சின்னச் சின்ன ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 7,662 
 
 

மிஸ்டர் ஜெரமி ஹமில்டன் வரண்டு கிடந்த தனது உதடுகளைத் நாக்காற் தடவிக் கொண்டார்.தனது இருதயம் அளவுக்கு மீறித்துடிப்பதாக அவருக்கொரு பிரமை. அது உண்மையாகவுமிருக்கலாம்.

மனம் எங்கேயோ பாய்ந்து கொண்டிருக்கத் தனக்கு முனனாற் கிடக்கும் மாணவர்களின் நோட்ஸ்களை அவர் கண்கள் நோட்டம் விட்டன.அந்த டிப்பார்ட்மென்டின் மூன்றாம் வருட மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அவை. அவர் அவைகளைப் படிக்கவேண்டும் அபிப்பிராயங்கள் எழுதவேண்டும்.இந்தக் கட்டுரைகளில் இவற்றை எழுதிய மாணவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றன.

‘மைதிலியின் எதிர்காலம் உங்கள் கைகளிற்தானிருக்கிறது’ கொஞ்ச நேரத்திற்கு முன் இங்கு வந்த சம்பந்தன் என்ற தமிழ் இளைஞன் இப்படித்தான் சொல்லிவிட்டுப் போனான்.

ஓரு கொஞ்ச நேரத்துக்கு முன் சம்பந்தன் என்ற இளைஞன் அவ்விடம் வந்ததும் பேசியதும்; ஏதோ ஒரு கனவிற் நடந்த விடயம்போன்று தெரிகிறது.

‘சம்பந்தன்!’மிகவும் சுருக்கமான தமிழ்ப் பெயர்

தமிழர்களின் நீண்ட பெயர்களைச் சரியாக உச்சரிக்கச் சொல்லிக் கொடு;த்தவளே மைதிலிதானே?

எப்போதோ ஒரு காலத்தில்,இந்தியத் தத்தவங்களின் அடிநுனி தெரியாமல் ஒரு சில புத்தகங்களைத் தட்டிப் பார்த்திருக்கிறார்.ஒன்றிரண்டைப் படித்துமிருக்கிறார். பல்கலைக் கழக மாணவ வாழ்க்கையில் அறிவுத் தேடல்களின் சில பகுதிகள் அவை.

‘மிஸ்டர் ஹமில்டன். உங்களுக்கு எங்கள் கலாச்சாரக் கோட்பாடுகள்.நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள்,வாழ்க்கை பற்றிய ஆழமான தத்தவங்களின் சிக்கல்களை நீங்கள் தெரிந்திருக்கவேண்டுமென்றோ ஓரளவுக்காவது புரிந்திருக்க வேண்டுமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை…மைதிலி …மைதிலி இப்போது குழம்பிப்போயிருக்கிறாள் என்று நினைக்கிறேன்..’என்று சொன்னான் சம்பந்தன்.

அவன் மைதிலி பற்றிப் பேசும்போது,; அதிபர் ஜெரமி ஹமில்டனின் முகத்தை நேரே பார்த்தான்.அவர் மௌனமாக அவனைப் பார்த்துக்கொண்டு தனது இருக்கையிலமர்ந்திருந்தார்;.

அவன் தொடர்ந்தான்.

‘மைதிலி. ஓரு இந்துத் தமிழ்ப்பெண்ணாக வளர்க்கப் பட்டவள். அந்தக் கலாச்சாரத்தில் வாழ எதிர்பார்க்கப் பட்டவள்.இங்கு படிக்கவந்தபின் அவள் மாற்றமடையப் பல காரணங்களிருக்கலாம்.சூழ்நிலைகள் தரும் குழப்பத்தில் அவள் எதிர்காலப் பாதை தவறிப் போவதை அவளில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் அனுமதிக்க முடியுமா?

எவ்வளவு தெளிவாக, கம்பீரமாக, ஆணித்தரமாகக் கேட்டு விட்டுப் போய்விட்;டான்?

‘மைதிலியின் வாழ்க்கையின் நல்ல விடயங்களை நிர்ணயிக்கும் உரிமை எனக்குள்ளது..அவள் தடுமாறுவதை நான் விரும்பவில்லை”அப்படி அவன் நேரடியாகச் சொல்லியிருந்தால் திருப்திப் பட்டிருப்பாரா?

அல்லது ‘நீங்கள் அவளின் பேராசிரியர்..அவளின் குழுந்தைத்தனமான சிந்தனைகள் இவளின் இன்றைய குழப்ப நிலைக்குள் தள்ளிவிட்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள்’ என்று இந்தப் பேராசிரியரைத் ‘தூக்கி வைத்துப்’ பேசியிருந்தால் திருப்திப் பட்டிருப்பாரா?

‘அவளுடனான உங்கள் உறவு தூய்மையானது என்பதை நான் ஒருநாளும் கேள்விக்குறியாக்கப் போவதில்லை’ சம்பந்தன் பேராசிரியர் ஜெரமி ஹமில்டனின் கண்களை நேரடியாக உற்றுப் பார்த்துக்கொண்டு சொன்னபோது பேராசிரியர் ஒருகணம் நிலைகுலைந்து போனார்.

அவன் என்ன விடயத்தை அவன் மனதில் வைத்துக்கொண்டு சொன்னான் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவரும் அவளும் பல நாட்கள் பின்னேர வேளைகளை ஒன்றாகச் சொலவளிப்பதை அவன் அறிவான் என்று அவருக்குத் தெரியும்.

தூய்மையான உறவுகள் என்றால் என்ன?

பேராசிரியர் தன்னிடம் வந்தவனிடம் இதைக் கேட்கவில்லை. கேட்கத் தேவையில்லை.

மைதிலிக்கும் ஜெரமிக்கும் உள்ள உறவை இவனாற் புரிந்து கொள்ள முடியுமா?

சம்பந்தன் மிகவும் பிஸியான பைனானஸியல் அட்வைசர்.ஒவ்வொரு நிமிடத்தையும் எத்தனை ஸ்ரேர்லிங் பவுண்ஸாக மாற்றலாம் என்று அட்வைஸ் பண்ணுவதில் நிபுணனாக இருப்பவன்.அவன் அவரின் உள்க்கிடக்கையை அறிந்தவன் மாதிரி அட்வைஸ் பண்ணிவிட்டுப் போய்விட்டான்.

அவர் அவனது பெயரைத் தனது மனதுக்குள்ச் சொல்லிப் பார்த்தார். என்றோ ஒருநாள் மைதிலி அந்தப் பெயரை அவரிடம் சொன்னபோது அவர் எந்த சலனமும் அடையவில்லை.அவர் மனதில் எந்த மாற்றமும் வரவில்லை. ஆனால் அந்தப் பெயர் அவர் மனதில் நிலைத்து விட்டது.சம்பந்தன் என்ற பெயர் தமிழர்களுக்குள்ள பெயர்களில் மிகவும் குறுகியதாக இருந்தது ஒரு காரணமாகவிருக்கலாம்.

ஓரு கொஞ்ச நேரத்துக்கு முன் அவன் இவரின் கதவைத் தட்டியபோது,அவர் நிமிர்ந்து பார்க்காமல், ‘கம் இன்’ என்றார்.

அவன் கதவைத் திறந்தபோது,இவர் தான் எழுதிக் கொண்டிருந்த விடயத்தை அப்படியே வைத்து விட்டு நிமிர்ந்தார்.

ஆசியநாடுகளைச்; சேர்ந்த ஆண்களின் சாதாரண உயரத்தைவிட அவன் மிகவும் உயர்ந்து தெரிந்தான். அவனைக் கண்டதும் ஓருகாலத்தில் அவர் வாசித்த மகாபாரதத்தில் வரும் திடகாத்திரமான அருச்சுனனின் உருவம் அவர் மனக்கண்ணில் சட்டென்று வந்து போனது.

இதுவரைக்கும் வெளியில் அடித்துக்கொண்டிருந்த காற்றும் ஓவென்று பெய்து ஜன்னல்களில் சட் சட் என்று மழைத்துளிகளும் இவரைக் குழப்பிக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்துக்கு முன்தான் மழை நின்றதும் சூரிய பகவான் சாடையாக இவர் ஜன்னலால் எட்டிப் பார்த்தார் அனால் காற்று ஓயவில்லை.

அவன் அறையில் நுழைந்ததும் சட்டென்று எதோ ஒரு அமைதி. இவன் கம்பீரத்தைக் கண்டு காற்றலைகள் ஒடுங்கிக் கொண்டதா?

சட்டென்று நல்ல வெயிலொளி ஜன்னலால் ஓடிவந்தது.

பதினான்காம் மாடியின் ஜன்னலால் உலகத்தைப் பார்த்தால் கீழே தலையசைத்தாடும் மரங்களின் காட்சி மிக அழகாகவிருக்கும்.

அவன் கதவைத் திறந்து கொண்டுவந்து அவனுக்கு முன்னால் நின்றான்.இவருக்குப் பின்னாலிருந்த ஜன்னலால் ஓடிவந்த மாலைநேர சூரியஒளி அவன் முகத்தில் பரவி தங்க நிறத்தைப் பரப்பியது.

அழகாக வாரி விடப்பட்ட அவன் தலைமயிர் மாலைவெயிலில் பளபளத்தது.அவன் காரில் வந்திருக்கலாம்.தலையமிர் வெளியிலடிக்கும் காற்றில் கலையாமலிருந்தது. மிகவும் ஸ்மார்டாக உடுத்திருந்தான்.

அவனின் ஆழமான,கூர்மையான பார்வை,அம்புகளைத் தொடுப்பதுபோல் பேராசிரியரில் வந்து விழுந்தது.

யார் இவன்? பேராசிரியர் யோசிக்கும்போது. அவன் தனது டையைச் சரிசெய்துகொண்டு, அவரை நேரடியாக ஆராய்ந்தான்.

இவன் யார்? என்ன கேட்கப்போகிறான்? அவர் தன்னைத்தானெ கேட்டுக்கொண்டார்.

‘ சொல்லாமற் கொள்ளாமல் இங்கு வந்ததற்கு என்னை மன்னிக்கவும’

அவனைப்போலவே அவன் குரலும் கம்பீரமாகவிருந்தது.

அவருக்குத் துணிவான மாணவர்களைப் பிடிக்கும். தாங்கள் சொல்ல வந்த விடயத்தைச் சொல்லாமல் மென்று விழுங்கித் தயங்குபவர்களை அவருக்குப் பிடிக்காது.

தர்மமான வாழ்க்கைக்கும், உண்மையின் தேடலுக்கும்,அறிவு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானத துணிவு என்பது அவரது கருத்து.

மைதிலியிடம் அந்தத்துணிவை மட்டுமா கண்டார்?

‘இந்தியாவிலும் பல காலனித்துவ நாடுகளிலும்; ஒருகாலத்தில் ஆதிக்கவெறியால் அதர்மம் செய்த பிரித்தானிய இராணுவத்; தலைவர்களின்; பெயர்கள் மாதிரி உங்கள் பெயரும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்’ இப்படித் துனிச்சலாகச் சொன்னவள் மைதிலி.

அவள், ஜேர்ணலிசம் படிப்பதற்கான இன்டர்வியுவுக்கு வந்திருந்தபோது, ‘நாங்கள் எங்களை அறிமுகம் செய்துகொள்வோம்’ என்று அவர் சம்பிரதாயமாகச் சொன்னபோது மைதிலி மேற்கண்டவாறு சொன்னது அவளை நேர்முகப் பரிட்சை செய்ய வந்திருந்த பேராசிரியர்களைத் திகைக்கப் பண்ணியது.

‘ என் ஜேர்ணலிசம் படிக்க யோசிக்கிறாய்?’ வழக்கமான கேள்வி. டாக்டராகப்படிக்கும் மாணவர்களிடம் ஏன் டாக்டராக வர ஆசைப்படுகிறாய் என்ற கேட்பது மரபு மாதிரி.

இவள் தனக்கு முன்னாலிருக்கும் மூன்று ஆங்கிலேயர்களையும் ஏற இறங்கப் பார்த்தாள். நேர்ப்பரிட்சைக்கு வரும் மாணவர்களுக்கிருக்கும் பதட்டம் அவளிடமிருக்கவில்லை. இருபத்திரண்டு வயது இளமை, மைக்கல் ஆன்ஜலோவின் சித்திரம் மாதிரி அழகான முகபாவம்.முகத்தில் நம்பிக்கையின் பிரதிபலிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.அவள் குரலில் சாடையான குறும்பு கலந்த கனிவான தொனி.அவள் கண்கள் மிகத் துடிப்பானவை.அழகாக வரையப்பட்ட ஓவியம் மாதிரியான இதழ்கள்.சிவப்பு மலரை வெட்டி ஒட்டி வைத்தது போலிருந்தன.

கேள்வி கேட்ட பேராசிரியர்களில் ஒருத்தர் மிஸ்டர் ஜெரமி ஹமில்டன்.அடுத்தவர் ஜேர்னலிசம் டிப்பார்ட்மென்ட் அதிபர். மூன்றாவது பேராசிரியை ஒரு பெண்ணியவாதி. நீண்டகாலமாக,ஜேர்ணலிசத்தில் பெண்களின் முக்கியபங்குபற்றிப்பேசிக் கொண்டிருப்பவள்.

லண்டனில் பிரசித்தி பெற்ற அந்த இடத்துக்கு ஜேர்ணலிசம் படிக்கவருபவர்களில் பெரும்பாலேர் ஆங்கில மாணவர்களாகவிருப்பார்கள்.ஆசிய மாணவர்களோ, கறுப்பு இன மாணவர்களோ ஜேர்ணலிசம் படிக்கவருவது குறைவு.இவள் நிமிர்ந்த நடையுடனும் நேரடிப் பார்வையுடனும் வந்து உட்கார்ந்திருந்தாள்.

‘இங்கிலாந்தில் வாழும் பெரும்பாலான ஆசிய நாட்டுப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் டாக்டராகவோ என்ஜினியராகவோ வரவிரும்புவது பரவலான விடயம். நான் ஜேர்னலிஸ்டாக வர ஆசைப்படுகிறேன்.ஏனென்றால்,எங்கள் தாய் நாடுகளைப் பற்றி நீங்கள் எழுதுபவை எப்போதும் உங்களுடைய காலனித்துவ-ஏகாதிபத்திய கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.அதைப் படித்து அலுத்து விட்டது.புதிய தலைமுறைப் பிரித்தானிய ஆசிய பரம்பரையினரால் ஒரு யதார்த்தமான ஜேர்ணலிஸத்தை முன்னெடுக்க முடியுமா என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி. சுதந்திர சிந்தனை பிரித்தானியாவின் தலைசிறந்த சொத்தில்லையா?’

இதுதான் மைதிலியின் பதில்.

பேராசிரியா ஹமில்டனுக்கு அவளின் துணிகரமான பதில் பிடித்து விட்டது.

இந்தக் கலாசாலையில் படிப்பதற்கு எத்தனையோ பொய்கள் சொல்லும் மாணவர்களை அவருக்குத் தெரியும்.

இவள் வித்தியாசமானவள்.

வில்போல வளைந்த புருவங்களுடன் விளையாடும் கண்களையுடையவள்.அவருக்கும் அவளுக்கும் இருபது வருட வித்தியாசத்தை மறந்து அவர், தான் ஒருகாலத்தில் சர்வகலாசாலை நேர்முகப் பரிட்சைக்க வந்ததை நினைவு கூர்ந்தார்.அவள் பேச்சிலிருந்த முதிர்ச்சியும் அறிவுத் திறமையும் அவரைக் கவர்ந்து விட்டது.

‘இந்த ஸ்தாபனத்தில் என்னென்ன இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்;கள்’

இது ஒரு பொதுக் கேள்வி. ஆங்கிலேய மாணவர்கள் என்றால்,அளவுக்கு மீறிய கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்று சொல்வார்கள்.

சில கறுப்பு இன மாணவர்கள்,இனவாதம் இருக்கக் கூடாது என்று சொல்வார்கள்.

அவள் பிரித்தானிய ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தில் உலகத்தை எடைபோடவேண்டாம் என்று மறைமுகமாகச் சொல்கிறாள்!

அவள் குரலில், தான் சொல்லும் மறுமொழிகளால் அந்த இடத்தில் படிக்க அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்ற தயக்கம் சிறிதளவும் இல்லை.

‘அப்படிச் சொல்ல உனக்கு எப்படித் துணிவு வந்தது?’ பேராசிரியர் இரண்டு வருடங்களின் பின் மைதிலியைக் கேட்டார்.

‘நேர்மையாக வாழத் துணிவு இருக்கவேண்டும்.இல்லையென்றால் மற்றவர்களைத் திருப்திப்படுத்த எங்கள் மனச்சாட்சியை வதைக்க வேண்டி வரலாம். நான் சொன்ன மறுமொழிகளால் எனக்கு இந்த இடத்தில இடம் கிடைக்காவிட்டால் வேறேதோ ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது’;’ எத்தனை ஆணித்தரமான பதில் அது!

இரண்டு வருட அனுபவத்தில்,அவள் தான் படிக்கும் டிப்பார்ட்மென்ட் மட்டுமல்ல அடுத்த டிப்பார்ட்மென்ட மாணவ வட்டத்திலும் அவளது திறமையான கருத்துக்களால், வித்தியாசமான,ஆனால் யதார்த்தமான படைப்புக்களால் மிகவும் மதிக்கப் பட்டாள்.

அவரின் வாழ்க்கையிலும் எத்தனையோ மாற்றங்கள்.

சர்வகலாசாலை கால கட்டத்தில் காதலித்துக் கல்யாணம் செய்த மனைவி,’ உன்னை நான் விவாகரத்து செய்யப்போகிறேன்’ என்று அடிக்கடி முணுமுணுப்பதை மறக்க அவர் தனது நேரத்தில் பெரும் பகுதியைத் தன் டிப்பார்ட்மென்டுக்குள் மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்வதில் செலவிட்டார்.

காதல் என்பது பருவத்தின் கோளாறா அல்லது வாழ்க்கையின் தேவைகளுக்கான நித்திய பிணைப்பா?அவரால் அந்தக் கேள்விகளுக்கு மறுமொழி தேடத் துணிவில்லை.ஒருகாலத்தில் இணைபிரியாதவர்களாக இருந்தவர்கள், கல்யாணம் என்ற பந்தத்துக்குள் ஏனோ தானோ என்ற வாழ்வது மைதிலியின் அகராதியில் ‘ மனச்சாட்சியை; வதைத்துக் கொள்வதா?’ என்ற ஆராய அவருக்கு நேரமில்லை.

பெரும்பகுதியான மாலைநேரங்கள், லண்டனில் நடக்கும் பல தரப்பட்ட ஜேர்னலிச செமினார்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றில் கழிந்தன. அவற்றுக்கு ஆர்வத்துடன் வரும் மாணவர்களில் மைதிலியும் ஒருத்தி.

‘எனது இரண்டாவது வருட புரஜெக்டுக்கு உங்களுடன் பேச நேரம் தருவீர்களா?

மைதிலி ஒரு பின்னேரம் இவரின் ஆபிசுக்குள் நுழைந்தாள்.

அன்று காலை அவர் வரும்போது உலகத்திலுள்ள பெண்களிலெல்லாம் கோபத்தில் வந்தார்.அந்த அளவுக்கு அவர் மனைவி அவரை எரிச்சல் பண்ணியிருந்தாள்.

அவரும் மனைவியும் ஒரே வீட்டில் இரு தனிமனிதர்களாக வாழ்கிறார்கள்.அவளுக்கு ஒரு காதலன் இருப்பதும் அவருக்குத் தெரியும். வீட்டுக்கு அப்பால் அவள் எது செய்து கொண்டாலும் அவரால் ஒன்றம் செய்யமுடியாது. ஓன்றும் செய்து விட அவருக்கு விருப்பமுமில்லை.ஆனால் கடந்த இரவு தனது காதலனைத் தன் அறைக்குக் கொண்டு வந்ததையும் அதனால் அவளுக்குக் கிடைத்த சந்தோசத்தையும் காலையில் சாப்பாட்டு மேசையில் பேராசியருக்கு முன்னால் புழுகிக் கொண்டிருந்தததை அவர் விரும்பவில்லை.அவளுக்கு விவாகரத்துக் கொடுக்காமல் ஏனோ தானோ என்றிருந்ததற்கு அவள் கொடுத்த ஷாக் அவரைக் கூனிக் குறுகப் பண்ணியிருந்தது.

தனது பக்கத்து அறையில், இன்னும் சட்டப்படி தனது மனைவியாயிருக்கும் ஒருத்தி இன்னொருத்தனுடன் இன்பம் அனுபவித்த சங்கதி அவரை மிகவும் குழப்பியிருந்தது.

அவர் தனது மனைவியைத் தொட்டே எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன.அவள் மனித சமுக வரலாற்றில் பேராசிரியை.அடிக்கடி வெளியுலகம் சென்று ஆராய்ச்சிகளைச் செய்பவள். அவர்களுக்குப் பிள்ளை குட்டிகள் கிடையாது. ‘ஏன் ஒன்றாக வாழ்கிறோம்’ என்ற சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.இருவரும் ஒன்றாய் வாழ்வது இரு சினேகிதர்கள் ஒன்றாகச் சீவிக்கும் பழக்கதோசம் போலாகி விட்டது அவர்களின் வாழ்க்கை.

தனக்கு ஒரு காதலன் இருப்பதாக அவள் நேர்மையடன் சொன்னபோது அவர் கோபித்துக் கொண்டதாக அவருக்கு ஞாபகமில்லை.

ஆனால் அன்று அவள் தனது காதலனை அவர்களின் காலைச்சாப்பாட்டு நேரத்தில் அவருக்கு அறிமுகம் செய்த வைத்தபோது, அவருக்கு அவளை முதற்தரம் கண்டது சட்டென்று ஞாபகம் வந்தது. கல்யாணம் முடியவிட்டுத் தேனிலவைப் பாரிஸ் நகரில் இன்பம் அனுபவித்த நினைவுகள் ஈட்டிகளாய்க் குத்தின.

அவர்கள் இளவயதில் யுனிவர்சிட்டியில் சந்தித்துக் கொண்டார்கள். உறவு வந்தது. இணைவு இனிமை தந்தது.படுத்துக் கொண்டார்கள்.கல்யாணம் நடந்தது. இருவரும் இரு துறைகளில் பேராசிரியர்களானார்கள். வாழ்க்கை பரந்தது. அபிப்பிராயங்கள், வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறைகள் வித்தியாசம் கண்டன.

இணைவுகள் அரிதாகின. உறவு தளர்ந்தது. படுக்கையறைகள் தனிமையானது.ஆங்கில உயர்மட்டத்தின் பிரதிநிதிகள் அவர்கள். உணர்ச்சிகளுக்கு அதிக இடமில்லை (இருந்திருந்தால் ஏகாதிபத்தியவாதிகளாக இருந்திருக்க முடியுமா?).

மனைவி தனது ஆராய்ச்சி விடயங்களுக்குச் சுற்றித் திரிந்து விட்டு லண்டன் வந்தால் அவளுக்கென்றிருக்கும் அவளின் சோசியல் வட்டத்துக்குள் வளைய வருவாள். ஏனோ தானோ என்ற வாழ்க்கையிலிருந்த விடுபட.அவள் விவாகரத்து செய்து கொள்ளவேண்டும் என்ற தொண தொணப்பை அடிக்கடி எடுத்தாலும் அவர் பொருட் படுத்தவில்லை.

ஏன்?

அது அவருக்குப் புரியாது. அவர் தனது நேரத்தின் பெரும் பகுதியை டிப்பார்ட்மென்டில் தனது மாணவ மாணவிகளுடன் செலவளித்தார்.

இளவேனிற் காலத்து டவோர்டில் மலராக மைதிலி அவர் வாழ்க்கையில் நுழைந்தாள்.

இரண்டாவது வருட புரஜெக்ட் பற்றிப் பேசவேண்டுமாம்.;

அந்திமாலை நேரத்தில் ஜன்னல்வழியாய் மெல்லென அறையில் புகுந்த இனிய தென்றலாய் அவர் எதிரே அவள் நின்றாள்.அவளை நிமிர்ந்து பார்த்தவருக்கு, தனது மனைவியிலுள்ள ஆத்திரத்தில் உலகத்துப் பெண்களையெல்லாம் கோவிப்பது படு முட்டாள்த்தனமாகப் பட்டது.

‘இந்த பவ்யமான பெண்மைக்குள் தன்னைப் பறிகொடுக்கப்போகிறவன் மிக மிக அதிர்ஷ்டசாலியாகவிருப்பான்’ என்பதை வாய்விட்டுச் சொல்லவேண்டும் போலிருந்தது.

இவள் ஒருகாலத்தில் தனது மனைவி போல் தனது காதலனைத் தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைக்கமாட்டாள் என்பது அவளின் கனிவான, இளமைக்கப்பாற்பட்ட தாய்மை ததும்பும் முகபாவத்தில் தெரிகிறது.

இவள் மனிதத்துக்குக் குரல் கொடுப்பவள்.அசிங்கமாக நடந்துகொள்ள மாட்டாள்.

சட்டென்று அவர் நினைவில் பாய்ந்தோடும் சிந்தனைகளையகற்ற,அவர் தர்ம சங்கடத்தடன் எழுந்து பதின்நான்காம் மாடிக்குக் கீழ் தெரியும் லண்டன் நகரில் பார்வையைப் படரவிட்டார்.

தேம்ஸ் நதியில் விரையும் பெரிய படகுகள் குழந்தைகளின் சிறிய பொம்மைகள்போற் காட்சியழித்தன.வாழ்க்கை ஒரு பெரும் நதி. இந்தச் சின்னப்பெண் ஒரு சிறிய படகாக அந்த நதியில் பிரயாணம் செய்யப் போகிறாள். எத்தனை பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் இந்த அழகிய பெண்ணுக்கு என்ன தெரியும்?

மனைவியைத் திட்டிக் கொண்டிருந்தவருக்கு.அவள் அந்த நேரம் வந்தது அவரின் மனதுக்கு இதமாக இருந்தது.

அவளோடு பழகுவது ஜோன் வில்லியம் என்பவனின் சித்தார் இசையை தேம்ஸ்நதியின் கரையில் நடுநிசியில் தனிமையிலிருந்து ரசிப்பதுபோலிருந்தது.அவளுடன் சேர்ந்து சிரிக்கும்போது இந்த உலகமே மகிழ்ச்சியுடன் சிரிப்பதுபோல் உணர்ந்ததும் அவர் சிலிர்த்து விட்டார். அவள் அவரின் மாணவி. அவர் அவளின் பேராசிரியர்.

வரம்பு மீறலமா?

நாட்கள் இறகு கட்டியபோது அவர் மனம் படபடத்தது..

அவள் மூன்றாவது வருட மாணவி. இந்த வருடம் அவளின் படிப்பு முடியப்போகிறது.

பல மாணவர்கள் தங்கள் எதிர்கால ஆசைகளை அவரிடம் சிலவேளை மனம்விட்டுப் பேசுவார்கள்.

தான் சம்பந்தன் என்ற ஒரு வாலிபனை விரும்புவதாகவும்,அவனைத் திருமணம் செய்யக் கொடுத்து வைத்தால் அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் என்று சொன்னாள் மைதிலி.

அன்று அவள் சொன்ன அந்த சம்பந்தன் என்ற பெயர் அவர் மனதில் எந்தத் தாக்கத்தையம் உண்டாக்கவில்லை. தன்னை இன்னொருத்தன் உடமையாக்கத் துடிக்கும் அவளின் இளமைக் கனவு அவரைச் சிந்திக்கப் பண்ணியது. நீண்ட வாழ்க்கைப் பயணத்துக்குச் சரியான ஒரு துணை கிடைக்காவிட்டால் இவள் எதிர்காலம் எப்படியிருக்கும்?

அந்த நினைவு வந்ததும் அவர் ஏனோ சிலிர்த்து விட்டார்.

தென்றலுக்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியுமா?

நடனமிடும் நதியை தனியார் உடமையாக்க முடியுமா?

மழலை மொழியிடம் இலக்கணம் கேட்கலாமா?

மைதிலியின் உறவு என்றும் நிலக்குமா?

எத்தனை சின்னச் சின்ன ஆசைகள் இவை?

அசாதாரணமான துணிச்சலையும் அளவுக்கு மீறிய அழகையும் மற்றோர் மதிக்கும் அறிவையும் கொண்ட மைதிலி,பெரும்பாலான பெண்கள்போல் அடுப்படிக்குள்; அடக்கப் படுவாளா?

அவர் எல்லா மாணவர்களுக்கம் புத்திமதி சொல்வதுபோல் அவளுக்கும் சொல்ல நினைத்தார். ஆனாலும் ‘சரியான துணையைத் தெரிவு செய்யாமல் உனது எதிர்காலத்தை நாசமாக்கி விடாதே’ என்றார்.

அவர் அப்படிச் சொல்வதற்கு நேற்று அவர் பத்திரிகையிற் படித்த ஒரு செய்தி தூண்டுதலாக இருந்தது. கணவரின் கொடுமை தாங்காமல் குழந்தைகளுடன் தன்னையழித்துக் கொண்ட ஒரு இந்தியத் தாயைப் பற்றிய செய்தி லண்டன் பத்திரிகையில் வந்திருந்தது.

அவள் பேராசிரியரை ஏற இறங்கப் பார்த்தாள். அவளின் எதிர்காலத்தைப் பற்றியஅவரின் கரிசனம் அவள் மனதைத் தொட்டது.

இருவருக்குமிடையில் இருபது வயது வித்தியாசம். அவரின் கரிசனம் அவள் தன்னைப்போல் அவளின் சொந்த வாழ்வில் துயர்படக்கூடாது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

அவர் என்ன சொல்கிறார் என்பதை அவரின் கண்கள் இன்னும் அழுத்திச் சொன்னது.’ என்னைப்போல் அவளும் தோல்வியடையக்கூடாது’.

அப்போது அவர்கள் லண்டன் நாஷனல் பிலிம் தியேட்டர் அருகே நடந்து கொண்டிருந்தார்கள்.அன்று எலிஸபெத் ஹாலில் நடந்த செமினார் ஒன்றுக்கு அவர்களின் டிப்பார்ட்மென்டிலிருந்து பல மாணவர்கள் வந்திருந்தார்கள். பலர் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அருகில் தேம்ஸ் நதி எண்ணெய் வழிந்த முகத்துடன் மெல்ல நடை போட்டுக்கொண்டிருந்தது.

அவள் ஒன்றும் பேசாமல் வந்து கொண்டிருந்தாள் ஏதோ மிகவும் முக்கியமான விடயத்தைப் பற்றிச் சந்திக்கிறாளா,

‘கல்யாணம் என்பது ஒரு சிறைக் கூடமா?’ கேள்வி கேட்ட அவளை அவர் திரும்பிப் பார்த்தார். அவள் முகம் குழந்தைத்தனமாகவிருந்தது.

மாணவர்கள். தேம்ஸ் நதிக் கரையோர மதிலில் சாய்ந்திருந்து ஏதோ வம்பளந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரே பிரித்தானிய பாராளுமன்றம் பிரமாண்டமாக உயர்ந்து நின்றது.

பேராசிரியர் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்.

‘உலக அரசியல் மாற்றங்களின் அந்தரங்கங்கள் அங்கு சிறை வைக்கப் பட்டிருக்கின்றன’ பிரித்தானிய பாராளுமன்றத்தைப் பார்த்தபடி அவர் மெல்ல முணுமுணுத்தார்.

அவள் அவர் முணுமுணுத்த அரசியல் கருத்தை அவள் தனது சிந்தனையில் கிரகிக்கவில்லை என்பது அவளின் கேளிவியிலிருந்து தெரிந்தது.

‘மனிதர்களின் சம்பிரதாயக் கோட்பாடுகள்,கலாச்சாரப் பண்பாடுகள் என்பன தனி மனித சிந்தனைகளைச் சிறை படுத்துகின்றனவா? அவள் அப்படிக் கேட்டபோத அவர் மறுமொழி சொல்லவில்லை. அவர் மனைவி அப்படித்தான் நினைத்து விவாகரத்துக் கேட்டாள்.

‘காதல் பொய்யா’? அவள் பார்வை அவரில் பதிந்திருந்தது. அவர் மனைவியும் ஒருநாள் அவரிடம் இப்படித்தான் கேட்டாள்.

‘ பருவத்தின் நியதி. வாழக்கையில் அனுபவிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விடயம். காதல் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது. காதல் என்ற உணர்வு சாகாவரம் பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பது கனவு. ஏனென்றால் மனித உணர்வுகளும் அதன் அடிப்படையில் மாற்றமடையும் வாழ்க்கையம் யதார்த்தமானது’

அவர் ஆசிரியர் தொனியிற் சொன்னார்.

”நீங்கள் வித்தியாசமான மனிதர்’ அவள் மெல் நடைபோடும் தேம்ஸ நதியில் பார்வையைப் பதித்தபடி சொன்னாள்.

அவளுடைய சம்பந்தன் சதாரண மனிதன் என்ற நினைக்கிறாளா?

‘ நீயும் ஒரு வித்தியாசமான பெண்தான்’ அவர்குரலில் குறும்புத்தனம்.

இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

வாய்; விட்டுச் சொல்லாமற் சொல்லிப் மனம் தெரிந்து பகிர்ந்துகொள்ளும் பல உண்மைகளை இருவரும் நாகரிகமாக மறைத்துக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள், உறவு.காதல், கல்யாணம், என்ற குழப்பமான விடயங்களைப் பற்றிப் பேசிக் கொள்ள அவசியம் இருக்கவில்லை.

மூன்றாவது வருட மாணவர்கள் படிப்பை முடிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.மிகவும் அவசரமாகக் காலம் ஓடிக்கொண்டிருந்தது.

ஸ்லோன் சதுக்கத்தின் பக்கத்தில் நடந்த ப்ராய்டின் ஆராய்ச்சிகளில் மிகவும் முக்கிய விடயமாகக் கருதப் பட்ட ஹிஸ்டிPரியா பற்றிய நாடகமொன்றைப் பார்க்க ஜேர்ணலிச டிப்பார்ட்மென்ட மாணவர்கள் பலரும் சில பேராசிரியர்களும் சென்றிருந்தார்கள்.

மைதிலி ப்ராய்டின் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகள் பற்றித் திட்டிக்கொண்டு வந்தாள்.

‘ மூன்றாம்தர நாடுகளில் சாப்பாடு இல்லாததுதான் பெரும்பான்மை மக்களின் பிரச்சினை. முதலாம்தர நாட்டவர்களுக்குப் பெரிய பிரச்சினை செக்ஸ்…ஆத்மீக பலமற்றவர்களா பணக்கார நாட்டு மக்கள்?’ அவள் கேள்வி அவளின் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.

‘மைதிலி, செக்ஸ் மனிதர்களின்; அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உண்ண உணவு, குடிக்க நீர், சுவாசிக்கக் காற்று,இல்லாமல் மனிதர் வாழமுடியாததுபோல் செக்ஸ் இல்லாவிட்டால் மனிதத்தின் மிக மிக முக்கிய தேவையான பாலியல் உறவு. இரு உள்ளங்களின் இணைவு. அவர்கள் படைக்கும் குடும்பம், அதைத் தொடரும் பரம்பரை,அதனாற் கட்டியெழுப்பட்ட சமுதாயம்,என்பன தொடராது…ப்ராய்ட செக்ஸ் பற்றி மனிதர்கள் குழம்பும் பல பரிமாணங்களை ஆராய வெளிக்கிட்டார் அதை நாங்கள் முழுக்க முழுக்கச் சரியானது என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது’

அவர் பேராசியராக அவளின் குழப்பமான கேள்விக்க மறுமொழி சொன்னார்.

அவள் அவரிடம் தர்க்கம் பண்ணவில்லை.

அவள் கேட்ட ‘ஆத்மிகம்’; என்ற விடயத்துக்கு அவர் சரியான மறுமொழி சொல்லவில்லை என்று அவள் நினைக்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது.

‘மைதிலி, மேற்குலக வளர்ச்சி பொருளாதார பலத்தில் நிலைத்து நிற்பது..அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். எந்த நாட்டையும் ஆக்கிமிப்பார்கள்,அழிப்பார்கள், பிரிப்பார்கள்…ஆதிக்கவாதிகள் உன் நாட்டில் இருக்கவில்லையா, மகா சக்கரவர்த்தி அசோகனின் சரித்திரமென்ன? அவன் தன் ஆதிக்கத்துக்காக மற்றவர்களுக்குச் செய்த கொடுமைகள் எத்தனை? கடைசியாக வாழ்க்கையின் உண்மையான அர்தத்தைத்தேடினானே. ஆத்மீக பலம் என்று நீ சொல்லும் விடயம் அங்குமிங்குமாக எல்லா இடத்திலும் இருக்கிறது. அதர்மத்தை எதிர்க்க எங்கேயும் யாரோ பிறந்து கொண்டிருப்பார்கள்.. சாக்ரட்டிசும், மஹாத்மா காந்தியும் மார்ட்டின் லூதர் கிங்கும் மாற்றங்களைக் கொண்டுவரத்தான் பாடு பட்டார்கள் அதற்கு அவர்கள் கொடுத்த விலையும் தெரியும்”

அவள் பதில் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள்.

மாணவர்கள் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்குப் போகப் பாதாள ட்ரெயின் பக்கம் போய்க் கொண்டிருந்தார்கள். ஸ்லோன் சதுக்கம் லண்டனின் மேற்குப் பக்கம். பேராசிரியர் ஹமில்டனும் மைதிலியும் வடக்கு லண்டனிலிருப்பவர்கள். சில மைல் வித்தியாசங்களில் அவர்களின் வீடுகள் இருக்கின்றன.

அவர் தனது காரில் வந்திருந்தார்.அவள் தனது மாணவர்களுடன் அண்டர்கிரவுண்ட் ட்ரெயினில் வந்திருந்தாள்.

‘நான் லிப்ட் தருகிறேன் சம்மதமென்றால் வரலாம்’ அவர் சொன்னார்.அவளின் மறுமொழியை எதிர்பார்க்காமல் அவர் தனது காரை நோக்கி நடந்தார்.

அவர் அவளின் பேராசிரியர். இன்னும் சில மாதங்களில் அவளின் பேராசிரியராக இருக்கப் போவதில்லை.

அவளின் படிப்பு முடியப்போகிறது. அவள் எழுதிய ஜேர்ணலிசம் பற்றிய கட்டுரைகள் அபாரமானவை. பரிட்சைக் கமிட்டியினரால் பாராட்டப்பட்டவை.

அவள் வந்து அவர் காரில் அமர்ந்து கொண்டாள். கார் வடக்கு லண்டன் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

‘நான் உங்களை ஜெரமி என்று கூப்பிடலாமா?

அவள் குரல் அடைத்தமாதிரியிருந்தது. அவர் சட்டென்று காரின் வேகத்தைக் குறைத்தார்.

‘இன்னும் சில மாதங்களில் நான் உங்கள் மாணவியாக இருக்கப் போவதில்லை..சினேகிதியாக இருக்கமுடிந்தால் சந்தோசப் படுவேன்’

அவர் அவளுக்கு மறுமொழி சொல்ல முதல்,’ ஆங்கிலேயர்களில் எனக்குச் சிலவேளை கோபம் வருவதுண்டு…மற்றவர்களின் கலாச்சாரப் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளாமல் தங்கள் கண்ணோட்டத்தில் மற்றவர்களை மதிப்பிடுகிறார்கள்’.

ஏன்ன சொல்ல வருகிறாள் ஆண் பெண் உறவைப் பாலிய உறவுக்கு மட்டும் பாவிப்பவர்கள் மேற்கத்தியர் என்று நினைக்கிறாளா, அவருக்குச் சிரிப்பு வந்தது.

இன,மத,மொழி,தேசிய வித்தியாசமின்றிப் பெரும்பாலான ஆண்கள் இரு எதிர்ப்பால் உறவுகளைச் செக்ஸ் என்ற அனுபவத்துக்கு ஆட்படுத்துவது தவிர்க்க முடியாத மனித உறவின் பரிமாணம் என்றதை இவள் இன்னும் புரியாமல் குழம்புவது அவருக்குத் தெரிந்தது. அத்துடன் அவருடனான தனது உறவு அந்தத் தேவைகளுக்க அப்பாற்பட்டதாக இருக்கவேண்டுமென்பதைச் சரியான விளக்கத்துடன் சொல்ல அவள் திணறுவதும் அவருக்குப் புரிந்தது.

அவள் களங்கமற்ற,அழகிய சிந்தனைகளைக்கொண்ட பெண். சாதாரண உறவுகளுக்கு அப்பால் ஒருசிலர், சிந்தனைகளின் ஒற்றுமை என்ற தொடர்பில் வாழ்நாள் முழுக்கச் சினேகிதமாகவிருக்கும் முதிர்ச்சியுள்ளவர்கள் என்பதை உணர்வாளா?

அவர் சட்டென்று காரை ஒரு ஓரத்தில் நிறுத்தினார். ஏதோ ஒரு விபத்தா என்பதுபோல் அவள் சுற்றம் முற்றும் பார்த்தாள்.

‘மைதிலி நீ அப்படி நினைப்பதில் ஒரு பிழையுமில்லை’ அவர் அவளைப் பார்க்காமல் அவர்கள் தாண்டி வந்துகொண்டிருந்த லண்டனில் மிகவும் முக்கிய இடமான எலிசபெத் மகாராணியின் மாளிகையின் அபாரா விளக்கொளியில் கண்களைப் பதித்தபடி சொன்னார்.

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்;கள்’@ அவள் வழக்கமான தனது களங்கமற்ற குரலில் கேட்டாள்.

‘மேற்கத்தியர்கள் தங்களின் சனேகிதத்தில் செக்ஸ் நுழைவதைச் சர்வ சாதாரணமாக நினைக்கிறார்கள் என்று நீ கணிக்கிறாய் போலிருக்கிறது…நீ நினைப்பது தவறு என்பதை எப்படி உனக்கு விளங்கப் படுத்துவது என்ற எனக்குத் தெரியாது’ அவர் குரல் அழுத்தமாகவிருந்தது.

தான் ஏதோ கேட்க அவர் சொல்லும் விளக்கத்தைப் பாதி புரிந்தும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஜெரமி நான் உங்கள் சினேகிதத்தை மிகவும் விரும்புகிறேன்..அது நீண்ட நாட்கள் நிலைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’.

அவள் அப்படிச் சொன்னது வெள்ளிக் கிழமை.

இன்று திங்கட் கிழமை.

இன்று சம்பந்தன் வந்து போய்விட்டான். எனது சினேகிதன் சம்பந்தனைக் கல்யாணம் செய்ய முடிந்தால் மிகவும் அதிர்டசாலியாக என்னை நினைப்பேன்’ என்று சொன்னவள். நேற்று ஞாயிற்றுக் கிழமை அவனைத் திருமணம் செய்து கொண்டு ஒரு சிறைக்குள்த் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளப் போவதில்லை என்று சம்பந்தனுக்குச் சொன்னாளாம்!

சம்பந்தன் வந்து ஊழித்தாண்டவத்தை அவர் மனதில் உண்டாக்கி விட்டுப் போய்விட்டான்.

மைதிலி என்ற களங்கமற்ற பெண்மையிடம் அவர் கண்ட தாய்மையை,அன்பை, பண்மை சம்பந்தன் புரிந்து கொள்ள மாட்டானா?

ஜெரமி ஹமில்டன் என்ற பேராசிரியர் ஒருகாலத்தில் இளமையின் துடிப்பில் பலருடன் படுத்தெழும்பியவர். மேற்கத்தியக் கலாச்சாரத்தில் இளமைக்காலப் பழக்க வழக்கங்களின் ஒரு அங்கமிது. வயது வந்த இருவர்கள் ஒன்றாக இன்பம் அனுபவிப்பதில் சலித்துவிட்டால் பிரிவதும் சர்வசதாரணமான கலாச்சாரத்திலிருந்து வந்தவர் அவர்.

அந்த உறவுகளிற் காணாத நிறைவை தனது மாணவியிடம் கண்டதை அவராற் புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது.

அவளின் களங்கமற்ற கேள்விகள் அவரைச் சிந்திக்கப் பண்ணியதை அவர் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தன்னையறியாமல்,இந்தப் பேராசிரியர், அவளின் ஒரு மாணவர்போல் அவர் பல விடயங்களைக் கிரகித்திருக்கிறார்..

சம்பந்தன் வந்தான் கௌரவமாகச் சில விடயங்களை அவருக்குச் சொல்லி விட்டுப் போய்விட்டான்.

கம்பீரமான அவனது தோற்றமும் கணீரென்ற குரலில் அவன் சொன்ன கருத்துக்களும் அவரைக் கவர்ந்தன. ஆனால் அவன் சொன்ன அத்தனையையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமில்லை.

தனது ஆணித்தரமான தோற்றத்திற்குள் ஒரு பிரம்மாஸ்திரத்தை மறைத்துக்கொண்டு வந்ததுபோல், அழகான சிரிப்புடன் சிலகேள்விகளைக் கேட்டானே? அவை அவரை நெருடப் பண்ணகிறது.

‘உங்கள் மாணவி மைதிலியை நீங்கள் காதலிக்கிறீர்;களா? ஏன்று அவன் அப்பட்டமாக- அருவருப்பாகக் கேட்டிருக்கலாம் ஆனால் அவன் அப்படிக் கேட்கவில்லை.

அவளின் களங்கமற்ற- உண்மையைத் தேடும் தேடலுக்கு இவன் உகந்தவன்.

இவன் மைதிலியை அடைந்தால் மிகவும் கொடுத்து வைத்தவன்.

அந்த இருபத்தைந்து வயது இளமை தனது துடி துடிப்பான பல கேள்விளால் இந்த நாற்பத்தைந்து வயது பேராசிரிய ‘இன்டர்லெக்சுவலைச்’ சிறை பிடித்திருக்கிறாளா? அவருக்கு அந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்டுக் கொள்ளத் துணிவில்லை என்று அவருக்குத் தெரியும்

அவளிடம் சம்பந்தன் வெற்றி பெறுவானா?

ஜெரமி ஹமில்டன் தனது இருக்கையிலிருந்து எழுந்தார். வெளியில் உலகம் இருண்டு விட்டது. தேம்ஸ் நதியில் பல உல்லாசப் படகுகள் அலங்கார விளக்குகளுடன் பவனி வருகின்றன.

அவர் மேசை முழுதும் மாணவர்களின் கட்டுரைகள். அவற்றைப் படிக்கும் மனநிலையில் அவர் இல்லை.

சம்பந்தன் வந்துபோய் இருமணித்தியாலங்களா? ஆனால் இன்னும் அவன் தனக்கு முன்னால் நிற்பதுபோன்ற பிரமை அவருக்கு.

அவனின் கப்பீரமான ஆண்மைக்குள் மைதிலியின் பவ்யமான- தூய்மையான பெண்மை அடைக்கலம் தேடி பொசுங்கிப் போகுமா?

அவள் என்னிடம் எதைக் கண்டாள்?

இவனை ஒதுக்க நினைப்பதற்கு நான் காரணமா?

அவர் அடுத்த மாடியில் ஏதோ சப்தம் கேட்டதால் தனது நினைவிலிருந்து மீண்டார். அடுத்தமாடி திரைப் படத் துறை மாணவர்கள் இரவில் நின்று எடிட்டிங் செய்வார்கள் அவர்களின் சப்தங்களாக இருக்கலாம.;

அவருடைய ஜேர்ணலிஸ்ட் டிப்பார்ட்மென்ட் யாருமற்ற பேயடித்த இடமாகத் தெரிகிறது.

இந்தக் கட்டிடத்துக்குள் இன்னும் சில மாதங்களில் மைதிலி வரமாட்டாள்!

இவரிடம் எத்தனையோ கேள்விகளைக் கேட்கமாட்டாள்.

வெளியே போக முதல்,அவர் தனது மேசையில் குனிந்து ஏதோ எடுக்க முனைந்தபோது, அந்தக் கடிதம்; அவர் கண்களிற் படுகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றுக்கு அவர் வேலை கேட்டு எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் அது.

மனைவியுடன் வந்த தகராறில் லண்டனை விட்டு எங்காவது போகவேண்டும் என்ற உந்துதலில் அவர் போட்ட அப்ளிக்கேசன் அது.

கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். வழக்கம்போல் பதினான்கு மாடிகளைக் கடக்க லிப்டில் வராமல் பதினான்கு மாடிப் படிகளைக் கடந்து இறங்கி வந்தார். ஓவ்வொரு படியிலும் தனது பழைய வாழ்க்கையைக் கடப்பதாக அவர் உணர்ந்தாh.

ஆனால் சம்பந்தன் கேட்டு விட்ட கேள்விச் சுமைகளை அவரால் இறக்கி வைக்க முடியவில்லை.

‘பிரன்ஞ் நாடு தந்து பெண்ணியப் பேரறிஞர் சிமோன் டி பூவா, தனது அன்பன் சார்த்தேயுடன்,அவரினதும் தனிப்பட்ட ஆசை அபிலாசைகளில் குறுக்கிடாமல் அவர்களின் வாழ்க்கை முழுதும் அன்பாக இருந்தார்களே. அப்படியான உறவுகளுடன் மற்றவர்கள் ஏன் வாழ முடியாது?

மைதிலி ; அவரிடம் கேட்ட கேள்விகளில் இதுவமொன்று..

மைதிலியின் குழந்தைத் தனமான கேள்விகளில் ஒன்றா அது?

‘மைதிலி, நீ ஒரு சின்னப் பெண், பருவகாலத்தில் பலவிதமான சின்னச் சின்ன ஆசைகள் வருவதுண்டு. அவை யதார்த்தமற்றவை என்று தெரிந்து கொள்ள அறிவியல் முதிர்ச்;சி தேவை. உனது கலாச்சாரத்தில் கல்யாணம் என்பது உன்னால் தவிர்க்கப் பட முடியாதது என்று உனது சம்பந்தன் சொல்கிறான். உனது தேடல் சரிவருமா என்ற எனக்குத் தெரியாது’ அவர் மைதிலி நேரே இருந்தால் சொல்லியிருப்பார்.

சுயமையுடன் வாழவேண்டுமென்ற அவளது தேடல் நியாயமானது.

சம்பந்தன் அவளை இட்டலிக்கும் தோசைக்குமிடையில் அடையாளம் கண்டு கொள்வானா?

அதிகார தோரணையில் இவனிடம் சில விடயங்களைச் சொல்லவந்தானே அதனடிப்படை ஆணவமா அல்லது மைதிலியிலுள்ள காதலா?

அவர் பதினான்கு மாடிகளையும் கடந்து இறங்கி வந்து விட்டார்.

வெளிக் கதவைத் திறந்தார். உலகம் இருண்டு கிடந்தது. இயற்கையின் இருளை நாகரிகமான செயற்கை லைட்டுகள் முறியடிக்க முனைகின்றன.

பெரும் காற்று முகத்திலடித்தது. லண்டன் மாடமாளிகைகளின் ஜன்னல்கள் அதிவேகமான காற்றில் படபடத்தன.

அவர் மனமும் சூறாவளிக்குள் அகப்பட்ட உணர்ச்சியைத் தந்தது. வெளிநாட்டிலிருந்த வந்த கடிதத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

மனைவிக்காக லண்டனை விட்டோடாதவர் மைதிலிக்காக ஊரை விட்டு ஓடப் போகிறாரா?

அவரிடமிருந்து தனக்கு விடுதலை கிடைத்ததாக அவர் மனைவி சந்தோசப்படலாம்.

‘உங்கள் பல்கலைக்கழகத்தில் வேலை தந்தததை நான் நான் நன்றியுடன் ஏற்றக் கொள்கிறேன்’ என்று அவர் மிக விரைவில் பதில் எழுதுவார்.

அந்த நினைவு ஏதோ ஒரு விடுதலை உணர்வை அவருக்குத் தந்தது.

மைதிலி தேடும் விடுதலை எப்போது?

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *