சிங்கக்கொடி சிரித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 2,682 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சைக்கிள்களும் ஆள்களுமாக சுமார் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம் அது. முழுவதும் சிங்களவர்கள். “ஜயவிஜயீ பவா” என்று எழுதிய ஒரு கொடியை ஒருவன் ஊர்வலத்துக்கு முன்னே பிடித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னால் “2000 வருஷங்களாக இலங்கை மக்களின் சொந்தக் கொடி சிங்கக்கொடி” என்று பெரிய எழுத்தில் எழுதிய சீலையை இருவர் சேர்ந்து உயர்த்திப் பிடித்திருந்தார்கள்.

இப்படி ஊர்ந்துபோகும் ஊர்வலத்தை அவதானித்துக் கொண்டு ஒரு கடையில் நின்றேன். வெகு உற்சாகமான வாலிபர்கள் அநேகம் பேர் ஊலர்வலத்தில் கலந்து தொண்டைகிழியக் கத்திக்கொண்டு போனார்கள்.

இந்தக் கொடி இலங்கையின் தேசீயக்கொடிதானா? அல்லது ஒரு வகுப்பினருக்கு மட்டும் உரிமையான கொடியா? – என்ற இந்தப் பிரச் சினையில் மனம் இறங்கவில்லை. அதற்குள்ளே ஊர்வலத்தில் கண்ட

ஒன்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.

ஒரு முடவன் கால்கள் இல்லை. இயற்கையாகவோ இல்லையோ அல்லது இலை நடுவில்தான் இல்லாமற் போனதோ தெரியாது. மூன்று சில்லுப் பெட்டிவண்டி ஒன்று தான் அவனுக்குக் கால்கள். அதற்குள்ளே இருந்து கொண்டு முன்சக்கரத்தோடு இணைக்கப் “பெட”லைக் கைகளால் சுற்றுவான். அது அவனைச் சுமந்து கொண்டு ஓடும்.

அதிகமாக அவனைப் பெருந்தெருவில் ஒரு மரத்தின் கீழே பார்க்கலாம். பிச்சைக் காரனிடம் கூட சுயமரியாதை உண்டு. எல்லாப் பிச்சைக்காரர்களுமே நாயாக நடந்துகொள்ள தில்லை. – இதை முதலில் அவனிடம் தான் கண்டேன். தெருவில் தனக்கு முன்னே போகிற ர்களை “ஐயா!” என்று ஒரு தரம் கூப்பிடுவான். பிறகு “ஐயா, ஐயா!” என்று இரண்டு தடவை பணிவாகக் குழைந்த குரலில் கூப்பிடுவான். அவ்வளவுக்கும் முறைத்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காது அலட்சியமாய் யாராவது போனார்களானால் அவனுக்குக் கோபம் வந்து விடும். “ஓய்! ஓய்!” என்று கொஞ்சம் உரத்த சத்தத்திலேயே பிறகு கூப்பிடத் தொடங்குவான்.

“பிச்சைக்காரனுக்கு இத்தனை திமிரா” என்று பலர் ஆத்திரப்படுவதுண்டு. ஆனாலும் அவன் பிச்சைக்காரன் தானே! அவனோடு முரண்டி என்ன செய்வது?

ஊர்வலத்தின் முன்னணியில் சைக்கிள்களின் அணிவகுப்பின் மத்தியில் அந்தப் பிச்சைக்கார முடவனது பெட்டிவண்டியும் சரிநிகர் சமானமாகப் போய்க் கொண்டிருந்தது. மற்ற எந்த சைக்கிள் வண்டிகளுக்குமில்லாத கொடி அலங்காரம் அவன் வண்டியில் காணப்பட்டது. அந்த ஊர்வலத்தில் யாரிடமும் இல்லாத உற்சாகத்தோடும் முகமலர்சசி யோடும் அவன் “ஜய வேவ” என்று கோஷமிட்டான். ஊர்வலம் பட்டணம் முழுவதும் வலம் வந்து போயிற்று.

இது நடைபெற்ற மறுதினம் நான் பெருந்தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

அவன் வழக்கம்போல அந்த மரநிழலிலிருந்தான். அந்தப் பக்கம் திரும்பாமல் விசுக்கு விசுக்கென்று போய்க்கொண்டிருந்தேன். அவனுக்கு முன்னாலே போனதும் வழக்கம் போல அவன் “ஐயா” என்றான். நான் திரும்பிப் பார்க்கவேயில்லை . அவன் திரும்பவும் “ஐயா, ஐயா!” என்றான். எனக்கு அவனோடு கொஞ்சம் கதைக்க வேண்டியிருந்தது. அதற்காக முறைத்துக் கொண்டு போவது போல் போய்க் காட்டினேன். நான் எதிர்பார்த்தது நடைபெற்றது. “ஓய்! ஓய்!” என்று நையாண்டி பண்ணினான் அந்தப் பிச்சைக்காரன்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது. அதாவது கோபம் வந்துவிட்டது போலப் பாசாங்கு பண்ணினேன். “விறுக் கென்று திரும்பி அவ்விடம் நேரே போய் “என்னப்பா, குதிரை விடு கிறாய்?” என்றேன். முகத்தைக் கடுகடுப்பாகவே வைத்துக் கொண்டேன். ஆனால் அவன் இதற்கெல்லாம் மிரண்டு போகிற பேர்வழியாகத் தெரியவில்லை.

“குதிரைமாதிரி நடந்துகொள்ளுகிறவர்களிடம் குதிரை விடுவதில் என்ன பிசகு இருக்கிறது?” என்று திருப்பி என்னைக் கேட்டான்.

“பிச்சைச் சோற்றிலே குழைந்த சோறு வேறு பார்க்கிறயா? தெருவிலிருந்து பிச்சை எடுக்கிறாய்! அதற்குள்ளே மதிப்பு வேறே உனக்கு. தலைக் கர்வம் வேறே” என்றேன்.

அவனுக்கு இது “சுருக்”கென்றுதைத்திருக்க வேண்டும். “படபட” வென்று பேசினான்:

“பிச்சை எடுத்தாற்போலே மனுஷன் மிருகமாகிவிடுவதில்லை. மனுஷனுக்கு மனு ஷன் கொடுத்து உதவி செய்தாற் போலே அவன் தேவனாகிவிடுவதுமில்லை . அது மனுஷன் கடமை. இல்லாதவர்களுக்கு இருப்பவர் கொடுப்பது தான் பகுத்தறிவு பார்க்கப்போனால் இந்த இருப்பவர்களின் சிருஷ்டிகள்தான் இல்லாதவர்கள் என்று சொல்லலாம். உலகத்திலே உயர்ந்த மலைகள் இருப்பதினாலேதான் சமுத்திரத்தில் பள்ளம் விழுந்திருக்கிறது. “பிச் சைக்காரன் நாய்மாதிரி மனிதன் காலடியில் விழுந்து கிடந்தாலே உதவிசெய்ய வேண்டும்” என்னும் எண்ணம் மகா கொடியது. பிச்சைக்காரன் மனுஷ ஜென்மமில்லையா? அவனுக் குச் சுயமரியாதை இல்லையா?”

அவன் வைத்த பிசரசங்கத்தைக் கேட்டு நான் விறைத்துப் போய் விட்டேன்.

“கையில் கொஞ்சம் சேர்ந்துவிட்டது போலிருக்கு. அதுதான் இவ்வளவு தடிப்பாகப் பேசுகிறாய்?” என்றேன்.

“என்னுடைய ஆஸ்தியெல்லாம் இந்த வண்டிதான். இது இல்லையானால் நான் இல்லை. இந்த வண்டியைப் பார்த்துவிட்டுத்தான் அப்படிக் கேட்கத் தோன்றுகிறது போலி ருக்கு. அதோ பாருங்கோ ஐயா!” என்று சுட்டிக் காட்டினான்.

அவன் காட்டிய பக்கம் திரும்பிப் பார்த்தேன், யாரோ ஒரு பணக்காரக் குழந்தையைத் தள்ளுவண்டியில் வைத்து “ஆயா” ஒருத்தி தள்ளிக்கொண்டு போனாள்.

அவன் அதைக் காட்டி விட்டு மேலும் சொன்னான்:

இந்த உல்லாச வண்டியிருக்கிறதே, அதன் விலையில் நூறிலொரு பங்குகூட எனது இந்த வண்டிக்குக் கிடையாது. ஆனாலும் இது எனக்குச் சோறு தருகிறது. இதில்லாவிட்டால் என் வாழ்க்கையே அஸ்தமித்துப் போய்விடும். நான் உலகத்தில் கட்டுப்பட்டிருப்பது இது ஒன் றுக்குத்தான். இதைவிட வேறு எதற்கும், யாருக்கும் நான் அடிமைப்பட்டிருக்கவில்லை ; வளம் செழித்த பூமித்தாயிருக்க, குளக்கோட்டன் கட்டிய நீர்நிலைகளிருக்க அந்நியர் முன் போய் கைகட்டி வாய் புதைத்து அடிமை செய்து வயிற்றை வளர்க்கிறார்களே மனுஷர்கள், அவர்களைப் போல இந்தப் பிச்சைக்காரனையும் எண்ணிவிடாதே. இவன் சுயமரியா தையுள்ளவன். பூமியில் யார்க்கும் அடிமை செய்யான். நாமிருக்கிற நாட்டுக்கு நாமே ராஜாக் கள். இது நமக்கே சொந்தம்…”

“அது சரி அப்பனே! உன் வண்டியிலே போட்டிருக்கும் இந்தக் கொடியைப் பார்த்துவிட்டு உன்னை அநேகர் ஆதரிக்கமாட்டார்களே! உனது சீவனத்துக்கு…”

“ஆதரிக்காதவர்கள் போகட்டுமே! பிச்சை எடுத்தாற்போலே மனச்சாட்சியை விற்றுவிட நான் தயாராகவில்லை. இந்தக் கொடியை எற்றியவனது தேசபக்தியின் ஞாபகத்துக்காகவே இதனை நான் நாட்டிவிட்டிருக்கிறேன். சுதந்திரமிழந்து அடிமைகளாகப் போயிருக்கும் நம்ம வர்களுக்கு கண்டிராசன் வாழ்க்கை ஓர் சிறந்த ஆதர்சமாயிருக்க வேண்டும். இதோ வண் டியிலிருக்கும் கொடி காற்றிலே “பட்பட”வென்று அடித்துக்கொள்ளும் போது அது எவ்வளவோ கதைகளைச் சொல்லுகிறது! அதன் ஒவ்வொரு அடிப்பும் விக்கிரமராச சிங்கனின் வீராவேஷம் நிறைந்த இதயத்துடிப்பாகவே எனக்குப்படுகிறது!” என்று உணர்ச்சியோடு பேசினான்.

“விக்கிரமராசசிங்கன் யார் தெரியுமா?”

“அவன் யாராயிருந்தாலென்ன! இலங்கைநாடு அந்நியர் வசப்படுகிற சமயக் தாய்நாட்டைக் காப்பாற்றக் கடைசிவரை சமர்புரிந்த ஒரு மகாவீரன் என்ற மட்டிலேகா அவனை என் லட்சிய புருஷனாகக் கொள்ளுகிறேன். அதற்காகவேதான் அவன் கொடி நான் நாட்டியிருக்கிறேன்…”

“உனது தலைவர் பக்தியைப் பாராட்டுகிறேன். ஆனால் விக்கிரமராசசிங்கன் ஒரு காம் அரசன் என்று அறிந்துகொள். சிங்கக்கொடியைப் பறக்க விட்டு எதிரிகள் மீது சிங்கம் போலப் பாய்ந்த அந்த அரசனைக் காட்டிக் கொடுத்த வஞ்சக மக்கள் யார் என்றால்…உன் இனத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள்தான். அன்றைக்குச் சிங்கக்கொடியைக் காட்டிக் கொடுத்தவர்கள். இன்றைக்கு அதைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். பட்டத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அன்று சிங்கக் கொடியைக் காட்டிக் கொடுத்தார்கள். இன்றைக்கு எதற்கு ஆசைப்பட்டு அதைத் தூக்கிப்பிடிக்கிறார்கள்?” என்றேன். பிச்சைக்காரன் சிரித்தான். காற்றினால் படபடத்த சிங்கக்கொடியும் அவனோடு சேர்ந்து சிரித்தது!

– வரதர் புதுவருஷ மலர் – 1950, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *