செத்துப் போகும் தெய்வங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 2,109 
 

அவசரமாகப் போக வேண்டும் என்பதனால் தான் பஸ்ஸில் ஏறினேன். ஏறினேன் என்பது தவறு. திணிந்தேன். என்னை நானே திணித்துக் கொண்டேன். திணிந்த பின் தான் காலூன்ற இடம் தேடுகின்றேன்

காலூன்றும் இடம் எல்லாம் கால்கள்.

ஒற்றைக் காலின் விரல் நுனியில் சற்று நேரம் நிற்கின்றேன். ஏதோ ஒரு கால் அகஸ்மாத்தாக உயர்ந்த போது அந்த இடத்தில் ஊன்றிக் கொண்டேன் .

இந்த ஆக்கிரமிப்பு இன்னொருவனை ஒற்றைக்காலில் நிற்கப் பண்ணியிருக்கும். என் மேல் எரிச்சல் கொள்ளச் செய்திருக்கும்.

ஒடித்தலும் வெட்டலுமாக ஓடிக் கொண்டிருக்கிறது பஸ். பொடி யாகிக் கொண்டிருக்கிறது உடல்.

இத்தனை பெரிய பஸ்ஸை இவ்வளவு சனத்துடன் என்னமாய் விரட்டுகின்றான்.

கெட்டிக்காரன் தான்… எதிலாவது முட்டிக் கொள்ளாத வரை..! கொண்டு போய் சேர்த்துவிடுவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வேகமாய் வந்து கொண்டிருந்தவன் வந்த வேகத்தில் ஒடித்துத் திருப்பி திடீரென பிறேக்கடித்து நிறுத்தியதும் அத்தனை சனக்கூட்டமும் ஒரு வினாடி ஆடித்தான் போய்விட்டது.

“என்ன ஆயிற்று?” என்று அவரவரும் எட்டி, எட்டிப் பார்க்கின்றனர். எக்கி எக்கிப் பார்க்கின்றனர்.

ஒழுங்காய் இருந்த பாதையில் சிவப்புச் சிவப்பாய் கம்பிகள் முளைத்திருந்தன.

கலர் கலராய் சட்டையும் கையில் துப்பாக்கியுமாக ஒரு ஏழெட்டுப் பத்துப்பேர்.

“இறங்கி எல்லோரும் வரிசையாக நில்லுங்கள்” சிங்களத்தில் ஆணையிட்டான் ஒரு மிலிட்ரி.

“இன்றைக்குப் போனாற் போலத்தான்… இதில் போய் ஏறினோமே..!”

முனகியபடி ஒவ்வொருவராக இறங்கத் தொடங்குகின்றனர். பஸ்ஸைச் சுற்றி வலம் வருகிறது நாலைந்து கலர்ச்சட்டைகள். ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த ஒருவனைப் பார்த்து உயரமாக நின்றுக் கொண்டிருந்தவன் உறுமுகின்றான்.

“உனக்குத் தனியாகச் சொல்ல வேண்டுமோ?”

உட்கார்ந்திருந்தவனுடைய முகத்தில் எதுவிதமான கவலையோ, கலவரமோ இல்லை. மிகச் சாவதானமாக அமர்ந்திருந்தான். அது தான் இவனுக்குப் பிடிக்கவில்லை.

ஆமி செக்கிங் என்றால் அரண்டு போக வேண்டாமா..? முகத்தில் ஒரு கலவரம் வேண்டாமா..? பயம்தெரிய வேண்டாமா..?

நிற்பவர்கள் எல்லாம் இறங்கி முடித்து இவனுக்கு அருகே அமர்ந்திருப்பவனும் எழும்பிய பிறகே இவனால் அசைய முடியும். ஆகவே தான் சிவனே என்று உட்கார்ந்திருக்கின்றான்.

இது அவனுக்குப் பிடிக்கவில்லை .

ஜன்னலண்டை தெரியும் முகத்தை சப்பி விழுங்கிவிடுவதைப் போல் முறைத்துக் கொண்டு நிற்கின்றான்.

இரண்டு முகங்களும் மிகவும் அருகருகே இருப்பது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

உட்கார்ந்திருப்பவன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ளுகின்றான்.

இறங்குகிறார்கள்…இறங்குகிறார்கள்…இறங்குகிறார்கள்…இன்னும் இறங்குகின்றார்கள்..!

இறங்கியவர்களை றோட்டோர வெய்யிலில் வரிசைப்படுத்துகின்றனர் ஓரிருவர். அடேயப்பா எத்தனை நீளமான வரிசை. இத்தனை பேரா இந்த பஸ்ஸுக்குள். கோச்சியிலேறும் ஒரு கூட்டத்தை பஸ்ஸிலேற்றிக் கொள்ளும் வித்தை இலங்கையின் தனியார் பஸ்காரர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது.

படம் முடிந்த தியேட்டர் போல் பஸ் காலியாக இருக்கிறது. வெறிச்சோடிக் கிடக்கும் காலியான பஸ்ஸுக்குள் ஏறிய நாலைந்து கலர் சட்டைகள் சீட்டுக்கடிகளில் காலோட்டிப் பார்த்து விட்டு கீழே குதிக்கின்றனர்.

“பார்த்தோமா அனுப்பினோமா” என்றில்லாமல் வரிசையை ஒழுங்கு படுத்துகின்றான் ஒருவன் பாடசாலை ட்றில் மாஸ்டர் மாதிரி.

வரிசையில் இருப்பவர்களுக்குத் தெரியும்!

செக்கர் ஏறியதும் டிக்கட் தேடுவதைப் போல் சட்டைப் பைகளைத் துழாவுகின்றனர்.

தேசிய அடையாள அட்டையை எடுத்துத் தயாராய் வைத்துக் கொள்ளுகின்றனர்.

டக்கென்று காட்டிவிட்டு டக்கென்று ஏறி டக்கென்று ஓடிப்போய் சேரும் அவசரம்…அத்தனை பேருக்கும்!

கொழும்புக்காரர்களுக்கு எல்லாமே “டக் டக்” கென்று நடக்க வேண்டும். தீ மிதிப்பவர்கள் போல் ஓடி ஓடியே வாழ்க்கை முழுவதையும் கழித்துப் பழக்கப்பட்டு விட்டவர்கள் இவர்கள்.

கூட்டத்துக்கே தலைவனைப் போலிருந்தவன், முகத்தில் ஒரு வித்தி யாசமான முறைப்பும் முன் தள்ளிய நெஞ்சுமாக வரிசையில் நிற்பவர் களைப் பயம் காட்டிக் கொண்டு நடை பயிலுகின்றான். அவனைத் தவிர்ந்த மற்றவர்கள் விசாரிப்பதும் அடையாள அட்டை பார்ப்பதுமாக!

அடையாள அட்டை காட்டி “ஆம்” என்றோ “இல்லை” என்றோ தலையாட்டி விட்டு, அவர்கள் அமுக்கிப் பார்ப்பதற்கேற்றாற் போல் கால்களை நொடித்து பக்கெட்டுக்களைக் காட்டி விட்டு ஒவ்வொரு வராய் நடந்து போய் பஸ்ஸில் ஏறுகின்றனர்.

விடுபட்டு பஸ் ஏற விரைபவர்களின் நடையிலே ஒரு மிடுக்கு. பார்வையிலே ஒரு கம்பீரம். இன்னும் வரிசையிலே நிற்பவர்களைப் பார்ப்பதிலே ஒரு அசட்டை.

பாம்பாய் நெளிந்த கியூ பாதியாய்க் குறைகிறது.

“எங்கிருந்து வருகின்றாய்?” கேள்வி பிறந்தது சிங்களத்தில்.

இளைஞனிடமிருந்து பதில் இல்லை. திருதிருவென்று விழிக்கின்றான். பாஷை புரியாத பரிதாபம் கண்களில் மிரள்கிறது.

இவன் என்ன போர்த்துக்கல்லில் இருந்தோ ஒல்லாந்திலிருந்தோவா வருகின்றான். கொழும்பைத் தூக்கிக் கொண்டு போய்விட அல்லது இலங்கையைப் பிடித்துக் கொள்ள! அவன் பரபரவென்று விழிப்பதைப் பார்க்கையிலேயே தெரிகிறது சிங்களம் சொட்டுக்கூட தெரியவில்லை என்று. அப்படி என்றால் ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லது மட்டக்களப்பிலிருந்து தான்!

அதுதான் இவர்களும் மிரள்கின்றார்கள். கருடனைக் கண்ட நாகம் போல்.

“ஏன் கொழும்புக்கு வந்தாய்?”

“எங்கே போகிறாய்….?”

“எங்கே தங்கி இருக்கின்றாய்…?”

“எப்போது வந்தாய், எதற்காக வந்தாய்…?.”

அலை அலையாய் எழுந்த கேள்விக் கடல் அவனை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

மூச்சு விட முடியாமல் திணறினான். ஒரு கேள்விக்கே பதில் சொல்லத் தெரியாதவன் இத்தனை கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லப் போகின்றான்.

யாழ்ப்பாண ஐடென்டிட்டி கார்ட் என்றதுமே அவனை ஒரு ஓரத்தில் நிறுத்திக் கொண்டு மற்றவர்களை “டக் டக்” கென்று பார்வையிட்டு பஸ்ஸுக்கு அனுப்புகின்றார்கள்.

யாழ்ப்பாண அடையாள அட்டை ஒன்று கிடைத்து விட்ட மகிழ்வில் மற்றவைகளைத் தட்டி விடுகின்றனர்.

பாஷை விளங்காத பையனை ஜீப்பில் ஏற்றிக் கொள்ளுகின்றான் ஒருவன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள் அனைவரும் ஏறியாகிவிட்டது.

பஸ்ஸை போகச் சொல்லி ஆமிக்காரர்களிடமிருந்து சமிஞ்சையும் கிடைத்து விட்டது.

டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை நோக்கி நடந்து ஏறியும் விட்டனர்.

அப்போதுதான் அது நடந்தது…. பஸ்ஸுக்குள்ளிருந்து விழுந்தடித்துக் கொண்டு இறங்கிய ஒரு பெண் “பஸ்ஸிலிருந்து இறக்கிய அந்த பையனை ஏன் ஜீப்புக்குள் ஏற்றி வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டாள் !

எரிமலையாய்க் குமறினான் அந்தத் தலைவன் போன்றவன்.

“என்னிடம் யார் கேள்வி கேட்க முடியும்? எத்தனை எத்தனை பேர் கைகட்டி, வாய்பொத்தி ஏறு, என்றால் ஏறியும். இறங்கு, என்றால் இறங்கியும்…!”

“இவள் என்ன சாதாரணம். கேவலம் ஒரு பெண்”

பெண் என்றதுமே எழுந்து நிற்கும் அந்த ஆணாதிக்கத் திமிர்.

மற்றவர்கள் அனைவருமே தனது அடிமைகள் என்று நிற்கும் அந்தப் பட்டாளத்துத் திமிர்!

ஒன்றுடன் ஒன்று இணைந்து முறுக்கி எழுந்து நின்று குமுறிக் கிடக்கிறது அந்த முரட்டு முகத்தில்.

அவன் இறங்கிய வேகம்…ஜீப்பின் முன் கதவை விசிறியடித்த வேகம்….தடித்தடியான சப்பாத்துக்கால்கள் தரையைக் கிழிக்க அவளை நோக்கி நடந்து வந்த வேகம்…

அவளை விரட்டி விடும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவளோ ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் அனைத்தையும் அசட்டை செய்கின்றவள் போல் நின்றாள்.

ஒரு அழகிய பூவைப் போல் தான் அவன் முன்னே நிற்கின்றாள். யாராவது ஒரு ஆணின் பின்னே, அவனின் துணையுடன் தலைகுனிந்து நடந்து போகும் ஒரு பெண்ணின் தோற்றம்.

அழகான முகம். மென்மையான உடல். ரம்யமான உடை.

அவளுடைய தோற்றமும் அவனைக் கூடுதல் ஆத்திரமடையச் செய்திருக்கும்.

“அதைக் கேட்க நீ யார்..? ஆமியா…? போலீஸா..?” சிங்களத்தில் கர்ச்சிக்கின்றான்.

“அதையே நானும் கேட்கலாமில்லையா?”

அதே சிங்களத்தில் அவள் திருப்பிக் கேட்டாள். ஆனால் கர்ச்சிக்கவில்லை.

அவளுடைய சிங்களத்தில் ஒரு இனிமை இருந்தது அவனுடையதைப் போல் மற்றவர்கள் வெறுத்தொதுக்கும் தடித்தனம் இல்லை.

ஒரு மொழியின் இனிமையும் செழுமையும் அதை மக்கள் பயன்படுத்தும் விதத்திலேயும் இருக்கின்றது தான்!

“நீ, யார் என்று என்னையா கேட்கின்றாய்..? காட்டுகின்றேன்… காட்டுகின்றேன் ….” என்று கோபத்தால் குமுறியபடி அவள் கழுத்தைப் பிடித்து நெரித்து குரல்வளையைக் கடித்துக் குதறி விடுபவனைப் போல் அவளை நெருங்குகின்றான்.

ஆனால் ஒன்றும் செய்து விடவில்லை.

அவள் ஒரு பெண்….வசீகரமானவள். மென்மையின் இருப்பிடமானவள் என்பதுவும் அவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது.

அவளுக்கும் அது தெரிந்திருக்கிறது. அதுதான் அத்தனை தைரியமாக நிற்கின்றாள். முகத்தில் பயமோ கலவரமோ இல்லாமல்.

“புரிந்து கொண்டால் சரி..! ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பஸ்ஸை இது போன்றதொரு வளைவில் மறித்து நிறுத்தி அத்தனை பேரையும் இறக்கி…. ஆமிதான்…. போலீஸ்… தான் என்று எங்களுக்கெப்படித் தெரியும்? உங்களில் யாராவது “நாங்கள் இன்னார்” என்று அடையாளப்படுத்திக் கொண்டீர்களா? இப்போது தான் ஆமி ட்ரஸ் போலீஸ் டீரஸ்ஸில் ஏதேதோ நடக்கிறதே! “கவனமாக இருங்கள்” என்று பாதுகாப்பு வட்டாரமே மக்களை உஷார் படுத்துகிறதே!”

“ஆகவே நீங்கள் சட்டப்படியானவர்கள் தானா என்பது எங்களுக்கும் தெரிய வேண்டும்” என்றாள் அமைதியாக.

ஏதோ நடக்கிறது…!’ அதுவும் ஆமிக்கும் ஒரு பெண்ணுக்கும் என்பது தெரிந்ததும் பஸ்ஸுக்குள் ஏறியவர்கள் ஒவ்வொருவராய் இறங்கி அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

மற்றவர்கள் முன் தன் மரியாதை குறைவதை விரும்பாத அவன் அந்தப் பெண்ணைப் பார்த்து “உங்களுக்கு இப்போது என்ன தெரிய வேண்டும்?” என்றான்.

“நீ யார்?” என்னும் அதட்டலில் இருந்து, “உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?” என்பதில் தொனித்த மாற்றம் அவனின் இறக்கத்தைக் காட்டுகிறது.

“நீங்கள் எல்லாம் யார் என்பது தெரிய வேண்டும்?”

அவள் அதே இடத்தில் நின்றாள். தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அவன் தள்ளப்பட்டான்.

“பஸ் போய்விடும். தான் எங்காவது கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்படப் போகின்றேன்….! என்னுடைய இத்தனை நாள் முயற்சிகளும் பலனளிக்கப் போகும் தறுவாயில் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது..! என்று விழி பிதுங்க கலங்கிப் போய் ஜீப்பில் அமர்ந்திருக்கும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஏதோ நடக்கிறது. அது தான் இன்னும் பஸ் கிளம்பவில்லை ” என்பதை மட்டும் உணர்கின்றான்.

“என்னுடைய அடையாள அட்டையை நீங்கள் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள்!” அவள் தான் பேசினாள்.

“நான் இந்த நாட்டின் சட்டரீதியான ஒரு பிரஜை. அவனை ஏன் தடுத்து வைத்திருக்கின்றீர்கள்?” என்று வினவினாள்.

“அவன் உங்களுக்கு வேண்டியவனா?”

“வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டிய நிலை எனக்கு இல்லை! நான் அரசியல்வாதியில்லை! அவன் யாராக இருந்தாலும் சரி ஏன் பிடித்து வைத்திருக்கின்றீர்கள் என்பது தெரிய வேண்டும்”.

“அவனிடம் இருப்பது யாழ்ப்பாண ஐடென்டிட்டி கார்ட்..! அவனும் ஒரு…”

அவன் முடிக்கு முன்னரே அவள் பேசத் தொடங்கினாள். “யாழ்ப்பாணம் இந்த நாட்டுக்குச் சொந்தமானது இல்லையா? யாழ்ப்பாண ஐடென்டிட்டி கார்ட் இந்த அரசாங்கம் அவனுக்கு வழங்கிய அடையாளமில்லையா? அவன் யாழப்பாணத்தில் பிறந்தவன் என்பதற்காக இந்த நாட்டின் பிரஜை இல்லையா? என்னைப் போல்… உங்களைப் போல்…போகும்படி அனுப்பினீர்களே இவர்களைப் போல்…

பிறகு ஏன் அரசாங்கம் கொடுத்துள்ள அடையாள அட்டை இருந்தும் அவனை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டீர்கள்.

அவன் கொலைகாரனா? கொள்ளைக்காரனா? வேண்டப்படுகிறவர்கள் என்னும் உங்களது பட்டியலில் அவனது படம் ஏதும் பிரசுரமாகி இருக்கிறதா?

மூச்சு விடாமல் பேசிக் கொண்டு போனாள் அவள்.

“நீங்கள் எதற்காக அவனைப் பிடித்துக் கொண்டு போகின்றீர்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். எங்கே வைத்திருப்பீர்கள் என்பதும் தெரிய வேண்டும். அவனுடைய பெற்றோருக்கோ உறவினருக்கோ நான் அறிவிப்பேன்….”

“நீங்கள் அதை எல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்..!”

இந்த நிலைமையை நீடிக்க விட அவனுக்கு விருப்பமில்லை.

ஆட்கள் வேறு சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இவ்வளவு தூரம் விட்டதே தப்பு என்பதை உணர்கின்றான். இதை இத்துடன் முடித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்றும் எண்ணுகின்றான்…அதையே விரும்புகின்றான்.

தன்னுடைய பெயர் பதவி, விலாசம் ஆகியவைகளை இந்நேரம் அவள் மனப்பாடம் செய்து கொண்டிருக்கலாம். பிறகு ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி விடவும் கூடும்.

ஜீப்பைப் பார்க்கின்றான். உள்ளே அமர்ந்திருக்கும் ஆபீசரைப் பார்க்கின்றான். தலையை அசைத்து ஏதோ ஒரு சமிக்ஞை செய்கின்றான்.

ஜீப்பின் கதவு திறக்கிறது. அவனை இறக்கி விட்டார்கள். “நீ போகலாம்” என்றார்கள்.

பயந்து பயந்து நடந்து வந்த அவன் அந்தப் பெண்ணிடம் சென்று “யூ ஆர் மை கோட்….நீங்கள் என் தெய்வம்…நான் நேரில் கண்ட தெய்வம்…” என்று முனகினான்.

அனைவரும் மீண்டும் பஸ்ஸுக்குள் திணிந்து கொண்டபின் நடந்து வந்தாள்.

ஆமிக்காரர்கள் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வினாடி நின்றவள் ஆமிப் பெரியவனைப் பார்த்துக் கூறினாள். ”நீங்கள் உங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை. பஸ்ஸின் டிரைவரையும் கண்டக்டரையும் செக் பண்ணினீர்களா? இல்லையே ஏன்? அவர்கள் மேல் மட்டும் என்ன அப்படி ஒரு நம்பிக்கை? நீங்கள் என்ன செக் பண்ணுகின்றீர்கள் எதைத் தேடுகின்றீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா?” என்றபடி பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.

பஸ்ஸில் இப்போது அவளுக்காக ஒரு சீட் காலியாக இருந்தது.

எல்லோரும் அவள் முகத்தையே ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

அத்தனை பேரும் பயந்து நடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்த பட்டாளத்துக்காரர்களை என்னமாய்க் கலக்கிவிட்டு வந்திருக்கின்றாள் அவள். தெய்வத்தின் முன் நிற்கும் பக்தன் போல் கைகட்டி உடல் கூனி நன்றியுணர்வுடன் நின்றான் அவன்.

“நீங்கள் மட்டும் இல்லை என்றால் என் வாழ்வே இருண்டு போயிருக்கும்…! இந்த நாட்களிலும் கூட கடவுள் தோன்றுவார் என்பதை நான் இன்று தான் உணர்கின்றேன் ..! நீங்கள் யார் என்பதை நான் அறிந்துக் கொள்ளலாமா?”

அவள் மிகவும் அமைதியாகத் தன்னுடைய கைப்பையைத் திறந்து ஒரு விசிட்டிங்கார்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

மனித உரிமைகளை மதிக்கும் அந்தப் பெண்ணிடம் “நீங்கள் எப்படி இந்த பஸ்ஸுக்குள்? அதுவும் இத்தனைக் கூட்டத்துக்குள்?”

“கார் பழுதாய்ப் போய் பாதையில் கிடக்குது. டிரைவர் அதனுடன் போராடிக் கொண்டிருக்கின்றான். மூன்று பஸ் ஸ்டாண்டுக்கு முந்தியதில் தான் இந்த பஸ்ஸில் ஏறினேன். ஒரு அவசர வேலை இருக்கிறது” என்றாள்.

நல்ல தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேசினாள்.

“கார் பழுதாய்ப் போயிருக்காவிட்டால் நீங்க இந்த பஸ்ஸில் ஏறி இருக்க மாட்டீர்கள் இல்லையா…? என் கதி என்னவாகி இருக்கும்…?”

அவன் கண்களே கலங்கின. “இதைத் தானா தெய்வச் செயல் என்கின்றோம்…!”

அவனை அந்த உணர்ச்சிச் சிக்கலில் இருந்து விடுவிக்கும் எண்ணத்தில் “உன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே?” என்கின்றாள்.

“என்ன இருக்கிறது கூற? எத்தனையோ பாடுபட்டு எவ்வளவோ செலவழித்து ஒரு மாதிரியாக எல்லாம் சரியாகி இருக்கின்றது. இன்னும் இரண்டே வாரத்தில் ப்ளைட் ஓ.கே. ஆகி இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் வழியனுப்ப வந்து அன்ரியுடன் நிற்கின்றார்கள்!”

“இன்று மட்டும் நீங்கள் இந்த பஸ்ஸுக்குள் இல்லை என்றால்”

“கமான்…! கமான்…! கூல்டவுன். என்னுடைய விசிட்டிங் கார்டை வைத்துக் கொள். எப்போதாவது ஏதாவது வேண்டுமானால் கோல் எடு… அல்லது வந்து பார்…விஷ்யூ ஆல் லக் இன் அட்வான்ஸ்” என்று அழகாகச் சிரித்தாள்.

நாளைக்கு ஃப்ளைட்.

அம்மாவிடம் ஆயிரம் தடவைக்கு மேல் கூறிவிட்டான் அந்தத் தெய்வம் பற்றி. அவனைப் பொறுத்தவரை அந்தம்மா தெய்வம் தான்.

அந்த விசிட்டிங் கார்ட்டில் ஒரு போட்டோ கொப்பி எடுத்து அப்பாவிடம் கொடுத்துள்ளான். ஏதாவது அவசரம் என்றால் அவர்களைப் போய்ப் பார்க்கும்படி.

நாளைக்கு பிளைட் என்பதால் இன்று போய் அந்தம்மாவைப் பார்த்து வரும்படி அம்மா கூறினாள். அப்பாவும் கூறினார். அவனும் அதையே எண்ணியிருந்தான். காலையில் பேப்பரைக் கையில் எடுத்ததும் மரண அறிவித்தல்களைத் தான் அவன் முதலில் பார்ப்பது வழக்கம். நம்மவர்கள் எத்தனைப் பேர்….எங்கெங்கே….எப்படி…எப்படி…என்று!

திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட திடீர் திடீரென மரணித்திருப்பார்கள். சாவு நிச்சயம் தான். சொல்லிக் கொண்டு வருவதில்லை தான் மரணம் கள்வனைப் போல்தான் வரும்.

ஆனால் இப்போதெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறது கள்வனைப்போல் அல்லாமல் காப்பானைப் போலவும் வருகிறது!

பேப்பரைக் கையில் எடுத்தவன் பேயடித்தவன் போலானான். பிரமித்துப் போய்விட்டான்.

“எப்படி? இது எப்படி?”

அவன் கண்ணுக்குள் நெஞ்சுக்குள்…இதயத்துக்குள் பதிந்து விட்ட அந்த முகம்…இந்த பேப்பருக்குள்..! எப்படி? மரண அறிவித்தல்களுக்குள் எப்படி?

அகால மரணமென்றால் எப்படி?

அவனால் ஒன்றையுமே நிதானித்துக் கொள்ள முடியவில்லை.

முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள் என்று கூறிய அந்த நினைவு முகம்…

– தினக்குரல் 04.07.1999 – தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *