மடமைமிக்கதாகவும் பயங்கொள்ளித்தனம் நிறைந்ததாகவுமே இருந்து வந்தன’ என்ற உறுதி அவரது உள்ளத்திலே அசைக்க முடியாத ஆணி வேராக வேரூன்றி விட்டது.

அக்காலத்து மக்களின் மூளையிலே பாசி படிந்தி ருக்க வேண்டும் என்றும், நம்மைப் போன்ற கெட்டிக் காரர்களும், நன்றாகத் திருந்தியவர்களும், அறிவாற்றல் நிறைந்தவர்களும், தந்திரமாகப் பிழைக்கத் தெரிந்தவர் களுமான நற்புத்திரர்களை ஈன்றெடுத்ததைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என் றும் கூட அவர் சொல்லுவார்.

இம்முடிவைப் பற்றியும் இதில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் நாங்கள் எத்தனையோ தடவைகள் பேசியிருக்கிறோம். தற்காலத்துப் பண்பாட்டிலே தோய்ந்துள்ள பல அரும் பெரும் குணாதிசயங்களைப் பற்றி வாயார வார்த்தை யாடியிருக்கிறோம். முன்னோர்களின் முட்டாள்தனத்தை எள்ளி நகையாடியிருக்கிறோம்.

எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன், மிஸ் டர் ரேவடியா பகல் பத்து மணிக்குத் தான் விழித்து எழுந்திருப்பார். வாயிலே புகைச் சுருட்டும் கையிலே தேநீர்க் கோப்பையுமாகக் காட்சி தருவார். டிரெஸிங் கவுனை அணிந்த வண்ணம் படுக்கையில் படுத்தவாறே பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார்.

இம்மாதிரி நேரங்களில் நான் அவர் வீட்டுக்குப் போவதுண்டு. நாகரிகம் தெரியாத நமது முன்னோர்கள் அளித்துச் சென்ற இந்தக் கறுப்புத் தோலை மறந்து, அவர் எவ்வளவு அழகாக, நவநாகரிகம் தோய்ந்தவராக, ‘அப்டுடேட்’டாக இருக்கிறார் என்று போற்றிப் புகழ்வது உண்டு. இல்லாவிட்டால் இருவரும் நேர்த்தியான நாகரிக ஆடை அணிந்து கொண்டு ‘பாண்டு ஸ்டாண்டை சுற்றி வருவோம். அந்த நேரத்தில் இரண்டொரு நாழிகை நேரத்துக்கு உண்மை நிலையை அறவே மறந்து இன்ப வாரிதியிலே திளைப்போம். ‘பண்பாடு அற்ற காட்டு மிராண்டிகள் வாழும் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் நாம்’ என்ற நினைவே எங்களுக்கு இராது. இருந்தாலும் என்னையோ மிஸ்டர் ரேவடியாவையோ யாராவது முட்டாள் மனிதன் ஒருவன் பார்த்தானானால், கோவாக்காரர்கள் என்றேதான் எண்ணுவான். இது தான்எங்களுக்கு ஒரு பெரிய தர்மசங்கடமாகத்தோன்றி வந்தது. கோவாக்காரர்கள் கறுப்பர்களாயிருந்த பொழுதிலும் ஐரோப்பியர்களைக் காப்பி அடிப்பதில் கைதேர்ந்தவர்கள். குதிரை, தான் விழுந்ததோடு அல்லாமல் குழியும் பறித்ததாம் என்ற கதையாக எங்களுக்கு இந்தக் கோவாக்காரர்கள் ஏன் தான் இப்படி அவப் பெயர் வாங்கி வைக்க வேண்டுமோ, தெரியவில்லை! எங்களுக்கு அந்த முட்டாள்கள் சொல்வதைக் கேட்டு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

மிஸ்டர் ரேவடியாவிடம் எல்லாவற்றைக்காட்டிலும் மிகமிகப் பாராட்ட வேண்டிய ஒரு குணம் இருந்தது. அவர் தாம் மட்டும் திருப்தி அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கம் கொண்டவரல்ல. தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்ற ஆவல் மிகக் கொண்டவர். தமது கொள்கையைச் சிருஷ்டியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரப்ப வேண்டும் என்பது அவரது அவிக்க முடியாத ஆசை. கடந்த கால இந்தியர்கள் அறிவிலிகளாக வாழ்க்கை நடத்தியவர்கள் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. நடை முறை உலகத்துக் கொள்கைகளை பாரத மக்கள் பயின்றார்களானால், அவர்களிடத்திலே மனிதத் தன்மை வந்து விடும் என்றும் அவர் நம்பினார். தம்மைப்போன்ற பேச்சில் வல்ல, புத்தியில் சிறந்த, சாமர்த்திய சாலியான சீரிய மானிடன், ஜனகர் அசோகர் ஆகியவர்களது காலத்தில் பிறந்திருந்தானானால், பாரத தேசம் கடைத் தேறியிருக்கும். நாம் எல்லோரும் சுத்தக் காட்டுமிராண் டிகளாக இல்லாமல் சீர்திருந்திப் போயிருப்போம். நாட்டு வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். தமது அறிவாற்றலைக் கொண்டு அவர் இப்படிப் பல விதமாக எடைபோட்டு வைத்திருந்தார்.


ஒரு நாள் இரவு எங்களிடையே இவ்விஷயம் பற்றி நீண்ட விவாதம் நடந்தது. இறுதியில் என்னையும் மீறி ஒரு உண்மையைச் சொல்லும்படியாகி விட்டது.

“மிஸ்டர் ரேவடியா! உங்களைப் போன்ற உற்சாகமே உருவானவர்கள் என்றைக்காவது சொர்க்கத்துக்குப் போகும்படி நேர்ந்தால், அங்கும் இதுபோல் பிரமிக்கத்தக்க ஒரு புதிய கிளர்ச்சியை உண்டு பண்ணியே தீருவீர்கள்!” என்றேன்.

“அது எப்படி?”

“சொர்க்கத்திலே கிடந்து அல்லலுறும் நமது முன்னோர்கள் உங்கள் உபதேசத்தைக் கேட்டார்களானால் கட்டாயம் பயன் பெறுவார்கள். அவர்களும் திருந்தி நல்ல நிலையை அடையலாம் அல்லவா?” என்றேன்.

“உண்மையான வார்த்தை. உன் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். ‘Better Late than never’- ஒன்றும் இல்லாததற்குத் தாமதமாகச் செய்வது நல்லது என்பார்கள். சொர்க்கத்தில் செய்தாலே போயிற்று. அங்கு கிடக்கும் கிழட்டு முண்டங்களுக்காவது புத்திவரட்டுமே!” என்றார் மிஸ்டர் ரேவடியா /

“நியாயமான பேச்சு! நான் வரட்டுமா?” என்று கூறி நான் விடைபெற்றுக் கொண்டேன்.


நான் என் வீட்டை அடைந்தேன். என் உள்ளத்தை விட்டு அந்தப் பேச்சு அகலவே இல்லை. ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்த பொழுது என் உள்ளக் கடலிலே எத்தனையோ அலைகள் எழுந்தன. “மிஸ்டர் ரேவடியா சொர்க்கத்துக்குச் சென்று அங்குள்ள மகாத்மாக்களைச் சந்தித்த பிறகு அவர்களுடைய பழைய வாழ்க்கையில என்ன என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கும் ?’ என்பதைப் பற்றியும் மனச் சிறகுகள் அடித் துக் கொண்டன. வெகு கேரம் வரை இதே யோசனை யில் ஆழ்ந்திருந்தவன் எப்பொழுது தூங்கினேனோ, எனக்கே தெரியாது. ஆனால் தூங்கியும் தூங்காதவனா கவே தான் நான் இருந்தேன். என் உள்ளம் வலுக்கட் டாயமாக விழித்துக்கொண்டிருந்தது. என் கண்கள் மூடியிருந்தனவா, திறந்திருந்தனவா என்ற நினைவு எனக்கு இப்பொழுது இல்லை.

என் கண்களெதிரே ஒரு காட்சி படர்ந்தது. நான் கண் அயர்ந்திருக்கிறேன். எனது ஆப்த நண்பரும் மதிப் புக்குரிய குருநாதருமான ரேவடியா அவர்களிடமி ருந்து ஒருவன் செய்தி கொண்டு வந்திருக்கிறான்.

“ஐந்து யுகங்களுக்குமேல் ஓடி விட்டன. அவர் சொர்க்கத்தைச் சீர்திருத்துவதில் முனைந்திருக்கிறார். தங்களைக் கையோடு அழைத்து வருமாறு கூறி என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்” என்றான் அவன்.

“என்னை எதற்காக அழைத்து வரச்சொல்கிறார்?”

“அங்கு நடைபெற்றிருக்கும் சீர்திருத்தங்களைப் பார்வையிடுவதற்காகத்தான்! புறப்படுவதாயிருந்தால் விமானம் தயாராயிருக்கிறது” என்றான் அவன்.

என் மதிப்புக்குரிய உணர்ச்சி மிகுந்த அறிவு ஒரு முறை துள்ளிக் குதித்தது. சிறிது நேரத்துக்கு முன் தான் நாம் ரேவடியாவைச் சந்தித்து அளவளாவி விட்டு வந்தி ருக்கிறோம் என்பதையே மறந்தேன். மிஸ்டர் ரேவ டியா சொர்க்க பூமியில் சாதித்துள்ள சாதனைகளைக் கண்டு வரும் ஆவல் உந்தித்தள்ளவே எழுந்து நின்று விட்டேன். சீக்கிரமாக மாற்றுடை தரித்துக்கொண்டு விமானத்தில் போய் ஏறினேன். நாங்கள் வாயுவேக. மனோவேகத்தைக் காட்டிலும் வேகமாகப்பறந்தோம். சிறிது நேரத்துக் கெல்லாம் என் தோழன், “நாம் சொர்க்கத்தை அடைந்து விட்டோம்!” என்றான்.

“அதற்குள்ளாகவா?”

“ஆம்!”

சொர்க்கத்தைக் கண்ணுற்ற எனக்கு மனத்தில் அபாரமான அதிருப்தியே நிலவியது. இதுவா சொர்க் கம்? இதென்ன சொர்க்கம்? வானளாவும் மாட மாளி கைகளையும் கூட கோபுரங்களையும், விசாலமான . ராஜ வீதிகளையும், பெருங்கால்வாயாக ஓடும் சாக்கடை களையும், தோட்டம் துறவுகளையும், ஆலையின் புகைக் கூண்டுகளையும் பார்க்கப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருந்த எனக்கு ஏமாற்றமே உண்டாயிற்று. காரணம், நான் அடர்த்தியான கானகத்தைத்தான் அங்கே கண்டேன்.

“இதுவா சொர்க்கம்? நான்ஸென்ஸ்!”-என் வாய் என்னையறியாமலே முணுமுணுத்தது.

“ஆம், இது தான். இது சொர்க்கத்தில் உள்ள இந்திய இலாக்கா!” என்றான் என் கூட்டாளி.

“அட கண்ணராவியே! இங்கும் இந்தியர்களிடையே அறிவு வளர்ந்ததற்கான அறிகுறியைக் காணோமே!” என்று நான் நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டேன்.

“ஐயா!” என் தோழன் தொடர்ந்தான்: “இங்கே இன்னும் எதிர் பார்த்த அளவு சீர்திருத்தம் நடந்த பாடியில்லை. இப்பொழுது தான் சில நாட்களாக மகாத்மா ரேவடியா அவர்களின் நன் முயற்சியினால் மரங்களை எண்ணிக் குறிபோடும் வேலை ஆரம்பமாகி யிருக்கிறது. குத்தகைக்கு விடுவதைப் பற்றிக் கூட பலத்த யோசனை நடந்து கொண்டிருக்கிறது!”

அதைக் கேட்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. நமது நண்பர் உண்மையிலேயே புது யுகத்தைச் சேர்ந்தவர் தாம். சந்தேகமே இல்லை’ என்ற உறுதி மேலும் வலுக்கலாயிற்று. ‘சபாஷ்! கல்வி போதனை என்றால் இதுதான்’ என்றும் முடிவுக்கு வந்தேன்.

“மிஸ்டர் ரேவடியா இந்தச் சீர்திருத்தங்களை எப்படி ஆரம்பித்தார்?” என்று ஆவலுடன் வினவினேன்.

“முதலில் அவர் தம்முடன் எத்தனையோ பொருள் களைக் கொண்டு வந்தார். அவற்றின் உதவியினால் மக் களின் மனத்தை மாற்ற முயன்றார். நாளடைவில் எல்லோருக்குமே சீர்திருத்த ருசி தட்டலாயிற்று.”

“அப்படியா சமாசாரம்! சரி, வாருங்கள்! எனக்கு எல்லாவற்றையும் காட்டுங்கள். நான் சோம்பேறி அல்ல. பொன்னான நேரத்தின் மதிப்பு எனக்கு நன் றாகத் தெரியும்!”

“ரொம்ப சரி. இப்படி வாருங்கள்!” என்று கூறி என் கூட்டாளி காட்டுக்குள் நுழைந்து விட்டான்.

என் நண்பர் என்ன என்ன மாறுதல்கள் எல்லாம் செய்திருக்கிறார்? நான் எதை எதையெல்லாம் பார்ப்பேன்? அவை எப்படி எப்படி இருக்கும்?’ என்பது போன்ற விஷயங்களைக் கற்பனைக் கண் கொண்டு நோக்கலானேன். பம்பாயைப் போன்ற சீர்திருந்திய நகரத்தில் இருந்தபிறகு, காடு பிடிக்குமா? இருந் தாலும் மதிப்புக்குகந்த மிஸ்டர் ரேவடியாவின் அரும் பெரும் செயல்களைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் பின்தொடர்ந்தேன். ‘எத்தனை தூரம் சென்றேன், எவ்வளவு நேரம் சென்றேன்?’ என்பதற்கெல்லாம் ஒரு கணக்கு வழக்குப் போட்டு என்னால் கூற இயலாது.

வெகு தொலைவிலிருந்து அபஸ்வரத்தை அள்ளி வீசும் சரோத் வாத்தியத்தின் ஒலி வந்தது. ஒலி வந்த திசையை நோக்கினேன். தேஜஸே உருவான ஒரு வயது முதிர்ந்த பெரியார் உட்கார்ந்து அந்த வாத்தியத்தை வாசித்துக் கொண்டிருந்தார். நம்நாட்டு அறியாத மக்கள் அவரைப் பெரியார் என்றும் மகாத்மா வென்றும் அடைமொழியிட்டு அழைப்பார்கள்.

அவரது விழிகளிலே ஒளி பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. என் அபிப்பிராயத்தைக் கேட்டால், சீர்திருத்த நோக்கம் படைத்த இந்தக் காலத்தில் இத்தனை நீண்ட தாடி வைத்துக் கொள்வது முற்றிலும் நாகரிகத்துக்கு முரணாகவேதான் கருதப்படும் என்று கூறுவேன்.

நமது ரேவடியா மதத்தை அநுஷ்டிப்பதென்றால், விடியற் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே, தாடி மீசையை எடுத்துக் கன்னத்தை வழவழப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸரோத் வாத்தியம் வாசிக்கும் பெரியார் மான் தோலில் ஒரு பஞ்சு மெத்தை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே வாசனைத் திரவியங்கள் ஏராளமாக வைத்திருந்தன. அருகிலேயே ஒரு வகையான பாத்திரத்தில் ஐஸ்கிரீமைப் போன்ற ஏதோ ஒரு விசேஷமான பொருள் வைக்கப்பட்டி ருந்தது. இந்தப் பெரியார் யாராக இருக்கலாம் என்ற கேள்வி என் உள்ளத்தில் பிறந்து ஆவலை மூட்டியது. நான் அருகில் சென்று அவருக்கு வணக்கம் தெரிவித் தேன். வயது முதிர்ந்த அப்பெரியார் சரோத் வாத்தி யம் வாசிப்பதைச் சற்று நிறுத்தினார்.

“மகாராஜ்! தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று பவ்யமாகக் கேட்டேன்.

“குழந்தாய்! இதுகூட உனக்குத் தெரியவில்லையா?” என்றார் பிராயம் முதிர்ந்த அப்பெரியார்.

“இல்லையே, சுவாமி!”

“பொருளாதார சாஸ்திரத்தின் விதி முறை என்ன, தெரியுமா? மனிதன் தன் தேவைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மனிதன் உழைப்பாளி ஆகமுடியும். உழைப்பாளியாக ஆனால் தான் உலகத்திலே சீர்திருத்தம் உண்டாகும்!”

எனக்கு ஏற்பட்ட வியப்புக்கு ஓர் வரம்பு இல்லை. இது மிஸ்டர் பாஸெட்டின் பொருளாதார சாஸ்திரத் தின் கட்டுத் திட்டம் அல்லவா? இது இங்கே எப்படி வந்தது? இது கட்டாயம் என் நண்பர் ரேவடியாவின் பணியினால் ஏற்பட்ட பயனாகத்தான் இருக்கவேண்டும். என்ற முடிவுக்கு வந்தேன்.

“ஆமாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“அட கண்ணராவியே ! இது கூடப் புரிய வில்லையா?நான் எனது புலன்களை வளர்த்துக் கொண் டிருக்கிறேன். சுகபோகத்திலே ஆசை வளராவிட்டால், தேவைகளும் வளராது. ருசியை அதிகரித்துக் கொள்வ தற்காக இந்த ஐஸ்கிரீம். நறுமண உணர்ச்சியை வர வழைத்துக் கொள்வதற்காக இந்த வாசனைத் திரவியங் கள். ஸ்பரிச சுகத்தைப் பெறுவதற்காக இந்த மெத்தை போட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த சரோத் வாத்தியம் வாசிப்பதனால் என்னிடத்திலே சங்கீதப் பண்பு பெருகுகிறது!” என்றார் அப்பெரியவர்.

“அப்படியானால் சுக போகத்தைப் பூர்ணமாகப் பெறுவதற்கு உருவம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. என்று சொல்லுங்கள்!”- என்னையும் மீறி நான் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு விட்டேன்.

“அதையும் இங்கே யார் விட்டு வைத்திருக்கிறார்கள்? யூனான் நாட்டைச் சேர்ந்த சிற்பிகள் நிர்மாணித்த எத்தனையோ நிர்வாணச் சிலைகளும் நான் தருவித்து வைத்திருக்கிறேன்!”

“அவை இங்கே எப்படி வந்தன?”

“உனக்குத் தெரியாதா? நீ புதிதாக வந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. இப்பொழுது தான் சில காலமாக ஒரு மகாத்மாவின் தூண்டுதலினால் இங்கே ஒரு ஆசிரமம் நிறுவப்பட்டிருக்கிறது. அதில் அநேகவிதமான பொருள்கள் கிடைக்கின்றன!”

“அந்த மகாத்மா யாரோ?”

“ரேவடியா என்னும் பெயருள்ள ஒரு பெரியார்!”

“என்ன?”

நான் மகிழ்ச்சியினால் மனமும் குரலும் ஒருங்கே தழுதழுக்கக் கேட்டேன்.

“முதலில் எங்களுக்கு இந்த விஷயங்களெல்லாம் ஒன்றும் தெரியாமல் தான் இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் வந்ததும் எங்கள் கண்கள் திறந்து கொண்டு விட்டன. நாங்கள் சீர்திருந்த முயன்று வருகிறோம்!”

“ஆனால் பெரியவரே! ஒரு சந்தேகம். ரூப, ரஸ, கந்தம் அதாவது உருவம், சுவை, மணம் ஆகியவற்றின் இன்பத்தைப் பருகுவதற்குப் பயிற்சி தேவைப்படு கிறதா? ஆச்சரியமாயிருக்கிறதே! எங்களுக்கு இவை யெல்லாம் எவ்வித சிரமமும் இன்றி வெகு சுலபமாகக் கிட்டி விடுகின்றனவே!” என்றேன்.

“தம்பி! நீங்கள் எல்லோரும் மிகுந்த பாக்கியசாலிகள். நாங்களோ இவ்வளவு நாட்களும் வெறும் காட்டுமிராண்டிகளாக இருந்தோம். அதிலும் என்னைப் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை. நான் காட்டு மிராண்டிகளுக்கெல்லாம் காட்டுமிராண்டியாக, காட்டு மிராண்டி நாயகனாக விளங்கி வந்தேன். அந்த வாழ்க் கையைக் களைந்து எறிந்து ஆராயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. இப்பொழுதுதான் தெரிகிறது, நான் அந்தக் காலத்தில் போட்டது அவ்வளவும் வெளி வேஷம் என்று! அதனால் தான் நான் வெறும் ஜடமாகி விட்டேன், மூடனாகி விட்டேன். என்னைச் சேர்ந்தவர்களையும் அப்படியே ஆக்கி வைத்திருந்தேன்!”

“என்ன, வெளி வேஷமா?”

என்னையே பொறாமை உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த கிழவரைப் பார்த்துக் கேட்டேன்.

“ரூபம், ரஸம், கந்தம் ஆகியவற்றை அறவே ஓழிக்க வேண்டும் என்று என் முட்டாள் மனத்துக்கு எப்படியோ தோன்றி விட்டது. வைராக்கியம் பரவினால் தான் மனிதன் சீர்திருந்தியவனாகக் கருதப்படுவான் என்ற எண்ணம் என்னை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தது. இப்படி எண்ணி எண்ணி, நடைமுறையிலே பயின்று பயின்று ஆறாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டன. அதன் முடிவு என்ன ஆயிற்று, தெரியுமா? என் புலன்கள் அனைத்தும் வைராக்கிய நிலையை நன்கு பெற்று விட்டன. இப்பொழுது அவற்றைச் சரி யான வழிக்குக் கொண்டுவர முயல்வது மிக மிகக் கடினமாயிருக்கிறது. எத்தனை தான் பயிற்சி கொடுத்தாலும் திரும்பத் திரும்ப வேதாளம் முருங்க மரம் ஏறும் கதையாகத் தான் இருக்கிறது. எப்பொழுது நான் திருந்தப் போகிறேனோ, யார் கண்டார்கள்?”- நீண்ட பெரு மூச்சுக்கிடையே அந்தப் பெரியவர் தம் இயலாமையைத் தெளிவுறுத்தினார்.

“சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் முந்திய ஆசிரமத்தில் யாராக இருந்தீர்கள்? கருணை கூர்ந்து எனக்குக் கூறலாமா?”

“ஹும், பழைய குப்பையை எதற்கு அப்பா கிளறுகிறாய்?- எல்லோரும் என்னை வசிஷ்டர் என்ற பெயரால் அழைத்து என்னிடம் பெரு மதிப்பும் வைத்திருந்தார்கள்!” என்றார் அப்பெரியவர்.

“யார்? மகாத்மா வசிஷ்டரா?”-நான் என்னையும் மறந்து, எனது புதிய கொள்கைகளையும் மறந்து உரக்கக் கூவி விட்டேன். ரேவடியா சித்தாந்தப்படி இப்படியெல்லாம் அழைப்பது தவறு தானே? அது மட்டும் அல்ல, ‘பகவான் வசிஷ்டருக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம்!’ என்று கூறியவாறு நெடுஞ்சாண்கட்டையாக அவர் காலடிகளில் விழப்போனேன். அவர்தான் கையைப் பிடித்துத் தடுத்து விட்டார்.

“குழந்தாய்! நீ இன்னும் முட்டாளாக – அறிவில்லாப் யாலகனாக இருக்கிறாய். நீ நினைப்பது போல், நான் மதிப்புக்குரியவன் அல்ல; மரியாதைக்குகந்தவன் அல்ல. உனது இந்தப் பக்திக்கு அணுவளவும் அருகதை அற்றவன். மகாத்மா ரேவடியா அவர்கள் ‘நான் முட்டாள்’ என்பதை நன்கு நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். சரி, அதைப் பற்றி இனி பேசி என்ன பயன்? இதோ ஒரு சீடன் யூனானிச் சிலைகள் கொண்டு வந்திருக்கிறான். என் பயிற்சிக்குத் தடை ஏற்படுகிறது. நீ போய் வா!” என்றார் வசிஷ்டர்.

நான் மறுமொழி பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன். இது போல் ரேவடியா மதம் வளர்ச்சி யுறு மானால், சொர்க்கத்திலும் சீர்திருத்தம் கட்டாயம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் திருப்தியும் என் உள்ளத்தை நிறைத்தன. சிறிது தூரம் போவதற்குள்ளாகவே என் காதுகளில் சரோத் வாத்தியத்தின் அபஸ்வரமான ஒலி விழத் தொடங்கி விட்டது. ‘ஆகா! என்ன சிரத்தை! என்ன சிரத்தை!’ என்று வியந்து கொண்டே என் கூட்டாளியை அழைத்துக் கொண்டு சுற்றிவரப் புறப்பட்டேன். ரேவடியாவின் அறிவுத் திறனைப் பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்தவாறே நடந்தேன்.

சிறிது தூரம் சென்றிருப்போம். ஒரு பெரிய மரத் தடியில் இன்னுமொரு பெரியவர் கழுத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு பத்மாஸனத்தில் அமர்ந்திருந்தார். ஒளிச் சுடர்விடும் அவரது முகக்களையும் வெள் ளிக் கம்பி இழுத்தது போன்ற தாடியும் எனக்கு அவரிடம் அபார சிரத்தையை உண்டு பண்ணின. அவரைச் சூழ்ந்து அநேகர் கையில் சிறிய பெரிய பைக்ளுடன் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் ஒரு சீடன் கை கட்டி வாய் புதைத்து நின்று கொண்டிருந்தான். நான் அவரைச் சமீபித்து வணங்கினேன். பிறகு எழுந்து பக்தி சிரத்தையுடன் கை கட்டி வாய் புதைத்து நின்றேன். மகாத்மா என்னைப் பார்த்துக் கேட்டார்:

“அப்பா! புதிதாக வந்திருக்கிறாயா?”

“ஆம். தங்களைத் தரிசித்துப் பயன் பெறும் நோக் கத்துடன் வந்திருக்கிறேன்!”

“போய் வா, அப்பா, போய் வா! எனக்குச் சிறிதும் அவகாசமே இல்லை. இத்தனை பேரும் என்னைப் பார்த் துப் போவதற்காகத்தான் தவம் கிடக்கிறார்கள்!”

“பெரியவர் அப்படிச் சொல்லக்கூடாது!”

“பின் எப்படிச் சொல்வது?-சரி, சரி! பொழுதை வீணாக்காதே. சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லு!” எனறார் பெரியவர்.

“மகாராஜ்! இவர்கள் எல்லோரும் இங்கே இப்படிக் குழுமி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதைக் கேட்டு அறிந்து போகத்தான் நான் தங்கள் சமூகத்துக்கு வந்திருக்கிறேன்!” என்றேன்.

“இது கூட உனக்குத் தெரியாதா ? இவர்கள் எல்லோரும், தர்மம், ஆசாரம் இவற்றைப் பற்றி என் னிடம் அபிப்பிராயம் கேட்க வந்திருக்கிறார்கள்.”

“சரி, இந்தப் பைகள் எதற்கு? இவற்றில் என்ன இருக்கின்றன?”

“பணம்! யார் அதிகப்பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குப் பயன் தரக்கூடிய உபதேசங்களாகவே நான் கூறுவேன். சிருஷ்டியின் ஆரம்பத்தில், ஸ்மிருதி வகுத்த முதல்வன் நான் !” என்றார் அந்தப் பெரியவர்.

“யார்? ஸ்மிருதி வகுத்த முதல்வரா? மகாத்மா மனுவா?” என்று நான் பெரு வியப்புடன் கேட்டேன்.

“ஆமாம். நான் முதலில் ஒரு தர்ம சாஸ்திரத்தை இயற்றினேன். ஆனால் அப்பொழுது நான் சிறிது காட்டு மிராண்டியாக இருந்து விட்டேன். அதனால் எல்லோ ருக்கும் பயனளிக்கும் வகையில் சாஸ்திரத்தை இயற்றி விட்டேன். தன்னலமற்ற எண்ணத்துடன் தர்மோபதேசம் செய்வதுதான் சாலச் சிறந்தது என்று அக்காலத்தில் நான் எண்ணங் கொண்டிருந்தேன். அதனால்…”

“அதனால் தான் இப்பொழுது தாங்கள் இயற்றிய சாஸ்திரங்களின் கொள்கைகளை விலைபேசத் தொடங்கி யிருக்கிறீர்களாக்கும் !”

“அட பைத்திக்காரா! நான் சொல்லவில்லையா, முன்பு காட்டுமிராண்டியாக இருந்து விட்டேன் என்று! முன்னால் கொஞ்சம் அசடனாக இருந்து விட்டேன். அதனால் தர்மத்தை இலவசமாக எல்லோருக்கும் எளி தில் கிடைக்கும் வகையில் உபதேசித்து வந்துவிட்டேன். இப்பொழுது ஒரு மகாத்மாவின் சத்சங்கத்தினால் நாங் கள் திருந்தத் தொடங்கியிருக்கிறோம். பணத்துக்குத் தகுந்த பொருள் என்பது அவரது சித்தாந்தம். எங்கே பணம் இருக்கிறதோ, அங்கே நியாயம் நிற்கிறது என் பது அவருடைய வாக்கு. அதனால் யார் அதிகப் பணம் தருகிறார்களோ, அவர்களுக்கு நலன் தருவதையே கூறு வது என்ற சீரிய கொள்கையைக் கடைப்பிடித்துச் சிறிது காலமாக அதை அநுஷ்டிக்க முற்பட்டிருக்கிறேன். அதனால் எனக்கும் லாபமாயிருக்கிறது. அவர்களுக்கும் லாபகரமாயிருக்கிறது!” என்றார் மகாத்மா மனு.

“ஆமாம், தங்களை இத்தகைய நல்வழிக்குத் திருப் பிய அந்த மகாத்மா யார்? மிஸ்டர் ரேவடியா அவர்கள் தானே?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டேன்.

“ஆமாம், ஆமாம்! அவரே தான். உனக்கு அவரைத் தெரியுமா?-சரி, சரி! போய் வா! எனது விலைமதிக்க முடியாத பொழுது வீணாகிறது. நீ இங்கே நின்றால் உன்னையும் பணம் கேட்டு விடுவேன்!” என்று பயமுறுத்தினார் மனு.

அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, நான் அங்கிருந்து நழுவி விட்டேன்! என் நண்பர் ரேவடியா அவர் களின் செல்வாக்கு இத்தனை தூரம் பரவும் என்ற நம்பிக்கையே எனக்கு ஆதிகாலத்தில் இல்லை.

சபாஷ், ரேவடியா! சீர்திருந்திய உலகத்தின் தலை வர்களின் பெயர் வரிசையில் தங்கள் பெயர் தான் தலை வரியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்!

இப்படிச் சிந்தித்துக் கொண்டே நடந்த எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. என்னோடு வந்த கூட் டாளியைப் பார்த்து, “ஏன் அப்பா! இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“யார் கண்டார்கள்! பாரதப் பகுதியைச் சேர்ந்த எல்லா ஆண்-பெண்களுமே இப்படித் தான் இருக்கிறார்கள். இச்சைகளைத் துறந்து புலன்களை அடக்கி வாழ்ந்து வந்ததனால், இவர்களது சுபாவமே இப்படி விசித்திரமாகி விட்டது. மகாத்மா ரேவடியா அவர்களின் சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்க முயலும் பொழுது மேலும் அடங்கி ஒடுங்கி விடுகிறார்கள். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற கொள்கையை அநாதி காலந்தொட்டுக் கடைப் பிடித்து வந்தவர்கள் அல்லவா?” என்றான் என் கூட்டாளி.

“பரவாயில்லை. எப்படியும் சீர்திருத்தாமல் காரியம் நடக்காது, பார் ! தட்டிக் கொட்டி இவர்களை எப்படியாவது பழைய காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மீட்டுத்தான் ஆகவேண்டும்!” என்று எனது அத்தியந்த நண்பரான மகாத்மா ரேவடியாவின் செயல்களை ஆமோதித்தவாறே நடந்தேன்.

இன்னும் அதிகமாக என்ன சொல்வது? நாங்கள் வெகு நேரம் சுற்றி அலைந்தோம். எங்கு எங்கெல்லாமோ சென்றோம், சுற்றிப் பார்த்தோம். ரேவடியா சம்பிர தாயம் எட்டுத் திக்கிலும் வெற்றி முரசு கொட்டி ஆட்சி செலுத்துவதாகவே தோன்றியது. என் இருதயம் பூரிப் பினால் விம்மியது. அங்கே நான் கண்ட சுவையான இரண்டொரு காட்சிகளை மட்டும் வர்ணித்து விட்டு நான் எனது சொர்க்கப் பிரயாண வரலாற்றை முடித்துக் கொள்வதாயிருக்கிறேன்.

நான் அங்கே பகவான் சாணக்கியரைப் பார்த்தேன். மிஸ்டர் ரேவடியா அவர்களது போதனையின்படி அவர் செயலாற்றும் திறனைப் பற்றி – ஆங்கிலத்தில் Efficiency என்று சொல்கிறார்களே, அதைத் தான் சொல்கிறேன்-படித்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். பாரதத்தின் வரலாற்றிலே ஆற்றல் மிக்கவர் என்று மங்காப் புகழ் பெற்ற சாணக்கியர், தமது வாழ்நாள் முழுவதையும் மௌரிய சாம்ராஜ்யத்தை நிலை நாட்டுவதிலே ஈடுபடுத்திய சாணக்கியர், தமது ஆற்றலை யெல்லாம் ‘அது ஒரு ஆற்றலா? குப்பையில் போடு’ என்று கூறித் தமது செயலாற்றும் திறனிலே தற்கால முறையைக் கடைப்பிடிக்க முனைந்திருந்தார்; தற்கால முறைக்கே தலை சிறந்த ஸ்தானம் கொடுத்துக் கொண் டிருந்தார். இக் காட்சியை நான் எனது இந்தக் கண் களாலேயே கண்டேன்.

அவர் மான் தோலை ஒரு ஒதுப்புறத்தில் விட்டெ றிந்து விட்டு, மேஜை நாற்காலியை ஏற்றுக் கொண்டிருந் தார். ஆனால் பத்மாஸனத்தில் உட்கார்ந்து பழக்கப்பட்டுப் போயிருந்ததனால், நாற்காலியிலும் பத்மாஸனத்திலேயே அமர்ந்திருந்தார். வேஷ்டி உடுத்து வதனால் செயலாற்றுவதிலே சில சங்கடங்கள் ஏற்படு கின்றன என்பதற்காகப் பாண்டும் பூட்ஸும் அணிந் திருந்தார்.தலைமுடி வைத்திருப்பதனால் ஒரு அலட்சிய பாவம் உண்டாகி விடுகிறது என்பதை அறிந்து அதைப் மறைப்பதற்காகத் தொப்பி அணிந்திருந்தார். ஆகா! ஆகா! அவரது அந்த வேஷத்தின் அழகை என்ன வென்று சொல்வது?

எங்கள் கொள்கையின் வெற்றிக்கு முரசு எட்டுத் திக்கும் கொட்டிக் கொண்டிருந்தது. எங்கள் கொள் கையின் ரகசியம் என்ன ?

மனிதன் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு உட்காராத வரையில், பூட்ஸும் பாண்டும் போட்டுக் கொள்ளாத வரையில், தலையிலே தொப்பி வைத்துக் கொள்ளாத வரையில், அவனிடம் செயலாற்றும் திறமையும் சாமாத்தியமும் வராது என்பது தான். மகாத்மா சாணக்கியருக்கு இந்த விஷயம் முன்பே தெரிந்திருக்குமானால், இவற்றை அணிந்து கொண்டு, பாரத தேசத்தில் மட்டுமின்றி ஆசியா கண்டம் முழுவதிலுமே மௌரிய சாம்ராஜ்யத்தை நிலைநாட்டி, அதன் கொடி யைப் பறக்க விட்டிருப்பார். அதன் பின்னரே மறு காரியம் பார்த்திருப்பார்.

இவற்றையெல்லாம் விட உள்ளத்தில் தைக்கக் கூடிய ஒரு சம்பவத்தை நான் இன்னொரு இடத்திலே கண்டேன். ஏழெட்டுப் பேர் கும்பலாகக் கூடி உட்கார்ந் திருந்தார்கள்.

நான் என் தோழனைப் பார்த்துக் கேட்டேன்: “ஏன் அப்பா! இவர்கள் எல்லோரும் யார்? அதோ அந்த நீண்ட தாடியுள்ள பெரியாரை மட்டும் தான் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது!” என்றேன்.

“ஆம்! அவர்தான் முகலாயர்களின் கொட்டத்தை அடக்கிய சிவாஜி மன்னர். கையிலே கோடரியும், இடுப் பிலே மரவுரியும் தரித்திருப்பவர் பரசுராமர். அடுத்தாற் போல் இருப்பவர் யூனானி ஆட்சியை முறியடித்து வெற்றி வாகை சூடிய மன்னர் சந்திரகுப்த மௌரியர். இவருடைய கதைதான் நாற்றிசையிலும் பரவியிருக் கிறது. அதோ மரத்தடியிலே அமர்ந்திருப்பவர் தான் மகாராஜாதி ராஜ ராஜரான ஸ்ரீ ஹர்ஷர்!”

“அப்படியா? அந்தத் துறவி அவர்களிடம் இவ்வளவு ஆவேசத்தோடும் ஆக்ரோஷத்தோடும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?” என்று கேட்டேன்.

“துறவிக் கோலத்தில் இருப்பவர் யார், தெரியுமா? அவர் தான் மகாத்மா ஜடபரதர். புவியிலே நெளியும் சின்னச் சின்னப் புழுக்கள் மீது எங்கேயாவது காலை வைத்து ஜீவஹிம்ஸை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் பூமியிலேயே காலை வைக்கக் கூடக் கூசியவர்!”

“சரி, அவர் என்னவோ சொல்லிக் கொண்டிருக் கிறார் போலிருக்கிறதே!”

“பார்த்தால் தெரியவில்லை? போர் வீரர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்!”

“என்ன உபதேசம்?”

“பரதர் புது மார்க்கத்தைப் பின்பற்றியிருக்கிறார். பாரத மக்கள் பயங்கொள்ளிகளாகவும் பித்துக்குளிகளாகவும் ருக்கிறார்களாம். காய்கறி கீரையைத் தின்று திறனற்றவர்களாக வாழ்கிறார்களாம். எல்லோரும் மாமிச் உணவு அருந்த வேண்டும். அப்பொழுதுதான் தைரியமும் துணிவும், வீரமும் சூரமும் வரும் என்று உபதேசித்துக் கொண்டிருக்கிறார்” என்று விளக்கினான் கூட்டாளி.

எனக்கு எல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனி போல் விளங்கி விட்டது.

“அப்படியா! பேஷ், பேஷ்! ரேவடியா! நான் உங்களை எப்படித் துதிப்பது?” என்று கூறியவாறே அங்கிருந்து புறப்பட்டேன்.

சற்றுத் தொலைவில் நான் பகவான் புத்தரைப் பார்த்தேன். அவரும் ரொம்ப ரொம்பச் சீர்திருந்திப் போயிருந்தார். அவர் ஒரு நோயாளியிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நான் எனது இந்தக் காதுகளாலேயே கேட்டேன். அவர் சொன்னதாவது:

“அப்பா! இது உன் வினை. இதை நீ அனுபவித்துத் தான் ஆகவேண்டும். படு, படு, துயரப்படு; கஷ்டப் படு. அதை விட்டால் வேறு வழியில்லை. உலகத்தின் நியதிப்படி வாழத் தெரிந்தவர்கள் தான் வாழ முடியும். தகுதியுள்ளவர்கள் தான் ஜீவிக்க முடியும். பலமுள்ளவர்கள் தான் பிழைக்க முடியும். தினசரி வாழ்க்கையைப் பார்த்தால் தெரியும். அடிதடி நடக்கிறது; பலப் பரீட்சை நடக்கிறது; இழுபறிப் போர் நடக்கிறது. வலுவுள்ளவன் வெற்றியடைகிறான்; வலுவில்லாதவன் சாகிறான்.”

பகவான் புத்தரது வாயிலிருந்து டார்வினின் கொள்கைகள் உதிர்வதைக் கண்ட எனக்கு, பகவான் புத்துர் கட்டாயம் மிஸ்டர் ரேவடியாவிடம் உபதேசம் பெற்றிருக்க வேண்டும் என்பது ஐயந்திரிபுக்கிடமின்றி விளங்கி விட்டது.

இப்படிச் சுற்றிக் கொண்டே வந்தவனுக்குக் கடை சியாகக் காணக் கிடைத்த அநுபவம் அதி அற்புதமான தாகப்பட்டது; என்றென்றும் மறக்க முடியாததாகத். தோன்றியது. நவீன யுகத்தின் புதுக் கொள்கைகள் சொர்க்கலோகத்தில் எப்படிப் பரவியிருக்கின்றன என்பதைக் காணும் பொழுது எனக்குச் சொல்ல இயலாத வியப்பே உண்டாயிற்று.

ஒழு வலுவிழந்த நோயாளி கட்டாந் தரையில் கிடந்தான். மரவுரி தரித்த ஒரு யுவதி. குதிகால் உயர்ந்த செருப்பு அணிந்து, பிரேம் இல்லாத, விழிகளை மறைக் கும் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு வெகு கோபத்துடன் பெண் நாகமெனச் சீறியவாறு நின்றாள்.

“சதி! நான் இனி பிழைக்கமாட்டேன். தாகமாயிருக்கிறது.குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடேன்!” என்றான் வலுவிழந்த நோயாளி வாலிபன் மிகவும் தைன யமான குரலில்.

“தண்ணீர், தண்ணீர் என்று தொந்தரவு செய்கிறாயே! சாகும் பொழுதாவது அமைதியாக சாகக் கூடாதா, சத்தியவான்? நீ தான் நோயாளி ஆயிற்றே! எதற்காகக் கல்யாணம் செய்து கொண்டாய்? என் தேவையைப் பூர்த்தி செய்யும் சக்தி உனக்கு இல்லை யென்றால், நாரதரை ஏன் என்னிடம் அனுப்பினாய்? உன்னைப் போன்ற உதவாக்கரைக்கு ஒரு பெண்டாட்டியை மணந்து கொள்ளும் உரிமை ஏது?” -கைகளை ஆத்திரத்துடன் ஆட்டி ஆட்டிக் கேட்டாள் சாவித்திரி.

“சாவித்திரி! நடந்தது நடந்து விட்டது!”-மரணத்தின் வாயில் சிக்கி விட்ட சத்தியவான் மிகுந்த கஷ்டத்துடன் கூறினான். “இவ்வேழைமீது கொஞ்சம் தயவு பண்ணு, சாவித்திரி. நீ சொல்வதை நான் கேட்கிறேன். என்ன இருந்தாலும் நான் உன் கைபிடித்த கணவன் அல்லவா?” என்றான்.

“அதற்காக என்ன? நான் ஒன்றும் உன் அடிமை இல்லையே! உன் சுயநலத்துக்காக என் வாழ்க்கையை இப்படிப் பாழாக்க உனக்கு ஏது உரிமை? சரி, தொலைந்துபோ! குடிக்கத் தண்ணீர் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. உன்சொத்து முழுவதையும் என் பெயருக்கு எழுதி வைத்துவிட வேண்டும். என்ன சொல்கிறாய்?” என்றாள் சாவித்திரி.

“சாவித்திரி! இதுவா உயில் எழுதும் நேரம்? தண்ணீருக்காக ஆலாய்த தவிக்கிறேன். உயிரே போய்விடும் போலிருக்கிறது. முதலில் தண்ணீர் தா, சாவித்திரி!” என்றான் சத்தியவான்.

இதற்குள் யமதர்ம ராஜன் அங்கே தோன்றி விட்டான். உடனே சத்தியவானைக் கை விலங்கிட்டுப் பிடித்துக் கொண்டும் விட்டான். சாவித்திரியும் மோசம் போய் விடக்கூடாது என்ற வேகத்தில் சத்தியவானின் கால்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.

“அம்மணி! என்ன காரியம் செய்கிறீர்கள்? சாகும் மனிதனை இப்படிப் பிடித்து இழுக்கிறீர்களே, நியாயமா? காலை விட்டு விடுங்கள்! உங்கள் கணவனை மரணம் சமீபித்து விட்டது!” என்றான் யமதர்மன்.

“காலை விடுவதா? அது எப்படி? எத்தனை நாழிகையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! இவர் காதில் வாங்கிக் கொண்டால் தானே? இவர் தம் சொத்தை என் பெயருக்கு உயில் எழுதி வைக்காத வரையில் நான் இவரை விடமுடியாது. எங்கே போனாலும் நான் இவர் காலைப் பிடித்துக் கொண்டே கூடக் கூட வருவேன்!” என்றாள் சாவித்திரி.

“உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமானால் கேளுங்கள். நான் தருகிறேன். ஆனால் இவனை வீட்டு விடுங்கள். எனக்கு நேரமாகிறது!” என்றான் யமதர்மன்.

“அப்படியானால் எனக்கு இவரைக் காட்டிலும் அதிக அழகான, வலுவுள்ள கணவனை…”

இமை மூடி இமை திறக்கும் நேரத்துக்குள் யமதர்மராஜன் கண்பார்வையிலிருந்து மறைந்து விட்டான். சாவித்திரி சத்தியவானும் கூட மறைந்து விட்டார்கள்.

நான் என் வீட்டு வராந்தாவில் கட்டிலில் படுத்திருந்தேன். ஒரு குட்டித் தூக்கத்துக்குப் பிறகு அப்பொழுதுதான் கண்விழிப்புக் கொடுத்திருந்தது.

அந்தத் தூக்கத்துக்கிடையே கண்ட கனவில், நான் சொர்க்கத்துக்குப் போனேன். மகாத்மாக்களைச் சந்தித்தேன். இந்த விஷயத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எங்கு பார்த்தாலும் ரேவடியா சம்பிரதாயத்தின் வெற்றி முழக்கமே கேட்டது. பூலோகத்தையும் ஒரு நோட்டம் விட்டேன். மிஸ்டர் ரேவடியா போன்ற அருந்தவப் புதல்வர்கள் தங்கள் முன்னோர்களைக் காட்டிலும் எத்தனையோ சீர்திருந்திக் கொண்டிருந்தார்கள், முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

– குலப்பெருமை, கே.எம்.முன்ஷி, தமிழாக்கம்: ரா.வீழிநாதன், முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *