கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 15,138 
 
 

கூழுப் பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியாயில்லை. விரட்டி விரட்டி பார்த்தும் இந்த கிறுக்கு பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில் வந்து படுத்துக் கொள்கிறான். நிற்கவே பயப்பட வேண்டும். அந்த இடத்தில் போய் இவன் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்கிறான்.

ஊருக்கு வெளியே அத்துவானமாய் பரவிக்கிடக்கிறது அந்த பொட்டல். நடுவில் ஆகாயத்திற்கு வளர்ந்த ஒற்றை அரசமரம். அதன் கீழ் ஆயுதபாணியாய் முனியசாமி சிலையும் அருகில் கடல் போல் கிடக்கும் ஊருணியின் நீரும் யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.

அந்த பெரிய பொட்டலுக்கு யாரும் ‘வேறு’ காரியங்களுக்கு சென்றதில்லை. எதற்காகவும் யாரும் அந்த அரசமரத்தின் ஒரு கொழுந்தைக்கூட பறித்ததில்லை. சாமி கண்ணெதிரே உள்ள பத்தடி நிலத்தில் யார் காலும் பட்டதில்லை. கைதான் படும்; எடுத்து நெற்றியில் பூச.

இந்த ஊரும் சுற்று வட்டாரங்களும் முனியசாமி மேல் எவ்வளவோ பயமும் பக்தியுமாயிருந்து வருவது இந்த கிறுக்கு பிச்சைக்காரனுக்கு புரிய மாட்டேனென்கிறது. சட்டை வேட்டியெல்லாம் கிழிந்து சீலைப்பேன் பத்திய பயல் பயமில்லாமல் அங்கே போய்ப் படுப்பதும் பொட்டலில் அங்கிங்கென்றில்லாமல் எங்கும் போவதும் வருவதும் நடக்ககூடியதில்லை. எல்லாம் இந்த இளவட்டபயல்கள் சேர்ந்து கொடுத்த இடம்.

ஒரு மாதத்திற்கு முன் எங்கேயோ கிடந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் கிறுக்கன். வெயில் வந்து வெகு நேரத்திற்கு பின் கோயிலடியிலிருந்து எழுந்து ஊருக்கு வருவான். அலுமினிய தட்டெடுத்து வீடு வீடாய் கஞ்சி கேட்பான்.

‘கஞ்சி’ என்று ஒரு சத்தம் போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து விடுவான். கஞ்சி ஊற்ற வேண்டும். அப்புறம்தான் எழுந்திருப்பான். ரொம்ப வீடுகளில் அந்நேரத்திற்கு கஞ்சி இருக்காது. நீராரத் தண்ணீரை சொர சொரவென்று ஊற்றி பொம்பிளைகள் அவனை ஏமாற்றுவார்கள். தட்டில் என்ன விழுந்தது என்பதை பார்த்தறியத் தெரியாது. தட்டில் என்னமாவது விழுந்ததும் எழுந்து அடுத்த வீட்டிற்கு போவான். ‘கஞ்சி’ என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் உட்கார்ந்து விடுவான்.

கையில் என்ன கொடுத்தாலும் வாங்குவதில்லை. எல்லாம் தட்டில்தான் போட வேண்டும். ஒரு நாள் கந்துப்பிள்ளை வீட்டிற்கு டவுனிலிருந்து விருந்தாளிகள் வந்ததால் இட்லி சுட்டுக் கொண்டிருந்த வேளை; கிறுக்கன் ‘கஞ்சி’ என்று வந்து உட்கார்ந்துவிட்டான். கஞ்சிப்பிள்ளை சம்சாரம் இருந்தால் கொடுக்ககூடிய பொம்பிளை. ரெண்டு இட்லியை சட்னியில் பெரட்டி எடுத்து வந்தது. கிறுக்கன் முன்னாலிருந்த தட்டில் அனேக பொம்பிளைகள் நிறைய நீராரத் தண்ணீரை ஊற்றி இருந்தார்கள் போல; தட்டில் தண்ணீர் அலை அடித்தது. கந்துப்பிள்ளை சம்சாரம் ரெண்டு இட்லிகளையும் கிறுக்கன் முகத்திற்கு நேரே நீட்டியது. கிறுக்கன் கையை நீட்டவில்லை; தட்டைக் காண்பித்தான். கந்துப்பிள்ளை சம்சாரத்திற்கு சங்கடமாய் போய்விட்டது. ”கையிலே வாங்கிக்க. பொம்பிளைகளுக்கு ஒம் மேலெ எரக்கம் பொத்துகிட்டு வந்து ஊருணித் தண்ணிய ஊத்திவிட்டிருக்காக” என்றது.

மறுபடியும் கிறுக்கன் தட்டை காண்பித்து விட்டு பேசாமல் உட்கார்ந்து விட்டான். கந்துப்பிள்ளை சம்சாரம் ஒன்றும் தோன்றாமல் கொண்டு வந்த ரெண்டு இட்லிகளையும் தட்டு தண்ணீருக்குள் போட்டுவிட்டு போனது. சட்னியில் ஒட்டியிருந்த கடுகும் இட்லிகளும் நீராரத் தண்ணீரில் மிதந்தன.

தட்டு நிறைந்ததும் கோயிலுக்கு நடக்கையில் இளவட்டக்கூட்டம் கிறுக்கனை வழிமறிக்கும். ஒரு ஆள் பீடி கொடுக்கும். கிறுக்கன் கையால் வாங்க மாட்டான். தட்டில்தான் போட வேண்டும். நீராரத் தண்ணீரில் பீடி அசிங்கமாய் மிதக்கும். எடுத்து துடைத்து காதில் சொருகிக் கொள்வான். சமயத்தில் காய வைத்து மடியிலிருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைப்பான். ஒரு நாள் மடியிலிருந்த தீப்பெட்டியை எடுத்தான். குச்சியில்லை. இளவட்டங்களைப் பார்த்தான். ஒரு ஆள் தீப்பெட்டியை அவன் கைக்கு நேரே நீட்டி ‘இதையாச்சுங் கையிலே வாங்கிக்க’ என்றான்.

கிறுக்கன் கையை நீட்டவில்லை. தட்டை நீட்டினான். தீப்பெட்டி நீராரத் தண்ணீரில் மிதந்தது. சட்டென்று எடுத்து ரெண்டு ஓரங்களையும் தேய்த்து விட்டுப் பற்ற வைத்தான். இளவட்டங்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் கிறுக்கனின் கை நீளவில்லை. தட்டுதான் நீண்டது.

கிறுக்கனுக்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். பேச்சு கொஞ்சம்தான். அதுவும் முன் பின்னாய் குழறிக் குழறி வரும். கிட்ட வந்தால் ஏழூரு நாத்தம் நாறும். ஒரு நாள் இளவட்டங்களும் ஊர் ஆள்களுமாய் சேர்ந்து தெகத்தி கொண்டு போய் ஊருணிக்குள் முங்க விட்டார்கள். ஒரு முங்கோடு தண்ணீரிலிருந்து வெளியில் வந்து தரையில் உட்கார்ந்தான். கிழிந்த சட்டையையும் வேட்டியையும் களைய சொல்லி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அப்புறம் யாரும் அவனை குளிக்க வைக்கவில்லை..

இருட்டு நேரத்தில் கோயில் பக்கமாய் நடந்து செல்ல எளகின மனசுக்காரன் எவனாலும் முடியாது. இருட்டில் முனி நடமாடத் தொடங்கி விடும். யார் எதிர்பட்டாலும் திரும்ப நின்று பிடரியில் அடிக்கும். ரத்தம் ரத்தமாய் கக்கி சாவன். பொம்பிளைகள் ராத்திரிகளில் உட்கார்ந்து ஊர்க்கதை உலகக்கதைகளெல்லாம் பேசுவார்கள்; ஒரு பேச்சாவது முனியசாமி மகிமையைப் பற்றி பேசாமல் மகாநாடுகள் முடிவதில்லை. வாய்பார்க்க வரும் நண்டு சுண்டுகளுக்கு அவைகளைக் கேட்டு நெஞ்சு குலை நடுங்கும்.

ஒரு சமயம் பண்ணந்தையிலிருந்து ஒரு நடு வயது ஆள் மொட்டைவண்டி நிறைய நெல்லை ஏற்றிக் கொண்டு இந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தான். கோயில் பாதையில் முனி நடமாட்டம் இருக்கும் என்பதை தெரியாத ஆள் அண்டை அசலில் உண்டா? சாவடிப் பாதையில் வண்டியை ஓட்டிக் கொண்டு பொயிருக்கலாம். சுத்து பாதையில் போவானேன் என்று கோயில் பாதையில் ஓட்டிக் கொண்டு வந்தான். கொயில் நெருங்க அருவாய் ஏதேதோ தெரியவும் ஆளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்து விட்டது. வெரட்டிக் கொண்டு ஓடிவிடலாம் என்று மாட்டு வாலை முறுக்கியிருக்கிறான். நாலு கால் பாய்ச்சலில் வண்டி வந்து கொண்டிருக்கிறது.

ஒரு சொடக்கு போடும் நேரத்தில் கோயிலை தாண்டி விடலாம். ஆனால் திடீரென்று ரெண்டு மாடுகளும் எதையோ பார்த்து மிரண்டு திமிறிப் பூட்டாங் கயிற்றை அறுத்துக் கொண்டு ஊருணிப் பக்கம் ஓடின. வண்டிக்காரன் ஏறிட்டு பார்த்தான். மேக்கால் அந்தரத்தில் நிற்கிறது. வண்டியில்ருந்து இறங்கியிருக்கிறான், என்ன பார்த்தானோ ஏது பார்த்தானோ முழிச்சது முழிச்சபடி வாயிலிருந்து கட்டி கட்டியாய் ரத்தம் கக்கி கிடந்தான்.

கீழ் வீட்டு வள்ளி அம்மாச்சி கண்ணால் பார்த்தது இது. ஒரு நாள் காளங்கரைப்பக்கம் வெறகு பொறக்கப் போயிட்டு வரும்போது பொழுது அடையத் தொடங்கிவிட்டது. ‘இன்னுந்தான் இருட்டலியே பொழிது மசமசவென்ற நேரந்தானே; கோயில் பாதையிலேயே போய் விடலாம்’ என்று ஓட்டமும் நடையுமாய் தலையில் விறகுக் கட்டோடு வந்து கொண்டிருந்தாராம். கோயிலுக்கு நேரா வரும்போது ‘கறுப்பா’ என்னவோ ஒன்னு வழியை மறைத்திருக்கிறது. இது முனியய்யாதன் என்று வள்ளி அம்மாச்சிக்கு அனுமானம். கும்பிடக்கூடக் கை வரவில்லை. கும்பிட்டிருந்தால் ஒரு வெளை அது தன் பாதையில் பொயிருக்கும்.

கும்பிடுவோன்று கையைத் தூக்கினால் கை இரும்பாய் கனக்கிறது. எதிரே அது மலை போல் நிற்கிறது. ஒரு பாக்கு கடிக்கிற நேரம்தான். சடாலென்று தலை குப்புற விழுந்து விட்டது அம்மாச்சி. கோயில் காரியமாய் வந்த கூழுப்பிள்ளைதான் தூக்கி நிறுத்தி விபூதி பூசிக் கூட்டி வந்தார். பத்து நாள் படுக்கையில் கிடந்து சௌகரியம் ஆனது.

சுருள் காற்று எப்போதாவது சுழற்றி சுழற்றி அடிக்கும். புள்ளைகளை அந்தப் பக்கம் போகக் கூடாதென்று பொம்பிளைகள் பிடித்து வீட்டிற்குள் நிறுத்தி விடுவார்கள். முனியய்யா வேடைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறார் என்று மெதுவான் குரலில் சொல்வார்கள். மழை சோ வென்று கொட்டும் முனியய்யா எச்சி துப்புகிறார் என்பார்கள் பொம்பிளைகள்.

நடுச்சாமத்தில் தெரு தெருவாய் நாய்கள் ஓங்கி குலைக்கும். திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். தூக்கி வாரிப்போட்டு எழுந்து பார்ப்பார்கள். ஆள் நடமாட்டம் இருக்காது முனியய்யாதான் காவல் சுற்று வருகிறார் என்று சொல்லிக் கொண்டு படுப்பார்கள்.சின்னஞ் சிறிசுகள் இவைகளைக் கேட்டுக் கேட்டு உடம்பெல்லாம் பயத்தோடு தூங்குவார்கள். அநேகமாக பிள்ளைகளின் சொப்பனங்களில் முனியய்யா வானத்திற்கும் பூமிக்கும் கன்னங்கரேலென்று பெரிய வாய் திறந்து பெரிய பெரிய அரிவாள்களுடன் வருவார். உச்சமான நேரங்களில் முழித்துக் கொள்வார்கள். வெளியில் போய் ஒதுங்கிவிட்டு வர அம்மாக்களை எழுப்பி அழுவார்கள்.

அப்படிப்பட்ட துடியான தெய்வம் கூழுப்பிள்ளையின் குடும்பம் ஒன்றிற்குதான் கட்டுப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். கூழுப்பிள்ளையின் வம்சப் பெயரே முனியசாமிதான். பரம்பரை பரம்பரையாக அவர்களுக்குப் புஞ்செய் அதிகம். ஆய்க்குடிக் காட்டில் பாதி அவர்களுக்குதான். கேப்பைதான் காடு முழுவதிலும் கண்டு முதலாகும். அநேகமாக இரண்டு வேளையாவது அவர்கள் வீட்டில் கூழ்தான். இது பழக்கத்தில் ஆகிக் கல்யாண வீடுகளில் வடைபாயாசத்தோடு சாப்பிட்டு வந்தால் கூட வீட்டிற்கு வந்ததும் ஒரு கட்டி கூழை கரைத்துக் குடித்தால்தான் அந்த வீட்டு ஆள்களுக்கு வயிறு நிறைந்த்தது போல் இருக்கும். ஊரிலேயே அவர்கள் வீட்டு ஆள்களுக்கு மட்டும் நெஞ்சுக்குக் கீழே பானையை சாத்தி வைத்தது போல் வயிறு இருக்கும். வெகு ஆள்கள் இந்த அதிசயத்தை பார்த்து விட்டுதான் கூழுப்பிள்ளை வீடு என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் யார் என்ன பெயர் வைத்து கூப்பிட்டாலும் அவர் பத்திரங்களில் முனியசாமி என்றுதான் எழுத்துக் கூட்டிக் கையெழுத்துப் போடுவார்.

முனியசாமியை இங்கே கொண்டு வந்ததே அவர்கள் வீடுதான். கூழுப்பிள்ளையின் தாத்தனுக்கு தாத்தனுக்கு தாத்தன் வேட்டையில் மிச்சமான பிரியம் உள்ளவராம். வேட்டையாடிக் கொண்டே போனவர் காட்டுக்குள் பாதை மாறி ஆப்பனூர்க் காட்டுக்கே போய் விட்டாராம். இருட்டில் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். நெருக்கமான காட்டில் வழி புலப்படவில்லை. பசியும் களைப்புமாய் நட்ட நடுக்காட்டில் விழுந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். பளபள வென்று பொழுது விடியும் நேரத்தில் யாரோ தன்னை பெயர் சொல்லி கூப்பிட்டது பொல் தோன்றி எழுந்திருந்தார். அப்போதுதான் முனியய்யா அவர் கண்ணுக்கு தென்பட்டிருக்கிறார்.

மனுசன் மாதிரியும் இருந்திருக்கிறது, சாமி மாதிரியும் இருந்திருக்கிறது. கண்ணை கசக்கி விட்டு தன் கையிலேயே கிள்ளி பார்த்திருக்கிறார். உத்து பார்த்ததில் வந்த உருவத்தின் கால் பூமியில் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார். ‘என்ன பார்க்கிறே, ஏம் பேரு முனியய்யா. காட்டில் அலைஞ்சு அலைஞ்சு சோர்ந்து வருது. இனி எனக்குன்னு ஒரு எடமும் சனமும் வேண்டும். என்னை ஒரு பச்சைப் பானையில் அடைச்சு ஒன் ஊருக்குக் கொண்டு போ. ஒன் ஊருக்கு ஒரு கொறையும் வராமப் பாத்துகிறேன்’னு சொன்னாதாம்.

பச்சைப் பானையை தலையில் வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டேயிருந்தாராம் அந்த ஆள். பொழுது சாய்கிற நேரம் ஊருணிக்கு நேரே இந்த பொட்டலுக்கு வரும்போது பானைக்குள்ளிருந்த முனியசாமி, ‘எனக்கு தண்ணி தவிக்குது, எறக்கி விடு’ என்றதாம். ஏறக்கி வைத்துவிட்டு ஊருணிக்குள் போய் துண்டை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்து பானைக்குள் பிழிந்து ஊற்றினாராம். தண்ணீரை குடித்ததும் முனியசாமி கேட்டதாம், ‘அந்தா தெரியுதே அதுதானே ஒன் ஊர்?’ ஆமா என்றாரம் இந்த ஆள்.

அப்போது முனியசாமி சொன்னதாம், “என்னை இங்கேயே விட்டு விடு, என் கோலத்தில் எனக்கு ஒரு சிலை வை என் சிறைக்கு பின்னால் ஒரு அரசமறக் கன்றை ஊன்றி வை. அந்த அரசமரம்தான் எனக்குக் குடையும் கோபுரமும். பின்னால் என் மகிமை தெரிந்து யாரும் எனக்கு கூரை போட்டுக் கோபுரம் கட்டிப் பிரகாரம் கூட்ட வேண்டாம். நான் நாடு காடெல்லாம் சுற்றி திரிய வேண்டும். எனக்கு உண்டான பூசை காரியங்களுக்கு நீயும் உன் வம்சமும்தான் பொறுப்பு ஒனக்கும் உன் வம்சத்திற்கும் இனி ஒரு குறையும் இல்லை”

அதன்படி நட்டு வளர்த்ததுதான் அந்தப் பெரிய மரம்; வைத்துக் கும்பிடுவதுதான் அந்த பெரிய சிலை.

முனியய்யாவின் மகிமை வர வர அக்கம் பக்கமெல்லாம் பரவி தூர தூரத்து நகரங்களிலெல்லாம் ஆட்கள் வந்து வழிபட ஆரம்பித்தார்கள். இருபத்தாறு கிராமங்கள் கூடி முனியய்யாவிற்கு எருதுகட்டு எடுத்தார்கள். மதுக்குடம் தூக்கினார்கள். பொங்கல் வைப்பதும் ஆடு வெட்டுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அமளிப்பட்டு வந்தது. கூழுப்பிள்ளை வம்சத்திற்கும் ஊருக்குள் இதனால் ஒரு மரியாதை இருந்து வந்தது.

ஆனால் கொஞ்சம் காலமாகவே நிலைமைகள் ஒழுங்காயில்லை. ஊருக்குள் பஸ் வந்துவிட்டது. பிள்ளைகள் டவுனுக்கு போய்ப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். படித்த வெடலைகள் முன்பெல்லாம் மதுரை மெட்ராஸ் என்று வேலைக்கு போய்க் கொண்டிருந்தார்கள். இப்போ படிக்கிறவர்களுக்கு எந்த ஊர்ப்பக்கமும் வேலை கிடைக்கவில்லையாம். வேலை கிடைக்கவில்லையென்றால் என்ன? பேசாமல் அவன் அப்பன் பாட்டன் போல இருந்த்ததுபோல் இருந்து பேசியது போல பேசி, அனுபவித்தது போல அனுபவித்து சாக வேண்டியதுதானே. இப்போது திரிகிற பயல்களுக்கு உடம்பெல்லாம் கிருத்துவம். எல்லா சாதிக்காரப்பயல்களும் சேர்ந்து சங்கம் வைக்கிறார்களாம்.

தொலையட்டும். இந்த பயல்கள் சிகரெட் குடிக்கவும் பீடி குடிக்கவும் இந்த ஊரில் ஒதுக்கமாய் ஒரு இடம் கூடவா இல்லாமல் போய் விட்டது? முனியய்யா கோயில் முன்னால் அரசமரத்தடிக் காத்தில் பீடி குடித்தால்தான் பய புள்ளைகளுக்கு சொர்க்கம் தெரியிறதாம்.

கோயில் அரசமரத்தின் அடிமண், மழை அரிப்பில் பெயர்ந்து கிடந்ததைப் பார்க்க கூழுப்பிள்ளை ஒரு நாள் மத்தியானம் கோயில் பக்கம் போனார். இந்த வெட்டி சோற்றுக் கூட்டம் மர நிழலில் ராஜாக்கள் மாதிரி உட்கார்ந்திருந்தது. ஒரு கையில் பீடியென்னா மறுகையில் புஸ்தகமென்ன. உலகத்தையையே பிடிக்க போவது போல சவடால் பேச்சென்ன. பக்கத்தில் தட்டை மட்டுமே நீட்டுவேன்கிற கிறுக்கன் வேறு சீலைப்பேன் பத்தி பொய்க் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறான். கூழுப்பிள்ளைக்கு கோபம் வந்தால் சாமி வந்துவிடும். “நாத்தப்பயல்களா, இதை என்னசாமின்னு நெனைச்சு இங்கே ஒக்காந்து காலித்தனம் பண்றீங்க? அடேய்… அடேய்.. இது துடியான தெய்வம்டா.. கண் அவிஞ்சு போகும்டா ஓடுங்கடா..” என்றார். பட்டாளம் நகரவில்லை. பீடிகளை மறைத்துக் கொண்டு மரியாதையாய் உட்கார்ந்து அவரைப் பார்த்து சிரித்தது.

சிரிக்க சிரிக்க கூழுப்பிள்ளை கொப்பளித்துப் போனார், ‘முனியய்யாவையாடா எளப்பவா நெனைக்கிறீய.. மரியாதையாச் சொல்றேன் ஓடிப்பொயிருங்க திங்க வாய்க்கு இனிமே சோறு கிடைக்காது’.

பாண்டியாப்பிள்ளை மகன் பதில் சொல்றான். “எங்களுக்கு சோறு கிடைகாம போறாதிருக்கட்டும். ஒங்களுக்கு ரொம்ப வேண்டியவர்தானே முனியய்யா. ஏன் இன்னும் கூழாக் குடிக்கிறீய. ? ஒங்களுக்கு சோறு தரவே ஏழு தலைமொறைக்கும் இதாலெ முடியலெ. எங்க சோத்தைத்தானா பறிச்சிரும். ஆய்க்குடியிலே மழை பெய்ஞ்சிருக்கு. ஏரைக் கட்டிகிட்டு உழுகப்போங்க மாமா. அப்பத்தான் கூழாவது ஒழுங்காகக் கிடைக்கும்.”

கூழுப்பிள்ளைக்கு உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது. பயல்களை விட்டு விட்டு பக்கத்தில் குறட்டை விட்டுத் தூங்கி கொண்டிருந்த கிறுக்கனைப் பார்த்தார். பல்லை நற நற வெனக் கடித்துக் கொண்டே ஒரு சுள்ளியை எடுத்து அதனை இன்ன இடமென்று பாராமல் விளாச ஆரம்பித்தார்.

இப்போதும் அந்த பாண்டியாப்பிள்ளை மகன் தான் வந்து கையை பிடித்துக் கொள்கிறான். பெரிய மனுசன் மாதிரி அழுத்தமாய்ச் சொன்னான். “அனாவசியமாய் அசலூர்க்காரனை அடிக்காதீய” பிடித்த கையை உதறிவிட்டுக் கிறுக்கனின் அழுக்கு மூட்டை தகர டப்பா எல்லாவற்றையும் எடுத்து கூழுப்பிள்ளை மூலைக்கொன்றாயெறிந்தார். ‘இந்த கிறுக்கன் இனிமேல் இங்கெ வந்து படுத்தால் ஒண்ணு முனியய்யா அடிக்கோணும், இல்லெ நான் இவனை கொலை பண்ணணும்’ என சொல்லிக் கொண்டே கை காலை வேகம் வேகமாய் உதறிக் கொண்டு நடந்தார். பயல்களோடு நேரடியாக இதற்கு மேல் மோதினாள் ஊருக்குள் பிரச்சனைகள் வந்துவிடும் என்று கிறுக்கன் மேல் எல்லாவற்றையும் காட்டி விட்டுப் போனார்.

தூக்கம் கலைந்து போய், கிறுக்கன் அழுக்கு மூட்டையையும் தகர டப்பாவையும் அலுமினியத் தட்டையையும் எடுத்து வந்து தலை மாட்டில் வைத்து மறுபடி தூங்க ஆரம்பித்தான். அதுவரை நடந்ததை அப்போதே ஒரு கொட்டாவி விட்டு முடித்துக் குறட்டையும் விட்டபோது ‘வெட்டி சோறுகள்’ ரஸித்து சிரித்துவிட்டு கிளம்பின.

மறு மறு நாட்களில் வழக்கம்போல் கிறுக்கன் ‘கஞ்சீ’ என்று வீட்டு வாசல்களுக்கு வருவதும். மற்றநேரமெல்லாம் முனியய்யா கோயில் அரசமரத்தடியில் தூங்குவதும் நிற்கவில்லை. இளவட்டங்கள் அவனிடம் கூழுப்பிள்ளை பற்றி வேடிக்கையாய் ஏதாவது கேட்டால் சம்பந்தமில்லாம பேசிவிட்டு ஓடிவிடுகிறான். கூழுப்பிள்ளை மட்டும் கையில் கம்போடு அவனை விரட்டி விரட்டிப் பார்த்தார். ஆனால் அவன் வேறு இடத்தில் படுப்பதாக இல்லை; வேறு ஊருக்கு போவதாக இல்லை.

ஒரு நாள் சாயங்காலம் வடக்கு பக்கமாயிருந்து காற்று பலமாய் ஊருக்குள் வீச ஆரம்பித்தது. முதலில் யாருக்கும் அது பெரிதாய்த் தொன்றவில்லை. நேரம் ஆக ஆக காற்று உக்கிரம் அடைந்தது. பிரி போட்டுக் கட்டிய வைக்கோல் படப்புகளும் கூரைகளிலிருந்து ஓலைகளும் லேசாய்ப் பறக்கப் பார்த்தன. வைக்கோல் படப்புக்கு மேல் காற்றுக்கு அணைவாய் வாசல் கல்லைத் தூக்கி ஏற்றிக் கொண்டிருந்தார் கூழுப்பிள்ளை.

கீரந்தையிலிருந்து கோயில் பாதை வழியாய்க் காற்றில் அல்லாடி வந்த ஒரு ஆள் தலைவிரி கோலமாய் அந்தேரம் கத்திக் கொண்டு தெருவில் போனார். “காத்துக்கு கோயில் அரசமரம் வேரோடு ஆடுது. கீழே அந்த கிறுக்கன் படுத்திருக்கான். காத்திலே மரம் விழுந்தால் சாமி என்னாகுமோ?” ஆள் என்னாவானோ? எனக்கு கிட்ட போகப் பயமாயிருந்திச்சி. ரோட்டிலே பார்த்திட்டு ஓடியாறேன்.

ஏத்திக்கொண்டிருந்த வாசல்கல்லைக் கீழே போட்டுவிட்டுக் கூழுப்பிள்ளை தார்ப் பாச்சாகக் கட்டிகொண்டு கோயிலைப் பார்த்து ஓடினார். அவர் ஓடுவதைப் பார்த்து பின்னால் ஆட்கள் திரண்டு காற்றுக்கு மீறி ஓடி வந்தார்கள்.

கோயிலுக்கு சமீபத்தில் கூழுப்பிள்ளைதான் வந்து கொண்டிருந்தார். அத்துவான பொட்டலில் காற்றை மறிக்க ஒரு சுவருமில்லை. கோயிலடி அரசமரத்தை தவிர ஒரு செடி கொடியுமில்லை. அரச மரம் வில்லாய் வளைந்து ஆடியது. வேர்ப் பக்கங்கள் விரிந்து வெளியே வந்து கொண்டிருந்தன.

கூழுப்பிள்ளை கண்ணாலேயே பார்த்தார். அந்த கிறுக்கன் அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து அழுக்கு மூட்டையையும் தகர டப்பவையும் அலுமினியத் தட்டையும் தூக்கிக் கொண்டு மரத்தடியை விட்டு இருபது அடி தூரம் நடந்திருப்பான். சட சடவென்று அரசமரம் வேரோடு தூரோடு முனியசாமி சிலை மேல் விழுந்தது. கூழுப்பிள்ளை கிட்ட வந்து கதற கதற பார்க்கிறார். சின்ன சின்ன கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜனம் கூடிவிட்டது. கூழுப்பிள்ளைக்கு கண்கள் போங்கி வந்தன. “கிறுக்கன் தப்பிச்சுட்டான் சாமி போயிருச்சே..”

இப்போதும் பாண்டியாப்பிள்ளை மகன் தான் பதில் சொன்னான் “அவன்கிட்டே சீவன் இருந்திச்சி. காத்து ஒறைக்கவும் எழுந்திரிச்சி நடந்திட்டான்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *