(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
ஊரெல்லாம் அதே பேச்சாக இருந்தது. வழியில் யாரையாவது பார்த்தால் அந்தச் சந்நியாசியைப்பற்றியே கூறினார்கள்.அவ ருடைய அபார சக்தியைக் குறித்துக் கதை கதையாகச் சொன்னார்கள். அவரிடம் ஏதோ மந்திரம் இருந்தது என்றும், அவர் வாய்ச்சொற்கள் யாவும் பலிக்கின்றன என்றும் கேள்விப் பட்டேன்.
எனக்கு ஜோசியத்தில் எப்பொழுதுமே நம்பிக்கை உண்டு. இதுவரை எவ்வளவோ பேரிடம் என் கையைக் காட்டியிருக் கிறேன். என் ஜாதகம் எவ்வளவு கைகள் மாறினவோ? தெருக் கோடியில் இருக்கும் பக்ஷி ஜோசியன் முதல்கொண்டு, பத்திரி கையில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் சோதிட நிபுணர்வரை என் பிற்கால வாழ்வை நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால் என் துரதிருஷ்டம் : அவர்கள் சொன்னதில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பொய்த்துப் போயின.
மலையடிவாரத்தில் தங்கியிருந்த சந்நியாசியின் மகிமையைக் கேள்விப்பட்டபின், அவரிடமுந்தான் நம் கையை நீட்டினால் என்ன?’ என்று ஓர் ஆசை எழுந்தது. ஒரு நல்லநாள் பார்த்து அவர் இருக்குமிடம் சென்றேன்.
நான் சென்றபொழுது அவ்வளவு கூட்டம் இல்லை. ஒவ்வொரு வராக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். சுவாமியார் தனியாக உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் காணப்பட்ட அலங்காரங்கள் என் மனத்தைக் கவர்ந்தன.
அவரருகே இரண்டு படங்கள் இருந்தன. ஒன்று ஓர் இளைஞரின் புகைப்படம். சுவாமியார் இளைய வயசில் எடுத்ததாக இருக்கும் என்று எண்ணினேன். மற்றொன்று கையால் வரையப் பட்ட படம். ஆகா! அதுதான் எவ்வளவு அற்புதமாக இருந்தது, தெரியுமா! படத்தின் தலைப்பில் காணப்பட்ட, “எப்போ வரு வாரோ” என்ற வாக்கியம் எவ்வளவு பொருத்தமாக அமைந் திருந்தது! படத்தினடியில் காணப்பட்ட சோமு என்ற கையெழுத்து அப்படத்தை வரைந்தவர் இன்னார் என்பதைப் புலப்படுத்தியது.
என் தகப்பனாரும் ஒரு சித்திரகாரரே. ஆனால் எனக்குத் தெரிந்து இதுவரையில் அவர் இவ்வளவு அழகான, அற்புதமான, படத்தை வரைந்ததே இல்லை. அப்படத்தைப் பார்த்ததி. லிருந்து அந்தச் சித்திரகாரரைப் பார்க்க வேண்டும்போலிருந்தது. என் மனோரதத்தை அச் சந்நியாசி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டாயிற்று.
“என்னப்பா யோசிக்கிறாய்? வந்த விஷயம் என்ன?” என்று சுவாமியார் அன்பொழுகக் கேட்டார். உண்மையாகச் சொல்லு கிறேன். அச் சித்திரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றதில் வந்த விஷயங்கூட மறந்துவிட்டது. என் எண்ணத்தை அவரிடம் கூறி என் ஆவலைத் தணித்துக்கொள்ள நிச்சயித்தேன்.
“சுவாமிகளே, அந்தப் படத்தை எழுதியவர் யார், எங்கிருக் கிறார் என்பதை நான் ஆறிந்துகொள்ளலாமா?” என்று கேட்டேன்.
“அதோ அந்தப் புகைப்படத்தில் இருப்பவரே இதை எழுதினார். அவர்தாம் என் குரு. என்னைக் கரையேற்றியவர்” என்றார்.
“ஆமாம், அவர் இப்போது இல்லையா?”
அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. “அவர் உயிருடன் இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்? அவர் இறந்து பதினைந்து வருஷங்களுக்கு மேலாகிறது. அதுமுதல் வாழ்க்கையில் வெறுப்புற்று இப்படி நாடோடியாகத் திரிந்து வருகிறேன்.” என்றார்.
சற்று நிதானித்து, “அது போகட்டும். ஒருவரும் இதைப் பற்றிக் கேட்காமல் இருக்க நீ மட்டும் கேட்க என்ன காரணம்?” என்று கேட்டார்.
“இப்படத்தை வரைந்தவர் வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் இருக்கும் என்று தோன்றியது. அதனால் கேட்டேன்” என்றேன்.
பின்னால் அவர் கூறிய சம்பவங்கள் என்னை ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தின.
2
சிறுகுடியிலிருந்து ‘ராமராயர் கலாபவன’த்திற்கு இரண்டு சிறுவர்கள் வந்து சேர்ந்தனர்: சேகரும், சோமுவுந்தான்; அவ் விருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
அண்டை வீட்டுக்காரர்களான அவ்விருவருக்கும் சித்திரக் கலையில் ஆர்வம் இருந்தது. ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி படம் வரைவார்கள். ஆனால் இருவரில் சேகர்தான் முதல், எந்தப் போட்டியிலும் சேகருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். சோமுவின் மனத்தில் சற்றே பொறாமையை உண்டாக்கும்.
சோமு பணக்காரர் பிள்ளை. சேகரோ ஏழை. அவனுக்கு மேற் கொண்டு தன் கலையை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்லை. தகுந்த சமயத்தில் சோமுவின் தந்தை கைகொடுத்தார். தன் மகனுக்குத் துணையாகச் சேகரையும் ‘கலா பவன த்திற்கு அனுப்பிவைத்தார். இந்த நன்றியை மறக்கவில்லை அவன். அதற்குப் பிரதியாக ஏதாவது செய்து தீருவேன் என்று உறுதி செய்துகொண்டான்.
ஓர் அழகிய நிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கலா பவனத்தைச் சுற்றி இயற்கையன்னை தாண்டவமாடிக்கொண் டிருந்தாள். சித்திரகாரர்களுக்கென்றே அமைந்த இடம் அது என்று கூறலாம். மேலும் அங்கே பயின்றுவந்த மாணவர்களும், அவர்களுடைய குரு ராமராயரும் பழங்காலத்துக் குருகுலங்களை ஞாபகப்படுத்தினர்.
சேகரும் சோமுவும் குருவுக்குப் பணிவிடை செய்து கொண்டு அங்கேயே வசித்துவந்தனர்; மற்ற மாணவர்களிடையே இரு நட்சத்திரங்களென் ஜொலித்தனர்.
ராமராயர் அடிக்கடி தம் சிஷ்யர்கள் வரையும் படங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். அவைகளிலிருந்து கிடைக்கும் பணத்தில் அவர்களுக்குச் சித்திரக் கருவிகள் வாங்கித் தருவார். கலாபவனத்தை விட்டு வெளிவருமுன்னரே அவர்கள் பெயரை அவர் முன்னணிக்குக் கொண்டுவந்தார்.
குருவுக்குச் சேகரிடத்தில் தனி மதிப்பு உண்டு. சோமுவும் அவருடைய அன்புக்குப் பாத்திரனாகிவிட்டான். இருவரும் அவருடைய செல்வப்பிள்ளைகளாயினர்.
அவ்வப்பொழுது அவ்விருவருக்கும், மற்ற மாணவர்களுக்கும் சித்திரப்போட்டி ஏற்படுத்துவார். அவைகளிலெல்லாம் சேகர்
முதலாவதாகவும், சோமு இரண்டாவதாகவும் தேறுவது வழக்கம். அதைக்கண்டு ராமராயர் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுவார் சித்திரக்கலை புத்துயிர் பெறுவது சிரமமல்ல என்று அவர் திடமாக நம்பினார்.
இந்த விஷயங்களைப் பெற்றோர்கள் அறிந்து பெரிதும் மகிழ்ந்தனர்.
ராமராயர் சேகரிடம் காட்டிவந்த பிரத்தியேக அன்பு சோமு வின் மனத்தில் பொறாமைத் தீயைக் கிளப்பியது. தன் தகப்பனாரின் பணத்தைக்கொண்டு பயிலுபவன் தன்னைவிட நன்றாகப் படம் வரைவதா என்று சோமு ஆத்திரப்பட்டான். சில சமயங்களில் ராமராயர் இருவரையும் வைத்துக்கொண்டு சோமுவைக் கேலி செய்வார். “நீ என்னதான் முயற்சி செய்தாலும் சேகருக்கு இணையாகப் படம் வரையமுடியாது” என்பார். அது வேறு எரி கிற தீயில் எண்ணெயை ஊற்றினாற்போல ஆகும்.
நாளுக்கு நாள் வளர்ந்துவந்த பொறாமைத் தீ அவன் மனத்தில் கொடிய எண்ணங்களைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. சேகரின் மீது பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவன் துடித்தான். “வாத்தியார் கேலி செய்ததை மனசில் வைத்துக் கொள்ளாதே!” என்று சேகர் அன்புடன், ஆறுதலாகச் சொல்லு வான். தன்னைக் கேலி செய்யவே அப்படிச் சொல்லுகிறான் என்றெண்ணிப் பதில் சொல்லாமல் சோமு போய்விடுவான்.
3
நான்கு மாதங்கள் சென்றன.
அன்று ராமராயர் வகுப்புக்குள் நுழைந்தவுடனே சுற்றறிக்கையை வாசித்தார்.
‘சித்திரக்கலையில் ஆர்வம் காட்டுவோர் தம் திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது. உங்கள் கைத் திறனையெல்லாம் உபயோகித்து மிகச்சிறந்த படத்தை வரைந்து…ந் தேதிக்குள் நமக்கு அனுப்பிவையுங்கள்.மிகவும் நேர்த்தியான படத்திற்கு ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். நீங்கள் அனுப்பப் போகும் படங்களைக் கூடிய சீக்கிரம் இவ்வூரில் நடக்கப் போகும் கண் காட்சியில் வைக்கப் போகிறோம்’.
“என்ன, உங்களுக்குப் புரிந்ததா? இதற்கு நம் கலாபவனத் திலிருந்து சேகரும், சோமுவும் மட்டும் படம் அனுப்பினால் போதும். படங்களை வரைந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள். அல்லது நேரில் அவர்களுக்கே அனுப்பி விடுங்கள்” என்று முடித்தார் ராமராயர்.
சேகரின் முகம் மலர்ந்தது. தான் கைம்மாறு செய்யக்கூடிய சந்தர்ப்பம் வந்துவிட்டது என்று உளம் மகிழ்ந்தான்.
சோமுவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. கோபம் கோபமாக வந்தது.
சேகருக்கு இன்னொரு பரிசா? அவன் இந்தத் தடவை பரிசு வாங்கவொட்டாமல் அடிக்கவேண்டும்’ என்று தீர்மானித் துக் கொண்டான்.
தன் மனநிலை மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாமலிருக்க ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் சோமு. அவன் சிரித்த சிரிப்புக்கும், சேகர் அளித்த புன்னகைக்கும் எவ்வளவு வித்தியாசம்?
4
கண் காட்சிக்குப் படங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏற்கனவே வந்திருந்த படங்களில் ஒன்று வருவோர் போவோரின் கவனத்தை மிகுதியாகக் கவர்ந்தது. அதன் தலைப்பில் ‘எப்போ வருவாரோ!’என்று காணப்பட்டது.
“ஒரு குளம். நிறையத் தண்ணீர். பக்கத்திலே பச்சைப் பசேலென்று வளர்ந்திருக்கும் வுயல்கள். இரண்டு தென்னை மரங்கள். அங்கே ஓர் இளங்கன்னி நின்று யாரையோ எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆமாம்! அவரைத்தான். பூரண சந்திரன் அப்போதுதான் உதயமாகியிருந்தான்”. இதுதான் அப்படத்தில் இருந்த காட்சி.
படம் வரைந்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் சிலர், < அது சேகர் போட்டதுதான்” என்று கூறிக்கொண்டு போயினர்.
பரிசளிப்பு விழா நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே போட்டி முடிவு வெளியிடப் படுவதாக இருந்தது.
அன்று ஏகக்கூட்டம். கூட்டத்தில் சேகர் மலர்ந்த முகத் துடன் உட்கார்ந்திருந்தான். அடிக்கடி அவன், எப்போ வருவாரோ!’ என்ற குறிப்புள்ள படத்தைப் பார்த்துக்கொண்டி ருந்ததைக் கொண்டு ஜனங்கள் அது சேகரின் படந்தான் என்று முடிவு செய்தார்கள்.
சோமுமட்டும் அங்கே காணப்படவில்லை. சேகருக்குப் பரிசளிப்பதைப் பார்க்க விரும்பவில்லை போலும்!
முடிவு செய்யும் குழுவினர் வந்துவிட்டனர். அடுத்த நிமிஷம் சேகரின் மனோரதம் ஈடேறப் போகிறது.
“இன்று நமது சித்திரப் போட்டியின் முடிவை வெளியிட் முடியாமைக்கு வருந்துகிறோம்’ என்று சொல்லிவிட்டு,”ஆயினும், அங்கே வைத்திருக்கும் ‘எப்போ வருவாரோ?’ தான் முதல் பரிசு பெறும் என்று நினைக்கிறோம்” என்று கூறினார் குழுவின் தலைவர். யாவரும் ‘சேகருக்குப் பரிசு!’,’சேகருக்குப் பரிசு’ என்று கூறிக்கொண்டே எழுந்தனர்.
அப்பொழுதே வாசலில் பெரிய கூச்சல் கேட்டது. மறுக்ஷணம் ஒரே புகை நாற்றம். கண் காட்சிப் பந்தல் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஜனங்கள் நாலுதிசையிலும் சிதறிப்போயினர்.
சோமு இதைத் தூர நின்று கவனித்துக்கொண்டிருந்தான். ‘பயல் ஒழிந்திருப்பான்!’ என்று அவன் வாய் முணு முணுத்துக் கொண்டிருந்தது. ஜனக்கூட்டம் கலைந்தது. தீ அணைக்கப்பட்டு, அழியாமல் இருந்தவற்றைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.
சோமுவின் கண்களில் ‘எப்போ வருவாரோ’ படம் சிக்கி யது. ஆத்திரத்துடன் அதைக் கிழிக்கப் போனான். படத்தின் கீழ்க்கோடியில் இருந்த ஒன்று அவன் கண்களைக் கவர்ந்தது: ‘சோமு!’ அவன் கண்கள் சுழன்றன.
“ஐயோ! பாவியானேன்!” என்று கூவிக்கொண்டே கீழே மயங்கி விழுந்தான்.
5
“மறுபடியும் மூர்ச்சை தெளிந்து சோமு எழுந்தபோது அவனுக்கு உலகமே இருண்டு விட்டதுபோல இருந்தது. ‘எப்பேர்ப்பட்ட உத்தமனுக்கு – தன்னுடைய உயிர்த்தோழனுக்கு புகழும், பணமும் சம்பாதித்துத் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவனுக்கு – தீங்கு செய்த மகாபாவி’ என்று தன்னைத் தானே வெறுத்துக்கொண்டான். அவன்தானே தீ வைத்தவன்? சேகர் வெளியே வராமல் போகவே அவன் இறந்து சாம்பலாகி இருப்பான் என்று முடிவு செய்தான்.
“வாழ்க்கை கசந்தது. சேகர் இல்லாத வாழ்க்கை எதற்கு என்று எண்ணித் துறவு கொண்டான். தேச யாத்திரை செய்துவருகிறான்”என்று முடித்தார். அவர் கண்களில் ஜலம் பெருக்கெடுத்து ஓடியது.
அவர்தாம் சோமு என்று தெரிந்துகொண்டேன்.
“சுவாமி, நீங்கள் சேகர் விபத்தில் இறந்ததாக அல்லவா சொன்னீர்கள்? அது இல்லை என்று தெரிந்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும்?” என்றேன்.
“என்ன? என்ன? என் சேகர் உயிருடன் இருக்கிறானா? எங்கே,எங்கே?” என்று உளறினார் சாமியார்.
“உண்மையில் சேகர் உயிருடன்தான் இருக்கிறார். தீ விபத்திலிருந்து தப்பி இவ்வூருக்கு வந்துவிட்டார். சென்ற பதினைந்து ஆண்டுகளாக இங்கேதான் வசித்துவருகிறார். கல்யாண மாகி ஒரு பையனும் இருக்கிறான்” என்றேன்.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?
“எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியப் போகிறது?” என்றேன்.
“என்ன அப்படிச் சொல்லுகிறாய்? சேகர் உன் நெருங்கிய சிநேகிதரா என்ன?”
“சிநேகிதரல்ல. பெற்ற தந்தை!” என்றேன்.
“என்ன? சேகர் உன் தந்தையா?”
“ஆமாம்? அவன் என் பிள்ளை தான்” என்று கூறியவாறு என் தந்தை சேகர், உள்ளே நுழைந்தார்.
– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.