சூரன் குத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 3,873 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஒளி ஒடுங்கிச் சோர்ந்துவிட்ட பகலை விழுங்கிக் கொழுக்கும் எண்ணத்தோடு விரைந்து வரும் இரவு எனும் அசுரக் குழந்தை சற்றே மலைத்து நிற்கும் நேரம்…..

பகலுமற்ற இரவுமற்ற “இரணிய வேளை”…

ஊரின் தென்புறத்திலிருந்து விம்மி எழுந்த ஓலம் காற்றோடு கலந்து எங்கும் பரவியது. இருளும் ஒளியும் கூடி முழங்கும் விந்தையை ரசித்தபடி சோம்பிக் கிடந்த என் காதுகளையும் தொட்டது அது…

இன்றுதான் “சூரன் குத்து” என்ற நினைவு படர்ந்தது எனனுள்… யானைமுகாசூரன், சிங்கமுகாசூரன் போன்ற பல சூரன்களையும் குத்திக் கொன்றுவிட்ட முருகப் பெருமான் சூரபதுமனையும் ஓட ஓட விரட்டினார். வேல்கொண்டு தாக்கினார். கொய்யக் கொய்ய தலை புதுசு புதுசாக முளைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு. கடைசியில் அவனையும் ஒழித்துக் கட்டிவிட்டார் குமரக் கடவுள்….

ஆண்டுதோறும் இந்த விழாவை “பொம்மைகள் கொண்டு விளையாடி மகிழும் மனிதக் குழந்தைகள் இத்துடன் திருப்தி அடைவதில்லையே! எந்த ஊர் மக்கள் திருப்தி அடைந்தாலும் குருவிப்பட்டி வாசிகள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். சூரசம்காரத்தோடு அவ்வூரின் விழா முடிந்துவிடுவதில்லை. சூரக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அசுரத் தாய் கண்ணீர் வடித்து, மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தெருத் தெருவாகச் சுற்றி அலைவதையும் கொண்டாடுவார்கள் அவர்கள்.

அதற்கென விசேஷமாகச் செய்த, ஓங்கி உயர்ந்த உருவம் ஒன்று. அதன் முண்டக் கண்களில் சோழி முட்டைகளைப் பதித்து உடைத்து விடுவார்கள். முட்டைகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் திரவப் பொருள்தான் சூரத்தாய் சிந்தும் கண்ணீர். அந்த “ஆலி பொம்மையை (பூத உருவை) உள்ளே புகுந்து நின்று இரண்டு பேர் தூக்கித் திரிவர். அவர்கள் கைகளால் “தப்திப்” என்று ஓசை எழ அறைந்துகொண்டு அழுகை ஒலி பரப்புவர்.

கும்பல் கூடும் சிறுவர்களும் பெரியவர்களும் சூரத் தாயின் துயர ஓலத்தைப் பெரிதாக்கி ஒலி பரப்புவார்கள்.

அவர்களின் மாரடிப்பு ஓசையும் அழுகை ஒலியும் காற்றிலே கலந்து வந்து என் காதுகளைத் தாக்குகிற போதெல்லாம் –

இதோ அவற்றினும் மேலாய் பொங்கி எழுகின்ற அவலக் குரலை நான் தெளிவாகக் கேட்க முடிகிறது. பார்க்கப் போனால், வெறும் பிரமைதான் அது. எனினும் என் இதயம் வேதனையால் கனக்கிறது. துயரம் தொண்டையில் கூடுகிறது. கண்களிலே நீர் மல்குகிறது…

உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதோ என்னவோ? நல்ல இலக்கியத்தைப் படிக்கிறபோது, திறமையாக எழுதப்பட்டுள்ள கதையிலே முக்கியமான ஒரு கட்டத்தை வாசிக்கிறபோது, துயரம் அனுபவிக்க நேர்ந்தவர்கள் தம் கதையை உணர்ச்சியோடு சொல்வதைக் கேட்கிறபோது, என் உள்ளத்தில் வேதனை கவிய, என் கண்களிலே நீர் பொங்கிவிடும். வேதனையின் குரல் என் உணர்ச்சிகளை எளிதில் கிளறிவிட்டு விடும்.

ஓலமும் ஒப்பாரியும் பொங்கி எழுகிற போதெல்லாம் அவற்றின் மேலாக விம்மி எழுகின்ற சோக அலறல் ஒன்று எனது நினைவுப் பெருவெளியிலே, அடங்காத நாதமாய் – அடக்க முடியாத ஓலமாய் – ஒலிக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கை எனும் சோகக் காவியத்திலே என்றோ ஒருநாள் காலம் எழுதிவைத்த நாடகத்தின் நினைவு என் உள்ளத்திலே அழிக்க முடியாத கீறலாய் – ஆழப் பதிந்த “கோரை யாய் – பதிந்து விட்டது. அதே காலம் பின் மீண்டும் மீண்டும் வேதனை நாடகங்களை விளையாட விடுகிற போதெல்லாம் – மனிதர்கள் விளையாட்டுக்காகவோ, மெய்யாகவே தானோ, கோர நாடகங்களை ஆடித் தீர்க்கிற போதெல்லாம் – இறந்தகால அனுபவத்தின் நினைவொலியை எனது நுண் உணர்வுகள் மேலுக்கு உந்திவிட்டுவிடும். நான் சோகத்தால் சாம்பிக் குவிய நேரிடும்…..

இதோ, சூரத் தாய்க்காக மனித உருவங்கள் தூரத்தில் எழுப்புகின்ற அழுகை ஒலி-ஒளியும் இருளும் கலந்து குழம்புகிற விண்வெளியிலே – மிதந்து திரியும் காற்றைத் துணை கொண்டு ஊர் முழுதும் பரவிக் கொண்டிருக்கிறது.

– அன்றும் இதே மாதிரித்தான்

இருபத்திரண்டு வருஷங்களுக்கு முந்தி, ஒரு நாள்… அன்றும் “சூரன் குத்து” திருநாள்தான்.

சூரன் பொம்மைக்கும் முருகனுக்குமிடையே பலத்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது! இரண்டு “சப்பரங்”களுக்கும் நடுவில் நீளமாகக் கயிறு கட்டி, அதில் அங்கும் இங்குமாக வாணத்தைக் கொளுத்திவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் மனிதர்கள். முடிவில், சூரனின் தலை அகற்றப்படும். இப்படி அநேக தடவைகள்.

இந்த “விளையாட்டு” நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, வேறொரு பக்கத்தில் வேறு விதமான விளையாட்டு நடிக்கப்பட்டது. “துணிந்த கட்டைகள்” சிலர் திட்டமிட்டு நடத்திய நாடகம் அது.

கடைகளின் முன்னே மறியல் நடந்து கொண்டிருந்த காலம் அது. அந்நியத் துணியை விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்னால் தேசபக்தர்கள் நின்று, வருவோர் போவோரிடம் அன்பு உபதேசம் புரிந்து வந்தார்கள். அந்த “மறியல்” வேலையை சுவாரஸ்யமானதாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்ட சில “பக்தர்கள்” புதுமையான – துணிகரமான – வேலைத்தனம் ஒன்று செய்தார்கள்.

ஆட்சி புரிந்துவந்த ராஜப் பிரதிநிதியின் பொம்மை ஒன்றைச் செய்து “சூரன் வாறான் – சூரன்” என்று கூவியவாறு கடைத் தெருவுக்குச் சுமந்து வந்தார்கள். பெரிய ஜவுளிக் கடை ஒன்றின் முன்னால் அதை இறக்கிவைத்து, அதன் நெஞ்சிலே வேல்கம்பைச் சொருகிவிட்டு ஓட்டம் பிடித்தார்கள் செயல் புரிந்தவர்கள்.

அவர்கள் ஓடியதற்குக் காரணம் போலீஸ் வீரர்கள் குண்டாந்தடியோடு விஜயம் செய்ததுதான். வீரர்கள் வந்ததும், அவர்களை நோக்கி எங்கிருந்தோ சில கற்கள் வந்து விழுந்தன. அவ்வளவுதான்! தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும் பயங்கர ஆட்சி புரிந்தன. கும்பலாக நின்று வேடிக்கை பார்த்தவர்கள் சிதறி ஓடினர். கடைவீதியில் மண்டை பிளந்து சிலரும், குண்டு அடிபட்டுச் சிலரும் ரத்தம் சிந்திக்கிடந்தனர்….

கோயில் சூரசம்காரத்திலே அசுரத் தாய் அலறி அடிக்கும் கட்டம் துவங்கியிருந்தது. அதே கணத்தில் கடைவீதியில் ஒரு பெருங் கூச்சல், நெஞ்சை அறுக்கும் தொனியாய், பொங்கி எழுந்தது. “என்னைப் பெத்த ராசா! எம் மகனே! போயிட்டியே! ஐயோ!” என்ற ரீதியில் புலம்பலும் மாரடிப்பும் விம்மி வெடித்தன.

தரித்திர உருவினள் ஒருத்திதான் அப்படிக் கத்தினாள். அவள் பெத்த “ராசா” கட்டையாய் – சவமாய் – கிடந்தான். ரத்தம் சிந்திக் கிடந்தான். குண்டு அடிபட்டுச் செத்துக் கிடந்தான். கண்ணை அறுக்கும் – நெஞ்சைக் குத்தும் – தோற்றம் அது….

அந்தத் தாயின் உணர்ச்சி மிகுந்த ஓலம் கடைவீதி நெடுகிலும் ஒலித்தது. அடுத்த வீதியிலும், அதற்கு அப்பாலும் ஒலித்தது. ஊரின் மூலைக்கு மூலை எட்டியது.
தன் மகனை இழுத்து மடிமீது கடத்திக் கொண்டு – யாராலும் தேற்ற முடியாத சந்திரமதிபோல – ஓலமிட்டு அழுதாள் அந்தத் தாய் மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு, மண்டையைத் தரைமீது “நங்கு நங்கென்று மோதிக்கொண்டு அழுதாள் அவள். தனது கண்ணுக்குள் கண்ணாக – உயிரினும் சிறந்த உயிராக – தன் வாழ்வின் வாழ்வாக – வருங்காலத்தின் நம்பிக்கையாக மதித்திருக்கும் ஒரு மகனைப் பறி கொடுத்த தாய் உள்ளம் தான் அத்தகைய வேதனைகளை – துயர அனுபவங்களை – தனக்குத் தானே விதித்துக் கொள்ளமுடியும்….

அவளது சோகப் புலம்பல் – ஆற்ற முடியாத துயர அனுபவம் எல்லோர் உள்ளத்தையும் தொட்டது. ஊரே திரண்டு விட்டது. கோயில் சூரன்குத்து விளையாட்டு அர்த்தமற்றதாய். வேடிக்கை இல்லாததாய் – சப்பென்று – போய்விட்டது.

கடைவீதி நிகழ்ச்சியிலே “யார் சூரர்கள்? எவர் தேவர்கள்?” என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும் கூட, இங்கேதான் நிஜமான சூரன்குத்து நடந்திருக்கிறது!” என்று அநேகர் பேசிக் கொண்டார்கள்.

அந்தி இறந்து. இரவு தன் கறுப்புக் கொடியை வெற்றிகரமாக நிலை நாட்டி விட்ட பிறகும் கூட அந்த தாய் அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய மகனின் உடலை ‘அதிகாரமும் சட்டமும் அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு அவளை மிரட்டி அனுப்பியபோது, அவள் அலறிய அழுகை-அம்மம்ம!

– இதோ இப்பொழுதுகூட என் காதுகளில் ஒலி செய்கிறது அது…

“சூரத் தாய்” தூரத்துத் தெருமூலை திரும்பி, அருகிலிருக்கும் வீதிக்கு வந்து விட்டாள் என்பதை முன்னேறி வரும் ஆரவாரப் பேரொலி உணர்த்துகிறது எனக்கு. எனினும் என் காதுகளிலே இறந்த காலத்தின் ஒற்றைக் குரல்தான் எதிரொலித்து, என் இதயத்தில் வேதனையைக் கிளறிவிடுகிறது.

– உலகில் அசுரசக்தி அகற்றப் பட்டுவிட்டதா? அல்லது, அமுக்கி ஒடுக்கி வைக்கப்பட்டது என்றாவது சொல்ல முடியுமா?… மனிதக் குழந்தையைப் பறிகொடுத்த தாயின் துயரத்தினின்றும் மாறுபட்ட தாகவா இருந்திருக்கும் அசுரக் குழந்தைகளை இழந்த தாயின் வேதனை?….

என் உள்ளம் எனும் கடலிலே மோதுகின்ற நிரந்தரமான அலைகளில் இவையும் சில. விடைதான் எனக்குப் புரியவில்லை.

எனது பார்வை படருகின்ற இடமெல்லாம், இருள் கவிந்து கிடக்கக் காண்கிறேன்!….

இப்பொழுதும் இருட்டிவிட்டது! ஒளி இழந்த கிழப் பகலை இருள் கொழுத்த இரவு விழுங்கிவிட்டுச் சிரிக்கிறது. அது கொரித்துத் துப்பிய எலும்புத் துண்டுகள் போல விண் நெடுக நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கக் காண்கிறேன். என் உள்ளத்திலே ஏனோ அவை நம்பிக்கை ஒளி புகுத்தக் காணோம்!

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *