சிகரம் தொட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 3,006 
 

சுதன் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்து அண்மையில் நடாத்தி முடித்த ஆய்வு ஒன்றின் அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த செயற்பாடு வழக்கமான ஒன்றுதான். அறிக்கையை சிறப்பாக செம்மைப்படுத்துவதற்கான புதிய யோசனைகளை உருவாக்கும் பொருட்டு மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக சில நிமிடங்கள் நடக்கும்பொருட்டு அவருடைய அலுவலக அறையிலிருந்து முன் வாசல் வழியாக வெளியே வந்தார். இரண்டு சுற்றுக்கள் அங்கும் இங்கும் நடந்தார்.

வெளியே யாரோ ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் வந்து நிற்கும் ஓசை கேட்டு திரும்பி வாசலை நோக்கி தன் பார்வையை செலுத்தினான்.

ஹாய்… தம்பி வாங்கோ… கன நாள் உங்கள சந்திச்சு.. உள்ள வாங்கோ. எப்பிடி சுகமா இருக்கீறிங்களே.

நல்லா இருக்கிறம் அண்ணா என்று கூறிக்கொண்டே வாசலில் மோட்டார் சைக்கிளை ஒரு அருகாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் தம்பி.

என்ன விசேசம் இந்தப்பக்கம் காத்தடிச்சிருக்குது..

இல்லையண்ணா ஒரு லெட்டர் ஒண்டு வந்திருக்குது. அது சிங்களத்திலயும் ஆங்கிலத்திலயும் தான் இருக்கு. இதால போகேக்க நீங்க நிக்கிறத கண்டனான் அதுதான் உங்களிட்ட குடுத்தா வாசிச்சு என்ன இருக்கெண்டு சொல்லுவீங்கதானே. அதுதான் டக்கெண்டு எடுத்துக்கொண்டு ஓடி வந்தனான். உங்களயும் பிடிக்கிறதெண்டால் சரியான கஸ்டம் தானே… இப்ப நிப்பீங்க திடீரெண்டு வேற ஏதாவது அலுவலெண்டு வெளிக்கிட்டிடுவீங்க. அதுதான் உடனயே கடிதத்த எடுத்துக்கொண்டு ஓடி வந்திட்டன். இதை ஒருக்கா பாத்து என்ன விசயம் எழுதியிருக்கிறீனம் எண்டு சொல்லுங்கோ.

சரி… சரி.. தாங்க பாப்பம் தம்பி.. கதிரயில இருங்கோ நான் பாத்து சொல்லுறன்..

என்று கூறிக்கொண்டே கடிதத்தை வாங்கிப் படிக்கத்தொடங்கினான். அது கடிதமல்ல ஒரு நிகழ்விற்கான அழைப்பிதழ். கொழும்பிலிருந்து வந்திருந்தது.

சுதனுக்கும் இப்படி யாரையாவது சந்தித்து அளவளாவுவதென்றால் ஒரு சந்தோசம் தான். ஒரே வேலை வேலை என்று வேலையோடு அங்குமிங்கும் அலைந்து திரிவதால் இப்படி ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா என்பது போல யாரையாவது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அது அவருக்கு மிகுந்த சந்தோசத்தைக்கொடுப்பதோடு மனசுக்கு ஒரு ஆறதலும் கிடைப்பதாக அவர் உணர்வதுண்டு. கடைசியாக தம்பியின் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள் வந்திருந்போது சந்தித்தது. அதற்கு பிறகு இன்று தான் தம்பியை சந்திக்கிறார் சுதன்.

பிறகு சொல்லுங்கோ அப்பா எப்பிடி சுகமா இருக்கிறேரா.. அக்கா எப்பிடி சுகமா இருக்கிறாவாமா.. இங்கால வாறமாதிரி செய்தி ஏதாவது…

ஓம் அண்ணா அப்பா நல்ல சுகமா இருக்கிறார். அக்கா போன வருசம் தானே வந்திட்டு போனவ அக்காவோட தங்கச்சியும் சேந்துதான் வந்தவ குடும்பமா… இனி சில வேள அடுத்த வருசம் வருவாங்க. மற்ற அக்காவின்ர குடும்பமும் தங்கச்சியின்ர குடும்பமும் சுகமா இருக்கிறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் வேறயா வீடு கட்டி குடுத்திட்டன் அங்கதான் குடும்பமா இருகிறீனம்…

தம்பியின் இயற்பெயர் ரமேஸ்வரன் தம்பி என்று அவரை அவருடைய வீட்டில் எல்லோரும் அழைப்பதால் அந்த பழக்கம் எல்லோரையும் அவரை தம்பி என்றே அழைக்க வைத்தது அத்தோடு அது பழக்கமாகி போய்விட்டது.

தம்பியின் அக்காவும் ஒரு தங்கையும் நல்ல வரண் அமைந்ததால் திருமணம் செய்து வெளிநாட்டில் குடும்பமாக வசிக்கிறார்கள். மற்ற ஒரு அக்காவும் ஒரு தங்கையும் தம்பியின் வீட்டுக்கு அருகில்தான் திருமணமாகி குடும்பமாக வசிக்கிறார்கள்.

நல்ல விசயம் கேக்க சந்தோசமா இருக்கு… அப்பா இங்க தான் நிக்கிறேரோ.. இல்லாட்டி முருங்கனில வயல் செய்ய போய்டாரோ…

முருங்கனில வயல் செய்ய போய்ற்று ரெண்டு நாளுக்கு முதல்தான் வந்தவர். இப்ப கடைக்கு போய்டேர். கொஞ்ச நேரத்தில வந்திடுவேர்.

சிறிய மௌனம் நிலவ மௌனத்தை கலைத்து சுதன் கேட்டார். எப்பிடியும் அந்த நாட்களப்போல இந்த நாட்கள் அவ்வளவு சந்தோசமா இல்ல என்ன தம்பி? எவ்வளவு பம்பல்… வீடு நிறைஞ்சு கலகலப்பா இருக்கும். கிறிஸ்மஸ், புதுவசப்பிறப்பு, பிறந்தநாள் கொண்டாட்டம் எண்டு எல்லாத்துக்கும் எல்லாரும் ஒண்டா கூடி சமையல் சாப்பாடு அதோட போட்டோ எடுத்து…. இப்படியே அடுக்கிக்கொண்டு போனார் சுதன். தம்பியும் அதே புன்முறுவல் பூத்த முகத்தோடு தலையை அசைத்து அசைத்து கேட்டுக்கொண்டு இருந்தான்.

இப்ப எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு வேறவேற இடத்தில…. குடும்ப தேவைகள இப்ப இருக்கிற பொருளாதார நிலமையோட போட்டிபோட்டுக்கொண்டு சமாளிக்கிறதுக்காக இயந்திரம் போல ஒரே ஓடிக்கொண்டே இருக்க வேண்டிக் கிடக்கு… என்ன…..?

ஓம் அண்ணா என்ன செய்யிறது நிலமை அப்பிடி மாறிப்போச்சு. அந்த நேரம் இப்பிடியெல்லாம் மாறும் எண்டு நினைச்சுக்கூட பாத்திருக்க மாட்டம். ஆனா எல்லாம் அப்பிடி ஆகிட்டுது…..

தம்பியை நீல நிற கட்டை காற்சட்டையுடன் சிறுவனாக பார்த்தது. இப்போது பெரிய மனிதனாகி திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். நாட்டில் இடம் பெற்ற இன முரண்பாடுகள் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்று மீளவும் 94ஆம் ஆண்டில் திரும்பி வந்து மீளக் குடியேறியவர்கள் தான் தம்பியின் குடும்பம். இவர்களுக்கு மன்னார் முருங்கனில் வயல் இருந்தது ஆனாலும் அப்போது அங்கு செல்ல முடியாத சூழல் இருந்ததால் வவுனியாவில் ஒரு அரைகுறையாக கட்டப்பட்ட கூரை இல்லாத வீட்டை வாடகைக்கு எடுத்து தங்களுக்கு வசதியானவாறு கிடுகால் வேய்ந்து வாழ்ந்து வந்தார்கள். வீடு கதவு ஜன்னல் ஏதும் கிடையாதது. துணியால் மறைப்பு தைத்து போட்டு கதவுகளும் ஜன்னல்களும் மறைக்கப்பட்டிருந்தது.

வாழ்வாதாரத்திற்காக இந்தியாவில் இருந்தபோது பழகிய தச்சுத்தொழிலை தந்தையுடன் சேர்ந்து தம்பியும் செய்து வந்தான். அவன் சாதாரணதரம் வரை தான் படித்திருந்தான். குடும்ப நிலைமையை மனதில்கொண்டு அந்த வேலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார்கள்.

அவர்களது நிலைமையை நன்றாக தெரிந்திருந்த சுதன் ஒரு தடவை ஒப்பந்த வேலை ஒன்றை கொண்டு சென்றிருந்தார். அது மிகுந்த குறைவான நிதிபாதீட்டைகொண்டதாக இருந்தது.

அண்ணே கோவிச்சுக்கொள்ளாதயுங்கோ… இந்த வேலைக்கு காசு ஒதுக்கம் குறைவா இருக்குது அதனால எனக்கு இந்த வேலைய எடுக்க விருப்பம் இல்லை… நாங்கள் செய்து குடுத்திடுவம் நீங்க சனத்திட்ட குடுத்தபிறகு சனத்துக்கு இது குறைஞ்ச விலைக்கு செய்ததெண்டு தெரியாது. ஆனா பொருளின்ர தரம் குறiவு எங்கிறது மட்டும் தான் தெரியும்… அதனால செய்து குடுத்த எங்கள தான் திட்டுவீனம். எனக்கு தரம் தான் முக்கியம். நாங்கள் செய்யிற பொருள யாரும் சரியில்லயெண்டு சொல்லக்கூடாது எண்டதில நாங்கள் நிறைய அக்கறையா இருக்கிறம்… தயவுசெஞ்சு கோவிக்காம வேற யாருக்காவது குடுங்க.. என்று திருப்பிவிட்டான் தம்பி.

எல்லோரிடமும் சாந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் அளவளாவும் திறண் தம்பிக்கே உரியது என்று கூறலாம் அப்படிப்பட்டது அவனுடைய குணம். இதானால் குறுகிய காலத்தில் பல பெரிய பிரமுகர்களுடைய தொடர்புகளை பெற்றுக்கொண்டான்.

வேலைகள் குறைவான நேரங்களிலெல்லாம் கதவு, கட்டில், கதிரை செற் மற்றும் கண்ணாடி அலுமாரி போன்றவற்றை செய்வதற்கான பலகைத் துண்டுகளை எடுத்து அதிலே அழகழகான வடிவங்களை செதுக்குவதில் ஈடுபடுவான். இதன் மூலம் செதுக்கு வேலையில் குறுகிய காலத்திலேயே மிகுந்த அனுபவத்தை பெற்றுக்கொண்டான். செதுக்கு வேலைகளுக்கென்றே குறிப்பிட்ட பலர் தம்பியைத் தேடி வரத்தொங்கினார்கள். அவர்களுடைய வேலைகளையெல்லாம் சிரமம் பாராது ஈடுபாட்டுடன் மிகச் சிறப்பாக செய்து கொடுத்தான்.

இப்படி படிப்படியாக தனது முன்னேற்றத்தை உறுதி செய்துகொண்டு தன்னுடைய தொழில் முயற்சியில் முன்னேறிச்சென்றான். இந்தக்காலப் பகுதியில் தனக்கென்று சரியான ஒரு இலக்கை உருவாக்கிக்கொண்டு அதற்கான முறையான திட்டம் ஒன்றையும் வைத்துக்கொண்டு அதைப்பின்பற்றி அவன் முன்னேறிச் செல்வது அப்போதே கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.

தனது இலக்கை முதன்மைப்படுத்தி எங்கெங்கெல்லாம் சிறந்த வாய்ப்புக்கள் இருக்கிறது என்று தேடி அந்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டான். முதலில் இளைஞர் மன்றத்தின் செயலாளராக இணைந்த அவன் சிறு வயதிலேயே அந்த ஊர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் பொறுப்பேற்றிருந்தான்.

வேலைகள் அதிகரிக்க அதிகரிக்க தனது தச்சுப் பட்டறையின் வசதிகளை நவீன கருவிகளைக்கொண்டு அபிவிருத்தி செய்தான். அத்தோடு மேலதிக வேலையாட்களையும் தேவைக்கமைவாக பணிக்கமர்த்தினான். புதிய பட்டறையை ஒரு சிறிய முதலீட்டில் தான் வாங்கிய புதிய காணியில் தனக்கென்று ஒரு வீட்டை அமைத்துக்கொண்டு அதற்கு அருகிலேயே அமைத்தான். குறுகிய காலத்திற்குள் மிகமுன்னேற்றகரமான வளர்ச்சியை அடைவதற்கு அவனுடைய தன்நம்பிக்கை அவனுக்கு பெரிதும் உதவியாக அமைந்தது. எந்த விடயத்தையும் துணிச்சலுடனும் தன்நம்பிக்கையுடனும் ஆரம்பித்தான்.

தன்னுடைய இலக்கை அடைவதற்காக அவன் பல்வேறு விதமான சவால்களையும் எதிர்கொள்ள துணிந்தமை அவனது அடுத்தடுத்த நகர்வுகளின் மூலமாக காணக்கூடியதாக இருந்தது. அதற்கு சிறந்த உதாரணமாக அந்த மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த அடிப்படை வசதிகளுக்கான மீள் கட்டுமாண அபிவிருத்தி செயற்பாடுகளை இலக்கு வைத்து இரண்டு ரிப்பர் வாகனங்களை கொள்வனவு செய்து இந்த செயற்பாடுகளில் கிரவல் மண் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்று மண் ஏற்றி பறிக்கும் செயற்பாட்டுக்கு வாகனங்களை பயன்படுத்தினான்.

அத்தோடு நின்று விடாது தனது நிறுவனத்தை கட்டட ஒப்பந்த நிறுவனமாக பதிவு செய்து சிறிய அளவிலான கட்டட ஒப்பந்தங்களை பெற்று அவற்றையும் தரம் மிக்கதாக செய்து வந்தமையால் அடுத்தடுத்து பெரிய வேலைகளும் அவனை நோக்கி வர ஆரம்பித்தது.

இப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்த தம்பி இன்று சுதன் முன்னால் ஒரு பெரிய அளவில் வளர்ச்சியடைந்த ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கு தேவையான சகல அடிப்படை வசதிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளனாக நிற்பது சுதனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது. இப்போதும் அதே பணிவும் எந்த நேரமும் மலர்ந்த முகமும் சிரிக்கும் போது கன்னத்தில் குழிவிழும் அழகும் அப்படியே இருந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அதை தம்பியைப் பார்க்கும்போது அவனிடம் அப்படியே காணலாம்.

சுதனும் தம்பியும் கடந்த காலத்தய பல நினைவுகளை மீட்டியதில் நீண்ட நேரம் கடந்திருந்ததை உணர்ந்து நினைவலைகளில் இருந்து மீண்டு சுதாகரித்துக்கொண்டனர்.

அக்கா பிள்ளைகள் எப்பிடி சுகமா இருக்கினமோ.. தம்பி சுதனிடம் கேட்க

சுதன் ஓம் அவயளெல்லாம் நல்ல சுகமா இருக்கினம். பெரியவர் பட்டபடிப்பு படிச்சுக்கொண்டிருக்கிறேர் மற்றவர் உயர் தரம் 1ஆம் ஆண்டு பரீட்சை முடிஞ்சு 2ஆம் ஆண்டு தொடங்கிட்டார்.

அக்காவையும் பிள்ளைகளையும் நான் சுகம் விசாரிச்சதெண்டு சொல்லுங்கோ.. முடிஞ்சா அடுத்த முறை வரேக்க கூட்டிக்கொண்டு வரலாமே… என்று இழுத்தான் தம்பி

ஓமோம் கட்டாயம் நானும் அத நினச்சனான்தான் ஒருக்கா இங்கால கூட்டிக்கொண்டு வரவேணுமெண்டு… அடுத்த முறை பாப்பம்…

சுதன் அந்த கடிதம் சார்பான விளக்கத்தையும் கூறிமுடிக்க அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நாள் வரும்வரையான காத்திருப்போடு இருவரும் மகிழ்ச்சியாக விடைபெற்றுக்கொண்டார்கள்.

அன்று தம்பிக்கு வந்திருந்த விடயம் சார்பான கடிதம் ஒன்று தொழில் முயலுனர் பயிற்றுவிப்பாளர் என்ற வகையில் சுதனுக்கும் வந்திருந்தது. மண்டபத்தில் அழைக்கப்பட்ட விசேட விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியல் போடப்பட்டிருந்த கதிரைகளில் ஒன்றில் சுதன் அமர்ந்திருந்தான்.

பாரம்பரிய கலாசார ரீதியிலான மேளதாளங்களோடு நிகழ்வு ஆரம்பமாகியது. மண்டபத்தின் வாசலில் இருந்து பிரதம விருந்தினரும் ஏனைய முக்கிய விருந்தினர்களும் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டுக்கொண்டிருந்தனர். மிகவும் சிறப்பான அந்த காட்சியை பார்த்து ரசித்தபடி சுதன் காத்திருந்தான். விளக்கேற்றலைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமை உரை இப்படியே நிகழ்வு நீண்டுகொண்டிருந்தது. இந்த விடயம் தான் சுதனுக்கு சலிப்பு தரும் விடயம். மாறி மாறி ஒவ்வொருவராக மேடையில் ஏறி தமது பேச்சாற்றலை வெளிப்படுத்திக்கொண்டு போனார்கள் எழுந்து வெளியே போய் சற்று தாமதித்து வரலாம்போல் இருந்தது சுதனுக்கு ஆனாலும் பொறுமையுடன் சமாளித்துக்கொண்டு இருந்தான்.

இப்போது பேச்சு நிகழ்வுகள் எல்லாம் ஒருவாறு நிறைவுக்கு வந்தது நிகழ்வின் முக்கிய பகுதிக்குள் நுளையும் நேரம் வந்தது. சோர்வு அகன்று ஒரு புத்துணர்வு தானாக உருவெடுக்க உடலை ஒரு முறை சுதாகரித்துக்கொண்டு மேடையை நோக்கி தனது பார்வையை உன்னிப்பாக செலுத்தினார்.

வெவ்வேறு விதமான நடனங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நடனமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. நடனங்கள் மட்டுமன்றி பாடல்களும் நடனங்களுக்கிடையில் தெரிவு செய்யப்பட்ட பாடகர்களால் சிறந்த இசையுடன் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. இவற்றுக்கிடையில் வெவ்வேறு விடயங்களுக்கான சில பரிசில்களும் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது எதிர் பார்த்திருந்த அறிவிப்பு வந்தது. சுதன் மேலும் தன்னை சுதாகரித்தவராக நிமிர்ந்து உடகார்ந்து மேடையில் இருந்த அந்த அழகிய அறிவிப்பாளினியையும் மேடையில் பின் பக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலத்திரனியல் மின் திரையையும் மாறிமாறி நோட்டமிட்டவராக இருந்தார். அவளுடைய குரலிலிருந்து கணிரென அந்த அறிவிப்பு வந்தது…

வடமாகாணத்தின் சிறந்த தொழில் முயற்சியாளர் (பெஸ்ட் என்ரபிறனியர் ஒவ் நொதேர்ண் புறொவின்ஸ்)….

பெயர் முன்மொழியப்பட்டவர்கள் ( த நொமினிஸ் ஆர்)….

என்று கூறி சில தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் பெயரையும் அவர் சார்ந்த நிறுவனங்களின் பெயரையும் முன்மொழிந்தாள். சுதன் இதயத் துடிப்பு மெதுவாக அதிகரித்ததை உணர்ந்தார்.

ஏன் இப்படி… பரிசு பெறப்போவது யாரோ… எனக்கு ஏன் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது… தனக்குள் கேட்டுக்கொண்டார். அப்படியே ஆர்வ மேலீட்டோடு உன்னிப்பாக மேடையை உற்றுநோக்கிக்கொண்டிருந்தார் சுதன். அந்த அழகிய குரலில் இவன் ஆவலோடு எதிர் பார்த்திருந்த அடுத்த அந்த அறிவிப்பும் வந்தது

வெற்…..றி…யாள….ர்…. (த… வின்….னர்… இஸ்….)

சுதன் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரை அறிவிக்கப் போகிறாளோ…. கடவுளே… கடவுளே… அவரை அறியாமலே மனம் குறு குறுத்துக்கொண்டிருந்தது… இதயத் துடிப்பு பலத்த எதிர் பார்ப்போடு மேலும் அதிகரித்தது…. லப்…… டப்……லப்….டப்….லப்..டப்..லப்..டப் லப்.டப்

சொல்லு… சொல்லு கெதியா சொல்லன் பிள்ளை… ஏன் நேரத்தை இழுத்தடிக்கிறாய்…. சுதன் மனக்குமுறலின் வேகம் இதயத் துடிப்போடு சேர்ந்து அதிகரித்தது.

வெற்…. றி….யா….ள…ர்….. ( த…..வி…ன்….ன…ர்….. இ…..ஸ்….) ர…மே…ஸ்…வ…ர…ன் கனகேஸ் கொன்ஸ்ரக்சன் பிரைவேட் லிமிட்டட்.

வோவ்…. பென்டாஸ்டிக்…. மனதுக்குள் கூறிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார் சுதன்.

கட்டை நீலக்காற்சட்டையுடன் பார்த்த தம்பி இப்போது தான் அன்று சந்தித்தபோது கூறியது போலவே அழகாக முழுக்கை மேற்சட்டை நீளக்கால் கால்சட்டை மேலே கோட் ரை அணிந்து மேடையை நோக்கி அதே புன்முறுவல் பூத்த முகத்துடன் சென்று கொண்டிருந்தான்.

தம்பி செல்லத் தொடங்கியதில் இவரது கண்களில் இருந்து சொட்ட ஆரம்பித்த ஆனந்தக் கண்ணீர் தம்பி கேடயத்தை வாங்கி திரும்பி தனது இருக்கைக்கருகில் வரும்போதும் சொட்டிக் கொண்டிருந்தது.

அப்படியே தனது கைக்குட்டையால் கண்களை ஒற்றித் துடைத்து விட்டபடி மெதுவா எழுந்து வெளியே வாகனத்தரிப்பிடத்தை நோக்கி நகர்ந்தான். மனதுக்குள் தானே அந்த பரிசை பெற்றது போன்ற உள்ளுணர்வு அவரை ஆட்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவ்வளவு நெருக்கமான பாசம் முதன் முதலில் சந்தித்த நாளில் இருந்து இன்றுவரை தம்பி மேலும் அவனுடைய குடும்பத்தின் மேலும் இருந்ததும் அவன் ஆரம்பத்தில் இருந்து இந்த நிலையை அடையும் வரையில் கடந்து வந்த அந்த கடினமான பாதையை தெளிவாக அறிந்திருந்ததும் இந்த விருதிற்கு தம்பிதான் மிகப்பொருத்தமானவன் என்று அவரது மனதிற்குள் கட்டி வளர்த்து வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை நிறைந்த மனக்கோட்டையும்தான்.

சுதன் வாகனத்தை நெருங்கி உள்ளே ஏறி வாகனத்தை ஸ்ராட் செய்யும் போதுதான் அந்தக் கண்கொள்ளாக் காட்சியில் இருந்து மீண்டான். இப்போது அவனுடைய எதிர்பார்ப்பெல்லாம் விரைவாக வீட்டிற்கு செல்லவேண்டும் அங்கு தனது குடும்பத்துடனும் இந் நிகழ்வு பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இதை கேள்விப்பட்டால் அவனது குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியடையும் அவ்வளவு அக்கறை தம்பிமேல் அவருடைய குடும்பத்தினர்க்கும் இருந்தது. தம்பியைப்போல் ஒவ்வொரு இளைஞரும் சிறந்த முயற்சியாளர்களாக தங்களை வளர்த்துக்கொண்டால்…. எவ்வளவு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை நோக்கி அவரவர் குடும்பங்களும் நாடும் செல்லலாம்… வாகனத்தில் செல்லும்போது இந்த விடயமே சுதனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *