சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 2,991 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மல்லிகா என்னும் ஆட்டுக் குட்டி!

விடியும் நேரத்திற்கு எப்போதுமே ஒரு தனி அழகு உண்டு!

அதிலும் தமிழினத்தின் முப்பது வருட நீண்ட போராட்டத்தின் முடிவில், உள்ளே குமையும் ஊமைத் துன்பங்களையெல்லாம் விழுங்கிவிட்டு, அதற்கு மேலே எழுகின்ற புதிய தைப்பொங்கல் விடியற்காலை அபார அழகைத் தந்து கொண்டிருந்தது.

துக்கமோ மகிழ்வோ அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஒரு உரமான உணர்வு நெஞ்சைக் கவ்வி அடைக்க, அந்த அழகைத் தரிசித்தபடியே கண் விழித்தாள் தங்கராணி.

மல்லிகா என்னும் ஆட்டுக்குட்டி முருக்கங்குழையும், பசுஞ் செடிகளும் நிறையத்தின்று மொழு மொழுவென்று வளர்ந்து குட்டிப்பட்டுக் கன்னிக் குட்டித்தாய்ச்சியாக நின்ற நேரம்!

நேற்றைய நிகழ்வுகள் எதுவும் மனதை விட்டகலவில்லை. செல்லம் பாவித்த சொல்லம்புகளுக்கு மேலாகத் தானும் சொல்லியிருக்கக்கூடிய பலவிடயங்கள் மனதில் ஓடி ஓடி வந்து கொண்டிருந்தன.

“உன்ரை அவர் வெளிநாட்டிலை என்ன வெல்லாம் செய்தவர் எண்டு எங்களுக்குத் தெரியாதோ?” என்றாவது கேட்டிருக்கலாமோ?

சீ! அவளின் தரத்திற்குத் தானும் இறங்கிக் கதைக்காமல் மௌனமாக இருந்து விட்டது தான் சரியோ?

இரவெல்லாம் நித்திரையின்றி இவற்றை மனதிலேயே எழுதி எழுதி மனதிலேயே கிழித்துப் போட்டிருந்தாள்.

“சம்பரப்பிள்ளை வாத்தியார் என்ன செய்தவ ரெண்டு எங்களுக்குத் தெரியாதோ?” என்று செல்லம் கேட்ட கேள்வி!

சில வசனங்களைக் குத்தலாகச் சொல்கையில் ஏற்படும் குரூரமான மனநிறைவைச் செல்லம் அப்போது அடைந்திருக்கலாம், ஆனால்! நெஞ்சு முழுவதும் உப்பாகக் கரிப்பது போலிருந்தது தங்கராணிக்கு, செல்லத்தின் மனதின் சத்திய ஆழத்திலிருந்து இந்தக் கேள்வி பிறந்திருக்குமா? இல்லை, வெறும் நுனி நாக்கிலிருந்து பிறந்த வார்த்தைகள் தானா? கிளிப்பைக் களற்றிக் ‘கிறனெற்றை’ எறிந்தது போல, நெஞ்சில் விழுந்து வெடித்துச் சிதறி எரியூட்டிய வார்த்தைகள்!

தைப்பொங்கல் என்ற நினைவு திடீரென வந்தவுடன் பாயைச் சுருட்டி கூடவே மனதின் எண்ணங்களையும் சுருட்டி, மூலையில் போட்டுவிட்டு, தலையை அள்ளி அள்ளுகொண்டையாய் முடித்துக்கொண்டு வெளியே வந்தாள் தங்கராணி.

ஒவ்வொரு காலையிலும் எழுந்தவுடன் அவள் வழமையாய்ச் செய்யும் வேலை ஆட்டுக்கொட்டிலைக் கூட்டி மல்லிகாவுக்கு முருக்கங்குழை தூக்குவதுதான்!

அந்த ஆடு மல்லிகா ……..! முற்றத்தைக் கூட்டவென விளக்குமாறு எடுக்க வீட்டின் கோடிப்புறம் போனவள், மல்லிகா நின்ற கொட்டிலைப் பார்க்காமல் திரும்ப முடியாதவளாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாள்.

வெள்ளை நிறத்தில் கபிலப் புள்ளிகளுடன், நிமிர்ந்து, நேரிய கொம்புகள் இரண்டை நீட்டி நிற்கும் மல்லிகாவின் கொட்டில் வெறுமையாக இருந்தது. பிழுக்கைகள் எதுவுமின்றி நிலம் சுத்தமாகக் கிடந்தது. கிடங்கு வெட்டி மல்லிகாவைப் புதைத்த இடத்தைக் கண்கள் வலியவே சென்று துழாவின . வாழைக் குட்டிகளின் நடுவில் புரட்டிப் போடப்பட்டிருந்த அந்தப் புதிய மண்ணின் அருகே சதீஸ் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எப்போது படுக்கையிலிருந்து எழுந்து வந்தான் என்று தெரியவில்லை.

மல்லிகாவின் வயிற்றில் நிறை மாதமாக வளர்ந்திருந்த குட்டி வெளியே பிறந்து விட்டிருந்தால் கூட, அது தாயின் இழப்பை சதீஷ் அளவிற்குக் கொண்டாடியிருக்காது? சதீஷின் கவலையை ஆற்றவே முடியாது போலிருந்தது. மாலை நேரங்களில் ‘வெட்டைகளுக்குச் சென்று செடி கொடிகளை மேய்ந்துவிட்டு வரும் மல்லிகாவைக் கொட்டிலில் கட்ட யாரும் போகாவிட்டால் வீட்டு வாசலுக்கு வந்து படியில் இரண்டு கால்களை வைத்து நிமிர்ந்து உள்ளே எட்டிப்பார்த்து, “மே…. மே…” என்று கூப்பிடும்.

அது தன்னைத்தான் கூப்பிடுகிறதென்று ஓடிப்போகும் சதீஷ், அதன் கழுத்தில் கட்டிய தடியை அவிழ்த்து, முதுகில் தடவி அழைத்துச் சென்று கொட்டிலில் கட்டி விட்டு வருவான். இதுவரையில் யாருடைய தோட்டக்காணிகளுக்குள்ளும் மல்லிகா நுழைந்ததாய்ச் சரித்திரமே இல்லை. அப்படியான மல்லிகா!

சதீஷினால் அந்த இழப்பைத் தாங்க முடியாதுதான்!

“சதீஷ் ……. இண்டைக்குப் பொங்கலெல்லே ராசா! அப்பா தோட்டத்தாலை வர முந்தி மாவிலை தோரணத்தைக் கட்டு மேனை …”

அவனை முதுகில் தடவி ஆறுதல் படுத்திவிட்டு வீட்டைக் கூட்டி, முற்றத்தையும் கூட்டிச் சாணி தெளித்தாள் தங்கராணி.

அப்போதுதான் நித்திரை விட்டெழுந்து தலையைச் சொறிந்து கொண்டு முற்றத்திற்கு வந்த கௌசி, “அம்மா நான் கோலம் போடட்டே?” என்று எந்தவிதமான பாவமும் அற்ற குரலில் கேட்டாள். அவளது குரலில் இருக்க வேண்டிய துள்ளலையும் மல்லிகா கொண்டு போய் விட்டதா?

சட்டியில் கரைத்திருந்த கோதுமை மாவில் பழந்துணி நுனியைத் தோய்த்துத் தோய்த்து, கோடுகளைக் கீறுகையில் பன்னிரண்டே வயதான கௌசியின் அழகிய நீள விரல்கள், கோலங்களை உருவாக்கும் அழகைத் தனக்குள் ரசித்து நிறைந்தவாறே அடுப்பை மூட்டிப் பானையை ஏற்றினாள் தங்கராணி.

அடுப்பில் பாளை மூண்டு நன்றாக எரிந்து கொண்டிருந்தபோது, மிளகாய்க் கன்றுக்கு நீரூற்றிவிட்டுத் தோட்டத்திலிருந்து திரும்பி விட்ட கனகர் குளித்துவிட்டு அள்ளு செம்பில் நீரும் கொண்டு வந்தார். சதீஷ் வந்து அப்பாவுடன் சேர்ந்து குடத்தில் நீர் விட்டு மாவிலையும் தேங்காயும் பூவும் வைத்து தலைவாழையிலை மேல் நிறைகுடம் வைத்தான். செல்லம் வீடும், தங்கராணி வீடும் தமது பொங்கல்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது எத்தனையோ வருடகால வழக்கம். இம்முறை செல்லம் பொங்கல் தர வரமாட்டாள் என்றே நினைத்தாள் தங்கராணி. கடந்த பல வருடங்களில் இரு வீடுகளினதும் அந்தஸ்துக்கள் சமமாக இருந்திருக்கின்றன. கடந்த இரு வருடங்களாய் ….. மெது மெதுவாக அந்தச் சமநிலை குலைந்து வருகிறதே !

செல்லத்தின் கணவன் சிவராஜா வெளிநாடு சென்றதன் பின் பணமும் சேரச்சேரக் கொஞ்சம் கொஞ்சமாக நிறம்மாறி, இப்போது முற்றாகவே சுயநிறம் அற்றவளாகிவிட்டாள் செல்லம். இப்போதெல்லாம் அவளது மனம் இருந்த இடத்தில் அதற்குப் பதிலாகத் திமிரும் அகங்காரமும்தான் கொலு வீற்றிருக்கின்றன. உடம்பில் செங்குருதிக்குப் பதிலாக சவுதியின் ‘ரியால் ‘ தான் ஓடுகிறது.

இல்லாவிட்டால் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள் அல்ல அவள் !

“பிள்ளை கௌசி, அங்கை குசினி அலுமாரி அடித்தட்டிலை சக்கரையும் பயறும் வைச்சிருக்கிறான் . எடுத்துக் கொண்டு வா மேனை….!”

கோலம் போட்டு முடித்துக் கை கழுவிக் கொண்டு எழுந்த கௌசி உள்ளே செல்ல,

“கசுக்கொட்டை, முந்திரிகை வத்தல், நெய்…. ஒண்டும் இல்லையோ அம்மா?” என்று கேட்டான் சதீஸ்.

“கொண்ணன் இருந்திருந்தால் எல்லாம் போட்டுச் செய்திருப்பான்…” என்பது தங்கராணியின் அழுகை ஊடறுத்த பதில்.

“மூண்டு வருஷத்துக்கு முந்திப் போனவனை இப்ப நினைச்சு அழாமல் வேலையைப் பார் தங்கம்…”

என்று கூறிக்கொண்டே வட்டமாய் உருட்டி முலை பிடித்த பிள்ளையாருக்கு அறுகம்புல் குத்தி வாழையிலையில் வைத்தார் கனகர்.

‘லட்சத்திலை லட்சமா……… ஈ, எறும்பு வாழ்க்கை வாழ்ந்து போனவனே என்ரை பிள்ளை ? அல்லது செல்லத்தின்ரை மேன் மாதிரிப் பயந்து வெளிநாட்டுக்குப் பறந்தவனே ? அப்பிடி எண்டாத்தான் கவலைப் படவேணும்.’

நினைக்க வேண்டாம் என்று தானே கூறும் விடயத்தைத் தானும் ஒருமுறை நினைத்து முடித்தார் கனகர்.

“செல்லம் மாமியவை எல்லாம் போட்டு வடிவாப் பொங்குவினம்…. என்னம்மா?” என்று மீண்டும் கசுக்கொட்டையை நினைவில் கொண்ட சதீஷ்… போன வருஷம் கொளுத்தி மீதம் இருந்த இரண்டு பூவிறிசுகளை எடுக்க உள்ளே ஓடினான்.

“அவை இந்த முறை எங்களுக்குப் புக்கை தராயினம். அவரையின்ரை வெளிநாட்டுக் குறோட்டனிலை ஒரு இலையை எங்கடை மல்லிகா திண்டிட்ட கவலையிலை ….”

நேற்றைய சம்பவத்தை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்தாள் கொள்சி. வெளிநாட்டுப் பணத்தில் கட்டிய புதிய வீடு, வெளிநாட்டு ரிவி, டெக், வெளிநாட்டு ‘அல்சேஷன்’ நாய், வெளிநாட்டுச் சட்டைகள், மணிக்கூடுகள், வெளிநாட்டுக் ஹொண்டா, குறோட்டனும் வெளிநாட்டுக் குறோட்டன்!

பால் பொங்கிக் கிழக்கே சரிந்ததை ஒரு விநாடி மகிழ்வுடன் பார்த்தாள் தங்கராணி. ஒரு விநாடிதான் !

“பால்பொங்கிட்டுது…. அரிசியைப் போடுங்கோவனப்பா…” சலனமற்று அந்த வார்த்தையைச் சொன்னாள்.

மல்லிகாவின் பால் நிறைந்த முலையையும், இன்றோ நாளையோ குட்டி போடப் போகிறேன் என்றிருந்த வயிற்றையும் பார்த்தும் கூடவா அதற்குப் பூவரசங்குழையில் ‘என்றெக்ஸ்’ ஊற்றிக் கொடுக்க மனம் வந்தது செல்லத்திற்கு?

வேலியின் மறுபுறத்தில் செல்லத்தின் நடமாட்டம் தெரிந்தது. சிவராஜா வெளி நாட்டுக்குப் போக முன்னர் இவள் அறிந்திருந்த செல்லத்திற்கு இப்போது நாலு செல்லம் உடம்பில் குடியிருக்கிறார்கள் என்று சொல்லக் கூடிய தோற்றம் ! எல்லாம் வெளிநாட்டுப் பட்டர் செய்த வேலையோ?

பெட்டியில் இருந்த பச்சை அரிசியைக் கைகளில் எடுத்துப் பொங்கல் பானையை மூன்று முறை சுற்றி அரிசியைப் பானையில் போட்டார் கனகர். மூன்று முறை அவ்வாறு போட்டபின் மீதி அரிசியைத் தான் வாங்கிப் பானையில் கொட்டினாள் தங்கராணி.

பொங்கல் வெந்து கொண்டிருந்தது, தங்கராணியின் மனதைப் போலவே ! வழக்கமாகக் கொட்டிலில் கட்டி நிற்கும் மல்லிகா மாலை நேரங்களில் தான் வெட்டைக்கு மேயப் போகும். அதுவும் கழுத்தில் பெரிய தடிகட்டிய நிலையில் ! மேயப் போகும் வழியில் செல்லத்தின் பெரிய இரட்டைக் கேற் திறந்திருந்தால். இடையிடை மல்லிகா எட்டிப் பார்த்தது உண்டு தான்! ஆனால் அப்போதெல்லாம் அதை ஒரு பெரும் பிரச்சினையாய்த் தங்கராணி உணர்ந்ததில்லை.

“எங்கடை அருமந்த குரோட்டன்ஸ், வெறி பியூற்றி ஃபுல் குறோட்டன்ஸ், வெளிநாட்டிலும் நுவரெலியாவிலுமிருந்தும் கொணந்த குறோட்டன்ஸ், யப்னாவிலை ஒரு இடத்திலையும் இல்லை இப்படிக் குறோட்டன்ஸ், உங்கடை மல்லிகா கடிக்கப் பாக்குது ….” என்று கண்ணை உருட்டி வாயை நெளித்து, வெகு ஸ்ரைலா’ ஓரிரு முறை செல்லம் முறையிட்டதைக் கணக்கில் எடுக்காத தன் தவறை உணர்ந்து ஒரு நிமிடம் வருந்தினாள் இவள்.

இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் வேலிப் பொட்டைப் பார்த்துக் கவனமாக அடைத்திருக்கலாம். செத்துப்போன தன் விவேகத்திற்கு, ஆட்டிற்கு, போய்விட்ட மகனுக்கு மூன்றுக்கும் சேர்த்துக் கொஞ்ச நேரம் மௌன அஞ்சலி செலுத்துவது போலிருந்தது தங்கராணியின் நிலை.

வாழ்க்கை வள்ளம் வறுமை அலைகளுக்குள் போராடினாலும் அமைதியான குடும்பம் இவருடையது. அந்த அமைதியுடனே பொங்கலை நடத்தியிருக்கலாம். சீ… மல்லிகா எல்லாவற்றையும் வெறுமையாக்கி விட்டது.

மல்லிகாவைக் கட்டியிருந்த கயிறு உக்கியிருந்ததைத்தான் இவள் கவனிக்கவில்லை யென்றால் … உக்கியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு செல்லத்தின் வீட்டினுள் அது நுழைந்ததும் பல நிமிடங்களாய்த் தெரியவில்லை. கனகர் தோட்டத்திற்குப் போய்விட , சதீஷும் கௌசியும் பின் வளவில் படலப்பட்டம் விட்டுக்கொண்டிருக்க, இவள் மும்முரமாக மத்தியானச் சமையலில் ஈடுபட்டிருந்த நேரம் மல்லிகா மௌனமாய்த் தன் மரண ஊர்வலத்தைத் தொடங்கிவிட்டது.

செல்லம் மல்லிகாவிற்கு நஞ்சூட்டி அது இறக்குந் தறுவாயில் போட்ட ஒருமரண ஓலத்திற்றான் இவள் வந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

மல்லிகாவின் குரலை உடனே இனம்கண்டு அடுப்பில் குழம்பு பொங்கி ஊற்றினாலும் ஊற்றட்டும் என்று இவள் செல்லம் வீட்டிற்குத் துடித்துப் பதைத்து ஓடிப்போனாள்.

நாலு காலையும் வீசி எறிந்து உதறி நடுங்கிக் கொண்டிருந்தது மல்லிகா. அப்போதும் கூட இவள் புரிந்து கொள்ளவில்லை.

“என்ன செல்லமக்கா….? என்ன நடந்தது மல்லிக்கு?” என்று கேட்டபடி அருகில் சென்றபோதுதான் மல்லிகாவின் தலைப் பக்கத்தில் கிடந்த பூவரசங் குழையில் ‘என்றெக்ஸ்’ நெடி மூக்கையரித்தது.

விஷயம் விளங்கி விட்ட ஒரு கணத்தில் குபீரென்று தீப்பற்றியது மாதிரி இவள் முகத்திலும் கண்களிலும் படர்ந்த கோபத்தை அடக்கிக்கொண்டு செல்லத்திலும் செல்லத்தின் பிள்ளைகளிலும் தெரிந்த மௌனத்தை மேவிக்கொண்டு மீண்டும் கேட்டாள்.

“ஏன் அக்கா இப்படிச் செய்தனிங்கள்…?”

“நாங்கள் என்ன செய்தனாங்கள் ? தோட்டத்துக்கு அடிச்ச என்றெக்ஸ்’ மிச்சம் உதுலை ஊத்திக்கிடந்தது. உன்ரை மல்லிகா உன்னைப் போலை கெடுவிலை வந்து திண்டதுக்கு நாங்களே பாடு?”

முதல் அம்பே நஞ்சு தோய்த்து வந்தது.

சில வருடங்களுக்கு முன் இருந்த செல்லம் எங்கே? இப்போது அந்தச் செல்லத்திற்குள் எத்தனை செல்லங்கள்? குரூரமான செல்லத் திமிர் கொண்ட செல்லம் உயிர்களில் கருணை யற்ற செல்லம். அடுத்தவரை அவமரியாதை செய்து மகிழும் செல்லம் !

செல்லம் சொன்னது வெறும் பொய்யைத் தவிர வேறில்லை என்று அந்தக் கண்களின் இடுக்கிலும், உதட்டில் நெளிந்த வஞ்சகச் சிரிப்பிலும் எழுதி ஒட்டியிருந்தது. ஆயினும் தங்கராணி பொறுமையுடன் கேட்டாள்.

“ஆடு வந்த உடனை நீங்கள் என்னைக் கூப்பிட்டிருக்கலாமே அக்கா?”

“ஆடு எங்கை வந்தது ? நீங்கள்தானே எரிச்சலிலை அவிட்டு விடுறனிங்கள்? பிறகேன் உங்களைக் கூப்பிடுவான்?”

பார்வையில் இருந்த சிறிதளவு தோழமையையும் அவசரமாக விலத்திக்கொண்டு கூறினாள் செல்லத்தின் மூத்தவள் ராஜி.

“நீங்கள் பக்கத்து வீட்டிலை இவ்வளவு வசதி வாய்ப்பா இருந்தும் ஒரு அந்தரம் ஆபத்துக்கும் நான் உங்களிட்டைக் கடமைப் படேல்லை. நான் என் பாடாய் இருந்தான். நான் உங்களுக்கு என்ன செய்து போட்டன் எண்டு நீங்கள் இப்பிடி….?”

சரேலென்று தங்கராணியின் பார்வை கூர்மையாகி செல்லத்தின் கண்களுக்குள் பதிந்தது. குரல் வேகமாகி இறுக்கிற்று. பின்னர் திடீரென்று இளகிக் கண்களில் நீரும், குரலில் தளதளப்பும் தோன்ற, வசனம் முடியாமல் நடுவில் நின்றது.

“நாங்கள் உனக்கு எவ்வளவு உதவியள் செய்திருப்பம்… – ஆனால் நீ உன்ரை ஆட்டைவிட்டு எங்கடை வடிவான குறோட்டன்ஸை அழிக்க வேணும் எண்டு நாண்டு கொண்டு நிண்டாய் .. கடவுள் தீர்ப்பு ” என்று செல்லம் சொல்லிக் கொண்டிருக்கையில் அவசரமாகக் குறுக்கிட்டு , இவள் கேட்டாள் “நீங்கள் என்ன செய்தனிங்கள்?”

அப்போது தான் அந்த கிறனேற் செல்லத்தினால் வீசப்பட்டது.

“ஓ…நாங்கள் உனக்கு ஒண்டும் செய்யேல்லைத் தான்…சம்பரப்பிள்ளை வாத்தியார் என்ன செய்தவர் எண்டு எங்களுக்குத் தெரியாதே?”

அதற்கு மேல் தங்கராணி எதுவும் கதைக்கவில்லை. ஒரு விநாடியில் சாதாரணப் பட்டுப் போனவள் மாதிரி இறந்து விட்ட மல்லிகாவைத் தற்தறவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். வாழைக் குட்டிகளுக்கிடையில் வெட்டிப் புதைத்தாள்.

உள்ளே புகைந்து புகைந்து வெகுநேரம் எரிந்து கொண்டிருந்த ஒரு உணர்வு இன்னும் வெகு நேரம் புகையும் என்று தோன்றியது.

வெற்றிலை, வாழையிலை, வாழைப்பழம், தேங்காய், இராசவள்ளிக்கிழங்கு போன்ற பொருள்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களுக்கு அடிக்கடி கனகரிடம் வந்து சந்தோஷமாய் கதைத்துத் தேநீர் அருந்திப்போகிற சிதம்பரப்பிள்ளை உபாத்தியாருக்கும் மல்லிகாவின் கொலைக்கும் என்ன தொடர்பு?

பொங்கல் முடிந்து, மூன்று இலைகளில் படைத்து, கர்ப்பூரம் காட்டிப் படையலைச் சுற்றிவந்து சூரியனை வணங்கினார்கள் தங்கராணி குடும்பத்தினர்.

மார்கழி முப்பது நாளும் ஒவ்வொன்றாக வைத்து வழிபட்ட பிள்ளையார்களை ஒன்றாக ஒரு தட்டில் வைத்து கோயில் குளத்தில் போடுவதற்காக எடுத்துச் சென்றான் சதீஷ்.

படைத்த இலைகள், பொங்கல்ப்பானை, வாழைப்பழம் போன்ற பொருள்களை உள்ளே எடுத்துச் சென்றாள் கௌசி.

திருநீறும், சந்தனமும், குங்குமமும் எல்லோருக்கும் விநியோகம் செய்தார் கனகர். செல்லம் வீட்டிற்குப் பொங்கல் கொடுப்பதா , இல்லையா ? மனக்கடலில் சிந்தனை எனும் கரு ஆர்ப்பரித்துத் துள்ளி எழுந்து, வாயைப் பிளந்து, இறுதியில் கனகருடன் ஏதும் கலந்தாலோசிக்காமலே, ‘அயல் வீட்டுடன் பகை’ இருக்கக் கூடாது என்று நிதானமான முடிவுக்கு வந்து ஒரு சிறு பெட்டியில் பொங்கல் எடுத்துக்கொண்டு செல்லம் வீட்டினுள் நுழைந்தாள் தங்கராணி.

முற்றத்தில் கட்டி நின்ற வெளிநாட்டு அல்சேஷன்’ நாயின் முதுகைத் தடவிக்கொண்டு,

“நீ பொல்லாத பெட்டை என்ன? முன் வீட்டு முத்தையாப் பரியாரியாற்றை கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கப்பிடாது எண்டு உனக்கு எத்தினை தரம் சொல்லியிருப்பான்…ம்….. இண்டைக்கும் இரண்டு முடிச்சுப் போட்டாய் என்ன ….. எண்டாலும் ஆள்குறி தவறாமல் பிடிக்கிறதிலை வலுகெட்டிக்காரி….. நைஸ் டெய்சி….”

என்று கொஞ்சிக் கொண்டிருந்த செல்லத்தின் வார்த்தைகள் தங்கராணியின் செவிகளில் தெளிவாகவே விழுந்தன…

சமுதாயம் என்ற பாறையில் பணம் என்ற படிகளைக் கொண்டு வேகமாகவே ஏறிய செல்லம்!

– ஈழநாடு – 11.01.’87

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *