(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“திருடுவதென்பது அவ்வளவு எளிதல்ல; அதிலும் எத்தனையோ தொல்லைகள் இருக்கத்தான் இருக்கின்றன!”
மூன்று முறைகள் சிறைவாசம் செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்தான் முத்து.
அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திருடவேண்டும்; அகப்பட்டுக்கொண்டால் அடி, உதைக்குத் தயாராக வேண்டும் அதற்கு மேல் விசாரனை, தண்டனை எல்லாம்!
விசாரணை என்றால் என்ன விசாரணை?’ ‘ஏன் திருடினான்; எதற்காகத் திருடினான்?’ என்றா விசாரிக்கிறார்கள்? அப்படி விசாரித்தால்தான் பெரும்பான்மையான வழக்குகளில் அரசாங்கமே குற்றவாளியாகி, குற்றவாளி நிரபராதியாகி விடுவானே? அதனால்தான் ஒருவன் திருடினான் என்றால், ‘அவன் திருடியது உண்மைதானா?’ என்று மட்டுமே விசாரிக்கிறார்களோ, என்னமோ?
‘தண்டனை, தண்டனை’ என்கிறார்களே, அந்தத் தண்டனை மட்டும் என்ன வாழுகிறதாம்? – திருந்துவதற்கா தண்டனை, திருடனுக்கு? இல்லை, அதில் அவன் பயிற்சி பெறுவதற்கு! இல்லையென்றால் முதலில் மூன்று மாதம், பிறகு ஆறு மாதம், அதற்குப் பிறகு ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று ஆயுள் முழுவதையும் சிறைவாசத்திலேயே கழித்துவிடுகிறார்களே சில திருடர்கள், அதற்கு என்ன அர்த்தமாம்? – சிறை வாசத்தில் அவர்கள் பெற்ற பயிற்சி என்றுதானே அர்த்தம்?
எது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் – இனி, தான் திருடக்கூடாது – ஆம்; அவளுக்காகவாவது இனி, தான் திருடவே கூடாது!
அதைவிட அரை வீசை சிகைக்காய் வாங்கி அரைக்கலாம்; அரைத்த சிகைக்காய்ப் பொடியில் ஆறு படி அரிசித் தவிட்டையோ, அரக்குப் பொடியையோ வாங்கிக் கலக்கலாம்; ஆயிரமாயிரம் காலணா, அரையணா பொட்டணங்களாக அவற்றைக் கட்டலாம்; ‘முத்து விலாஸ் சிகைக்காய்ப் பொடி தான் உலகத்திலேயே முதன்மையானது!’ என்று கூசாமல் விளம்பரமும் செய்யலாம்; அதன் வாயிலாக லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியாகி, அந்த ரூபாய்களைக் கொண்டே அரசியல், கலை, இலக்கியப் பிரமுகராகி, ‘பாரதரத்னா’ பட்டத்தைக்கூடப் பெற்றுவிடலாம்.
அரசியலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்த அரசியல்வாதியாவது என்னைக் கேட்பானா? கலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்தக் கலைஞனாவது என்னைக் கேட்பானா? இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்தப் புலவனாவது என்னைக் கேட்பானா?. ஊஹும், என்னைப் பார்க்கும்போதெல்லாம் தலையைச் சொறிந்து கொண்டும், கையைப் பிசைந்து கொண்டுமல்லவா நிற்பார்கள்?-தூ! மனிதர்களா இவர்கள்? ‘ஆறாவது அறிவு’ என்று ஏதோ ஒன்று இருக்கிறதாமே – அது இருக்கிறதா, இவர்களுக்கு ஊஹும், எனக்கு நம்பிக்கை இல்லை; இல்லவே இல்லை.
இப்படிப் பிழைப்பதும் ஒருவகையான திருட்டைச் சேர்ந்ததுதான் என்றாலும், இதற்கு விசாரணை கிடையாது, தண்டனையும் கிடையாது. அப்படியே இருந்தாலும் இருக்கவே இருக்கிறது ‘சம்திங்’ – அந்த ‘அருமருந்’தைக் கொடுத்து ஒரே அமுக்காக அமுக்கி விடலாம் – என்ன இருந்தாலும் வியாபாரத்தில் நாணயம் வேண்டும் என்று சிலர் சொல்லலாம். உண்மைதான்; நாணயம் ‘நாணய’த்தில் வேண்டும்தான்! சரக்கில் அது எதற்கு? – ‘வேண்டாம்’ என்பதற்காகத் தானே ராஜாங்கத்தில் ‘ராஜதந்திரம்’ என்று ஒன்று இருப்பதுபோல வியாபாரத்தில் ‘வியாபார தந்திரம்’ என்று ஒன்று இருக்கிறது?’
ஆனால் இதுபோன்ற ‘திருட்டுத் தொழில்’களுக்கு முதல் வேண்டும்; அந்த முதலுக்கு எங்கே போவது?
இதுவரை ‘முதல் இல்லாத திருட்டுத் தொழிலைச் செய்து வந்த தனக்குத் தெரிந்த ஒரே வழி திருடுவதுதான்! அதையா மறுபடியும் ஆரம்பிப்பது? – சேச்சே, திருடுவதற்குச் சட்ட ரீதியான வழிகள் எத்தனையோ இருக்க, சட்ட விரோதமாகத் திருடுவானேன்?-கூடாது; கூடவே கூடாது.
முதலில் ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ளவேண்டும்; அந்த வேலையைக் கொண்டு ஏதாவது ஒரு வியாபாரத்துக்கு வேண்டிய முதலைத் தேடிக் கொள்ள வேண்டும் – அதற்குப் பிறகு? – நானும் அவளும் ஜோடி; வானில் பறக்கும் வானம்பாடி?
இப்படி நினைத்ததும் தனக்குத்தானே சிரித்து கொண்டான் அவன்.
“இன்னா வாத்தியாரே, சிரிக்கிறே?”
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் முத்து. கேட்டது வேறு யாருமல்ல; அவனுடைய சீடன் அபேஸ் அய்யாக்கண்ணு.
“டேய், அய்யாக்கண்ணு மரியாதையா சொல்றேன்-இனிமே நீ என்னை ‘வாத்தியாரே கீத்தியாரே’ன்னு கூப்பிடக்கூடாது-ஆமாம், சொல்லிட்டேன்!”
“ஏன் வாத்தியாரே, அப்படி?”
“இனிமே நான் திருடப் போவதில்லே!”
இதைக் கேட்டதும் ‘இடியிடி’யென்று சிரித்தான் அவன்.
“ஏண்டா, இளிக்கிறே?”
“இல்லே வாத்தியாரே, என் அம்மாகூட இப்படித்தான் சொன்னாளாம்!”
“எப்படி?”
“என்னைப் பெறப்போ, ‘இனிமே நான் பிள்ளையே பெறப்போவதில்லேன்னு சொன்னாளாம். அப்புறம் என்னடான்னா, எனக்குப் பின்னாலே ஏழு பேரு; எட்டாவது பிள்ளை ‘அண்டர் ப்ரொடக்ஷன்’லே!”
“அடடே இங்கிலீஷ்லே பேசக்கூடக் கத்து கிட்டியா, நீ?”
“எல்லாம் நீ குடுத்த பிச்சைதானே வாத்தியாரே?”
இந்தச் சமயத்தில் அங்கே வந்த காவலன் கந்தசாமி, “அட, முத்துவா! எப்போடா வந்தே, ஜெயில்லேருந்து?” என்று கேட்டான் வியப்புடன்.
“இன்னிக்குத்தான்!” என்றான் முத்து.
“நல்ல நாளும் அதுவுமாத்தான் வந்திருக்கே!”
“இன்னா இன்னிக்கு அப்படிப்பட்ட நல்ல நாளு?”
“மயிலாப்பூரிலே அறுபத்துமூவர் திருநாளாச்சேடா, இன்னிக்கு! உனக்குத் தெரியாதா? போபோ, சீக்கிரம் போ! ஏதாச்சும் கெடச்சா என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ”
“உங்களைக் கவனிக்க வேண்டியதுதான்! வாங்கறதையும் வாங்கிக்குவீங்க, ஆளையும் காட்டிக் கொடுத்திடுவீங்க இல்லே? உங்களை அவசியம் கவனிக்க வேண்டியதுதான்!”
“வாங்கறது வயித்துக்கு; காட்டிக் கொடுக்கறது பொழைப்புக்கு”
“நல்ல பொழைப்பு பொழைச்சீங்க, போங்கய்யா!” என்று சொல்லிக்கொண்டே, அதுவரை உட்கார்ந்திருந்த அந்தச் சுமைதாங்கியை விட்டு எழுந்து நடந்தான் முத்து.
“எங்கே வாத்தியாரே, கௌம்பிட்டே?” என்று கேட்டுக் கொண்டே, அவனைத் தொடர்ந்தான் அபேஸ் அய்யாக்கண்ணு.
“சொல்லச் சொல்லப் பேச்சுக்குப் பேச்சு என்னை ‘வாத்தியாரே, வாத்தியாரே!’ன்னா கூப்பிட்டுகிட்டிருக்கே? உதைக்கிறேன் பாரு, உன்னை! என்று திரும்பினான் முத்து.
“இந்தக் கழுதை புத்தி உனக்கு எப்போ வந்துச்சி, வாத்தியாரே?” என்றான் அவன் மீண்டும்.
“இப்போத்தான்!” என்று முத்து உதைக்க, அந்த உதையிலிருந்து அவன் லாகவமாகத் தப்பி ஓட, இருவரும் பிரிந்தார்கள்.
இது என்ன வேடிக்கை! – வழியில் தன்னைக் கண்டவர்க ளெல்லாம் ஒதுங்கி நடக்கிறார்களே? பெண்களில் சிலர் தன்னைப் பீதியுடன் பார்க்கிறார்களே? குழந்தைகள் கை கொட்டிச் சிரிக்கின்றனவே? அவற்றில் சில தன்னைக் கல்லால்கூட அடிக்கின்றனவே?
ஒரு வேளை …….
அருகிலிருந்த முடி திருத்தகத்துக்குள் அவசர அவசரமாக நுழைந்து, தன் அழகைக் கண்ணாடியில் பார்த்தான் முத்து – சந்தேகமென்ன, அசல் பைத்தியம்தான்!
இந்தக் கோலத்தில் எங்கேயாவது போனால் தனக்கு வேலையா கொடுப்பார்கள்? பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் ‘போன்’தான் செய்வார்கள்!
முதலில் இந்தத் தாடி – மீசையை வழித்துக் கொள்ள வேண்டும்; அதற்குப் பிறகு இந்தக் கிழிந்த வேட்டி-சட்டைக்குப் பதிலாக வேறொரு வேட்டி-சட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் – அதற்குப் பிறகுதான் வேலை, கல்யாணம் எல்லாம்!
இவற்றுக்கெல்லாம் காசு? – எதைத் தேட வேண்டுமானாலும் முதலில் அதையல்லவா தேட வேண்டியிருக்கிறது?
‘கல்யாணமானால் பைத்தியம் தெளியும்; பைத்தியம் தெளிந்தால் கல்யாணமாகும்’ என்ற கதையாகவல்லவா இருக்கிறது என் கதை?
முடி திருத்தகத்தை விட்டுக் கீழே இறங்கினான் முத்து. அவனுக்கு எதிர்த்தாற்போல் ‘ஒத்துழையாமை இயக்க’த்தில் ஈடுபட்டிருந்த கார் ஒன்று அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது – காரணம் தன்னைத் தள்ள முயன்ற முதலாளியை அது கீழே தள்ளிவிட்டு, ‘என்னையாதள்ளுகிறாய்?’ என்பது போல் ஓர் உறுமல் உறுமி நின்றதுதான்!
வெட்கத்துக்கு அஞ்சி விழுந்த வேகத்தில் எழுந்து நின்ற முதலாளியை நெருங்கி, “நான் தள்ளட்டுமா, ஸார்?” என்றான் முத்து.
“தள்ளப்பா, தள்ளு!” என்றார் முதலாளி, சட்டையில் ஒட்டிக்கொண்ட மண்ணைத் தட்டி விட்டுக்கொண்டே.
“நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய் விட மாட்டீர்களே” என்றான் முத்து, தலையைச் சொறிந்து கொண்டே.
“ஏன், அது மட்டும் போதாதா உனக்கு?” என்றார் முதலாளி குறுநகையுடன்.
“போதாது ஸார்! அந்த ‘நன்றி’க்குப் பெட்டிக் கடைக்காரன்கூட ‘ஒரு பீடி’ கொடுக்க மாட்டேன் என்கிறான், ஸார்!” என்றான் முத்துவும் அதே குறு நகையுடன்.
“சரி, தள்ளு! நன்றியோடு நாலணாவும் சேர்த்துத் தருகிறேன்”
“ரொம்ப சந்தோஷம், ஸார்! நீங்கள் ஏறுங்கள், வண்டியில்!” என்று வரிந்து கட்டிக்கொண்டு அவருடைய காரைத் தள்ளினான் முத்து.
கார் கிளம்பிற்று -ஆனால் முதலாளி?-நிற்க வில்லை; போயே போய்விட்டார்!
அட கடவுளே! இல்லாதவன்தான் ஊரை ஏமாற்றுகிறான் என்றால் இருப்பவனுமா ஊரை ஏமாற்றவேண்டும்? – இருக்கட்டும், இருக்கட்டும்; அந்த ஒரு வகையிலாவது அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கட்டும் – இப்படி நினைத்துக்கொண்டே மேலே நடந்தான் முத்து.
அதுவரை ‘பசி, பசி’ என்று முனகிக்கொண்டிருந்த அவன் வயிறு, இப்போது ‘பசி! ஐயோ, பசி’ என்று அலறவே ஆரம்பித்துவிட்டது.
அகில உலகையும் ஆண்டவன் ஆட்டி வைக்கிறானாம்-பொய்; சுத்தப் பொய்! பசி அல்லவா அகில உலகையும் ஆட்டி வைக்கிறது? – இதற்கு எதை நான் இப்போது ‘புசி!’ என்று கொடுப்பது?
வேலை கிடைப்பதற்கு முன்னால் அவளையும் பார்ப்பதற்கில்லை; பார்த்தால் சீறுவாள்! – திருடுவது அவ்வளவு பெரிய குற்றமாகப் படுகிறது அவளுக்கு! – பாவம், உலகத்திலுள்ள ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு விதத்தில் திருடத்தான் திருடுகிறான் என்பது அவளுக்குத் தெரியுமா, என்ன?
போகட்டும்; என்னைப் போன்றவர்களைத் தவிக்க விடுவதற்கென்றே எல்லாவற்றையும் தனி உடைமையாக்கிக் கொண்டு விட்ட மனிதன், தண்ணீரையாவது இன்றுவரை பொதுவுடைமையாக விட்டு வைத்திருக்கிறானே – அதுகூடவா உதவாமல் போய்விடும் தன் பசிக்கு?
சுற்றுமுற்றும் பார்த்தான் முத்து; சற்றுத் தூரத்திலிருந்த தெருக்குழாய் ஒன்று ‘வா அப்பனே, வா!’ என்று அவனை அன்புடன் அழைப்பது போலிருந்தது – சென்றான்; திறந்தான்; குடித்தான்; நடந்தான்!
“ஏண்டாப்பா, இந்த அரிசி மூட்டையைக் கொஞ்சம் தூக்கிண்டு வர்றியா?”
பலசரக்குக் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பாட்டியின் வேண்டுகோள் இது; அந்த வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு விட்டான் முத்து.
இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள்; வீடு வந்து சேர்ந்ததும், “மகாராஜனாயிருப்பே! போய் வா; கோடி புண்ணியம் உனக்கு!” என்று அவனை வாயாற, மனமாற ஆசீர்வதித்து அனுப்பப் பார்த்தாள் பாட்டி.
“ஐயோ எனக்கு ஆசீர்வாதம் வேண்டாம் பாட்டி, கூலி ஏதாச்சும் கொடு!” என்று அலறினான் முத்து.
“கையை நீட்டிக் காசு வாங்கினா, நீ செய்த புண்ணியத்துக்குப் பலன் இல்லாமற் போய்விடுமேடா! போற வழிக்குப் புண்ணியம் வேண்டாமோ, உனக்கு?”
“வேண்டாம் பாட்டி, இருக்கிற வழிக்கு ஏதாச்சும் கெடைச்சாப் போதும்”
மூக்கால் அழுது கொண்டே பாட்டி கொடுத்த இரண்டணாவை வாங்கிக்கொண்டு, அடுத்தாற் போலிருந்த தேநீர் விடுதிக்குள் நுழைந்தான் முத்து. ஓரணாவுக்குப் பன்; ஓரணாவுக்கு டீ – தீர்ந்தது அவனுடைய பசிப் பிரச்னை, அப்போதைக்கு!
தேவலையே, இந்தக் கூலிப் பிழைப்பு!-இந்தப் பிழைப்பைக் கொண்டே தாடி மீசைப் பிரச்னையையும் வேட்டி-சட்டைப் பிரச்னையையும்கூடத் தீர்த்துக்கொண்டு விடலாம் போலிருக்கிறதே?
அவ்வளவுதான்; ‘கூலி வேணுமா ஸார், கூலி? கூலி வேணுமா ஸார், கூலி?’ என்று எங்கெல்லாம் கூலி கிடைக்குமோ, அங்கெல்லாம் கூவிக் கூவிக் அலைய ஆரம்பித்துவிட்டான் அவன்!
பத்துப் பதினைந்து நாட்கள் படாத பாடு பட்ட பிறகு அவனால் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி முழுசாக ரூபா ஐந்துதான் சேர்க்க முடிந்தது. உடனே ஒரு ‘மரத்தடி ஸலூ’னைத் தேடிப் பிடித்து நாலணாவுக்கு முடி வெட்டிக்கொண்டான்; பாக்கியிருந்த ரூபா நாலே முக்காலுக்குத் தகுந்தாற் போல் வேட்டி-சட்டையும் வாங்கிக் கொண்டான்-இனி வேலை தேட வேண்டியதுதான் பாக்கி!
அதற்காக யார் யாரையோ ‘காக்கா’ பிடித்துப் பார்த்தான். அவர்கள் ‘கவனிக்கிறேன், கவனிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வந்ததைப் பார்த்தால், அவன் கண்ணை மூடும் வரை அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் போல் தோன்றிற்று. எனவே அவர்களை விட்டுவிட்டு அவன் ‘வேலை தேடித் தரும் ஸ்தாபன’த்தின் உதவியை நாடினான். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரச்சொல்லி அவர்கள் அவனுடைய காலை ஒடித்தார்களே தவிர, வேலை தேடித் தரவில்லை!
அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தெருவில் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோதுதான் ஓர் ‘ஐஸ் – கிரீம் வாலா’வின் சிநேகம் அவனுக்குக் கிடைத்தது.
தங்களுக்கிருந்த குறைகளை அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்ட பிறகு, அந்த ஐஸ்-கிரீம் வாலா கேட்டான்:
“உன்னால் பத்து ரூபா முன் பணமாகக் கட்ட முடியுமா?”
“கட்டினால் என்ன கிடைக்கும், வேலை கிடைத்துவிடுமா?” என்று ஆவலுடன் கேட்டான் முத்து.
“கிடைக்கலாம்” என்றான் அவன்.
“அப்போதும் சந்தேகம்தானா, என்ன வேலை அது?”
“என்னைப்போல் ஐஸ்-கிரீம் வண்டி தள்ளும் வேலைதான்”
“சம்பளம்?”
“சம்பளம் என்று ஒன்றுமில்லை; கமிஷன்!”
“கமிஷனா, அதில் என்ன கிடைக்கிறது, உனக்கு?”
“தினம் இரண்டு ரூபாய்க்குப் பஞ்சமில்லை!”
முத்து யோசித்தான்; “என்னயோசிக்கிறாய்?” என்று கேட்டான் அவன்.
“ஒன்றுமில்லை; இந்த வேலை செய்தால் அவள் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாளா என்று தான் யோசிக்கிறேன்!” என்றான் முத்து.
“அவள் வேறு இருக்கிறாளா, உனக்கு?”
“இருக்கிறாள், இருக்கிறாள்”
“அதனால் என்ன? ‘எங்கே வேலை?’ என்று கேட்டால், ‘ஹிமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனியிலே’ என்று சொல்; ‘என்ன வேலை?’ என்று கேட்டால், ‘சேல்ஸ்மேன் வேலை’ என்று சொல்!”
“சேல்ஸ்மேன்! – எதையும் இங்கிலீஷிலே சொன்னால் கொஞ்சம் மதிப்பாய்த் தான் இருக்கும் போலிருக்கிறது!”
“அதுதான் அங்கே பாய்ண்ட்!” என்று அதிலிருந்து ‘பாய்ண்ட்’டை எடுத்துக் காட்டிவிட்டு, “ஆனால் ஒன்று!” என்று இழுத்தான் அவன்.
“என்ன?” என்று கேட்டான் முத்து.
“அந்த வேலைக்கும் ஏகப்போட்டி, அங்கே! இந்த மாதக் கடைசியில் நான் அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகிறேன் என்கிற விஷயம் எப்படியோ வெளியே தெரிந்துவிட்டிருக்கிறது. தினம் இரண்டு பேராவது வந்து, ‘இந்த வண்டியை எனக்குக் கொடுத்துவிடுங்கள், இந்த வண்டியை எனக்குக் கொடுத்துவிடுங்கள்!’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் நீ வெல்ல வேண்டுமானால் முப்பதாம் தேதி மாலை ஆறு மணிக்குள் ரூபா பத்து கொண்டு வந்து முன் பணமாகக் கட்டிவிடவேண்டும் – என்ன, முடியுமா?”
“அட, கடவுளே! முப்பதாம் தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் தானே இருக்கின்றன?”
“ஏன் முடியாதா? – முடியாதென்றால் சொல்லி விடு; வேறு யாருக்காவது கொடுத்துவிடச் சொல்கிறேன்”
“முடியுமென்றால்?”
“அண்ணன்-தம்பி என்று சொல்லி, எனக்குப் பதிலாக உன்னை நான் அங்கே வைத்துவிடுவேன்!”
“சரி, உன் விலாசத்தைக் கொடு; முப்பதாம் தேதிக்குள் உன்னை நான் முன் பணத்துடன் வந்து பார்க்கிறேன்”
“என் விலாசம் எதற்கு? நீ என் கம்பெனி விலாசத்துக்கே வந்துவிடலாமே?” என்றான் அவன்.
“சரி!” என்று கிளம்பினான் முத்து.
நாளை தேதி முப்பது! – உணவு விஷயத்தில் ‘ஒட்டகத்தின் முறை’யைக் கையாண்டு இன்றுவரை எப்படியோ எட்டரை ரூபா சேர்த்து விட்டான் முத்து. இன்னும் ஒன்றரை ரூபா வேண்டுமே? நாளை ஒரே நாளில் கிடைத்து விடுமா, அது?. கிடைக்காவிட்டால்…….
அந்த வேலை மட்டுமா கிடைக்காமல் போய் விடும், தனக்கு? அவளுமல்லவா கிடைக்காமல் போய் விடுவாள்? – அதற்குப் பிறகு நாலு பேரைப் போலத் தானும் நாணயமாக வாழ்வதுதான் எப்படி?
‘எதற்கும் முயன்று பார்ப்போம்?’ என்று எண்ணித் துணிந்தவனாய், அன்று ஊரடங்கும் வரை தெருத் தெருவாய்ச் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, வழக்கம்போல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குத் திரும்பினான் படுக்க!
ஆம், செத்த பிறகு போக வேண்டிய இடத்திற்கு அவனைப் போன்றவர்கள் உயிரோடிருக்கும் போதே போய்விடுவார்கள்!-‘ஏன்?’ என்று கேட்கிறீர்களா?- வேறு எங்கேயாவது படுத்தால்தான், ‘நீ யார், எந்த ஊர், எங்கே வந்தாய், என்ன செய்கிறாய்?’ என்றெல்லாம் குடைந்து குடைந்து கேட்டு, அவனைச் சந்தேகத்தின் பேரால் உள்ளே தள்ளி விடுவார்களே!
இந்த ஆபத்திலிருந்து தன்னைக்காத்து வந்த அந்தச்சுடுகாட்டை அன்று அவன் அடைந்தபோது மணி பத்துக்கு மேல் இருக்கும் அவனை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டிருந்த ‘ஓசிப் பீடித்தோழர்’ ஒருவர், “என்ன அண்ணாச்சி, இன்னிக்கு இம்மா நேரம்” என்றார் கொட்டாவி விட்டுக் கொண்டே.
அவர் கேட்பதற்கு முன்னால் அவரிடம் ஒரு பீடியை எடுத்து நீட்டிவிட்டு, “ஒண்ணரை ரூபா காசுக்காக ஊரடங்கும் வரை சுற்றினேன்; ஒண்ணும் கெடைக்கல்லே!” என்றான் முத்து.
“எழும்பூர் ஸ்டேஷன் பக்கம் போய்ப் பார்க்கிறதுதானே?”
“அங்கேதான் ஏகப்பட்ட ‘போர்ட்டர்’கள் இருப்பானுங்களே?”
“அவனுங்க கைவரிசையெல்லாம் ஸ்டேஷனுக்குள்ளேதான்; நீ வெளியே போய் நின்று பாரு!”
“வெளியேதான் டாக்ஸி, ஆட்டோ, ஜட்கா, ரிக்ஷான்னு எத்தனையோ இருக்கே, அத்தனையையும் விட்டுட்டா என்னைத் தேடி வரப் போறாங்க?”
“உனக்குத் தெரியாது அண்ணாச்சி! அத்தனை வண்டி அங்கே இருந்தும் காலை நேரத்திலே அவசரத்துக்கு ஒரு வண்டிகூடக் கெடைக்காம அவதிப் படறவங்க அங்கே ரொம்பப் பேரு!”
“சரி, அதையும் பார்த்து விட்டால் போச்சு!” என்றான் முத்துவும் கொட்டாவி விட்டுக் கொண்டே.
அதற்குமேல் இருவரும் பேசவில்லை; பேசினால் தன்னிடமுள்ள எட்டரை ரூபா விஷயம் எங்கே தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் அவனுக்கு! – மாஜி திருடனாயிருந்தாலும் திருட்டுப் பயம் அவனை மட்டும் விட்டுவிடுமா, என்ன?
மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே எழுந்து, எழும்பூர் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் முத்து. ‘ஓசிப் பீடித் தோழ’ரின் யோசனை வீண் போகவில்லை; அன்று மத்தியானத்துக்குள் ஒரு ரூபா கிடைத்து விட்டது அவனுக்கு!
இன்னும் எட்டே அணாக்கள்…….
வெளியூர் பஸ் நிலையத்துக்குப் போனால் எளிதில் கிடைத்துவிடுமே அது? – அவ்வளவுதான்; எடுத்தான் ஓட்டம், பஸ் நிலையத்திற்கு!
அங்கே பெட்டியும் படுக்கையுமாக ஓர் உல்லாசப் பேர்வழி நின்று, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி, “கூலி வேணுமா ஸார், கூலி?” என்றான் முத்து, வழக்கம்போல்.
“எடுத்துக் கொள்!” என்று கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டி படுக்கையைச் சுட்டிக் காட்டி விட்டு அவர் நடந்தார்.
“ரொம்ப தூரம் போகணுமா, ஸார்?”
இதை அவன் கேட்டிருக்க மாட்டான்; ஆறு மணிக்குள் ‘இமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனிக்’குப் போகவேண்டும் என்ற கவலை அவ்வாறு கேட்க வைத்துவிட்டது, அவனை!-அதை அறிவாரா அந்த உல்லாசப் பேர்வழி? – “ரொம்ப தூரம் போக வேண்டுமென்றால் உன்னை ஏண்டா கூப்பிட்டிருக்கப் போகிறேன்? நீ ஏதாவது ஒரு ‘டாக்ஸி ஸ்டாண்’டருகே என்னை விட்டுவிடு, போதும்!” என்றார் சுடச்சுட.
“அங்கே ‘டாக்சி ஸ்டாண்டு’ என்கிற போர்டு மட்டும்தான் இருக்கும் ஸார், டாக்சி இருக்காது!” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.
“ரோடில் எவனாவது காலியாக வரமாட்டானா? – வா, பார்ப்போம்!” என்றார் அவர்.
இருவரும் வெளியூர் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள் – முத்து சொன்னபடி, ‘டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸி இல்லை!
“யு ஆர் கரெக்ட்!” என்று ரோடைப் பார்த்தார் அவர்; எத்தனையோ டாக்ஸிகள் வருவதும் போவதுமாய்த்தான் இருந்தன; ஆனால் ஒன்றாவது அவருடைய கை தட்டலைக் கேட்டு நிற்க வேண்டுமே?-ஊஹும்!
“சரி, ‘ஓட்டல் தி ஹெவ’னுக்கு நீயே வந்து விடுகிறாயா?” என்றார் அவர்.
“வருகிறேன், ஸார்!” என்றான் அவன்.
இருவரும் மேலே நடந்தார்கள். ஹோட்டலை அடைந்ததும் பெட்டி – படுக்கையை இறக்கிக் கீழே வைத்துவிட்டுக் கையை நீட்டினான் முத்து. அவன் நீட்டிய கையில் நாலணாவை எடுத்துப் போட்டு விட்டுத் திரும்பினார் உல்லாசப் பேர்வழி.
“ஸார், ஸார்! இன்னும் ஒரே ஒரு நாலணா-தர்மத்துக்குக் கொடுப்பது போல் கொடுங்கள் – ஒரு முக்கியமான காரியத்துக்கு வேணும்!” என்று பல்லைக் காட்டினான் அவன்.
“நாலணா என்ன, நாலு ரூபாயே வேண்டியிருக்கும் உனக்கு! அதற்கெல்லாம் நானா ஆளு? போ, போ!”
“கோபித்துக் கொள்ளாதீர்கள்; கொஞ்சம் தயவு செய்யுங்கள்!”
“தயவாவது, தாட்சண்யமாவது?- இந்தக் கூலிக்காரர்களே இப்படித்தான்; லேசில் ஆளை விட மாட்டார்கள்- இப்போது நீ மரியாதையாகப் போகிறாயா, இல்லையா?” என்று கத்தினார் அவர்.
“வேறு நாளாயிருந்தால் உங்களை இவ்வளவு கோபத்துக்கு உள்ளாக்கி யிருக்கமாட்டேன், ஸார் இன்று ஓர் அவசரம்; அவசியம்; அதனால்தான் கேட்கிறேன் – ஒரே ஒரு நாலணா!” என்று கெஞ்சியபடி அழவே ஆரம்பித்துவிட்டான் அவன்.
“நாலணா கிடைக்காது உனக்கு, நாலு அறைதான் கிடைக்கும்!” என்று கையை ஓங்கினார் அவர்.
அதற்குள் பொறுமை இழந்த ஹோட்டல் முதலாளி, “அவனுடன் ஏன் ஸார், அனாவசியமாகத் தகராறு? பேசாமல் போலீசுக்குப் போன் செய்வதை விட்டு விட்டு?” என்று ‘பெரிய மனிதத் தோரணை’யோடு சொல்லிக்கொண்டே, ‘ரிஸிவ’ரைக் கையில் எடுத்தார்.
பாவம், அதற்கு மேல் என்ன செய்வான் முத்து? – அழுத கண்ணீரைத்துடைத்துக்கொண்டே திரும்பினான்; ‘ஒரே ஒரு நாலணா, ஒரே! ஒரு நாலணா! என்று பித்துப் பிடித்தவன் போல் பிதற்றிக் கொண்டே அங்குமிங்குமாக அலைந்தான் ஆனால் என்ன பிரயோசனம்? மணி ஐந்தரையாகியும் அந்த ஒரே ஒரு நாலணா அவனுக்குக் கிடைக்கவில்லை!
ஆயிற்று – மணி ஐந்து முப்பத்தைந்து, ஐந்து நாற்பது, ஐந்து நாற்பத்தைந்தும் ஆயிற்று…….
பதினைந்து நிமிஷமாவது வேண்டாமா, ஹிமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனிக்குச் செல்ல?
வேண்டும்தான்!-ஆனால் அதற்குள் அந்த நாலணா, ஒரே ஒரு நாலணா தனக்குக் கிடைத்து விடுமா?
நம்பிக்கை கைவிட்டாலும், நப்பாசை அவனைக் கைவிடவில்லை – ஓடினான்; தேடினான் – அந்த ஒன்பதே முக்கால் ரூபாய்க்கு மேல் ஒரு காசும் சேரவில்லை!
டிங், டாங்! டிங், டாங்! டிங், டாங்! – தன்னை மறந்து திரிந்து கொண்டிருந்த முத்துவை மாதாக் கோயிலின் மணியோசை தடுத்து நிறுத்தியது-இனி பிரயோசனமில்லை; இனி அந்த நாலணா, ஒரே ஒரு நாலணா கிடைத்தும் பிரயோசனமில்லை!
அவன் போய்விட்டிருப்பான்; அவனுடைய வேலையும் அவன் கையை விட்டுப் போய்விட்டிருக்கும்……
வெறுப்பு ஒரு பக்கம்; வேதனை இன்னொரு பக்கம்-இந்த இரண்டும் சேர்ந்தாற்போல் தன் இயத்தில் கொதித்து எழுந்த வேகத்தில் அவன் அந்த உல்லாசப் பேர்வழியை மட்டுமா, உலகத்தையே சபித்தான் – பாவம், உலகம் என்ன செய்யும்?- ‘திருடுவதற்கு எத்தனை சந்தர்ப்பங்கள் வேண்டுமானாலும் அளிப்பேன்; திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பங்கூட அளிக்க மாட்டேன்’ என்று மனிதன் ஒற்றைக் காலில் நிற்கும்போது!
எளிதில் சமாளித்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்துடன் கால்கள் போன வழி நடந்து வந்த முத்துவை, சினிமா தியேட்டர் ஒன்று கவர்ந்து இழுத்தது – அடேயப்பா! என்ன கூட்டம், என்ன கூட்டம்! – வெறும் நிழலைப் பார்த்து மயங்க இத்தனை கூட்டமா?
ம், எதுவாயிருந்தால் என்ன? – பொழுது சீக்கிரம் போக மாட்டேன் என்கிறது இவர்களுக்கு! ஆனால் தன்னைப் போன்றவர்களுக்கோ? – அதே பொழுது சீக்கிரம் போய்விடுகிறது!
விஷயம் ஒன்றுதான்; ஆனால் வித்தியாசம்?
இந்த ‘ஆறு மணி’ மட்டும் தனக்காக இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால்? – அந்த நாலணா, அந்த ஒரே ஒரு நாலணா தனக்குக் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாமல்லவா?
சரி, அதைப் பற்றி இப்போது எண்ணி பிரயோசனம்?-இழந்த சந்தர்ப்பம் இழந்ததுதான்!
இப்படி நினைத்தவனாய் அவன் மேலே ஓர் அடி எடுத்து வைத்தபோது, திருடன், திருடன்! பிடியுங்கள், பிடியுங்கள்! என்று யாரோ அலறும் சத்தம் – அதே உல்லாசப் பேர்வழி, தன்னை ஹோட்டல் ஹெவனுக்கு அழைத்துக்கொண்டு வந்த அதே உல்லாசப் பேர்வழி, தனக்கு சற்று தூரத்தில் ஓடும் ஒருவனைச் சுட்டிக் காட்டி மேற்கண்டவாறு அலறிக் கொண்டிருந்தான்!
அதற்குள் அவனைச் சூழ்ந்து கொண்ட ஒரு கூட்டம், “திருடனா! ஏதாவது அடிச்சிகிட்டுப் போயிட்டானா, என்ன?” என்று ‘துக்கம் விசாரிக்க’ ஆரம்பித்தது.
“ஆமாம், ஸார்! என் பர்ஸை அடிச்சிகிட்டுப் போயிட்டான், ஸார்!” என்றான் அவன் அழமாட்டாக் குறையாக.
“எவ்வளவு இருந்தது, அதில்?” என்று குத்திக் கிளறினார். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.
“நானூறு ரூபாய்க்குமேல் இருக்கும், ஸார்!” -இது அவனுடைய பிரலாபம்!
“ச்சோச்சோ! அத்தனை ரூபாயை எடுத்துக் கொண்டு இந்த மாதிரி இடத்துக்கு வரலாமா, ஸார்?” – அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இன்னொரு வருடைய அனுதாபம் இது!
இந்தப் பிரலாபமும் அனுதாபமும்தான் அங்கே எதிரொலித்தனவே தவிர, திருடனைப் பிடிக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை -அந்தச்சமயம் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரே ஒரு போலீஸ்காரரைத் தவிர!
அவர்தான் என்ன செய்வார், பாவம்!-ஓடும் திருடனின் கையிலே மின்னிக்கொண்டிருந்த கத்தி அவரையும் அவ்வளவு எளிதில் அவனை நெருங்க விடாதபோது?
இவையனைத்தையும் ஒரு கணம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற முத்து, ‘பைத்தியக்காரர்கள்! ஓடுபவனின் கையில் ‘பர்ஸ்’ இருக்காது என்கிற ‘தொழில் நுட்பம்’ இவர்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். பிறகு, அந்த உல்லாசப் பேர்வழியைச் சுற்றி நின்ற கூட்டத்தை நோக்கி ஒரு நோட்டம் விட்டான் – அவ்வளவுதான்; எடுத்த ஆசாமி புலப்பட்டு விட்டான் அவனுடைய எறும்புக் கண்களுக்கு! – உடனே பாய்ந்து சென்று அவனிடமிருந்த பர்ஸைப் பிடுங்கி அந்த உல்லாசப் பேர் வழியிடம் கொடுத்துவிட்டு, “ஏமாந்து நானூறு ரூபா கொடுத்தாலும் கொடுப்பீர்கள்; ஏமாறாமல் ஒரு நாலணா, ஒரே ஒரு நாலணாகூடக் கொடுக்க மாட்டீர்கள், இல்லையா?” என்றான் அவன்.
இதைக் கேட்டதும் அவன் எதிர்பார்த்தபடி அந்த உல்லாசப் பேர்வழி அவமானத்தால் குன்றிஅப்படியே நின்றுவிடவில்லை-அந்த மான அவமானமெல்லாம்தான் அவனைப் போன்றவர்களுக்குக் கிடையாதே? அவற்றைத்தான் தங்கமாகவும், வைரமாகவும், நோட்டுக் கற்றைகளாகவும் அவர்கள் மாற்றிக்கொண்டு விடுகிறார்களே? – எனவே, முத்து கொடுத்த ‘மணிபர்’ஸை முத்துவின் கையிலேயே வைத்து மூடிப் பிடித்துக்கொண்டு, “எல்லாம் உன்னுடைய திருவிளையாடல்தானா? இந்த நாடகமெல்லாம் என்னிடம் பலிக்காது!” என்று உறுமிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தான் அவன்.
“அகப்பட்டுக் கொண்டானா, ஆசாமி?” என்று நீட்டி முழக்கிக் கேட்டுக்கொண்டே அவனுக்கு அருகில் வந்தார் ஒருவர்.
“அதுவும் சும்மாவா, கையும் களவுமாக!” என்றார் அவரைத் தொடர்ந்து வந்த இன்னொருவர்.
அதற்குள் அங்கே வந்த ஸி.ஐ.டி. ஒருவன், ‘வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை ; அதற்குள் ஆரம்பித்துவிட்டான், தன் கை வரிசையைக் காட்ட!’ என்று ‘முத்தாய்ப்பு’ வைத்தபடி முத்துவின் கழுத்தில் கையை வைத்துத் தள்ளிக்கொண்டே எதிர்த்தாற்போலிருந்த போலீஸ் வா’னை நோக்கி நடந்தான்.
“இல்லை ஸார், நான் திருடவே யில்லை, ஸார்!” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் முத்து – கேட்கவில்லை; போலீஸார் கேட்கவேயில்லை!
ஏண்டா, திருட்டுப் பயலே! உள்ளே எப்படியிருந்தாலும் வெளியே ‘அந்தஸ்து வாய்ந்த பிரமுக’ராக விளங்கும் அந்த உல்லாசப் பேர்வழியின் வார்த்தைக்கு முன்னால் உன்னுடைய வார்த்தை எடுபடுமாடா?-போ! திருந்தியது போதும்; நீ திருடனாகவே சிறைக்குப் போ!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.