சிக்கன் 88

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 6,017 
 

கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு வரும் “ஆதி டீலக்ஸ் பஸ்சில் நம்ம ஆபீசுக்கு புது ஹெட்கிளார்க் பஞ்சநாதம் வர்றார்.அவரை ரிஸீவ் பண்ணி நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸில் சேர்க்க
வேண்டியது உம்ம பொறுப்புய்யா!” என்று எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷன் ரங்காச்சாரி, ஸ்டோர்ஸ் தங்கப்பனிடம் முந்தின நாள் சொன்னபோது, உடம்பில் மகிழ்ச்சிப் பூரிப்பு ஓர் பிரவாகமாகவே ஓடியது தங்கப்பனுக்கு!

“என்ன அதிர்ஷ்டம்! என்ன அதிர்ஷ்டம்!” என்று தன்னையே தட்டிக் கொடுத்துக் கொண்டான் தங்கப்பன். “அடேய், சீனு! அற்பப் பதரே! தொலைஞ்சாய் நீ!” என்று மகிழ்ச்சியுடன்
கூவினான்.

முன்பே அடையாளம் சொல்லியிருந்தார்கள். ஆள் குண்டாக இருப்பார். சஃபாரி சூட் போட்டிருப்பார். முகம் கடுகடுவென்று இருக்கும்!

கையில் ஒரு சூட்கேஸுடன் பஸ்சிலிருந்து இறங்கிய சஃபாரி உடை ஆசாமியை நெருங்கி, “ஸார், நீங்க ஏ.ஆர்.மானுஃபாக்சரிங் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி ஹெட்கிளார்க்…” என்று
ஆரம்பித்தான். அவர் முகம் மலர்ந்தது. “அட, நீர்தான் மிஸ்டர் தங்கப்பையனா?” என்றார்.

“தங்கப்பையன் இல்ல ஸார், தங்கப்பன்!” என்றவன், அவர் கையிலிருந்த சூட்கேஸைப் பிடுங்கிக் கொண்டான். “இப்படி வாங்க ஸார்! டாக்ஸி கொணாந்திருக்கேன்!” என்று அவரை
வழிநடத்தி முன்னே போனான்.

“அட, டாக்ஸியெல்லாம் எதுக்கு மிஸ்டர்?” என்றார்..

“என்னா ஸார் அப்பிடிச் சொல்லிப்புட்டீங்க? எங்க ஊருக்குப் புதுசா வர்றீங்க, உங்களை ஆட்டோவுல கூட்டிப் போறது மரியாதையா இருக்குமா என்ன?” என்று உபசார வார்த்தைகள்
கூறியவன், “ஸார், நம்ம ஆபீஸ் டவுன்ஷிப்பில் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கு. அங்கே ஓட்டல் ஏதும் கிடையாது. போகும்போதே ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்புட்டுப் போயிடலாமா?” என்று கேட்டான்.

“போலாமே! இங்க நல்ல என்.வி. ஓட்டல் இருக்கோ?”

தங்கப்பன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நல்லவேளை நேற்று பக்கத்து ஸீட் பங்கஜத்திடம் அநியாய வட்டிக்கு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி
வந்த தன் முன்யோசனையைப் பாராட்டிக் கொண்டான்.

ஸ்பெஷல் சிக்கன் அண்ட் எக் சூப்பில் ஆரம்பித்து, மட்டன் பிரியாணி, சிக்கன் 88 என்று எலும்பு இல்லாத வறுத்த கோழிக்கறித் துண்டுகள், பிரான் ஃபிரை ஆகியவற்றை ருசித்துவிட்டு, ஒயிட் ரைஸ் கொண்டுவரச் சொல்லி, அதில் ரசத்தைத் தளரத் தளர ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு, கெட்டித் தயிர் போட்டும் கொஞ்சம் சாப்பிட்டார்.

ரஸ்தாளி வாழைப்பழம் ஒன்றையும் அதற்கு மேல் ஸ்வீட் பீடாவையும் போட்டுக் கொண்டு ஏவ்… என்று பஞ்சநாதம் ஒரு பெரிய ஏப்பம் விட்டு, மீண்டும் டாக்ஸியில் ஏறிக் கொண்டார்.
“சொல்ல மறந்துட்டேனே, ஒரு பாக்கெட் கிங்ஸும் ஒரு மேட்ச் பாக்ஸும் வேணுமே!” என்று அவர் கூற, தங்கப்பன், “இதோ ஒரு செகண்டில் வாங்கியாறேன் ஸார்!” என்று ஓட்டல்
வாசலில் இருந்த பெட்டிக் கடைக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடினான்.

கெஸ்ட் ஹவுஸில் அவரைக் கொண்டு விட்டதும் அறையில் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு தங்கப்பனை எதிரில் உட்காரச் சொன்னார் புது ஹெட்கிளார்க் பஞ்சநதம்.

“ஏன் மிஸ்டர் தங்கப்பையன், நம்ம ஆபீஸில் ஸ்டாஃப் எல்லாம் எப்படி? நான் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டு. அதான் முன்னாடியே தெரிஞ்சுகிட்டால் வால்தனம் செய்றவங்களுக்கு
வாலை ஒட்ட வெட்டி வைக்கலாமேன்னுதான் கேக்கறேன்..”

திடீரென்று தங்கப்பன் மனசுக்குள் ஆயிரம் வயலின்கள் இசை மழை பொழிந்தன. இந்த சந்தர்ப்பத்துக்காகத்தானே காத்துக்கிட்டிருந்தேன் என்று புளகாங்கிதப்பட்டான் அவன்.

“ஸார், சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்கப்படாது….ஆபீசில் லஞ்சம் தலை விரிச்சு ஆடுது. அதிலும் சீனுன்னு பர்ச்சேஸ்ல ஒருத்தர் இருக்கார். ஆபீசுக்கு வாங்கற எந்த ரா
மெட்டீரியலா இருந்தாலும் அதுக்கு பில் பாஸ் பண்ண குறைஞ்சது 40 பர்சண்ட் வெட்டணும்னு டேபிள் மேல போர்டு வைக்காத குறைதான் போங்க. முன்னாடி இருந்த ஹெட்கிளார்க்குக்கு பத்து பர்சண்டை வெட்டிட்டு மீதி முப்பது பர்சண்ட்டை இவரே முழுங்கிப்புடுவார்னா பார்த்துக்கோங் களேன்! கேட்டால் ஹெட்கிளார்க் என் பாக்கெட்டுலங்கறார். இது என்ன ஸார் நியாயம்?”

புது ஹெட்கிளார்க்கின் முகம் இறுகியது. “பெயர் என்ன சொன்னீங்க, சீனுவா? பார்த்துக்கறேன். அவனைத் தண்ணியில்லாக்காடு எதுன்னு பாத்துத் தூக்கியடிக்கறேன், உம் அப்புறம்?”

“ஸார்! நீங்க ரொம்பவே ஸ்ட்ரிக்டுன்னு நீங்க வர்றதுக்கு முன்னாலேயே தெரிஞ்சுகிட்டு எல்லாரும் அலண்டு போய்க் கிடக்காங்க. ஆரம்பத்துலியே நீங்க கண்டிப்பா நடந்து சீனுவையும்
அவனைப் போல இன்னும் சில பேரையும் கண்டிச்சு வெச்சா எல்லாம் சரியாயிடும்னு தோணுது ஸார்!”

“ரொம்பச் சரி மிஸ்டர் தங்கப்பையன்!. என்கிட்டே சொல்லிட்டீங்கள்ல, கவலையை விடும். அவங்களைக் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுக்கறேன்! நீங்க கிளம்புங்க.
நாளைக்கு ஆபீசுல பார்க்கலாம்! அப்புறம் ஒரு விஷயம்… நீங்க எனக்கு டின்னர் வாங்கிக் கொடுத்தீங்களே, அப்புறம் டாக்ஸிக்குப் பணம் கொடுத்தீங்களே ரெண்டையும் சேர்த்து நாளைக்கு என்கிட்டே பணம் வாங்கிக்கிடணும். ஒரு சிலரைப் போல மத்தவங்க காசுல குளியல் போடற ஆசாமி நா இல்ல, தெரிஞ்சுதா? இப்ப நீங்க போகலாம்!”

அவருடைய கறார்ப் பேச்சு தங்கப்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது.

***

மறுநாள்.

அலுவலகத்தில் அசாதாரண அமைதி நிலவியது. தங்கப்பன் எல்லோரையும் ஆழமான பார்வையால் கண்காணித்துக் கொண்டிருந்தான். வழக்கமான காண்ட்ராக்டர் வந்தபோது, சீனு குசு குசுவென்று அவரிடம் பேசினான்.

“புது ஹெட் கிளார்க் வந்திருக்கார். மாமூல் கொடுப்பதை முன்பு போல டேபிளிலேயே வைத்துப் பகிரங்கமாகக் கொடுக்க வேண்டாம். ஆபீசுக்கு வெளியே வரேன். அங்கே வெச்சு நம்ம
டீலை முடிச்சிக்குவோம்” என்று கிசுகிசுக்கிறானோ அவன்? வந்தவர் முகம் கவலையை வெளிக்காட்டியது. அவரிடம் உதட்டைப் பிதுக்கி, கையை விரித்தான். என்னால ஒண்ணும்
செய்ய முடியாது என்று சொல்கிறானோ?

“தங்கப்பன் ஸார், ஒங்களைப் புது ஹெட் கிளார்க் கூப்பிடறார்!” என்று பியூன் பொன்னம்பலம் வந்து கூப்பிட்டான்.

ஹாலில் இருந்தவர்கள் முகத்தில் இவனை ஏன் ஹெட் கிளார்க் கூப்பிடறார்? என்று ஒரு கேள்வி ஓடியது..

தங்கப்பன் கம்பீரமாக ஒரு லுக் விட்டபடி ஹெட் கிளார்க் அறையை நோக்கிப் போனான். கதவைத் தட்டிவிட்டு, “எஸ், கமின்!” என்ற குரல் கேட்டு பவ்யமாக உள்ளே நுழைந்தான்
தங்கப்பன்.

“வாருமையா, தங்கப்பையன், மணி 12 ஆயிடுச்சே, மத்தியான சாப்பாட்டுக்கு இப்பவே சொன்னால்தானே போய் வாங்கிட்டு வர சௌகரியமாக இருக்கும்… அதான் உம்மைக் கூப்ட்டு
அனுபிச்சேன்!” என்று சிரித்தார் பஞ்சநதம்.

“நேத்து நைட் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டோமே, அது ரொம்ப நல்லா இருந்துச்சுய்யா, அங்கேயே வாங்கிட்டு வந்துட ஏற்பாடு செய்துடறீரா?”

“ஆகா, அதுக்கென்ன ஸார், நீங்க மெனுவைச் சொல்லுங்க, அரை மணி நேரத்துல நம்ம பியூன் பொன்னம்பலத்தை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லிடறேன்!” என்றான் தங்கப்பன்.

“ஸ்டார்ட்டர் – சிக்கன் 88 போட்டுக்கய்யா… மெயின் ஃபுட் சிக்கன் பிரியாணி, சைட் டிஷ் சிக்கன் 65, ப்ரான் ஃபிரை, நண்டு ஃப்ரை, எக் பொடிமாஸ், ஒயிட் ரைஸ், ரசம், தயிர், கடைசியா
டெஸர்ட் ஐட்டம் சாக்லேட் ஃபலூடா… அப்படியே, ரஸ்தாளிப் பழம் ரெண்டு, பீடா, கூடவே கிங்ஸ் ஒரு பாக்கெட்- இது போதும்யா!”

அடி வயிற்றில் ஒரு பீதி பரவியது தங்கப்பனுக்கு. அடேயப்பா, இவ்வளவும் வாங்க எவ்வளவு ரூபா ஆகும்?

பியூன் பொன்னம்பலம், “ஸார், ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாயைத் தள்ளுங்க! அதுக்குள்ளாற முடிக்கப் பாக்குறேன்!” என்றான் சீரியஸாக.

“என்ன பொன்னம்பலம், அவ்ளோ அதிகமாக் கேக்குறே?”

“ஸார், நான் சாப்புடறதுக்கா கேக்குறேன்? நீ சொன்ன மெனு அப்பிடி. கொடுத்தா வாங்கியாரேன். எம்மேல நம்பிக்கை இல்லாட்டி, நீயே போயி வாங்கிட்டு வா!” என்று அசால்ட்டாகச்
சொல்லிவிட்டுக் கிளம்ப முற்பட்டான்.

“இருப்பா, இருப்பா, கோவிச்சுக்காதே! அவசர ஆத்திரத்துக்கு வட்டிக்கு உன்கிட்டே பணம் வாங்குவேன் இல்லியா, இப்ப ஒரு ரெண்டாயிரம் கடனாக் கொடு. அதுல நீ கேக்கற் பணத்தைக் கொடுக்கறேன், சரியா?”

பல்லிளித்தபடி, “இப்ப சொன்னியே, அது நாயம், தருமம்!” என்று கூறி, பாக்கெட்டிலிருந்து ரூபாயை எடுத்து நீட்டி, அதில் ரூபய் 1500-ஐ வாங்கினான் பொன்னம்பலம்.

அவனை ஓட்டலுக்கு அனுப்பிவிட்டுத் தன் இருக்கைக்கு வந்தான் தங்கப்பன். “டேய் தங்கப்பா! செலவு ஆகுதேன்னு பார்த்தால் முடியுமா? உன் விரோதியை ஒழித்துக் கட்ட்ணும்னா
ஹெட் கிளார்க்கை குஷிப்படுத்தினாத்தானே ஆகும்?” என்று அவன் மனம் அவனிடம் உரை நிகழ்த்தியது.

பொன்னம்பலம் ஆட்டோவில் போய்க் கொண்டு வந்த ஆளுயரக் கேரியர் இரண்டையும் டைனிங் அறையில் பிரித்து வைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகச் சுவைத்துச் சாப்பிட்டு,
ஃபலூடா, பழம், பீடா, சிகரெட் எல்லா விஷயங்களையும் முடித்து ஏவ்! ,என்று பெரிய ஏப்பம் விட்டுத் தன் அறைக்குள் நுழைந்தார் ஹெட்கிளார்க் பஞ்சநதம்.

அவர் உள்ளே நுழைந்ததும் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட் சீனு உடம்பைப் பணிவாக வளைத்து அவர் பின்னே சென்றான்.

முந்தின இரவு ஏராளச் செலவு செய்து தலைமைக் குமாஸ்தாவைக் குளிப்பாட்டி அவர் மனசுள் சீனுவைப் பற்றி ஏற்றியது வேலை செய்யப் போகும் வேளை வந்து விட்டதை உணர்ந்தான் தங்கப்பன்.

கையில் ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு ஹெட்கிளார்க் அறையின் முன் போய் வெளியில் நின்று கொண்டான். உள்ளே சத்தமாகப் பேசுவது வெளியில் அவன் காதுவரை வந்து விழுந்தது.

“நீர்தான் சீனுவா? பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டா? ஓய் பயங்கரமான திமிங்கிலமில்ல நீர்? ரா மெட்டீரியல்ஸ் பர்ச்சேஸுக்கு 40 பர்சண்ட் கமிஷன் வாங்கி முன்னே இருந்த ஹெட்
கிளார்க்குக்கு 10 பர்சண்ட் தள்ளுவீராமே? அப்பிடியா?”

“ஸார், யாரோ ஒங்களுக்குத் தப்பாச் சொல்லியிருக்காங்க…” என்று பணிவான குரலில் சீனு.

“யோவ், தப்பு ஒண்ணுமில்லேய்யா. சரியாத்தான் தகவல் வந்துருக்கு. நீ எவ்வளவு வேணும்னாலும் கமிஷன் வாங்கிக்கும்யா. வாங்கற தொகையில ஃபிப்ட்டி பர்சண்ட் எனக்குத்
தள்ளிப்புடணும், தெரியுமில்ல?”

“ஸார்..” சீனு மகிழ்வில் குழறியது இவனுக்குப் புரிந்தது…

“அப்புறம்… நம்ம ஆபீசுல தங்கப்பையன்னு ஒரு அசடு இருக்கே, அதுகிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கும்யா. அது ஒரு வயத்தெரிச்சல் கேஸ்! இந்த ஆபீஸ் சீக்ரெட்ஸ்
எல்லாத்தையும் ரகசியமாக் கவனிச்சுப் புலம்பறான். கூடிய சீக்கிரம் அவனை நம்ப ராமேஸ்வரம் பிராஞ்சுக்குத் தூக்கியடிச்சுப்புடறேன், நான் சொன்னது ஞாபகத்தில்
இருக்கட்டும்யா.. உம், நீர் கிளம்பலாம்!”

தங்கப்பன் தலை சுற்றியது. முந்தின நாள் ஆயிரம் ரூபாயும் இன்று பியூனிடம் ஆயிரத்து ஐநூறு ரூபாயும் வட்டிக்குக் கடன்வாங்கி தலைமை குமாஸ்தாவுக்கு விருந்து போட்டுவிட்டு
குலைப் பட்டினியோடு நிற்கும் நானா அசடு? நானா வயித்தெரிச்சல் கேஸ்? எனக்கா ராமேஸ்வரத்துக்கு டிரான்ஸ்பர்? அடப்பாவிங்களா?

சிக்கன் 65, சிக்கன் 88, சிக்கன் பிரியாணி…

தங்கப்பன் தலைக்குள் ஆயிரக்கணக்கான கோழிகள் புகுந்து கொண்டு காச் மூச்சென்று கத்தின.

தலை சுற்றி, நின்ற இடத்திலேயே மயங்கிச் சாய்ந்தான் அவன்.

(கல்கி வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *