கொண்டப்பாவை எல்லாரும் பரம சாது என்று சொல் வார்கள். அப்படிச் சொல்வது அவனுடன் அலுவலகத்தில் பணி ஆற்றுபவர்கள்தாம். சிலர், பசு என்றும் கூறுவார்கள், மனிதனாகிய அவனை. அப்படிச் சொல்வது இழித்துரைப்பதாகாது. அவ்வளவு சாந்தமானவன் என்பதை அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். அவனது அதிகாரிகள், அவனை ஒரு லட்சிய எழுத்தராக மற்றவர் களுக்குக் குறிப்பாகப் புதிதாக அலுவலில் சேர்ந்த கத்துக் குட்டி களுக்கு உதாரண புருஷனாகக் காட்டுவார்கள்.
கொண்டப்பா தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. அதனால், வயதாகாமல் இருப்பதில்லையே. ஆகிக் கொண்டுதான் இருந்தது.
சுதந்தர தினத்தன்று முதலமைச்சர் கோட்டையில் கொடி ஏற்றிச் சிரிக்கும் போதெல்லாம். அவனுக்கு ஒரு வயது ஏறி, இன்று நாற்பதை எட்டிவிட்டிருந்தான். நில அளவைப் பதிவேடு அலுவலகம் என்கிற, அழுக்கும் குப்பையுமாக காகிதங்கள் சுவர் பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓர் அலுவலகத்தில் அவன் ஓர் எழுத்தராகவும் பணி ஆற்றிக்கொண்டிருந்தான். தான் வகிக்கும் உத்தியோகப் பொறுப்பை அவன் என்றும் குறைத்து மதிப்பிட்டிருந்தவன் இல்லை. மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒரு பணியைத் தான் செய்து வருவதாகவும், தன் பணியைத் தான் நிறுத்திவிடும் பட்சத் தில், மாமூல் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய்விடும் என்பதாகவும் அவன் நினைப்பதுண்டு. அந்த நினைவு பல வேளைகளில் அவனை அச்சுறுத்துவதுண்டு. அவன் கணக்கில் நில அளவை நீர் மற்றும் மூச்சுக் காற்று மாதிரி, அது இல்லாமல் போன ஒரு நிலையில் மனிதர்கள் எவ்வாறு திகைத்துத் தடுமாறிப் போய்விடுவார்கள் என்பதை நினைக்க அவனுக்குக் குழம்பும். திகிலால், மயிர் கூச்செறிய தாற்காலியிலேயே புதைந்து போய் அவன் பல நேரங்களில் இருந்து விடுவதுண்டு.
அவன் உதாரண புருஷனானதற்கான காரணங்கள், நிறைய இருக்கவே செய்தன. காலை ஒன்பது நாற்பத்தைந்துக்கு, கடிகார முள்கள் ஆறரையில் நிற்பது போல் அவன் நாற்காலியில் இருப்பான், சரியாகப் பத்து மணிக்கு எல்லார் மேசைக்கும் ஆவார இலையில் வைத்து சம்சா வரும். அதைத் தொடர்ந்து சரியாகக் கழுவப்படாத, எச்சில் நீரில் கழுவப்பட்ட தேநீர் வரும். அதைத் தொடர்ந்து அலுவ லர்கள் புகைக்க, வெற்றிலை பாக்கு போட வெளியே செல்வார்கள், கொண்டப்பாவுக்கு இது போன்ற பழக்கங்கள் ஏதும் இல்லை, அவனிடம் அலுவல் காரணமாகக் கிராமத்துக்காரர்கள் வருவார்கள்,
கிராமத்துக்காரர்களைக் கண்டால், அலுவலர்களுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும். அவர்களை எளிதில் கலவரம் அடையச் செய்யலாம். ‘நிலமா? அப்படியென்றால்? உன் பரம்பரைக்கே நிலம் கிடையாது என்று ரிகார்டு சொல்கிறதே, அய்யா’ என்றால் போதும். அந்தக் கிராமத்துக்காரன் கிலி அடித்துப் போவான். அந்த நேரத்தில் மிகவும் சௌகர்யமாக முடிச்சவிழ்க்கலாம். காக்கா வடையைத் திருடிய கதையைப் படித்துத்தானே சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதலான அத்தனை கிரிமினல்களும் உருவாகியிருக்கிறார்கள்? ஆகவே ஒரு சாதாரண எழுத்தன் திருடுவது அல்லது லஞ்சம் பெறுவது தவறே ஆகாது. பரம்பரை பரம்பரையாக ஆகி வந்த தெய்வாம்சம் பொருத்தின நிலத்தை, அரசாங்கமே வடிவெடுத்து வத்திருக்கிற சர்வ வல்லமை கொண்ட ஆபிசர் சாபம் கொடுப்பது மாதிரி அப்படிச் சொன்னால், என்ன செய்ய? ஆட்டை, மாட்டை பெண்டாட்டித் தாலியை விற்றாவது அந்தக் கிராமத்து மனிதன் லஞ்சம் கொடுக்க முன் வருவான் தானே?
கொண்டப்பா லஞ்சம் வாங்குவதில்லை.
“நான் சம்பளம் வாங்குகிறேன்” என்பான் கொண்டப்பா. அவனுடன் பணி ஆற்றும் அறுபத்து ஆறு எழுத்தர்களில் எப்படியும் நாற்பது பேராவது லஞ்சம் வாங்குகிற அல்லது லஞ்சத்தில் தன் பங்கைப் பெறத் தயங்கவில்லை, அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் வேறாக இருந்தது. தங்களின் அலுவலக வருகைக்கு சம்பளம் என்றும், தாம் வேலை செய்ய லஞ்சம் என்றும் அவர்கள் தம் வாழ்வுக்குத் தத்துவம் வகுத்திருந்தனர்.
ராஜராஜன் காலத்து நில அளவைப் பதிவானாலும், ஓமந்தூரார் மற்றும் காமராசர் காலத்துப் பதிவு வேண்டுமானாலும் கூப்பிடு கொண்டப்பாவை என்பது அதிகாரிகளின் வழக்கமாக இருந்தது. சில மணித் துளிகளில் அவன் அதைக் கண்டுபிடித்துத் தந்துவிடுவான். கொண்டப்பா இல்லையென்றால், சில பதிவேடு களைக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் போய்விடும் என்பதை சகாக்கள் அறிந்தே இருந்தனர். ஆகவே, அவன் அந்த அலுவலகத் தின் அச்சாகவும் ஹிருதயமாகவும் இயங்கினான்.
எழுத்தர் தேவசகாயமானாலும், எழுத்தர் புராண மணி ஆனாலும், யார் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டாலும் அதை நிறைவேற்றுபவனாகக் கொண்டப்பா இருந்தான். டூப்ளே காலத்துப் பதிவு ஒன்று தேவைப்பட்டது அமலோற்பலம் அம்மாளுக்கு, அவள் விதவை, அதோடு ஏழை, இருந்தாலும் கூட, அவனிடமிருத்தும் குறைஞ்சது நூறு ரூபாயாவது கறந்து விட முடியும் ஓர் எழுத்தருக்கு. கொண்டப்பா காலணா வாங்காமால் அந்தக் காரியத்தைச் செய்து கொடுத்தான், விதவை, கண்ணால் ஜலம் விட்டாள். ஆனால் சக எழுத்தர்களோ அக்காரியத்துக்காக அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. அவன் வேண்டுமானால் லஞ்சம் வாங்காமல் இருக்கலாம். மற்றவர் கதி என்ன ஆவது? அவர்களை உத்தேசித்தாவது அவன் வாங்கி இருக்க வேண்டும். ஆகவே அவன் மேல் அவர்கள் நியாய மாக வருத்தப்பட்டார்கள். ‘வைக்கோல் போரில் கட்டின நாய் அவன்’ என்றார்கள், நாய் தானும் வைக்கோலைத் தின்னாது. பிறத்தி யாரையும் தின்னவிடாது. ஆகவே கொண்டப்பா ஒரு நாய். – தேவசகாயத்தின் மனைவிக்குக் குறைப் பிரசவம். அந்தக் காலத்தில் அவர் அலுவலகமே வரவில்லை. அவர் வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு அவனே செய்தான், எழுத்தர் புராண மணிக்குச் சென்ற புயல் மழையின் போது வீடு சரிந்துவிட்டது. அந்தக் காலத்தில், கொண்டப்பா தான் அவர் வேலையையும் சேர்த்துக் கவனித்தான்.
ஆகவே அவன் மேல் அதிகாரிகளாக விளங்கிய தேவலோக புத்திரர்களுக்கு அவன் மிகவும் விரும்பத்தக்கவனாக இருந்தான், நிலைமை இப்படியேச் சுமுகமாக இருந்திருக்குமானால், அவள் எழுத்தனாகவே காலத்தைக் கழித்து ஓய்வு பெற்றிருப்பான். ஆனால், நிலைமை வேறாக மாறியது. முட்டாள்கள் விதி என்பார்கள். கொண்டப்பாவும் விதியை நம்புகிறவன் தான்.
விதி ஓர் அரசியல்வாதி உருவில் வந்தது. கடா மீசை வைத்திருந்தான் அவன், இராசராச சோழன் தன் பெயர் என்று அவன் சொல்லிக் கொண்டான். அந்தப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் ஒரு மாதிரியானவர் தாமோ. வெள்ளைச் சட்டையும், அதி வெள்ளையாக வேஷ்டியும் அவன் அணிந்திருந்தான். மானம் கெட்டவர்களுக்குத்தான் மானத்தை மறைக்க எவ்வளவு நல்ல அடைகள் கிடைக்கின்றன. வண்ணத்தில் கரை போட்டிருந்த வேஷ்டி அது, நில அளவைப் பதிவு சம்பந்தமாக ஒரு பிரச்சினை யோடு அவன் வந்திருந்தான். அவனைக் கண்டதும் அதிகாரி அவன் பூட்ஸ் காலை நக்கி முத்தமிடத் தயாரானார்.
அந்த அதிகாரியின் ஜோஸ்யம் இங்குச் சொல்லத்தகும். அவர், மற்ற சில அதிகாரியைப் போலவே இன்னுமோர் அயோக்கியர். ஐ.ஏ.எஸ், காரர் என்பதால், சாமர்த்தியத் தனத்தில் அகில இந்திய அளவில் பரிட்சை கொடுத்துப் பாஸ் பண்ணியவர் அவர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதன் வர்ணமாகத் தானும் மாறி தன் தகுதியைப் பிழைக்க வைத்துக் கொண்ட அதி புத்திசாலி அவர். இந்த வர்க்கத்தில் தான், சிலருக்கு இயற்கை, முதுகெலும்பை வைத்துப் படைக்கவில்லையே. ஆகவே, குனிதலும் நிமிர்தலும், அவருக்கு மிகச் சுலபமாகக் கைவந்தது. அரசியல்வாதிகளிடம் மி குந்த விஸ்வாசமாக, இருக்கும் அவர், ஏழை ஜனங்களிடம் மிகுந்த கடுமையாக நடந்துகொள்வார். அழுக்கு வேஷ்டியும், திறந்த மேனியும், நாலு நாள் ஷவரம் செய்யப்படாத முகமுமாக வரும் விவசாயியை, ஒரு மனுஷ ஜீவனாக அவர் நடத்துவதில்லை . அந்த மாதிரி மனிதர்கள் தரும் வரிப்பணத்தில்தான் தனக்குச் சம்பளம் கிடைக்கிறது என்பதை மறந்து போனவர் அவர். ஆகவே, அவர் உயர் அதிகாரியாக இருந்தார்.
இராசராச சோழனைப் பார்த்ததும் அவர் தன் ஆறடி உயரமும் ஓர் அடியாகக் குறுகி, வாமன அவதாரம் பூண்டு, அடியேனுக்கு ஐயாக்கள் தரும் உத்தரவு யாது?” எனமிழற்றினார். – வேறு யாருக்கோ சொந்தமான நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரவேணும் என்று கருத்துத் தெரிவித்தார் சோழன், ‘உத்தரவு’ என்றார் அதிகாரி.
கொண்டப்பாவை அழைத்து மேற்படிக் காரியத்தைச் செய்யச் சொன்னார் அதிகாரி.
“என்னது.. இன்னொருத்தர் மேல் இருக்கும் பட்டாவை மற்றவர் மேல் மாற்றி எழுதுவதா? அது சாத்தியப்படாது” என்றான் கொண்டப்பா.
“இது என் உத்தரவ”
“கீழ்ப்படிய முடியாது”
பிணக்கு அந்த க்ஷணத்தில் ஏற்பட்டாயிற்று.
அடுத்த நாள், ஏதோ ஒரு பைலைக் கொண்டு போய் அவர் முன் கொண்டப்பா நீட்டியதுதான் தாமதம். அதை அவன் முகத்தில் விட்டெறிந்தார் அவர். ‘என் கண்முன் நிற்காதே. வெளியேறு. உன்னைத் தொலைத்துத் தலை முழுகுகிறேன்” என்று அவர் கத்தினார். கொண்டப்பா நோய் வாய்ப்பட்டான்.
வனதிராட்சை அம்மாள். அந்தக் காலத்திலேயே பத்தாம் வகுப்பு படித்தவள். அவள் தந்தை, தாத்தா எல்லோரும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்கள். பெரிய உத்தியோகத்தில் இருந்தார் கள், பெரிய உத்தியோகங்கள்; வசதி மிகுந்த குடும்பம். ஆறு சகோதரர்கள் உள்ள குடும்பத்தில், ஒரு சகோதரியாகப் பிறந்தவள் ஆகையால் சிரும் சிறப்புமாக வளர்ந்தவள். சகோதரர்கள் அறுவரும் பிரான்சில் பெரிய உத்தியோகம் வகித்தார்கள். ஆகவே, அங்கிருந்து ‘கதம்ப சோப்பும், பாப்பையாசென்ட்டும், பூதர் மாவும், துணிமணி களும் எல்லாம் அனுப்பி வைத்து, வளதிராட்சையை மணக்கச் செய்தார்கள். அதுவன்றியும், அவர்கள் வீட்டில் பெழோ கார் ஒன்றும் இருந்தது. அம்மான் பள்ளிக்கூடம் போவதிலிருந்து வேறு எங்கு போக வேண்டி வந்தாலும், காரில்தாள் பயணம் என்று அமைந்திருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் பண்டிகை நாள்களிலும் அப்பா ‘ஷாம்பெயின் ஊற்றிக் கொடுக்க, குடும்பத்தார் வட்டமாக அமர்ந்து குடித்துவிட்டு அப்புறம்தான் சோறு உண்பார் கள். வாரத்தில் மூன்று நாட்கள் கறியும், ஒருநாள் மீன் சோறும், ஒருநாள் எறால் சோறும், ஒருநாள் கோழிக் கறியும், ஒரு நாள் புலவும் என்று உணவு முறை அமைந்திருக்கும். சாயங் காலங்களில் மதுரமான மணம் கொண்ட சாம்பிராணிப் புகை படரவிட்டு, வனதிராட்சை அம்மாள் ஜபம் சொல்வாள். குடும்பத்தார் அவள் படிக்கக் கேட்கையில் கோயில் ஆர்மோனியம் வாகிக்கக் கேட்பது போல இருப்பதாக அவளின் அப்பாவும் அம்மாவும் கூறுவார்கள்,
வனதிராட்சை, தொட்டால் சிணுங்கியைப் போல் இருப்பதாக, அவளின் ஆசிரியைகள் சொல்வதுண்டு. அவளின் பள்ளிக்கூடத்து திரேக்தர் சந்தன மரி அம்மாள் ரொம்பவும் நல்ல மாதிரியான பொம்பளை என்று மிஷன் தெரு வட்டாரத்தில் சொல்லப் படுவதுண்டு, வனதிராட்சை அம்மாள் குடும்பத்துக்கு அவள் சுற்று வழியில் சொந்தக்காரியாயும் இருந்தான். வனதிராட்சை ஒருநாள் அகலமான டாலர் கோத்த செயின் அணிந்து கொண்டு பள்ளிக் கூடம் வந்திருந்தாள். அகலம் என்றால் உள்ளங்கை அகலம், அத்தனையும் வைரம் பதித்த டாலர். அழகாகத் தான் தோன்றும், அபரணங்களை அழகானவை என்று ஒப்புக் கொள்ளும் மனமி ருந்தால், அன்றைய தேதியில்தான் சந்தனமரி அம்மாள் தன் தாய்க்கு முனிசிபாலிட்டி லைசென்ஸ் வாங்கி, அந்த நம்பரை ஓர் இரும்புத் தகட்டில் அடித்து நாயின் கழுத்தில் ஒரு செயின் மாதிரி தொங்க விட்டிருந்தாள். வனதிராட்சையின் செயினைப் பார்த்ததும், தவிர்க்க முடியாமல் அந்த அம்மாளுக்குத் தன் நாயின் கழுத்துச் செயின் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
அவள், விகண்டையாக, ‘அடடே… எங்க வீட்டு ஜிம்மி மாதாயே இருக்கியே என்றாள். கிண்டல்தான். ஆனால் சுற்றி நின்ற மகிமை அம்மாள், கோந்திலீன், மெர்சி மேகிலீன் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு சிரிக்கவே, வனதிராட்சைக்குப் பெரும் அவ மானம். தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டான். அந்த நிமிஷத்திலிருந்தே சந்தனமரி அம்மாளை அவள் வெறுக்கத் தொடங்கினான். அந்த அம்மாளாவது அந்நியர், சொந்த அப்பா வைக்கூட அவள் பல நாட்கள் வெறுத்துப் பேசாமல் இருந்தது உண்டு ,
பிரான்ஸ் தேசத்தில் பன்றிக்குட்டிகள் சிறந்த உணவு கொடுக்கப் பட்டு சிறப்பாகப் போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுபவை. உணவுக் காகவே அவை வளர்க்கப்படுவதால், அழுக்கைத் தின்னாமல் பாதுகாக்கப்படுபவை. பன்றிக் குட்டிகளாக இருக்கையில் பார்க்க வெகு அழகாய் இருக்கும், உடம்பு முழுக்க குறும்புத்தனம் நெகிழ்ந்து ஓடும். தூக்கி வைத்துக் கொஞ்சலாம் போல இருக்கும். வாலில் ஆங்கில எழுத்து ‘ஓ’ மாதிரி சுழிக்கையில் வெகு தமாஷ், யானைக் கன்றுகளுக்கும், பன்றிக் குட்டிகளுக்கும் நிறைய ஒற்றுமை அதன் தோற்றத்திலும் விளையாட்டிலும் உண்டு, பிரியத்துக்குரிய இவற்றை மனிதர்கள் மேல் சார்த்தி என் அருமை பன்றிக் குட்டியே’ என்றால் அது தவறாகிவிட்டது. அப்பாவும் அந்த எண்ணத்தில் தான் விளையாட்டாக எல்லோர்க்கும் எதிரில், என் அருமை வெள்ளை வீட்டு வளர்ப்புப் பன்றிக் குட்டியே’ என்றார். குடும்பத்தார்க்கு முன்னால்தான் அப்படிச் சொன்னார். அப்படிச் சொன்னதும் கேட்டவர்கள் சிரிப்பார்கள் தானே?
வனதிராட்சை அம்மாள் கோபித்துக் கொண்டாள். கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு, மூன்று நாட்கள் பேசாமல் இருந்தாள். அம்மாவேகூட, கோழி மிதிச்சா குஞ்சு முடமாகும் என்று கேட்டாள். வனதிராட்சை அப்படித்தான். அவளிடம் நேராகத்தான் எதுவும் பேச முடியும். சுற்றி வளைத்தோ, விகண்டையாகவோ யாரும் எதுவும் பேசிடக் கூடாது. அப்படிப் பேசுவது தன்னை இழிவுபடுத்தும் பேச்சு என்று அந்த அம்மாளுக்கு எண்ணம்.
வனதிராட்சைக்குப் பத்து வயதைத் தாண்டும் முன்னரே, அம்மா தாவணி போடச் சொல்லிவிட்டாள். அம்மாவின் உத்தரவு அது என்றால் கீழ்ப்படிய வேண்டியது தானே? காரணம் தெரியா மலே தாவணி அணிந்தாள். பதினைந்து வயசு ஆன உடனே அம்மா அவளைக் கல்யாணம் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்தாள். கல்யாணம் என்றால் என்ன? வனதிராட் சைக்குத் தெரியாது. அம்மா சொன்னாள். அம்மா கொடுத்த புது உடைகளை உடுத்திக் கொண்டான்.
அப்பா சொன்னார் அம்மாவிடம், ‘கர்த்தர் நம்மிடம் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் நம் தானியக் களஞ்சியம் நிரம்பி வழிகிறது. நம் கிருஷத்துக்குள்ளே வெள்ளிப் பணத்தின் குலுங்கல் சப்தம் கேட்கிறது. நம் மந்தையில் ஆடுகளும் பன்றிகளும் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நம் ஒரே புத்திரிக்கு ஏற்கெனவே, பணக்காரனாக இருப்பவன் வேண்டாமே. ஏழையானாலும், படிப்பும் பண்பும் உள்ள மனிதனாக ஒருவனைப் பார்த்து அவனுக்கே நம் புத்திரியைக் கொடுத்து ஒரு புது கனவானை உருவாக்கலாமே” என்றார் அப்பா.
“கர்த்தருக்குச் சித்தமானால் அந்தப் படியே ஆகட்டுமே” என்றாள் அம்மா. கர்த்தர் மனசுக்குள் கொண்டப்பா இடம் பெற்றிருந்தான் போலும்,
உயர் அதிகாரி என்று சொல்லப்பட்டவன், கொண்டப்பாவைத் தன் அலுவலகத்துக்கு அழைத்தான். அவன் ஓர் ஐ.ஏ.எஸ். அலுவலன், வடநாட்டுக்காரன். அவனுக்கு இந்தத் தேசத்தின் பழக்க வழக்கம், கலாசாரம், பண்பாடு மற்றும் மனிதரின் தகுதிகள் எதுவும் தெரியாது. |
அவன் கொண்டப்பாவைப் பார்த்துச் சொன்னான். அவனுக்கு ஆங்கிலம் கூடச் சரியாகப் பேச வரவில்லை . ஹித்தியும் ஆங்கிலமும் கலந்து பேசினான்.
“கொண்டப்பா… நீ மேல் அதிகாரிகளோடு ஒத்துழைக்க மறுக்கிறீராமே?”
“இல்லை , ஐயா, அப்படி இல்லை.”
“பின் அவர் உம்மைப் பற்றி எதற்கு அநாவசியமாக ரிபோர்ட் அனுப்புகிறார். அவருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?”
“இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். அவரைப் பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது ஐயா.”
“ஒரு மேல் அதிகாரியைப் பற்றி இப்படி ஓர் அபிப்பிராயத்தை நீர் சொல்லலாமா?”
“மன்னிக்க வேண்டும், நான் அபிப்பிராயம் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்ததைத் தாங்கள் கேட்டதால் சொன்னேன்.”
“சரி, அவருடன் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறீர்?”
“மறுக்கவில்லை ஐயா. அவர் என்னைப் பொய் சொல்லச் சொல்கிறார். தவறான சர்டிபிகேட்டை வழங்கச் சொல்கிறார்.”
“எது சரி எது தவறு என்று அவருக்குத் தெரியாதா? நீர் என்ன இரண்டாவது மகாத்மாவா? அவர் சொல்வதைச் செய்ய வேண்டியதுதானே உமது கடமை.”
“தவறு என்று தெரிந்தும் அதை எவ்வாறு செய்வது ஐயா?”
இந்த அதிகாரி, கொண்டப்பாவை அதி ஆச்சர்யம் தோன்றப் பார்த்தான். புலியும் கோவேரிக் கழுதையும் சேர்த்து தோன்றிய புது வகையான பிராணி ஒன்றைப் பார்ப்பது மாதிரி அவன் கொண்டப் பாவைப் பார்த்தான், எந்த விலங்கியல் பூங்காவில் இருந்து தப்பித்து வந்தவன் இவன்?
“சரி… சரி… ஒழுங்காகப் பணியைச் செய்ய முயற்சி செய்யும். நான் உம் மேல் நடவடிக்கை எடுக்க உந்தப்படுகிறேன். உம்மை நீரே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதுவே என் எச்சரிக்கை” என்று அந்த வடநாட்டுச் சிறுவன் கொண்டப்பாவிடம் சொன்னான்.
கொண்டப்பா மிகுந்த தளர்ச்சியோடு வீடு திரும்பினான். கால் செருப்புகூட அவனுக்குக் கனமாக இருந்தது. வீடு சேர்ந்த கணவனைப் பார்த்தவுடன் அவன் தளர்ச்சியைப் புரிந்து கொண்டாள் வனதிராட்சை.
“கபே கொண்டு வரட்டுமா?” என்றவள், கொண்டு வந்து கொடுத்தாள்.
“வேணாம். கபேவை எடுத்துக்கிட்டுப்போ” என்றான் எரிச்சலுடன்,
“ஏன்” “உன் மூஞ்சி.” அவன் திகைத்தாள். “என்ன சொல்கிறீர்கள்?” “உன் மூஞ்சி என்று சொன்னேன்.” வனதிராட்சையின் மனசு புண்பட்டது.
அவள் தன் அறைக்குள் சென்று வேதாகமத்தை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினாள்.
“ஏய்” என்று அவன் கத்தினான்,
“என்ன?”
“விஸ்கி இருந்தால் கொண்டு வா.”
கொண்டு வந்து கொடுத்தாள் அவள். பிறகு கேட்டாள்.
“ஏன் என்ன விஷயம்?”
“உன் மரமண்டைக்கு அதெல்லாம் ஏறாது.”
“பரவாயில்லை. சொல்லுங்க.”
“ஆபீசில் என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை. என்னைக் கேவலப்படுத்துகிறார்கள். என்னைச் சிறுமைப்படுத்துகிறார்கள். அந்த அயோக்கியர்களின் அயோக்கியத் தனங்களுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் பார். அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன்.”
அவள் சிரித்தான். அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“இதுதான் பொம்மனாட்டி என்கிறது. நான் அவமானத்துக் குள்ளாகி இருக்கிறேன். அதைச் சொல்லும் போது சிரிக்கிறாயே, ஜடம், பாறை, அறிவுச் சூன்யம்.”
அவன் மேலும் சிரித்தாள்.
“பொட்டை நாயே, உன்னைக் கொன்று போடுவேன்.”
“எதற்கு?”
“எதற்காக? புருஷன் என்கிற மரியாதை இல்லையே?”
“மனைவி என்கிற மரியாதை உங்களிடமும் இல்லையே.”
அவனால் பேச முடியவில்லை, “நான் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்.”
“அதற்காக, நான் சிறுமைப்பட வேண்டுமா? உங்கள் மேல் அதிகாரிகள் உங்கனைச் சிறுமைப்படுத்தினால், அவர்களை எதிர்த்துப் போராடுங்கள். என்னை நீங்கள் எதற்காகச் சிறுமைப் படுத்த வேண்டும்? உங்களைச் சிறுமைப்படுத்துகிற அவர்கள் அயோக்கியர்கள் என்றால் என்னைச் சிறுமைப்படுத்தும் நீங்கள்….?”
அவன் போதை தெளிந்ததாய் உணர்ந்தான்.
– 1990