மழை நாளில் மூன்று பேர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 18,818 
 

மயிலாப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடைசி சீட்டில் இடமிருக்க. அமர்ந்தேன். உடன் மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது. மழை சத்தத்தையும் மீறி எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் பேசும் சத்தம் கேட்க, இடப்புறம் திரும்பி பார்த்தேன்.

இரண்டு இளைஞர்கள். எனக்கு அடுத்து ஒருவன். அவனுக்கு அடுத்து ஜன்னல் பக்கம் மற்றொருவன். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்களது உடல் புஷ்டியிலும் உடைகளிலும் தெரிந்தது.

அவர்களை நேரிடையாக கவனிப்பதை தவிர்த்தேன். ஆயினும், அவர்களது உரையாடல் என் காதில் விழுந்தது.

அவர்கள் இருவரில், ஜன்னலுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் அதிக குறும்பு செய்பவனாக தெரிந்தான். பஸ் போவதால் தேங்கி நிற்கும் மழை தண்ணீர் தன் மீது பட்டுவிடுமோ என்று ஒதுங்கிய ஒரு பெரியவரை ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி கேலி செய்தான். எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவன் அதை ரசித்தபடி அவன் பங்குக்கு ஏதோ சொன்னான். உடன் இருவரும் சததமாக சிரித்தார்கள்.

ஜன்னலோரம் இருந்தவன் பஸ்சின் தகரத்தைத் தட்டியபடி, ’ஓ போடு’ திரைப்படப் பாடலை, ’சோறு போடு’ என்று மாற்றிப் பாட, என் அருகில் இருந்தவன் தன் தலையை கோதி விட்டபடி சிரித்துக் கொண்டிருந்தான். நான் கவனிக்காதது போலவே சீரியசாக வேறு பக்கம் பார்த்தபடி இருந்தேன்.

அடுத்து, ’ஏய்! நீ ரொம்ப அழகாய் இருக்கே’ என்ற திரைப்படப் பெயரை மாற்றி, ’ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்கே’ என்று அருகில் நின்ற பெண்ணை பார்த்து சன்னமான குரலில் பாடினான். அதற்கும் என் அருகில் இருந்தவன் லேசாக சிரிப்புடன் இருந்தான்.

அவர்கள் அருகில் அமர்ந்திருந்த நான் அவர்களுடைய இவ்வளவு கலாட்டகளையும் ரசிக்காதது மட்டுமல்ல, சலனமற்று அமைதியாகவும் இருந்தது அவர்களுக்கு உறுத்தியிருக்க வேண்டும்.

அடுத்து, அவர்கள் டிக்கெட் வாங்கியிருந்தும் வாங்காமல் பயணம் செய்வது போலவும், அது நியாயம்தான் என்பது போலவும் பேசி, என் கவனத்தை கவர முயன்றார்கள்.

அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? படிக்கிற மாணவர்களா? அல்லது வேலை தேடுபவர்களா? அல்லது வேலைக்கு போகிறவர்களா? என்று தெரிந்து கொள்ள என்னுள் குறுகுறுப்பு.

’கூடாது. நேரிடையாக கேட்க கூடாது. அதுவும், இப்போது இந்த கேள்வியை கேட்டால் அவர்களுக்கு சங்கடமாக போய்விடும்’ என்ற எண்ணம் என்னுள் ஓடியது.

பஸ்ஸில் மற்றவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்து ரசிக்கும் போது நான் மட்டும் அவர்களை ரசிக்காதது அவர்களுக்கு பெரும் சவாலாகி விட்டது போலும். அடுத்த ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த அவன் என்னருகில் அமர்ந்திருந்தவனைச் சீண்டினான்.

”உன் ஆட்டமெல்லாம் மூணு வருஷம்தான். அப்புறம் காலேஜ் முடிஞ்சதும் பார், அலைய போற.”

ஓஹோ! மாணவர்களா எனக்குள் ஒரு பச்சாதாபம் வந்தது. என் அருகில் அமர்ந்திருந்தவன் வாய் திறந்தான்.

“மூணு வருஷம் உனக்குத்தாண்டா. எனக்கு இல்ல.

“ஏன்? ஜன்னல் அருகில் இருந்தவன் முகத்தில் வியப்புடன் கேட்டான்.

“நான்தான் எம்.பி.ஏ. சேர போறேனே!”

”ஆஹாஹா”

ஜன்னல் அருகில் இருந்தவன் சிரித்ததில், பஸ்ஸில் இருந்த பாதிப்பேர் திரும்பி பார்த்தனர்

நானும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க, “ஏன் சார் இவன் எல்லாம் எம்.பி.ஏ. படிக்க முடியுமா”

முதன்முறையாக என்னை பார்த்து நேரடியாக கேட்டான்.

“ஏன் முடியுமே!”

“நல்லா பாருங்க சார். இவனால முடியுமா?” ஜன்னல் இளைஞன்.

“ம்..பௌத்திசாலிக் கலை தெரியுதே”

நான் அழுத்தமாகச் சொல்ல, என்னருகில் இருந்தவன் கண்களை விரித்து என்னைப்பார்த்தான். அவன் முகத்தில் ஆச்சரியம், ஆர்வம், உடன் மகிழ்ச்சி.

நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. மழை நின்று விட்டிருந்தது.

இறங்கி, தேங்கி இருக்கும் மழை தண்ணீர் பஸ் கிளம்புகையில் என் மீது தெறித்து விடாமல் இருக்க ஒதுங்கி நின்றேன். பஸ் நகர்ந்து சென்றது.

அவர்களின் கேலிப் பேச்சு தொடரும் என நினைத்தபடி போய்கொண்டிருந்த பஸ்சைப் பார்த்தேன். கடைசி சீட்டில் இருந்த அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தது மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.

கடைசி சீட்டில் இருந்த அவன் எனக்கு கையசைத்து விடை கொடுத்தான். மனதுக்கு நிறைவாக இருந்தது

– 29-12-2002ல் கல்கி இதழில், மழை நாளில் மூன்று பேர் என்ற தலைபில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *