கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதந்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,957 
 
 

(1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலாயுதத்தை இரண்டு மூன்று நாட்களாக வகுப்பிற் காணவில்லை. ஐந்தாம் தரத்திற் படிக்கிறான் அவன். வகுப்பிலே படுசுட்டி. அசாதாரண விவேகி. ஆனால் அவனது பரிதாபகரமான குடும்ப நிலையும் எனக்குத் தெரியும். அவனுடைய தந்தையார் ஒரு சாதாரணத் தொழிலாளி. அன்றாடக் கூலி. திடீரெனச் செத்துப் போய் விட்டார். தந்தையற்ற குடும்பத்தின் மூத்த மகன் தான் வேலாயுதம். அவனுக்கு இரண்டு தம்பிமாரும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள்.

தந்தை இறந்தபின்னர் தாய் மிகச் சிரமப்பட்டுத்தான் குழந்தைகளை வளர்க்கிறாள். கூலிக்கு நெல் குற்றி, பல வீடுகளில் மா இடித்துக் கொடுத்து, வெட்டுக் காலங்களிற் கதிர் பொறுக்கி, ஆற்றிலே கூனி இறால் வடித்து…… என்னென்னவெல்லாமோ செய்து தன்னையும் தன் நான்கு பிள்ளைகளையும் வளர்க்கிறாள் வேலாயுதத்தின் அம்மா .

”வேலாயுதம் வகுப்பிற் படுசுட்டியாக இருக்கிறான். இன்னும் சில காலம் கஸ்டப்பட்டு அவனைப் படிப்பித்தா யானால் அவன் படித்து உன்னையும் உன்மற்றப் பிள்ளை க்ளையும் காப்பாற்றுவான். பாலன் பஞ்சம் பத்து வருஷம் என்பார்கள்” என்று நான் அந்தத் தாய்க்கு ஆறுதல் கூறி னேன்.

வேலாயுதமும் தன் தந்தையை இழந்த சோகத்தை ஆற்றிக் கொண்டு பாடசாலைக்கு வந்து கொண்டிருக் கிறான். அவனுக்குத் தேவையான பாடசாலைப் புத்தகங் கள், அப்பியாசக் கொப்பிகள், பேனாபென்சில்-ஆகியவை களை நான் வாங்கிக் கொடுக்கிறேன். அவன் படிப்பையும் கவனித்துக் கொள்கிறேன்.

அவன் வீட்டிலே பாடசாலை விட்டுப் பாடங்களைச் செய்ய வசதியில்லை. அதனால் மதியம் பாடசாலை முடிந் ததும் அவன் பாடசாலையிலேயே தங்கினான்.பாடசாலை வளவுக்குட்தான் என் ‘குவாட்டர்ஸ்’ என் வீட்டிலே மதிய உணவை உண்டு, சற்றுநேரம் விளையாடி வீட்டுப் பாடங்கள் அத்தனையையும் செய்து முடித்துவிட்டு மாலையிற்தான் தன் வீட்டுக்குப் போவான். கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக இப்படித்தான் அவன் வாழ்கிறான். அவனுக்கு உதவி செய்து அவனைக் கரையேற்றி விட வேண்டும் என்பதில் என் அம்மாவுக்கும் மிக்க ஆசை. :

ஆனாற் கடந்த மூன்று நாட்களாக அவன் பாட சாலைக்கு வரவில்லை! நான் அவன் வகுப்பு மாணவர்களி டம் கேட்டேன்: ‘வேலாயுதம் எங்கே?”

“இனி அவன் பள்ளிக்கு வரமாட்டான் ஐயா, படத் தியேட்டரிலதான் ஒவ்வொரு நாளும் நிக்கான்” – அந்தக் கிராமத்திலே, அப்போதுதான் முதற் தடவை யாகப் ‘படமாளிகை’ ஒன்று வந்திருக்கிறது. ‘டூரிங் கொட்டகை’. அந்தப் படங்குப் படமாளிகையில், ஒவ்வொரு நாளும் ஊரே திரண்டு படம் பார்த்தது. பட்டினத்திற்குச் சென்று படம் பார்ப்பதாயின் அந்தக் கிராமத்து மக்கள் பத்து மைல்கள் பஸ்ஸிற் பயணிக்க வேண்டும். ஊரிலிருந்து மெயின்றோட்’ வரை ஒரு மைல் தூரம் கல்லிலும் கலட்டியிலுமாக நடக்க வேண்டும். இரவுக் காட்சி பார்த்துவிட்டு ஊருக்கு வரச் சில வேளை பஸ் கிடைக்காது. கிடைத்தாலும் மெயின்றோட்டில் இறங்கி ஒற்றையடிப் பாதையில் கல்லிலும் கலட்டியிலு மாக இரவில் நட க்க வேண்டும்.

அத்தனை சிரமங்களையும் அந்த ‘டூரிங் டாக்கீஸ்’ போக்கியது. ஆனாற் கிராமம் முழுதுமே திரண்டு இரவு வேளைகளில் ‘அந்த டூரிங் டாக்கீஸில்’ படம் பார்த்துக் களித்தது. அந்தக் கூட்டத்திலே வேலாயுதமும் சேர்ந்து கொண்டானா?

இருக்காது. அன்றாடச் சோற்றுக்கே அல்லாடும் அவனிடம் படம் பார்க்கப் பணம் ஏது?’ என்று எனக்குள் நானே சமாதானஞ் செய்து கொண்டாலும், ‘வேலாயுதம் ஏன் பாடசாலைக்கு வராமலிருக்கிறான்?’ என்ற வினா என் இதயத்திற் கொக்கியாய் வளைந்து கொழுவி இழுத் துத் துன்பந் தந்து கொண்டிருந்தது. பாடசாலை விட்ட தும் அவனைப் போய் விசாரிப்பது என்று என்னுட் தீர் மானித்துக் கொண்டேன்,

அன்று பாடசாலை மூடியாகி விட்டது. இரு நூறு மாணவர்களுள்ள அந்த ஆரம்பப் பாடசாலையில் இன்னும் இரண்டே இரண்டு ஆசிரியர்களோடு மாரடிப் பதில், மதியமானதும் நான் களைத்துப் போவேன். ஆகவே பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விடுவேன். ஆசிரியர் விடுதிக்கு முன்னால் நிற்கும் வேப்பமரம் குளிர் நிழலையும் சீதளக் காற்றையும் தாராளமாகத் தந்து கொண்டிருந்தது. அந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டே நித்திரையாகி விடுவேன். இந்தப் பாடசாலைக்கு வந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகல் நித்திரை எனக்குப் பழக்க மாகி விட்டது. ‘பகலிலே படுத்தா மூதேவி பிடிக்கும்’ என்று அம்மா அலட்டிக் கொள்வா. ஆனாற் பகல் தித்திரையில்லாவிட்டாற்தான் எனக்கு மூதேவி பிடித்த மாதிரி இருக்கும். ‘ அன்றும் பகல் நித்திரையின் பின்னர் எழுந்தபோது சாயந்தரம் நான்கு மணி ஆகிவிட்டது. ஆனாலும் வெளியே வெய்யில் சுட்டுப் பொசுக்கியது. கிராமத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற தென்னை மரங்கள்கூட தம் ஓலைகளை விகசித்து விரிக்காமற் கூம்பி நிற்பதாகப் பட்டது. தூரத்தே இன்னமும் கானல் நீர் நெளியும் தோற்றம்!

நான் கிணற்றடிக்குச் சென்று நான்கைந்து வாளித் தண்ணீரைத் தோளில் ஊற்றி, உடலைக் கழுவிக் கொண்டேன். அம்மா தந்த தேநீரைக் குடித்துவிட்டு உடையணிந்து கொண்டு வெளிக் கிளம்பினேன். நான் டூரிங் படக் கொட்டகையை அடைந்தபோது ஆறு மணி யாகி விட்டது!

முதலாங் காட்சி தொடங்குவதற்கு ஆயத்தமாகப் ‘படமாளிகை’யிலிருந்து பாட்டுக்கள் ஒலிபரப்பியில் முழங்கிக் கொண்டிருந்தன. அப்பாடல்களைக் கேட்பதற் கென்றே ஒரு ராகர் கூட்டம் வெளியே நின்று கொண்டி ருந்தது. அயற்கிராமங்களிலிருந்து படம் பார்ப்பதற்காக மாட்டு வண்டிகளிற் பலர் வந்து கொண்டிருந்தனர். கொட்டகையின் எதிரே இருந்த தென்னந்தோட்டத்தில் மாடுகள் அவிழ்த்துக் கட்டப்பட்டு வண்டிகளின் பக்கத்தே வைக்கோலை அசை போட்டுக் கொண்டு நின்றன. கொட்டகையின் முன் வாசலில் கடலை, கச்சான், வடை, முறுக்கு, தேன்குழல் என்று எதையெதையெல்லாமோ விற்பவர்களின் தூக்குத் தட்டிகள். அத்தட்டிகளின் ஓரத்தே நீண்ட கம்பத்திற் கட்டப்பட்டிருந்த மண்ணெண் ணெய் விளக்குகள். பெற்றோமக்ஸ் விளக்கொளியோடு கூடிய இரண்டு தேநீர் கடை என்ற ‘ஹொட்டல்கள் மூன்றாம் கடையில் கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சம்- அது கொட்டகை நிர்வாகத்தின் செல்லக் குழந்தை.’ மொத்தமாக அவ்விடம் திருவிழாக் கோலம் கொண்டிருந்தது.

ஊரிலே அம்மன் கோயில் வருடா வருடம், வைகாசி மாதத்தில் ஒரு திருவிழா நடக்கும்,

ஆனாற்படக் கொட்டகையின் முன்னால் நித்தியத் திருவிழா:

பாடசாலையிற் கல்வி பயிலும் என் மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும், நள்ளிரவிலே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல இருப்பவர்களும், உள்ளூர்க் குமரிகளும், அயற்கிராமத்தவர்கள் பலரும்… திருவிழாதான்!

அத்திருவிழாக் கூட்டத்தில் என் கண்கள் வேலாயுதத் தைத் தேடின. அவன் சக மாணவர்கள் பொய் சொன் னார்களோ

இல்லை அவர்கள் உண்மையைத்தான் சொன்னார் கள் என்பதை நிரூபிப்பதைப் போல அதே வேலாயுதம். அவன் தோளிலே ஒரு பெரிய பேசின்!

என்னைக் கண்டதும் அவன் தயங்கினான். ஓடி விடுவானோ எனப் பயந்த நான், சற்று விரைவாகச் சென்று அவனை நெருங்கினேன்.

அவன் தோளிலே வைத்திருந்த தகர பேசினுக்குள் உடைத்து வறுத்த கச்சான் பருப்புக் குவியல். குவியலின் ஓரத்தே சுற்றி வைக்கப்பட்ட கச்சான பருப்புக் கடதாசிச் சுருள்கள், கச்சான் பருப்புக் கும்பத்தில் காலூன்றி. பேசினின் உட்சரிவிற் தலைசாய்த்து, அணிவகுத்து நின் றன. பேசினின் கால்வாசிப் பாகம் தடித்த காட்போட் அட்டையினாற் தடுக்கப்பட்டு அப்பகுதியில் வெற்றிலைக் ‘கூறு’கள் இருந்தன. வகுப்பிலே முதல் மாணவனாக இருந்த வேலாயுதத்தை படக் கொட்டகைக்கு முன்னால் நான் வியாபாரியாகக் காண்கிறேன்!

அவனிடம் மிக்க ஆதுரத்துடன் கேட்கிறேன். “இனிப் பாடசாலைக்கு வரமாட்டியா வேலாயுதம்?”

“படிக்க விருப்பந்தான் ஐயா எனக்கு. ஆனாற் பாட் சாலைக்கு வர ஏலா”

“ஏன் ஏலாது. இந்த வியாபாரத்தை மாலையிற் தானே செய்கிறாய்? காலையில் வரலாந்தானே”

“வர முடியாதையா. நான் என்ர அம்மாவையும் தம்பிமாரையும், தங்கச்சியையும் காப்பாற்ற வேணும்”

“அதுதான் பகலில பள்ளிக்கு வரலாம் என்றுதானே சொல்றன்.”

“ஐயா, இந்தக் கச்சாங் கொட்டைச் சுருள் ஒன்று ரெண்டு ரூபா. வெத்திலைக் கூறு ஒன்று ஒரு ருபா. ஒரு நாளைக்கு இருபது இருபத்தைஞ்சு கச்சான் சுருளும், இருபது இருபத்தைஞ்சு வெத்திலைக்கூறும் தான் விக்க லாம். எழுபத்தைஞ்சு ரூபாக்கு வித்தாப் பத்துப் பன்னி ரெண்டு ரூபா லாபம் வரும். அது எங்க குடும்பத்துக்குக் காணாது. அதனால பகலில கரவல இழுக்கப் போறேன். அவங்க கறிக்கு மீன் தருவாங்க. அதில் அரைவாசிய வித்தாப் பத்துப் பன்னிரெண்டு ரூபா வரும். அம்மா மட்டும் உழைச்சிப் போதுமா? என்ர உழைப்போடயும் தான் எங்க குடும்பம் வாழணும். நான் பள்ளிக்கு வந்தா தான் மட்டும் மத்தியானம் உங்களிட்டச் சாப்பிடுவன். ஆனா அம்மாவும் தம்பிமாரும் பட்டினி கிடக்க வேணும்”

வேலாயுதத்தின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு –நான் அதிர்ந்து போனேன். என்னால் அவனுக்குப் பதில் சொல்லவே முடியவில்லை. சிலையாய் நின்றேன்.

“நான் வாறன் ஐயா. மன்னிச்சுக் கொள்ளுங்க” என்று வேலாயுதம் தன் வியாபாரத்தை நாடிப் போய் விட்டான். நானும் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டுப் பாடசாலையை நோக்கிப் புறப்பட்டேன்.

***

மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. கிராமத்து மக்களின் பணத்தை வாரிக்கொண்டு, அவர்களைச் சினிமாக் கனவு மாயையிற் தவிக்க விட்டு விட்டு, டூரிங் கொட்டகை வரைவிட்டுப் போய்விட்டது.

அன்று சனிக்கிழமை. பாடசாலை விடுமுறை. ‘படக்கொட்ட கைதான் போய்விட்டதே. வேலாயுதம் இப்போது என்ன செய்கிறானோ. பாவம்; இன்று அவனைப் போய்ப் பார்க்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டிருந்தபோது வேலாயுதம் வந்தான். அவன் தோளிலே ஒரு சாக்கு மூட்டை! ‘

அதிகாலையிலேயே சுமை தூக்கியதினாற் களைத் தவனாகக் காணப்பட்டான்! தோளிலிருந்த தன் சுமையை இறக்கிவிட்டு “இப்ப காய்கறி வியாபாரம் பண்றன் ஐயா. உங்களுக்குத் தேவையான காய்கறி எல்லாம் இனி என்னிட்டயே வாங்குங்க. இப்ப சாக்கில கத்தரிக்காய், பயித்தங்காய், வெண்டிக்காய், பச்ச கொச்சிக்காய் எல்லாம் இருக்கு” என்றான். நான் அமமாவைக் கூப்பிட்டேன்.

அம்மா வந்து அவனிடமிருந்த எல்லாக் காய்கறி களிலும் அரை அரை இறாத்தல் வாங்கிக்கொண்டு பேரம் பேசாமலேயே அவன் சொன்ன விலையைக் கொடுத்தாள்.

ஆறு மாதங்களாகத் தன்கையாலேயே அவனுக்கு மதிய உணவு கொடுத்த வேலாயுதத்திடம் அவளுக்கும் ஒரு பாசம்!

அம்மா போன பிறகு நான் வேலாயுதத்திடம் கேட்டேன்.

“எப்ப இந்த யாபாரத்தைத் தொடங்கினாய்?”

“கொட்டகை போகப் போகுது என்று தெரிஞ்ச உடனே பிறகு என்ன செய்றது என்று தீர்மானிச்சிற்றன். கொட்டகை பிரிக்கிற அன்று, பின்னேரமே கங்கைக் கரைத் தோட்டங்களுக்குப் போய் காய்கறி வாங்கினேன். வாங்கினதைச் சுமந்திட்டு வீட்ட வரக்குள்ள இருட்டுப் பட்டிற்று. அடுத்த நாட்காலையிலேயே காய்கறிச் சாக்கைத் தோளிலே சுமந்து ஊரெல்லாம் திரிந்து வீட்டுக்கு வீடு கொண்டு போய் விக்கிறன். இப்ப ரெண்டு நாளா இந்தப் பிழைப்புத்தான்”

“அது சரி இதில எவ்வளவு லாபம் கிடைக்கும்”

“விக்கிறதைப் பொறுத்து ஐயா. ஒரு றாத்தலுக்கு ஒரு ரூபா எண்டான கெடைக்கும். ஐம்பது றாத்தல் வித்தா ஐம்பது ரூபா. ஆனா ஐம்பதுறாத்தல் விக்கேலா. இருபத்தைஞ்சு முப்பது விக்கலாம்”

“அடுத்த வாரத்தில மூணு கலியாண வீடு இருக்கு. ஒரு வீட்டில முப்பது நாப்பது கிலோ வேணுமாம். தூறு, நூத்தைம்பது வரும். ஆனா மூணு கட்டைத் தூரத்தில இருக்குற கங்கைத் தோட்டங்களிலிருந்து சுமந்துவாறது தான் பொறுப்பு, என்ன செய்றது? சுமக்கத்தான் வேணும்”

சின்னஞ்சிறு வயதிலே தன் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய அவனது பொறுப்புணர்ச்சியைக் கண்டு என் கண்கள் பனித்தன. வேலாயுதம் தன் காய்கறி மூட்டையைச் சுமந்து கொண்டு ‘மரக்கறி மரக்கறி’ என்று கூவிக் கொண்டே தெருவிலிறங்கி நடந்தான்.

மேலும் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. கீறியடித்த சோழகக் காற்று அசமந்து ஓய்ந்து, மதியம் திரும்புகை யில் கொண்டலாய், வாடைக்காற்றாய் அசைந்தது. இரண்டு நாட்களாக வேலாயுதத்தைக் காணவில்லை. அம்மாவும் அவனை விசாரித்தாள். அப்போது தான் வேலாயுதம் வந்தான். அவன் தோளிலே மரவள்ளிக் கிழங்குச் சாக்கு!

“என்ன வேலாயுதம், காய்கறியாபாரத்தை விட்டிற்றியா?”

“ஓம் ஐயா. விட்டிற்றன். மழை பெஞ்சதால தோட்டத்துக்குப் போற வழியெல்லாம் ஒரே சேறும் சகதியும். மழைக்காலத்தில தோட்டக்காரன்களும் தோட்டத்தை விட்டிற்று ஊருக்கு வந்திடுவாங்க. இப்ப மழை விழுந்ததும் நட்டிருந்த மரவள்ளி எல்லாத்தையும் பிடுங்கிறாங்க. அதில நாப்பது கிலோ வாங்கி வந்தன்.. சுமக்கிறது கஷ்டம்.”

“அப்படியா?” என்று கேட்டு மேலே பேசமுடியாமல் நான் திகைத்தபோது அம்மா ஒரு இறாத்தல் மரவள்ளிக் கிழற்கு வாங்கிக் கொண்டாள்,

“தோட்டம் முடிஞ்சு தோட்டக்காரன் எல்லாம் ஊருக்கு வந்தபிறகு என்ன செய்வாய்?”

”என்னத்த எண்டான செய்யத்தானே வேணும். இல்லாட்டா அம்மாவையும் சகோதரங்களையும் காப் பாத்த முடியுமா? என்னட்ட ரெண்டு காலுங்கையும் இருக்கையா” என்ற வேலாயுதம் கிழங்குச் சாக்கைத் தாக்கிக் கொண்டு தெருவிலிறங்கி நடந்தான். பென்னம் பெரிய சுமையைச் சுமக்கும் அந்தச் சின்னஞ்சிறிய வீரன் தெருவிலே நடப்பதை நான் பார்த்துக் கொண்டேயிருந் தேன்.

மேலும் இரண்டு வாரங்கள் சாயந்தர வேளைகளில் மின்னலும் முழக்கமும் மழையுமாக ஓடிவிட்டன. ஒரு நாள் வேலாயுதம் கையில் ஒரு பாலை மீனைத் தூக்கிக்கொண்டு வந்தான். இரண்டு இறாத்தல் இருக் கும். பெரிய மீன்.

அதனை என்னிடம் நீட்டி “இண்டைக்கு எங்கட. பாடு பிழையில்லை ஐயா. என் பங்குக்கு மட்டும் இருநூறு ரூபா கெடைச்சுது. அந்தச் சந்தோஷத்தில உங்களுக்கு இந்த மீனைக் கொண்டு வந்தன். எடுத்துக் கொள்ளுங்க ஐயா.” ”அப்ப, இப்ப மீனுக்குத்தான் போறியா?”

“ஓம் ஐயா. கடற்தொழில் தான். எல்லாந் தொழில் தானே. இந்தத் தொழிலில தல்லாக் காசு வருது”

“அப்படியா? எப்படியாவது நீ நல்லா இருக்கணும். ஆனா நீ படிக்கல்லியே என்று எனக்குத் துக்கந்தான்.”

“எனக்குந்தான் ஐயா. ஆனாப் படிக்க விரும்பு பவனும், படிக்கக் கூடியவனும் இந்த நாட்டில படிக் கேலா. காசுள்ளவன் தான் படிக்கலாம்.”

“ஓமோம். அதெண்டா உண்மைதான்” என்ற போது அம்மா மீனுக்கு என்ன விலை” என்றுகேட்டான்.

“காசு வேணாம் அம்மா இதுக்கு. உங்க கையால எத்தனை நாள் எனக்குச் சோறு போட்டிருப்பீங்க. அதுக்கெல்லாம் நான் நன்றி செய்ய வேணாமா? என்ற வேலாயுதம் “நான் வாறன் ஐயா” என்று விட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான்.

அதன் பின்னர் இடைக்கிடை அவன் தம்பி எனக்கு மீன் கொண்டு வந்து தந்தான். ஒருநாள் மீனை வெட்டிக் கொண்டிருக்கையில் அம்மா சொன்னாள். ”இது வெடிப் போட்ட மீன் போல இருக்கு மகன்.’

எனக்குச் சுரீர் என்றது. ‘வேலாயுதம் ‘டைனமற்’ போட்டு மீன் பிடிக்கிறனா? அது அபாயமான தொழி லாச்சே. இந்த ஊரிலே கால் கை இல்லாமல் இருப்பவர் களெல்லாம் டைனமற்’ போட்டு மீன் பிடித்தவர்கள் தானாம். எத்தனையோ பேர் செத்தும் இருக்கிறார் களாம். அத்தோட வெடிப்போடக்குள்ள பிடிபட்டால் மறியலுக்கும் போக வேணும். அவனை இந்தத் தொழில் செய்யாமற் புத்தி சொல்லித் தடுக்கவேண்டும். சனிக் கிழமை வரட்டும்’ எனத் தீர்மானித்துக் கொண்டேன். – ஆனால் வெள்ளிக்கிழமையே கேள்விப்பட்டேன். ‘வேலாயுதம் வெடிப் போடுகையிற் செத்துப் போனானாம்.’

நான் விழுந்தடித்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரையிலே அடம்பன் கொடிகளின் மேல் வேலாயுதத்தின் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. வலக்கை முழங்கையோடு இல்லை. மார்பிலே தீக்காயம். அவனு டைய தாயும் சகோதரங்களும், ஊரவர்களும் அவன் சடலத்தை வளைத்து நின்று அழுது கொண்டிருந்தார்கள். ‘கொறணர்’ வந்து விசாரணை நடத்த வேண்டுமாம்!

வேலாயுதத்தைப் பிணமாகக் கண்ட நானும் கண்ணீர் விட்டேன். ஆம்; கண்ணீர் தான் விட்டேன். தன் தாயையும், சகோதரங்களையும் வாழவைக்கும் சுமையிற் தன் உயிரையே பலியாக்கிவிட்ட அந்தச் சிறிய வீரனுக்கு இந்த நாட்டிற் கோயிலா கட்டிக் கும்பிடப் போகிறோம்? நினைவுச் சிலையா வைக்கப் போகிறோம்?

ஆகவே கண்ணீர் தான் விட்டேன். கண்ணீர்…

– சுதந்திரன் 1957.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *