கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 3,129 
 

பஸ் வந்து நின்றதுமே, ஏறுவதற்கு புஷ்பவனம் பிள்ளை மிகவும் அவசரப்பட்டார்.

“ஏறாதே! எறங்கறவங்களுக்கு வழி விடு” என்ற கண்டக்டரின் மரியாதையான(!) அறிவிப்பு அவரைச் சற்றுத் தயங்கவைத்தது.

அது ஒரு டெர்மினல். அத்துடன் நின்று திரும்ப வேண்டிய பஸ்தான் அது. இன்னும் பதினைந்து நிமிஷங் களுக்கு மேல் நிற்கும். கும்பலும் இல்லை. இருந்தாலும் பிள்ளையின் இயல்பான ஜாக்கிரதையுணர்வு காரணமாய் முன்னதாக ஏறிவிடத் துடித்தார்.

எல்லோரும் சாவகாசமாக இறங்கி, கண்டக்டரும் டிரைவரும் டீ குடிக்கப் போகும் வரை, பிள்ளை பொறுமையின்றித் தவித்தார். வண்டி காலியானதும் அவசரமாய் ஏறி முன் இருக்கை ஒன்றில் சன்னல் ஓரமாக உட்கார்ந்த பிறகுதான் ஆசுவாசமாயிற்று. வண்டி அநேக மாகக் காலிதான். அவரைப்போல அவசரப்பட்டு ஏறிய ஓரிருவர் தவிர வண்டி காற்றோடிற்று.

பிள்ளை சுற்றுமுற்றும் பார்த்தார். பேசக் கூடியபடி யாரும் அருகில் இல்லை . அவருக்குப் பேச, வாய் தினவெடுத்தது. பேசாமல் வாய்மூடி மௌனியாய்ப் பயணம் செய்வது என்பது அவருக்குச் சிரமமான காரியம். யாரிடமாவது எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும். பக்கத்தில் அமர்ந்திருப்ப வரிடம் வலியப் பேச்சுக் கொடுத்து, இறங்கும்வரை பேச்சை வளர்த்துக் கொள்வதில் அவருக்குச் சிரமமேது மிராது. மற்றவர்களுக்குச் சிரமமாக இருந்தால் தான் உண்டு. மணிக் கணக்கில், பக்கத்துப் பக்கத்தே அமர்ந்திருந்தாலும், அறிமுகப்படுத்தா விட்டால் பேசாத வெள்ளைக்காரனது பண்பு அவருக்கு அசாத்தியமான விஷயம் மட்டுமல்ல – அது எப்படிச் சாத்தியம் என்றும் மலைக்க வைத்தது.

பத்து நிமிஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிள்ளையின் அருகில் யாரும் வந்து அமரவில்லை. அவருக்கு அது பெரிய குறையாக இருந்தது.

அப்போது, “வணக்கங்க பிள்ளை!” என்ற குரல் கேட்டு அந்தப் பக்கம் திரும்பினார். ‘அட இவுரு போலீஸ்காரருல்லே!’ பிள்ளைக்குத் துணுக்குற்றது. முன்பே பரிச்சயமான ஆள்தான் என்றாலும் போலீ காரர் என்றாலே, அவரைப் பொறுத்த வரை பயத்தின் சின்னம்!

வந்தவர் ‘மப்டி’யில்தான் இருந்தார் என்றாலும் அவரை போலீஸ் சீருடையில் கற்பனை செய்து பார்த்து மிரண்டார் பிள்ளை, பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையே என்று ஏங்கியவருக்கு, இந்தத் துணை மிரட்சியை உண்டு பண்ணியது. ஆனால், பிள்ளையை மேலும் மிரளச் செய்யாமல், போலீஸ்காரர் அவரருகே உட்காராமல் சற்று எட்டவே வேறு இருக்கையில் உட்கார்ந்தபடியே, “என்ன சௌக்கியம்தானே?” என்று குசலம் விசாரித்தார்.

அருகே உட்காராமல், சற்று தூர உட்கார்ந்ததில் நிம்மதியடைந்த வராய், “ஆமா! ஆமா! சௌக்கியத் தான்” என்று புன்சிரிப்பாய், சொன்னார். ஆனாலும் ‘இதென்ன இந்த ஆள் தானாகவே வலிய வணக்கம் சொல்கிறான்?’ வழக்கமாக இவர் தான், சுமுகத்தை வேண்டி, அவர்கள் பாராது போனாலும், வலிய, ‘வணக்கம்’ சொல்லிச் சிரிப்பார். தன்னிடம் அவர்களுக்குப் பகையில்லையே என்பதைச் சோதிக்க வேண்டி, அவர் அப்படிச் செய்வது வழக்கம். அதற்குமேல் ஏதும் அவர் களிடம் அவர் வைத்துக் கொள்வதில்லை. போலீஸ்காரர்களது சிநேகமும், விரோதம் போலவே ஆபத்தானது என்பது அவரது தீர்மானம். அதனால் இப்போது இந்த ஆசாமி வலிய வணக்கம் சொன்னதுமல்லாமல், குசலமும் விசாரிக்கவே பிள்ளைக்கு யோசனையாயிற்று. இது அவருக்குக் கௌரவமா அல்லது வேறு ஏதாவது தலைவலியா!

கொஞ்சங் கொஞ்சமாய் வண்டி நிரம்பி, கிளம்பும் நேரம் ஆகி விட்டதால், டிரைவரும், கண்டக்டரும் வந்து ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டது. இன்னும் யாரும் பிள்ளையின் பக்கத்து இருக்கையில் வந்து அமரவில்லை . பேச யாரும் கிடைக்காத அலுப்பில் கொட்டாவி விட்டபடி, ஜன்னலில் தலை சாய்த்துக் கண்களை மூடினார்.

“எங்க – நம்மூருக்குத்தானே?” என்ற குரல் அருகில் கேட்கவே. திடுக்குற்றுக் கண் திறந்தார் பிள்ளை . மறுபடியும் சின்ன அதிர்ச்சி! போலீஸ்காரர்தான் அவரருகே வந்து அமர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

“இல்லே…. உளுந்தூர்பேட்டை வரைக்கும்” என்று தடுமாறினார் பிள்ளை.

“உளுந்தூர்பேட்டையா? நல்லதாப் போச்சு! நானும் அங்கதான்!”

யாருக்கு – எப்படி ‘நல்லாதாப் போகும்’ என்று பிள்ளைக்குப் புரியவில்லை . ஆனால், ‘ஐயையோ! அதுவரைக்கும் அருகிலேயே உட்கார்ந்திருக்கப் போகிறானோ! கடவுளே! இவனை எப்படித் தவிர்ப்பது? பேச நல்ல ஆள் வந்து சேர்ந்தான்!’ என்று பிள்ளைக்குக் கசந்தது. ஆனால் வாய் எந்திர கதியாய் “அதுக்கென்ன வாங்க! இப்ப – எங்க – உளுந்தூர்ப்பேட்டையிலே தானே வேலே?” என்றது.

“அடடே! உங்களுக்குத் தெரியாதா? இப்ப நான் டூட்டியிலே இல்லியே!”

அப்பாடா! அப்போது பயமில்லை ! நிம்மதியாகப் பேசலாம்.

“டூட்டிலே’ல்லியா? ஏன் அதுக்குள்ளே ரிட்டேர் ஆயிட்டீங்களா?”

“அதுக்கு இன்னும் எட்டு வருஷம் கெடக்கே!”

“பின்னே?”

“இப்ப தான் ‘ஸஸ்பெண்டு’லே இருக்கேன்.”

“அய்யய்ய! அதென்ன கூத்து?”

“அதயேன் கேக்குறீங்க போங்க! இந்தப் போலீஸ்காரப் பொழப்பே நாய்ப் பொழப்புதான். ஒரு திருட்டுப் பயலப் புடிச்சிக்கிட்டு வரப் போ, அவந்தப்பி ஓடிப்புட்டான். அப்ப ‘பாரா’ நாந்தான். அதனாலே தற்காலிக வேலை நீக்கம் பண்ணிப் புட்டாங்க.”

“அட்டே அப்புறம், இப்ப என்ன செய்யறீங்க?” என்றார் பிள்ளை அனுதாபத்துடன்.

“என்ன செய்யறது? ஓடிப் போனவன் ஆம்புடுற வரைக்கும் நம்ம தலையெழுத்து அதான். வாய் விட்டுச் சொல்ல முடியாத கஷ்டம்!”

‘பளிச்’ சென்று பிள்ளைக்கு இப்போது புரிதல் ஏற்பட்டது. ‘ஓகோ! அதான் இவ்வளவு குழைவா?’

‘வலிய வணக்கம் சொல்லும் போதே நெனச்சேன் – எதுக்கோ இது அஸ்திவாரம்னு’ என்று உஷாரானார் பிள்ளை. ‘சரி, பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்’ – என்று தீர்மானித்தார்.

“அப்’றம் கேட்டீங்களா! இடி மேல இடின்னு. சம்சாரம் வேற பிரசவத்துலே தவறிட்டது…” என்று கரைந்தார் போலீஸ்காரர்.

“த்சொ … த்சொ …” என்பதுடன் நிறுத்துக் கொண்டார் பிள்ளை..ஆனால் போலீஸ்காரர் அத்துடன் நிறுத்திக் கொள்கிற மாதிரி இல்லை.

ஆனால் மறுகணம். பேச்சை வளர்க்க விரும்பாத நிலையிலும் தன்னிச்சையாய், “புள்ளைங்க ஏதும்….” என்று வாய் இரக்கமாய்க் கேட்டது.

“அதயேன் கேக்குறீங்க? குஞ்சும் குளுவானுமாய் நாலு. நாலும் பொட்டப் புள்ளைங்க! எப்பிடித் தான் அதயெல்லாம் கரையேத்தப் போறனோ?” என்று பிரலாபித்தார் போலீஸ்காரர்.

‘சரி, அடுத்த கட்டம் – ‘பிள்ளை , ஏதாவது உதவி செஞ்சா…’ என்று கேட்கப் போகிறார். எப்படித் தப்பப் போகிறோம்?’

“அடடா! அப்பறம்?” என்று மெப்புக்கு உருகினார் பிள்ளை.

‘அப்றம் என்ன? ஏதோ செய்யிறேன். உங்க மாதிரி புண்ணிய வாங்க தெம்புலே காலம் ஓடுது.”

போச்சு! போச்சு! இவ்வளவு கஷ்டத்தையும் கேட்டுவிட்டு, எப்படி இல்லையென்று சொல்லுவது?

பிள்ளை முந்திக் கொண்டார். அவருக்குச் சமாதானம் சொல்கிற மாதிரி தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் பெரிது படுத்திப் பேச ஆரம்பித்தார்.

“கஷ்டப்படுறவங்களத்தாங்க கடவுள் சோதிக்கிறாரு! நம்ம சுத மட்டும் என்ன வாழுது? ஊட்ல சதா நோயும் நொடியும் புடுங்கித் திங்கிது. டாக்டருக்கு – ஆவுற செலவு கொஞ்சநஞ்சமில்லே வெவசாயமும் படுத்துக்கிட்டது. காலா காலத்துலே மழையில்லாம வருமானமே மட்டுப்பட்டுப் போச்சு!” என்று வரப்போகிற வெள்ளத்துக்கு அணைபோட முயன்றார்.

“அட என்னங்க பிள்ளை? நீங்களும் நானும் ஒண்ணாயிடுமா? ‘ஆன’ப் படுத்தா ‘குதிர’மட்டம் பாங்க. பூனபடுத்தா? தரையோட தரைதான்! உங்க கஷ்டமெல்லாம் என்னா கஷ்டங்கள் ஒரு மழ பெய்ஞ்சா உங்களப் புடிக்க முடியுமா? எங்கள மாதிரி ‘அண்ணாடம் காச்சி’யா நீங்க?” என்று பிள்ளையை நழுவ விடாமல் தேக்கினார் போலீஸ்காரர்.

‘சரி! பேச்சு வளர்ந்து கொண்டே போகிறது. வேறு வழியில் முயற்சிக்க வேண்டும்’ என்று தீர்மானித்தவராய் ஜன்னல் பக்கம் சாய்த்து லேசாகக் கண்களை மூடித் தூக்கம் வருகிற மாதிரி பாவனை செய்தார் பிள்ளை.

அதற்குப் பலன் கிடைத்தது. அவர் ஏதோ பேச முயன்று இவரிடமிருந்து பதில் இல்லாததால், மௌனமானார். பிறகு இறங்கும் டெம் வரும்வரை பிள்ளைக்கு நிம்மதிதான்! பொய்த்தூக்கம் தொடர்ந்தது.

இறங்குமிடமும் வந்தது. பஸ் நின்றதும் ஒவ்வொருவராக இறங்குவது தெரிந்தது. லேசாக அரைக் கண் மூடியபடியே, போலீஸ்காரர் இறங்கட்டும் என்று காத்திருந்தார் பிள்ளை. ஆனால் போலீஸ்காரர் அவரை அப்படி விட்டுவிடவில்லை.

“பிள்ளை! பிள்ளை என்ன தூக்கம் கலையிலியா? உளுந்தூர்பேட்டை வந்தாச்சு!” என்று குரல் கொடுத்தார். பிள்ளைக்கு உதறியது. இனித் தப்ப முடியாது என்பது நிச்சயமாயிற்று.

“ஆங்… வந்துடுச்சா? தோ வர்றேன்! நீங்க எறங்குங்க!” என்று சமாளித்தார் பிள்ளை,

“வாங்க,” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கி நின்றார் போலீஸ்காரர். பிள்ளை அரைக்கண்ணைத் திறந்து, அவர் போய்விட்டாரா என்று பார்த்தார். அவர் போகவில்லை – இவருக்காகக் காத்திருக்கிறார் என்று தெரிந்தது. ‘சரி! காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடப் போவதில்லை’ என்று நொந்தபடி சாவதானமாக எழுந்து. இறங்கி வந்தார். அதற்கு மேலும் தாமதம் செய்ய இயலவில்லை.

“அப்ப நான் வுரட்டா?” என்று போலீஸ்காரரிடம் விடை கேட்டார் கடைசி நப்பாசையுடன்.

“அட போலாம் – வாங்க பிள்ளை ! ஒருகப் காப்பி சாப்புட்டுப் போறது!” என்று உரிமையோடு அழைத்தார் போலீஸ்காரர்.

“அய்யய்ய! இப்ப என்னங்க காப்பி? நா ஊட்லியே சாப்புட்டு தானே வந்தேன்?” என்று பதறினார் பிள்ளை,

“அட சர்த்தான் வாங்க பிள்ளை! ஊட்ல சாப்பிட்டது அப்படியே குந்திக் கிட்டிருக்குமா! வெறும் வென்னித் தண்ணிதானே? அதுக்கென்ன நேரம் காலம்?” என்று போலீஸ்காரர் கிடுக்கிப் பிடி போட்டார்.

“இல்லிங்க இல்லிங்க வேணாம்! நமக்கு ஒத்துக்காது!” என்று பிரலாபித்தபடி, தப்பிக்க முயன்ற பிள்ளையை அவர் விடுவதாக இல்லை.

“சும்மா வாங்க! உங்க ஊருக்கு வாரப்பெல்லாம் நீங்க உட்டுடுறீங்களா? காபி, டிபன்னு சாப்டாமே உட்டுறுக்கிங்களா? நீங்க வராமே நா உடப்போறதில்லே” என்று பிள்ளையைப் பிரிகட்டி இழுத்தார். வேறு வழியில்லை.

‘சரி! பகவான் விட்ட வழி. எவ்வளவு கிழியப் போவுதோ?’ என்று நெஞ்சுக்குள் அழுதபடி, பலியாடு போல, போலீஸ்காரர் பின்னே நடந்தார் பிள்ளை.

பஸ் நிறுத்தத்துக்கு எதிரே இருந்த ஹோட்டலில் நுழைந்து அமர்ந்தார்கள். “என்ன சாப்டுறீங்க? என்னப்பா சர்வர்? என்னா இருக்கு” என்று கேட்டார் போலீஸ்காரர்.

இவனுங்க வெவகாரமே இப்பிடித்தானே? வெறுங் காப்பின்னு கூப்டுவான். அப்புறம், அது இதுன்னு அஞ்சு பத்துக்கு வேட்டு வச்சுடுவான்! என்று பிள்ளைக்கு உள்ளுக்குள் எரிந்தது.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். வெறும் காப்பி மட்டும் போதும். அதுகூட நீங்க இம்மாம் புடிவாதம் புடிச்சிங்கன்னுதான்!” என்று உதறினார்.

ஆனால் போலீஸ்காரர் விடவில்லை. ‘நீங்க பேசாம இருங்க ஏதாவது டிபன் சாப்டுத்தான் ஆகணும். என்னப்பா இருக்கு?” என்று தீவிரமாய் அவர் முயலவும், “அய்யய்ய! நீங்க வேணா டிபன் சாப்டுங்க; எனக்குக் காப்பி மட்டும் போதும். எனக்கு ஓட்டல் பண்டம்லாம் ஒத்துக்கறதில்ல”, என்றார். பிள்ளை, தன் செலவையாவது குறைக்கும் நோக்கத்துடன்.

அதற்கு மேலும் போலீஸ்காரரால் இவரைச் சமாளிக்க முடியவில்லை. “சரி! எனக்கு மட்டும் எதுக்கு உங்கள உட்டுட்டா சாப்டறது? இரண்டு காப்பி மட்டும் கொண்டாப்பா போதும்” என்று இறங்கி வந்தார்.

காப்பி வந்தது. பில் வர வேண்டும். தான்தான் தரப் போகிறோம் என்றாலும் ‘ஆர்டர் பண்ணியவரிடம் தானே சர்வர் பில்லைக் கொடுக்கிற வழக்கம். அப்படித் தப்பிக்க முடிந்தாலும் தேவலை’ என்ற கடைசி நப்பாசை எழுந்தது பிள்ளைக்கு. ஆனால் மரபை எல்லாம் பின்பற்றுகிற வழக்கம் சர்வருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவன், கைக்கு அருகே இருந்த போலீஸ்காரரைத் தாண்டி வந்து, பிள்ளையிடம் பில்லை நீட்டினான். ஒரு வேளை ஆர்டர் கொடுத்தது யாராக இருந்தாலும், பில்லுக்குப் பணம் தரப்போகிற அப்பிராணி யார் என்று அனுபவபூர்வமான யூகம் அவனுக்குச் சாத்தியமாகியிருக்கவேண்டும்.

பிள்ளையின் முகத்தில் ஏமாற்றமும் எரிச்சலும் போட்டியிட, வேண்டா வெறுப்புடன் கை நீட்டி பில்லை வாங்கினார். ஆனால் போலீஸ்காரர் எட்டி அந்த பில்லை அவரிடமிருந்து பறித்துக் கொண்டார். பிள்ளைக்குத் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. மனம் குதூகலமாய் உணர, வாய் உபசாரத் துக்கு, “ஏன்… நீங்க…?” என்றது. ஒப்புக்குக் கையை நீட்டிப் பில்லை மீட்பது போலப் பாவனை செய்தார்.

“நல்லக் சுத போங்க! உங்களப் புடிச்சு இழுத்தாந்து சாப்பிடச் சொல்லிட்டு, உங்களத் தரச் சொல்றதா?” என்று பிள்ளையை மடக்கி விட்டு, எழுந்தார் போலீஸ்காரர்.

“பரவாயில்லீங்க! உங்களுக்கு இப்பக் கஷ்டகாலம் வேறே! இப்ப போயி, பில்ல நீங்க தர நா உடலாமா?” என்று தைரியமாகப் பில்லைப் பறிக்க முயன்றார் பிள்ளை. ஆனால் பில், கௌண்டருக்குப் போய்விட்டது. இனிப் பயமில்லை.

பணத்தைக் கொடுத்துவிட்டு, வெளியே நடந்தபடி போலீஸ்காரர் சொன்னார். “கஷ்டம் எப்ப இல்லீங்க! அதுக்காக, உத்த மனுஷங்களைக் காப்பி சாப்டக் கூடச் சொல்லாம உட்டுடுறதா? நீங்கல்லாம் என்ன நா, வாங்கிக் குடுத்து சாப்டுற மனுசாளா? ஏதோ இன்னிக்கு எனக்கு அதிர்ஷ்டம்! பெரிய மனசு பண்ணி வத்திங்க. அப்ப நா வரட்டுங்களா?” என்று, சொல்லிவிட்டு, பிள்ளையின் பதிலுக்குத் காத்திராமலே நடந்தார்.

காத்திருந்தாலும் பிள்ளைக்கு சொல்ல என்ன இருக்கிறது? பொட்டில் அறை வாங்கிய மாதிரி விக்கித்துப் போய் நின்றார்.

– ஆகஸ்ட் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *