கூட்டம் அதிகமாக இல்லை! அப்படி இப்படின்னு ஒரு பத்து பதினைந்து சொச்சம் ஆட்கள் இருப்பாங்க ! சாம்புகன் வீட்டின் முன்பு நின்னுருந்த போலீஸ் வண்டியின் பக்கத்தில் எல்லோரும் நின்னுருந்தனர்.
‘யோவ் ! பெருசு… பாக்க எழுவது வயசுக்கு மேல இருப்பபோல பேசாம தின்னுட்டு வீட்டுல இருக்காம உனக்கு இதெல்லாம் தேவைதானா”
சாம்புகனை கைத்தாங்களாக போலீஸ் வண்டிக்கு கூட்டிகிட்டு வந்த ஏட்டு பொன்னுசாமி சொன்னார். உருகிப்போகாத உடம்புடன் கட்டு மஸ்தாக தெரிந்தாலும் நடந்துவர ஒரு ஆள் துணை தேவைப்பட்டது சம்புகனுக்கு. வயசு ஆகிவிட்டதால் காது கேட்கும் சக்தியும் பார்வை திறனும் மங்கியிருந்தது.
ஏட்டின் கைத்தாங்களுடன் போலீஸ் வண்டியில் ஏறும்போது அரை பீஸ் வெளுச்சத்தில் தெரிவது போல சாம்புகனுக்கு கொஞ்சம் மங்களாகத் தான் தெரிந்தான் வண்டியின் வலது பக்கம் நின்னுருந்த வெயிலான் மகன் டாக்டர் மணியன்.
சாம்புகன் என்று சொன்னால் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. சித்தவைத்தியர் சாம்புகன்னு சொன்னால்தான் தெரியும். இருபத்தி ஐந்து வருசத்துக்கு முன்புவரைக்கும் அந்த ஊரில் யாரும் ஆஸ்பத்திரிக்கே போனதில்லை. பிரசவத்துக்கு மட்டும் தான் ஆஸ்பத்திரி. அதும் ரொம்ப கஷ்டமான நிலையில் தான் போவாங்க. மத்தபடி வீட்டுலையேதான் எல்லாமே. வேறு எந்த வியாதி வந்தாலும் அதுக்கு வைத்தியம் சித்தவைத்தியர் சாம்புகன் தான் பாப்பார்.
ஒருமுறை அவர்கிட்ட போய் வைத்தியம் பார்த்தாலே எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்லும் அளவுக்கு கைராசிக்காரர். அவரின் வீடே ஒரு தோட்டம் போலதான் காட்சி அளிக்கும். துளசி, காட்டு நெருஞ்சி, ஆடாதோட, பெரண்டை அப்படின்னு இன்னும் பெயரே தெரியாத என்ன என்னமோ செடிகள் எல்லாம் அவர் வீட்டில் இருக்கும். வீடு எங்கும் வீட்டுக்கு மேலையும் போர்வை போத்தியது போல செடிகொடிகள் கிடைக்கும். புதிதாக அவரின் வீட்டை பார்ப்பவர்கள் ஏதோ பல காலமாக வீட்டை பராமரிக்காமல் வீடு செடி கொடி ஏறி கிடக்கிறது என்று தான் நினைப்பார்கள் அந்த அளவுக்கு மூலிகை செடிகள் இருக்கும் அவர் வீட்டில். தினமும் வீட்டில் ஏதோ ஒரு மருந்து செய்துகிட்டே இருப்பார். அவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லை, அவர் மனைவியும் இறந்து பலவருடம் ஆகிவிட்டது. இந்த சித்தமருத்துவம் தான் அவருக்கு சோறு போடுகிறது இப்போதைக்கு.
அவர் மனைவி இருக்கும் வரைக்கும் இருப்பவர்களிடம் அளவாக காசு வாங்கிட்டும் இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் வைத்தியம் பார்த்தார். சித்தவைத்தியர் சாம்புகன் அவர் அப்பாவிடம் இருந்து சித்தவைத்தியத்தை கத்துக்கொண்டார். அவங்க அப்பா எப்படியோ அவராக இந்த வைத்தியத்தை கத்துக்கொண்டார். எங்கும் சென்றும் படிக்கவும் இல்லை.. அவருக்கு முன்னோடிகள் தமக்கு தெரிஞ்ச வைத்தியத்தை ஒவ்வொண்னா சொல்ல சொல்ல அது வச்சு இவரே கத்துகிட்டு நல்ல கைராசி வைத்தியர் என்ற பெயர் பெற்று விட்டார்.
சாம்புகனிடம் வைத்தியம் பார்க்க அந்த ஊரில் மட்டும் இல்லாமல் அடிக்கடி வெளியூரில் இருந்து எல்லாம் வந்து பார்த்துட்டுப்போவார்கள் . ஆஸ்பத்திரியில் பார்த்து முடியாதுன்னு சொன்ன நோய் எல்லாம் இவரின் வைத்தியத்துக்கு கட்டுப்பட்டது. பெரும்பாலும் அந்த ஊரில் இருபவர்களிடம் பாதிக்கு மேல் ஆஸ்பத்திரியை மிதிக்காதவர்களாகத்தான் இருப்பார்கள் எல்லாத்துக்கும் காரணம் சித்த வைத்தியர் சாம்புகன் தான்.
‘வைத்தியத்துல அவங்க அப்பனை விட கைராசிகாரரப்பா சாம்புகன்” அப்படின்னு பலரும் பேசிக்கொள்வார்கள்.
வெயிலான் மகன் மணியனுக்கு இருபத்தி ஏழு இருபத்தி எட்டு வயசு இருக்கும். இருபத்தி ஏழு இருபத்தி எட்டு வருசத்துக்கு முன்பு கற்பவதியாக இருந்தால் மணியன் அம்மா.
‘ஏங்க நானும் வயிறும் வாயுமாக இருக்கேன். கூடவும் யாருமில்லா, இந்த ரவு நேரத்துல நீங்க வேலைக்கு போய்த்தான் ஆகணுமா” முகத்தில் ஒரு இருக்கத்துடன் பாவமாக கேட்டால் வெயிலான் பொண்டாட்டி..
‘இல்லம்மா! நம்ம முதலாளியோட காவக்காரன் ஊருக்கு போயிருக்கானாம, வயக்காட்டுல பயிறு எல்லாம் வெலைஞ்சு நிக்கிதாம இன்னும் ரெண்டு மூணு நாலுல அறுக்க போற பயிரை பன்னி வந்து நாசமாக்கிரும்னு இன்னைக்கு ஒரு நாலு மட்டும் என்னய காவலுக்கு போக சொல்றாரு” காவலுக்கு போக விருப்பம் இல்லா மனசுடன் அவள் முன் நின்னான்.
‘நம்ம சூழ்நிலையை சொல்ல வேண்டிதானுங்க”
‘இல்ல. இப்போ வரலன்னு சொல்லிட்டா.நாளைக்கு ஏதும் வேலைக்குன்னு போய் நிக்க முடியாதல்லா ‘ அவன் குரல் மெதுவாகியது.
‘இல்லைங்க…. எல்லார் மாதிரி நானும் இருந்தா பரவாயில்ல…எனக்கே அடிக்கடி வலிப்பு வரும்! வயிறும் வாயுமா இருக்க இந்த நேரத்துல” அவள் குரலை விழுங்கினாள்.
அவள் சொன்னது அவனுக்கு மனதிற்குள் ஒரு வித பயத்தைத்தான் உண்டாக்கியது. சிறுது யோசித்தான்.
‘சரி என்னம்மா பண்ணுறது. உனக்கு ஒன்னும் ஆகாது. படச்சவன் மேல பாரத்த போட்டு இரு! பாக்கலாம்” சொல்லிவிட்டு அவன் காவலுக்கு போய்விட்டான். கழுத்தில் ஒரு துண்டு, கையில் ஒரு பெரிய கைத்தடி, பேட்டரி செல் போடும் ஒரு டார்ச் லைட்டுடன் வெயிலான் காவலுக்கு போகும் போது அவன் வீட்டில் கிடந்த நாயும் அவனுக்கு துணையா பின்னாலேயே போனது.
இரவு 12 மணி ஊர் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது. நாய்களும் ஆடு மாடுகளும் கூட தூங்கிருக்கும் போல ஒரு சத்தத்தைக் காணோம்.
‘அய்யோ அம்மா”
இந்தச் சத்தம் அந்த நள்ளிரவு வேளையில் அமைதியான வேளையில் ஊரே எதிரொலித்தது. வெயிலான் பொண்டாட்டிக்கு பிரசவ வலிதான். ஒருமுறை சத்தம் கேட்டு அப்புறம் அரைமணி நேரமாக எந்த ஒரு சத்தமும் இல்ல. பக்கத்து வீட்டில் இருந்த முருகாயி ஓடிச் சென்று பார்க்க அங்க வெயிலான் பொண்டாட்டி வயித்தை பிடித்துக் கொண்டு கழுத்தை வெடுக் வெடுக் கென்று இழுத்துக்கொண்டிருந்தாள். வாயில் எல்லாம் நுரை, ஒரு கையும் ஒரு காலும் மேலும் கீழும் போய் வந்தது.
‘அய்யோ! ஆத்தா கடவுளே! வாயும் வயிருமா இருக்கவளுக்கு இப்படி ஒரு ‘ பாதி பேச்சை முழுங்கிட்டு பேசிக்கிட்டே ஓடி சென்று அவளின் கையை பிடித்துக்கொண்டு தலையை எடுத்து தன் மடியில் கிடத்தியது. பக்கத்தில் கிடந்த அடுப்பு ஊதும் இரும்பு குழாயை எடுத்து அவள் கையின் மீது வைத்து மடக்கியது முருகாயி. அப்பாவும் வலிப்பு நின்னபாடு இல்ல.
‘அய்யோ கடவுளே! யாராவது வாங்களே! நா ஒருத்தி என்ன பண்ணுவேன்” முருகாயின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த ஆம்பளைகளும் பொம்பளைகளும் கொஞ்ச பேர் ஓடி வந்தனர்.
‘டேய்! கண்ணாயிரம் வண்டிய கட்டுடா இந்த புள்ளைய கவுர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போயிரலாம்” முருகாயி கண்ணாயிரத்திடம் சொன்னது.
‘இல்ல ஆயா. வண்டில அச்சு முருஞ்சுகிடக்கு” பின்தலையை சொரிந்தான்.
‘டேய்…மணியப்பா நீயாவது போய் உன்னோட பைக்கியை எடுத்தாடா!” வீட்டு வாசல்படிக்கு வெளியேயே நின்னவனிடம் சொன்னது முருகாயி.
‘இல்ல ஆயா! நா வேற கோயிலுக்கு மாலை போட்டுருக்கேன்! இந்த மாதிரி காரியத்துக்கு எல்லாம் வந்தா அது தீட்டல்லவா” வாசலுக்கு வெளியேயே நின்னு குரல் கொடுத்தான் மணியப்பா.
‘டேய்… இந்த மாதிரி புள்ளதாச்சி துட்டுச்சுக்கிட்டு இருக்கா… இந்த நேரத்துல மால போட்டுருக்கேன்! மயிறு போட்டுருக்கேன்னு! போடா மொதல்ல அங்கிட்டு” எச்சியை காரி அவனிடம் துப்பியது முருகாயி, அது அவன் காலடியில் சென்று விழுந்தது.
வெயிலான் மனைவிக்கு வலிப்பு அதிகமாகிக்கொண்டே போனது. கண்ணுமுழி நட்டுகிட்டது மூச்சு ரொம்ப வாங்கியது.
‘டேய் யாராச்சு. இவ புருசனுக்காவது சொல்லி அனுப்புங்கடா…ஒத்த உசுரு இல்லடா ரெட்ட உசுருடா”
முருகாயி கூடியிருந்தவரின் முகங்களைப் பார்க்காமல் கத்தியத்து.
‘அவ புருச வெயிலான் மலங்காட்டுக்கு பக்கத்துல காவலுக்கு போயிருக்கான். ஏழு மைல் தூரம் வரும், ஆஸ்பத்திரி அதவிட பக்கம்தான்” கூட்டத்தில் இருந்து ஏதோ ஒரு குரல்.
‘அப்போ சாம்புகன் அண்ணன்கிட்ட போய் சொல்லி கூட்டிகிட்டு வாங்கடா ‘ மீண்டும் முருகாயி கத்தியது.
ரெண்டு பொடுசுகள் ஓடிச்சென்று சாம்புகனை கூப்பிட்டது. அவரும் வீட்டின் கொள்ளைப்புறமாக போய் ஏதோ ஏதோ இலைகளைப் பறித்து வீட்டுக்குள் வச்சுருந்த வேற ஏதோ எடுத்துகிட்டு வெயிலான் வீட்டுக்கு ஓடி வந்தார்.
‘என்னம்மா… என்னமா ஆச்சு” என்ற பதட்டத்துடன் முருகாயி பக்கத்தில் வண்டு உக்காந்தார். முருகாயி சொன்னதை கேட்டுவிட்டு வெயிலான் வீட்டு அம்மியில் போட்டு தான் கையில் கொண்டு வந்த தழைகளை அரைத்து இடுப்பில் சுத்தி வச்சிருந்த ஏதோ பொடியை எடுத்து தண்ணீயில் கலந்து வெயிலான் மனைவி வாயில் ஊத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக வலிப்பு நின்னு முன்னும் பின்னுமாக இழுத்துட்டு இருந்த காலும் கையும் நின்னது. ஆனால் அவள் இடுப்பை பிடித்து கொண்டு அலறினாள்.
‘ஏம்மா முருகாயி… இனி இதுக்கு மேல ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போறதும் ஆகாது. நீயே இன்னும் ரெண்டு பொம்பளைகளைக் கூப்பிட்டு பாத்துருங்க” சொல்லிக்கிட்டே ஆம்பளைங்க எல்லாம் வெளியே வாங்கனு கூப்பிட்டுட்டு கதவைச் சாத்தினார் சாம்புகன்.
அதுக்குள் எப்படியோ செய்தி தெரிஞ்சு வெயிலானும் ஓடி வந்துவிட்டான். பதற்றத்தில் வெயிலான், சாம்புகன் எல்லோரும் வீட்டுக்கு வெளியே உக்காந்திருந்தன. கொஞ்ச நேரத்துக்கு பின்னால முருகாயி வந்து ‘பெயனப்பா’ என்று சொன்னதும் எல்லோர் முகத்திலும் ஒரு சிரிப்பு வந்தது.
‘அண்ணே சாம்புக அண்ணே ! நீ மட்டும் இல்லைனா இந்நேரம் ரெண்டு உசுரும் போயிருக்குமேனே”, முருகாயி சொன்னதும் சாம்புகன் காலில் பொத்தென்று விழுந்தான் வெயிலான். அவனை மேலே தூக்கி போய் உம் பொண்டாட்டியும் குழந்தையையும் பாரு என்றார்.
‘வெயிலான் தன மகன் மணியனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அவனும் படிச்சு டாக்டர் ஆகிட்டான். வெளியிலேயே வேலை செய்கிறேன் என்று இருந்தவனை நீ நம்ம ஊருல வந்து வைத்தியம் பாத்தாத்தான்பா எங்களுக்கும் பெருமை அப்படின்னு அவன் அம்மா அப்பா சொல்ல அவனும் அந்த கிராமத்திலேயே வந்து சின்னதாக ஒரு கிளினிக் வைத்துவிட்டான். நாட்டு மருந்துக்களாலேயே ஊறிப் போய் கிடந்த அந்த ஊர் மக்கள் வெயிலான் மகன் டாக்டர் ஆகி தங்கள் ஊரில்தான் கிளினிக் வைத்துள்ளான் என்பதை கண்டு கொள்ளாமல் எப்பவும் போலவே சித்தவைத்தியர் சாம்புகனிடமே போனார்கள். அவர்களுக்கு அந்த வைத்தியம் தான் சரியாகப்பட்டது. அவருக்கும் வயது ஆகிக்கொண்டே போனது. தனக்கு வாரிசுன்னு யாரும் இல்ல என்று ஊரில் இருக்கும் சின்ன சின்ன பையனுகளுக்கு அப்போ அப்போ தன் வீட்டில் கூப்பிட்டு தனக்கு தெரிந்த சித்த வைத்தியத்தை சொல்லிக்கொடுத்தார்.
கிளினிக்கிள் இருந்து வேக வேகமாக தன் வீட்டுக்கு வந்த மணியன் தன் கையில் கொண்டு வந்த மருந்து பொருட்கள் அடங்கிய சிறிய அளவிலான சூட்கேஸை தூக்கி எறிந்தான் நடுவீட்டில்.
‘என்னப்பா என்ன ஆச்சு” ஏதும் புரியாமல் வெயிலானும் அவன் மனைவியும் திரு திரு வென ஒருவருக்கு ஒருவரை பார்த்துக்கொண்டனர்.
‘எல்லா அந்த கெழவன் சாம்புகன் தான்” கோபத்தில் அவனுக்கு மூச்சு வாங்கியது.
‘அவரா அவரு என்ன பண்ணார்” ஒன்னும் புரியாமல் தன் மனைவியை பார்த்தான் வெயிலான்.
‘ஆமால்ல… அவரு என்ன செஞ்சார் ‘ வெயிலான் மனைவியிடம் இருந்தும் அதே கேள்வி.
‘டாக்டருக்கு படுச்சு முடுச்சதும் அங்கிட்டே வேலை செய்யுறேன்னு சொன்னேன். நீங்கதான் நம்ம ஊருல வந்து வேலை செய்யுன்னு இங்க வர சொன்னீங்க’ தன் அம்மா அப்பாவை முறைத்தான் மணியன்.
‘அதுனால என்னப்பா! நம்ம மண்ணுல வேலை செஞ்சா நல்லதுதான, அது எங்களுக்கும் பெருமைதான”
‘கிளினிக் வச்சு மூணு மாசத்துக்கு மேல ஆச்சு. ஒருத்தர் கூட வரலை என்கிட்டே வைத்தியம் பாக்க, எல்லாருமே அந்த கெழவன் கிட்டத்தான் போறாங்க” சிறிது மூச்சு வாங்கிக்கிட்டான் மணியன்.
‘அதுனால என்னப்பா இந்த காலத்துல இருக்கவங்க எல்லாம் எங்க சித்த வைத்தியத்தை கண்டுக்கிறாங்க. எல்லாமே இப்போ சித்த வைத்திய அருமை தெரியாம ஆஸ்பத்திரிக்குத்தான் ஓடுறாங்க. உனக்குன்னு வரவங்க வருவாங்க” பொறுமையா சொன்னார் வெயிலான்.
‘சித்தவைத்தியத்தால என்ன பண்ண முடியும். நான் படுச்ச டாக்டர் படிப்பாள எல்லா வியாதியையும் குணப்படுத்தலாம்”
அவன் பேசி முடிப்பதுக்குள்ளேயே அவன் அம்மா ‘டேய் நிறுத்துடா! அந்த சித்தவைத்தியம்ன்னு ஒன்னு இல்லாம இருந்துருந்தா நீ பொறக்குற அப்பவே நீயும் செத்துருப்ப நானும் செத்துருப்பேன். அன்னைக்கு மட்டும் சித்தவைத்தியர் சாம்புகன் வந்து எனக்கு வைத்தியம் பார்க்கமால் இருந்தா இந்நேரம் நீ இந்த மண்ணுல நின்னு இப்டிபேசிக்கிட்டு இருக்க மாட்ட” கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
‘சாம்புகன் அவருக்கும் வயசாகிருச்சு… அவரும் இப்பவோ அப்பவோன்னு இருக்கிறார். இப்போ இருக்க பசங்க எல்லாம் சித்த வைத்தியத்தை கத்துக்கவே மாட்டேன்கிறீங்க . அதுதான் காலம் போற போக்குல நாமும் போலாம்னு உன்னைய டாக்டருக்கு படிக்க வைச்சோம். இப்போ இருக்குற ஆங்கில வைத்தியத்தை குறை சொல்லலை. அதுக்காக காலங்காலமா இருக்க சித்தவைத்தியத்தை கொற சொல்லலாமா? வெயிலான் கேட்டார்.
‘நா ஒன்னும் கொறசொல்லலை! எப்போ அவர் சாவார்ன்னு பாத்துக்கிட்டு இருக்குறதா” விடாமல் வாக்குவாதம் செய்தான் மணியன்.
‘சரி இப்ப என்னதான் பண்ணப்போற?” வெயிலானும் அவர் மனைவியும் ஒண்ணாகக் கேட்டனர்.
‘கவுர்மெண்டல எந்த ஒரு பதிவும் பண்ணாம, அனுமதியும் வாங்காம, அத பத்தி படிக்காம ஊருல வைத்தியம் பாக்குறாருன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன்” தலையைக் கீழே போட்டுக்கிட்டு சொன்னான்.
‘அடப்பாவி! பாவம்டா அவரு. அன்னைக்குன்னு அவரு இல்லைனா நீ இப்போ இல்லைடா” அவனின் அம்மா பதறினாள்.
‘வேணாம்பா! அது எல்லாம் பாவம்! அவரு வேணா படிக்காம வைத்தியம் பண்ணலாம் ஆனா அவரு வைத்தியம் தப்பா போய் இதுவரைக்கும் யாருக்கும் ஏதும் நடக்கல” வெயிலான் கெஞ்சினார். அவர்கள் பேச்சைக் கேக்காமல் போலீஸில் போய் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு இப்போ வீட்டுக்கு போலீசை கூட்டிகிட்டு வந்து வீட்டுலேயே விட்டுவிட்டு வெளியவே நிக்கிறான்.
போலீசும் அவரை ஸ்டேஷன்க்கு வண்டியில் ஏத்தினர். இவன்தான் தன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தவன் என்று தெரியாமல் அவன் முகத்தை பார்த்தவாறே போலிஸ் வண்டியில் ஏறினார் சாம்புகன்.
– படைப்பு இடம் பெற்ற இடம்: கால் தடம் சிறுகதைகள் (வெளிவந்த ஆண்டு: ஜுன்-2020)