சான்றோனாக்குதல் தந்தையின் கடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,905 
 
 

தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும் திராவிட இயக்கம் அரசியலில், தேர்தலில் ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன். நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க” என்றார் பெரியார்.

பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை. “சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க? இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க” என்று கடலையை பெரியாரிடம் நீட்டுகிறார்.

“வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க. பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்” என்கிறார் பெரியார்.

அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

அப்பொழுது உற்சாகமாக,
“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” பாடியவாறே வருகிறார் பாரதியார்.

“வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?” என்று முகம்மலர்கிறார் பெரியார்.

“தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்”, என்று பணிவாக வணங்கி சொல்கிறார் பாரதி.

அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, “நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி” என்று சிரிக்கிறார் காந்தி.

“இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் “சிந்துக்குத் தந்தை” என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு.

“பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!…”
என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது.”

“சரி போகிறது…அப்படியே எனக்கு தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள். “தந்தை” என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது. “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்கிறார் பாரதி ஆதங்கத்துடன்.

“தம்பி என்னமா யோசிக்கிறீங்க?” என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார்.

“தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறைய பாடல்கள் எழுதியிருப்பீர்கள், 38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து 20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன்எத்தனை பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்.”

“சமீபத்தில் உங்களைப் பற்றிய படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய ..
“கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்.”

பாட்டைக் கேட்டு அப்படியே கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி. நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்த தம்பியும் சொல்லியிருக்காரு. இப்படி அற்ப ஆயுசில போயிட்டாரேன்னு ரொம்ப வருத்தமாயிடிச்சி. அப்புறம் மணியம்மை சமாதானப் படுத்தினாங்க” என்றார் பெரியார்.

“என்ன செய்யிறதுங்க ஐயா?
“நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ!
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ”

என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன். சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்து கொண்டு விட்டார்கள்” என்று ஆறுதலாக சொல்கிறார் பாரதி.

தொடர்ந்து “நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா. எவ்வளவு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களே. சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்” என்றார் பாரதி.

“உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள். என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன். என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்தும் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்” என்றார் காந்தி.

பிறகு, “சரி பாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?” என்று ஆவலுடன் கேட்டார் காந்தி.

“இல்லாமலா? ஆனால் அதை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது” மீசை துடிக்க கோபத்துடன் முழங்கினார் பாரதி.

“பரவாயில்லை, சொல்லுங்க தம்பி, ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?” என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாக பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார்.

“ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும். அத்துடன் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்.”

“இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்த சொல்லுங்க”

“ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்த கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சிறப்புச் சலுகை தரவேண்டும். மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிக சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது. கலப்பு மணத்தில்… ஜாதியோ, மதமோ, இனமோ… எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் “சான்றோர்” எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும். அதனால் சான்றோர் என்றால் “நற்பண்புகள் உள்ளவர்” என்ற பொருளைக் குறிப்பதற்கு சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்.”

“இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள் சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள். அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்” என சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள்.

” ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”

என்பார்களே ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள். எதையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும். நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள். வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்.”

“பிறகென்ன, காலப்போக்கில் நிறைய சான்றோர்கள் உருவாகுவார்கள். சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள். பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்”

“அருமையான யோசனை பாரதி” எனக் கைதட்டிப் பாராட்டுகிறார் காந்தி.

“தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்கள சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்றீங்க” என்று குலுங்கி குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார். “தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்றார் சந்தேகத்துடன் கேட்டார் பெரியார்.

“ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார்.

“ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு. உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,

“இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா”
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *