அந்த மொட்டை வெயிலில் பரபரப்பு மிகுந்த பாதையில் ஒரு குடையின் நிழலில் தற்சமயம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். சற்று தொலைவில் எனக்கு எதிர்ப்புறம் ஒரு போலீஸ் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கிறார்.
நான் அங்கு செல்லும் எல்லோரயும் உற்று பார்த்துக்கொண்டிருக்கிறேன், இப்படி பார்ப்பது தவறு என்று தெரிந்தும்.
ஆ! அந்த பெண்ணின் கால்கள் எவ்வளவு நீளமாய் இருக்கின்றன. ஆனால் அவளது இருக்கமான உடைகள் அந்த கால்களின் சதை திரட்சியை மிகைப்படுத்துவதால்
கொஞ்சம் ஆபாசமாகவும் தோன்றுகிறது, பாதங்களில் உள்ள செருப்பு கூட இன்னும் கொஞ்சம் குதிங்காலை குறைத்திருக்கலாம் மனதுக்குள் நினைத்து கொள்கிறேன்
அந்த பெண் என்னை தாண்டி சென்ற பிறகு பின்னால் திரும்பி பார்க்க இப்பொழுது ஒரு ஆண், வயது முப்பதுக்குள் இருக்கலாம், நடை கம்பீரமாய் தோன்றினாலும், போட்டிருக்கிற ஷூ பொருத்தமாயில்லை. இவரது நடைக்கு முன் பாதம் வலை போல் மூடப்பட்ட செருப்பு நன்றாக இருக்கும், அல்லது கட் ஷூ போட்டிருக்கலாம்.
அவருக்கு அடுத்து ஒரு முதியவர், சே கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத உடையில் வருகிறார். அந்த காலத்தில் அவரூக்கு இந்த உடை பிரமாதமாய் இருந்திருக்கும். இப்பொழுது நடை தளர்ந்த்தினால் இப்படி இறுக்கமான குழாய் போடுவது நன்றாய் இருக்காது. செருப்புத்தான் போட்டிருக்கிறார். அப்புறம் வேட்டி காட்டினால் என்ன?
ஒரு கணம் எனக்கு சிரிப்பு வந்த்து. சுற்று முற்றும் பார்த்து சே..போகிறவன், வருகிறவர்களின் காலையும் நடையும் பார்த்து கொண்டிருந்தால் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்.
நினைத்து கொண்டிருக்கும்போதே ஒரு இளம் பெண் தலை முடியை அப்படியே பறக்க விட்டுக்கொண்டு வருவது தெரிந்தது. சட்டென என் பார்வை கீறங்கி கால்களை பார்த்தது, அவள் போட்டிருக்கும் செருப்பு கொஞ்சம் விலை அதிகமிருக்கலாம், ஆனால் இன்ப்படி நடந்தால் சீக்கிரம் வார் அறுந்து விட வாய்ப்பு இருக்கிறது. பரக் பரக்கென இழுத்து நடந்தால் பின் எப்படி அந்த விலையுயர்ந்த செருப்பு தாங்கும்.
கூட்டமாய் சிறுவர்கள் என்னை தாண்டி செல்கிறார்கள், அவர்கள் ஏதோ பள்ளியில் படித்து கொண்டிருக்கவேண்டும். சீருடை சொல்கிறது, அவர்கள் போட்டிருக்கிற ஷூ பார்ப்பதற்கு பள பளப்பாய் இருந்தாலும், அவ்வளவு தரமானதாக தெரியவில்லை.
அவர்கள் நடையிலேயே அந்த ஷூவின் சத்தம் தட்..தட் .என்கிறது. சீக்கிரம் போய் விடும், மனதுக்குள் நினைத்து கொண்டவன் மீண்டும் என் மனதை தட்டி கொள்கிறேன், சே போற வர்றவங்க காலை பார்த்துட்டே இருக்கறதுதான் நம்ம வேலையா? நினைத்தாலும் அனிச்சையாய் மீண்டும் பார்வை எதிரில்.
இரு இளம் பெண்கள், பேசிக்கொண்டே வந்தவர்கள், என் பார்வை அவர்கள் மீது பட்டு கீழே தாளவும், என்னைப்பார்த்து ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு என் பார்வை தெரிந்து விட்டதா? அதனால் என்னை பற்றி தவறாக பேசிக்கொள்கிறார்களா? மனதுக்குள் கவலை வந்து விடுகிறது. இருந்தாலும் இந்த பாழும் மனசு கேட்க மாட்டேனெங்கிறதே? மீண்டும் அடுத்த ஆளின் மீது செல்கிறது.
கொஞ்சம் வயதானவர் தள்ளாடி தள்ளாடி வருகிறார். ஐயோ மனசுக்கு கஷ்டமாய் இருக்கிறது. இந்த மொட்டை வெயிலில் இவர் ஏன் இப்படி தள்ளாடி வரவேண்டும். சாதாரண ரப்பர் செருப்புத்தான் போட்டிருக்கிறார். அதுவும் இன்றோ நாளையோ வாழ்வை முடித்து கொள்ளலாம். மனது கொஞ்சம் பரிதாபப் பட்டாலும் அடுத்து போன பெண்ணின் நடையில் கவனம் போய் விட்டதால் இதை மறந்து விட்டேன். சட்டென என் கவனம் சற்று திரும்ப அந்த போலீஸ்கார்ர் என்னையே பார்த்துக்கொண்டு…..
ஐயோ கண்டு பிடித்து விட்டாரோ, நான் இப்படி போவோரை வருவோரை உற்றுப்பார்ப்பதை… மனது சுருக்கென்றது.
சொல்லி வைத்த்து மாதிரி பாதையை கடந்து அவர் என்னை நோக்கி வருகிறார்.
என் மனது துடிக்கிறது, இவர் வந்து நம்ம கிட்டே.. எண்ணுவதற்குள் அவர் அருகில் வந்து விட்டார்.
“இந்தாப்பா” இந்த ஷூ கொஞ்சம் பிரிஞ்சு வர்ற மாதிரி இருக்கு, ஒட்டி கொடு.
இரு ஷூவையும் கழட்டி கொடுத்து அப்பாடா என்று சற்று நிழலை தேடி சென்று அங்கிருந்த கடையின் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்.
நான் உற்று பார்ப்பதை விட்டு விட்டு இந்த போலீஸ்காரர் இதற்கு காசு தருவாரா? என்ற எண்ணத்தோடு ஷூவை ஒட்டும் வேலையில் இருக்கிறேன்.