சருகல்ல.. தளிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 1,837 
 
 

மழை லேசாய் தூறிக் கொண்டிருந்தது.

மும்பை பாந்தரா ரயில்வே ஸ்டேஷனில் பிரகதி தன் தோழிக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

டில்லி ஹசரத் நிஜாமுதினில் இருந்து மும்பை பாந்தராவுக்கு வரும் ரயிலில் வருவதாகச் சொல்லி இருந்தாள் மஞ்சு.

இருவரும் டில்லி லோடி ரோடு தமிழர் பள்ளியில் படித்த போது வகுப்புத் தோழிகள். அன்றிலிருந்து இன்று வரை பல விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை.

அப்போது இருவருக்கும், கிழக்கு டில்லியின் கல்யாண்புரி குடிசைப் பகுதியில் வீடு. பள்ளிக்கு இருவரையும், இருவரின் அப்பாக்களும் சைக்கிளில் கூட்டிப் கொண்டு போவார்கள். அப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் போது தோழிகள் இருவரும் பேசிக் கொண்டே வருவார்கள். அவர்களது தினசரி சைக்கிள் பயணம் சிரமமானது. யமுனை ஆற்றுப் பாலத்தைக் கடந்து, மிருக காட்சி சாலை வழியாக, கனரக வாகனங்கள் வெகு

வேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் சாலையில் சைக்கிளை மிதிப்பார்கள்.

மேலே படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால், அந்த பள்ளிப் படிப்போடு அவர்களது கல்வி முடிந்து விட்டது.

பிரகதியின் அப்பா வேலை செய்து கொண்டிருந்த பாக்டரியில் ஒரு தீ விபத்து நடந்து, பேக்டரி மூடப் பட்டது.

மூடப் பட்ட டில்லி பேக்டரியை மீண்டும் திறக்க போவது இல்லை என்றும், புதிதாக ஒரு பேக்டரி, மும்பை அந்தேரியில் உள்ள தொழில் பேட்டையில் கட்டப் போவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் அந்தேரியில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

தொடர்ந்து வேலை கொடுத்தால் போதும், சம்பளம் கொடுத்தால் போதும் என்று பிரகதியின் அப்பா நவி மும்பை வேலைக்கு வந்து சேர்ந்தார்.

பள்ளிப் படிப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனாலும், பரவாயில்லை, படித்த படிப்புக்கு ஏதாவது வேலை தேடி குடும்பத்துக்கு உதவி செய்யலாம் என்று இருவரும் நினைக்கும் போது தான் அந்த பேரிடி அந்த இரு குடும்பங்களையும் தாக்கியது. ஒரே மாதரியான இடி. இதிலும் இருவருக்கும் ஒற்றுமை.

மரணம் சமீபத்தில் என்றும், நாட்கள் எண்ணப் படுகின்றன என்றும் இருவருக்குமே டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். காப்பாற்ற வேண்டும் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்றார்கள். அப்படிச் செலவு செய்தாலும் கூட, முடிவு தேதியை தள்ளிப் போடலாமே தவிர குணப் படுத்த முடியாது என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.

தங்கைகளைப் படிக்க வைக்க வேண்டும். எங்களுக்காக வீணாக செலவு செய்ய வேண்டாம் என்று இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லி விட்டார்கள்.

கடைசியாக தன் தோழியை மும்பைக்கு போய்ப் பார்க்க மட்டும் செலவுக்கு பணம் கொடுத்தால் போதும் என்றாள் மஞ்சு தன் அப்பாவிடம். சிரமப் பட்டு அப்பா கொடுத்த பணத்தில் ரயில் பயணம் செய்து மும்பை வந்திருக்கிறாள் மஞ்சு.


டில்லி ரயில் சற்று தாமதமாய் வந்தது. மஞ்சுவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு போனாள் பிரகதி. அந்தேரியின் குடிசைப் பகுதியில் பிரகதியின் வீடு.

“நான் வாழப் போற இந்த கொஞ்ச நாட்கள்ல நான் சிரிச்சிக்கிட்டே இருக்கணும். மத்தவங்களையும் சிரிக்க

வைக்கணும். சாவதற்குள் மக்களுக்காக ஒரு பெரிய சேவை செய்திடணும்.”

மஞ்சு சொன்னாள்.

“எனக்கும் உன்னுடைய அதே நிலைதான் மஞ்சு. உனக்கு இருக்கும் ஆசையே தான் எனக்கும்..”

பிரகதி பதில் சொன்னாள்.

இருவரும் தங்களின் வாழ்க்கையில் ஒரே சமயத்தில், ஒரே மாதரி நடந்த விஷயங்களை பட்டியலிட்டுப் பேசினார்கள்.

’அதன் தொடர்ச்சியா இதுவும்..’ என்றார்கள் இருவரும்.

“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் வந்திருக்கிற இந்த நோய்கள் குணப் படுத்த முடியாத நோய்களா மஞ்சு..”

”அப்படிச் சொல்ல முடியாது பிரகதி.. பணம் இருந்தா குணப் படுத்திடலாம்..”

“நம்ம கிட்டே பணம் இல்லையே..”

“அதனாலே, நம்மைப் பொறுத்த வரை இந்த நோய்கள் குணப் படுத்த முடியாத நோய்கள் தான்..”

மும்பைக்கு மஞ்சு வந்த சேர்ந்த அடுத்த நாள்.

ஒரு செய்தி தாள் கட்டிங்கை கையில் வைத்துக் கொண்டு பிரகதி சொன்னாள்.

“ மஞ்சு.. நீ வாழப் போற இந்த கொஞ்ச நாட்கள்ல சிரிச்சிக்கிட்டெ இருக்கணும், மத்தவங்களையும் சிரிக்க வைக்கணும்னு சொன்னே இல்லியா, அதுக்கு தகுந்தாப்ல ஒரு வேலைக்கு விளம்பரம் வந்திருக்கு. நாம ரெண்டு பேரும் போய் வேலை கேட்கலாம்.”

“அப்படியா பிரகதி.. என்ன வேலை..”

”மித்தி நதியை ஒட்டி ஒரு பெரிய ஷாப்பிங் மால் இருக்கு. அதிலே வேலை காலி இருக்காம்.. இந்தா படி..”

செய்தி தாளின் ஒரு ஓரத்திலே வந்திருந்த விளம்பரத்தை காண்பித்தாள் பிரகதி. அதை வாங்கிப் படித்தாள் மஞ்சு.

’பெண் கோமாளிகள் தேவை- எங்கள் ஷாப்பிங் மாலின் நுழைவு வாயில் பகுதியில் ஷாப்பிங் மாலுக்கு வரும் சிறுவர், சிறுமிகளை மகிழ்விக்க, சிரிப்பூட்ட கிலொவ்ன் எனப் படும் பெண் கோமாளிகள் தேவை.’

சாகும் வரை மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும் என்ற தங்கள் குறிக் கோளுக்கு உகந்த வேலை என்று நினைத்து இருவரும் சந்தோசப் பட்டார்கள்.

”அது சரி பிரகதி.. அந்த வேலையை செய்யற அளவுக்கு நமக்கு உடல் நிலை இருக்குதா..”

”சாகற வரை மத்தவங்களை சந்தோசப் படுத்தணும்னா, முடியற வரைக்கும் செய்யலாமே. வேலை செஞ்சிக்கிட்டு இருக்கும் போதே, உயிர் போகட்டுமே.. எதுக்கு கவலைப் படணும்.”

இருவரும் விண்ணப்பித்தார்கள். தங்கள் இருவரின் நோய்களைப் பற்றி யாரிடமும், எதுவும் அவர்கள் சொல்ல வில்லை.

இருவரையும் தேர்ந்து எடுத்து விட்டார்கள். இருவரையும் கோமாளி வேடம் போட்டு, சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க, சிரிப்பூட்ட மெயின் வாயிலில் நிறுத்தினார்கள்,.

மற்றவர்களை சிரிக்க வைக்கும் அந்த வேலை அவர்களுக்கு பிடித்துப் போய் விட்டது. நோயின் வலியை மறக்க, இந்த வேலை அவர்களுக்கு உதவியது.


வேலையில் அவர்கள் சேர்ந்தவுடன், அவர்களுடைய டிபன் பாக்ஸ், கோமாளி வேடத்திற்கான மாஸ்க், மாற்று உடைகள் போன்ற பொருட்களை இங்கே வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு இடத்தைக் காண்பித்தார்கள்.

அது எஸ்கேலட்டருக்கு பின் புறத்தில் அமைந்திருந்த எச்விஏசி ரூம் என்று சொல்லப் படும் ஏர்கண்டிஷனர் ரூம். உள்ளே சென்று பார்த்தார்கள். இன்சுலேட் செய்யப் பட்ட பெரிய பெரிய பைப்புகள் இருந்தன. குனிந்து தான் நடக்க வேண்டும். அங்கே அவர்கள் தங்களது மதிய உணவு டப்பாக்களையும், உடைகளையும் வைக்க ஆரம்பித்தார்கள்.

தினமும் மதியம் அந்த பைப்புகளுக்கு அடியில் அவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். அங்கு ஒரு ஜன்னல் இருக்கும். அதைத் திறந்தால் மித்தி நதியைப் பார்க்கலாம். நதியின் நடுவில் கருப்பாக நீர் ஓடிக் கொண்டிருக்கும். மற்ற இடங்களில் சேறும் சகதியும் தான்.


வேலையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகி இருக்கும்.

அன்று ஒரு பண்டிகை நாள். ஏகப் பட்ட கூட்டம். பீக் டைம். மாலை ஏழு மணி இருக்கும்.

திடீரென்று செக்யூரிட்டி ஆபீசர் தனது வாக்கி டாக்கியில் பேசிக் கொண்டே நுழைவு வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த அவர்களை நோக்கி ஓடி வந்தார். அவர் முகத்தில் பீதி. சாதாரண பீதி இல்லை. மரண பீதி.

ஷாப்பிங் மாலில் யாரோ டைம் பாம் வைத்து விட்டார்கள். எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் என்று ஒரு

போன் வந்து இருக்கிறது. மாலில் இருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். மேலும் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டே இங்குமங்கும் ஓடினார்.

“போலீசுக்கு சொல்லியாச்சா..” பிரகதி கேட்டாள்.

“பாம் டிஸ்போசல் ஸ்குவாட் வரப் போறாங்களா..” மஞ்சு கேட்டாள்.

இருவரும் அவருடன் சேர்ந்து ஓடினார்கள்.

“போலீசுக்கு சொல்லியாச்சு.. ஆனா பாம் டிஸ்போசல் ஸ்குவாட் வருவாங்களான்னு தெரியல..” செக்யூரிட்டி ஆபீசர் ஓடிக் கொண்டே சொன்னார்.

“பாம் எங்கே வைச்சி இருக்குன்னு போன்ல பேசினவங்க சொன்னாங்களா..” மஞ்சு கேட்டாள்.

“கிரவுண்ட் புளோர்ல் தான் பாம் வைச்சி இருக்கிறதா போன்ல பேசனவங்க சொன்னாங்க..” செக்யூரிட்டி ஆபீசர்

”அப்படியா.. நாம தேடலாமே..” பிரகதி.

”மெட்டல் டிடக்டர் இருக்கா..” மஞ்சு.

“இருக்கு.. இது தான்..”

மெட்டல் டிடக்டரை பிடித்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி ஆபிசரின் கை நடுங்கிக் கொண்டிருந்தது.

”வாங்க.. நாம் போய் தேடலாம்… சந்தேகப் படும் படியா ஏதாவது பொருள், பேக் இருக்கான்னு..” இருவரும் சேர்ந்து சொன்னார்கள்.

”நாம் எப்படி தேட முடியும்.. போலீஸ் வரட்டும்.. பாம் டிஸ்போசல் ஸ்குவாட் வரட்டும்.”

செக்யூரிட்டி ஆபீசர் ஒரு இடத்தில் நின்று விட்டார்.

“உடனே வருவாங்களா..”

“வருவாங்க.. அவங்க பார்த்துப்பாங்க..” மறுபடியும் அதையே சொன்னார் அவர்.

அவர் கண்களில் இருக்கும் பீதி, பயம் தோழிகள் இருவருக்கும் புரிந்தது.

போலீசும், பாம் டிஸ்போசல் ஸ்குவாட் வரும் வரை காத்து இருக்கலாம் என்று அவர் சொல்கிறார் என்பது அவருக்கு புரிந்தது.

அவர்கள் எப்போது வருவார்கள்.

அது வரைக்கும் காத்து இருக்கலாமா.

அதற்குள் பாம் வெடித்து விட்டால்.

ஷாப்பிங் மாலில் பாம் வைக்கப் பட்டுள்ள செய்தி மாலில் இருக்கும் மக்களுக்கு காட்டுத் தீ போல பரவ, ஷாப்பிங் மால் முழுவதும் மக்களின் அலறல்கள். கூக்குரல்கள்.. ஓலங்கள்.

ஷாப்பிங் மாலை விட்டு தப்பித்து வெளியே போக, வாசலை நோக்கி அனைவரும் ஓடினார்கள்.

அனைவரும் ஒரே சமயத்தில் ஓட ஆரம்பிக்க, பெண்கள், குழந்தைகள் கீழே தள்ளப் பட, ஒரே களேபரம்.

மரண பயத்தில் கூக்குரல்கள்..

வெளிக் கதவை முழுவதுமாக திறந்து விட பிரகதியும், மஞ்சுவும் முயற்சித்தார்கள்.

கதவை முழுவதுமாக திறந்து விட அனுமதிக்காமல் மக்கள் மோதினார்கள்.

சிரமப் பட்டு கதவை முழுவதுமாக திறந்து விட்டார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஷாப்பிங் மாலை விட்டு ஓடும் அந்த காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது.

இவர்கள் எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார்கள்.

மற்றவர்களைப் போல் நாமும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டுமா.

யோசித்தார்கள் இருவரும்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா.

கொஞ்ச நாட்களில் அது தானாகப் போகப் போகிறதே.

தானாக போகப் போகும் அந்த உயிரை காப்பாற்ற ஏன் ஓட வேண்டும்.

அதற்காக ஏன் பயப் பட வேண்டும்.

மரணம் சமீபத்தில் என்று இருவருக்கும் டாக்டர்கள் சொல்லி இருக்கும் போது உயிரைப் பற்றி ஏன் பயப் பட வேண்டும்.

சாவதற்குள் மக்களுக்காக ஒரு பெரிய சேவை செய்திட வேண்டும் என்று ஆசைப் பட்டதும் உடனே ஞாபகம் வந்தது இருவருக்கும்.

எப்படியும் சாவு வரப் போகிறது.

போகப் போகிற அந்த உயிரைப் பணயம் வைத்து இந்த டைம் பாமை கண்டு பிடித்து, தைரியமாய் கையில் எடுத்து

அதை செயலிழக்கச் செய்தால், எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றலாமே.

அடுத்த என்ன செய்வது.

நொடியில் மஞ்சுவும், பிரகதியும் பேசி முடிவு செய்து, இருவரும் காரியத்தில் இறங்க ஆரம்பித்தார்கள்.

செக்யூரிட்டி அபீசரின் கையில் இருந்த மெட்டல் டிடக்டரை மஞ்சு பிடுங்கிக் கொண்டாள்.

சந்தேகப் படும் படியான பொருட்கள் ஏதாவது தென் படுகிறதா என்று மஞ்சு தேடிக் கொண்டே ஓடினாள்

மஞ்சுவைப் பின் தொடர்ந்து பிரகதி ஓடினாள்.

கிரவுண்ட் புளோர் முழுவதும் தேடினார்கள்.

லிப்ட் இருக்கும் இடத்திற்கு போய் தேடினார்கள்.

அங்கு கிடைக்கவில்லை.

எமர் ஜென்சி எக்ஸிட் வழியில் போய் தேடினார்கள்.

அங்கும் கிடைக்க வில்லை.

கடைசியில் கண்டு பிடித்து விட்டார்கள்.

கிரவுண்ட் புளோர் எஸ்கலேட்டரின் பின் புறம் ஒரு நீல கலரில் ஒரு பேக் கிடந்தது.

மெட்டல் டிடக்டரை வைத்து சோதித்து பார்த்த போது, அந்த நீல கலர் பேக்கின் உள்ளே இருந்து டிக் டிக் என்று சப்தம் வந்தது.

அது தான் அந்த டைம் பாம்.

இப்போது, அந்த டைம் பாம்மை, கடிகாரம் பொருத்தப் பட்ட அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய வேண்டும்

மஞ்சு தூக்கி பார்த்தாள். பை பாரமாக இருந்தது.

”பிரகதி.. இது தான்..”

“மஞ்சு.. நாம ரெண்டு பேரும் இந்த பையைத் தூக்கிக் கொண்டு போய் ஏர் கண்டிஷனர் ரூம்ல் இருக்கிற ஜன்னல் வழியா மித்தி ஆத்தில தூக்கிப் போட்டிடலாம்..”

”சரி..”

இருவரும் ஒரு கணம் கூட தாமதிக்க வில்லை.

பையை ஆளுக்கொரு பக்கமாக பிடித்து தூக்கிக் கொண்டு ஏர் கண்டிஷனர் ரூமை நோக்கி இருவரும் ஓடினார்கள்.

ஏர்கண்டிஷனர் ரூமை திறந்து உள்ளே சென்றார்கள்.

ஜன்னலை நோக்கி ஓட முயற்சித்தார்கள்.

அங்கே இருந்த பைப்புகள் வேகமாக ஓடுவதற்கு தடையாக இருந்தது.

பையை கீழே வைக்கவும் பயமாக இருந்தது.

பையை கீழே வைக்கும் போது, அந்த அதிர்ச்சியில் வெடித்து விடுமோ என்று.

பையை கீழே வைக்காமல், சிரமப் பட்டு தூக்கிக் கொண்டு ஜன்னலை அடைந்தார்கள்.

ஜன்னல் வழியாக பையை தூக்கி நதிக்குள் எறிந்தார்கள்.

சேற்றுக்குள் சென்ற அந்த பை வெடிக்க, கரிய நிறத்தில் வானத்தை நோக்கி நீருற்று ஒன்று சேற்றுக்குள்ளிருந்து கிளம்பி அடங்கியது.

அந்த டைம் பாம் செயலிழந்து போனது.


அனைத்து டிவி சேனல்களிலும், பிரேக்கிங் நியூசாக இந்த செய்தி காண்பிக்கப் பட்டது.

செய்தி தாள்களிலும் வந்தது.

அந்த செய்தியோடு இந்த விஷயமும் சேர்ந்தே வந்தது.

தங்கள் உயிரை துச்சமென எண்ணி, ஷாப்பிங் மாலில் டைப் பாமை செயலிழக்க செய்த மஞ்சுவும், பிரகதியும் குணப் படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப் பட்டு உள்ளார்கள் என்ற செய்தியும் குறிப்பிடப் பட்டு இருந்தது.


அந்த செய்தியை நிறைய பார்த்தார்கள். அவர்களில், ஷியாம் லாலும் ஒருவர்.

மும்பையில் ஷியாம்லால் குரூப், பிரசித்தி பெற்ற பல தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியது.

ஷியாம் லால் அந்த நிறுவனங்களின் குரூப் சேர்மன்.

அவருடைய இளமைக் காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள டலால் தெருவில், சில சிறிய கம்பெனிகளின் பங்குகளை வாங்குமாறு கேட்டுக் கொண்டு, அதற்கான விண்ணப்ப படிவங்களை விற்றுக் கொண்டிருந்தவர்.

அவருடைய பூர்வீகம் பரோடாவுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். அவருடைய அம்மாவும், அப்பாவும் அந்த கிராமத்தில் அப்போது இருந்தார்கள்.

அம்மாவையும், அப்பாவையும் நேரில் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றும் பொதெல்லாம் கையில் இருக்கும் சொற்ப பணத்தையும் ரயில் டிக்கெட்டுக்கு செலவு

செய்வதை விட, அந்த பணத்தை அவர்களுக்கு அனுப்பினால் அவர்களின் சாப்பாடு, துணிமணிகளுக்கு உபயோகமாக இருக்குமே என்று அனுப்பி விடுவார்.

அப்படி அம்மாவையும், அப்பாவையும் பார்ப்பதை தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு இரண்டு வருடம் ஓட்டி விட்டார்.

ஒரு நாள் அவருக்கு ஒரு தந்தி வந்தது.

அம்மாவுக்கு கேன்சர் என்று.

கையில் சொற்ப அளவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கிராமத்துக்கு ஓடினார்.

நோய் முற்றிப் போன நிலைமையில் தான் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

இரண்டு வருடம் ஊருக்கு போகாமல் இருந்தது காரணமா.

இடையில் ஊருக்கு போயிருந்தால் சரியான சமயத்தில் அம்மாவை டாக்டரிடம் காண்பித்து இருக்கலாமா.

இப்படி முற்றிப் போக விடாமல் பார்த்து இருக்க முடியுமா.

போயிருந்தால் மட்டும் என்ன ஆகி இருக்கும், பணம் கையில் இல்லாத போது.

ஊருக்கு போய் இருந்தால், அரசாங்க ஆஸ்பத்திரியிலாவது காண்பித்து இருக்கலாம்.

இப்போது பிரகதிக்கும், மஞ்சுவுக்கும் சொன்னதையே அவரின் அம்மாவுக்கும் அப்போது சொன்னார்கள்.

அவரது அம்மாவின் மரணம் சமீபத்தில் என்றும், நாட்கள் எண்ணப் படுகின்றன என்றும், காப்பாற்ற வேண்டும் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்றார்கள். அப்படிச் செலவு செய்தாலும் கூட, முடிவு தேதியை தள்ளிப் போடலாமே தவிர குணப் படுத்த முடியாது என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.

பரோடாவின் மிகப் பெரிய அந்த மருத்துவமனையில் ஒன்றில் தான் அம்மாவின் நோய்க்கான சிகிச்சை கிடைக்கும் என்றார்கள்.

அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு தொகையை முன் பணமாக கட்ட வேண்டும் என்றார்கள் அந்த மருத்துவ மனையில்.

அவரால் அது முடிய வில்லை.

அம்மாவை கிராமத்திலேயே விட்டு இருந்தால் கூட ஒரு கவுரமான சாவு அவளுக்கு கிடைத்து இருக்கும்.

அம்மாவை மும்பைக்கு கூட்டிக் கொண்டு வந்து, தன்னுடன் வைத்துக் கொண்டு தனது தொழிலையும் செய்து கொண்டு பணம் சேர்த்து அம்மாவுக்கு உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் நினைத்து அம்மாவைக் அழைத்து வந்தது ஒரு மிகப் பெரிய தவறு என்று பின்னால் புரிந்தது.

நண்பர்களுடன் தான் தங்கி இருந்த ஒற்றை ரூமில் அம்மாவையும், அப்பாவையும் அழைத்து வந்து சேர்த்த போது, மும்பையின் அந்த கொடூர நிதர்சனம் புரிந்தது.

எந்த விதமான சிகிச்சையும் அவரால் கொடுக்க முடியாமல் போய் விட்டது.

அம்மா நோயில், வலியில் இறந்து போக, அதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவும் பின்னாலேயே போய்ச் சேர்ந்து விட்டார்.

பணம் இல்லாத காரணத்தால் அம்மாவுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாமல் போன அந்த ஷியாம் லாலின் கீழ் இன்று பல நிறுவனங்கள்.

தன் அம்மாவுக்கு நடந்த மாதரி வேறு யாருக்கும் நடந்து விடக் கூடாது என்று அவர் ஆரம்பித்தது தான் சாந்தினி தேவி மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல்.

சாந்தினி தேவி என்பது அவருடைய அம்மா பெயர்.


மும்பையின் புற நகர் பகுதியான வாசியில் அமைந்த அந்த சாந்தினி தேவி மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் பிரம்மாண்டமாய் இருந்தது.

அதில் இல்லாத துறைகளே இல்லை.

ஆட்டோவில் வந்து தோழிகள் இருவரும் இறங்கினார்கள்.

பாராட்டுவதற்காக அந்த கம்பெனிக்காரர்கள் கூப்பிட்டு இருக்கிறார்கள் என்பது இருவருக்கும் புரிந்தது.

ஏன் மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். ஆபீசுக்கு வரச் சொல்லுவார்கள் என்று தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஒரு வேளை தங்களை டாக்டர்களிடம் காண்பிக்கவா.

இருக்கலாம்.

நியூஸ் பேப்பரில் அவர்களுக்கு இருக்கும் நோய்களைப் பற்றியும் போட்டிருந்தார்களே.

எதற்கும் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை கையோடு எடுத்து போகலாமே என்று முடிவு செய்து, கையோடு தங்களது மெடிக்கல் ரிப்போர்ட்டுகளையும் இருவரும் எடுத்து வந்திருந்தார்கள்.


மருத்துவ மனையின் மெயின் வாசல் வழியாக மஞ்சுவும், பிரகதியும் நுழையும் போது, கருப்பு வெள்ளையில் பத்து அடி உயரத்தில் ஒரு ஏழைத் தம்பதியரின் ஒரு போட்டோ அவர்களை வரவேற்றது.

போட்டோவில் இருந்த அந்த தம்பதியர் அந்த நிறுவனத்தின் சேர்மன் ஷியாம் லாலின் தாய் தந்தையர் என்று சொன்னார்கள்.

பழைய போட்டோ அது. ஐம்பது வருஷத்திற்கு முன் எடுத்திருக்க வேண்டும்.

போட்டோவில் அந்த தாய் எளிமையான உடையில் அழகாக இருந்தார்.

ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்த அந்த பெண்,

“ நியூஸ் பேப்பர், டிவியில வந்தது நீங்க ரெண்டு பேரும் தானா..” மஞ்சுவையும், பிரகதியையும் சுட்டிக்காட்டி கேட்டாள்.

“ஆமாம்..” என்று இருவரும் சேர்ந்து சொல்ல,

“உட்காருங்க.. கூப்பிடறோம்..” என்றாள் அந்த பெண்.

மக்கள் சேவைக்குப் பெயர் போன நிறுவனம் அது என்றார்கள். ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க

கட்டிய மருத்துவமனை என்று சொன்னார்கள். அந்த நிறுவனத்தின் லாபத்தில் கணிசமான பகுதி இம்மாதரியான மக்கள் தொண்டுக்காக செலவிடப் படுகிறது என்றும் அவர்களிடம் சொன்னார்கள்.

அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கபே பரேடில் இருக்கிறது என்றார்கள். அந்த நிறுவனத்தின் சேர்மன் ஷியாம்லால், தினமும் காலையில் தனது தலைமை அலுவலகம் சென்று மற்ற வேலைகளை ஆரம்பிக்கும் முன் அவர் நடத்தும் இந்த மருத்துவமனைக்கு வருவார், மருத்துவ மனைப் பணிகளை மேற்பார்வை இடுவார், நோயாளிகளை நலம் விசாரிப்பார் என்றார்கள்.

கடவுளைக் கும்பிட்டு வேலையை ஆரம்பிப்பது போல.

ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்தவர்களை கூட்டிப் போய் சேர்மன் அறைக்கு முன் உட்கார வைத்தார்கள்.

சிறிது நேரத்தில்,

” உள்ளே வாருங்கள்..” என்று கதவைத் திறந்து கூப்பிட்டார்கள்.

சேர்மன் ஷியாம்லால் பேசினார்.

”உங்களை ஏன் இந்த ஆஸ்பிட்டலுக்கு வரச் சொன்னேன் தெரியுமா.. உங்களை எங்க டாக்டருங்க டெஸ்ட் செய்யத் தான்.. உங்களோட ரிப்போர்ட்ஸ் எடுத்து வந்து இருக்கீங்களா.”

”எடுத்து வந்து இருக்கோம் சார்..” என்று சொல்லி, அந்த ரிப்போர்ட்டுகளை எடுத்துக் காண்பித்தார்கள் மஞ்சுவும், பிரகதியும்.

“இவங்க தான் அந்த ரெண்டு பேரு.. டைம் பாமை டிஃப்யூஸ் செஞ்சவங்க..”

சற்று தள்ளி உட்கார்ந்து இருந்த இரண்டு பேரிடம் மஞ்சுவையும், பிரகதியையும் அறிமுகப் படுத்தினார் அவர்.

அந்த இருவரின் கழுத்திலும் ஸ்டோத்தோஸ்கோப் இருந்தது.

அவர்கள் இருவரும் டாக்டர்கள்.

அந்த டாக்டர்கள் அந்த ரிப்போர்ட்டுகளைப் பார்த்து விட்டு,

“இது ஒன்றும் குணப் படுத்த முடியாத நோய்கள் அல்ல. மேலும் பரிசோதனைகள் செய்து பார்க்கலாம்.. நம்ம ஆஸ்பிட்டல்ல வைச்சு பார்த்துக்கலாம்.” என்றார்கள்.

மேலும் பரிசோதனைகள் செய்யப் பட்டது. அந்த பரிசோதனை முடிவுகளைப் பார்த்து விட்டு, நமது மருத்துவ மனையில் இருவரையும் குணப் படுத்தி விடலாம் என்றார்கள் அந்த டாக்டர்கள் நம்பிக்கையுடன்.

– காவியா தமிழ் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *