சாமி குத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 6,087 
 

‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’

வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது.

“டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…”

ஆறுமுகத்திற்கு அதிர்ச்சியைக் காட்டிலும் ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது. இரண்டு நாள் அடைமழை பெய்தாலே ஆட்டங்கண்டுவிடும் மதில்களும் காற்றடித்தாலே கழன்றுஓடும் தகரக்கூரையையும் இடிக்க எதற்கு அரசாங்கப் பணத்தைச் செலவு பண்ணி வந்தானுங்க என்று யோசித்துக் கொண்டிருக்கையில், “ஆமாண்ணே … அந்தாண்ட ஒரு லோரி நிக்குது… இந்தாண்ட சொவரு இடிஞ்சி கிடக்குது…” என்றான்.

ஆறுமுகத்திடம் செய்தியைச் சரியாகக் கொண்டு வந்து சேர்த்த திருப்தியில் கூட வந்த நண்பர்களுடன் ஜிம்மியையும் கூட்டிக்கொண்டு சட்டைக் காலரை வாயில் கவ்விய வண்ணம் மீண்டும் விளையாட ஓடினான் முருகன்.

ஊரில் எந்தச் செய்தியானாலும் அது முதலில் சொல்லப்படுவது ஆறுமுகத்திடம்தான். அந்த ஊரின் ஒரே பத்திரிகை நிருபர் ஆறுமுகம். இந்த உண்மை ஜிம்மி உட்பட ஊரில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.அந்த ஊருக்கும் வெளி உலகிற்குமான தொடர்பின்

பெயர் : ஆறுமுகம்

வெளியில் கிடந்த சாய்வு நாற்காலியில் கண்களை மூடிய வண்ணம் தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தார் ஆறுமுகம். கோயில் இடிபடுவதென்பது எவ்வளவு உணர்ச்சிகரமான விசயம். அதன் பின்னனியில் செயலாற்றிய செயலாற்றத் தவறிய எத்தனை தலைகள் உருள போகிறது. உலகமே அதிரும் வகையில் இதை செய்தியாக்க வேண்டும். நாளை காலை நாடெங்கும் இந்தச் செய்தி பேசப்படுகையில் இந்தச் செய்தியின் மூலகர்த்தா ஆறுமுகம்தான் என்ற விபரம் உலகம் அறிய வருகையில் … ஆறுமுகத்திற்கு லேசாகப் புல்லரித்தது.

சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் தமிழ் நாளிதழ்கள் தங்களின் பத்திரிகைக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்க தனக்கு அழைப்பு விடுக்கலாம் என எண்ணுகையில் மேஜையில் கிடந்த வெள்ளைக்காகிதங்களுமே சிலிர்ப்படைந்து காற்றில் படபடப்பது போல் தோன்றியது. நாளை வெளிவரும் நாளிதழின் முதல் பக்கத்தில் இடிபாடுகளுடன் நிற்கும் கோவிலின் படம் வண்ணத்தில் வர வேண்டும். ஊரின் பெயரை உடனே வெளியிடாமல் ஒரு மர்ம தொடர்கதைபோல தவணை முறையில் விசயங்களை வெளியிட வேண்டும். ‘ஊர் பேர் ‘ தெரியாத இந்த ஊரை கண்டுபிடிக்கவே மற்ற பத்திரிகைகளுக்குச் சில நாள்களாவது ஆகும். எந்த இதழியல் பட்டமும் பெற்றிராத தனக்கு இவ்வளவு ஞானம் இருப்பதை எண்ணுகையில் வானத்தில் மிதப்பது போன்ற உணர்வுடன் தரையில் மிதந்துகொண்டிருந்தார் ஆறுமுகம்.

சிம்பாங் அம்பாட் முனியாண்டி கோயிலின் தலபுராணம் கொஞ்சம் தெரிந்திருப்பது அவசியம். நாட்டின் ஏதோ ஒரு மூலையில் எந்த ஒரு பொது போக்குவரத்து வசதியுமற்ற ஒரு தள்ளிப்போன சிற்றூரில் முனியாண்டி சாமி எழுந்தருளியிருந்தார். ஏழைகளுக்கான தெய்வத்திற்கு இடம் பொருள் ஏது? ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான செம்பனை தோட்டத்தில் வேலி ஓரத்தில் கேள்வி கேட்பாரற்று கிடந்த அந்த இடத்தில் பிரசன்னமாகி இருந்தார் முனியாண்டி சாமி.

முன்னொரு காலத்தில் பெரும் காடாக இருந்த இடமது. பூமியின் மேல் தாவரங்கள் அவ்வளவு ஆக்ரோஷமாக திரண்டெழுந்திருந்த காட்டை யாரும் பார்த்திருக்க முடியாது. சூரிய ஒளியையே கூட உள்ளே விட மறுக்கும் மரங்களின் அடர்த்திக்கும் அதை அழிக்க வந்திறங்கிய தமிழ்நாட்டு சஞ்சிக்கூலிகளுக்கும் நடந்த போராட்டத்தில் , மலைபாம்புகளுக்கும் மலேரியா கொசுக்களுக்கும் காட்டு மிருகங்களுக்கும் காலரா நோய்க்கும் அழிந்தது போக பிழைத்தவர்கள் சொற்பம்தான். அதற்கப்புறமும் உயிர்பிடித்து வாழ்ந்திருந்த அந்த வம்சத்தின் எச்ச சொச்சங்களின் காலமும் அவர்கள் நட்டு வளர்த்த ரப்பர் மரங்களின் காலமும் முடிந்துபோனபோது தோட்டங்கள் கைமாறின… துண்டாடப்பட்டன. வேண்டாத இடங்களில் வளர்கின்ற மயிர்கால்களை பிடுங்கி எறிவதுபோல எறியப்பட்ட இவர்கள்தான் முனியாண்டி சாமியுடன் இந்த புறம்போக்கு நிலத்தில் குடியேறிக்கொண்டார்கள்.

கோயிலின் சற்று தூரத்தில் ஒரு காட்டாறு. ‘கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு’ என்பதுபோல அந்த ஆற்றின் களிமண் தோள்களில் குட்டி முதலைகள் ஏறி விளையாடும். களிமண்ணும் சகதியுமாக பழுப்பு நிறத்தில் வருஷம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது அந்த வாற்றாத சேறு.

ஒருமுறை முனியாண்டி சாமியின் சிலையின் தலையில் நாகம் ஒன்று படமெடுத்து ஆடியதை படமெடுத்து தமிழ், சீனப் பத்திரிகைகளில் போட்டதால் அந்த வட்டாரத்து இந்தியர்களும் சீனர்களும் குடும்ப சகிதமாக வந்து முட்டையும் பாலும் வைத்து வணங்கி ‘அதிஷ்ட குலுக்கலுக்கான நாலு நம்பர்’ வேண்டிக் கேட்டு வாங்கி சென்றார்கள். பாம்பும் பாம்பாட்டியும் ஊரை விட்டு போனபின்பும் கூட முட்டையும் பாலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருந்தது முனியாண்டி சாமிக்கும் பூசாரிக்கும்.

***

I J N எனப்படும் தேசிய இதய சிகிச்சை மருத்துவமனையில் வி.ஐ.பி களுக்கான அறையில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டத்தோ கதிரேசன் கட்டிலில் நெஞ்சை பிடித்துக்கொண்டு படுத்திருந்தார். அவரருகில் டான்ஶ்ரீ டாக்டர் குண சிங்கம் சற்று கடுமையான குரலில், “என்ன டத்தோ கதி… நாட்டின் எங்கோ ஒரு கார்னரில் ஒரு கிறுக்கன் ஏதோ ஒரு கோயிலை இடிச்சா அதுக்கு நீங்க ராவெலாம் தூங்காம நெஞ்சு வலி வந்து அவதிப்படனுமா… என்ன?” ஆங்கிலத்தில் உரிமையோடு கடிந்துகொண்டிருந்தார்.

“என்ன டான்ஶ்ரீ விவரம் தெரியாம பேசுறீங்க. எலக்‌ஷன் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு. சும்மாவே பி.எம்முக்கு என் மேல அதிருப்தின்னு சொல்றாங்க. சின்ன விஷயத்தக் கூட எதிர்க்கட்சிக்காரனுங்களும் பேப்பர்காரனுங்களும் ஆ…ஊ…ன்னு ஊதி பெருசாக்கிறானுங்க. முன்ன மாதிரி இல்ல இப்பல்லாம். தலைவர்னா யாருமே பயப்பட மாட்டரானுங்க டான்ஶ்ரீ. இந்த ஒரு இஷ்யூ போதாதா…’ இருமல் தொடர விடாமல் தடுத்தது. கண்கள் கலக்கத்தோடும் முகம் வெளிறிப்போயும் இருந்தன. உணர்ச்சி மேலிட்டதால் தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டார்.

“இவ்ளோ ஸ்ட்ரெஸ் வச்சிக்கிட்டு மருந்தும் ஒழுங்கா சாப்பிடாமல்… எனக்கு புரியுது டத்தோ… உங்க ஹார்டுக்கு புரியனுமே.” கைக் கடிகாரத்தைப் பார்த்துகொண்டே சற்று நகர்ந்து நர்ஸ் நீட்டிய தாள்களையும் அவளையும் நோட்டம்விட்டார்.

மிகுந்த தயக்கத்துடன் தலைவரின் மனைவி “சாரி டாக்டர்… நான்தான் மலையாள மாந்திரீகரிடம், ஏழு மண்டல் பூஜை பண்ணி தாயத்து தயார் பண்ணிட்டேன். ஸ்பெஷலா எலக்‌ஷனுக்குப் பண்ணினது. உடனே வாங்கன்னு அவசரமா கூப்பிட்டதால கேரளாவுக்கு புறப்பட்டுட்டேன். அவுங்க மருந்தெல்லாம் எனக்குதான் தெரியும். அவரு குழந்தை மாதிரி. நான் குடுத்தாதான் சாப்பிடுவாரு…” தழுதழுக்கும் குரலில் பேச டான்ஶ்ரீ டாக்டர் சிங்கம் கொஞ்சம் சங்கடப்பட்டார். பேச்சை திசை திருப்ப முயன்றார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘செக்-அப்’ வந்திருந்த டத்தோவுடன் வேறு யாரோ ஒரு சிவப்பான ஒல்லியான இதே மாதிரி உரிமையோடு பேசியது மங்கலாக நினைவில் தட்டியது டாக்டருக்கு. பெண் இதேபோல் பேசியது மாதிரி தோன்றியது தான்ஶ்ரீக்கு. ‘ச்செ..ச்செ.. ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு உளரி வச்சிடப்போறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு தலையை ஆட்டி சுதாரித்துக்கொண்டார்..

“நோ… நோ … மேடம் கவலைப்படாதீங்க. அவரு ஸ்ட்ராங் மேன் அண்ட் நைஸ் மேன்…பாலிடிக்ஸ்ல நுழைஞ்சி தலைவரான பின்னாடிதான் ரொம்ப வீக் ஆயிட்டாரு”

“கட்சியுந்தான்”.அமைச்சரின் செயலாளர் கைகளைக் கட்டிக்கொண்டு அப்பாவி முகத்துடன் முணுமுணுத்தது டாக்டருக்கு மட்டும் கேட்டிருக்கலாம்.

***

எதிர்க்கட்சியின் முக்கியமான தலைவர் முருகேசன் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார். சூடான பிரச்னை கிடைத்த குதூகலத்தில் நிருபர்கள் கைகளில் சிலர் பேனாவுடனும் சிலர் பேச்சைப் பதிவு செய்யவும் ஒலிப்பதிவு கருவியுடன் காத்திருந்தனர்.

நாலைந்து தமிழ்நாளிதழ்களைத் தூக்கிக்காட்டிய வண்ணம் தலைவர் உரத்தக் குரலில் பேசினார்.

“எனக்குத் தமிழ் தெரியும்… ஆனா நான் ரொம்ப உணர்ச்சியில இருக்கேன்” என்றவுடன் கூட்டத்தின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பெண் நிருபர்கள் தங்கள் உடைகளைச் சரிசெய்துகொண்டனர்.

“ஐ மீன் இமோஷனல். பேச்சு வரமாட்டுது. மூச்சுதான் வருது. அதனால இங்கிலீஷ்ல பேசறேன்” என்று ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

“இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அரசாங்கம் மைனாரிட்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தராமல் இப்படிக் கோயில்களை இடிப்பார்கள். சென்ற முறை இதே போன்ற தவறுகளால்தானே பல இடங்களில் தோற்றுப்போனார்கள். இன்னமும் அவர்களுக்கு புத்தி வரவில்லையே. வரும் தேர்தலில் மக்கள்தான் பாடம் புகட்ட வேண்டும். முனியாண்டி சாமி நமக்கெல்லாம் குலதெய்வம் . நம் முன்னோர்களுக்கும் குலதெய்வம். பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து கும்பிட்டுகிட்டு வர்ரோம். உணர்ச்சி மேலிட கொஞ்சம் நிறுத்திக்கொண்டார். எனக்கு ரத்தக் கண்ணீர்தான் வருகிறது இந்தக் கொடுமையைப் பார்க்கும் போது . அரசியல் சாசனத்தில் நமக்கு கோயில் கட்டி வழிப்பட உரிமை இருக்கிறது. யாராலும் அதை தடுக்க முடியாது. இந்த விஷத்தில் என் உயிரையும் கொடுக்கத் தயார்” என பேசி முடித்தபோது உதவியாளர் நீடிய ஆஸ்துமா இன்ஹெய்லரை வாயில் வைத்து இரண்டு முறை அதை இழுத்து திணரும் சுவாசத்தை சமப்படுத்திக்கொண்டார்.

இடையில் ஒரு நிருபர் எழுந்து எந்த ஊரில் இது நடந்திருக்கிறது என்று கேட்க முருகேசன் யாருக்காவது தெரியுமா என்பது போல இருபக்கமும் திரும்பி பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்தார். வாயை கைகளால் மறைத்த வண்ணம் திரும்பி பக்கத்தில் இருப்பவரிடம் ஏதோ கேட்டார். “எல்லா தமிழ் பேப்பர்லயும் முதல் பக்கத்திலேயே போட்டிருக்காங்க மேன். ஆனா ஊர் பேரு அவுங்களுக்கும் இன்னும் தெரியலனு நெனக்கிறேன். எந்த ஊரா இருந்தா என்ன . கோவில் கோவில்தானே. முனியாண்டி சாமி முனியாண்டி சாமிதானே.”

“அடுத்தக்கட்ட நடவடிக்கையா என்ன செய்யப் போறீங்க ?”

தொண்டையைக் கணைத்துக்கொண்டு பேசினார் முருகேசன்.

“இதோ பேப்பர்ல இந்து சங்கம் உட்பட நூற்றுக்கணக்கான என்.ஜி.ஓஸ் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்காங்க. எல்லாருமா கூடி ஒரு கூட்டம் போடப்போறோம். அதுல முடிவு எடுப்போம். கோர்ட்டுல வழக்கு தொடரப்போவது பற்றி ஆலோசனை செஞ்சிக்கிட்டிருக்கோம். அதுல உள்துறை அமைச்சர், ஐ.ஜி.பி எல்லோரையும் குறிப்பிடப்போறோம்.”

ஒரு மூத்த பத்திரிகை ஆசிரியர் எழுந்து தனது கனமான குரலில் ” மை அட்வைஸ் உங்களுக்கு… முதல்ல எந்த ஊரில அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்பத தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை அது நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலமாக இருக்கப்போகிறது” என்றார்.

ஒரு கனத்த மௌனம் திடீரென்று அறை முழுவதும் வந்திறங்கியது. கட்சிக்காரர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்களில் லேசாக கலக்கம் இப்போதுதான் வந்திருந்தது.

***

இதய சிகிச்சை மையத்தின் வி.ஐ.பி வார்ட்டின் தொலைபேசியில் பரபரப்புடன் அழாத குறையாக தலைமை தாதி பேசிக்கொண்டிருந்தார்.

“ஹலோ டத்தோ மரைக்கான்… மன்னிக்கவும் இந்த நேரத்தில் உங்களை அழைப்பதற்கு. எனக்கு வேறு வழி தெரியவில்லை டத்தோ. வி.ஐ.பி அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தலைவர் உடனே எம்பேரை வெட்டி விடுங்கள்… வீட்டுக்குப் போகவேண்டும் என அடம்பிடிக்கிறார். இன்று பொதுவிடுமுறை. பெரிய டாக்டர்தான் பெயர் வெட்ட முடியும். சற்று பொறுத்திருங்கள் என்றெல்லாம் கெஞ்சி கொஞ்சி பார்த்துவிட்டோம். தலைவரை சாமாளித்தாலும் தலைவர்கூட கூட்டமாக இருக்கும் குண்டர்கள் அண்ட் தொண்டர்களின் தொந்தரவைத் தா…ங்…க முடியவில்லை டத்தோ”

“அவருக்கு சுகர் இன்னமும் கொண்ட்ரோலே ஆகலயாமே…” வருத்தமான குரலில் பதில் வந்தது.

“ஐயோ டத்தோ … எல்லோருக்கும் இனிப்பு கொடுத்துக்கிட்டு அவரும் அள்ளி அள்ளி சாப்பிடுறாரு. இடிப்பட்ட கோயில் எதிர்க்கட்சி ஆள்கிற மாநிலத்தில் இருக்குதாம். அதைக்கொண்டாடுறாங்கலாம்.”

“நர்ஸ்… அவருக்கு ஹார்ட் வேற வீக். டிஸ்சார்ச் பண்ணி வீட்டுக்கு அனுப்பி வீட்டுல ஏதாவது ஆச்சினா”

“வீட்டுக்கு ஒன்றும் ஆகாதாம். நாட்டுக்குதான் ஏதாவது ஆகுமாம். அவரது செயலாளர் உத்திரவாதம் கொடுத்தாரு.”

“என்னவேனுமானாலும் ஆகி தொலையட்டும். டிஸ்சார்ஜ் பண்ணிவிடு. கொஞ்சம் பொறு. இன்னொரு கோல் வருது. கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன். “

சிறிது நேரத்தில் தலைமை செயல்முறை அதிகாரியின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வந்தது.

“நர்ஸ் எதிர்க்கட்சி தலைவர் முருகேசனுக்குக் நெஞ்சு வலியாம்… இவனுங்களுக்கு நெஞ்சு வலி எந்த வலின்னு வந்தாலும் நம்ம தலையதான் போட்டு உருட்டுவானுங்க. அந்த வி.ஐ.பி காலிதானே ?”

“ஐயோ டத்தோ கொஞ்ச நேரத்துல காலியாகப்போவுது ரூம்தான் …ஆளு குஷியா இருக்காரு.”

“மை காட் நான் ரூம்பதானம்மா கேட்டேன். சரி சரி அந்த ஆள வீட்டுக்கு சீக்கிரமா அனுப்பு. அடுத்து அந்த ரூமுக்கு எதிர்க்கட்சி வி.ஐ.பி வராரு. அடுத்த தேர்தல்ல இவனுங்க ஜெயிச்சா இவருதான் சுகாதார அமைச்சராம். கொஞ்சம் கவனமா பாருங்க” என்று சொன்னவர், ‘ஆனாலும் இவனுங்க சாமிய சும்மா சொல்லப்படாது. .. ரியலி பவர் ஃபுல். என்னா சுத்து சுத்திவிடுது.’ மனதுக்குள் வியந்துகொண்டார் மரைக்கான்

அடுத்த சில நாள்களில் எல்லா தமிழ் நாளிதழ்களின் முதல் , இடை, கடை பக்கங்கள் கோயிலின் இடிந்த சுவரையும் அதை பார்த்த வண்ணம் கண்ணீரும் கம்பளையுமாக நிற்கும் அமைச்சர் பெருமக்கள், துணையமைச்சர்கள், கட்சியின் மேல்மட்ட கீழ்மட்ட என்ற எல்லா மட்ட தலைவர்களின் புகைப்படங்கள், சூழுரைகள், சவால்கள் , அறிக்கைகள் என அனல் பரப்பிக்கொண்டிருந்தன.

பல்லாண்டுகளாக அந்தக் கோயிலுக்குப் பாதை விட மறுத்த அந்த பன்னாட்டுச் செம்பனை நிறுவனம் பிரதமர் இலாக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரும் தொகையை அந்த முனியாண்டி கோயில் தலைவருக்கு கொடுத்ததையும் பாதை அமைத்துத் தர வாக்குறுதி தந்ததையும் நாளிதழ்களின் விளம்பரப்பகுதியில் முழுப்பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டது.

எதிர்க்கட்சியின் மேல்மட்டக் குழு இரவோடு இரவாகக் கூடி கோயிலை சமூக விரோத சக்திகள்தான் இடித்திருக்க வேண்டும் என்றும் இடிப்பதற்கான அரசு ஆணையோ தங்களின் மாநில அரசு அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ தரவில்லை என்றும் தங்களின் தாய், தந்தை , சித்தி மற்றும் ஆண்டவரின் மீதும் மற்றும் ஆண்டவரின் மீதும் சத்தியம் செய்தும் அறிக்கை விட்டவண்ணமாக இருந்தனர்.

நாளும் வெளியாகும் அறிக்கைப் போர் தமிழையும் வளர்த்தது. ஆளுங்கட்சி கிளைத்தலைவர் ‘எதிர்க்கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிப்பதாக’ அறிக்கை விட… அறைகுறை தமிழ்ப்பேசும் எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் ‘நாங்க கண்ணீர் வடிக்கிறோம்னு ஏத்துக்கிட்டதுக்கு தெங்ஸ்’ என அறிக்கை விட்டார். ‘நீலிக்கண்ணீர் என்றால் என்ன என்ற விவாதம் வாசக கடிதப்பகுதியில் சூடு பறந்தது.பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் , “கண்களிலிருந்து வழியும் நீர் எந்த நீரானாலும் அது கண்ணீர்தான்’ என்று தெளிவுரையும் தீர்ப்புரையும் வழங்கி முடித்துவைத்தார்.

***

உணர்ச்சிகள் கொதிநிலை அடைய பத்திரிகைகளின் விற்பனை கூடியது மட்டுமல்ல முனியாண்டி கோயிலுக்கும் நன்கொடைகள் நாலா திசைகளிலிருந்து வந்து கொட்டின. மாநில அரசு கோயில் இடத்தை அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கோயிலுக்குத் தந்துவிட முடிவெடுக்கப்படும் என்று உறுதியளித்தது. கோயிலுக்குப் புதிதாக ஒரு நிர்வாகக் கமிட்டி அமைக்கப்பட்டது. முன்பிருந்த பூசாரி ஒரு சொற்ப சம்பளத்துக்கு கோவில் துப்புறவு தொழிலாளியானார் . கும்பகோணத்திலிருந்து சிவாச்சாரியார்கள் வரவழைக்கப்பட்டார்கள். முனியாண்டி கோயில் முனீஸ்வர கோயிலாகிப்பின்னர் ஈஸ்வர கோயிலாக நாமகரணம் சூட்டப்பட்டது. மூல விக்ரஹம் ஈஸ்வர மூர்த்தியானதால் முனியாண்டி சாமி காவல் தெய்வமாக்கப்பட்டு அவருக்கு வாசல் ஓரமாக இடம் ஒதுக்கப்பட்டது. வேத ஆகம சாஸ்திரப்படி யாகம் வளர்க்கப்பட்டு காற்று மண்டலம் மந்திர ஒலியாளும் கண்ணீர் கசிய வைக்கும் யாக சாலை புகையாலும் நிறைந்திருந்தது. கோயில் கமிட்டிதலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிட குத்தகையாளர் டத்தோ ஶ்ரீ லிங்கத்தின் நிறுவனத்திற்கே கோயில் கட்டிட மறு சீரமைப்பு காண்ட்ரேக்ட் ஒரு மனதாகக் கொடுக்கப்பட்டது. தேங்காய் குத்தகை, பூக்கடை , வாகன நிறுத்துமிட குத்தகை என எல்லாம் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஜனநாயக ரீதியில் பகிந்தளிக்கப்பட்டது. ‘சக்தி உள்ள தெய்வம்’ என சுற்று வட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினார்கள்.

ஒரு நாள் இரவு பழைய பூசாரி சோணமுத்துவின் கனவில் முண்டாசும் மீசையுமாக அரிவாள் ஓங்கிய கையுமாக முனியாண்டி சாமி தோன்றினார்.

“டேய் சோணமுத்து… காலங் காலமாக ஒன் அப்பன் பாட்டன் கட்டிய கோயிலை எழந்துட்டு தூக்கமாடா கேக்குது ஒனக்கு? கோவில் குப்பை எடுக்க வந்த குப்ப லாரி கோயில் செவத்துல இடிக்க போயி, இப்ப கோயில் உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம போச்சேடா. மவனே ஆத்துக்கு அந்தக் கரையில இருக்குர ஆலமரத்தடியில எனக்கொரு கோயில கட்டு… என்ன கட்டுவியா?” விழி உருட்டி மிரட்டி கேள்வி கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் மறைந்தது சாமி.

வியர்வை ஆறாக பெருக, உடல் நடுங்க, பீதியுடன் கனவிலிருந்து எழுந்த கோணமுத்து பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் தட்டி எழுப்பி கனவைப்பற்றியும் கட்டளையைப் பற்றியும் பதற்றத்துடன் சொன்னார்.

“யோவ் … ஒனக்கும் ஒஞ்சாமிக்கும் வேற வேலையே இல்லையா?” என முகத்துக்கு நேராக விரல்களை விரித்துப் பரப்பி ஆட்டிக் கொண்டே கேட்டாள் அவள்.

“அடியே பாவி சாமி சொன்னத செய்யாட்டி சாமிகுத்தம் ஆயிடும்டி” நடுங்கும் குரலில் சோணமுத்து.

“என்னாது? …ச்சாமி குத்தமா? தெரியாமத்தான் கேக்கிறேன்..ஏய்யா ஓஞ்சாமி அவுனங்களயெல்லாம் விட்டுட்டு ஒன்னயே பிடிச்சுக்கிட்டு தொங்குது. அவனுங்களுக்கெல்லாம் சாமிகுத்தமில்லயா… ஒனக்கு மட்டுந்தானாக்கும்… பேசாம தூங்குவியா…” என்று சொல்லிக்கொண்டே ‘ஹாவ்’ என்று கொட்டாவி விட்டவாறு திரும்பிப்படுத்து தூங்கிப்போனாள்.

ஆனால் முகட்டையே பார்த்து பீதியுடன் படுத்திருந்த சோணமுத்துவால் அன்று இரவு தூங்க முடியவில்லை.

– மே 2013 (நன்றி: மா.நவீன் – ஆசிரியர், வல்லினம்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *