சித்திரமும் கைப்பழக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 10,177 
 
 

சித்திரம் கீறிக் கொண்டு வராத காரணத்தினால் சிலர் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். கையில் நீள் சதுர சித்திரக் கொப்பியும் பென்சிலும் இருந்தது. சிலர் சும்மா நிண்டிருந்தார்கள், சிலர் ஏதோ கிறுக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வகுப்புக்குள்ளே சாமிலா டீச்சர் அதே சித்திரப் பாடத்தை இன்னொரு சித்திரத்துடன் கற்பித்துக் கொண்டிருந்தா அல்லது ஏதோ செய்து கொண்டிருந்தா………

பெயர் தெரியாத அந்த மரத்தின் இலைகளும் சிறிய மஞ்சள் பூக்களும் வளாகத்தில் விழுந்து மணல் தரைக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. முன்னால் இருந்த கென்டீனில் ஒரு சில ஆசிரியர்கள் வெட்டியாக பேசிக் கொண்டிருந்தனர். மனதுக்கு பிடித்தமான காலநிலை நிலவிக் கொண்டிருந்தது. எல்லா வகுப்பிலும் பாடம் நடக்கவில்லை. அடுத்த நாள் காலையில் சுத்தம் செய்வதற்காக வகுப்பறைகள் தயாராகிக் கொண்டிருந்தது. அது ஏழாம் அல்லது எட்டாம் பாடவேளை.

ஒன்பதாம் வகுப்புக்குத்தான் சித்திரப்பாடம். பக்கத்தில்இருந்த இன்னொரு ஒன்பதாம் வகுப்பில் பாடம் எதுவும் நடைபெறவில்லை. வெளியில் நின்றிருந்தவர்களை கவனிக்கவோ, என்னவென்று கேட்கவோ யாருக்கும் அவகாசமில்லை அல்லது அது உகந்த தருணமில்லை என்றே தோன்றியது.

எவ்வளவு முயன்றும் செய்ய முடியாத காரியங்களில் சித்திரமும் ஒன்றாகி விட்டிருந்தது. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்று யார் சொன்னதென்று யோசிக்கவெல்லாம் யார் அவகாசம் வைத்தது. வெளியில் நின்ற சிலர் வகுப்பை கவனித்துக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் பக்கத்து வகுப்பில் பெண் பிள்ளைகளுடன் சைகையால் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். சற்று நேரத்துக்குப் பிறகு நீள் வட்ட சித்திரக் கொப்பியில் பென்சிலால் கிறுக்கி விட்டு பக்கத்து வகுப்பு பஸ்னாவிடம் காட்டினான். ஆங்கிருந்து புன்னகை வந்தது. பக்கத்திலிருந்தவர்கள் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘சாமிலா டீச்சர் பார்த்து விடுவா’ என்று அவனை எச்சரிக்கத் தொடங்கினர். அவன் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டான் என்று அவர்களுக்குத் தெரியும்………….. பஸ்னா அவனைப் பார்த்து சிரித்தபடியே இருந்தாள். ஆனால் பஸ்னாவுக்காகவெல்லாம் அவன் அவ்விடத்தில் நிற்பதை பாக்கியம் அல்லது அவமானமின்மை எனக் கருதவில்லை. ‘சஸ்னா’தான் அவனது குறிக்கோள். ஏனென்றால் அவன் சாப்பிட்ட ;சொக்லேட்’ உறையை பத்திரப் படுத்தி வைத்திருப்பவள் அவள் தானே. ஆனால் சஸ்னா அவனைக் கண்டு கொள்ள மாட்டாள். அவள் எப்போது பார்ப்பாள், அவள் கண்கள் என்ன பேசும் என்பதெல்லாம் அவன் மட்டுமே அறிவான்.

வழமையாக அந்த நேரம் அவர்கள் ‘ப்ரைமரி’ கட்டடத் தொகுதியில் முதலாம் தர மாணவர்களின் வகுப்பறையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நேரம். அது சரி…… அவர்கள் எங்கே பேசினார்கள்….. புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டோ, உடன் வரும் நண்பர்களை அன்று தான் சந்தித்தது போல் சம்பந்தமில்லாத ஏதாவதொன்றை பேசிக் கொண்டோ சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு லாபமளித்துக் கொண்டோ தான் அந்த நேரங்கள் கழியும். ஆனால் என்ன அவை வாழ்வின் இன்பம் தரக்கூடிய தருணங்களாக பதியப்பட்டுக் கொண்டிருக்கும்.

இந்த வாழ்வின் தருணங்களை தரிசிப்பதற்கு முன்னால் எட்டாவது படிக்கும் போது பரீட்சை நேரத்தில் தூரத்தில் மட்டும் சஸ்னாவை ரசித்துக் கொண்டு அல்லது பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு கோபத்தை மட்டும் இலவசமாக்கிக் கொண்டிருந்தவள் இன்று வகுப்பறை வரை அவனோடு அவனுக்காக வருகிறாள் என்றால் அது இன்hத் தருணம்தான் என்று சொல்லுதல் பிழையில்லை. ஆனால் இந்த நேரம் தவறாமல் நடக்கும் சித்திரப் பாடமல்லவா நிமிடங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறது……. ஆனால் பஸ்னா பார்த்தபடி தான், பேசிய படி தான்.

சுஷ்மிலா டீச்சர் இடைக்கிடையே பார்க்கிறாவா என்று நோட்டம் விடுவதற்கு பக்கத்தில் நிற்பவனை தயார் படுத்தியிருந்தான். பார்த்தாலும் பரவாயில்லை ஆனால் உள்ளே மட்டும் கூப்பிட்டு விடக்கூடாது என்பதில் குறியாயிருந்தான்.

போனவாரம் இதேநேரம் அவளிடமிருந்து அழைப்பு வந்திருந்தது, வழமையாக சந்திக்கும் இடத்துக்கு வரும்படி. சென்றிருந்தான். பேசாமல் பேசிக் கொள்ளும் அன்பத் தருணங்கள் ஆரம்பித்திருந்தது. பாடசாலை முடியும் மணி அடித்ததன் பின்னர் வகுப்பறை திரும்பும் போது. சுபைர் சேரின் தமிழ்ப்பாட சங்கதிகளை சஸ்னாவுக்கு கேட்கும் படியாகவே சொல்லித் தொலைத்து விட்டான் வகுப்புத் தோழன். “என்னால தானே” என்று அவள் அழுது தீர்த்து அவன் மனதை காயப்படுத்தினாள்.

அவனைப் பொருத்த வரைக்கும் அது வழமையான நடைமுறை அல்லது புதிதாக இருந்தாலும் பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவிருந்தான். சுபைர் சேர் தமிழ்ப்பாட ஆசிரியர். ஆன்பாகப் பேசியோ, பிள்ளைகளிடம் தெரியாமல் கூட சிரித்து வைக்காதவர். அவன் வேறு, தமிழ்ப்பாடத் தலைவன் – வகுப்பில் இல்லாதது பற்றி சொல்லவா வேண்டும். வகுப்பில் பிரம்பு இருந்திருக்காது அல்லது ‘டஸ்டர்’ இருந்திருக்காது. எடுத்து வர அவனைத் தேடியிருப்பார், அவன் தான் அங்கே இல்லையே. ‘எங்கே’ என்று ஏசி நாளை சந்திக்கும் படி கட்டளையிட்டிருப்பார். அது தான் நடந்திருக்கும், அது தான் நடந்தது.

வகுப்புத் தலைவனின் சுறுசுறுப்பு போதாதென்று தனிப்பட்ட ரீதியில் ஆளையமர்த்த திட்டமிட்டு சுபைர் சேர் ‘தமிழ்ப் பாட மொனிட்டரா இருக்கிறது யாரு’ என்று கேட்டுவைக்க, அவரின் வினை தெரிந்த யாராவது அந்த அபாயகரமான பதவியை தானாக ஏற்பார்களா என்ன? பரவாயில்லை என்று பார்த்துக் கொண்டிருப்பவரா சுபைர் சேர் மட்டந்தட்டி பேசவாரம்பித்து விடுவார், அவனுக்கு என்ன தோன்றியதோ யாரும் எழும்பாமல் இருக்க ‘நான் இருக்கிறேன்’ என்று எழும்பினான்.

அன்றிலிருந்து பிரம்பு தேடுவதும், அடி வாங்குவதும் ஏச்சு வாங்குவதும் என தலைவர் பதவி கலைகட்டுகிறது. ஆனால் சஸ்னா அழுதாள். பின்னர் பாடவேளைகளில் அவனை அவள் தவிர்த்தாலும் அவன் விட்டு விடுவானா என்ன………….?

சாமிலா டீச்சர் ஓரக்கண்ணால் நோட்டம் விடுவதை பார்க்கிறான், சிரித்துக் கொண்டே நிற்பதனால் ஏதாவது பொல்லாத வார்த்தைப் பிரயோகத்துக்கு தன்னை உரியவனாக்கி அந்த ஆசிரியை நிந்திக்கலாம் என நினைத்தாலும் பஸ்னா பார்த்தபடியும் சிரித்தபடியும் இருந்ததனால் அவனும் அப்படியே நின்று கொண்டிருந்தான்.சஸ்னாவும் இப்போது அதிகமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

சஸ்னாவைப் பார்க்க வைக்கத் தானே அவன் வேண்டுமென்றே பஸ்னாவுடன் வலிந்து கொண்டு நின்றது…,, ஆனால் பஸ்னாவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாளோ என்னவோ….. இந்த பஸ்னா – சஸ்னா ஆரம்ப காலங்களில் தூது செல்பவர்கள் சஸ்னாவுக்கு பதில் பஸ்னாவுக்கு செய்தி சொல்லுவதும், மற்றப்படி சஸ்னாவிடம் மாட்டிக் கொண்டால் அவன் பஸ்னாவின் பெயரைச் சொல்லித் தப்பிப்பதுமாக பல சம்பவங்கள் நடந்ததால் அது ஒரு இயல்பு ரீதியான போராட்டமாகி விட்டது.

“இப்போது சஸ்னாவும் அவனைப் பார்த்தாள் அல்லவா?……..” பார்க்கத் தொடங்கியவள் சற்று நேரத்துக்கெல்லாம் முறைக்கத் தொடங்கினாள். பஸ்னாவையும் அவனையும் மாறி மாறி பார்ப்பதிலேயே அது புலப்பட்டது.

சாமிலா டீச்சரும் அவனை முறைத்துப் பார்த்தா, அவன் தலைகுனிந்து தன் இயலாமையையும் தான் அவமானப் படுவதாயும் காட்டத் தொடங்கினான். சுhமிலா டீச்சரின் கவனம் அவனை விட்டு விலகியதும் பக்கத்து வகுப்புப் பக்கம் திரும்பினான் பஸ்னா யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள், சஸ்னா முறைத்தபடி இருந்தாலும் அவன் பார்வையை எதிர் கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். புரிந்தவனாக கொடுப்புக்குள்ளால் சிரித்துக் கொண்டான். இது அவளை நாணமூட்டச் செய்தாலும் முறைப்பதிலிருந்து கவனத்தை சிதறவிட வில்லை.

இதற்கு மேல் அவளைச் சீண்ட வேண்டாம் என நினைத்தவன் சஸ்னாவை விட்டும் பார்வையை அகற்றாமல் நின்று கொண்டிருந்தான். வகுப்பறைக்கு நேர் இடது பக்கமாக மறைவில் இருந்த அதிபர் அறையிலிருந்து அதிபர் வெளிப்படவும் அவன் பார்வையில் தெரிந்த பதட்டம் சஸ்னாவின் முகத்திலும் தெரிந்தது.

ஏனென்றால் போன மாதம் ஏதோவொரு நாளில் விஞ்ஞானப்பாடம் நடந்து கொண்டிருக்கையில், கீறப்பட்ட சித்திரத்துக்கு நிறமூட்டிக் கொண்டிருந்த ஜெமிலாவைக் கண்ட அதிபர், ஆசிரியர் இருக்கும் போதே வகுப்பில் புகுந்து அந்த சித்திரக் கொப்பியாலேயே அவளது முகத்தில் அடித்து பாட நேரத்தில் பாடத்தை கவனிக்கும்படி ஏசி விட்டுச் சென்றார்.பின்னர் அவள் கண்களில் உப்புக் கரித்ததையும், மனதின் அடிநாளம் வரை அவமானம் எரித்ததையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது அவன் சகிதம் மற்றவர்களும் வெளியில் நிற்பதைக் கண்டால் என்ன நடக்குமோ என்ற பயத்தை விட சஸ்னாவுக்கு முன்னால் ஏச்சோ அடியோ பரிசளிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி வருத்தம் காட்டத் தொடங்கினான். ஆனால் அவள் கவலை அவனுக்கான பிரார்த்தனையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அதனாலோ என்னவோ அதிபர் கண்டு கொள்ளாமல் போய் விட்டார்.

அவன் சிரித்தபடி சஸ்னாவை பார்த்தான். அவள் முறைத்துக் கொண்டிருக்கும் போதே பாடசாலை முடிவு மணி முந்திக் கொண்டது.

சாமிலா டீச்சர் ஒன்றும் பேசாமல் வெளியேற, மாணவர்கள் வீட்டுக்குச் செல்லும் அவசரத்தில் புத்தகப் பையை சுமந்தோ கையில் எடுத்துக் கொண்டோ அணியில்(லைன்) முன்னால் நிற்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடினார்கள்.

வழமை போல் சஸ்னாவுக்கு பின்னால் கடைசியாக வந்து கொண்டிருந்தான் அவன். ஆவளை சீண்ட முயன்றான் அவளது முறைப்பு மாறவில்லை.

நாளை வழமையாக சந்திக்கும் போது பஸ்னாவைப் பார்த்த பல் இழித்ததற்காகவும், சித்திரம் கீற மறந்ததற்காகவும் தன் மேல் கோபம் காட்ட தயாராயிருக்கும் அவளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று சிந்தித்தவாறு வழமையான மெட்டொன்றில் ஸலவாத்துப் பாடும் கூட்டத்துடன் வாயசைக்கிறான் சாக்கீர்………………

அவன் தான் – அவன் பெயர் தான் அது……!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *