சித்தாள் சாதி

8
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 32,203 
 
 

ஆறு மாசமாயிற்று, சம்முகம், சிவகாசிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்து. சித்தாள் வேலை. கொதிக்கிற சுண்ணாம்புச் சாந்தில் கால் புதைந்து நின்று வேக வேண்டும். ரத்தத்தை உறிஞ்சுகிற சிமென்ட்டுச் சாந்தில்கிடந்து வெந்து தணிய வேண்டும். சாந்துச் சட்டிகளைச் சுமந்து சீரழிய வேண்டும். செங்கல் சுமை, சாந்துச் சட்டிச் சுமை என்று மொத மாடிக்கும் ரெண்டாம் மாடிக்கும் படி… படி… படிகளாக ஏறிச் சுமந்து சாக வேண்டும். ஆறு செங்கல்களை ஏற்றி விடுவார்கள். நல்ல சீமைச் செங்கல். கனத்த செங்கல். விரல்களால் சுண்டினால், ‘கண் கணீர்’ என்று சத்தம் வரும்.

ஆறு செங்கல்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு மாடிப் படிகளில் ஏறுவதற்குள் நெஞ்சு கிடந்து முட்டும். மூச்சுத் திணறும், வியர்த்து ஊற்றும். ‘தஸ்ஸு புஸ்ஸு’ என்று இளைக்கும். தொடைச் சதை எல்லாம் வலி உயிரைக் கொத்திக் குடிக்கும்.

கொத்தனார்கள் கரண்டியும் கையுமாக நின்ற இடத்திலேயே வேலை செய்வார்கள். கரண்டியால் சாந்தைக் கோதி அள்ளி அள்ளிச் சுவரில் ‘சப் சப் சப்’ என்று அறைவார்கள். சுழற்றிச் சுழற்றி வீசி வீசி அறைகிற வேகமே நின்று பார்க்கவைக்கும். சுழற்றி வீசி அறைகிற வேகத்தில், ஈரச் சாந்து செங்கல் சுவரில் ஒட்டிக்கொள்ளும். சிந்திச் சிதறுகிற சாந்துச் சிதறல்களை வீணாக விழாமல், சுவரை ஒட்டி சிமென்ட்டுச் சாக்கு விரித்து இருப்பார்கள். சித்தாள் சம்முகம் அவ்வப் போது அந்தச் சாக்கை உருட்டி, இரு கையாலும் பற்றித் தூக்கி, சாந்துச் சட்டிக் குள் தட்டுவான். கொஞ்சம் தண்ணீர்விட்டு, கரண்டியாலேயே கோதியள்ளி, குத்தியள்ளி, வெட்டியள்ளிக் குழைத்துச் சாந்தாக்கிவிடுவார் கொத்தனார் தேவர். எட்டக்காபட்டிக்காரர்.

SithaalJathi1

ஏகப்பட்ட கொத்தனார்கள். நாலு மடங்கு கூடுதலாகச் சித்தாள்கள் இருப்பார்கள். அது, இந்த பில்டிங்கில் மட்டும்தான். ஏகப்பட்ட கட்டடக் கட்டுமானங்கள். சிவகாசி… நாலா திசைகளிலும் விரிந்துகொண்டே போகிற கட்டட நகரம். அங்கெல்லாம் சுற்றுப்பட்டிக் கிராமத்து ஆட்கள் சித்தாள்களாகவும் கொத்தனார் களாகவும் மல்லாடிக்கொண்டு இருப்பார் கள். விவசாயம் நொடித்துப்போன சுற்றுப் பட்டிக் கிராமங்களின் முன்னாள்விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் இப்போ தைய சித்தாள்களாகவும், கொத்தனார் களாகவும் தினசரி வந்துபோகிறார்கள்.

சம்முகம் வேலைக்குப் புதுசு. ஆறு மாசமாகத்தான் வருகிறான். திகைப்பும் குழப்பமுமாகத் தவிக்கிறான். எட்டக்கா பட்டி கொத்தனார் நல்ல மனுஷர்.

”யப்பா… நீ… ஆமநாடுதானே?”

”ஆமா…”

”இந்த வேலைக்குப் புதுசா?”

”ஆமா… காட்டு வேலைக அம்புட்டும் அத்துப்படி. பாத்தி கட்டுறது, தண்ணி பாய்ச்சுறது, விறகு வெட்டுறது, உழுகுறது, கருதறுப்பு, களத்துச் சோலிக எல்லாமே தண்ணிபட்டபாடு. சாந்துதான் கைக்கு ஒட்ட மாட்டேங்குது.”

அவனையே அளந்தெடுப்பதுபோலப் பரிவுடன் பார்த்தார். அவனுடைய முகக் குழப்பம்… திகைக்கும் கண்களின் அலைபாய்வு… தஞ்சம் கேட்கிற புறாவின் பரிதாபம் கண்ணில்.

அவனுடைய பேச்சு இயல்பாக இருந்தாலும், ஏதோ இயல்பற்ற வேற்றுமை நெருடுகிறது. வார்த்தைகளில் சிலவற்றை மென்று விழுங்குகிறான். உச்சரிக்காமல் தவிர்க்கிறான்.

அது என்னது? அது என்னது?

‘ஆமண்ணாச்சி…’, ‘ஆமா மாமா…’, ‘ஆமா மொதலாளி…’, ‘ஆமா சாமி…’, ‘ஆமா அய்யா…’ என்று முழுமை பெற வேண்டிய சொல், பாதியாக உடைந்து தொங்குகிறது. மொட்டை மொட்டையாக ‘ஆமா!’ என்கிறான்.

இவன் தாழ்ந்த சாதிப் பயலா இருப்பானோ?

‘உள்ளூர்ல வெலை போகாத வேர்வையை வித்துப் பிழைக்க அயலூருகள்ல அலைந்து சீரழியுறதுதான் தலையெழுத்தான பெறகு… மேல் சாதி, கீழ் சாதி என்ன இருக்கு? எல்லாம் வேர்வை சாதிதானே?’

பெருந்தன்மையும் அவலமும் கலந்த விநோத நினைவுகள் அவருக்குள் ஓடுகின்றன.

”சம்முகம், அந்த ஒடைஞ்ச செங்கல்லை எடு. இந்தச் சாந்துச் சட்டியை இங்ஙன தூக்கிவை.”

வைத்தான்.

”வேறென்ன செய்ய?”

”ஏஞ் சம்முகம், மொட்டை மொட்டையாப் பேசுதே?”

குற்ற உணர்ச்சியும் மனக் குமைச்சலுமாக வேறு எங்கோ பார்த்தான். மௌனத்தின் இறுக்கமே பதிலாக அமைந்தது.

”இங்க பாரு… நீ என்ன சாதியோ எனக்குத் தெரியாது. தெரியணும்னு அவசியமும் இல்ல. வேலை பாத்தா சம்பளம். கூலிக்கு மாரடிக்க வந்த இடத்துல சாதிக் கணக்குப் பாத்துட்டு இருக்கணும்னு சட்டம் இல்ல. இங்க எல்லாரும் மூத்தவுகளை, ‘அண்ணாச்சி’ம்பாக. இளையவனா இருந்தா ‘தம்பி’ம்பாக. நீ பேசாம… என்னை அண்ணாச்சின்னே கூப்புடு.”

”சரிண்ணாச்சி” – சட்டென்று பேசிய சம்முகம் முகமெல்லாம் சிரிப்பு. உயிரின் புன்னகையை கண்ணின் ஒளி உணர்த்தியது. அவனுள் ஆழத்தில் இருந்து வந்த ஆனந்தப் பிரவாகம்.

சம்முகம், கொத்தனாரிடம் மிகவும் பாசமாக இருந்தான். விசுவாசமாகவும் இருந்தான். கொத்தனாரும் அவனுக்கு மிகுந்த அனுசரணையாக இருந்தார். அரவணைத்துப்போனார்.

கீழ்த் தளத்தில் குவிக்கப்பட்டு இருந்த ஈரத்தில் நனைந்த செங்கற்களை மேல் தளத்துக்குக் கொண்டுவர வேண்டி இருந்தது. மேல் தளத்தில் ஒன்றரையடிச் சுவர் எழுப்ப வேண்டும்.

சம்முகம் செங்கல்களை அடுக்கிய தலைச் சுமையுடன் ஏழெட்டுத் தடவை ஏறி இறங்கு வதற்குள், தஸ்ஸு புஸ்ஸு என்று இளைத்தான். வியர்த்து ஊற்றியது. நரம்புகளின் தளர்வு முகச் சோர்வாகத் தெரிந்தது.

கொத்தனார் சம்முகத்தைக் கூப்பிட்டார்.

”இங்க வா… சம்முகம்.”

”என்ன அண்ணாச்சி?”

”மேஸ்திரியை வரச் சொல்லு.”

”மேஸ்திரியண்ணாச்சி… மேஸ்திரியண்ணாச்சி… மேஸ்திரியண்ணாச்சி…”

சம்முகத்தின் உச்சஸ்தாயியான கூப்பாடு மூன்று தளத்துக்கும் கேட்டது. கட்டடத்துக்கு வெளியே ஸ்டோர் ரூமுக்கும் கேட்டது.

”என்னப்பா…?” – அவரது கேள்வி.

”கொத்தனார் அண்ணாச்சி கூப்புடுதாக…”

அண்ணாச்சி என்ற சொல்லை அனுபவித்துச் சொன்னான். சீனிப் பலகாரம் கிடைத்த ஏழைப் பிள்ளை மாதிரி, ருசித்து ருசித்து ஒரு ரசனையுடன் சொன்னான்.

அனைவரையும் ‘அண்ணாச்சி’ என்று வாய் நிறைய அழைப்பான். அந்தக் கணத்தில் – அவனது ஆழ் மனசு நிறைந்து ததும்புவது, முகப் பரவசத்தில் தெரியும்.

அருஞ்சுனைப் பெருக்காக உயிர்கிடந்து குளிரும்.

மேஸ்திரி வந்தார்… கொத்தனார் அவரிடம் சொன்னார். ”சம்முகம்,

ஏங்கிட்டே எல்ப்பா நிக்கட்டும், செங்கல்லு, சாமான் செட் எடுத்துத் தர்றதுக்கு. செங்கல்லும் சாந்தும் கொண்டுவர்றதுக்கு ரெண்டாளுகளை அனுப்பு.”

”சரிண்ணாச்சி…”

அன்றில் இருந்து சம்முகம், கொத்தனா ரின் உதவியாளனாகிவிட்டான். மட்டப் பலகை எடுத்துத் தருவது, ரச மட்டம் பார்ப்பது, நூல்கண்டு எடுத்துத் தருவது என்று அவர் பக்கத்திலேயே அவனுக்கு வேலை.

”செங்கல் கொண்டாரச் சொல்லு…”

”சம்முகம், சாந்து கொண்டாரச் சொல்லு…”

”சம்முகம், சிமின்ட்டுப் பாலு கொண்டாரச் சொல்லு…”

கொத்தனார் உத்தரவுகள் போடுவார். சம்முகம் சத்தமாக நிறைவேற்றுவான்.

”சரக்கு வரட்டும் அண்ணாச்சி…”

”செங்கல்லு லோடு வரட்டும் அண்ணாச்சி…”

”சிமின்ட்டுப் பாலு கரைச்சுக் கொண்டாங்க அண்ணாச்சி” – அண்ணாச்சி…

அண்ணாச்சி என்று மூச்சுக்கு முந்நூறு அண்ணாச்சிகள் போடுவான். அவன் உயிருக்கு றெக்கைகள் முளைத்த மாதிரி உல்லாசமாகத் திரிவான்.

ஐந்து மணிக்கு வேலை முடியும். டீக்காசையும் டிக்கெட் காசையும் வாங்கிக்கொண்டு புறப்படுவான்.

”அண்ணாச்சி… அப்ப நா பெறப்படட்டா?”

”போ… ஒனக்கு ஆறு இருபதுக்கு பஸ், எனக்கு ஏழு மணிக்கு. நீ மொதல்ல பெறப்புடு.”

SithaalJathi2

சீல்த்தூரில் இருந்து (ஸ்ரீவில்லிபுத்தூர்) டிரிப் அடித்துவிட்டு வருகிற பஸ்தான். ஆமநாடுக்கு ஆறு இருபதுக்கு டயம் எடுக்கும். ஆகவே, காலேஜ் தாண்டிய அடுத்த ஸ்டாப்பிங்கிலேயே சம்முகம் ஏறிக்கொள்வான். சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கொஞ்ச நேரம் காத்திருக்கும். ரெண்டு வடையைப் பிய்த்து வாயில் போட்டு, சுடச்சுட ஒரு டீயை அடித்துக்கொள்ள லாம்.

பஸ் ஏறி உட்கார்ந்துகொள்வான். ஜன்னலோரம் சீட். உறங்க முடியுமா என்று பார்ப்பான். சிவகாசிக்கு வேலைக்காகப் புறப்பட்டதில் இருந்து சம்முகத்துக்கு நல்ல உறக்கம் இல்லை. ஓய்வும் இல்லை.

விடியற்காலம் ஐந்து மணிக்கு டாண் என்று வேதக்கோயிலில் மைக் செட் பாட்டுப் பாடத் துவங்கிவிடும். அந்நேரமே விழித்து, முகம் கழுவி, வாய் கொப்பளித்து, வயிறு முட்ட பச்சைத் தண்ணீர் குடித்து, தேவானை போட்டுக் கொடுக்கிற தேயிலைக் காப்பித் தண்ணீரைக் குடித்துவிட்டு, அந்த இருட்டிலேயே ஓடைக்கு ஓட்டம் ஓட்டமாக ஓடி, திரும்பிவந்து, பல் தேய்த்து, குளித்து, தேவானை ஆக்கிவைத்த சோறு குழம்பைக் கொதிக்கக் கொதிக்க வயிற்றில் அள்ளிப்போட்டு, பிளாஸ்டிக் ஒயர் கூடையில் தேவானை வைத்திருக்கும் சோற்றுத் தூக்குவாளியுடன் பதற்றமும் பரபரப்புமாக ஓடி வந்தால்தான், ஆறரை பஸ்ஸைப் பிடிக்க முடியும். முப்பது கிலோ மீட்டர் தூரம். சிவகாசி வந்து இறங்குகிறபோது, எட்டு பத்தாகிவிடும். அப்புறம் ஒரு மினி பஸ். அப்புறம்தான் வேலைத்தளம். சாயங்காலம் ஐந்து மணி வரை உயிரை உறிஞ்சி ரத்தத்தை வாட்டி வதக்குகிற வேலை… வேலை… வேலைகள்.

அப்புறமும் பயணம். உறங்கப் பொழுது கிடைப்பதே அரிது. வீடு வந்து சேர எட்டு முப்பதாகிவிடும். சாப்பிட்டு முடிக்க மணி ஒன்பதரையாகிவிடும். வாழ்க்கையின் வசீகரம் தூரத்தில் நின்று புன்னகைக்கும். ஏறிட்டுப் பார்க்கக்கூட உயிரில் தெம்பு இருக்காது. ‘எங்ஙனடா கட்டையைச் சாய்ப்போம்’ என்று உயிர்கிடந்து தவிக்கும். உடலின் சகல அணுக்களிலும் சோர்வும் அயற்சியும் முடங்கிஇருக்கும்.

குளித்த ஈரக் கூந்தலோடு, மஞ்சள் பூசிய கரிய முகத்தில் உயிரின் புன்னகை ஒளி சிந்த தேவானை வாழ்க்கையைப் போல மலர்ந்து நிற்பாள். பார்க்க மதி இல்லாமல், இமைகளை அழுத்தி வரும், உறக்கம்.

பாயில் படுத்திருந்தான். உறக்கச் சடவில் புரளுகிறபோது, இவனது கை அவள் மேல் தவறுதலாக விழுந்துவிட்டது. தாகத்தோடு விழுந்ததாக நினைத்துக்கொண்டு, இவன் பக்கமாகத் திரும்பிப் படுத்து நெருங்கிய தேவானையின் தாகத் தவிப்புக்கு ஒன்றும் தராத மன உளைச்சலோடு உறங்கிப்போனான், சம்முகம்.

சம்முகம் அதை நினைத்துப் பார்த்தான். தேவானையின் ஈரக் கூந்தல். கரிய முகத்தில் மஞ்சள் பூசிய பசிய திட்டு. இவன் பக்கமாக திரும்பிப் படுத்தபோது அவளது தேகச் சிலிர்ப்பு. இவனுடன் நெருங்கிப் படுத்த கணத்தில் அவள் திரேகச் சூடு.

‘அவளுக்கு எம்புட்டு ஏமாத்தமா இருந் திருக்கும். எம்புட்டு அவமானமும் வேதனை யுமா இருந்திருக்கும்?’

தேவானைக்கு என்னமும் கொடுக்காமல், அவளிடம் என்னமும் பெறாமல்… அவளை அனுபவிக்காமல், அவளையும் பட்டினிபோட்டு…

சம்முகத்துக்குள் முள் முள்ளான நினைவு களின் குத்தல்களில் உறக்கம் ஓடிப்போயிற்று. பஸ்ஸுக்குள் கேட்கும் பேய் இரைச்சல்கள். சண்டைக்காடுகள். தள்ளுமுள்ளுகள். தகராறுகள். வாய்க்கூப்பாடுகள்.

ஆமநாட்டுக்குள் பஸ் நுழைந்து, பின் பக்கமாக வந்து, திரும்பி நின்றது. எல்லோ ருடனும் இவனும் இறங்கினான்.

இவனையே எதிர்பார்த்து அண்ணாந்து நின்ற ஒரு டவுசர் சிறுவன். ஒன்பது வயசு இருக்கும். பொடிப் பையன்.

”ஏய்… சம்முகம்…”

”என்ன… மோலாளி…”

”ஒன்னை எங்க ஐயா வரச் சொன்னாரு…”

”வேலைக்குப் போய்ட்டு இப்பத்தான் வாரேன். வீட்டுக்குப் போய்ட்டு வாரேன், சாமியவுகளைப் பாக்க…”

”அதெல்லாம் முடியாது. ஓய்… சம்முகம், நீ இப்பவே வரணும். கைப்புடியாப் புடிச்சுக் கூப்பிட்டு வரச்சொல்லி, என்னை இங்ஙன நிப்பாட்டிவெச்சிட்டுப் போயிருக்காரு.”

”சரி மோலாளி… நீங்க முன்னாடி போங்க… நா பின்னாடி வாரேன்.”

இருட்டும் தெரு விளக்கின் வெளிச்சமும் மாறி மாறி விழ, பொய்யும் நிஜமுமாக முன்னே போகிற சிறுவன். டவுசர் பொடிப் பையன்.

‘ஏய் சம்முகம்’ என்று எப்படிக் கூப்பிட முடிகிறது, இந்தப் பொடிப் பயலுக்கு. நானும் ‘என்ன மோலாளி’ என்று பணிந்து குழைகிறேனே, என்னத்துக்கு? ‘சாமியவுகளை’ப் பாக்க, பூனைக் குட்டியாய் பின்னால் போகிறேனே… என்னத்துக்கு?

முழுத்த ஆண் மகனைப் பார்த்து, ”ஏய் சம்முகம்” என்று ஒரு சின்னப் பையனைக் கூப்பிடவைப்பது எது?

சாதியா? ஊர் அமைப்பா? அவரு மேல் சாதிப் பையன். நான் கீழ் சாதிப் பயல்.

மனுச சாதிக்குள்ளே மேல் சாதி, கீழ் சாதிப் பிரிப்பைப் பிரிச்சது எது? இந்தப் பிரிப்புல என்ன நீதி?

சம்முகத்துக்குள் வெக்கையான எண்ணங்கள். பசியும் அயற்சியுமான உடம்பின் எரிச்சலில் எழுகிற கோபத் தீயானநினைவு கள்.

சாமியவுக சொன்னார், திண்ணை மீது போட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு.

”நாங்க இருப்புக்கு மெட்ராஸ் போறோம். எங்க பத்து ஏக்கர் கொய்யாத் தோப்பை நீயே மேற்பார்வை பாரு. காவல் காத்து, தண்ணீ பாய்ச்சிப் பக்குவம் பாத்துக்கோ. ஏவாரிகளுக்குக் கொய்யா போடு. ஒனக்கும் ஒம்பொஞ்சாதிக்கும் கணிசமாகச் சம்பளம் போட்டு எடுத்துக்கோ… என்ன சொல்லுதே?”

இவுக ‘சாமியவுக’. இவுக பேரன் ‘மோலாளி’. ஏவாரிக எல்லாரும் மொதலாளிமாருக.

நானும் தேவானையும் சேர்ந்து வாழலாம். சம்பளம் எடுத்துக்கலாம். கணக்கு குடுத்

துரலாம். நிர்வாகம் பாத்துக்கலாம். அவுக சாதி நெறையச் சொந்தம் இருந்தாலும், சாமியவுக என் மேல நம்பிக்கை

வைக்காக…

இம்புட்டையும் வுட்டுட்டு ஓட்டமும் நடையுமாக… பரபரப்பும் பதற்றமுமாக… தேவானையைப் பாத்தும் பாராம… சிவகாசி போய் வந்தா… ஒறங்க நேரம் இல்லாட்டாலும்…

எல்லாரையும் சமத்துவமா அண்ணாச்சினு கூப்புடலாம். நா என்னை மனுசனா மதிக்கலாம். மனுசனா என்னை மத்தவுக மதிக்குறதை நான் அனுபவிக்கலாம்.

மறுநாள் –

ஆறரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருந்தான் சம்முகம், கொத்தனார் அண்ணாச்சியைப் பார்க்க!

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

8 thoughts on “சித்தாள் சாதி

 1. இது சாதிய மன நீக்கம் கதையாக மட்டும் பார்க்க முடியாது!
  தனி மனித சுயமரியாதையின் தேவையாகவும் பார்க்க நேரிட்டது.
  1.நாம் அனைவரும் ஆங்கிலேயரிடமிருந்து விடுபடுவதின் தேவை சுயம் மறைந்து போன காயத்தின் வலி.
  2.ஒரே சாதியத்திற்குள்ளும் மனித நேயமற்று சுயம் அடக்கியாளப்படுகிறது.
  3.சம்முகத்தின் உழைப்பை ஏற்று சித்தாளாகருந்து கொத்தனாரின் உதவியாளராக பதவி உயர்வு பெற்றபோதே சம்முகத்தின் சுயமரியாதை மதிக்கப்பட்டுவிட்டது.
  4.வயதில் சிறிய பையன் சம்முகம் என பெயரிட்டு ஏன் அழைக்க வேண்டும் என்று நினைக்கும் போதே சுயம் வந்துவிட்டது.
  5.பணக்காரரின் நிலத்தின் கணக்கு வழக்கு பார்த்துகொண்டு சாமிகும்முடு போட்டிகிட்டு இருப்பதை காட்டிலும், தேகத்தை கரைத்து அனைவரையும் அன்னாட்சினு கூப்பிடுகிற சுயம் இனிது.
  6.வேறொருர் நிலத்தில் உழைப்பை கொடுத்து விட்டும், தன் பொட்டாட்டியை அனுபவித்துக்கொண்டும், அடிமையாக இருக்க கூடாது என என்னிய சம்முகத்தின் சுயம் பெரிது.

 2. வர்க்க சிந்தனையின் எழுச்சியே ஜாதிய பிரிவுகளின் வீழ்ச்சி.

  கட்டட வேலைகள் குறித்த நுணுக்கமான தகவல்கள் அருகில் இருந்து கவனித்தால் ஒழிய இவ்வளவு நேர்த்தியாக எழுத இயலாது. பள்ளிக்காலத்தில் இவ்வேலையை செய்து இருப்பதால் கதைக்களத்துடன் இயல்பாக பொருத்தி கொள்ள முடிகிறது.

  100 நாள் வேலைத்திட்டம் எப்படி ஜாதி வெறியர்களின் தூக்கத்தை கெடுத்தது என்பதை நாம் முன்னரே அறிவோம். பொதுவாகவே ஊரை விட்டு வெளியூரில் சென்று பிழைக்கிற (ஏழை) கூட்டம் ஜாதிய பாகுபாடுகள் பார்ப்பதில்லை பெரும்பாலும். உள்ளூர் பண்ணையார் முறைகளே ஜாதி வெறியின் ஊற்று.

  நிலத்தின் அரசியல் மீண்டும் ஒரு முறை நினைவூட்டப்பட்டிருக்கிறது.

  அழகான வர்ணனைகள் கதைக்கு அழகு சேர்க்கிறது. சில,
  1.உயிரின் புன்னகையை கண்ணின் ஒளி உணர்த்தியது. அவனுள் ஆழத்தில் இருந்து வந்த ஆனந்தப் பிரவாகம்.
  2.சீனிப் பலகாரம் கிடைத்த ஏழைப் பிள்ளை மாதிரி, ருசித்து ருசித்து ஒரு ரசனையுடன் சொன்னான்.

  இந்த சீனி பலகாரத்தை எங்க ஊரில் (மதுரை பக்கம்) சீயம் என்போம். அதை வேலைக்கு சென்று விட்டு வாங்கி வரும் போது இருக்கும் ஆனந்தம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

  மனிதன் தன்னை மனிதன் என உணர்வதே இங்கே எவ்வளவு பெரிய போராட்டமாக இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக உணர்த்தி இருக்கிறார் பொன்னுச்சாமி <3

 3. அமெரிக்காவில் தொழிற்சாலைகள் வந்ததால்தான் கறுப்பர்களுக்கு விடுதலை வாய்த்தது என்று அந்த நாட்டு வரலாறு காட்டுகிறது.

  இங்கே, வேளாண்மை அழிகிறதே என்று கூப்பாடு போடுபவர்களிடம், “போனாப் போகட்டும், அதுக்குள்ளதான் ஜாதி இருக்கு,” என்று நான் சொல்வதுண்டு.

  கதை இரண்டே காட்சிகளில் சுருக்கமாக அமைத்திருப்பது அருமை. மனைவியைப் பற்றிய அவனது மனவோட்டங்கள் கதைக்குத் தேவை, ஏனென்றால் அதையும் மீறித்தான் அமையப்போகிறது அவனது முடிவு.

  // சிவகாசி போய் வந்தா… ஒறங்க நேரம் இல்லாட்டாலும்…

  எல்லாரையும் சமத்துவமா அண்ணாச்சினு கூப்புடலாம். நா என்னை மனுசனா மதிக்கலாம். மனுசனா என்னை மத்தவுக மதிக்குறதை நான் அனுபவிக்கலாம்.//

  இந்தப் பகுதி தேவையில்லாதது. இது இல்லாவிட்டாலும் நமக்கு இது புரியும். ஆனால் கம்யூனிசக் கொள்கைவாதிகளுக்கு விளக்கி எழுதுகிற இந்தப் போக்கிலிருந்து விடுபட முடியாது.

  அவர் உறங்கட்டும்!

 4. அருமை! சாதி தளையிலிருந்து விடுபட சம்முவம் எடுத்த முடிவுதான் சாதி ஒழிப்பின் நுனி

 5. சம்முகம் என்ற சொல் அர்த்தம் பெற்று விட்டது..

 6. உணர்வு பூர்வமான கதை. சொல்லப்பட்டிருக்கும் விஷயம் சத்தியம். மேலாண்மை பொன்னுசாமி மறைந்து விட்டாரே என்று உள்ளம் பதைக்கிறது.
  kathai

 7. அற்புதம் ! அற்புதம் ! இப்படி ஒரு உணர்வு மேலெழுந்து வரும் போதுதான்
  சாதியம் சாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *