சூதாட்டத்தில் சில தருமர்கள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 7,517 
 
 

”ஐயா..!”

வாசலில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்த வேணுகோபால், அழைப்புக் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார்.

சுமார் அறுபது வயதான கிராமத்துப் பெரியவர் ஒருவர் தயங்கியபடி நின்றிருந்தார். கையில் இருந்த மஞ்சள் பையில் பேப்பர்கள் துருத்திக்கொண்டு இருந்தன.

”ஐயாதான் சினிமா தயாரிப்பாளர் வேணுகோபாலுங்களா?”

வயதாகிவிட்ட நிலையிலும் சிலர் படம் இயக்க வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டு வருவதுண்டு. இவர் அந்த வகையாக இருக்குமோ என்கிற தயக்கத்துடன், ”சொல்லுங்க, நான்தான்!” என்றார் வேணுகோபால்.

”என் பேர் பக்கிரிசாமி. இயக்குநர் பரமேஷின் அப்பா!”

பரமேஷ், கடைசியாக வேணுகோபால் தயாரித்த படத்தை இயக்கிய இளம் இயக்குநர்.

எதிர் நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, ”ம்… சொல்லுங்க. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?” என்று மெலிதாகப் புன்னகைத்தார் வேணுகோபால்.

பக்கிரிசாமி, தன் கையில் இருந்த பையிலிருந்து பேப்பர்களை எடுத்து நீட்டினார். வேணுகோபால் குழப்பமாக அந்த பேப்பர்களை வாங்கிப் பார்த்தார். அனைத்தும் வீட்டுப் பத்திரங்கள். பார்த்துவிட்டு அவரிடமே திருப்பிக் கொடுத்தார். ”இதை எதுக்கு என்கிட்டே கொடுக்கிறீங்க? எதுவும் பண உதவி வேணுமா?”

”அதில்லீங்கய்யா! கொஞ்ச நாளைக்கு முன்னால எல்லா பத்திரிகையிலும் ஒரு செய்தி வந்துருந்துச்சு. என் பையன் உங்களுக்காக டைரக்ட் பண்ணிக் கொடுத்த படம் சரியா ஓடலைன்னும், உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய் நஷ்டம்னும் போட்டிருந்தாங்க. அதோட, படம் ரிலீஸானதுக்குப் பிறகு என் பையன் உங்களை ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட வந்து பார்க்கலைன்னும் போட்டிருந்தாங்க. அதான், மனசு கேக்காம வீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கிட்டு நேரா இங்கே வந்துட்டேன்…”

வேணுகோபால் அவரைக் குழப்பமாகப் பார்த்தார்.

”இதெல்லாம் கிராமத்துல உள்ள என் ரெண்டு வீட்டோட பத்திரங்கள். எனக்கப்புறம் என் பையனுக்குச் சேர வேண்டிய சொத்துதான் இது. இதை வித்து உங்க பணத்தை எடுத்துக்குங்க. நீங்க நஷ்டப்பட்ட அளவுக்கு இதுல வராது. ஆனாலும், நஷ்டத்துல பொறுப்பு ஏத்துக்கற அளவுக்கு ஒரு தொகை வரும்.”

”பெரியவரே… நீங்க என்ன சொல்றீங்க?”

அவர் வறட்சியாகச் சிரித்தார். ”ஐயா… ரெண்டு பேர் சேர்ந்து செய்ற தொழில்ல நஷ்டம் வந்தா, அதை ரெண்டு பேரும் பகிர்ந் துக்கிறதுதானே முறை?”

”இல்லீங்க. இது நான் மட்டும் செய்ற தொழில். உங்க புள்ளை என்னோட பார்ட்னர் கிடையாது. அவர் வெறும் டைரக்டர். அவ்வளவுதான்!”

”இருக்கட்டுங்க! உங்களாலதானே அவன் இன்னிக்கு இந்த நிலைமைக்கு உசந்திருக்கான்? ஏழு வருஷமோ, எட்டு வருஷமோ திக்குத் தெரியாம அலைஞ்சுட்டு இருந்தவனை, நீங்கதானே வாய்ப்பு கொடுத்து டைரக்டர் ஆக்கினீங்க!”

”அவர்கிட்ட திறமை இருந்துச்சு. அதை நான் பயன்படுத்திக்க நினைச்சேன்!”

”எதை எதிர்பார்த்து டைரக்டர் ஆக்கினீங்க..? கதை நல்லாருக்கு; படம் நல்லா ஓடும்; லாபம் கிடைக்கும்னுதானே? எதிர்பார்த்த மாதிரி உங்களுக்கு லாபம் கிடைச்சுதா? இல்லையே! ஆனா, நீங்க போட்ட பணத்தால அவனுக்குப் பேர், புகழ் எல்லாமே கிடைச்சிருக்கு. எல்லா பத்திரிகைலேயும் அவன் போட்டோவோடு பேட்டி வந்துச்சு. டி.விலயும் பேசினான். ரொம்பச் சந்தோஷப்பட்டேன். இதுக்கெல்லாம் காரணம் நீங்க போட்ட முதல்தானே? அந்த முதலுக்குரிய லாபம் கிடைக்கலேங்கிறப்ப, அதைச் சரி செய்றதுதானே முறை? மகனோட பேரையும் புகழையும் பார்த்துச் சந்தோஷப்பட்டவன், அதுக்குக் காரணமானவருக்குத் தன் மகனால நஷ்டம்னு தெரிஞ்சும் கண்டுக்காம போறது முறை இல்லீங்களே?”

வேணுகோபாலுக்கு அவரது வாதம் வியப்பாக இருந்தது. அந்தக் கிராமத்து மனிதருக்குள் இருக்கும் நேர்மையும் உண்மையும் வெள்ளந்தியான பேச்சும் சிலிர்க்கவைத்தன.

அவர் வேணுகோபால் முகத்தைப் பார்த்தபடி தொடர்ந்தார்… ”ஐயா! நானும் என் சிநேகிதரும் சேர்ந்து கோழிப் பண்ணை நடத்தினோம். திடீர்னு எனக்கு ஒரு சிக்கல். கூட்டு வேணாம்னு விலகிட்டேன். எனக்குச் சேர வேண்டிய பணத்தையும் வாங்கிட்டேன். அடுத்த நாள் சுனாமி. கோழிப் பண்ணை நாசமாயிடுச்சு. கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் ரூபாய்க்கு நஷ்டம். ரெண்டு நாள் முன்னாடி சுனாமி வந்திருந்தா, அந்த நஷ்டத்துக்கு நானும் உள்ளாகியிருப்பேன் இல்லையா? திடீர்னு விலகி வந்துட்டதால எனக்குப் பொறுப்பு இல்லேன்னு ஆயிடுமா? மனசாட்சி கேக்கலீங்க. நஷ்டத்துல நானும் பங்கெடுத்துக்கிட்டேன். அதைப் போலத்தாங்க இதுவும். உங்க நஷ்டத்துல என் பையனுக்கும் பொறுப்பு இருக்கு. அவனுக்குப் பதிலா நான் அந்தப் பொறுப்பை ஏத்துக்கிறேன்…”

அவரைப் பார்த்துப் புன்ன கைத்தபடி பேசத் தொடங்கினார் வேணுகோபால்… ”நீங்க சொல் றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். உங்க பையன் டைரக்ட் பண்ணின படத்தால எனக்கு நஷ்டம்தான். இல்லேங்கலே! ஆனா, அதுக்கு முன்னாடி நான் தயாரிச்ச படத்துல நாலு கோடி ரூபாய் லாபம் கிடைச்சுது. இந்த வீடு, வாசல்ல நிக்கிற ரெண்டு கார் இதெல்லாம் அந்தப் பணத்துல வாங்கினதுதான். ஆனா, அந்த லாபம் கிடைக்கக் காரணமாயிருந்த டைரக்டருக்கு நான் பேசின சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபாய்தான். நாலு கோடி ரூபாய் லாபம் வந்தும், அதுல அவருக்கு நான் பங்கு எதுவும் தரலே! உங்க பையன் டைரக்ட் பண்ணின படம் நல்லா ஓடி, லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருந்தாலும், அவருக்கும் நான் எதுவும் கொடுத்திருக்க மாட்டேன்…”

பக்கிரிசாமி வியப்பாகப் பார்த்துக்கொண்டு இருக்க, வேணுகோபால் தொடர்ந்தார்…

”சினிமா ஒரு வித்தியாசமான வியாபாரம்! கிட்டத்தட்ட இது ஒரு சூதாட்டம். பேங்க்குல பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கணும்னா ஆயிரத்தெட்டுச் சம்பிரதாயங்கள் இருக்கு. ஆனா, முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒருத்தனின் திறமையை மட்டுமே நம்பி, பத்து கோடி ரூபாய் முதல் வைப்போம். இங்கே சரியான கணிப்பும் அதுல கிடைக்கிற வெற்றியும்தான் முக்கியம். உங்க பையனால ஏற்பட்ட நஷ்டம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. அடுத்த படத்துல அதைச் சம்பாதிச்சிடுவேன். ஆனா, நம்மளை டைரக்டராக்கின புரொடியூஸருக்கு ரெண்டு கோடி ரூபாய் நஷ்டம் ஆகியிருக்கே… ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது அவரைப் போய்ப் பார்ப்போம்னு உங்க பையன் நினைக்கலே பாருங்க… அதான் எனக்கு வருத்தம். இப்ப நீங்க தேடி வந்ததுல, அந்த வருத்தம்கூடப் போயிடுச்சு!”

”அப்ப, இந்த நஷ்டம் உங்களுக்கு மட்டுமே சொந்தம்கறீங்களா?”

”நிச்சயமா! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா… நஷ்டம் வரும்னு தெரிஞ்சும் தைரியமாப் பண்ற தொழில் சினிமா மட்டும்தான்…” என்ற வேணுகோபால், காபி எடுத்து வந்த மனைவியிடம் அவரை அறிமுகப்படுத்தினார்.

”இவர் நம்ம பரமேஷ் அப்பா! படம் ஓடலே, நஷ்டம்னு பத்திரிகையில எழுதியிருந்தாங்கள்ல… மனசு கேக்காம வீட்டுப் பத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு வந்திருக்காரு…”

வேணுகோபாலின் மனைவி பக்கிரி சாமியை வியப்பாகப் பார்த்துவிட்டு, வணக்கம் சொன்னாள். பக்கிரிசாமி எழுந்துகொண்டார்.

”நெனச்சு வந்த காரியம் நல்லபடியா முடியாததுல எனக்கு வருத்தம்தான். கிராமத்து மனுஷங்க நாங்க. அம்போன்னு யாரையும் விட்டுட்டுப் போக மாட்டோம். என் பையனுக்கு நீங்க ஏதும் சாபம் கீபம் கொடுத்துர மாட்டீங் களே?”

”சேச்சே! சத்தியமா அப்படிஎல்லாம் நினைக்க மாட்டேன். உங்க பையன் இன்னும் மேல மேல வருவான். உங்களை மாதிரி ஒரு அப்பாவுக்குப் பையனா பொறக்க, பரமேஷ் கொடுத்து வெச்சிருக்கணும்!”

”அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்!” என்றபடி விடைபெற்றுக் கிளம்பினார் பக்கிரிசாமி.

காலி டம்ளர்களை எடுத்துக்கொண்டு, வேணுகோபாலின் மனைவி உள்ளே போனதும் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசியவள், ரிசீவரின் வாயை அழுத்தமாகப் பொத்திக்கொண்டு, வாசலைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்… ”ஏங்க… அஸிஸ்டென்ட் டைரக்டர் ரமேஷ் பேசுறாப்ல! உங்களைப் பார்க்கணுமாம். இப்ப வரவான்னு கேட்குறாரு. இல்லேன்னு சொல்லிடவா..?”

”வேணாம். உடனே வரச் சொல்லு!”

சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தவள், வியப்பாக வேணுகோபாலிடம் கேட்டாள்… ”பார்க்க பரமேஷ் மாதிரியே இருக்கான். கிட்டவே சேர்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டிருந்தீங்களே..?”

”உண்மைதான்! ஆனா, அவனுக்கும் இந்த மாதிரி ஒரு அப்பா இருக்கலாமில்லையா? இன்னிக்கு மனசு என்னவோ ரொம்பச் சந்தோஷமா இருக்கு. நல்லதே நடக்கும்னு தோணுது. என் முடிவை மாத்திக்கிட்டேன். தள்ளிப் போடாம அடுத்த பட வேலையை உடனே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்” என்றார் வேணுகோபால் உற்சாகமாக!

– 30th ஏப்ரல் 2008

Print Friendly, PDF & Email

1 thought on “சூதாட்டத்தில் சில தருமர்கள்!

  1. சூதாட்டத்தில் சில தர்மர்க்கள் உண்மையாலேயே இப்படி இருப்பங்கலன்னு சொல்ல முடியாது இருந்தாலும் மனச தொட்டுச்சி சார்/மேடம் இப்படி ஒரு அப்பா இருந்தால் நல்ல இருக்கும் சார்/மேடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *