சாவும் சாவு சார்ந்த குறிப்புகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,093 
 

தனக்குதானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது.

குண்டுக்கும் அம்புக்கும் தப்பி கள்ளத்தோணி ஏறிவந்த அகதியின் இதயத்துடிப்பென படபட ஓசை. தட்டுமோசையின் அதிர்வலைகள் ஊடாகவே மனவோட்டத்தை இலக்கிற்கு கடத்தும் பதற்றம். வான்தாவ றெக்கைகளை விசிறியாட்டும் பெயரறியா பறவையொலி மசங்கல் நினைவில் பொடக்கென விழுகிறது விதியைப் போல. திருட்டுப் பருக்கை பொறுக்க விரையும் காகத்தின் கரைவு போலுமுள்ளது. கீல்களும் நாதாங்கியும் பெரிதாய் அதிர, முனகவும் தெம்பற்ற கிழக்கதவு, வலிதாளாது துருக்களை உதிர்த்தவாறே மௌனமாய் திறந்து கொண்டது.

வெளிர்சாம்பல் வண்ணம்பூசி குழப்ப பிம்பம் காட்டுகிறது வாசல்வழி உலகம். வியை படமெடுத்தாற் போன்று அரூபத்துக்கும் சொரூபத்துக்கும் இடையேயான நீரிய படிமத்தில் தெரிகிறது எல்லாமே. கவிந்திறங்கும் பனிவலையில் உயிரிணை அஃறிணை தாழ்வேற்றம் குழைந்து யாவும் ஓருருவாகி பால்வண்ண நிலையில்.

வந்திருந்தவன் உலகத்தினதும் ஏழேழு லோகத்தினதும் அண்ட சராசரத்தினதுமான பனியும் வாடையும் தன்மீது மட்டுமே மையமிட்டு இறங்குவதான அதீத உணர்வின் வயப்பட்டு மீளத் துடிப்பவனே போன்றிருந்தவன். பின்னோ, இதுவரையும் அழுந்தியிருந்த பனிப்பூதத்தை உதறியெறிந்து விடும் பாவனையில் பலமாக சிலிர்த்து சுவாசம் கொண்டான். வெடவெடப்பில் கிட்டித்த பற்களினிடையில் நாச்சுழல்வு குழன்று பேசப்பழகுபவனே போல் பேசினான். குளிரில் விறைத்த வார்த்தைகள் மொன்னையாக வந்து விழுந்து அதே கதியில் அறையெங்கும் நிறைந்தன. நொறுங்கிய மௌனம் வீட்டுத்துவாரங்கள் வழியே வெளிக்காற்றில் இளகி மொழியற்ற பிரதேசங்களில் படியத் துவங்கியது.

இறுகச் சாத்தியிருந்த ஜன்னலும் கனத்த திரைச்சீலைகளும் ஓயாதெரியும் கணப்படுப்பும் கூடிய இவ்வறை அவனுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். அதன் வெதுவெதுப்பில் துளிர்த்த சுகத்தில் லயித்தவனாக மேன்மையான ரசனையோடு வெம்பானத்தை உறிஞ்சிக்கொண்டும் ஆறாம் விரல்போலிருந்த சிகரெட்டை புகைத்தவாறும் பேசினான்.

சங்கீத நாட்டிய பரிச்சயம் உண்டென நிறுவும் கட்டாயத்தில் இருப்பவன் தொனியில் வெகு லாபனையாகவும் அபிநயித்தும் பலவும் கதைத்துவிட்டு புறப்படும் எத்தனிப்பில் சன்னமாய் செருமிக்கொண்டான். துன்பியல் நாடகமொன்றின் சூத்ரதாரியைப் போன்று உடைந்த கரகரத்த குரல்பாவத்தில் சொல்லவேண்டிய அந்த சாவுச்சேதியை, வெறுமனே ஒன்றிரண்டு கூடுதல் வார்த்தைகளைப் போன்று சொன்னான். கதவைத் தட்டியதிலிருந்த பதற்றம் கூட இப்போது அவனிடமில்லை.

‘‘பால் தீந்துப் போச்சு…’’ என்று அசட்டையாய் உதடுபிதுக்கும் டீக்கடைக்காரனின் சாயலிருந்தது அவன் சொன்னவிதத்தில். எதனுடனுமான நேரடி பிணைப்பின் நீள அகலங்களைப் பொறுத்தே வினையூக்கம் கொள்கிற தெளிவின் உச்சமா அல்லது மலரை நேசிக்கவும் முள்ளை தூஷிக்கவும் முயலாத ஞானநிலையா என்று அவனை எடைபோட முடியவில்லை. செத்தவர்களுக்கும் சாகப்போகிறவர்களுக்கும் இடையே பின்னியாடுகிற இழை பந்தம் அன்யோன்யம் கள்ளம் சூது கபடம் ஏதுமறிய நேராதவனைப் போன்று சாவுச்சேதியை காற்றில் விளாவி அடுத்த காதுதேடி விரைகிறது அவன்வாய்.

அவனை நொந்தென்ன. வருகையின் சாரம்காட்டாத முகம் அவனுக்கு. இந்த கணத்தில் தனக்கிட்ட வேலையை செய்து முடித்துவிட்ட மதர்ப்பில் மீசை முறுக்கும் எந்திரம் அவன். பத்துபேருக்கோ பக்கம் பராந்திரி ஊருக்கோ சேதி சொல்லிவிட்டு கூடு திரும்ப மந்தரித்து விடப்பட்ட ஏவல்பிண்டம்.

கண்டெடுக்கப்பட்ட பன்னூறாண்டு தொல்லிய சொர்ணவிக்ரங்களைப் பற்றியும், காணாமல் போனோர் பற்றிய குறிப்பையும் முறுவல் மாறாது ஒரே ஸ்தாயியில் வாசிக்கும் ஊடக செய்தியாளர்களைப் போலவே இவனும். இவனுக்கு எல்லாமே தகவல். வெறும் தகவல். ஏறிப் பொதிந்திருக்கும் எந்த உணர்வுக்கும் இளகாத / இறுகாத தட்டையான தகவல்கள். காதுகுத்தல் கல்யாணம் கிடாவெட்டு… மிருதுவானப் பெண்ணை வீட்டுக்கழைப்பதும் நல்லத்தங்காள் சாவும் அவனுக்கு ஒரே நிறை.

சாவதற்காகவே உயிர்வாழ்வதைப் போன்று கணமும் தினமும் வருகின்ற மரணத்தின் ரேகையோடும் சேதிகள். பழுப்பேறி உயிர்ப்பற்ற தந்திக் காகிதங்கள், முணுமுணுத்தலறும் தொலைபேசி, முற்றத்தில் நின்று வான்நோக்கி ஊளையிடும் ஒற்றைநாய், கதைவைத் தட்டும் ஆட்கள், 64 சேனல்களின் அடிபாகத்திலும் பதட்டமாய் ஓடுகிற ப்ளாஷ் நியூஸ்கள் – வழியாக ஓயாது வருகின்றன. இரவெல்லாம் முயங்கிப்பூத்த மலரின் வெடிசலை ரசிக்கையிலும், விளங்கிக்கொள்ள முடியாத புதிராகவும் எதிர்கொள்ள முடியாத சவாலாகவும் சிரிக்கிற குழந்தையை கொஞ்சுகிற போதும், அலைந்து களைத்து கோரைப்பாயின் மூலையில் முடங்கிக் கிடக்கிற போதும் காலநேரம் பாராது காரண காரியம் கூறாது சாவுச்சேதிகள் வந்தவண்ணமிருக்கின்றன.

உண்மையில், காரணங்களை வெளிக்காட்டாமல் பூடகமாகவேதான் நிகழ்கின்றன மரணங்கள். காரணம் அறியப்பட்டிருப்பின் வாழ்வதற்கான தாரதண்டங்கள் எப்போதோ, நொறுங்கிப் போயிருக்குமோ… நேரம் காலம் இடம் எரிக்கவோ புதைக்கவோ நாலுபேர், ‘சொர்க்கரதம்’ வெட்டியானின் முனை மழுங்கிய தளவாடங்கள் இன்னபிற ஏற்பாடுகள் எதற்கும் கவலையற்று தனது மர்மம் அவிழாது காத்து சாவு இன்னமும் ஜீவிக்கிறது.

வாழ்வும் சாவும் பிணையுண்டிருக்கும் சூட்சும முடிச்சின் முனை எதுவென அறியும் பிராசையிலேயே வாழ்வு முற்றி துவங்கிவிடுகிறது புறங்காட்டுப் பயணம். இப்படி செத்திருக்கலாம் அப்படி செத்திருக்கலாம் என்றெல்லாம் அறிக்கையிடும் பிரேதப்பரிசோதனைகளின் போதும், தன்பங்குக்கு விளக்கம் சொல்லவரும் தத்துவங்கள், சடங்குகள் நிவர்த்தனங்களின் போதும் சவங்களின் முகத்தில் குருத்துவிடுகிற குசும்புச் சிரிப்பில் வாழ்வின் அஸ்திவாரங்கள் விரிசல் கண்டு பொலபொலவென்று சரிகிறது. அந்த ஏளனச் சிரிப்பில் நெளிந்தெழும் விசாரம்மிக்க கேள்விகளுக்கு பதில் தெரியாத அவமானம் பொங்க, விட்டுவைத்தால் விவகாரமென பயந்துதான் எரிக்கவோ புதைக்கவோ துணிகிறார்கள்.

இழவூழின் நெடுமூர்க்கம் தாளாது சிதிலப்பட்ட வீடு அண்மித்ததும் முகத்தில் வலிய படியவிடும் சோகத்தில் தேர்ந்த நடிகராகின்றனர் மனிதர். குணுக்கம் மீதுற வாயைப்பொத்திக் கொண்டு அழுகையை அடக்குவதாய் சாலக்கம் பண்ணுகிறார்கள். செய்முறை குறிப்பு போன்றும் நிகழ்ச்சி நிரல் போன்றும் பின்வரும் காரியங்களை பிசகின்றி செய்கின்றனர்: விக்கித்து பேசமாட்டாதிருக்கும் வீட்டுப்பெரியாட்களிடம் நாலுவார்த்தை பேசுவது, சூழலுக்கிசையாத காற்றாய் புரளும் குழந்தைகளை கத்தகத்த தூக்கி கொஞ்சநேரம் வைத்திருந்துவிட்டு மூச்சா போய்விடுமென்ற தீடீர் ஞானத்தில் யாரும் காணா தருணத்தில் அனாதையாய் இறக்கிவிடுவது/அடுத்து தோளுக்கு மாற்றி நகர்வது, செத்தவருடனான உறவு நிலையை உயர்வு நவிற்சியாய் கதைப்பது. பின்பு மாயானத்திற்கு நீளும் பாதையடி நிழல்களில் பதுங்கி பாதிவழியிலோ பாடைமாத்திக்கருகிலோ ஒதுங்கிக் கழண்டு, பிணம் தன்னைத்தானே சுமந்துகொண்டு இடுகாடு செல்லும் அவலம் நினையாது வீடுதிரும்பி சாங்கியம் கழித்து கல்யாணத்திற்கு போவதுபோல் அடுத்தச் சாவுக்கு வழிபார்த்து காத்திருக்கிறார்கள்.

செத்தவர் தன்பாட்டுக்கு செத்துவைக்க, இன்னின்னார் வந்த இழவாக்கும் இதுவென மற்றார் மகிழவோ, நானும் போனேனென ஜம்பமடிக்கவோ துக்கம் விசாரிக்க போகும் இந்த நடைமுறை சரியாய் தெரியவில்லை.

தெருக்கோடி பெட்டிக்கடையில் தம்பலம் கொள்ளவும் தினசரி வழமைக்காரியங்களில் ஒன்றை செய்து முடிக்கவும் போவதைப்போல உடுப்பை மாட்டிக்கொண்டு கிளம்பி விட முடியாது. சாவுக்கு போய்வர அதற்கென்றொரு பக்குவத்தில் மனம் தயாராக வேண்டியுள்ளது. துக்கத்தில் தகித்து தகித்து சாம்பல் பூக்க கனலும் ரூபம் கொள்ள வேண்டியிருக்கிறது. அருவருப்பு அசூயைகளின் மாய்வில் நடுக்குறும் விரல்களால் சவத்தை விசேரத் தழுவி இறுதி ஸ்பரிசத்தை நேர்கொள்ள மனசுள் கனிய வேண்டும் விருப்பம். தலைகொழுத்த மேதகையாயினும் தத்துவப்புடுங்கியென்றாலும் எல்லாம் கரைந்து உருகி மறைந்த உயிரொளியில் நெய்யாகப் பிரவகிக்கும் நிலைக்கு மாறணும். பெருகிவழியும் வேதை பொருந்திய கண்ணீரால் பிரேதத்தைக் கழுவி உப்பு கரிக்க கரிக்க… கிளம்பிப் போய் பார்க்கும் தைர்யம் தேடி மனசு எங்கெங்கோ முட்டியாடி தாரக்கொடி தேடி அலைந்து கண்டெடுக்க வேண்டும். அப்படி நேராதச் சாவுகளுக்கு செல்லவேண்டியதேயில்லை. இறந்தவருக்காக வீட்டின் தனித்த மூலையில் இருளென அடங்கி முடிந்தால் கெக்கக்கே என்று சிரிப்பது போதுமானது.

முறையான தகனமற்று நாயோ நரியோ இழுத்துப்போக லபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்தவர்களே இந்நேரம் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவர்கள். அடையாளம் பிடிப்பது சிரமமே. அறியும் உபாயமும் உண்டு. கட்டை விரல்களற்ற கரங்களுடன் கூடிய கூடு, குருபீடமே பலிபீடமான வஞ்சகம் மெழுகிய இதிகாச பைண்டிங்களுக்குள் யுகங்களைக் கடந்தும் துடித்துக்கொண்டிருந்தால் ஏகலைவனுடையதென்றும், மண்ணடியிலும் பட்டாம்பூச்சி இறகொத்த பின்னலுக்கு தறியோட்டி எஞ்சிய விரலெல்லாம் நூல்பாவி நைந்து கிடக்குமானால் டாக்கா நகரத்து மஸ்லின் நெசவாளியுடையதென்றும் அறிக. அவ்வாறே, சூரிய சந்திரக் கதிர்களின் தபனமும் தட்பமும் தழுவாத அடர்மரக்காடுகள் மண்டிய புதையாழத்தில்-துண்டிக்கப்பட்ட மணிக்கட்டின் மொக்கைக்கைகளால் சுருட்டும் துப்பாக்கியும் பிடித்தவாறு கூரிய ஒளிவிழியால் இருளுக்கு குறிவைத்த படியான கூடு கண்டெடுக்கப்பட்ட இடம் பொலிவியா என்றும், கட்டையாய் கரிந்து காலம் பாய்ந்த பின்னும் கனன்றே இருப்பவர் வெண்மணியரென்றும் வரலாற்றுக் குறிப்புகளுண்டு. எல்லாம் சிதைந்து, ஒரு சின்ன மயிர்க்கால் மிச்சமிருந்தாலும் அதை ஊர்க்கூடி தூக்கிப்போய் நல்லடங்கல் செய்து அந்த சாவுக்குரிய மரியாதை தந்தாக வேண்டும். நாகரீகம், நாகரீகமடைய வேறென்ன மார்க்கம்..? வாழும்போது உதாசீனப்பட்டவர்களின் சாவிலும் அதுநேராது பார்த்துக் கொள்வது தானே.

கிளம்பியாகிவிட்டது.

வெளுப்பில் மின்னும் வெயிலலையில் மிதந்து மிதந்து கையாட்டி அழைக்கிறது சவத்தின் முகம். கட்டுண்டு பின்னியக் கால்கள் திருகிக் கொண்டு விரைகின்றன இப்போது. தவறவிட்டால் இனி எப்போதும் கண்ணுறவியலாது என்ற நினைவே சவுக்காகி விளாற ஓடிப்போய் தலைமாட்டில் நின்றழத் திமுறுகிறது மனக்குதிரை.

வாழ்வின் அர்த்த வரையறைகள் ஒன்றோடொன்று மோதி ஜெயித்தும் தோற்றும் சிதறி விழுகின்றன வழியெங்கும். பொறுக்கிச்சேர்க்க பொறுமையற்று பொத்தல்பானையில் நீர்பிடிக்கப் போகும் முட்டாளாக ஓட்டமும் நடையுமாய் விரைந்தும் வழி நீள்கிறது மாளாமல்.

உயிர்கள் வந்துவிழுகிற ஒருவழிப்பாதையை திறந்துவைத்துக் கொண்டு காலம் குரூரமாக காத்திருப்பதை அறிந்தோ அறியாதோ உயிர் போயிருக்கிறது. இறுதி நொடித்துகளில் என்னவெல்லாம் நினைப்போடியிருக்கும்… ஞாபக விழுதுகளில் யார்யார் ஊசலாடியிருப்பார்கள்… மிச்சமிருந்த கனவுகளை எங்கே பத்திரப்படுத்திவிட்டு உயிர் பிரிந்திருக்கும்…எப்போது மீண்டு வந்து செலவழிக்கும்…

உயிர்ப்பை விடவும் சாவே வாழ்வின் இண்டு இடுக்குகளில் வெளிச்சமேற்றுகிறது. ஜொலிப்புகளுக்குள் பதுங்கியிருக்கும் இருளின் வியாபகத்தை கூச்ச நாச்சமின்றி காட்டிவிடுகிறது. அடுத்தவர் மரணம் மேல் மரணம் குறித்து தனக்குள்ள பயம் ஏறி அசைத்தசைத்து புறங்காட்டுக்கே அழைத்துப்போய் தனக்கே வெட்டிய குழியென நடுங்கி, புதைகிற பிணத்தை பார்க்கும் திராணியற்று அவசரமாக மண்தள்ள வைக்கிறது ஒவ்வொருவரையும். தகனத்திற்கு பிறகு பலரும் சடலமாகத்தான் வீடு திரும்புகிறார்கள்-தம்முயிரையும் தைர்யத்தையும் சேர்த்து புதைத்துவிட்டு.

எங்கோ திவனத்தில் ஒலிப்பதைப் போன்றிருந்த பறையோசை இப்போது மூர்க்கமாகி காதடைக்கிறது. ஒலிக்குள் லயம் பற்றிச் சுழலும் கால்களில் கள்ளும் சாராயமும் பாய வெறிகொண்டு ஓடும் ஒரு கூட்டம். ஒப்பாரி சீழ்க்கை ஒற்றையாய் தனித்தூதும் சங்கொலி பொரி வெற்றிலை சில்லரைக்காசு காதோலை கருகமணி வழியெங்கும் இரைந்து கிடக்கும் அடையாளத்தை பிடித்துக்கொண்டு விரைகிறது கால்கள். குடைசாய்ந்த பாடைகள், புதுமண்பூசிய குழிகள், நெஞ்சுக்கூடு வேகாமல் நிமிர்ந்து விறைத்து வேக மறுக்கும் அடங்காப்பிடாரிகள்… யார் சாவுக்கு வந்தோமென்ற பெருங்குழப்பம் சூழ மண்டைவெடித்து மாண்டோர் போக, மீண்டோர் திரும்பினர் ஊருக்கு. எல்லார் வீட்டு முன்னும் கொள்ளிகள் மூண்டெரிந்து அடங்கிய சாம்பல்களில் கழுதைகள் புரள்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன குழந்தைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *